பனியில் உறைந்த சூரியனே – 8

அத்தியாயம் – 8

கவியுகனை வாகனம் பழுது பார்க்கும் கடைக்கு வரச் சொல்லிவிட்டு, தயாவையும் அழைத்த ஷர்வஜித் அங்கிருந்து செல்லும் முன் “காந்தன் அங்கிள் மணி இப்போ ஆறு தான் ஆகுது. ஏழு மணிக்குப் போன் வரும். அதுக்கு முன்னாடி நாங்க மெக்கானிக் செட்டுக்குப் போய்ட்டு வந்திடுறோம். ‌ஒருவேளை போன் சீக்கிரம் வந்தால் விவரத்தைக் கேட்டு வச்சுக்கிட்டு அகிலன்கிட்ட பேசணும்னு சொல்லுங்க. முடிந்த வரை பேசுற நேரத்தை கூட்டிக்கிட்டே போங்க…” என்று இன்னும் அவருக்குச் சில ஆலோசனைகளைச் சொல்லி விட்டு தயாவை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான்.

காந்தன் சொல்லியிருந்த வாகனம் பழுது பார்க்கும் கடையின் முன் தயாவின் காரில் வந்திருந்த இருவரும் அமர்ந்திருக்க, “தயா நான் இங்கிருந்தே வாட்ச் பண்றேன். நீ போய் அகிலன் இங்கே வந்தானானு மட்டும் விசாரி. முகத்தைப் பதட்டம் இல்லாம சாதாரணமா வச்சுக்கோ. கடத்தல், காணோம்னு எதுவும் சொல்லாதே…” என்று தயாவிடம் சொல்ல,

“ஏன் ஷர்வா… இந்தக் கடைப் பசங்க தான் கடத்திருப்பாங்கனு நினைக்கிறியா? ஒருவேளை மாமாவோட பிசினஸ் எதிரிங்களா கூட இருக்கலாமே?” என்று கேட்டான்.

“இல்லைடா… ஏதோ ஒரு நெருடல். பிசினஸ் ஆளுங்களா இருக்காதுன்னு சொல்லுது. அதுக்கு முக்கியக் காரணம் அகிலன் வீட்டுல ஸ்கூல் போறேன்னு சொல்லிட்டுப் போகாம இருந்து இருக்கான். இன்னைக்கும் வர மாட்டேன்னும் அவன் பிரண்ட்கிட்ட சொல்லி இருக்கான். இதை எல்லாம் வச்சுப் பார்த்தா இது கடத்தல் போலவே தெரியலை…” என்று தன் யூகத்தைச் சொன்னான்.

ஆம்…! பூர்வா, தம்பியின் ஒரு நண்பனிடம் விசாரிக்க அவன் சொன்ன தகவலில் வீடே அதிர்ந்து போனது. தான் கேள்விப்பட்டதை வீட்டில் சொன்னாள்.

“அவன் நேத்தும் ஸ்கூலுக்கு வரலையாம்பா. இன்னைக்கும் வர மாட்டேன் வேற பிரண்ட்ஸ் கூட வெளியே போறேன்னு ஒரு பிரண்ட் கிட்ட சொல்லி இருக்கான்…” என்று சொன்னவள் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று புரியாமல் திகைத்து அமர்ந்து விட்டாள்.

மகள் சொன்னதைக் கேட்டதும் லட்சுமி “என்னடி சொல்ற? நேத்து ஸ்கூல் போனேன்னு என்கிட்டே சொன்னானே. நைட் கூட இன்னைக்கு ஹோம் ஒர்க் நிறையக் கொடுத்துட்டாங்க நான் செய்யணும்னு அவன் ரூம்குள்ள தனியா உட்கார்ந்து எழுதிட்டு இருந்தானே. நீ என்ன இப்படிச் சொல்ற?” என்று திகைத்துப் போய்க் கேட்டார்.

“பிள்ளை என்ன பண்றான்னு கூடத் தெரியாம வீட்டில் நீ என்ன செய்ற?” என்று காந்தனும் புரியாமல் கத்தினார். சிறிது நேரம் வீடு அல்லோலப்பட்டது.

