பனியில் உறைந்த சூரியனே – 6

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 6

மறுநாள் காலையில் தன் அறையில் இருந்து கீழே இறங்கி வந்த விதர்ஷணா, வரவேற்பறையில் அமர்ந்திருந்த தேவாவின் முன் வந்து நின்றாள்.

“குட்மார்னிங் ண்ணா…! என் கார் என்னாச்சு?” என்று கேட்டவளிடம்,

“குட்மார்னிங் தர்ஷி…! காரை மெக்கானிக்கிட்ட சொல்லி சரி பண்ணி எடுத்துட்டு வந்தாச்சு. வெளியே தான் நிக்குது. சரி வா டிஃபன் முடிப்போம். அப்புறம் நான் உன்னை விட வந்த போலீஸ் மேனை பார்க்க போகணும்…” என்றான்.

சாப்பிடும் பொழுது வழக்கமாகத் தன் அண்ணனிடம் வளவளக்கும் விதர்ஷணா இன்று அமைதியாக உண்டு கொண்டிருந்தாள்.

அவளின் சிந்தனை முழுவதையும் ஷர்வஜித்தே ஆட்சி செய்து கொண்டிருந்தான்.

தங்கையின் அமைதி தேவாவிற்கு வினோதமாக இருக்க, அவளை ஆராய்ச்சி பார்வைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அண்ணனின் பார்வையைக் கூட உணராது கனவுலகில் இருந்தவளை “அப்புறம் தர்ஷி உன் படிப்பு எல்லாம் எப்படிப் போய்ட்டு இருக்கு?” எனக் கேட்டு அவளை நினைவுலகிற்கு அழைத்து வந்தான்.

“ஹா…! என்னண்ணா… என்ன கேட்ட?” விதர்ஷணா அவன் கேட்டது புரியாமல் விழிக்க…

தேவாவின் பார்வை இன்னும் கூர்மை பெற்றது.

தன் கையைச் சாப்பாட்டில் இருந்து எடுத்தவன் “என்ன தர்ஷி… உன் கவனம் எல்லாம் எங்க இருக்கு? அப்போ இருந்து பார்க்கிறேன் நீ சரியே இல்லை. என்னாச்சு? நைட் நடந்த இன்சிடெண்ட்ல பயந்துட்டீயா?” ஒருவேளை அப்படியும் இருக்குமோ என்று தான் கேட்டான்.

ஆனால் இரவு சம்பவம் அந்தக் கயவர்களை ஞாபகப்படுத்தும் முன் அவளுக்கு ஜித்தாவை ஞாபகப்படுத்தியது. அவனை மனதில் நிறுத்திக் கொண்டே ‘ஆமாம்’ என்று வேகமாகத் தலையாட்டினாள்.

தங்கையின் கள்ளத்தனம் அறியாது ரொம்பப் பயந்துட்டா போல என நினைத்து “அதான் நல்லப்படியா தப்பிச்சு வந்திட்டியே? பயப்படாதே. அப்படி ஒரு சம்பவம் நடக்கலைனே நினைச்சுக்கோ. இப்ப நான் போய் அந்த ராஸ்கல்ஸை பார்த்து அவனுங்க வெளியே வர முடியாத மாதிரி செய்துட்டு வர்றேன்…” என்றான்.

தேவாவின் பேச்சைக் கேட்ட பிறகு தான் தன் தவறு விதர்ஷணாவிற்குப் புரிந்தது.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

எவ்வளவு பெரிய இக்கட்டில் இருந்து தப்பி வந்திருக்கின்றாள். தன்னைத் துரத்தியவர்கள் யார் என்று தெரியவில்லை. மானப் பிரச்சனையில் இருந்து கடைசி நிமிடத்தில் தப்பித்திருக்கின்றாள். ஆனால் அதை என்ன ஏது என்று யோசிக்காமல் அது என்ன எப்போது பார்த்தாலும் அவனின் நினைவு என்று தன்னையே திட்டிக் கொண்டவள் தேவாவைப் பார்த்து,

“அண்ணா அவனுங்க திட்டம் போட்டே என் கார் நிக்கிற போலச் செய்துருக்கானுங்க…” என்று சொல்லி ஷர்வாவின் கேள்வியில் தான் புரிந்து கொண்டதைச் சொன்னாள்.

