பனியில் உறைந்த சூரியனே – 46
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 46
ஷர்வா காரில் முன் இருக்கையில் அமர்ந்திருக்கப் பின்னால் இருந்த இருக்கையில் நடுவில் விக்ரமதேவனும், அவனின் இருமருக்கிலும் இரு காவலர்களும் இருக்க அந்த வாகனம் வேகமாகக் காவல் நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.
தியாகுவை ஏற்கனவே தயாராக இருந்த ஆம்புலன்ஸில் கவியுகனுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தான்.
அருணும், ரகுவும் இன்னொரு காவல் வாகனத்தில் காவலர்களின் பாதுகாப்புடன் பின்னால் வந்து கொண்டிருந்தனர்.
விதர்ஷணாவை கருணாகரனுடன் அனுப்பி வைத்து விட்டிருந்தான். அவளிடம் அதற்குப் பிறகு அவனுக்குப் பேசும் சந்தர்ப்பம் இல்லை என்பதால், தேவாவை ஜெயிலில் அடைத்து எப்போது அவளைக் காண்போம் என்று ஷர்வா மனதில் ஒரு துடிப்பு ஒட்டிக் கொண்டு அவனைத் தவிக்க வைத்தது. அவளை இக்கட்டில் மாட்டிவிட்டு அவளைத் தவிக்க விட்டது அவனை உள்ளுக்குள் கொல்லாமல் கொன்று கொண்டிருந்தது.
மனைவியின் ஞாபகம் மனம் முழுவதும் இருந்தாலும், தன் கடமையிலும் கவனத்தைச் சிதற வைக்காமல் கவனத்துடனே இருந்தான்.
விக்ரம் முன்னால் அமர்ந்திருந்த ஷர்வாவை கொலை வெறியுடன் வெறித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தான். அவனின் பார்வையை முன் இருந்த கண்ணாடி வழியே கண்டு கொண்டாலும், கவனியாதது போல் இருந்தான்.
தான் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று அத்தனை வேலைகள் மறைமுகமாகச் செய்தவனுக்கு இப்போது கையும், களவுமாகப் பிடிபட்டது தாங்க முடியாத அதிர்ச்சியாகவே இருக்கும் என்று புரிந்தது.
அந்த அதிர்ச்சியில் தன்னைத் தாக்கவோ, தப்பித்துச் செல்லவோ அவன் முயற்சி செய்யலாம் என்பதால் அதிகக் கவனத்துடனே தன்னுடைய உணர்வுகளை வைத்துக் கொண்டு வந்தான்.
தன் இருபக்கமும் இருந்த காவலர்களையும், முன்னால் இருந்த வேலவனையும், ஷர்வாவையும் ஒரு பார்வை பார்த்த விக்ரமதேவா காரை விட்டு இறங்க போகும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
வாகனம் காவல் நிலையத்தை நெருங்கியது. விக்ரமும் தன் விகாரத்தைக் காட்ட தயாரானான்.
முன் பக்கம் முதலில் இறங்கிய ஷர்வா, பின்பக்கம் இருந்து இன்ஸ்பெக்டர் முதலில் இறங்குவதைப் பார்த்தான். அடுத்துத் தேவா இறங்கக் காத்திருந்தான்.
தேவா ஏதோ யோசனையோடு அமர்ந்திருப்பதை பார்த்து அவனுக்கு அடுத்து அமர்ந்திருந்த கான்ஸ்டபிள் “ம்ம்…இறங்கு…” என அவனை நெட்டி இறங்க தூண்டினார்.
அதில் சிலிர்த்துக் கொண்டு அவரை ஒரு முறை முறைத்து விட்டு திரும்பி காரில் இருந்து இறங்க காலை வைத்தவன் கையில் அடுத்த நொடி கீழே நின்றிருந்த இன்ஸ்பெக்டரின் இடுப்பில் இருந்த துப்பாக்கி தேவாவின் கையில் இருந்தது.
அவன் கையில் துப்பாக்கி சென்றதை இன்ஸ்பெக்டர் உணரும் முன் அந்தத் துப்பாக்கி அவரின் நெற்றி பொட்டில் இருந்தது.
நொடியில் நடந்து விட்ட நிகழ்வில் அங்கிருந்த காவலர்கள் மட்டும் இல்லாது அடுத்தக் காரில் வந்த அவனின் நண்பர்களும் கூட அதிர்ந்து விக்ரமதேவனைப் பார்த்தனர்.
இமைக்கும் நொடியில் நடந்ததைக் கண்டு அதிர்ந்த ஷர்வா “தேவா என்ன காரியம் பண்ற? துப்பாக்கியை கீழே போடு…!” என்று பதட்டத்துடன் அதட்டினான்.
“ஹா…! துப்பாக்கியை கீழே போடவா எடுத்தேன்? என்னிடமே நாடகம் ஆடி நான் யாரை அதிகம் வெறுக்குறேனோ அவ மூலமே என்னைப் பிடிச்சுட்டில? உன்னைச் சும்மா விடமாட்டேன்டா…” என்று கத்தியவன் சட்டென ஷர்வாவின் நடு நெற்றிக்கு நேரே துப்பாக்கியை நீட்டினான்.
“ஹேய்…!” என்று ஷர்வா கத்த, “செத்து தொலைடா…!” என்று சொல்லிக்கொண்டே துப்பாக்கியின் விசையை அழுத்தினான்.
