பனியில் உறைந்த சூரியனே – 45

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 45

விதர்ஷணாவை பக்கத்துத் தெருவில் காத்திருந்த கருணாகரனுக்கு அழைத்துத் தகவல் சொல்லி வரவழைத்து அவருடன் அனுப்பி வைத்திருந்த ஷர்வா, தேவாவை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றான்.

விதர்ஷணாவும், கருணாகரனும் கிளம்பும்போது காவல் வாகனத்தில் அமர்ந்து இருந்த தேவா விரோதியைப் பார்ப்பதைப் போல் இருவரையும் பார்த்து வைத்தான். கருணாகரனும் அப்பொழுது அவனைத்தான் பார்த்தார். அவனிடம் ‘ஏன் இப்படிச் செய்தாய்?’ என்று கேட்க அவரின் நாவு துடித்தது. ஆனால் இங்கே வைத்து எதுவும் பேச வேண்டாம் என்று அவரை ஏற்கனவே ஷர்வா அடக்கி வைத்திருந்தான். அதனால் ஒன்றும் பேசாமல் மகளை மட்டும் அழைத்துக் கொண்டு கிளம்பினார்.

காரில் செல்லும் போது இறுக்கமான முகத்துடன் அமர்ந்து கொண்டு வந்த மகளைப் பார்த்து “அந்த முட்டாள் பைய உன்னை எதுவும் துன்புறுத்தினானா?” என்று அக்கறையாக விசாரித்தார். மறுப்பாகத் தலையசைத்தவள் “ஒன்னும் பிரச்சனை இல்லப்பா…” என்று மட்டும் சொன்னாள்.

கருணாகரனும் அதற்கு மேல் எதுவும் கேட்காமல் அமைதியாக வந்தார். சிறிது நேரம் கழித்துக் கார் ஷர்வாவின் வீட்டின் முன் நின்றது. அப்பொழுதுதான் அதைக் கவனித்தவள் “என்னப்பா என்னை இங்க விட்டுட்டுப் போகப் போறீங்களா? நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்னு நினைச்சேனே?” என்று கேட்டாள்.

“விட்டுட்டு போகலை விதர்ஷணா. நானும் உன்கூடத் தான் உங்க வீட்டுக்கு வர்றேன். மாப்பிள்ளை வந்த பிறகுதான் நான் நம்ம வீட்டுக்கு போவேன். உள்ளே வா! போகலாம்…” என்றவர் கேட்டின் ஓரமாகக் காரை நிறுத்திவிட்டு மகளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.

இதற்கு முன் திருமணத்தைப் பற்றிச் சந்திராவிடம் பேச ஒரு முறை வந்தவர், மீண்டும் இப்பொழுதுதான் அந்த வீட்டிற்கு வந்திருக்கிறார்.

விதர்ஷணா வீட்டின் அழைப்பு மணியை அழுத்த சந்திரா வந்து கதவை திறந்தார்.

கருணாகரனை பார்த்ததும் “வாங்க அண்ணா… எப்படி இருக்கீங்க?” என்று வரவேற்றார்.

“நான் நல்லா தான் இருக்கேன்மா தங்கச்சி…” என்று சகஜமாகச் சொல்லி விட்டு வீட்டிற்குள் நுழைந்தார்.

அவர்கள் இருவரும் சாதாரணமாகப் பேசிக் கொள்வதை விதர்ஷணா கேள்வியுடன் பார்த்தாள்.

அவளின் பார்வையைக் கவனித்தாலும் அவளைப் பார்த்து “என்னமா அப்பா கூட வீட்டுக்கு போயிட்டு வரேன்னு மதியம் ஃபோன் பண்ணி சொல்லிட்டு போன… வரும்போது சந்தோசமா வருவனு பார்த்தேன். ஆனா முகமெல்லாம் வாடிப் போய் இருக்கு…” என்று யோசனையுடன் கேட்டார்.

“நான் அப்பா கூடப் போகலை அத்தை. எங்க வீட்டு அயோக்கியனை பார்த்துட்டு வர்றேன்…” என்று சோர்வுடன் சொன்னவள் வரவேற்பறையில் இருந்த சோபாவில் சென்று தளர்ந்து அமர்ந்தாள்.

“ஓ…! உன்னிடம் ஷர்வா சொல்லிட்டானா?” என்று அதிர்ந்து கேட்டார்.