“என்ன திட்டம் போட்டு நடந்ததா?” என்று அதிர்ந்த தேவா “நான் போய் என்னனு விசாரிச்சுட்டு வர்றேன். ரொம்ப லேட் பண்றது நல்லதில்லை…” என்றவன் அவசரமாகச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு விரைந்து கிளம்பிச் சென்றான்.

தேவா முதலில் சென்றது அந்த ஏரியாவின் காவல் நிலையத்திற்குத் தான். அங்கிருந்த இன்ஸ்பெக்டரை சந்தித்தவன் நேற்றைய விவரத்தைச் சொல்லி விசாரித்தான்.

“ஹலோ இன்ஸ்பெக்டர்…! நேத்து நைட் ஒரு பொண்ணைத் துரத்தினதா ஒரு நாலு பேரை பிடிச்சுட்டு வந்தீங்களே அவனுங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு கேட்டான்.

“பொண்ணைத் துரத்தின கேஸ்ஸா? அப்படி யாரையும் நாங்க பிடிக்கலையே. நீங்க எந்த ஏரியானு இன்னும் டீடைல்ஸ்ஸா சொல்லுங்க…” என்ற இன்ஸ்பெக்டர் மேலும் விவரம் சேகரித்துக் கொண்டு அப்படி யாரையும் தாங்கள் பிடிக்கவே இல்லை என்று சாதித்தார்.

அவரின் பதிலில் மலைத்துப் போனான் தேவா. அதெப்படி தர்ஷி சரியாகச் சொன்னாளே? ஏன் நேற்று அவளை விட வந்தவனே பொண்ணைச் சரியாகப் பாதுகாக்கவில்லை என்று திட்டினானே? என்று குழம்பிப் போனான்.

குழப்பத்துடன் மீண்டும் ஒரு முறை விசாரிக்க, இன்ஸ்பெக்டரோ கடுப்பாக ஆரம்பித்தார்.

“அதான் சொல்றேனே சார். அப்படி யாரையும் நாங்க பிடிக்கலை. வேணும்னா நீங்க அசிஸ்டெண்ட் கமிஷனர் சார்கிட்டயே போய்க் கேளுங்க. அவர் தான் உங்க தங்கையைப் பத்திரமா விட்டார்னு சொன்னீங்களே. அவரே பதில் சொல்வார்…” என்றவர் அவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்.

அதற்கு மேல் அவரிடம் விசாரிக்க முடியாமல் யோசனையுடன் வெளியில் வந்தவன் காரின் அருகில் நின்று சில நொடிகள் யோசித்தான்.

பின்பு காரை எடுத்துக் கொண்டு கமிஷனர் அலுவலகம் சென்று, ஷர்வஜித்தைப் பற்றி விசாரித்து, பார்க்க அனுமதி கேட்டான். ஆனால் அவன் முக்கியமான வேலையில் இருப்பதாகச் சொல்லி பார்க்க அனுமதி கிடைக்க இரண்டு மணி நேரம் ஆகியது.

அதிலேயே தேவாவின் ரத்த அழுத்தம் கூட ஆரம்பித்தது. தான் யார் என்று விவரமாகச் சொல்லியும் இன்னும் உள்ளே தன்னை அழைக்காத ஷர்வஜித்தின் மீது கோபம் கூடிக் கொண்டே போனது.

இரண்டு மணி நேரம் கடந்த நிலையில் உள்ளே அனுமதிக்கப் பட, ஷர்வஜித்தின் முன் போய் நின்றான் தேவா.

தன் முன்னால் வந்து நின்ற தேவாவை எந்தச் சலனமும் இல்லாமல் பார்த்த ஷர்வஜித் அவனை அமர சொல்லி கை காட்டிக் கொண்டே “சொல்லுங்க… என்னை எதுக்குப் பார்க்க வந்துருக்கீங்க? என்ன விஷயம்?” என்று அமைதியாகக் கேட்டான்.

