பித்தம் கொண்டேன் பேரெழிலே -6

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

கூடத்தில் இருந்த தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தபடி தங்கள் குடும்பத்தோடு மீராவின் நிலையையும் எண்ணி கலங்கியபடி அமர்ந்திருந்தாள் பவித்ரா.நடந்ததில் எதிலும் யாரையும் குற்றம் சொல்ல முடியவில்லை.ஏனெனில் அவரவர் நிலையில் அவரவர் சரியாகத்தான் இருந்தனர்.மனதிற்கு பிடித்தவளை திருமணம் செய்ய நினைத்த கிரிதரனையும் தவறென்று கூற முடியாததுப் போல பிடிக்காத பகை குடும்பத்து பெண் வேண்டாம் என்று கூறும் கலைவாணியையும் தவறு என்று
கூறி அவரோடு வாதிட முடியவில்லை.

பவித்ரா கங்காதரன் இருவருமே யார் பக்கம் இருப்பது என்று தெரியாமல் தத்தளித்தனர்.ஆனால் கங்காதரன் தம்பியின் மனதிற்கு தான் முக்கியத்துவம் கொடுத்தான்.முடிந்தவரை தாயை சமாதனப்படுத்த முயற்சித்தான்.ஆனால் அவரை அசைக்கவே முடியவில்லை.தாய் மகன் இருவரும் ஆளுக்கொரு அறையில் முடங்கிக் கொள்ள கலகலவென்று இருந்த வீடு மயான அமைதியை தத்தெடுத்துக் கொண்டது.

வயலில் இருந்து அப்போதுதான் வீட்டினுள் நுழைந்த கங்காதரன் எப்போதும் தான் வீட்டில் நுழையும் போதே துள்ளிக் கொண்டு ஓடி வந்து வரவேற்கும் மனைவி இன்று சுற்றம் மறந்து களையிழந்து அமர்ந்திருந்ததைக் கண்டு வருந்தினான்.அந்நிலையிலும் கணவன் வீட்டின் நிலையை எண்ணி கலங்கும் அவளின் உன்னத குணம் கண்டு பெருமைப்படாமல் இருக்க முடியவில்லை அவனால்.

கை கால் கழுவி சமையலறை சென்று பார்க்க காலை உணவிலிருந்து அப்போது சமைத்திருந்த மதிய உணவு வரை தொடப்படாமல் இருப்பதைக் கண்டு யாரும் உணவருந்தவில்லை என்று உணர்ந்தவன் கூடத்திற்கு வந்து மனைவியின் தோளை மெல்ல தொட்டு,

“பவி…!”என்று அழைக்க திடுக்கிட்டு நிமிர்ந்தவள் கணவனைக் காணவும்,

“மாமா!நீங்க எப்போ வந்தீங்க?ஐயோ மடச்சி நானு அதை கூட கவனிக்காம குத்துக் கல்லுப் போல உட்கார்த்திட்டேன்”என்று அவள் பதறிக் கொண்டு எழ அவள் கைபிடித்து மீண்டும் அங்கேயே அமர்த்தியவன்,

“பவி!காலைல இருந்து ஒத்துருமே சாப்பிடலையா?”என்று கேட்க,

“இல்ல… நான் போய் போய் கூப்பிட்டது தான் மிச்சம் அவங்க ரெண்டு பேரும் அவங்க பிடிவாதத்துலேந்து இறங்கி வரதா இல்ல…அத்தே மாத்திர வேற போடனும் பச்ச தண்ணி பல்லுல படாம இருந்தா அவங்க ஆரோக்கியம் என்னதுக்கு ஆகறது”என்று கண்ணீரை புடவை முந்தானையில் துடைத்தபடி அவள் கூற,

“சரி சரி அழுவாத நா போயி ரெண்டு பேத்தோடும் பேசுறேன் எல்லா கிரகம் புடிச்சு ஆட்டுது நம்ம குடும்பத்த”என்று மனைவியை சமாதானப்படுத்தியவன் முதலில் தம்பியை சரி செய்ய அவன் அறைக்கு சென்றான்.