“அப்போ உங்களுக்கும் அண்ணனைப் பற்றித் தெரியுமா?”

“தெரியும்மா… உங்க கல்யாணத்தை ஏன் இவ்வளவு சீக்கிரம் நடத்தணும்னு கேட்டப்ப ஷர்வா சொன்னான்…”

“ஓ…!” என்றவள் அதற்கு மேல் பேச வார்த்தைகளற்றுத் தலையை கையால் தாங்கி குனிந்து அப்படியே அமர்ந்து விட்டாள்.

அவள் நிலையைக் கண்டு பதறிப்போன சந்திரா “என்னடாமா… உன்னிடம் மறைத்து விட்டோம்னு கோபமா?” என்று கேட்டார்.

“ப்ச்ச்…! உங்க மேல கோபமெல்லாம் எதுவும் இல்லை அத்தை. என் அண்ணன் இப்படிப்பட்டவனா இருப்பான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை. இதை எப்படி எதிர்கொள்வதுன்னு எனக்குத் தெரியல. மனசெல்லாம் ரணமா வலிக்குது…” என்றவள் குரலில் கலக்கம் அதிகமாக இருந்தது.

“உன் மனநிலை எனக்குப் புரியுதுடா. நாம எதிர்பார்க்காத ஒன்று நடக்கும் போது அந்த வலியை நம்மால தாங்கிக்கொள்ள முடியாது தான். சரி… உனக்கு எப்ப ஷர்வா விஷயத்தைச் சொன்னான்?” என்று சந்திரா விசாரித்தார். அவர் கேட்டதும் இதுவரை நடந்ததை எல்லாம் அவரிடம் சொன்னாள்.

“என்ன… உன்னைக் கடத்தட்டும்னு விட்டுட்டானா? இந்த ஷர்வாவுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு…?” என்று கோபமாகக் கேட்டார்.

“ஜித்தாவை எதுவும் சொல்லாதீங்க அத்தை. அவர் சரியாதான் செய்தார். அதனால்தான் இருபத்தி இரண்டு வருஷமா ஒருத்தன் எங்களிடம் நடித்துக் கொண்டிருந்தான் என்று தெரியாமலேயே அவன் மீது பாசத்தைக் காட்டி இருக்கோம். ஜித்தா செய்த இந்த ஏற்பாட்டால் தான் அவனோட முகமூடி எப்படிப்பட்டதுன்னு எனக்குத் தெரிய வந்திருக்கு…” என்று கண்கள் கலங்கி சொன்னாள்.

“தேவா எதனால நம்ம மேல வெறுப்பா இருக்கான்னு சொன்னானா விதர்ஷணா?” என்று கருணாகரன் கேட்டார்.

“சொன்னான் ப்பா… எல்லாமே சொன்னான். அவனுக்கு நம்ம மேல மட்டும் வெறுப்பு இல்லைப்பா. சித்தப்பா மேல, தனாம்மா மேல கூட அவனுக்கு அளவுக்கு அதிகமான கோபம் இருந்திருக்கு. அந்தக் கோபத்தின் அளவு எதில் சென்று முடிந்ததுன்னு தெரியுமா…?” என்று கேட்டு நிறுத்திவிட்டு தந்தையைக் கண்கலங்க பார்த்தவள் “அவங்களைக் கொன்னதே அவன்தான் ப்பா…” என்றாள்.

“என்ன…?” என்று உச்சகட்ட அதிர்ச்சியில் கத்தினார் கருணாகரன்.

“ஆமாம்பா…” என்றவள் தேவா சொன்ன ஒரு வார்த்தையைக் கூட விடாமல் அனைத்தையும் சொல்லி விட்டு, “நீங்க அவன் காதலுக்கு மறுப்பு தெரிவித்து இருப்பீங்கன்னு சொன்னான்பா. ஆனா நான் இல்ல இப்ப என் காதலை நீங்க சேர்த்து வைத்தது போல அவன் காதலையும் சேர்த்து வச்சுருப்பீங்கன்னு சொன்னேன். ஆனா அதை நம்பவே இல்லை அவன். இப்ப நீங்களே சொல்லுங்கப்பா… அவன் காதலை நீங்க சேர்த்து வச்சுருப்பீங்க தானே…?” என்று கேட்டாள்.

