பனியில் உறைந்த சூரியனே – 7

அத்தியாயம் – 7

அன்று மாலை ஐந்து மணி அளவில் தன் அலுவலகத்தில் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தான் ஷர்வஜித்.

தற்போது தான் கமிஷ்னருடன் ஒரு சந்திப்பை முடித்து விட்டு வந்ததினால் அவர் கொடுத்த வழக்குக் கோப்பினை பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்தக் கோப்பில் இருந்த முக்கியக் குறிப்புகளை எல்லாம் தன்னிடம் இருந்த குறிப்பு நோட்டில் குறித்துக் கொண்டே வந்தவன் தன் சொந்த அலைப்பேசியின் சத்தம் கேட்டு நிமிர்ந்தான்.

மேஜையில் இருந்த போனை கையில் எடுத்து பார்த்தவனின் புருவம் உயர்ந்தது. மனதிற்குள் யோசனையும் வந்து ஒட்டிக் கொள்ள அதனுடனே போனை ஆன் செய்து காதில் வைத்தான்.

“என்னடா தயா அதிசயமா எனக்குக் கால் பண்ணிருக்க?” என ஷர்வா கேட்கவும்,

“நான் போன் பண்றது அதிசயம் இல்லடா. நீ உடனே போனை எடுத்த பாரு அது தான் அதிசயம்…” என்றான் ஷர்வஜித்தின் நண்பனான தயாகரன்.

“சரி… சரி…! சொல்லு… என்ன இந்த நேரம் கால் பண்ணிருக்க?”

“ஷர்வா எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்டா. கொஞ்சம் நேரில் வர முடியுமா?”

“என்ன தயா என்ன விஷயம்? ஹெல்ப்னா எப்படி? உன் பிரண்ட்டாவா? இல்ல போலீஸ்ஸாவா?”

“போலீஸ்ஸாவே வா ஷர்வா. ஆனா யூனிபார்ம் போடாத போலீஸ். கொஞ்சம் சீரியஸ் தான். எனக்கு என்ன பண்றதுன்னு புரியலை. நீ வந்தா கொஞ்சம் நல்லா இருக்கும்…” என்று தயா சொல்லவும்,

யோசனையாக நாடியை தடவி கொண்ட ஷர்வா “எங்கே வர… உன் வீட்டுக்கா? வெளியே எங்கேயாவதா?” எனக் கேட்டான்.

“இல்லை ஷர்வா என் உட்பி பூர்வா வீட்டுக்கு வந்துரு. அங்கே தான் பிராப்ளம்…”

“என்ன தயா? அப்படி என்ன பிராப்ளம்? அதுவும் பூர்வா வீட்டுல? போன்ல சொல்ல முடியாதா?” என ஷர்வா கேட்க,

“ஷர்வா ப்ளீஸ்… நீ நேரில் வா. உனக்கே தெரிஞ்சிடும்…” எனக் கெஞ்சலாகக் கேட்ட தயாவிடம் வருவதாகச் சொன்னவன் அங்கேயே அவனுக்கென்று இருக்கும் மாற்று உடையை மாற்றிக் கொண்டு வெளியே வந்தான்.

அப்போது அந்த அலுவலக வளாகத்தில் இருந்த ஒரு ஓரத்தில் நின்றிருந்த ஒரு பெரியவர் இவனைப் பார்த்ததும், வேகமாகப் பேச அருகில் வந்தார். ஆனால் அதற்குள் அங்கே இருந்த ஒரு கான்ஸ்டபிள் “சார் நீங்க இப்படி வாங்க! நீங்க பார்க்க வந்த ஆபிசர் அவர் இல்லை…” என்று அவரை அழைத்துக் கொண்டு அந்தப் பக்கம் சென்றார்.

அவர் தன்னை நோக்கி வருவதைப் பார்த்துக் யோசனையுடன் நிற்க போன ஷர்வா, அவர் வேறு ஒருவரை பார்க்க வேண்டியவர் என்று தெரிந்ததும் மீண்டும் நடையைத் தொடர்ந்தான்.

தன் வாழ்வில் பல திருப்பங்கள் நிகழ காரணமாக இருக்கப் போகும் நபர் அவர் தான் என்று தெரியாமலேயே அவரைத் தாண்டி சென்றான் ஷர்வஜித்.