தயா தான் மூவரையும் பேசி அமைதியாக இருக்க வைத்தான்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே தன் அடுத்த நடவடிக்கையைப் பற்றி யோசித்து, அதன்படி தயாவை வாகனங்கள் பழுது பார்க்கும் கடைக்கு அழைத்து வந்து விட்டான்.

ஷர்வா கடத்தல் போலவே தெரியவில்லை என்று சொல்லவும் அதிர்ந்த தயா “என்னடா சொல்ற? கடத்தல் இல்லனா… வேற என்ன?” என்று பதட்டமாகக் கேட்டான்.

“என் யூகம் சரினா கொஞ்ச நேரத்தில் தெரிஞ்சிடும்டா. போய் நான் சொன்ன போல விசாரி…” என்று தயாவை அனுப்பி வைத்தான்.

கடையின் முன் இருந்த அந்த இரு சக்கர வாகனத்தின் சக்கரத்தைக் கழற்றி சரி பார்த்துக் கொண்டிருந்த அந்த இருபது வயதில் இருந்த இளைஞன் முன் சென்று நின்றான்.

வேலை செய்து கொண்டிருந்த அந்த இளைஞன் நிமிர்ந்து தன் முன் நின்ற தயாவைப் பார்த்து “என்ன சார்…! என்ன வேணும்?” என்றான்.

“தம்பி நான் அகிலனோட மாமா தயாகரன். ஈவ்னிங் குடும்பத்தோட வெளியே போற பிளான்ல இருந்தோம். ஆனா அவன் உங்களைப் பார்த்துட்டு வர்றேன்னு சொல்லிட்டு வந்தவன் இன்னும் வரலை. அவன் உள்ளே இருந்தா கூப்பிடுப்பா…” எனத் தயா சாதாரணமாகக் கேட்கவும், அந்த இளைஞன் வேகமாகத் தன் அருகில் இன்னொரு வண்டியைப் பார்ப்பதாகப் பாவ்லா காட்டிய படி தங்களையே பார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்த்தான்.

அவன் ஏதோ சமிக்ஞை காட்ட, உடனே தயாவின் புறம் திரும்பியவன், “அகிலா டூ டேஸ்ஸா இங்கன வரவே இல்லையே அண்ணே! உன்ன பத்தியல்லாம் அகிலா சொல்லியிருக்கான் அண்ணே. இப்போ தான் மொதவாட்டி உன்ன பார்க்கிறேன். ஆளு சூப்பரா தான் இருக்கே…” என அவன் பேசிக் கொண்டே போனான்.

“நான் சூப்பரா இருக்கிறது இருக்கட்டும்பா. நிஜமாவே அவன் இரண்டு நாளா வரலையா? ஆனா அவன் இங்க தானே வர போறேன்னு சொல்லிட்டு வந்தான்…” என்றான்.

“ஐயோ…! என்னண்ணே சொல்ற? இங்கயா? மெய்யாலுமே இங்க அவன் வரலையே அண்ணே. உன்கிட்ட நா ஏன் பொய் சொல்ல போறேன்?” என்று அவன் இன்னும் அழுத்தி சொன்னான்.

“ஓ…! அப்படியா? இங்க வர்றேன் சொல்லிட்டு எங்க போய்ருப்பான்…” என்று தயா தனக்குள்ளேயே பேசுவது போல அவனுக்கும் கேட்பது போல முணுமுணுத்துத் தன் நெற்றியைப் பிடித்து யோசிப்பது போல நின்றான்.

அதைக் கண்டு பக்கத்தில் இருப்பவன் ‘சொல்லு’ என்பது போலக் கண் ஜாடை காட்ட ‘சரி’ என்று அவனிடம் தலையசைத்தவன் தயாவைப் பார்த்து “அகிலாக்கு ஒரு புதுத் தோஸ்து கிடைச்சிருக்கான் அண்ணே. அதுல எங்கள எல்லாம் இப்போ பார்க்க வர்றதே இல்லை. ஒருவேளை அவனைக் பார்க்கப் போயிருப்பான்…” என்றான்.

“என்ன சொல்ற தம்பி. புதுப் பிரண்ட்டா? யாரு அவன் எங்க இருக்கான்?” எனக் கேட்டான்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது அண்ணே. புதுத் தோஸ்துனு தான் சொன்னான். வேற எதுவும் சொல்லையே…” எனக் கையை விரித்தான்.