கிரியின் அறை கதவைத் திறந்து உள்ளே செல்ல அங்கே ஜன்னல் கதவுகள் அடைக்கப்பட்டு அறை இருளில் மூழ்கியிருந்தது.கட்டிலில் அவன் படுத்திருப்பது மங்கலாகத் தெரிய முதலில் சென்று ஜன்னல்களை திறந்துவிட்டான்.பளீரென பகலவன் அறையை வெளிச்சமாக்க தலையை தூக்கிப் பார்த்த கிரி அங்கே அண்ணனை காணவும் எழுந்து அமர்ந்தான்.

தலை கலைந்திருக்க சிவந்த கண்களும் இரண்டு நாளாக மழிக்கப்படாத தாடியோடு தம்பியை அந்த கோலத்தில் பார்க்கவே நெஞ்சு வலித்தது அந்த அன்பு அண்ணனுக்கு.அவன் அருகே வந்து அமர்ந்து அவன் கன்னத்தை வருடிய கங்காதரன்,

“என்னடா இது கிரி?சாப்பிடக் கூட செய்யாம இருட்டு ரூம்ல இப்படி அடஞ்சுக் கிடந்தா என்னடா அர்த்தம்!உன்னை எங்களால இப்படி பாக்க முடியலடா தயவு செஞ்சு வந்து ஒருவாயி சாப்பிடு முதல்ல அப்புறம் எல்லாம் பேசி சரி பண்ணுவோம் “என்று அவனுக்கு தைரியமளிக்க,

“ம்ப்ச் என்னத்தண்ணே பண்ண போறீங்க!நீங்க எதை சொன்னாலும் அம்மா அவுங்க பிடிவாதத்துலேந்து இறங்கி வரப் போறதில்ல!என்னாலயும் சமிய மறந்து வாழ முடியாது விடுங்க இதுக்கு முடிவே இல்ல”என்று அவன் சலித்துக் கொள்ள,

“அவங்களையும் தப்பு சொல்ல முடியாதுடா!தாயா அவங்க கவலப்படுறது நியாயம் தானே?என்ன கொஞ்சம் பிடிவாதம் அதிகம் ஆனாலும் நம்ம மேல அவங்க உயிரையே வச்சுருக்காங்கடா அப்பா போனதுக்கு அப்புறம் அவங்க நமக்காக தான் வாழுறாங்க!நாம சரியா எடுத்துச் சொன்னா புரிஞ்சுப்பாங்க நீ கவலய விட்டு நிம்மதியா இரு!இப்புடி சோர்ந்து இருக்கறத கண்கொண்டு பாக்க முடியல “என்று தமையன் கலங்க,

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“ச் அண்ணே நீங்க கலங்காதீங்க!என் தலையெழுத்து போல ஆவுது விடுங்க”

“நீ முதல்ல சாப்புட வாடா”என்று அவன் அழைக்க,

“இல்லண்ணே எனக்கு இப்ப பசியே இல்ல நா அப்புறம் வரேன் நீங்க போயி சாப்புடுங்க “என்று அவன் கூறிவிட அவன் பிடிவாதம் அறிந்ததால் மேலே எதுவும் பேசாமல் தன் அன்னையின் அறை நோக்கி சென்றான்.அங்கே அவரும் அழுதுக் கொண்டு தான் இருந்தார்.பெரிய மகனை காணவும் கண்ணை துடைத்தவர்,

“இப்பத்தான் வந்தியா ராசா?சாப்புட்டியா?”என்று அன்பு தாயாக விசாரிக்க அவர் அருகே அமர்ந்தவன்,

“எங்கம்மா வீடே பட்டினி கெடக்கும் போது நா மட்டும் எப்படி சாப்புட்றது?”என்று அவன் சலித்துக் கொள்ள,

“என்ன யாரும் சாப்புடலயா இப்ப என்ன ஆச்சுன்னு எல்லாரும் இப்புடி இருக்கீங்க கேட்டு பெத்த வயிறு பத்தி எரியுதடா ராசா!”என்று அவர் மேலும் அழ,

“அம்மா நீங்க நினைச்சா இதெல்லாம் ஒரு நொடில சரியா போயிடும்!தம்பி இதுவரைக்கும் எதையாச்சும் அவனுக்குன்னு கேட்டிருக்கானா சொல்லுங்க!ஏதோ ஆசைப்படுறான் பெரியவங்களா அவனுக்கு நல்ல சேதி சொல்லுங்கம்மா!”என்று மகன் கூற,