வளாகத்தை விட்டு வெளியே வந்தவன் காவல் வாகனத்தைத் தவிர்த்து விட்டு தன் இருசக்கர வாகனத்தில் கிளம்பினான்.

இது போல அவன் தனித்துச் செல்ல அடிக்கடி அவனின் வாகனத்தைத் தான் பயன்படுத்துவான் என்பதால், அங்கே யாருக்கும் அது வித்தியாசமாகத் தெரியவில்லை.

தயாகரன் மணமுடிக்கப் போகும் பெண்ணான பூர்வாவின் வீடு ஷர்வஜித் ஏற்கெனவே அறிந்தது தான். தயாவும், பூர்வாவும் சொந்தங்கள் என்பதால் தயா மூலமாகப் பூர்வாவையும் அறிந்திருந்தான்.

தயா, ஷர்வாவின் பள்ளி காலம் முதல் தோழன். கல்லூரி படிப்பும், வேலையும் மாறி ஆளுக்கு ஒரு திசையில் சென்று விட்டாலும் அவர்களின் நட்பு மட்டும் தடம் மாறாமல் சென்று கொண்டிருந்தது.

ஷர்வஜித்தின் இளமை காலச் சந்தோஷமும், அதைத் தொடர்ந்து அவன் அனுபவித்த வலிகளையும் அறிந்தவன் தான் தயாகரன்.

அதுவும் வலியில் துவண்டு போன நண்பனுக்குத் தோழனாகத் தோள் கொடுத்து தாங்கியவன்.

இன்னும் ஒரு சில நண்பர்கள் ஷர்வாவிற்கு இருந்தாலும், அவர்களை விடத் தயாகரன் தான் முதன்மை நண்பன். அவன் தன் சொந்த விஷயங்களைப் பற்றிப் பேச தயங்காத ஒரு நண்பன் தயா தான் என்றால் அது மிகையல்ல.

சிறிது நேரத்தில் பூர்வாவின் வீட்டின் முன் வண்டியை நிறுத்தியவனைக் கண்டு வாசலில் ஏற்கெனவே இவன் வருகைக்காகக் காத்திருந்த தயா வேகமாக அருகில் வந்து வரவேற்றான்.

ஷர்வா அந்த வீட்டிற்குள் நுழைந்ததுமே ஒரு அசாதாரணச் சூழ்நிலையை உணர்ந்து கொண்டான்.

பூர்வாவும், அவளின் அம்மா லட்சுமியும் அழுது வீங்கிய முகத்துடன் இருந்தார்கள். பூர்வாவின் அப்பா காந்தன் தலையில் கைவைத்து இடிந்து போய் அமர்ந்திருந்தார்.

ஷர்வாவை பார்த்ததும் பெண்கள் வரவேற்பாகத் தலையை மட்டும் அசைக்க, காந்தன் மட்டும் எழுந்து வந்து அவனின் கையை இறுக பிடித்துக்கொண்டார். ஓரிரு முறை அக்குடும்பத்தினருடன் பேசி இருந்ததினால் சாதாரணமாக உரையாட ஆரம்பித்தான்.

“என்னாச்சு அங்கிள்? என்ன பிராப்ளம்? ஏன் எல்லாரும் இப்படி இருக்கீங்க?” என ஷர்வா கேட்கவும் அதுவரை சத்தமில்லாமல் அழுது கொண்டிருந்த லட்சுமி சத்தம் போட்டு அழ ஆரம்பித்தார்.

“என்னாச்சுடா தயா?”

“நீ இங்கே வந்து உட்காரு சொல்றேன்…” என்று சோஃபாவில் தன் அருகே அமர வைத்தவன், “பூர்வாவோட தம்பி அகிலனை காணோம்டா…” என்றான்.

“ஓ…!” என அதிர்ந்து பார்த்தவன் பின்பு காவல்காரனாக மாறி “எப்ப இருந்து காணோம்?” எனக் கேட்டான்.

