பித்தம் கொண்டேன் பேரெழிலே -10

பரந்து விரிந்த அந்த ஏரியின் அருகே தன் பைக்கை நிறுத்திய அறிவழகன் அதன் கரையில் இருந்த பழங்கால சத்திரத்தை நோக்கி ஓடினான்.தான் அங்கே இருப்பதாகவும் தனக்கு ஆபத்து எனவும் சசிரேகா போனில் கூறியதால் அங்கு வந்தவன் அந்த சத்திரத்திற்குள்ளே அங்குமிங்கும் தேடினான்.எல்லா இடமும் தேடி அவள் இல்லை என்று பதறியவன் கடைசி அறையில் நுழைய அங்கு கைகட்டியபடி நின்றிருந்தவளைக் கண்டு மகிழ்ந்தவன் பாய்ந்துச் சென்று அவளை அணைத்துக் கொண்டான்.

“அடியேய் உனக்கு ஒன்னும் ஆகலல நீ போன் பண்ணதும் எவ்ளோ பதறிட்டேன் தெரியுமா உனக்கு என்ன ஆயிடுச்சோன்னு பயந்திட்டேன்”என்றவன் பேசியபடியே நச்சென்று அவள் கன்னத்தில் முத்தம் வேறு வைக்க அவன் அணைப்பிலேயே இனிய அதிர்வை உணர்ந்தவள் அவன் முத்தத்தில் மொத்தமாக மயங்கியே போனாள்.

அப்போது அந்த அறையின் ஓரத்திலிருந்து,

“அடேய் அறிவு ஆஞ்சனேயரு கதையால நடு மண்டைல நச்சுன்னு போட போறாரு பாத்துக்க!”என்று கங்காதரனின் குரல் கேட்க திடுக்கிட்டு அவளை விட்டு விலகி நின்றவன் அங்கே அவனை கேலியாகப் பார்த்தபடி நின்ற கங்காதரனையும் கிரிதரனையும் கண்டு திடுக்கிட்டவன்,

“அ..து…அண்ணே!அது பபதட்டத்துல தெரியாம அப்படி”என்று அவன் திக்கி திணற,

“நம்பிட்டோம்”என்று சகோதரர்கள் இருவரும் கோரஸாக கூற முகத்தை எங்கே கொண்டு வைப்பது என்று திருதிருத்தான் அந்த நல்லவன்.

“அது போட்டம் சசிம்மா எதுக்கு எதையெதையோ சொல்லி எங்களை வரவழைச்சிருக்க?”என்று கங்காதரன் கேட்க,

“அதானே கண்டதையும் சொல்லி மனுசன் பிபிய ஏத்திட்டா கிராதகி!”என்று அறிவு சத்தமாகவே முணுமுணுக்க,

“அடேய் நீ சும்மா இருடா!சசி நீ சொல்லு எதுக்கு இதெல்லாம்?”என்று கிரி கேட்க,

“பெரிய மாமா!கிரி மாமா கல்யாண பேச்சு வந்ததுலேந்து நானும் நடக்கற எல்லாம் கவனிச்சிட்டுத்தான் இருக்கேன் அதுலையும் சமிகாவுக்கு தாலி மட்டும் தான் இவரு கட்டினாரு மத்தபடி சடங்கு பூராவும் எங்கக்காதான் செஞ்சா இல்ல இல்ல நீங்க செய்ய வச்சீங்க! என்னதான் நடக்குது?நீங்க மூணு பேரும் சேர்ந்து என்னமோ தில்லுமுல்லு பண்ணுறீங்க அது என்னன்னு எனக்கு தெரிஞ்சே ஆவனும் “என்று அவள் உறுதியாகக் கூற,

“சமிகாவுக்கு தாலி மட்டும் தான் கட்டுனேன்னு சொன்னீல சசி நா அவளுக்கு தாலியையும் கூட கட்டல நா தாலி கட்டுனது மீராவுக்குதான் “என்று கிரி கூற அதிர்ந்தே போனாள் சசிரேகா.தான் சரியாகத்தான் கேட்டோமா?கிரி சமிகாவிற்கு தாலி கட்டவில்லையா?

“என்ன மாமா சொல்றீங்க நீங்க சமிகாவுக்கு தாலி கட்டுனத நானே பாத்தனே!நீங்க இல்லேன்னு சொல்றீங்களே?”என்று அவள் கேட்க,

“சசி இதை முதல்ல இருந்து சொன்னால்தான் உனக்கு புரியும்…”என்று தன் காதல் கதையை சொல்லத் தொடங்கினான் கிரிதரன்.