“அதுக்காக அந்த உருப்படாத வீட்ல பொண்ணு எடுக்க சொல்றியா?அவளால அவன் வாழ்க்கை கெட்டுப் போயிடும்டா மகனே! உங்களுக்கு ஏன் புரிய மாட்டேங்குது “என்று அவர் படபடக்க,

“அம்மா உங்களுக்கு பெரியப்பாவையும் அனிதா மதனியும் தானே புடிக்கல அதுக்கு அந்த புள்ளய ஏன்மா வேணாங்கறீங்க?பாவம் சின்னஞ்சிறுசுங்க ஏதோ ஆசைப்படுத்துங்க வேண்டாம்னு சொல்லி மனசை உடைச்சா ஒன்னு கெடக்க ஒன்னு பண்ணிக்கிட்டா என்னம்மா பண்ணறது?தம்பி இரண்டு நாளா பச்ச தண்ணி கூட குடிக்காம ஏங்கிப் போயி கெடக்குறான் அவனுக்கு ஏதாச்சும் ஆயிட்டா நம்மளால அதை தாங்க முடியுமா யோசிங்கம்மா உங்க வீராப்பு பெரிசா மகனோட உசுரு பெரிசான்னு நீங்களே முடிவெடுங்க “என்று எடுத்துக் கூற மகன் உயிர் எனவும் அந்த தாயின் வீம்பு ஆட்டம் கண்டது.தன் பிடிவாதத்தை விட அவன் உயிர்தான் அவருக்கு முக்கியம்.அப்படியென்றால் அவர் தன் பிடிவாதத்தை விட்டு அவர் இறங்கத்தான் வேண்டும்!

தாய் மவுனமாகவே இருக்கவும் சலிப்புற்று கங்காதரன் எழுந்து கதவை நோக்கி செல்ல,

“கங்காதரா! எனக்கு இந்த கல்யாணத்துக்கு சம்மதம்!நீயும் பவித்ராவும் எல்லாத்தையும் முன்ன நின்னு செய்ங்க ஆனா எதுக்கும் நான் சேர மாட்டேன் இப்பவே சொல்லிட்டேன்!”என்று தன் சம்மதத்தை கூற மிகமிக சந்தோஷம் அடைந்தவன்,

“அம்மா நெசமாதானா ரொம்ப சந்தோஷம்மா நா நாளைக்கே சென்னை போயி பேசிட்டு வந்திடறேன்”என்றவன் அந்த சந்தோஷ விஷயத்தை தம்பியிடம் கூற விரைந்தான்.

கிரிக்கும் விஷயத்தை கேட்டு ஆனந்தம் தாங்க முடியவில்லை.உடனே சமிகாவிற்கு போன் செய்து விஷயத்தைக் கூற அன்றைய இரவிற்குள் ஊர் உறவு என்று விஷயம் பரவிவிட்டது.

டவுனிற்கு சென்றுவிட்டு அப்போதுதான் வீடு திரும்பிய மீரா வீட்டினுள் நுழைய அவளை கண்டுவிட்டு கையில் சர்க்கரையோடு ஓடி வந்த மீனாட்சி,

“மீரா வாயை தொற”என்று அவள் வாயைத் திறக்க அதில் சர்க்கரையைப் போட,

“எதுக்கும்மா இப்ப சக்கர எல்லாம் குடுக்குற?”என்று அவள் புரியாமல் கேட்க,

“அடியே நல்ல சேதிய அப்படியே சொல்லுவாங்களா? கிரி தம்பிக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சாம் பொண்ணு மெட்ராஸுல வைத்தியநாதன் பெரியப்பாவோட மருமகளுக்கு தங்கச்சியாம் சேதி கேட்டு எனக்கு கை காலே ஆடல… இன்னும் அங்க வீட்ல வேலை குவிஞ்சு கெடக்கும் நீதான் நெதமும் போயி முடிஞ்ச வேலைய இழுத்துப் போட்டு செய்யனும் தெரிஞ்சுதா சும்மா வயலு காடுன்னு சிலுப்பாம போயிட்டு வர ஆமா!”என்று அவர் பாட்டுக்கு மகளின் நிலையறியாமல் சந்தோஷமாக பேசிக் கொண்டே போக மீரா அவள் கண்ணனின் திருமணம் பற்றிக் கேட்டு நெஞ்சில் நெருப்பைப் போட்டதுப் போல துடிதுடித்துப் போனாள்.ஆனால் அதை வெளியே காட்ட முடியாதே!உள்ளே ஓவென்று கதறி அழுதாலும் வெளியே சிரிப்பு என்னும் முகமூடியை அணிந்தே தீர வேண்டிய கட்டாயம்.அவன் திருமணத்திற்கு தன்னால் முடிந்தவரை எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