“காலையில் ஸ்கூல் போனவனைக் காணோம். ஆனா எங்களுக்கு இப்போ தான் தெரியும். அதுவும் ஒருத்தன் போன் போட்டு சொன்ன பிறகு…” என்று தயா சொல்ல,

“என்னடா சொல்ற? தெளிவா சொல்லு. காணாம போய்ட்டானா? கடத்தப்பட்டு இருக்கானா?”

“கடத்தல் தான்…”

“ஓ…!” என்றவன் “ஆன்ட்டி இங்கே வாங்க… காலையில் இருந்து என்ன நடந்தது? அகிலன் என்ன டிரஸ் போட்டிருந்தான்? எல்லாம் விவரமா சொல்லுங்க…” என்று லட்சுமியை அழைத்தான்.

“காலையில் வழக்கம் போல ஸ்கூல் கிளம்பி போனான் தம்பி. ஸ்கூல் யூனிபார்ம் தான் போட்டிருந்தான். அவன் ஸ்கூல்ல இருக்கான் வழக்கம் போல ஐஞ்சு மணிக்கு வீட்டுக்கு வந்துருவான்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா மூனு மணி போல ஒருத்தன் வீட்டு போனுக்குப் போன் பண்ணி உங்க பையனை கடத்திட்டோம்.

இப்போ எங்ககிட்ட இருக்கான். உங்க பையனை விடணும்னா பணம் வேணும்னு கேட்டான். அதுக்கு உங்க பையனோட அப்பாகிட்ட பேசணும். இன்னும் கொஞ்ச நேரத்தில் திரும்பப் போன் பண்ணுவேன்னு சொல்லிட்டு வச்சுட்டான்…” என்று அழுது கொண்டே சொல்லி முடித்தார்.

“உங்க பையன் இப்போ என்ன படிக்கிறான்?”

“ப்ளஸ் ஒன் படிக்கிறான். என் பிள்ளையை எப்படியாவது கண்டு பிடிச்சு தாங்க தம்பி…” என்று சொல்லி மீண்டும் அழ ஆரம்பித்தவரிம்,

“கண்டு பிடிச்சிறலாம் ஆன்ட்டி. கவலைப்படாதீங்க…” என்று விட்டுக் காந்தனை பார்த்தான்.

“நீ சொல்லுங்க அங்கிள்… உங்களுக்கு எப்போ விஷயம் தெரிஞ்சது? அதுக்குப் பிறகு உன்கிட்ட கடத்தல்காரன் பேசினானா?” எனக் கேட்டான்.

“இவ உடனே எனக்குப் போன் பண்ணி சொன்னதும் பதறி அடிச்சுக்கிட்டு வந்தேன். நான் வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்தில் போன் வந்தது. உங்க பையன் நல்ல படியா வேணும்னா இருபது லட்சம் பணம் தரணும். போலீஸ்கிட்ட போகக் கூடாதுனு சொன்னான்…” என்றவர் தயாவை பார்த்தார்.

“இன்னைக்குப் பூர்வாக்கு உடம்பு சரியில்லைன்னு காலேஜ் போகாம வீட்டில் இருந்தாடா. அதான் அவள் எப்படி இருக்கானு கேட்க போன் போட்டப்ப அகிலனை காணோம்னு அழுதா. உடனே இங்கே வந்து பார்த்தா பயந்து எல்லாரும் அழுதுட்டு இருந்தாங்க.

அப்போ தான் உன் மூலமா கண்டுபிடிக்கப் பார்க்கலாம்னு வர சொன்னேன். ஆனா நீ வந்ததுக்கே இவங்க எல்லோரும் பயந்துட்டு தான் இருக்காங்க…” என்று சொல்லவும், அனைவரின் முகத்தையும் கூர்ந்து கவனித்தான் ஷர்வா.

மூவரின் முகத்திலும் சோகத்தையும் மீறி அவன் வந்ததினால் உண்டான பயமும் தெரிந்தது.

“பயப்படாதீங்க…! கடத்தினவன் போலீஸ்கிட்ட போகக் கூடாதுனு தான் சொல்லுவான். அதையே காரணமா வச்சு அவனுங்களைத் தப்பிக்க விடக் கூடாது. அங்கிள் நீங்க என்ன முடிவு எடுத்து இருக்கீங்க. பணம் விஷயத்தில்?” என்று கேட்டான்.