அடுத்த நிமிடம் தோட்டா சீறி பாய, கால் மடக்கி கீழே மடிந்து தேவா அமர்ந்திருக்க, அவன் கையில் இருந்த துப்பாக்கி இப்போது ஷர்வாவின் கைக்கு வந்திருந்தது.
காவலர்கள் அனைவரும் அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். என்ன நடந்தது? எப்படி ACP தப்பினார்? என்று வியந்து பார்க்க, சில நொடிகளுக்குப் பிறகு தான் நடந்தது என்ன என்று புரிந்தது.
தேவா, ஷர்வாவை நோக்கி துப்பாக்கியை நீட்டிய போதே ஷர்வா தேவாவிற்கு நேராக அவனின் பின்னால் காரின் அந்தப் பக்கம் நின்றிருந்த வேலவனைப் பார்த்து நொடி பொழுது அவர்கள் இருவருக்கு மட்டுமே உண்டான சமிக்சையைக் கண்ணால் காட்ட, அதைப் புரிந்து கொண்ட வேலவனும், ஷர்வா தன்னிடம் ஏற்கனவே கொடுத்து வைத்திருந்த துப்பாக்கியால் தேவாவின் பின்பக்க தொடையில் தோட்டாவை பாச்சியிருந்தார்.
தேவா சீற விட்ட தோட்டாவை தன் மேல் பாயவிடாமல் முன்னோக்கி பல்டி அடித்துத் தேவாவின் கையில் இருந்த துப்பாக்கியை பறித்திருந்தான் ஷர்வஜித்.
ஷர்வாவை தாக்க வந்த தோட்டா அவனைத் தாண்டி அவனின் பின்னால் இருந்த காவல்நிலைய சுவரில் பட்டுத் தெறித்துக் கீழே விழுந்தது.
காலில் தோட்டாவை வாங்கியும் இன்னும் கொலைவெறியுடன் ஷர்வாவை முறைத்த தேவாவை அருகில் இருந்த இரண்டு காவலர்கள் இரண்டு பக்கம் இருந்தும் பிடித்துத் தூக்கி நிறுத்த, காலின் நிலையையும் மறந்து ஷர்வாவை மீண்டும் தாக்கப் போக அவனின் தோள்பட்டையில் கோபத்துடன் ஒரு அடியை இறக்கிய ஷர்வா “முட்டாள்தனம் பண்ணாதே தேவா…!” அதட்டியவன், “அவங்க இரண்டு பேரையும் உள்ளே கூட்டிட்டு போங்க…” என்று பின்னால் இருந்த காவலர்களுக்கு அருணையும், ரகுவையும் உள்ளே அழைத்துச் செல்ல உத்தரவிட்டான்.
அவர்கள் உள்ளே சென்றுகொண்டிருக்கும் போதே, “ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணுங்க…!” என்று இன்னொரு காவலருக்கு உத்தர விட்டுவிட்டு, இன்ஸ்பெக்டரை பார்த்து “இவனை உள்ளே அழைத்துக் கொண்டு போங்க. ஆம்புலன்ஸ் வரும் வரை இவன் உள்ளே இருக்கட்டும்…” என்று தேவாவை காட்டி சொன்னான்.
இவனிடம் தான் தோற்றுப் போவதா என்ற ஆங்காரம் விக்ரமதேவனுக்குப் பொங்கியது. இவனைக் கொல்லவும் முடியவில்லை. கருணாகரனுக்கும், விதர்ஷணாவிற்கும் தண்டனையும் தர முடியவில்லை. எதுவுமே முடியாமல் தான் இத்தனை நாளும் செய்து வைத்த வேலைகள் எல்லாம் வீணாகப் போன ஆத்திரம் கண்ணை மறைக்க, தான் காவல் நிலையத்திற்குள் குற்றவாளியாக நுழையக்கூடாது என்ற வீம்பு வந்து அமர்ந்து கொள்ள,
தன் பலம் முழுவதையும் திரட்டி, இரண்டு காவலர்களின் பிடியில் இருந்தும் நொடியில் இருந்து திமிறிய தேவா, தன் காலின் நிலையையும் பொருட்படுத்தாமல் வேகமாக அங்கிருந்து ஓடினான்.
மீண்டும் அவன் அவ்வாறு செய்வான் என்று எதிர்பாராத காவலர்கள் திகைத்து, பின்பு அவனை விரட்ட, “தேவா ஓடாதே… நில்லு சுட்டுருவேன்…” என்று அவனை நோக்கி துப்பாக்கியை நீட்டினான் ஷர்வா.
ஆனால் அவனின் மிரட்டலை பொருட்படுத்தாமல் தன்னால் முடிந்த வரை வேகமாக ஓடிய தேவா மிக அருகிலேயே சாலை இருந்ததால் அந்தச் சாலையின் நடுவில் சென்றான். அவனின் செயலில் பின்னால் ஓடிக் கொண்டிருந்த காவலர்கள் திகைக்க, ஷர்வாவிற்கு ஏதோ தவறாகப் பட “தேவா வேண்டாம்…” என்று கத்திய அவனின் குரல் நிற்கும் முன் நடு ரோட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்தான் தேவா.
கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையில் வந்த பேருந்து தேவாவின் மீது மோதிவிட்டுச் சென்றிருந்தது.
அந்த அரசு மருத்துவமனையில் வேதனை சுமந்த முகத்துடன் கண்கள் கலங்க கருணாகரனும், விதர்ஷணாவும் அமர்ந்திருந்தார்கள்.
மருமகளின் அருகில் அமர்ந்திருந்த சந்திரா, அவளின் தலையைத் தன் தோளில் சாய்த்து இதமாகத் தடவி விட்டுக் கொண்டிருந்தார்.
தேவாவிற்கு அடிப்பட்டு முழுதாக ஒரு நாள் ஆகியிருந்தது. இந்த ஒரு நாளில் இன்னும் அவனின் நிலை என்ன என்று உறுதியாகத் தெரியாமல் இருந்தது.
அவன் இவர்கள் மீது வெறுப்பாக இருந்தாலும் இன்னமும் இவர்களால் அவனை வெறுக்க முடியவில்லை அதனால் தான் அவன் அடிப்பட்ட செய்தி கேட்டு உடனே விரைந்து வந்திருந்தனர்.
அப்போது காவல் நிலையத்திற்குச் சென்று விட்டு அங்கே வந்த ஷர்வா “என்ன மாமா எதுவும் விஷயம் தெரிஞ்சதா?” என்று கருணாகரனிடம் விசாரித்தான்.
“இன்னும் ஒன்னும் தெரியலை மாப்பிள்ளை. டாக்டர் இப்போ ஒருமுறை செக் பண்ண உள்ள போயிருக்கார், வந்த பிறகு கேட்கணும்…” என்றார்
அப்போது மருத்துவரும் வெளியே வர வேகமாக அவரை நெருங்கிய ஷர்வா “என்ன டாக்டர்… எனி இம்புரூமெண்ட்?”
“பேஷன்ட் கண்ணு முழிச்சுட்டார். பட்…”
“என்ன டாக்டர்…?”
“கண்ணு முழிச்சுட்டார். அது ஒண்ணுதான் நல்ல விஷயம். இதைத்தவிர வேற இம்புரூமெண்ட் வராது…”
“புரியலையே டாக்டர்…” என்று கருணாகரன் கேட்க, அவரின் புறம் திரும்பிய மருத்துவர் “அவர் உயிர் பிழைத்ததே அதிசயம். இப்போ பேஷண்டுக்கு உயிர் இருக்கும். தன்னைச் சுற்றி என்ன நடக்கும் என்ற உணர்வும் இருக்கும். ஆனா அதைத் தவிர எதுவும் செய்ய முடியாது. ஏன்னா கழுத்துக்குக் கீழ் இருந்து அவர் உடல் செயலிழந்து விட்டது…” என்றார்.
அதைக் கேட்டதும் திகைத்துப் போனார்கள்.
“இதுக்கு மேல வேற ட்ரீட்மெண்ட் பார்க்க முடியுமா டாக்டர்?” என்று கருணாகரன் கேட்க, “நீங்க பார்க்க நினைச்சா பார்க்கலாம். ஆனால் பார்த்தாலும் ஒன்னும் செய்ய முடியாது. இது தான் இனிமே அவரோட நிலைமை…” என்று கையை விரித்த மருத்துவர் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.
அவர் சென்றதும் சிறிது நேரம் கழித்து “நான் வேற ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய் ட்ரீட்மெண்ட் எடுக்க வைக்கலாமா மாப்பிள்ளை?” என்று ஷர்வாவிடம் விசாரித்தார்.
அவரின் கேள்வியில் இறுகிய முகத்துடன் சில நொடிகள் அமைதியாக இருந்தவன், “அதை வீட்டுக்குப் போய்ப் பேசலாம் மாமா. தேவா இப்போ குற்றவாளி. அவனுக்கு இங்கே போலீஸ் காவல் இருக்கு. அவங்க பார்த்துப்பாங்க. நீங்க எல்லாம் கிளம்புங்க. போகலாம்…” என்று அதற்கு மேலும் அங்கு நிற்க விடாமல் அவர்களை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டான்.
போகும் வழியெல்லாம் எந்த உணர்வுமில்லாமல் வெறித்தபடி வந்த கணவனை விதர்ஷணா கேள்வியுடன் பார்த்தாள்.
ஆனால் அவளின் பார்வை எதையும் உணராது சிறிதும் மாறாமல் அப்படியே தான் வீடு செல்லும் வரை இருந்தான்.
வீட்டிற்குள் நுழைந்து வரவேற்பறையில் அமர்ந்த பிறகும் அதே இறுகிய முகத்துடன் ஷர்வா இருக்க, “என்னாச்சு ஜித்தா…?” என்று விசாரித்தாள்.
அவளை அமைதியாக நிமிர்ந்து பார்த்தவன் அவளிடம் ஒன்றும் சொல்லாமல் தனக்கு எதிரே அமர்ந்திருந்த கருணாகரனின் புறம் திரும்பியவன், “தேவாவுக்கு மேலே ட்ரீட்மெண்ட் கொடுக்கட்டுமானு கேட்டதற்கான பதில் இப்ப சொல்லட்டுமா மாமா…?” என்று கேட்டான்.
“சொல்லுங்க மாப்பிள்ளை…?”