மறுநாளே கங்காதரனும் பவித்ராவும் சென்னை சென்று வைத்தியநாதனோடு பேசி திருமணத்தை நிச்சயம் செய்துவிட்டு வந்தனர்.தனியாக ஒரு நிச்சயதார்த்தம் வேண்டாம் என்று முடிவெடுத்து இன்னும் பதினைந்து நாட்களில் வரும் முகூர்த்தத்தில் திருமணத்தை நடத்துவதாகப் பேசி முடிக்கப்பட்டது.

அவர்கள் ஊர் திரும்பியதும் பரபரப்பாக திருமண வேலைகள் தொடங்கப்பட்டது.தினமும் சென்று திருமண வேலைகளில் முழு மனதோடு கலந்துக் கொண்டாள் மீரா.மனதின் வலியை மறைத்து சுறுசுறுப்பாக அங்குமிங்கும் சுற்றி வருபவளைக் கண்டு ரத்த கண்ணீர் வடித்தது பவித்ராவின் இதயம்.

மறுநாள் புடவை எடுக்க செல்வதாக முடிவானது.காலை உணவு முடிந்து அனைவரும் புறப்பட மீரா இன்னும் தயாராகாமல் இருப்பதைக் கண்ட கிரிதரன்,

“மீரா! இன்னும் ரெடியாகாம என்ன பண்ணுற?போ சீக்கிரம் துணி மாத்திட்டு வா!”என்று கூற,

“நா… எதுக்கு மாமா! நீங்கள்லாம் போய்ட்டு வாங்க நா வீட்டுல அம்மாச்சி கூட இருக்கேன்!”என்று அவள் மறுக்க,

“அம்மா கூட சொந்தக்காரவுங்க இருங்காங்க நீ சாக்கு போக்கு சொல்லிட்டு இருக்காம கிளம்பு முதல்ல “என்று கூறி அவன் வற்புறுத்த,

“எனக்கு அதெல்லாம் அவ்வளவா தெரியாது மாமா!நா வந்து அங்க என்ன செய்ய?”என்று அவள் தயங்க,

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“இந்த மாமனுக்காக வர மாட்டியா மீரா?”என்று அவன் கேட்க,

‘உங்களுக்காக என் உசுரையே கொடுப்பேனே மாமா! உங்களுக்கு ஏன் என் மனசு புரியாம போச்சு ‘என்று உள்ளுக்குள் கதறியவளுக்கு கண்களில் நீர் கோர்த்துவிட அவளை காப்பதுப் போல வந்த பவித்ரா,

“தம்பி நீங்க போயி கார்ல உட்காருங்க நா அவளை கூட்டிட்டு வரேன்”என்று அவள் கூறவும் சரியென்று அவன் சென்றுவிட்டான்.அவளை கைப்பிடித்து அறைக்கு அழைத்து வந்த பவித்ரா அவள் புடவை ஒன்றை எடுத்துக் கொடுத்து,

“இதை கட்டிட்டு சீக்கிரம் கிளம்பு மீரா!”என்று கூற இல்லை என்று தலையசைத்தவளுக்கு,

“மீரா!நீ இப்படியே பண்ணிட்டு இருந்தா தம்பிக்கு மட்டுமில்ல எல்லாருக்கும் சந்தேகம் வரும்!மனசு கேக்காது தான் ஆனா இதை நீ கடந்துதான் ஆகனும்!”என்று அவள் தலையை ஆதரவோடு வருட அவள் இடுப்பை கட்டிக் கொண்டு உடல் குலுங்க அழுதாள் அந்த பேதை.பவித்ராவிற்கும் அவளின் சோகம் கண்டு கண்ணீர் பொங்கி வழிந்தது.