“பணத்தை ரெடி பண்ணி பையனை பத்திரமா கூப்பிட்டு வர வேண்டியது தான். என்னதான் அடங்காத பிள்ளையா இருந்தாலும் ஒத்தை ஆம்பளை பிள்ளையாச்சே. அவன் உயிரோடு வந்தா போதும்…” என்றார்.

அவர் பதில் சொன்ன விதத்தில் “என்ன சொல்றீங்க? வீட்டுக்கு அடங்காத பிள்ளையா?” என்று ஆச்சரியமாகக் கேட்டான்.

“ஏங்க இந்த நேரத்தில் கூடப் பிள்ளையைக் கரிச்சு கொட்டலைனா உங்களுக்குத் தூக்கம் வராதா?” என்று பிள்ளையைப் பற்றிச் சொன்னதைத் தாங்காமல் லட்சுமி சத்தம் போட்டார்.

“உள்ளதை தானே சொன்னேன். சும்மா கத்தாதே…” என்று பதிலுக்குச் சத்தம் போட்ட காந்தனை “இப்போ உங்க சண்டையா முக்கியம்? முதலில் தம்பி என்ன ஆனான்னு பார்ப்போம்…” என்று அழுத படி அடக்கினாள் பூர்வா.

மூவரையும் பார்த்த ஷர்வா, ‘என்னடா இதெல்லாம்?’ என்பது போலத் தயாவை பார்த்தான்.

“அகிலன் கொஞ்ச நாளா ஊர் சுத்துறேன்னு வெளியே கிளம்பிடுறான்டா. அது மாமாவுக்குப் பிடிக்கலை. அதான் அவனை அப்ப அப்ப இப்படித் திட்டிட்டு இருப்பார்…” என அவனின் காதின் அருகில் குனிந்து மெதுவாகச் சொன்னவன், “அதை விடு…! இப்போ அடுத்து என்னடா செய்றது? அகிலனை எப்படிக் கண்டு பிடிக்க?” எனக் கேட்டான்.

“அடுத்து எப்போ போன் பண்றேன்னு எதுவும் கடத்தல் காரன் சொன்னானா?”

“ஆமா தம்பி… ஏழு மணி போலத் திரும்பப் போன் பண்ணி பணம் எப்படித் தர்றதுனு சொல்றேன்னு சொன்னான்…” எனக் காந்தன் பதில் சொன்னார்.

“ஹ்ம்ம்… ஓகே…! போன் வரட்டும் காலை ட்ரேஸ் பண்ண ஏற்பாடு பண்ணுவோம். ஆனா அதுக்கு முன்ன அகிலனோட பழக்க வழக்கம், அவன் நண்பர்கள் யாரெல்லாம் இருக்காங்க. இன்னைக்கு அவன் எங்கே, எந்த இடத்தில் வச்சு கடத்தப்பட்டான். இதை எல்லாம் விசாரிக்கணும்…” என்றவன் யாருக்கோ போனில் அழைப்பு விடுத்தான்.

அதைக் கவனித்த காந்தன் “தம்பி போலீஸ் ஆளுங்க வந்து போய் விசாரணை பண்றதை கடத்தல் காரங்க கவனிச்சு என் பையனை எதுவும் செய்துட்டா என்ன செய்றது? இப்போ மாப்பிள்ளை உங்களை வர சொன்னதே திக் திக்குன்னு இருக்கு. இதில் நீங்க இன்னும் யாரையோ வர சொல்றீங்க. பயமா இருக்கு தம்பி…” என்று மகனுக்கு எதுவும் ஆகி விடுமோ என்று நடுங்கிய குரலில் சொன்னார்.

“உங்க பயம் புரியுது அங்கிள். இப்போ நான் வர சொன்ன ஆள் போலீஸ் டிப்பார்மெண்ட் இல்லை. சோ… விஷயம் வெளியே போகாது…” என்றான்.

ஷர்வா அழைத்த நபர் வந்து சேர்வதற்குள் “பூரியை பார்க்கணும்…” என்ற படி வந்து வாசலில் நின்றிருந்தாள் விதர்ஷணா.