இவர்கள் இங்கே பேசுவதை எல்லாம் காருக்குள் இருந்து கேட்டுக் கொண்டிருந்ததோடு கருப்புக் கண்ணாடியால் மூடியிருந்த காரின் ஜன்னல் வழியே அந்தக் கடையில் இருப்பவர்களின் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் ஷர்வா.

தயாவை அனுப்பும் போதே இவன் போனில் இருந்து அவனின் போனுக்குப் போன் செய்து அதை லைனில் இருக்கும் படி வைத்துக் கொள்ளச் சொல்லி தான் அனுப்பினான்.

அதனால் ஷர்வா அவர்களின் முகப் பாவத்திற்கு ஏற்றவாறு அவர்களின் பேச்சையும் கேட்டுக் கொண்டிருந்ததால் அவனின் சந்தேகம் உறுதியாகி கொண்டே போனது.

இனி என்ன செய்யலாம் எனச் சில நொடிகள் யோசித்தவன், போன் காலை நிறுத்திவிட்டுத் தயாவிற்குப் போன் செய்தான். ‘இவ்வாறு தான் அழைக்கும் போது நீ வந்து விடு’ என்று ஷர்வா சொல்லியிருந்ததால் தயா அந்தக் குறிப்பை உணர்ந்து “சரி தம்பி… நான் அவன் பிரண்ட்ஸ் யார்கிட்டயாவது விசாரிக்கிறேன்…” என்று அந்த இளைஞனிடம் சொல்லிவிட்டுக் காருக்கு வந்துவிட்டான்.

காரில் அமர்ந்தவன் “என்ன ஷர்வா அந்தப் பையன் சொன்னதை வச்சு உனக்கு என்ன தோணுது?” எனக் கேட்டான்.

“இந்தப் பசங்ககிட்ட ஏதோ தப்பு இருக்குத் தயா. கவி வந்ததும் இந்தப் பசங்களை வாட்ச் பண்ண சொல்லிட்டு நாம ஏழு மணிக்கு வர போற காலை ட்ரேஸ் பண்ணுவோம். கிளம்பு…!”

“ஓகே ஷர்வா…! ஆனா எனக்கு நிஜமா இங்க என்ன நடக்குதுனே புரியலை. ஆனா அகிலன் நல்ல படியா கிடைச்சா போதும்…”

“கிடைச்சுருவான் தயா. டோன்ட் வொர்ரி…” எனத் தயாவின் தோளைத் தட்டிக் கொடுத்த ஷர்வா, கவியுகனுக்கு அழைத்துச் சில விவரங்களைச் சொன்னான்.

இருவரும் வீட்டிற்கு வந்ததும் இன்னும் அப்படியே இடிந்து போய் அமர்ந்திருந்தவர்கள் இருவரையும் கேள்வியாகப் பார்த்தார்கள்.

தயா அவர்களுக்குப் பதிலாக உதட்டைப் பிதுக்க, ஷர்வா அனைவரையும் ஒரு பார்வைப் பார்த்தவன் தொடர்ந்து விதர்ஷணாவைப் பார்த்து, இவள் இன்னும் கிளம்ப வில்லையா என்பது போலச் சில நொடிகள் வெறித்தவன், பின்னர் வேறு போன் பேச ஆரம்பித்து விட்டான்.

அவனின் பார்வையைக் கண்டவள் ‘என்ன ஜித்தா என்னை இப்படிப் பார்க்கிறார்?’ என்று புரியாமல் குழம்பினாள்.

ஷர்வா போன் பேசி முடித்த போது வீட்டுப் போனில் அழைப்பு வர ஆரம்பிக்கவும், போனைப் பார்த்துப் பெண்கள் அரண்ட முகத்துடன் இருக்க, காந்தன் போனையும், ஷர்வாவையும் மாறி, மாறி பார்த்தார்.

“எடுங்க அங்கிள். நான் அப்ப சொன்னது போலப் பேசுங்க…” என்று அவரின் அருகில் வந்து அமர்ந்தான்.