அதற்குத் தேவா பதில் சொல்லும் முன் “ஆனா… அதுக்கு முன்ன உங்களை அறிமுகப் படுத்திக்கோங்க…” என்றான்.

தேவாவிற்குத் தன் எதிரே இருந்தவனின் அமைதியான பேச்சும், இரண்டு மணிநேரம் காக்க வைத்துவிட்டுத் தன்னை இப்போது தான் முதல் முறையாகப் பார்ப்பது போலப் விசாரிப்பதும் கோபத்தை உண்டாக்கியது.

ஆனாலும் அதைக் காட்டாமல் மறைத்து கொண்டவன் “ஐயம் தேவா…! தேவ் சாப்ட்வேர் சொலுசன்னோட எம்.டி. இப்போ நான் பேச வந்தது என் தங்கை சம்பந்தப்பட்ட விஷயம். பேசலாமா? பேச உங்களுக்கு டைம் இருக்கா?” என்று கேட்டவனின் குரலில் நக்கல் இல்லை என்றாலும், என்னை இவ்வளவு நேரம் காக்க வைத்தாயே இப்பவாவது உன்னால் பேச முடியுமா என்ற நக்கல் இருக்கவே செய்தது.

தேவா எப்படி நக்கல் இல்லாதது போலக் காட்டிக் கொண்டு பேசினானோ, அதே போல் ஷர்வாவும் அவனின் பேச்சின் உட்கருத்தையும், அதில் ஒளிந்திருந்த நக்கலையும் கவனித்தாலும், எதுவுமே கவனிக்காதது போல, “ஹ்ம்ம்..‌‌. பேச டைம் ஒதுக்கியதால் தானே என் முன்னாடி இருக்கீங்க. சரி அதை எல்லாம் விடுங்க. உங்க தங்கைக்கு என்ன பிரச்சனை?” என்று அலட்டிக் கொள்ளாமல் கேட்டான்.

நான் அனுமதி கொடுத்ததினால் தான் என் முன்னால் நீ இப்போது அமர்ந்திருக்கின்றாய் என்று சொல்லாமல் சொல்லி விட்ட ஷர்வஜித்தின் பதிலில் தேவாவிற்கு உள்ளுக்குள் கொதித்துக் கொண்டு வந்தது. அதையும் விட எதுவுமே அறியாதது போல அவன் கேள்வி கேட்ட விதம் அவனை விநோதமாகப் பார்க்க தூண்டியது.

தேவாவின் மனதிற்குள் அனைத்தும் ஓடினாலும் வெளியே அவனின் முகத்திலும் எந்தச் சலனமும் இல்லை. வியாபார பழக்கம் அவனின் முக உணர்வுகளைக் காட்டாமல் அடக்க வைத்தது.

ஆனால் தான் இப்போது வந்திருப்பது தன் தங்கைக்காக. அவளின் பாதுக்காப்பு முதலில் முக்கியம். திட்டம் போட்டு ஒரு செயல் நடந்திருக்கும் போது தான் இப்போது தன் கோபத்தைக் காட்டுவது நல்லதல்ல என்று நினைத்தவன்,

“நீங்க தானே நைட் என் தங்கையை நாலு பேர்கிட்ட இருந்து காப்பாத்தி பத்திரமா வீட்டில் வந்து விட்டீங்க? ஆனா போலீஸ் ஸ்டேஷன்ல அப்படி யாரையும் நாங்க பிடிக்கலைனு சொல்றாங்க? என்ன நடக்குதுனு ஒன்னும் புரியலையே?” என்று பொறுமையாகவே கேட்டான்.

அவனின் கேள்வியில் சில நொடிகள் கையில் இருந்த பேனாவினால் மேஜையைத் தட்டிய ஷர்வஜித் “அவனுங்க அங்கே இருந்தா தானே உங்களுக்குச் சரியான பதில் சொல்லிருப்பாங்க…” என்று அமைதியாகத் திருப்பிக் கேட்டான்.