தனக்குக் கதவை திறந்து விட்ட தயாவை பார்த்து, “என்ன தயா அண்ணா பூரிக்கு உடம்பு சரி இல்லாததைக் காரணமா வச்சு வீட்டுலேயே ரொமான்ஸ் பண்ண வந்துட்டீங்களா?” எனக் குறும்பாகக் கேட்டுக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்த விதர்ஷணா அங்கே அழுது வடிந்த முகத்துடன் அமர்ந்திருந்த குடும்பத்தினரை பார்த்துப் புரியாமல் திகைத்து நின்றவளின் பார்வை அங்கிருந்த ஷர்வஜித்தின் மீது பட “ஜித்தா எங்கே இங்க?” என்று முணுமுணுத்தாள்.

அவளின் ஜித்தா என்ற அழைப்பு அருகில் இருந்த தயாவின் காதில் விழ விதர்ஷணாவையும், நண்பனையும் மாறி மாறி ஆச்சரியமாகப் பார்த்தான்.

விதர்ஷணாவின் முகத்தில் தெரிந்த வியப்பிற்கு எதிர்பதமாக ஷர்வாவின் முகம் சலனம் இல்லாமல் இருந்தது.

தோழியைப் பார்த்ததும் காய்ச்சல் சோர்வையும் பொருட் படுத்தாமல் ஓடி வந்து அணைத்துக் கொண்ட பூர்வா அழ ஆரம்பித்தாள்.

“என்ன பூரி… என்னாச்சு? எதுக்கு இப்படி அழுகுற?” எனக் கேட்டவளுக்குப் பதில் சொல்லாமல் அழுகையைத் தொடர்ந்தாள்.

“என்ன தயாண்ணா?” என்று அருகில் நின்றிருந்தவளிடம் கேட்க,

அவனோ “பூர்வா…! தர்ஷியை உள்ளே கூப்பிட்டுகிட்டுப் போய்ச் சொல்லு. இங்கே இப்ப வேலை இருக்கு…” என்று இருவரையும் உள்ளே அனுப்பினான்.

அவர்கள் உள்ளே செல்லவும் ஷர்வா கேட்காமலேயே “அது பூர்வாவோட கிளாஸ் மேட் விதர்ஷணா. இரண்டு பேரும் திக் பிரண்ட்ஸ் வேற. அதான் அவளுக்கு உடம்பு சரி இல்லைனு பார்க்க வந்திருப்பா…” என்று சொல்ல, ஷர்வா வெறுமனே தலையை மட்டும் அசைத்தான்.

சிறிது நேரத்தில் ஷர்வா அழைத்த ஆள் வந்து சேர்ந்தான்.

“வா கவி…! இந்த வீட்டுப் பையனை தான் காணோம். அவன் எங்க இருந்து கடத்தப் பட்டிருக்கான், எத்தனை மணி போலக் கடத்தப் பட்டிருக்கான்னு டீடெயில்ஸ் வேணும் குவிக்கா விசாரிச்சு சொல்லு. அப்படியே இந்த வீட்டுப் போனை ட்ரேஸ் பண்ண உங்க ஆளுங்க மூலமா ஏற்பாடு பண்ணு. என் டிப்பார்மெண்ட் ஆளுங்க வேணாம்னு இவங்க அபிப்பிராயம். அதான் உன்னை வர வச்சுருக்கேன்…” என்றான்.

“அவ்வளவு தானே ஷர்வா… இன்னும் ஒரு மணி நேரத்தில் எல்லா டீடைல்ஸும் உன் கைக்கு வந்து சேரும். டிரேஸ் பண்ண ஏற்பாடு பண்ணிட்டு விசாரிக்கக் கிளம்புறேன்…” கவி என்று ஷர்வாவினால் அழைக்கப் பட்ட கவியுகன் தனியார் துப்பறியும் நிறுவனம் ஒன்றை நடத்திக் கொண்டிருப்பவன்.

ஷர்வஜித்தின் தொழில் ரீதியான நண்பனாகச் சில மாதங்களாக மாறியவன். தன் போலீஸ் துறை நுழைய முடியாத சமயத்தில் கவியுகன் மூலம் தன் காரியத்தை நடத்திக் கொள்வான் ஷர்வா.