புடவை கடையில் அனைவருக்கும் எடுத்து முடித்ததும்,

“ஏ மீராபாய்! உனக்கு நீ எடுக்கவேயில்லையே எல்லா விசேஷத்துக்கும் சேர்த்து ஒரு அஞ்சாறு புடவைய எடு!”என்று கிரி கூற,

“அவ்ளோலாம் எதுக்கு மாமா!”என்று அவள் தயங்க,

“எடுங்கறேன்…”என்று பொய் கோபத்தோடு அவன் அதட்ட ஏனோதானோ என்று சாதாரண வகை புடவைகளை அவள் எடுக்க பொறுக்க மாட்டாமல் எழுந்து வந்தவன் அவனே அவளுக்கு பொறுத்தமாக புடவைகளை தேர்ந்தெடுத்து முடித்துவிட்டான்.

வீட்டிற்கு வந்து அவளுக்கானதை அவன் எடுத்துக் கொடுக்க மனம் கணக்க அவனிடமிருந்து அதைப் பெற்றுக் கொண்டாள்.

நாட்கள் விரைய மறுநாள் திருமணம் என்ற நிலையில் அனைவரும் மாலை மண்டபத்திற்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தனர்.மணமகள் வீட்டினர் முதல்நாளே அதே ஊரில் இருந்த அவர்களின் உறவினர் வீட்டில் வந்து தங்கியிருந்தனர்.

சசிரேகா திருமணத்திற்கென்று இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்திருந்தவள் அக்கா கூறிய வேலைகளை கச்சிதமாக செய்துக் கொண்டிருந்தாள்.பின்கட்டிலிருந்து ஏதோ சாமானை அவள் தூக்கி வந்தப் போது நீள கை சட்டையை மடித்துவிட்டபடி வீட்டினுள் நுழைந்த அறிவழகனை கண்டு திகைத்துப் போனாள்.அன்று குளத்தில் அவன் அவளை தள்ளிய பின்பு இன்றுதான் அவனைப் பார்க்கிறாள்.

“இந்த வீணா போனவன் எதுக்கு இங்க வந்திருக்கான்? ஒருவேளை மாமாவுக்கு தெரிஞ்சவனோ? எப்படியான என்ன என்னையா குளத்துல தள்ளிவுட்ட இருக்குடா இன்னிக்கி உனக்கு கச்சேரி “என்று முணுமுணுத்தவள் அவனுக்கு கச்சேரி வைக்கும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தாள்.அதற்கு வாய்ப்பளிப்பதுப் போல பவித்ராவுடன் ஏதோ பேசியவன் அவள் கையிலிருந்ததை வாங்கிக் கொண்டு பின்கட்டிற்கு வர,

“வாடா வா!பெரிய அருச்சுன மவராசன் மாதிரி வரியா உன்னை சகுனி மாதிரி நொண்ட வைக்குறேன்”என்று கருவியவள் வேகமாக சென்று எண்ணெய் பாட்டிலை எடுத்து வந்தவள் அதை வழியில் ஊற்றிவிட்டு ஓடி சென்று மறைந்து நின்றுக் கொண்டாள்.ஆனால் அந்தோ பரிதாபம் அப்போது மீரா சத்தமாக அவளை அழைக்கும் குரல் கேட்க,

“ஐய்யயோ அக்கா பை கேட்டத மறந்தே போயிட்டனே என்னை கொல்ல போறா”என்று தலையில் அடித்தபடி முன்கட்டை நோக்கி ஓடியவள் தான் கொட்டிய எண்ணெயை மறந்து அதன் மேலேயே காலை வைத்துவிட அதில் வழுக்கி எதிரே வந்த அறிவழகனை மேல் இடித்துக் கொள்ள இருவரும் நிலைதடுமாறி கீழே விழ அவன் மேலேயே விழுந்தவளின் இதழ்கள் நச்சென்று அவன் கன்னத்தில் முத்தத்தை பதித்துவிட்டது.இரண்டொரு நொடி இருவருமே அவர்கள் இருந்த நெருக்கத்திலும் சசியின் முத்தத்திலும் தங்களை மறந்து கிறங்கி இருந்தனர்.அவர்களை கலைப்பதுப் போல பவித்ராவின் குரல்,