மகள் மூலம் அறிந்த விஷயம் கருணாகரனை இடிந்து போக வைத்தது. தேவாவிற்குத் தன் மீது ஏதோ ஒரு கோபம் இருக்கிறது என்று மட்டும் தான் அவருக்குத் தெரிந்தது. ஆனால் இப்படி விதர்ஷணா பிறந்ததிலிருந்தே அவன் தங்களை விட்டுத் தள்ளித்தான் இருந்திருக்கிறான் உடலளவில் தான் எங்களுடன் நெருக்கமாக இருப்பது போல் நடித்திருக்கிறான் என்று இன்னும் அறிந்து கொண்டதை நம்ப முடியாமல் சிலை போல அமர்ந்திருந்தார்.

மகளின் கேள்வி கூட அவருடைய மூளையில் ஏறவில்லை. ஆனால் அவரின் பதிலை தெரிந்து கொள்ளத் துடித்துக் கொண்டிருந்த மகள் “பதில் சொல்லுங்கப்பா…” என்று அவரின் சிலை உணர்வை கலைத்தாள்.

கலைந்து வெளியே வந்தவர் குற்றவுணர்வுடன் “அவன் என்னைப் பற்றிச் சரியாத்தான் சொல்லியிருக்கான். அந்த நேரத்தில் கண்டிப்பா அவன் காதலுக்குச் சம்மதம் சொல்லியிருக்க மாட்டேன். என் தம்பியும் என் பேச்சை தான் கேட்டிருப்பான். அவன் காதல் நிறைவேறிருக்காது…” என்று சொன்ன தந்தையை நம்பமுடியாமல் வெறித்துப் பார்த்த விதர்ஷணா, “அப்ப இப்ப மட்டும் என் காதலை எப்படிச் சேர்த்து வச்சீங்க? ஜித்தா என்ன சொல்லி உங்களை எங்க கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்ல வைத்தார்?” என்று கேட்டாள்.

அவள் அப்படிக் கேட்டதும் அன்று ஷர்வா கல்லூரிக்கு வந்து தன்னிடம் பேசி சென்றது கருணாகரனின் நினைவில் வந்தது. அதைத் தன் மகளிடமும் சொல்ல ஆரம்பித்தார்.


அன்று உங்கள் பெயர் பேப்பரில் வந்து நாறப்போகிறது என்று ஷர்வா சொன்னதும் முதலில் அதிர்ச்சி அடைந்த கருணாகரன் பின்பு கோபம் கொண்டு “என்ன உளர்ற? நான் என்ன தப்புச் செய்தேன்? என் பேர் ஏன் பேப்பரில் வந்து நாறணும்? என் பேரை நானே ஏன் கெடுத்துக்கப் போறேன்? நான் உன்னைப் பேசுறேன்கிறதுக்காக என்னைப் பழி வாங்க ஏதாவது செய்யத் திட்டம் போட்டுருக்கியா?” என்று கோபத்துடன் கேட்டார்.

“நான் ஏன் தனியா திட்டம் போடணும்? அதான் ஏற்கனவே ஒருத்தன் பக்காவா பிளான் போட்டு உங்க பேரை நாறடிக்க வைக்கத் தயார் ஆகிட்டானே? இப்போ நீங்க குழந்தைகள் கடத்தல் கும்பல் தலைவன்…!” என்றவன் கடத்தல் கும்பல் தலைவன் என்பதை மட்டும் அதிகம் அழுத்தம் கொடுத்துச் சொன்னான்.

“என்… என்ன…சொல்ற?” உச்சகட்ட அதிர்ச்சியில் கத்திக் கேட்டார்.

“ஷ்ஷ்…! சத்தம் போடாதீங்க…! சத்தம் வெளியே போனால் போகப் போறது என் மானம் இல்லை. உங்க மானம் தான்…!” என்று அடக்கினான்.

அவரின் அதிர்ச்சி ஷர்வாவிற்கு நன்றாகவே புரிந்தது. சாந்தமாகப் பேசி அவரின் அதிர்ச்சியை அவனால் கட்டுப்படுத்த முடியும். ஆனால் அவரின் பக்கமும் ஏதோ தவறு இருக்கப் போய்த் தான் தேவா அவனைப் பழி வாங்க நினைக்கிறானோ என்ற எண்ணம் ஷர்வாவிற்கு இருந்தது. அதனால் அவரின் ‌தவறை அவருக்குப் புரிய வைக்கச் சிறிது கடுமையாகவே பேசினான்.

