பித்தம் கொண்டேன் பேரெழிலே -1

பூப்போன்ற இட்லியை பரிமாறிய வளையல் அணிந்த கரத்தை ரசித்தான் கங்காதரன்.அவன் மனைவி பவித்ராவை பெண் பார்க்க சென்றப் போதே காபி கொடுக்க வந்த அவளின் கண்ணாடி வளையல்கள் அணிந்த கைகளைத் தான் முதலில் அவன் பார்த்தது.பின் அவன் கண்களோடு கலந்த மான்விழிகளில் மொத்தமாக வீழ்ந்தேப் போனான்.

தற்போது திருமணம் வேண்டாம் என்று பிடிவாதம் பிடித்தவன் அன்னையின் பிடிவாதம் தாளாமல் தான் பெண் பார்க்க சென்றது.ஆனால் ஒரே பார்வையில் அவன் திட்டங்களை தவிடுபிடி செய்து அவன் வாழ்வில் நுழைந்து விட்டாள் அவள்.திருமணமாகி இந்த பத்தாண்டுகளில் அன்று மடத்தனமாக அவளை வேண்டாம் என்று கூறாமல் போனோமே என்று அவன் எண்ணாத நாளே இல்லை.

அவன் விவசாயத்தில் டிகிரி முடித்த நிலையில் தந்தை காளமேகம்  இறக்க சோகத்தில் மூழ்கிய தாய்க்காகவும் உலகமறியா தம்பிக்காவும் மேலே படிக்க வேண்டும் என்ற தன் ஆசையை அடக்கியவன் அவர்களின் வயலை பார்த்துக் கொள்ளத் தொடங்கினான்.அவனின் இருபத்தி ஏழாம் வயதில் இன்னும் அதிகமான நிலத்தோடு அரிசி மில், சர்க்கரை தொழிற்சாலை,செங்கல் சூளை என்று அவர்களின் சொத்தை பத்து மடங்காகப் பெருக்கியிருந்தான்.

அப்போது தான் அவன் பவித்ராவை மணந்தது.டிகிரி முடித்து சென்னையில் இருந்தவள் பட்டிக்காட்டில் இருக்கும் அவனை மணந்ததே அவனுக்கு ஆச்சரியம் தான்.ஆனால் ஒருமுறை கூட நகரத்தை விட்டு இந்த கடைக்கோடி கிராமத்திற்கு வந்துவிட்டேனே என்று குறைபட்டதில்லை அவள்.

தாய் கலைவாணி தம்பி கிரிதரன் என ஒரு சிறு வட்டத்தில் வாழ்ந்தவனை காதல் மனைவி இரு கண்ணான மக்கள் செல்வங்கள் என்று அதை விரிவுப்படுத்தியவள் அவள்.அவளைப் பற்றிய எண்ணங்களில் முழுகியிருந்தவனின் தோளில் தட்டியவள்,

“என்னங்க என்ன உட்கார்ந்திட்டே கனவு காணுறீங்களா?வயல்ல வேலைக்கு வராங்க சீக்கிரம் போகனும்னு சொன்னீங்களே!மறந்துட்டீங்களா?”என்று வேலையை நினைப்படுத்த கைகழுவி வந்தவன் அவளின் வளையல் அணிந்து கரத்தை எடுத்து மென்மையாக அதில் உதடு பதித்து,

“இதை பாத்ததும் எல்லாத்தையும் மறந்துதான் போய்ட்டேன்”என்றவன் வயலுக்கு சென்றுவிட அவன் மேல் கொண்ட  காதலோடு புன்னகைத்துக் கொண்டாள் அவள்.