“என்ன சார் சொல்றீங்க? திட்டம் போட்டு என் தங்கை காரை நிறுத்தவச்சு அவகிட்ட தப்பா நடந்துக்கப் பார்த்து இருக்காங்க. ஆனா நீங்க பிடிச்ச குற்றவாளி இப்போ உங்க கஸ்டடியில் இல்லைனு சொல்றீங்க. இதுக்கு என்ன அர்த்தம் பணம் வாங்கிட்டு குற்றவாளியை விட்டுடீங்களா என்ன?” என்று ஷர்வஜித்தின் பதிலில் இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த கோபத்தையும் சேர்த்து கொட்ட ஆரம்பித்த தேவாவை எந்த அலட்டலும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஷர்வஜித்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“என்ன சார்… நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க. சும்மா பார்த்தா ஆச்சா? நான் மேலிடத்தில் போய்க் கம்ளைன்ட் பண்றேன். நாளைக்கே திருப்பி என் தங்கைக்கு அவனுங்கனால பாதிப்பு வராதுன்னு என்ன நிச்சயம்?” என்று ஷர்வாவின் அமைதியான தோரணையைப் பார்த்து பொரிந்து தள்ளினான்.

இப்படிப் பொரிந்து தள்ளிய தேவா மேலும் அங்கே நடந்த சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு “உங்களைப் போல ஒருத்தரை என் வாழ்க்கையில் சந்தித்ததில் ரொம்பச் சந்தோசம் சார். நன்றி…” என்று சொல்லி விட்டு வீடு வந்து சேர்ந்தான் தேவா.

அன்று மாலையில் வீடு வந்து சேர்ந்த கருணாகரனிடம் நேற்று இரவு நடந்ததைத் தேவா சொல்ல, அவர் முதலில் மகளைத் தான் முறைத்துப் பார்த்தார்.

“என்னப்பா?” என்று அவள் மென்று முழுங்க, “வீட்டில் ஆள் இல்லைனா இப்படித் தான் லேட்டா வருவியா? ஒன்னு கிடக்க ஒன்னு ஆனா என்ன பண்றது? அம்மா இல்லாத பிள்ளைங்களுக்குத் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்கிற பக்குவம் வேணும்.

அம்மா இருந்தா இந்தப் பிள்ளை இப்படி இந்த நேரத்தில் தனியா போகுமான்னு யாரும் கேட்குற நிலைக்கு நீ இறங்கி போய்ற கூடாது. எல்லாத்தையும் விட நம்ம குடும்பக் கெளரவம் எனக்கு ரொம்ப முக்கியம். இனி நேரம் கழிச்சு வெளியே போற பழக்கத்தை விட்டுரு…” என்று மகளுக்குக் கட்டுபாடுகள் விதித்தவர்,

“நீ சொல்லு தேவா… யாரு அவனுங்க? என் பொண்ணு மேலேயே கையை வைக்கப் பார்த்தது?” என்று கோபத்துடன் விசாரிக்க ஆரம்பித்தார்.

“நானும் இப்படிக் கொதிச்சுப் போய்த் தான் அவனுங்களைப் பிடிச்ச ACP ஷர்வஜித்தை பார்க்க போனேன் பெரியப்பா…” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்,

“யாரை? யாரை பார்க்க போன?” என்று வேகமாகக் கேட்டார் கருணாகரன்.

அவரின் வேகத்தைப் பார்த்து விதர்ஷணா ‘ஏன் இந்த வேகம்?’ என்று தந்தையை அதிசயமாகப் பார்த்தாள்.

தேவாவும் தன் பேச்சை நிறுத்தி “என்ன பெரியப்பா? ஏன் இவ்வளவு பதட்டம் இந்தப் பேரை கேட்டு?” என்று புரியாமல் கேட்டான்.

“அந்த ஷர்வஜித் சரியான திமிர் பிடிச்சவன் ஆச்சே. நாம என்ன பேசினாலும், கடைசியில் அவன் சொல்றது தான் சரின்னு நிப்பானே. இந்த விஷயத்தில் அவன் என்ன குழப்பம் பண்ணி வச்சுருக்கான்?” என்று கேட்டார்.