அவனின் அதட்டலில் சத்தத்தைக் குறைத்தவர், “கடத்தல் காரனா…? நானா…? என் மேல் ஏன் இப்படி அபாண்டமா குற்றம் சாட்டுற?” என்று கேட்டார்.

“உங்க மேல நான் குற்றம் சாட்டலை. இன்னொருத்தன் உங்க மேல போட்ட பழியைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்…”

“எவன் அவன்? என் மேல இப்படி ஒரு பழியைப் போட்டது?” என்று கோபமாகக் கேட்டார்.

“சொல்றேன்… என்ன அவசரம்…? இருங்க…!” என்றவன், “நியாயமா பார்த்தா இந்த நேரம் நான் உங்களை அரெஸ்ட் பண்ணியிருக்கணும். ஏன்னா உங்க மேல தான் முழுக் குற்றச்சாட்டு இருக்கு. உங்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரமும், உங்ககிட்ட வேலை பார்த்த சரவணபாண்டியனின் வாக்குமூலமும் இருக்கு.

உங்களை அரெஸ்ட் பண்ணுவதற்குத் தேவையான வலுவான ஆதாரம் என்னிடம் இருந்தும் நான் ஏன் தெரியுமா இன்னும் உங்களை அரெஸ்ட் பண்ணல? ஏன்னா நீங்க நிரபராதின்னு நான் நம்புகிறேன். அந்த நம்பிக்கையால் தான் இன்னும் நீங்க என் முன்னாடி இப்படி உட்காந்து பேசிக்கிட்டு இருக்கீங்க…” என்று ஷர்வா சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனவர்,

“என்ன சரவணபாண்டியன் கொடுத்த வாக்குமூலமா…? என் அறக்கட்டளையில் வேலை பார்க்கும் பாண்டியன்னு ஒருத்தன் தான் ஏதோ குற்றம் செய்ததாகப் போலீஸ் அரெஸ்ட் பண்ணியது தெரியும். ஆனா அவன் செய்த குற்றம் என்னனே எனக்குத் தெரியாத போது… அவன் சொன்ன சாட்சிக்கு நான் குற்றவாளியா…?” என்று கேட்டார்.

அவரை ஆச்சரியமாகப் பார்த்து “உங்கள் பார்வையின் கீழ் வேலை பார்க்கும் ஒரு ஆளோட முழு விவரமே உங்களுக்குத் தெரியலையே…? நீங்க எப்படி இவ்வளவு பெரிய கல்லூரியை நிர்வாகம் பண்றீங்க? உங்களுக்குக் கீழே வேலை பார்ப்பவனின் இன்னொரு முகமும் தெரியல. உங்க பக்கத்துலயே மகனாக இருப்பவனின் இன்னொரு முகமும் உங்களுக்குத் தெரியல.

ஆனால் ஆ, ஊ னா கௌரவம், மானம், மரியாதை என்று தலையில் தூக்கி வைத்து ஆடிட்டு, உங்களைச் சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியாம இருந்து இருக்கீங்க…” என்று சொன்னவனின் குரலில் இப்படியும் ஒரு மனிதர் இருப்பாரா என்று எரிச்சல் மிகுந்து ஒலித்தது.

“நீ…நீ… என்ன சொல்ற…? தேவாவின் இன்னொரு முகமா…?”

“இன்னொரு முகம்னு சொல்றதை விட… அது தான் அவனின் உண்மை முகம்னு சொல்லலாம். குழந்தைகளைக் கடத்தும் வேலையைச் செய்வதே அவன் தான். ஆனால் அத்தனை பழியையும் உங்கள் மீது சுமத்தியவனும் அவனே தான்…!” என்று சொல்லி நிறுத்த,

கருணாகரன் அதிர்ச்சியின் உச்சியில் சட்டென நெஞ்சை பிடித்தார்.

“என்ன செய்கிறது…?” என்று பதறிய ஷர்வா மேஜையின் மேலிருந்த தண்ணீரை எடுத்து அவரைப் பருகச் செய்து விட்டு, அவரின் அருகில் சென்று நெஞ்சை நீவி விட்டான்.

“நீ சொல்வதெல்லாம் உண்மையா…?” இது பொய்யாக இருக்க வேண்டுமே என்ற பரிதவிப்புடன் கேட்டார்.