கங்கதரனின் வீட்டிலிருந்து பத்து வீடு தள்ளி இருந்த சின்னஞ்சிறிய ஓட்டு வீட்டின் சமையலறையில் கொதிக்கும் கருப்பட்டி போட்ட நீரில் காபி தூளை போட்டு அது ஒரு கொதி வந்ததும் விறகை இழுத்துவிட்டு கொதித்ததை எடுத்து வடிகட்டி பக்கத்து அடுப்பில் வைத்திருந்த பாலில் சிறிதளவு சேர்க்க கறுப்புமில்லாமல் வெளுப்பில்லாமல் அவளை போன்றதொரு நிறம் வர இனிப்பு சரியா என்று பார்க்க அதில் இரண்டு துளி எடுத்து வாயில் விட்டவள் அதன் ருசியில்,

“இப்போல்லாம் ஹாருலிக்குசு பூஸுட்டுன்னு கண்டதை குடிக்கறாங்களே!இந்த கருப்பட்டி காபி ருசி தெரியாத மட மனுஷங்க!”என்றவள் அதை பெரிய தூக்கு வாளியில் ஊற்றிக் கொண்டு மீதமிருந்ததை கொல்லைப்புறத்தில் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த அவளின் அன்னை மீனாட்சியிடம்,

“எம்மோவ்!இந்த காபி தண்ணிய குடிச்சிட்டு அப்புறம் வெளக்கு!”என்று அவர் முன் நீட்ட மூச்சுவாங்கியபடி கைகழுவி எழுந்தவர் மகள் கொடுத்ததை வாங்கி நிதானமாக குடித்தார்.

“நான்தான் வெளக்கறேன்னு சொன்னேல்ல! உனக்கு எதுக்கு இந்த பிடிவாதம்!”

“வயலு சோலி வீட்டு சோலின்னு எத்தனைய தான்டி செய்வ!பொட்டப்புள்ள இன்னேரம் கண்ணாலம் கட்டி குஞ்சும் குளுவானுமா இருக்க வேண்டியதுப் போக இந்த வக்கில்லாத அம்மனுக்கு சேவகம் செஞ்சுக்கிட்டு கெடக்குர!அந்த மனுசன் மட்டும் உயிரோட இருந்திருந்தா “என்று மறைந்த கணவனை எண்ணி எப்போதும் போல அவர் கண்கலங்க,

“இந்தா சும்மா வாய்க்காலை துறந்துவிடாதே! நடக்க வேண்டியது எல்லாம் காலம் வரும்போது நல்லாவே நடக்கும் சும்மா கண்ணை கசக்கிட்டு கிடக்காம சமைச்சு வச்சுருக்கேன் மதியத்துக்கு எடுத்துப் போட்டு சாப்பிடு!காபி ஆறி போயிரும் நா வயலுக்கு போறேன் “என்று தாயை சமாதானப்படுத்தியவள் ஒரு கையில் காபி தூக்கும் மறுகையில் அவளின் மதிய உணவு இருக்கும் சிறிய தூக்குப் பாத்திரத்தோடு தங்களின் வயலை நோக்கி சென்றாள்.

மீனாட்சியின் கணவன் மதிவாணன் இறந்தப் போது மீராவுக்கு ஐந்து வயது அவளின் தங்கை சசிரேகாவிற்கு இரண்டு வயது.இருந்த சொற்ப நிலத்தில் பாடுப்பாட்டு குழந்தைகளை வளர்த்தார் மீனாட்சி.இரண்டு பேரையும் நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் அவர்.ஆனால் மீராவிற்கு படிப்பை விட வயல் வேலையில் தான் அதிக ஆர்வம் இருந்தது.தங்களை படிக்க வைக்க தாய் படும் கஷ்டங்களை கண்டுப் பொறுக்காமல் எட்டாவதோடு படிப்பை விட்டவள் தாயோடு சேர்ந்து நிலத்தில் வேலை செய்யத் தொடங்கி விட்டாள்.ஆனால் தங்கையை மட்டும் அவள் விரும்பும் நர்ஸிங் படிப்பில் சேர்த்துவிட்டாள்.அவளும் இப்போது படித்து டவுன் ஆஸ்பத்திரியில் பொது சிகிச்சை பிரிவில் பணிப் புரிந்துக் கொண்டிருந்தாள்.