இனி அவன் தரப்பில் மட்டுமல்லாது ஆசிரியர் தரப்பிலும் கதை நகரும் வாசகர்களே!சில முன்பு வந்த காட்சிகள் மீண்டும் வந்தாலும் அதில் மறைக்கப்பட்ட விஷயங்கள் தெரியவரும்!

கோயம்புத்தூரின் பிரபல பொறியியல் கல்லூரியின் ஹாஸ்டல் அறை.நான்காம் வருடத்தின் கடைசி செமஸ்டர் தேர்வுக்கு முன் பதினைந்து நாட்கள் விடுமுறை கொடுக்கப்பட்டிருக்க ஊருக்கு கிளம்புவதற்காக பெட்டியில் தன் துணிமணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் கிரிதரன்.அவன் அடுக்கும் வேகத்தையும் வாயில் வந்து விழுந்த காதல் பாடல்களையும் கன்னத்தில் கைவைத்தபடி பார்த்துக் கொண்டிருந்த அவனின் தோழன் ராகவ்,

“அடேய் காதல் மன்னா! கொஞ்சம் மெதுவா செய்டா பஸ்ஸு ராத்திரிக்கு தான் ரெக்கை மட்டும் இருந்திருந்தா இங்கேயிருந்து பறந்தே போயிடுவ போல”என்று கேலி செய்து சிரிக்க,

“அது மட்டும் இருந்திருந்தா உன் கிட்ட இப்படி பேசிட்டா இருப்பேன் இன்னேரம் ஊருக்கு பறந்திருக்க மாட்டேன் என்னத்த பண்றது ராத்திரி வரைக்கும் தொலையா பகலேன்னு காத்திருந்து தொலைக்கனும் “என்று அவன் சலித்துக் கொள்ள,

“இவ்வளவு காதல் இருக்கறவன் ஏன்டா இன்னும் அந்த புள்ளகிட்ட சொல்லாம வெச்சிருக்க சொன்னா அதுவும் சந்தோஷப்படும் இல்ல!”

நண்பனின் கேள்வியில் அமைதியாக அமர்ந்தவன்,

“அவ தன் படிப்பையும் உதறி அம்மாவுக்காகவும் தங்கைக்காகவும் தன்னோட வயல்ல உழைக்குறா!நா இன்னுமும் அண்ணே கொடுக்கற பணத்துல படிச்சிட்டு இருக்கேன்! என்னிக்கி நா உழைச்சு சொந்தமா சம்பாதிக்கறேனோ அதுவரைக்கும் என் காதல அவகிட்ட சொல்ல மாட்டேன்டா!உழைச்சு ஓடா போயிருக்கறவள உட்கார்த்தி வெச்சு ராணி மாதிரி பாத்துக்கணும் அதுதான்டா என் கனவு “என்று கனவில் கண்கள் மின்ன அவன் கூற,

“டேய் அதுக்குள்ள அவுங்க வீட்ல வேற மாப்பிள்ளை பாத்துட்டா என்னடா செய்வ?”என்று அவன் தோழன் கவலையோடுக் கேட்க,

“ம்ஹூம் என் மீரா இந்த கண்ணனுக்காக காத்திட்டிருப்பா எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு!”என்று அவன் கூற,

“உன் லவ்வை பாத்தா பொறாமையா இருக்குடா மச்சான்!உன் கனவு நிறைவேறட்டும்டா “என்று அவன் வாழ்த்த தாங்கள் சேரும் நாள் எப்போது வருமோ என்று ஏங்கினான் அந்த மீராவின் கண்ணன்.

எப்போதும் போல விடியற்காலையில் வீடு சென்றவன் எட்டு மணி வரை நன்றாக தூங்கி எழுந்தான்.அண்ணனோடு பேசியபடியே காலை உணவை உட்கொண்டவன் அதன் பிறகு அண்ணன் மகன் அர்ஜுனோடு அவனுக்கு சரியாக ஆட்டம் போட்டான்.ஆட்டம் முடிந்து இருவரும் டீவியில் ஆழ்ந்திருக்க அங்கே வந்த பவித்ரா,