“ஹலோ…”

“உங்க பையனை விடுவிக்க நாங்க கேட்ட பணம் ரெடி பண்ணிட்டீங்களா?”

“ரெடியா இருக்கு. ஆனா அதுக்கு முன்னாடி நான் என் பையன்கிட்ட பேசணும்…” காந்தன் கேட்டதும் அந்தப் பக்கம் கிசுகிசுவெனச் சில மெல்லிய சப்தங்கள் கேட்டன. பின்பு போன் கை மாறியது.

“அப்பா…” எனத் தீனக் குரலில் அகிலனின் குரல் கேட்க, “டேய் அகிலா…!” எனத் தடுமாறிய குரலில் அழைத்தவர் மேலும் பேச முடியாமல் திண்டாடினார்.

அகிலனை கணவன் அழைக்கவும் வேகமாக அருகில் வந்த லட்சுமி அவரிடம் இருந்து போனை பறித்து, “அகிலா…! எங்கடா இருக்க? உன்னை யாரும் அடிச்சாங்களா?” எனக் கதறிக் கொண்டு கேட்டார்.

“ஆமாமா… அடிச்சாங்க. அப்பா பணம் தரலைனா என்னைக் கொன்னுருவேன்னு பயமுறுத்துறாங்கமா. ம்மா அப்பாவை பணத்தோட வந்து சீக்கிரம் கூட்டிட்டுப் போகச் சொல்லுங்கமா…” என்று அழுதபடி மகன் சொல்லவும் லட்சுமிக்கு இங்கே மனம் துடித்துப் போனது.

“ஹய்யோ கண்ணா…! அழாதேடா…! இதோ இப்போவே அப்பாவைக் கிளம்பச் சொல்றேன். ஏங்க பையனை அடிக்குறாங்களாம்ங்க. சீக்கிரம் போய் என் பையனைக் கூட்டிட்டு வாங்க…” என்று பதறித் அழுதார்.

உடனே மனைவியின் கையில் இருந்து போனை வாங்கிய காந்தன் “அகிலா… இதோ அப்பா வந்துறேன்டா. நீ பயப்படாதே…!” என அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்தப்பக்கம் போன் கை மாறியது.

“என்ன உங்க பையன்கிட்ட பேசிட்டீங்க தானே? உங்க பையன் எங்ககிட்ட தான் இருக்கான். அதை நம்பாம விசாரிக்கிறேன்னு சொல்லி வேற ஏதாவது வேலை செய்யாம ஒழுங்கா நாங்க சொல்ற இடத்துக்குப் பணத்தைக் கொண்டு வந்து கொடுக்குற வழியைப் பாருங்க. இல்லனா உங்க பையனை உயிரோடயே பார்க்க முடியாது.

அப்புறம் இன்னொரு விஷயம். உங்க பையனைக் காப்பாத்த போலீஸ்கிட்ட போறீங்கன்னு தெரிஞ்சது கொஞ்சம் கூட யோசிக்காம அவனைக் கொன்னு போட்டுட்டு போய்க்கிட்டே இருப்போம்…” என்று மிரட்டியவன் செங்கல்பட்டுச் செல்லும் வழியில் இருக்கும் ஒரு புதிதாகக் கட்டிக் கொண்டிருக்கும் கட்டிடம் அருகில் வந்து பணத்தைத் தர சொல்லி விட்டுப் போனை வைத்தான்.

போனை வைத்து விட்டு ஷர்வாவின் பக்கம் திரும்பிய காந்தன் “தம்பி நீங்க கிளம்புங்க. நீங்க இங்க இருக்கிறது தெரிஞ்சாலே அவங்க என் பையனைக் கொன்னுருவாங்க போல. இதில் நீங்க கண்டு பிடிக்கிறீங்கனு எதுவும் வேலை செய்து என் பையனை அவனுங்க கையில் பலி கொடுக்க நான் தயாரா இல்ல. ப்ளீஸ் கிளம்புங்க…” என்று கையெடுத்துக் கும்பிட்டவர் மேலும் அவனின் முகத்தைப் பார்க்க முடியாமல் திரும்பி நின்றார்.