வயலில் நாத்து நட்டுக் கொண்டிருந்தனர் பத்து பன்னிரண்டு பெண்கள்.தன் உணவை மோட்டார் அறையில் வைத்தவள் மேட்டில் நின்றபடி,

“யக்கோவ்!எல்லாரும் காபி தண்ணிய குடிச்சுப்புட்டு சோலிய பாருங்க!”என்று கத்த அதுவரை ஏறும் வெய்யிலை பொருட்படுத்தாமல் நட்டுக் கொண்டிருந்தவர்கள் களைப்பை போக்க காபி வந்துவிட்டது எனவும் நாற்றை அங்கே போட்டுவிட்டு இவள் இருந்த இடத்திற்கு விரைந்தனர்.சூடான காபி தொண்டையை நனைக்கவும் அதில் ஒரு வயதான பெண்மணி,

“ஏய் புள்ள உன் கை ருசி இந்த சுத்துப்பட்டுல யாருக்கும் இல்லாத்தா!நீ வெறும் பச்ச தண்ணிய கொடுத்தாலும் பஞ்சாமிர்தமா இனிக்கும் உன்ன கட்டிக்கற மவராசன் குடுத்து வெச்சவன்”என்று கூற மற்ற பெண்களும் அதை ஆமோதிக்க மீராவின் மனக்கண்ணில் ஒருவனின் உருவம் தோன்ற அவள் கன்னங்கள் இரண்டும் செவ்வானமாக சிவந்தது.

“அடி ஆத்தே!கட்டிக்க போறவனைப் பத்தி சொன்னதும் இந்த புள்ள மொகம் இப்பிடி சிவந்துப் போச்சுதே”என்று அவர்களில் வயதில் இளையவளான பெண் கூறி சிரிக்க மற்றவரும் அவளோடு சேர்ந்துக் கொண்டனர்.

“போதும் போதும் என்னைய கேலி பேசினது!வாங்க வெய்யிலு இன்னும் ஏறுதுக்குள்ள சோலியப் பாப்போம்”என்று அவர்கள் பேச்சைத் தடுத்து அழைத்துச் சென்றவள் தானும் நாற்றை நடத் தொடங்கினாள்.மனமோ தன் மனம் கவர்ந்தவன் எப்போது வருவானோ என்று ஏங்கியது.

சென்னை அபிராமபுரத்தில் ஒரு தனி வீட்டில் இருந்த அறையில் கண்ணாடி முன்பு நின்று தலைவாரிக் கொண்டிருந்தான் கங்காதரனின் அன்பு தம்பி கிரிதரன்.பொறியியல் படித்துவிட்டு ஐடி கம்பெனியில் ப்ராஜெக்ட் லீடராக பணிப்புரிந்துக் கொண்டிருந்தான்.நல்ல உயரமும் அதற்கு தகுந்த உடற்கட்டும் கொண்டு பார்ப்பவர் மீண்டும் திரும்பிப் பார்க்க வைக்கும் ஆணழகன் அவன்.அவன் ஒருமுறையாவது தங்களை பார்க்க மாட்டானா என்று வெளி இடங்களிலும் வேலையிடத்தும் அழகான பெண்கள் ஏங்க அவன் மனதை கவர்ந்தது என்னவோ அவனின் பெரியப்பா வைத்தியநாதனின் மருமகள் அனிதாவின் தங்கை சமிகாதான்.