“என்ன பெரியப்பா நீங்க சொல்றதைப் பார்த்தா அவரால ஏதோ உங்களுக்குப் பிராப்ளம் வந்துருக்குறது போலத் தெரியுது. என்னது?” என்று புருவத்தைச் சுருக்கி யோசனையாகக் கேட்டான்.

விதர்ஷணாவும் அப்படி என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கவனிக்க ஆரம்பித்தாள்.

“அவனே ஒரு பிராப்ளம் தான்…” என்று கடுப்பாகச் சொன்னவர் “அந்த விஷயத்தை விடு. இப்போ என்ன பண்ணி வச்சுருக்கான்? அதை முதலில் சொல்லு…” என்று பேச்சை மாற்றினார்.

அதில் விதர்ஷணாவின் ஆர்வம் சொத்தென ஆனது. அப்படி என்ன நடந்திருக்கும் என்று தலையைப் பிய்க்காத குறையாக யோசிக்க ஆரம்பித்தாள்.

அதற்குள் இங்கே தேவா அன்று காலையில் நடந்ததைச் சொல்ல ஆரம்பிக்க, “என்ன செய்து வச்சுருக்கான்னு பார்? இங்கிட்டு பிடிக்கிற போலப் பிடிச்சுட்டு, அங்கிட்டு விட்டுட்டானா? அன்னைக்கு என்னமோ ரொம்ப நல்லவன் போலப் பேசினான்…” என்று கோபத்தில் கத்த ஆரம்பித்தார்.

“இல்ல பெரியப்பா… நானும் முதலில் உங்களைப் போலக் கோபப்பட்டுத் தான் அங்கேயும் கத்தினேன். ஆனா அங்கே நடந்ததே வேற…” என்றவன் காலையில் நடந்ததை முழுமையாகச் சொல்ல ஆரம்பித்தான்.

‘பணம் வாங்கிட்டு விட்டீங்களா?’ என்று கேட்ட கேள்வியில் தேவாவை பார்த்து இகழ்வாகச் சிரித்த ஷர்வா, அவன் கேள்விக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் அங்கிருந்த அழைப்பு மணியை அழுத்தினான்.

‘நான் இங்கே கொந்தளிச்சுக்கிட்டு இருக்கேன். இவன் யாரை சாவகாசமா கூப்பிட்டுக்கிட்டு இருக்கான்?’ என்பது போல ஷர்வாவை எரிச்சலுடன் பார்க்க ஆரம்பித்தான்.

அவனின் பார்வையைக் கவனித்தாலும் கண்டு கொள்ளாது தன் அழைப்புக்கு வந்து நின்ற கான்ஸ்டபிளை பார்த்தவன் “நேத்து நைட் உங்ககிட்ட ஒப்படைச்ச நாலு பேரு எங்க இருக்காங்கனு சாருக்குக் கொஞ்சம் சொல்லுங்க வேலவன்…” என்று சொல்லி விட்டுக் கன்னத்தில் கை வைத்து டேபிள் வெயிட்டை உருட்ட ஆரம்பித்தான்.

தேவாவின் பக்கம் திரும்பிய வேலவன் “பொண்ணுங்க மேல கை வைக்கிற ஆளுங்களை நம்ம சார் ட்ரீட் பண்ற விதமே வேற சார். நேத்து நைட் சார் பிடிச்ச ஆளுங்களை அழைச்சுட்டு வந்தது நானும் இங்கே வேலையில் இருக்கிற மத்த கான்ஸ்டபிளும் தான். அவனுங்க இப்போ ஹாஸ்பிடலில் அசைய கூட முடியாம இருக்கானுங்க…” என்று அவர் சொன்னதும் “வாட்…!” என்று அதிர்ந்து எழுந்தான் தேவா.