“என்னைக் கேட்டா இப்படியே நீங்க அவனை விட்டு விடுவது நல்லது மாமா…” என்றான் இறுகிய குரலில்.
அவன் சொன்னதில் அதிர்ந்து “ஆனா ஏன் மாப்பிள்ளை…? அவன் மீது கோபமா இருக்க வேண்டிய என்னாலயே, அவன் இந்த நிலைமையில் இருப்பதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியலையே…” என்றார் கருணாகரன்.
“ஆனா நீங்க ட்ரீட்மென்ட் கொடுத்து ஒருவேளை அவனைக் காப்பாற்றி விட்டாலும், நானே அவனை என்கவுண்டரில் போட்டுத் தள்ளி விடுவேன் மாமா…” என்றான் உணர்ச்சியற்று.
“என்ன ஜித்தா சொல்றீங்க…?” என்று இப்போது விதர்ஷணாவும் அதிர்ந்து கேட்டாள்.
“இதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை விதர்ஷணா. அவன் உங்களுக்குக் கெடுதல் செய்ய நினைத்த பிறகும், அவனின் நிலையைப் பார்த்து நீங்க பரிதாபப்படுவதைப் பார்த்து அவன் மேல நீங்க இன்னும் பாசம் மாறாமல் இருக்கீங்கன்னு எனக்குப் புரியுது.
அவன் ஜெயிலுக்குள்ள போகக் கூடாதுன்னு நினைச்சே வேணும்னே வண்டியில் அடிப்பட்டு சாகத் துணிந்தவன். ஆனால் அவன் அப்படிச் துணியலைனாலும் நானே அவனைச் சாகடிச்சுருப்பேன். ஏன்னா அவன் நல்லா இருந்த போது செய்த எந்த விஷயமுமே நல்ல விஷயம் இல்லை.
நான் இப்படிச் சொல்வதற்குக் காரணம் என்ன தெரியுமா? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் கேள்விப்பட்ட விஷயம்! இன்னும் அந்த விஷயம் என் மனசுக்குள்ளயே சுத்தி வந்து என்னைப் போட்டு பிராண்டி கொண்டு இருக்கு…” என்றான்.
அதுவரை அவர்கள் பேசுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த சந்திரா “என்னாச்சு ஷர்வா? ஏன் இவ்வளவு எமோஷனலா இருக்க? எதுவும் கெட்ட விஷயமா?” என்று பரிதவித்துக் கேட்டார்.
“ரொம்பத் தப்பான விஷயம் நடந்திருக்குமா. ஆனா அதை என்னால தடுக்க முடியல. அடுத்தும் என்ன செய்யப்போறேன்னு தெரியாம கையாலாகாத தனத்துடன் உட்கார்ந்திருக்கேன்…” என்றவனின் குரலில் தன்னையே நினைத்து வெறுத்த வெறுப்புத் தெரிந்தது.
“நீ இப்படி நினைக்கிற அளவுக்கு என்னாச்சு?” என்று சந்திரா கேட்டார்.
முகத்தில் தெரிந்த வேதனையை மறைக்க இரண்டு கைகளையும் கொண்டு முகத்தை அழுத்தித் துடைத்தவன், பின்பு மெல்ல நிமிர்ந்து “தேவா ப்ரண்ட்ஸ் அருண், ரகு இரண்டு பேர்கிட்டயும் இன்னைக்கு விசாரணை நடத்தினேன். முக்கியமா அவர்கள் கடத்திய குழந்தைகளை எல்லாம் என்ன செய்வாங்கன்னு தெரிந்துகொள்ளத் தான் விசாரணை நடந்தது. அவர்கள் சொன்ன உண்மையை என்னால தாங்கவே முடியலை…” என்று வேதனையுடன் சொன்னவன்,
பின்பு தானே தொடர்ந்து “கடத்தப்பட்ட குழந்தைகள் எல்லாம் வெளி நாட்டிற்குக் கொண்டு சென்று அங்கு இருக்கும் புதிய மருந்து கண்டுபிடிக்கும் மருத்துவப் பரிசோதனைக்கு விற்கப்படுகிறார்கள்…” என்று அவன் சொல்லி நிறுத்தவும்,
“என்ன…?” என்று மூவருமே ஒன்றுபோல் அதிர்ந்தார்கள்.
‘ஆமாம்’ என்று அவர்களைப் பார்த்து தலையசைத்தவன், “அங்க கண்டுபிடிக்கிற மருந்தை அந்தக் குழந்தைகளின் உடலில் செலுத்தி, அது எப்படி வேலை செய்யுதுன்னு டெஸ்ட் பண்ணுவாங்களாம்…” என்று குரல் கமற சொன்னான்.
“என்ன ஜித்தா சொல்றீங்க…?” என்று விதர்ஷணாவும் பதறி துடிக்க, “ப்ச்ச்…! என்னால தாங்கவே முடியலை விதுமா. விஷயம் கேள்விப்பட்டதிலிருந்து மனசு பதறி துடிக்குது. அந்தப் பிள்ளைகள் எப்படி அதைத் தாங்கி இருப்பார்கள்? அதுவும் அந்த மருந்துகள் பக்க விளைவை ஏற்படுத்தும். இல்லைனா உயிருக்கே கூட ஆபத்தாக முடியும். இப்படிப்பட்ட கொடும் பாதகமான செயலுக்குத்தான் விக்ரமதேவா குழந்தைகளைக் கடத்தி விற்றிருக்கிறான்…” என்றான்.