“அறிவு!டேய் அறிவழகா!எங்கடா போய்டே”என்று கத்த திடுக்கிட்டு தன் மேல் இருந்தவளை பிடித்துத் தள்ளியவன் பரபரவென தன் கன்னத்தை தேய்த்துக் கொண்டே,

“ஐயோ அபசாரம் அபசாரம் ஆஞ்சனேயா தப்பாயிடுச்சுப்பா நான் இல்ல இந்த வெளங்காதவளால தான் இதுக்கு பரிகாரமா உன் கோயிலை நூத்தியெட்டு தடவை சுத்துரேன் ஐயோ என்னைய மன்னிச்சுருப்பா”என்று புலம்பியவன் அங்கே ஙே என்று விழித்தபடி கிடந்தவளைப் பார்த்து,

“ஆஞ்சனேயனோட மகாபக்தனுக்கு முத்தம் கொடுத்து மகத்தான தப்ப பண்ணிட்ட இதுக்கு விமோசனமே கிடையாது எங்காவது கங்கைல முழுகி உன் பாவத்த போக்கிக்கற வழிய பாரு!”என்று அவளை திட்டியவன் அவளை திரும்பியும் பாராமல் ஓடிவிட்டான்.அவளோ குறுகுறுத்த தன் உதட்டை கடித்தபடி முகம் சிவக்க தலைகுனிந்து தன்னை மறந்து அமர்ந்திருந்தாள்.

மாலை மாப்பிள்ளை அழைப்பு நல்லபடியாக முடிய காலை முகூர்த்தம் சீக்கிரம் என்பதால் உணவு முடியவும் எல்லோரும் நேரத்தோடு படுத்துவிட்டனர்.வேலையெல்லாம் முடித்து பத்து மணியளவில் மீரா உணவிற்கு வந்த போது வெறும் ரசம் மட்டுமே இருக்க பரிமாற யாருமில்லாம் தானே போட்டு சிறிதளவு உண்டவள் மண்டபம் அலங்காரம் செய்வதை சிறிது நேரம் பார்த்துவிட்டு யாருமற்ற மொட்டை மாடிக்கு சென்று நின்றுக் கொண்டாள்.

இந்த ஒரு இரவு முடிந்துவிட்டால் அவள் கண்ணன் இன்னொரு பெண்ணுக்கு சொந்தம் என்று எண்ணியவள் துக்கம் நெஞ்சை அடைக்க கைகளில் முகத்தை புதைத்துக் கொண்டு சத்தமில்லாமல் அழுதாள்.தன்னவனை ஒரே ஒரு முறை அருகே நின்று பார்க்க வேண்டும் என்று தாள முடியாத ஆசையெழ மெல்ல அடியெடுத்து வைத்து அவன் இருக்கும் அறை அருகே வந்தவள் லேசாக கதவை திறந்துப் பார்க்க நல்லவேளையாக அங்கே உறங்கும் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை.உள்ளே சென்று கதவை சாற்றியவள் தன்னை மறந்து உறங்கும் அவனருகே சென்று நின்றாள்.

அவள் மனதில் வைத்து பூஜிக்கும் அவன் உருவத்தை ஆசைதீர பார்த்தவள் கலைந்து நெற்றியில் புரண்ட அவன் கேசத்தை மென்மையாக ஒதுக்கிவிட்டாள்.தூக்கத்திலேயே,

“சமி…!ஐ லவ் யூ!”என்று அவன் முணுமுணுக்க பட்டென தன் கையை விலக்கியவளின் கண்ணிலிருந்து ஒரு துளி கண்ணீர் அவன் இதயம் இருக்கும் இடபாகத்தில் விழுந்து தெரித்தது.மேலே ஒரு நொடியும் அங்கு நில்லாமல் விரைந்துவிட்டாள் அவள்.

மறுநாள் குறித்த முகூர்த்தத்தில் சமிகாவின் கழுத்தில் மங்கல நாணை அணிவித்து தன் சரிபாதியாக ஏற்றுக் கொண்டான் கிரிதரன்.தன் ஆசைகளும் கனவுகளும் கானல் நீராகிப் போக இரும்பாக இறுகி போனது மீராவின் காதல் உள்ளம்.