“அர்ஜு!குளிக்க வா!”என்று அழைக்க,

“நா சித்தப்பா கூடதான் குளிப்பேன்”என்று அவன் அடம்பிடிக்க,

“சித்தப்பா கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும் நீ வா நா குளுப்பாட்டுறேன்..பாப்பா எழுந்துட்டா உன்னை குளிக்க வைக்க முடியாதுடா ப்ளீஸ் வாடா ராஜா!”என்று கொஞ்சி கெஞ்சி அழைக்க,

“ம்ஹூம் முடியாது எனக்கு சித்தப்பாவோட தொபதொபா தண்ணில குளிக்கனும்”என்று அவர்கள் வீட்டின் பின்புறம் தோட்டத்தில் இருந்த பம்ப் செட்டை கூற,

“விடுங்க மதனி நா அவனை குளிக்க வெக்கறேன்..நீங்க பாப்பாவ பாருங்க”என்று அவன் கூற,

“அவளுக்கு மீரா வந்தப்புறம் தான் தம்பி குளியல் “என்று கூற மீரா என்றதும் துள்ளிய மனதை அடக்கியவன்,

“அவ எதுக்கு மதனி?”என்று சாதாரண குரலில் கேட்க,

“அத்தக்கும் முடியல எனக்கும் அவளுக்கு தலைக்கு ஊத்த கொஞ்சம் பயம் அதான் தலைக்கு ஊத்தற அன்னிக்கு மட்டும் மீரா வந்து குளிப்பாட்டுறா!”என்று அவள் விளக்க தன்னவள் இன்னும் சிறிது நேரத்தில் வருகிறாள் என்று மனதுள் மகிழ்ந்துப் போனவன் அதை முகத்தில் காட்டாமல் மறைத்துக் கொண்டு,

“வாடா அர்ஜு பையா நாம போயி தபதபா தண்ணீல குளிக்கலாம்”என்று அண்ணன் மகனை தூக்கிச் சென்றான்.

வீட்டில் வேலையெல்லாம் முடிந்துக் கொண்டு அம்மாச்சி வீட்டிற்கு வந்தாள் மீரா.வீட்டு நிசப்தமாக இருக்க குட்டி பாப்பா அர்பிதா இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாள் என்று புரிந்துக் கொண்டவள் மாடியில் பவித்ராவின் அறைக்கு சென்றாள்.அங்கே குழந்நைக்கு தாய்பால் கொடுத்துக் கொண்டிருந்த பவித்ரா மீராவை கண்டதும்,

“இப்பதான் எழுந்தா கொஞ்ச நேரம் குடிக்கட்டும் மீரா அர்ஜு பம்ப் செட்ல குளிக்க போனான் போயி ரொம்ப நேரம் ஆச்சு இந்த டவலை கொண்டு போயி அவனை தொடைச்சு கூட்டிட்டு வரியா?”என்று கேட்க,

“பம்ப் செட்லயா தனியாவா குளிக்கான் மாமா இருக்காரா கூட “என்று அவள் கேட்க,

“ம் உன் மாமாதான் இருக்காரு “என்று அவள் கிரி என்று கூறாமல் மறைக்க துண்டோடு தோட்டத்திற்கு விரைந்தாள் அவள்.அங்கே பம்பு செட்டின் மேடையில் அமர்ந்துக் கொண்டு விரல் விட்டு ஒன்று இரண்டு என்று எண்ணிக் கொண்டிருந்தான் அர்ஜுன்.அவன் அருகே சென்று நின்றவள்,

“என்னடா குட்டி பையா குளிச்சிட்டியா? என்னத்தைடா எண்ணுற “என்று அவள் கேட்க உஷ் என்று வாயில் விரல் வைத்து அவளை பேசாமல் இருக்க செய்தவன் ,

“டொன்டி ட்ரீ,டொன்டி போர்,டொன்டி பை!ஏய் சித்தப்பா நீங்க வின் பண்ணிட்டீங்க”என்று அவன் கத்த நீரில் இருந்து திடுமென வெளியே வந்த கிரியை கண்டு,

“ஆ…!”என்று கூவியபடி திரும்பி நின்று முகத்தை கைகளால் மூடிக் கொண்டாள் மீரா.மேலாடை இல்லாத அவனின் தோற்றம் அவள் முகத்தை செவ்வானமாக சிவக்க செய்துவிட்டது.அவளின் வெட்கம் கண்டு காதலோடு புன்னகைத்துக் கொண்டான் அவன்.