சொன்னது போலவே அந்த வீட்டிற்கு வரும் போன் காலை கண்காணிக்கத் தேவையான ஏற்பாடை செய்து விட்டுக் கிளம்பினான்.

“அங்கிள் இந்தக் கேஸுக்கு தேவை இல்லாததா இருக்கலாம். ஆனா எனக்கு ஏதோ நெருடல் இந்தக் கேஸ்ல இருக்குற போலவே இருக்கு. அதனால் அகிலனோட பழக்க வழக்கத்தை எல்லாம் கொஞ்சம் சொல்லுங்க. அதில் இருந்து கூட அவனைக் கடத்தின நபர் யாரா இருக்கலாம்னு க்ளு கிடைக்கும்…” என்று தன் விசாரணையைத் தொடங்கினான்.

“தம்பி உனக்கே நல்லா தெரியும் என் தொழில் கன்ஸ்ட்ரக்ஷன்னு. நம்ம தொழிலுக்கும், வசதிக்கும் ஏத்த போல ஆட்களோட தானே பழகணும்? ஆனா அவன் பழகுற ஆட்கள் எல்லாம் லோக்கல் ஆளுங்க கூடத் தான். அப்படிப் பழகுறது ஒன்னு தான் தம்பி எனக்கு என் பிள்ளைகிட்ட பிடிக்காத ஒரே விஷயம்…” என்று சொன்னவரை வியப்பாகப் பார்த்தான்.

வசதி வைத்துதான் பழக வேண்டும் என்ற கருத்தில் அவனுக்கு உடன்பாடு இல்லை என்றாலும் அதை அவரிடம் காட்டாமல் “எந்த மாதிரி லோக்கல் ஆளுங்களைச் சொல்றீங்க?” என்று வழக்குச் சம்பந்தப்பட்ட கேள்வியை மட்டும் கேட்டான்.

“மெக்கானிக்குங்க தம்பி. பக்கத்தில் இருக்குற ஏரியால தான் ஒரு மெக்கானிக் செட் இருக்கு. அங்கே தான் தினமும் சாயந்திரம் போவான். அவனுக்குப் பைக் மேல ஒரு கிரேஸ். அந்தப் பசங்களோட சேர்ந்துகிட்டு அங்கே சர்வீஸ்க்கு வர்ற பைக்குகளை ஓட்டி பார்க்க அங்கே போவான்.

நீ ப்ளஸ் டூ முடி… அப்பா உனக்குப் புதுப் பைக்கே வாங்கித் தர்றேன்னு சொன்னாலும் கேட்காம வித்தியாச வித்தியாசமா பைக் ஓட்டலாம்னு அங்கே போவதை விட மாட்டான். அது தவிர ஸ்கூலுக்கு சரியா போய்டுறான். ஆனா படிப்பில் பாஸ் மார்க்கு மட்டும் வாங்குற அளவுக்குத் தான் படிக்கிறான். அந்தப் பசங்க கூடப் பழகுறதுக்கு முன்னாடி நல்ல மார்க் வாங்கின பையனா தான் இருந்தான்…” என்று மகனை பற்றிய விவரத்தை சொன்னார்.

அனைத்தையும் கேட்ட ஷர்வா யோசனையாக நாடியை தடவிக் கொண்டவன் “இன்னைக்கு உங்க பையன் கடத்தப்பட்டுடான்னு தெரிஞ்ச பிறகு அவனோட ஸ்கூல் பிரண்ட்ஸ் யார்கிட்டயாவது ஸ்கூலுக்கு அவன் வந்தானானு விசாரிச்சீங்களா?” என்று கேட்டான்.

“இல்லையே தம்பி… கடத்திட்டாங்கனு தெரிஞ்சதும் என்ன செய்யறதுனே புரியாம உட்கார்ந்துட்டேனே…”

“ஹ்ம்ம்… ஓகே…! உங்க பையனோட ஸ்கூல் பிரண்ட்ஸ் யார் யார்? அவங்க போன் நம்பர் எல்லாம் சொல்லுங்க. அவங்களையும் விசாரிக்கணும்…” என்றான்.