அவரின் மனநிலை புரிந்து ஷர்வா அமைதியாக நிற்க, தயாவிற்கு அவரின் பேச்சுக் கோபத்தைத் தந்தது.

“மாமா… என்ன பேசறீங்க? ஷர்வாவை வரவைச்சது நான். அவனைப் போகச் சொல்றது என்னையும் சேர்த்து வீட்டை விட்டுப் போகச் சொல்றதுக்குச் சமம்…” என்றான் கோபத்துடன்.

“ஐயோ மாப்பிள்ள…!” என அவர் பதறி சமாதானம் சொல்ல வர, “டேய் தயா..‌. நிறுத்து. அங்கிள் மகனைப் பத்தின கவலையில் சொல்றார். நீ வா…! ஒரு முக்கியமான வேலை இருக்கு…” என்று தயாவை அழைத்தான் ஷர்வா.

அவன் கோபப்பட்டுக் கொண்டு தான் கிளம்புகிறானோ என நினைத்த காந்தன் “தம்பி தப்பா எடுத்துக்காதீங்க…” என்றவரை தடுத்து “நான் எதுவும் நினைக்கலை அங்கிள். நீங்க அவங்க கேட்ட பணத்தை எடுத்துக்கிட்டு கிளம்புங்க. உங்களோட அந்த வழியில் நான் குறுக்க வரலை.

ஆனா என்னைத் தயா எதுக்குக் கூப்பிட்டானோ அந்த வேலையை முடிச்சுக் கொடுத்துட்டுத் தான் நான் போவேன். என் வழியில்…!” என்று அழுத்தி சொன்னவன். “தயா… என்ன ஏதுன்னு கேள்வி கேட்காம கிளம்பு. குவிக்…! நமக்கு டைம் இல்லை. வா போகலாம்‌…” என்றவன் நொடிகள் கூட நிற்காமல் வெளியே விரைந்து நடந்தான்.

பின்னால் தயா ஓட்டமும், நடையுமாக ஓட, இப்போது தன் இரு சக்கர வாகனத்தை எடுத்த ஷர்வஜித் “தயா நீ காரில் ஃபாலோ பண்ணு…” என்று விரைந்தான்.

ஷர்வா போய் நின்ற இடம் அந்த வாகனம் பழுது பார்க்கும் கடைக்குப் பின்புறம் உள்ள தெருவில். அவன் சென்று வண்டியை நிறுத்தும் போதே, கவியுகன் ஒரு வீட்டின் பின்புறம் இருந்து கையசைத்து அழைத்தான்.

அவனின் அருகில் சென்ற ஷர்வா “என்ன கவி? எனி இம்பர்மேஷன்?” எனக் கேட்டான்.

“வெறும் இம்பர்மேஷன் இல்லை ஷர்வா… நம்ம வேலையே முடிய போகுது. வா இந்தப் பக்கம்…” என அருகில் இருந்த இன்னொரு சந்திற்குள் அழைத்துப் போனான்.

அவர்கள் பின்னால் குழப்பத்துடன் தயாவும் நடந்தான்.

சந்தின் ஊடாகவே நடந்து அழைத்துப் போன கவி, ஒரு சிறிய வீட்டின் ஜன்னல் பக்கமாகப் போய் நின்றான்.

ஜன்னலை காட்டிய கவி ‘நீயே திற!’ என்பது போல ஷர்வாவிற்குக் கை காட்ட வெளிப்பக்கமாக லேசாகத் திறந்து காற்றில் சிறிது அசைந்து கொண்டிருந்த கதவை மெல்ல திறந்தவன் உள்ளே கேட்ட பேச்சுச் சத்தத்தில் முகம் இறுகி போனான்.

உள்ளிருந்து வந்த பேச்சின் குரலில் அதிர்ந்து “அகிலா?” என்று மெல்லிய சத்தத்துடன் முணுமுணுத்தான் தயா.

“ஸ்ஸ்ஸ்…!” என அவனை அடக்கிய ஷர்வா மேலும் பேச்சைக் கேட்க ஆரம்பித்தான்.