அவன் சொன்ன விஷயத்தைக் கேட்டு அங்கிருந்த மூவருக்குமே உயிர் துடித்தது. சின்னக் குழந்தைகளை வைத்து எவ்வளவு பெரிய பாதகமான செயல் செய்து இருக்கிறார்கள்?
அதுவும் தன் வீட்டு மனிதன் இப்படி ஒரு கொடுமையான பாதகத்தைச் செய்து விட்டானே என்று விதர்ஷணாவிற்கும், கருணாகரனுக்கும் அதிக வேதனையைத் தந்தது.
தெரிந்த விஷயத்தில் இருந்து வெளியே வரவே அவர்களுக்குப் பல நிமிடங்கள் பிடித்தது.
“அந்தக் குழந்தைகளை மீட்க முடியாதாப்பா?” என்று சந்திரா கலக்கமாகக் கேட்டார்.
“அது ரொம்பக் கஷ்டமா. கஷ்டம்னு சொல்வதை விட நடக்காத காரியம்மா. இங்கே உள்ள தேவா மாதிரியான கடத்தல்காரர்களுக்கு அங்கே விற்பதோடு அவர்களின் வேலை முடிந்துவிடும். அதற்குப் பிறகு குழந்தைகள் அடுத்தடுத்துக் கை மாறிக்கொண்டேதான் இருக்கும். யாரிடம் எப்படிப் போய் எந்தப் பரிசோதனை கூடத்திற்குப் போயிருப்பார்கள் என்று கண்டுபிடிக்கிறது கஷ்டம். நாடு விட்டு நாடு கண்டுபிடிப்பது என்பது முடியவே முடியாத காரியம்…”
“ஓ…!” என்ற சந்திரா மேலும் பேச முடியாமல் தடுமாறிப் போனார்.
“ரொம்பக் கஷ்டமா இருக்கு மாப்பிள்ளை. தேவா இந்த வேலையைச் செய்தான்னு நினைக்கும்போது தாங்கவே முடியலை. அவன் நினைச்சா சாப்ட்வேரில் நல்ல நிலைமைக்கு வந்திருக்கலாம். ஆனா ஏன் இப்படிப் பண்ணினான்?” என்று வருத்தப்பட்டார் கருணாகரன்.
“பணம் மாமா… பணம்…! எல்லாம் பணம் செய்யும் மாயம்! நல்ல வழியில் கிடைக்கிற பணத்தை விடக் கெட்ட வழியில் அதிகமா பணம் கிடைக்க, அதைத் தேவா மாறி உள்ள ஆட்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதற்குப் பின்னால் இருக்கும் வலி, வேதனை எதுவும் அவர்களுக்குத் தெரிவதில்லை. தன் வாழ்க்கை, தான் நன்றாக இருந்தால் போதும் அது மட்டும் பெரியது என்று எண்ணத் தோன்றுகிறது. அந்த எண்ணம் அவர்களுக்குப் பின்னால் நடக்கும் எதையும் அவர்களைச் சிந்திக்க விடுவதில்லை.
அதுவும் குழந்தைகள் கடத்தல் நாட்டில் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. நாட்டில் நடக்கும் சில கெட்டக் காரியங்களுக்கு இப்போது அதிகமாக ஒன்றும் அறியாத குழந்தைகள் தான் பயன்படுத்த கடத்தப்படுகிறார்கள். இந்தப் போலீஸ் வேலையில் இதைப் போல் சில கடத்தல்களைப் பார்த்திருக்கிறேன்.
ஆனால் என் பார்வையின் வழியே இப்போது நடந்திருப்பது மிகப்பெரிய கடத்தல். இப்போ சில குற்றவாளிகளை மட்டும்தான் பிடிச்சிருக்கோம். நம்ம கண்ணுக்கு தெரியாத எத்தனையோ குற்றவாளிகள் இருக்கலாம்…” என்று வேதனையுடன் சொன்னான்.
“உண்மைதான் ஜித்தா. அதுவும் செய்தித்தாளில் பார்த்துக் கொண்டுதானே இருக்கோம். எத்தனை விதமான கடத்தல் நடந்து கொண்டிருக்கிறது? இதற்கெல்லாம் என்று தான் முடிவு வருமோ?” என்றாள் விதர்ஷணா.
அங்குச் சிறிது நேரம் மௌனம் குடி கொண்டது. அனைவருக்கும் குழந்தைகளை நினைத்து வேதனையாக இருக்க, அதனைத் தங்கள் மௌனத்தில் காட்டினர்.
பின்பு தன் தொண்டையைக் கமறிய கருணாகரன் “தேவா அப்படியே இருக்கட்டும் மாப்பிள்ளை. அவன் செய்த கொடூரமான செயலில் எத்தனை பிஞ்சு உள்ளம் துடித்ததோ? அதற்கு அந்தக் கடவுளே அவனுக்கு இப்படி ஒரு தண்டனை கொடுத்து இருக்கிறார். சாகப் போனவனைப் பிழைக்க வைத்து அவனை ஜடமாக மாற்றிக் கடவுள் கொடுத்த தண்டனை அவனுக்குப் பெரிய தண்டனைதான். அவன் வாழ்நாள் முழுவதும் ஜடமாகவே இருந்து இந்தத் தண்டனையை அனுபவிக்கட்டும்…” என்று ஒருவித திடத்துடனேயே சொல்லி முடித்தார்.