கல்லூரி படிப்பிற்காக அக்காவின் வீட்டிற்கு அவள் வந்தப் போது தான் அவன் அவளை முதன்முதலாகப் பார்த்தது.பார்த்த கணமே அவளின் அசத்தலான அழகில் தன் மனதை பறிக் கொடுத்துவிட்டான்.ஆனால் அவள் மேல் காதல் என்றால் பெரியப்பா குடும்பத்தினர் அதிலும் மதனி அனிதா தன்னைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வாரோ என்று மனதில் இருப்பதை அவன் அவளிடம் கூறவே இல்லை.ஆனால் அவளே ஒருநாள் தன் பிறந்தநாள் பார்ட்டி என்று அழைத்தவள் அங்கே குழுமியிருந்த தன் நண்பர்கள் எதிரே அவன் கன்னத்தில் முத்தமிட்டு தான் அவனை காதலிப்பதாகக் கூற தாளாத சந்தோஷத்தில் காதல் வானில் சிறகில்லாமல் பறந்தான்.அதன்பின் பார்க் பீச் ஹோட்டல் மால் என்று அவர்கள் சுற்றாத இடம் பாக்கியில்லை.

இன்னும் சிறிது நேரத்தில் தன்னவளை காணப் போகிறோம் என்ற உற்சாகத்தில் அவன் வாயில் கணக்கில்லாமல் காதல் பாடல்கள் வந்துக் கொண்டிருந்தது.

அவன் பெரியப்பா வீட்டில் நடைபெறும் ஹோமத்திற்கு செல்வதால் வேட்டி சட்டையில் தயாரானான்.கையில் பைக் சாவியை எடுத்துக் கொண்டவன் அறையை பூட்டிக் கொண்டு கீழே வந்தான்.கீழ் வீட்டில் இருந்த வீட்டு ஓனரின் மனைவி இவனை அந்த உடையில் கண்டதும்,

“கிரி!பெரியப்பா வீட்டுக்கு கிளம்பிட்டியா?”என்று கேட்க,

“ஆமா ஆன்ட்டி வர ஈவினிங் நாலு மணி ஆகும்”என்று அவன் கூற,

“ஆமா பத்து மணிக்கு தானே ஆரம்பம் சொன்னே!போய்ட்டு வா!அங்க எங்களுக்கும் சேர்த்து வேண்டிக்கோப்பா”என்று கூற,

“கண்டிப்பா ஆன்ட்டி!”என்றவன் தன் காவாசாகி நின்ஜாவில் கேகேநகரை நோக்கி விரைந்தான்.

கிரியின் பெரியப்பா வைத்தியநாதன் தன் தம்பி காளமேகத்திடமே தன் பங்கு நிலத்தை விற்றுவிட்டு சென்னைக்கு குடிப் பெயர்ந்து விட்டார்.அங்கேயே சிறிதாக அவர் ஒரு வியாபாரத்தைத் தொடங்க பழக்கமில்லாத வியாபாரம் கடனை பெருக்க அவர் மகன்தான் படித்து வேலையில் சேர்ந்து அந்த கடன்களை அடைத்தான்.ஆனால் வியாபாரத்தை மீட்க முடியாமல் போனது.

அதன் பின் லோன் போட்டு சொந்த வீடு வாங்கினான்.அனிதாவோடு அவன் திருமணமும் முடிந்தது.இப்போது அவர்களுக்கு ஒரு பெண் ஒரு ஆண் என இரு குழந்தைகள் இருக்கின்றனர்.மைத்துனி சமிகாவும் படிக்கவென அவர்கள் வீட்டோடு வந்துவிட்டாள்.

கிரி காம்போண்டுக்கு வெளியிலேயே தன் பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே செல்ல அங்கே ஐயர் வந்து ஹோமம் வளர்க்க ஆரம்பித்திருந்தார்.அதன்பின் அமரவும் பொழுதில்லாமல் ஓடியாடி வேலை செய்தான்.வருவோருக்கு குடிக்க கொடுப்பது, சமையலுக்கு தேவையானதை ஸ்டோர் ரூமிலிருந்து கொண்டு வந்து கொடுப்பது உணவு நேரத்தில் பரிமாறவது என்று ஒருகணம் கூட அவனுக்கு ஓய்வே கொடுக்கவில்லை அந்த வீட்டினர்.