“எங்க அம்மாதான் எப்பவும் ஏமாளினு நினைச்சேன்டா. ஆனா இப்போ தான் தெரியும் எங்க அப்பாவும் ஏமாளினு. என்னைக் கொன்னுருவீங்கன்னு சொன்னதும் எங்க அப்பா என் நடிப்புல ஏமாந்து பணத்தைத் தர்றதா சொல்லிட்டார்.

தினமும் பாக்கெட் மணியா நூறு ரூபா கொடுக்கவே திட்டிட்டே கொடுப்பார். ஆனா இப்போ பாரு இருபது லட்சம் லம்பா தூக்கி கொடுக்கிறார். அதை வச்சு நான் நினைச்சதை வாங்கிடுவேன்…” என அகிலன் சொல்லவும்,

“என்னா ஷோக்கா நடிக்கிறே அகிலா நீ! உன் நடிப்புல நானே மிரண்டுட்டேனா பார்த்துக்கோயேன்…!” என்று சொன்னவன் தயாவிடம் அகிலன் இரண்டு நாட்களாக மெக்கானிக் செட்டுக்கு வரவில்லை என்று சொன்ன இளைஞன்.

அவர்கள் பேசிக் கொண்டதை எல்லாம் கேட்க, கேட்க தயாவிற்கு ரத்தம் கொதித்தது. ‘அங்கே பெற்றவர்களும், கூடப் பிறந்தவளும் இவனுக்காக அழுது துடிக்க, இங்கே இவன் அவர்களை ஏமாத்தி விட்டதாகப் பெருமைபட்டுக் கொண்டு இருக்கிறான். எல்லாம் அகிலனின் நாடகம் தானா? அகிலனா இப்படி?’ என்று வருத்தத்துடனும், கோபத்துடனும் மனதிற்குள் புலம்பிக் கொண்டு திகைத்து நின்று விட்டான்.

இன்னும் உள்ளே அகிலன் பேசிக் கொண்டிருந்தான்.

“பணம் கைக்கு வந்ததும் உங்க பங்கு பணம் கொடுக்குறேன்டா பாண்டி. டேய் அப்பு…! நீ கொடுத்த ஐடியா செம்மையா வொர்க் அவுட் ஆகுதுடா. இது போலக் கடத்தல் நாடகம் போட்டு எங்க அப்பாகிட்ட பணம் வாங்குவோம்னு நீ சொன்னப்ப இது எல்லாம் எப்படிச் சரி வரும்னு நினைச்சேன்.

ஆனா இன்னைக்குக் கச்சிதமா எல்லா வேலையும் செய்து பணம் கைக்குக் கிடைக்கிற அளவுக்குத் திட்டத்தை சரியா செயல் படுத்திட்ட…” என்று சொல்லிவிட்டு வெற்றிக் களிப்பில் சிரித்தான்.

அவன் நண்பர்களும் உடன் சிரித்தனர். அந்த அறையில் பாண்டி, அப்பு மட்டும் இல்லாது இன்னும் இரண்டு நண்பர்களும் இருந்தனர்.

“ஆமா.. நம்ம திட்டம் சூப்பரா வேலை செய்யுது. அதுவும் உங்க மாமா கடைல விசாரிக்க வரவும் நான் கூடக் கொஞ்சம் பயந்துட்டேன். அப்பு தான் என்னைத் தைரியமா பேச சொல்லி கண் காட்டினான்.

“ஏன்டா அப்பு… நாம தான் கடத்திட்டோம்னு அப்போவே போன் செய்து சொல்லிட்டோமே… அப்புறமும் ஏன் அகிலனை பத்தி விசாரிக்க வந்தாங்க?” என்று பாண்டி புரியாமல் கேட்டான்.

“ஒருவேளை நாம பொய் சொல்றோம்னு நினைச்சுருப்பாங்கடா. எல்லாரும் பிள்ளையைக் காணோம்னா பிரண்ட்ஸ்கிட்ட எல்லாம் விசாரிப்பாங்களே? அப்படி நம்மகிட்டயும் விசாரிச்சுருப்பாங்க. இப்போ நாம திரும்பப் போன் போட்டதில் இனி விசாரிக்க மாட்டாங்க. எனக்குத் தெரிஞ்சு அவங்க இப்போ வரை போலிஸ்கிட்ட போகலை.