கையிலிருந்த டைவலை திரும்பிப் பாராமலே அர்ஜுனிடம்,

“தா அர்ஜுனு இந்த டவலை சுத்திட்டு சீக்கிரம் வருவியாம்”என்றவள் அங்கிருந்த கல்லில் அதை வைத்துவிட்டு ஒரே ஓட்டமாக வீட்டை நோக்கி ஓடிவிட்டாள்.

அங்கே கதவு மறைவில் நின்று மூச்சு வாங்கியவள்,

“எல்லாம் இந்த பவி அக்காவால அவரு அங்க இருக்காருன்னு சொல்லியிருந்தா நா போயிருப்பனா சே என்ன பத்தி என்ன நினைச்சுக்கிட்டாரோ தெரில! இன்னும் அவரு மொகம் பாத்து எப்படி பேச”என்று வெட்கியவள் குழந்தை அழும் சத்தம் கேட்டு மாடிக்கு விரைந்தாள்.

தன் அறைக்கு சென்று வேட்டி சட்டையில் தயாரான கிரிதரன் கீழே வர ஹாலில் சீட் போட்டு அதன் மேல் குழந்தையை படுக்க வைத்து அதற்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தாள் மீரா.

“என் பட்டுக்குட்டிக்கு எண்ணெ தேய்க்கறாங்களா! என் செல்ல தங்கத்துக்கு எண்ணெ தேய்க்கறாங்களா!என் செவத்த குட்டிக்கு எண்ணெ தேய்ச்சு சீயக்கா போட்டு தேய்ச்சா பளபளன்னு ஆயிடுவாங்க!அச்சோ அளுவாதேடி என் தங்கம்”என்று வாய் நிறைய கொஞ்சியபடி அவள் தேய்க்க தங்கள் குழந்தைக்கு அவள் தேய்ப்பதை கற்பனையில் கண்டு மகிழ்ந்தான் அவன்.வெறும் கற்பனையே அவ்வளவு இனித்தது அவனுக்கு.

பவித்ரா உதவ மீரா குழந்தையை வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டி தலையை துவட்டி சாம்பிராணி போட்டு பவுடர் மை கவுன் என்று அலங்கரித்து பவித்ராவின் அறையில் இருந்த ஆடும் நாற்காலியில் அமர்ந்தபடி மெல்லிய குரலில் அவள் பாட அவளின் கையணைப்பின் கதகதப்பில் சுகமாக உறங்கியது குழந்தை.கதவிற்கு வெளியே நின்று அவளின் பாட்டை ரசித்துக் கொண்டிருந்த கிரி பாடல் நிற்கவும் மெல்ல அறையினுள்ளே நுழைந்தான்.

அவள் அமர்ந்திருந்த நாற்காலி அருகே வந்து நின்றவன் குனிந்து குழந்தையின் தலையை வருடி,

“தூங்கிட்டாளா!”என்று கிசுகிசுப்பான குரலில் வினவ அவன் அருகாமையிலும் குரலிலும் தவித்த மீராவின் இதயம் வேகமாகத் துடிக்க உதட்டை கடித்து உணர்வுகளை அடக்க போராடினாள்.அவளின் முல்லை பற்களால் கடிப்பட்ட தேன்சுவை இதழையே கூர்ந்தவன் அதன் சுவையை தான் என்றுணர போகிறோம் என்று ஏங்கினான்.அவளை மேலும் சோதிக்கும்படி இன்னும் குனிந்தவன் குழந்தையின் நெற்றியில் இதழ் பதிக்க அவனின் மூச்சுக்காற்று அவளின் மேனியை தீண்ட கண்களை இறுக மூடிக் கொண்டு விட்டாள் அவள்.

அவளின் கண்கள் மூடியிருந்ததால் அவளின் முகத்தை ஆசைதீர பார்த்தவன் புன்னகையோடு அங்கிருந்து சென்று விட்டான்.அவன் அகன்றதை உணர்ந்து கண்களை திறந்தவள் அவன் குழந்தைக்கு முத்தமிட்ட இடத்தில் தானும் இதழ் பதித்தாள் அவன் மறைவிலிருந்து அதை பார்த்துக் கொண்டிருந்ததை அறியாமல்.தன் மனதில் அவள் இருப்பது போலவே அவள் மனதில் தானும் இருப்பதை அறிந்தவனுக்கு மனம் சந்தோஷத்தில் நிறைந்துப் போனது.

ஆனால் இரண்டே நாட்களில் அழுது சிவந்த அவள் முகத்தை கண்டு துடிக்கப் போகிறோம் என்பதை அப்போது அவன் அறியாமல் போனான்.