“ஆமா சார். அவனுங்க நல்லா நடக்க எப்படியும் ஆறு மாசம் ஆகும் சார்…” என்று சொன்னவரை “நீங்க போங்க வேலவன். சார்கிட்ட இனி நான் பேசிக்கிறேன்…” என்று அனுப்பி வைத்த ஷர்வா இன்னும் நின்று கொண்டிருந்த தேவாவை அமர சொன்னான்.

“ஸ்டேஷன்ல எதுக்கு இல்லைனு சொன்னாங்கன்னு இப்ப புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்…” என்று அழுத்தமாகக் கேட்டான்.

தேவா புரிந்தது என்னும் விதமாகத் தலையசைக்க “ஹ்ம்ம்… அப்புறம்?” இன்னும் என்ன கேட்கணும் என்ற ரீதியில் கேட்டான் ஷர்வஜித்.

“யார் அவனுங்க? எதுக்கு என் தங்கையைத் துரத்தணும்? திட்டம் போட்டு செய்யப்பட்டதுன்னு தர்ஷி சொன்னா. ஆனா அவ தான் அந்த நேரம் காரில் வருவானு நோட் பண்ணி வச்சு செய்யணும்னா என்ன நோக்கம்? ஒன்னும் புரியலையே?” என்று தேவா தன் சந்தேகத்தை எல்லாம் கேட்டான்.

“ஆக்சுவலா… திட்டம் போட்டு அதைச் செயல் படுத்தினது எல்லாம் உங்க தங்கைக்காக நடத்தப்பட்டது இல்லை…”

“வாட்…! என்ன சொல்லுறீங்க சார்?”

“யெஸ்… அது வழக்கமா அந்த நேரத்தில் தனியா வர்ற காரையோ, இல்லை ஆட்களையோ வழிமறைச்சு திருடும் கூட்டம். வழக்கமா அப்படி மாட்டுறது ஆண்களா இருந்தா அவங்க பர்ஸ், மொபைல்னு கொள்ளை அடிக்கிற ஆட்கள் தான் அவனுங்க.

ஆனா நேத்து அவனுங்களுக்குத் தனியா ஒரு பொண்ணு மாட்டினதும் அவங்க திட்டமும் மாறிடுச்சு…” என்று சொன்ன ஷர்வா என்ன திட்டம் என நீயே புரிந்துக் கொள் என்பது போலக் கையைக் காட்டி விட்டு அமைதியானான்.

என்ன நடந்திருக்கும் எனப் புரிந்து கொண்ட தேவா உச்சியில் ஏறிய கோபத்துடன் “ராஸ்கல்ஸ்…!” என்றபடி வேகமாக மேஜை மீது அடித்தான்.

அவனின் கோபம் புரிந்து தன் எதிரே இருந்தவனை அமைதியாகப் பார்த்த ஷர்வா தன் கையை நெட்டி முறித்து “பொண்ணு மேலே கையை வைக்க நினைச்சதுக்காகத் தான் இப்போ ஹாஸ்பிடல்ல இருக்கானுங்க. இல்லனா நீங்க விசாரிச்சுட்டு வந்த ஸ்டேஷன்ல தான் இருந்துருப்பானுங்க…” என்று சொன்னவன் தன் கையை லேசாக முறுக்கி விட்டுக் கொண்டான்.

அவன் அப்படிச் சொன்னதும் ஷர்வாவை வியப்பாகப் பார்த்தான் தேவா. ‘பொண்ணு மேலே கை வைச்சா சார் ட்ரீட் பண்ற விதமே வேற’ என்று வேலவன் சொல்லி சென்றதின் அர்த்தம் முழுமையாக விளங்கியது.

இப்படி ஒரு போலீஸ்காரனா என்று ஆச்சரியமாகவும் இருந்தது.

அந்த ஆச்சரியத்துடனே சரியான நேரத்தில் உதவி செய்ததிற்காக நன்றி சொன்னவன், அவனைச் சந்தித்தற்கு மகிழ்ச்சியைத் தெரிவித்தான்.