புதுசா நம்ம கடைல ஒரு சின்னப் பையன் சேர்ந்துருக்கானே? அவனை விட்டு அகிலன் வீட்டுப் பக்கம் பார்த்துட்டு வர சொன்னேன். அவன் ஏதோ ஒரு அக்காதான் வீட்டுக்குள்ள போச்சு. போலீஸ்காரங்க வண்டி எதுவும் வரலைன்னு பார்த்துட்டு வந்து சொன்னான். அதனால நம்ம வேலை எந்தப் பிசக்கும் இல்லாம தான் முடிய போகுது…” என்றான் அப்பு.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அகிலன் தப்பு செய்தவன் போலத் திருதிருவென முழித்தான். அவர்கள் சொன்ன நண்பர்களிடம் விசாரிப்பார்கள் என்ற வார்த்தைதான் அவனை முழிக்க வைத்தது. ஒரு நண்பனிடம் இன்றைக்குப் பள்ளிக்கு வரமாட்டேன் என்று உளறி வைத்தது ஞாபகம் வர, இந்நேரம் வீட்டில் அவனிடம் விசாரித்திருப்பார்களோ என்று பயந்தான்.

அவனின் முழியைக் கண்ட அப்பு “என்னடா அகிலா… ஏன் அப்படி முழிக்கிற?” என்று வினவினான்.

தான் செய்து வைத்த சொதப்பலை சொன்னால் திட்டுவானோ என்று எண்ணியவன் “ஒன்னும் இல்லடா… இந்த வீடு ரொம்பப் புழுக்கமா இருக்கு. அதான்டா வேற ஒண்ணுமில்லை…” என்று வேகமாகப் பதிலளித்தான்.

“நீ வந்ததில் இருந்தே அப்படிச் சொன்னதால தான் அந்தச் சந்து கதவை லேசா திறந்து வச்சுருக்கோம்…” என்று சொல்லிக்கொண்டே ஜன்னல் பக்கம் கைகாட்ட திரும்பினான். அந்த நேரம் ஷர்வா சட்டென மறைந்து கொண்டான்.

ஜன்னலை காட்டிவிட்டு “இந்த வீடு சுத்தி சந்து மறைச்சுருக்கிறதால தான் இங்கே உன்னை மறைச்சு வைக்க இதைத் தேர்ந்தெடுத்தோம். இன்னும் கொஞ்ச நேரம் சமாளி. நாம தான் இப்போ கிளம்பிருவோமே…” என்றான் பாண்டி.

“சரிடா… எப்படிடா இந்த வீட்டை பிடிச்சீங்க?”

“ஒரு ஆளு வாடகைக்கு விடுறதுக்காக இந்த வீட்டு சாவியை நம்ம கடைல கொடுத்து ஆளு வந்தா காட்டுங்க. இரண்டு நாளில் வெளியூரில் இருந்து வந்துருவேன்னு கொடுத்துட்டு போனாருடா. அப்புக்கு நல்ல பழக்கமான ஆளு வேற… வெறும் வீட்டை வச்சு நாம என்ன செய்யப் போறோம்னு நினைச்சுச் சாவி கொடுத்துட்டுப் போனார் போல. ஆனா வெறும் வீட்டையும் நாம யூஸ்புல்லா உபயோகிப்போம்னு அவருக்குத் தெரியலை…” என்று இன்னொரு நண்பன் அந்நபரை நினைத்துக் கேலியாகச் சிரித்தான்.

“எப்படியோடா… எல்லாமே நமக்குச் சாதகமா தான் இருக்கு. அப்படியே பணமும் எந்தப் பிரச்சினையும் இல்லாம வந்தா சரிதான்…” என்றான் அகிலன்.

“அதெல்லாம் பிரச்சனை இல்லாம வந்துரும்டா. அப்படியே பிரச்சனை வந்தாலும் அதைச் சமாளிக்கவும் என்கிட்ட வழி இருக்கு…” என்ற அப்பு தன் இடுப்பின் ஓரம் லேசாகத் தடவி விட்டுக் கொண்டான். அவனின் கண்கள் ‘என் திட்டம் சரியாக நடக்க எதுவும் செய்வேன்’ என்று சொல்வது போல இருந்தது. அகிலனின் கவனம் அவன் மேல் இருப்பதைக் கவனித்துத் தன்னைச் சுதாரித்துக் கொண்டவன்,

“சரி… சரி…! கிளம்புங்கடா…! இப்போ கிளம்பினால் தான் செங்கல்பட்டு ரோட்டுக்கு போக முடியும். டேய் அகிலா…! நீ ஹெல்மெட் போட்டுக்கோ…! உன்னை யாரும் பார்த்துற கூடாது…” என்றான் அப்பு.