“அதான் மாமா. அவன் செத்து இருந்தாக்கூட ஒரு நிமிஷத்தில் அவன் உயிர் போயிருக்கும். ஆனால் இனி வாழ்நாள் முழுவதும் அவனுக்கு தினம், தினம் செத்து பிழைக்கும் தண்டனைதான். இதைவிடச் சட்டத்தால் கூடத் தண்டனை கொடுக்க முடியாது…” என்றான் ஷர்வா.
அன்று இரவு அறைக்குள் நுழைந்த மனைவியை அருகில் இழுத்து அவளின் உடல் பாகங்கள் அனைத்தும் வலிக்கும் அளவிற்கு இறுக அணைத்திருந்தான் ஷர்வா.
இருவரும் ஒன்றாக அந்த அறைக்குள் வந்து முழுதாக இரண்டு நாட்கள் கடந்திருந்தன. தன்னுடைய பரிசை கொடுத்து விட்டு அவளைக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தவன் அதற்குப் பிறகு இப்பொழுது தான் தன் அறையில் அவளைப் பார்க்கிறான்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் நடந்த விஷயங்கள் ஏதோ பல வருடமாக நடந்தது போல் தோன்றியது. அதுமட்டுமில்லாமல் அவளைத் தானே இக்கட்டில் மாட்டி விடத் தயாராக இருந்த போது அவளை அணைக்க அவனின் கைகள் பரபரத்தது. ஆனால் சரியில்லாத சூழ்நிலை மட்டுமில்லாமல் இருந்த இடமும் அவனைக் கட்டிப் போட, கனத்த மனதுடன் அடுத்து நடக்க வேண்டியதை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தான்.
துணிந்து மனைவியை முன்னால் கடத்த விட்டுப் பின்னால் தொடர்ந்தாலும் அந்த நொடியிலிருந்து அவன் தவித்த தவிப்பு அவன் மட்டுமே அறிந்தது. அந்தத் தவிப்பையும் கூடச் சிறிதும் வெளியே காட்டிக் கொள்ளாமல் மனதை இறுக மூடி வைத்துக் கொண்டு கடமையே கண்ணாக இருந்து நடக்க வேண்டியதை செய்தான்.
அடுத்து தேவாவைப் பிடித்த பின்பு… அந்த அறையில் அவள் நின்ற அநாதரவான நிலையும், உயிரே இல்லாதது போல் வேதனையின் உச்சத்தில் இருந்த நிலையையும் கண்டு அவளை அணைத்து ஆறுதல் சொல்ல தோன்றியது. ஆனால் அவ்விடத்திலும் அதைச் செய்ய முடியாத சூழலில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.
அதன்பிறகு தேவா அடிபட்டு மருத்துவமனையில் சேர்த்த தகவல் தெரிந்ததும் அங்கேயே இருந்ததால் நின்று பேச கூட நேரம் இல்லாமல் இருந்தது. அதோடு அருணையும், ரகுவையும் கைது செய்து இருந்ததால் அவர்களை விசாரிக்க வேண்டிய கடமை இருக்க… அங்கே சென்று அந்த வேலையையும் முடித்து விட்டு வந்தான்.
பரிசு கொடுக்கும் போது அவளின் பேச்சை கேட்டு எங்கே அவளை இறுக அணைத்து வலிக்க வைத்து விடுவோமோ என்று பயந்து மிக, மிக மென்மையாக மட்டும் அணைத்து விடுவித்தவனுக்கு இப்பொழுது அப்படி மென்மையாக அணைக்க வேண்டும் என்ற நினைவே இல்லை.
அவள் தன் கைகளுக்குள் பத்திரமாகத் தான் இருக்கின்றாள் என்பதை உறுதிப்படுத்தி கொள்ள அவளை மேலும், மேலும் இறுக்கி கொண்டே போனான்.
விதர்ஷணாவிற்கும் அந்த இறுகிய அணைப்புத் தேவையாக இருந்தது. முற்றிலும் எதிர்பாராமல் தன் அண்ணனைப் பற்றித் தெரிந்து கொண்ட ரகசியம் அவளைத் தலை குப்புற தள்ளி இருந்தது.
அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளால் உணர்ச்சிக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தாள். ஆனால் அதை வெளியே காட்ட முடியாமல் இறுகிப் போயும் இருந்தாள்.
தனது உணர்ச்சிக் கொந்தளிப்பை தன் மன்னவனிடம் கொட்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த நேரம் இப்பொழுது தானாக அமைந்ததில் தானும் அவனுக்குக் குறையாத தவிப்புடன் கணவனின் இறுகிய அணைப்பில் அடங்கியிருந்தாலும் பதிலுக்குத் தானும் இறுக அணைத்து தன் வேதனைகளைக் குறைக்க முயன்று கொண்டிருந்தாள்.
சில நொடிகள், நிமிடங்களாக, மணித்துளிகளாக எவ்வளவு நேரம் என்று
உணராமலேயே இருவரும் ஒருவருக்கொருவர் அணைத்து ஆறுதல் தேடிக் கொண்டிருந்தனர்.