“என் தங்கை இதில் சம்பந்தப்பட்டிருப்பதால நான் அந்த நாலு பேர் மேலையும் கம்ளைண்ட் எழுதி கொடுக்கட்டுமா சார்?” என்று தேவா கேட்க,

“தேவையில்லை மிஸ்டர்.தேவா… பொண்ணு சம்பந்தப்பட்ட விஷயத்தில் எப்பவும், அவங்க மேலே எந்தத் தப்பும் இல்லாத பட்சத்தில் அவங்க பேரை இந்த மாறி கேஸ் கூட இணைக்கிறது என்னைக்கும் எனக்குப் பிடிக்காத விஷயம்.

இனி உங்க தங்கைக்கும், இந்தப் பிரச்சனைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைனு நினைச்சுக்கோங்க. உங்க தங்கை சம்பந்தப்படாதபோ இதுக்கு மேல பேசுறதுக்கு ஒன்னும் இல்லைன்னு நினைக்கிறேன்…” என்று தன் பேச்சு முடிந்தது என்பது போலப் பக்கத்தில் இருந்த பைலை கையில் எடுத்தான்.

அதுவே பேச்சு முடிந்தது நீ கிளம்பலாம் என்று சொல்லாமல் சொல்லி விட, தேவாவிற்கு அவனின் இந்த விட்டேறி பேச்சு ஏதோ போல இருந்தாலும், அவனின் அந்தக் கொள்கை அவனைக் கவர்ந்திருந்தது.

பெண்ணை எந்த விதத்திலும் சம்பந்தப்படுத்தாமல் விலக்கிவிடும் அவனின் அந்தக் குணம் பிடித்திருந்ததால் வேறு எதையும் பொருட்படுத்தாமல், “ஓகே சார். நன்றி..” என்று விட்டு கிளம்பி வந்து விட்டான்.

நடந்ததை எல்லாம் கருணாகரனிடம் சொன்ன தேவா “நைஸ் மேன் பெரியப்பா. அந்த ஷர்வஜித்தை மீட் பண்ணும் போது நான் இருந்த மனநிலைக்கும், பார்த்து முடிக்கும் போது இருந்த மனநிலைக்கும் டோட்டல் சேன்ஜ். ஒரு நல்ல போலீஸ் மேனை சந்திச்ச திருப்தியோட தான் வெளியே வந்தேன்…” என்று ஷர்வஜித்திற்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்தான்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த விதர்ஷணா என்னவோ தன்னையே பாராட்டுவது போல உள்ளுக்குள் மகிழ்ந்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் அதற்கு மாறாகக் கருணாகரன் “என்னத்தை நைஸ் மேன்னு? இந்த விஷயத்தில் வேணும்னா என் பொண்ணுக்காகப் போனா போகட்டும் நல்லவன்னு சொல்லலாம். ஆனா எனக்கு அவன் செய்து வைச்ச வேலைக்கு அவனை எல்லாம் நல்லவனா நினைக்க முடியாது. நீயும் அவனை ரொம்ப நம்பாதே…” என்று தேவாவையும் எச்சரித்தார்.

அவரின் அந்த எச்சரிக்கை ஏன் என்று புரியாமல் கருணாகரனை பார்த்தான்.

“ஏன் பெரியப்பா அப்படிச் சொல்றீங்க? உங்களுக்கும், அசிஸ்டெண்ட் கமிஷ்னருக்கும் என்ன பிரச்சனை?” என்று தேவா கேட்க, அவரோ தங்களுக்கு எதிரே அமர்ந்திருந்த மகளைப் பார்த்தார்.

“இப்ப எதுவும் நான் சொல்ற நிலையில் இல்லை தேவா. அதைப் பத்தி இன்னொரு நாள் பேசுவோம்…” என்று சொன்னவரை, விதர்ஷணா அதிர்ச்சியாகப் பார்த்தாள்.

அதுவும் தான் இருப்பதினால் தான் காரணம் சொல்ல மறுக்கிறார் என்பது புரிய, ‘அப்படி என்ன எனக்குத் தெரியக் கூடாத விஷயம்?’ என்று அவள் மூளை சூடாகி யோசிக்க ஆரம்பித்தது.