“பூர்வாகிட்ட தான் அவ தம்பியோட பிரண்ட்ஸ் நம்பர் எல்லாம் இருக்கும் தம்பி…” என்றவர் “எம்மா பூர்வா… இங்கே வா…” என்று அறையில் இருந்த மகளை அழைத்தார்.

அவளுடன் விதர்ஷணாவும் வெளியில் வந்தாள். அகிலனை நினைத்து அவளின் கண்களும் கலங்கி இருந்தன.

“பூர்வா அகிலனோட பிரண்ட்ஸ் எல்லாருக்கும் போன் போட்டு இன்னைக்கு அவன் ஸ்கூலுக்கு வந்தானான்னு அழுகாம சாதாரணமா கேளுங்க…” என்று ஷர்வா சொல்ல,

‘சரி’ எனத் தலையசைத்து விட்டு போன் செய்து பேசியவளின் முகம் வெளுத்துக் கொண்டே போனது.

பெற்றவர்கள் மகளின் முகத்தைப் புரியாமல் பயத்துடன் பார்க்க, ஷர்வாவின் முகம் மட்டும் நான் எதிர்பார்த்த ஒன்று தான் என்பது போல இருந்தது.

அவள் பேசி முடித்ததும் என்னவென்று கேட்டான்.

போனில் அறிந்த செய்தியை வீட்டில் சொல்ல, காந்தனும், லட்சுமியும் அதிர்ந்து போனார்கள்.

விஷயத்தைச் சொல்லி விட்டு நடப்பது புரியாமல் பூர்வா கலங்கி அமர்ந்திருக்க, விதர்ஷணா தோழியின் தோளை அழுத்தி சமாதானம் செய்ய முயன்றாள். அவளுக்கும் ‘என்ன நடக்குது இங்கே?’ எனப் புரியாமல் முகம் குழப்பத்தைத் தத்தெடுத்து இருந்தது.

காந்தன் மகனை பற்றிப் புரிந்து கொள்ள முடியாமல் தலையில் கைவைத்து அமர்ந்து விட்டார்.

ஏதோ யோசித்துக் கொண்டிருந்த ஷர்வாவின் தோளில் கை வைத்து “என்னடா?” என்று கேட்டான் தயா.

நண்பனை கையமர்த்திய ஷர்வா அகிலனின் அறை எதுவெனக் கேட்டு அங்கே சென்று சிறிது நேரம் ஆராய்ந்தான்.

அப்பொழுது ஒரு விளம்பரம் அச்சடிக்கப்பட்ட காகிதம் வித்தியாசமாகத் தெரிய, அதைக் கண்டவனின் முகம் யோசனையாகச் சுருங்கியது.

சில விஷயங்களை மனதில் ஓட்டிப் பார்த்தவன் தன் போனை எடுத்து கவியுகனுக்கு அழைத்தான்.

“கவி நீ எது வரை விசாரிச்சிருக்க?” எனக் கேட்டான்.

“நான் இங்க அகிலன் ஸ்கூலுக்கு வந்தேன் ஷர்வா. வாச்மேனை பிடிச்சு அகிலனோட கிளாஸ் டீச்சர் நம்பர் வாங்கிப் பேசினேன். அவங்க அகிலன் நேத்தும் இன்னைக்கும் ஸ்கூலுக்கே வரலைன்னு சொல்றாங்க. அடுத்து இங்கே ஸ்கூல்லை சுத்தி இருந்த கடைகள் பக்கம் ஒரு ரவுண்ட் போனேன். யூஸ்புல்லா ஒரு தகவலும் கிடைக்கலை…” என்றான்.

“இனி உனக்கு அங்கே எதுவும் தகவல் கிடைக்காது கவி. நீ கிளம்பி இங்கே அகிலன் வீட்டு பக்கத்து ஏரியால இருக்குற மெக்கானிக் செட்டுக்கு வந்துரு. அங்கே தான் நமக்குத் தேவையான தகவல் கிடைக்கும்…” என்று மெக்கானிக் செட்டின் பெயரை சொல்லி அவனை வர சொல்லிவிட்டு எழுந்த ஷர்வா,

“தயா லெட்ஸ் கோ…!” என நண்பனையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான்.