“உண்மைதான்…!” என்று அழுத்திச் சொன்னான்.

கேள்விப்பட்ட விஷயத்தை ஜீரணிக்க முடியாமல் சிறிது நேரம் அப்படியே அமர்ந்து விட்டார்.

பின்பு சில நிமிடங்களுக்குப் பிறகு “அவன் தான் நல்ல படியா ஐ.டி கம்பெனி நடத்திக்கிட்டு இருக்கானே? அப்படி இருக்கும் போது அவன் ஏன் கடத்தல் தொழில் செய்யணும்? அவன்தான் கடத்துறான்னு எதை வச்சு உறுதியா சொல்கிற?” என்று விசாரித்தார்.

“அவன் ஐ.டி கம்பெனி நடத்துவது மட்டும்தான் உண்மை. ஆனால் அதை நல்லபடியா நடத்துறான்னு சொல்ல முடியாது. ஏன்னா அவன் எதுவுமே பெரிய அளவில் அந்தக் கம்பெனியை வைத்துச் செய்யலை. சின்னச் சின்ன ப்ராக்ஜெட் தான் செய்து கொண்டு இருக்கிறான். ஆனால் அவனின் சொத்து மதிப்பும், அவனின் சம்பாத்தியமும் அவன் செய்யும் வேலையை விட அதிகமான வருமானம் வந்து கொண்டிருக்கிறது.

முதலில் நாங்க குழந்தைக் கடத்தலில் கைது பண்ணியவனை விசாரித்த போது உங்க விக்ரம் அறக்கட்டளையின் சிபாரிசு கடிதம் மூலமா தான் வேலைக்குச் சேர்ந்ததா சொன்னான். அப்போதான் உங்கள் பக்கம் எங்கள் கவனம் திரும்பியது.

அந்த முதல் சாட்சியை வைத்து விசாரித்ததில் உங்க அறக்கட்டளையில் இருந்து தான் சிபாரிசு கடிதம் நாங்க பிடிச்ச குற்றவாளிக்கு எல்லாம் போயிருக்குன்னு உறுதியானது. அதுக்குப் பிறகு நான் தனிப்பட்ட முறையில் உங்களைப் பற்றி உங்க பின்னணி பற்றி எல்லாம் விசாரித்தேன். விசாரித்த வரையில் உங்க மேல அதிகம் சந்தேகப்பட முடியலை.

அதே நேரம் விக்ரம் அறக்கட்டளை கூட வேற யாருக்கு தொடர்பு இருக்குனு விசாரணையைத் திருப்பிய போது விக்ரமதேவா பெயர் எனக்கு உறுத்தலா இருந்தது.

சோ… அவனின் பின்னணியை விசாரிக்கச் சொன்னேன். விசாரிச்ச பிறகு தான் அவன் காலேஜ் படிக்கும் போது ஒரு பொண்ணை விரும்பியதும், அவள் கடைசி வருடத்தில் இருந்த போது இறந்து விட்டதும் தெரிந்தது. அதுக்குப் பிறகு அவனின் நடவடிக்கை எப்படி இருந்ததுனு விசாரித்தப்ப தான் அவனுக்குச் சில குற்றவாளிகள் கூடத் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.

அவங்க கூடச் சேர்ந்து சில கடத்தல் வேலையிலும் ஈடுபட்டிருக்கான்னு கண்டுபிடிச்சோம். அதுக்குப் பிறகு தான் அவன் தன்னை வெளிவுலகிற்கு நல்லவனா காட்டிக்க, சாப்ட்வேர் கம்பெனி சின்னதா ஆரம்பிச்சிருக்கான். ஆனா அதை அவன் பெரிய முயற்சி செய்து நல்லா கொண்டு வர முடிந்தும், ஏனோ தானோனு தான் கம்பெனி நடத்திட்டு இருக்கான்னு தெரிய வந்தது.

அதுக்குக் காரணம் அவனுக்குக் கடத்தல் தொழிலேயே நல்ல வருமானம் வந்திருக்கு. சோ… தான் மாட்டிக் கூடாதுங்கிற காரணத்துக்காக மட்டும் அவனின் கம்பெனி இருக்குனு உறுதி ஆகிருச்சு.