இத்தனைக்கிடயிலும் தன்னவளை அங்கு எங்கும் காணாமல் தவித்துப் போனான்.அவளுக்கு ஏதாவது உடல்நல குறைவோ அதனால் வரவில்லையோ என்றெல்லாம் கவலைப்பட்டான் அவன்.தயக்கத்தை விடுத்து மெல்ல அனிதாவிடம்,

“மதனி!சமிகா வரலியா? ஏதாச்சும் உடம்புக்கு முடியலையா?”என்று கேட்க,

“அது ஒன்னுமில்ல தம்பி அவளுக்கு புகைன்னாலே ஆகாது அதான் வந்ததுலேந்து மாடிலையே உட்கார்ந்திருக்கா! சாப்பாடு கூட ரூம்ல தான் சாப்டா “என்று கூற இதற்காகவா அக்காள் வீட்டு விசேஷத்தில் எதுவும் செய்யாமல் அறையிலேயே இருக்கிறாள் என்று மனதில் சுனங்கியவன் அவளை காண மாடிக்கு விரைந்தான்.அங்கே அவன் நினைத்ததுப் போலவே போனில் சிரித்தபடி மெசேஜ் செய்துக் கொண்டிருந்தாள் அவள்.இவனை கண்டதும் தலையை மட்டும் நிமிர்த்தியவள்,

“ஹே கிரண்!எப்போ வந்தே?”என்று கேட்க,

“என்ன சமி!வீட்ல விசேஷம் வீட்டு பொண்ணா கீழே ஏதாவது செய்யறது இல்லையா இன்னிக்கும் இந்த மொபைலை நோண்டிட்டு இருக்கனுமா”என்று சிறிது காட்டமாகவே கேட்க,

“ம்ப்ச் சாமி பூஜை எல்லாம் சுத்த நான்சென்ஸ்!அந்த புகைல வந்தா என் மூஞ்சி கறுப்பா ஆயிடும் லீவ் இட்!ஹே நாளைக்கு புதுசா வந்த தீம் பார்க் போலாமா?”என்று ஆசையாக கேட்க,

“இல்ல சமி!அப்பா திதிக்கு போகனும் ராத்திரி ஊருக்கு கிளம்பறேன் இங்க ஹோமம்னு சொன்னதால நேத்திக்கு கிளம்ப முடியல”என்று அவன் கூற,

“வாட் இஸ் திஸ் கிரண் இந்த காலத்துல ஆளா இதெல்லாம் நம்பறீங்களா நீங்க!உங்க அண்ணாதானே பண்றார் அதுக்கு நீங்க ஏன் போனும்?”என்று அவள் அலட்சியமாக கூற,

“அப்பா அண்ணனை மட்டும் தான் பெத்தாரா!என்னை இல்லியா!நானும் அவருக்கு மகன்தான் அவர் திதிக்கு கூட போகாம இங்க வெட்டி முறிக்க ஒன்னுமில்ல “என்று அவன் முகம் கடுக்க பேச யோசியாமல் பின் வாங்கினாள் அவள்.

“ஹோ எஸ் எஸ்!நீங்க கண்டிப்பா போகனும் இல்லேன்னா உங்க பிரதர் தப்பா நினைப்பார் ஓகே டியர் நீங்க திரும்பி வந்ததும் அங்கே போலாம் “என்று சமாதானப்படுத்தியவள் வந்து அவனை அணைக்க அவன் கோபம் தணிந்துவிட்டது.ஆனால் அவள் மனதிலோ,

‘எப்ப பாரு அண்ணா அம்மா மதனின்னு இதே பாட்டுதான்!கூடிய சீக்கிரம் அவங்களை ஒட்டுமொத்தமா விட வைக்கல என் பேர் சமிகாவே இல்ல ‘என்று கருவினாள் அவள்.