பின்பு தன் காதில் கேட்ட தவிப்பான குரலில் கவனித்துக் கேட்க ஆரம்பித்தாள். அவளை அணைத்தபடி “ஸாரி விதுமா… ஸாரி விதுமா… ஸாரி விதுமா…” என்று விடாமல் தவிப்புடன் முனங்கி கொண்டிருந்தான் ஷர்வா.
‘ஏன் இப்படி…?’ என்று அவனிடம் இருந்து லேசாக விலகியவள், “என்ன ஜித்தா… எதுக்கு இப்படி ஸாரி கேட்குறீங்க?” எனக் கேட்டாள்.
“உன்னை ஆபத்தில் இருந்து காப்பாத்துறேன்னு கல்யாணம் முடிச்சுச் சீக்கிரம் என்கிட்ட உன்னைக் கொண்டு வந்த நானே… என் சுயநலத்துக்காகத் தேவாவிடம் மாட்டி விட்டு விட்டேனே… நான் செய்தது எவ்வளோ பெரிய தப்பு? என்னை மன்னிச்சுடுடா விதுமா…” என்று கலக்கத்துடன் மன்னிப்பு கேட்டான்.
அவனை விட்டு இப்பொழுது நன்றாகவே விலகி நின்றவள், “எது தப்பு…? எது சுயநலம்…?” என்று கடுப்புடன் கேட்டாள்.
“உன்னைக் கடத்த விட்டது தப்பு தானே? ஆதாரங்கள் வேணும்னு உன்னைக் கடத்த விட்டது சுயநலம் தானே?” என்று தானும் திருப்பிக் கேட்டான்.
“கண்டிப்பா தப்பும் இல்லை… சுய நலமும் இல்லை…”
“இல்லை விதுமா…”
“ஷ்…ஷ்ஷ்…! நான் பேசி முடிச்சிக்கிறேன் இருங்க…!” என்று அவனின் உதட்டில் விரலை வைத்து அவனைப் பேச விடாமல் தடுத்தாள்.
“நீங்க உங்க சுயநலத்திற்காக எதுவுமே செயலை… அண்ணன் தான் குற்றவாளி என நிரூபித்து, அப்பாவைக் காப்பாற்ற தான் நீங்க அந்த வேலை செய்தீங்க. அதுவும் உங்க மனசை உங்க தவிப்பை வெளியே காட்டிக் கொள்ளாமல் இதைச் செய்தீங்க.
இதன் மூலம் ஒரு குற்றவாளியை மேலும் குற்றம் செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி இருக்கீங்க. மேற்கொண்டு என் அண்ணன் மூலம் வேற குழந்தைகள் கடத்தப்படாமல் இருக்கச் சரியான நடவடிக்கை எடுத்திருக்கீங்க.
அதன் கூட இருபத்தி இரண்டு வருஷத்துக்கு மேலா முகமூடியுடன் சுற்றிக்கொண்டிருந்த ஒருவனின் முகத்திரையைக் கிழித்துக் காட்டி இருக்கீங்க. என் அண்ணன் என் மீது காட்டியது பாசமில்லை வேஷம்னு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கீங்க.
இத்தனை வருசமா பாசம் என நம்பிக்கொண்டு, பதிலுக்குப் பாசத்தை மட்டும் கொட்டிக் கொண்டிருந்த உங்கள் மனைவியை அவளின் அண்ணன் என்ற அயோக்கியனிடமிருந்து பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்திருக்கீங்க.
இது எல்லாத்தையும் விட நாட்டுக்கு கேடு விளைவித்துக் கொண்டிருந்த ஒரு கடத்தல் கும்பல் தலைவனை வெளி உலகத்திற்குக் காட்டிருக்கீங்க. இத்தனை நல்லதும் நேற்று நடந்த கடத்தல் நாடகத்தின் மூலம் மட்டும் தான் நடந்திருக்கிறது. அதனால் நீங்க செய்த எதுவும் தப்பில்லை இனிமே தப்புன்னு சொல்லாதீங்க. ப்ளீஸ்…!” என்று ‘ப்ளீஸ்’ என்பதில் அதிக அழுத்தம் கொடுத்து அவனை நியாயப்படுத்தி அவனின் தவிப்பைப் போக்க முயன்றாள்.
அவள் சொன்னது ஷர்வாவிற்கும் புரிந்தது. ஆனாலும் ஏனோ அவனின் மனது சமாதானம் அடைய மறக்க, “ஆனாலும் உன்னைப் பாதுகாக்கும் கணவனா நான் நியாயம் செய்யவில்லையே…” என்று கலக்கத்துடன் சொன்னான்.
“அதெல்லாம் நியாயமா தான் நடந்துக்கிட்டீங்க. என்னை விடாமல் பின்தொடர்ந்து எனக்கு ஆபத்து வரும் நேரத்தில் உள்ளே வர தயாராக இருந்து கொண்டதோடு மட்டுமில்லாமல், என்னைப் பாதுகாத்துக்கொள்ள ஆயுதமா என் இடுப்பில் சொருகி வைத்து தேவை என்றால் பயன்படுத்த துப்பாக்கியும் கொடுத்து, நான் ஒரு குரல் கொடுத்ததும் ஓடிவந்து என்னைக் காத்து, ஒரு அக்கறை கொண்ட கணவனாகத் தான் நடந்துக்கிட்டீங்க. அதனால் உங்களைக் குறை சொல்வதை முதலில் நிறுத்துங்க..” என்றாள்.