அடுத்து அவன் உங்களை ஏன் மாட்டிவிடப் பார்த்தான்னு விசாரிச்ச தான் அவனுக்கு உங்க மேல மட்டும் இல்லாம, விதர்ஷணா மேலேயும் ஏதோ கோபம் இருந்தது தெரிந்தது. விதர்ஷணா மேலயும் கோபம்னு தெரிந்ததும், கொஞ்ச நாளுக்கு முன்ன உங்க பொண்ணைத் துரத்தி வந்தவங்களை மீண்டும் விசாரணை செய்தேன். அப்போதான் தெரிய வந்தது. அவன் சொல்லி தான் அவங்க விதர்ஷணாவை துரத்தியது என்று.

விதர்ஷணா எங்க போனாலும் வீட்டு வேலைகாரங்களிடம் தகவல் சொல்லிட்டு போறதால தனி வீட்டில் வாழ்ந்தாலும், உங்கள் வீட்டில் நடக்கும் விஷயத்தை எல்லாம் அவன் கண்காணிச்சுட்டு தான் இருந்திருக்கான்.

அது மட்டும் இல்லாம அண்ணன் தானேனு விதர்ஷணாவும், தம்பி மகன் தானேனு நீங்களும் கூட நீ எங்க போறீங்க? எங்க இருப்பீங்க? எப்போ வருவீங்கனு அவனுக்குத் தகவல் தந்திருக்கலாம்.

இதில் எங்க விசாரணையில் இன்னும் பிடிபடாத விஷயம் அவன் ஏன் உங்க மேலயும், விதர்ஷணா மேலும் கோபமா இருக்கான்? குறிப்பா உங்க மேல கடத்தல் வருவது போல எல்லாம் ரெடி பண்ணிருக்கான். இதுக்கு எல்லாம் காரணம் என்ன? அப்படி என்ன சொந்த பெரியப்பா, தங்கை மேல கோபம்? இந்தக் கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கலை. இதுக்கான விடை அவன் தான் சொல்லணும்.

அடுத்து… இதுவரை விசாரிச்சதில் அவன் தான் கடத்தல் செய்றான்னு தெரிந்தாலும், அதுக்கு வலுவான ஆதாரம் இன்னும் கிடைக்கலை. அந்த ஆதாரம் கிடைக்க எங்க ஆளை ரெடி பண்ணி தேவா ஆபிஸுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்திருக்கோம்.

ஆதாரம் மட்டும் கிடைக்கலைனா நீங்க தான் குற்றவாளின்னு நாங்க உங்களைத் தான் கைது செய்வோம். நீங்க கௌவுரவத்தை மட்டும் தான் பெருசா நினைக்கும் மனிதன் இந்தக் கடத்தல் எல்லாம் நீங்க செய்யலைன்னு நான் சொன்னா கோர்ட் அதை ஏத்துக்காது. ஆதாரம் தான் மெயினா கேட்கும்.

அந்த ஆதாரம் ஏற்கனவே எங்களிடம் தயாரா இருக்கு. விக்ரம் அறக்கட்டளை சிபாரிசு கடிதத்தில் இருக்கும் உங்க கையெழுத்தும், இதுவரை பிடிபட்ட குற்றவாளிகள் சொன்ன சாட்சியங்களே போதும். கோர்ட் உங்களுக்குச் சுலபமா தண்டனை கொடுத்திரும். அதுவும் குற்றவாளிகளைச் சாட்சி சொல்ல தேவா நல்லா ட்ரைன் பண்ணிருக்கான். அவங்களிடம் எப்படி விசாரிச்சும் உங்க பேரை தவிர வேறு பெயரை மாற்றிச் சொல்ல மாட்டிங்கிறாங்க…” என்று அனைத்தையும் சொன்னான்.

அனைத்தையும் கேட்டவர் இந்த உலகிலே இல்லை என்பது போது கலங்கி தவித்துப் பல்வேறு உணர்ச்சி குவியலுக்குள் சிக்கி கொண்டதை போல அமர்ந்திருந்தார்.

தன்னுடைய மூத்தமகனாக நினைத்துக் கொண்டிருக்கும் விக்ரமதேவனின் இன்னொரு பரிமாணம், அவரைத் தலை குப்புற கீழே தள்ளியது போல் உணர்ந்தார்.

அவரிடம் மீண்டும் துளி அளவு தெளிந்து வரவே பல நிமிடங்கள் பிடித்தது. அதுவரை பொறுமையாக அமர்ந்திருந்தான் ஷர்வா.