உடனே அனைவரும் பரபரப்பாக எழுந்து நிற்க “சரிடா… நான் பாத்ரூம் போயிட்டு வர்றேன். நாம கிளம்புவோம்…” என்று அகிலன் மட்டும் வேறு அறைக்குச் செல்ல, பாண்டியும், அப்புவும் அவர்களின் நண்பர்களும் தங்களுக்குள் கிசுகிசுப்பான குரலில் ஏதோ பேசிக் கொண்டனர்.

அவர்கள் பேசிக் கொண்டது ஜன்னல் அருகில் இருந்தவர்களுக்குத் தெளிவாகக் கேட்கவில்லை என்றாலும், உள்ளே இருந்தவர்களின் உடல் மொழியைக் கூர்ந்து கவனித்த ஷர்வா ஜன்னலை விட்டு விலகி அருகில் இருந்த சுவரில் சாய்ந்து நின்றான்.

அதைக் கண்டு “என்ன ஷர்வா சும்மா நிக்கிற? வா… உள்ள போவோம். அந்த அகிலன் தலையிலேயே நாலு கொட்டு கொட்டி வீட்டுக்கு இழுத்துட்டுப் போவோம்…” எனக் கோபமாக மெல்லிய குரலில் சொன்ன தயாவின் தோளைத் தட்டிய ஷர்வா ‘நட’ என்பது போலக் கைக் காட்டினான்.

“டேய்…! என்னடா? வாசல் அந்தப் பக்கம் இருக்கும் போலயே? நீ என்ன இந்தப்பக்கம் கூப்பிடுற?” என வாசலுக்கு எதிர்ப்பக்கமாக நடக்கச் சொன்ன ஷர்வாவைப் பார்த்துக் கேட்டான்.

அவனுக்கு எந்தப் பதிலும் சொல்லாது தன் பின்னால் நின்று கொண்டிருந்த கவியின் காதில் ஏதோ சொல்லவும், அவன் சரி என்றுவிட்டு, கவி வேறு பக்கம் நடந்து செல்ல, தயாவை அதற்கு எதிர் திசையில் அழைத்துக் கொண்டு வந்தான்.

அவன் செய்வது புரியாமல் தயா குழப்பத்துடன் நடந்தான். அந்த வீட்டைத் தாண்டி சிறிது தூரம் வந்ததும், “என்னடா?” என்று மீண்டும் தயா கேட்க,

“அவசரப்படாதே தயா…! அகிலன் தான் செய்து வச்சுருக்குற வேலையோட பாதிப்புத் தெரியாம விளையாட்டு தனமா யோசிச்சுருக்கான். அவனோட இந்த வயசு எப்படியும் தடம் புரள வைக்கும் வயசு. இப்போ நீ போய்த் தலையில் கொட்டி கூட்டிட்டு வர்றனு வை… அப்போ என்ன நடக்கும்னு நீ நினைக்கிற?” என்று கேட்டான்.

“பயந்து போய் நம்ம பின்னாடி வருவான்…” எனத் தயா சொல்ல…

“இல்ல தயா…! அது உன்னோட தப்புக் கணக்கு. அவனே வர நினைச்சாலும் வர முடியாது…” என்றான் ஷர்வா.

“என்ன ஷர்வா சொல்ற?”

“ஹ்ம்ம்… ஆமா…! நீ அந்தப் பசங்க பேசியதை மட்டும் தான் கேட்ட… அவனுங்களைப் பார்க்கலயே? உண்மையில் அங்க நடந்துட்டு இருக்குறது நாடகம் இல்லை. உண்மைதான்…! அகிலன் கடத்தி தான் வைக்கப்பட்டுருக்கான்…” என்றான் ஷர்வஜித்.