அப்படியும் அவன் மேலும் ஏதோ சொல்லப்போக இப்போது அவன் வாயை தன் உள்ளங்கையை வைத்து மூடியவள் “அண்ணன் நினைச்சபடி நீங்க என்னைக் கடத்தவிடாமல் செய்திருந்தால் அடுத்து என்ன நடந்திருக்கும் தெரியுமா? உங்ககிட்ட இருக்கிற ஆதாரத்தை வைத்து அப்பா போலீஸ்கிட்ட மாட்டிக் கொள்ளட்டும்னு அதையே அவனுக்குக் கிடைச்ச வெற்றியா எடுத்துக்கிட்டு இங்க இருந்து தப்பித்து வெளிநாட்டுக்கு பறந்திருப்பான். அதுதான் நடந்திருக்கும்…” என்று சொல்லி அவனைத் தேற்றியவள், மீண்டும் அவன் தன்னையே போட்டுக் குழப்பிக் கொள்ளும் முன் இந்த முறை தானே நெருங்கி அவனை அணைத்துக் கொண்டாள்.
தனக்காகத் தன்னிடமே பேசும் மனைவியின் அன்பில் நெகிழ்ந்தவன் தானும் திரும்பி அவளை அணைத்துக் கொண்டான். அந்த நேரம் அவனின் கை நடுக்கமோ, அவனின் பயமோ எதுவும் ஞாபகத்திலேயே இல்லை.
தற்போதைய அவர்களின் மனநிலை வேறு எதையும் யோசிக்கவும் விடவில்லை.
இந்த முறை ஷர்வா இலகுவாக அணைத்திருக்க, விதர்ஷணா வன்மையாக அவனை அணைத்திருந்தாள். நேரம் செல்லச் செல்ல அவளின் வன்மை கூடிக்கொண்டே போனது. அதோடு ஷர்வாவின் மார்பில் ஈரத்தை உணர்ந்தவன் மனைவியைத் தன்னிடமிருந்து மென்மையாகப் பிரித்தெடுத்தான்.
ஆனால் அவனிடமிருந்து பிரிய மறுத்தவள் இன்னும் அழுத்தமாக அவனின் மார்பில் புதைந்து கொண்டாள். அவளின் அழுகை கூடுவதை உணர்ந்தவன் வலுவாக அவளைத் தன்னிடமிருந்து பிரித்தெடுத்து “விதுமா…! என்னடா… என்னாச்சு…? எதுக்கு அழுகுற…?” என்று பதறி போய்க் கேட்டான்.
அவன் கேட்டதும் அவளின் அழுகை கூடத்தான் செய்தது. இதுவரை என்றும் காணாத விதர்ஷணாவின் அழுகை ஷர்வாவை பதறிப் போக வைத்தது.
அவளின் முகத்தைத் தன் கைகளில் தாங்கி பிடித்துத் தன்னைப் பார்க்க வைத்தவன், “இவ்வளவு நேரம் என்னைச் சமாதானப்படுத்தின… இப்போ உனக்கு என்னாச்சுடா?”
“அண்ணா இப்படி மாற, நானும் அப்பாவும் தானே காரணம்? நான் மட்டும் பிறக்காமல் இருந்திருந்தால் அவனும் ஒரு நல்லவனாக இருந்திருப்பான். அப்பாவும் கெளரவச் செருக்கில்லாமல் இருந்திருந்தால் அவன் அந்த வயதில் தடுமாறி வேற வழிக்குப் போயிருக்க மாட்டான். எங்களால் தான் இப்படி மாறிட்டானோன்னு எனக்கு ரொம்ப குற்றவுணர்ச்சியா இருக்கு…” என்றவள் சத்தமாகக் கேவி அழுதாள்.
“ஹேய்…! என்ன இது? முட்டாள் தனமா இப்படிப் பேசுற?” என்று அதட்டியவனின் பேச்சைக் கேளாமல் இன்னும் சத்தம் போட்டு அழ ஆரம்பித்தாள்.
“விதுமா… விதர்ஷணா…” என்றழைத்து தன் பேச்சைக் காதில் வாங்க வைக்க ஷர்வா எடுத்த முயற்சிகளை எல்லாம் வீணடித்தாள்.
அவனைச் சமாதானப்படித்தியவளுக்குத் தன்னையே தன்னைச் சமாதானப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ‘அவன் கெட்டவனாக மாறத் தாங்கள் தான் காரணமோ? தாங்களே ஒருவனின் வாழ்க்கையைக் கெடுத்து விட்டோமோ?’ என அவளின் பரிதவிப்பும், குற்ற உணர்ச்சியும் அவளைத் தாக்கியதில் விடாமல் அழுது கொண்டிருந்தாள்.
அவளின் அழுகையைக் கண்டு ஷர்வா தவித்துப் போனான்.
தன்னுடைய அழைப்பு அவளின் காதில் ஏறவில்லை என்று தெரியவும், அவள் அழுகையை நிறுத்த வைக்க, தன்னையும் அறியாமல் அவளின் இதழ்களைச் சிறைப்பிடித்திருந்தான் ஷர்வஜித்.