“தேவாவா இப்படி…?” என்று குரலே வெளியே வராமல் கேட்டவர் அவனின் பதிலை எதிர்பார்க்காமல், “நிஜமா அவனுக்கு எங்க மேல என்ன கோபம்னு எனக்குப் புரியலையே? எங்க மேலே பாசமா இருப்பானே? அப்படி இருக்கான்னு தானே நானும் போன நிமிஷம் வரை நினைச்சுட்டு இருந்தேன். அப்போ அவன் எங்க மேல காட்டுற பாசம் உண்மை இல்லையா?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டார்.

“அவன்கிட்ட இந்தக் காலேஜை பார்த்துக்கச் சொல்லி கேட்டேன். ஆனா மாட்டேன் தனியா தான் பிஸ்னஸ் பண்ண போறேன்னு சொன்னான். ஆனா அவன் பண்ணின பிசினஸ் கடத்தலா…?” என்று இன்னும் நம்ப முடியாமல் திகைத்தார்.

மீண்டும், மீண்டும் இதே போல் தனக்குத் தானே கேள்வி கேட்டு புலம்பியவர் பின்பு மெல்ல நிமிர்ந்து ஷர்வாவைப் பார்த்து, “நான் அறக்கட்டளை மூலமா சிபாரிசு பண்ணி வேலையில் சேர்க்க உதவி செய்தது உண்மை தான். ஆனா நான் சேர்த்து விட்டது ஒரு இரண்டு, மூணு பேரு தான். அவங்களையும் கூட எனக்கு நல்லா தெரியும்…” என்று சொல்ல, ஷர்வா தன் போனில் இருந்து தாங்கள் கைது செய்த காப்பகத்தில் வேலை பார்த்தவர்களின் புகைப்படங்களை எடுத்துக் காட்டினான்.

அதை வாங்கிப் பார்த்தவர், “இவங்க எல்லாம் எனக்கு யாருனே தெரியாது…” என்றார்.

“ஹ்ம்ம்…! அப்போ தேவா உங்க கையெழுத்தை யூஸ் செய்து அவனே ஆள் சேர்த்து விட்டுருக்கான். உங்களுக்குத் தெரியாம உங்க கையெழுத்து வாங்கி இருக்கணும். இல்லைனா அவனே போலி கையெழுத்து போட்டிருக்கணும். அதுக்கு உதவி செய்தது உங்க அறக்கட்டளையில் வேலை செய்த சரவணபாண்டியன். உங்களுக்கே தெரியாம உங்களைச் சுற்றி பெரிய வலை பின்னிருக்கான். அதில் சுலபமா நீங்க மாட்டிகிட்டிங்க.

நான் பார்த்த வரை உங்க கௌரவச் செருக்கும், யாரையும் மதிக்காமல் நீங்கதான் பெரிய இவர் என்பது போல நடந்து கொள்ளும் குணம் தான் இதுக்குப் பின்னணியா இருக்குமோனு தோணுது. அதுக்கு இன்னொரு உதாரணம் என்னையும், விதர்ஷணாவையும் சேர்த்து வச்சுப் பத்திரிக்கையில் எழுதின செய்தி. அதை எழுத சொன்னது உங்க கூட ஒரு இடம் பிரச்சனையில் சண்டை போட்ட கார்மெண்ட்ஸ் கம்பெனி விக்ரம். அவனை நீங்க இளப்பமா பேசிய கோபத்தை இப்படிக் காட்டி இருக்கான்.

உங்க கௌவுர செருக்கு இன்னும் என்னென்ன வினையை இழுத்துட்டு வரும்னு தெரியலை. இன்னும் யாரு கூட எல்லாம் இப்படிப் பேசி வைத்து பிரச்னையை இழுத்து விட்டுருக்கீங்கனு தெரியலை. சரி விடுங்க…! நீங்க கௌரவத்தையே தலையில் தூக்கி வச்சு ஆடுங்க. ஐ டோன்ட் கேர்…! இப்ப சொன்ன விஷயம் எல்லாம் சட்டப்படி உங்களிடம் சொல்லிருக்கவே கூடாது

ஆனா நீங்க நிரபராதின்னு உறுதியா நான் நம்புறதால் தான் சொன்னேன். இப்போ நான் வந்ததுக்கு முக்கியக் காரணம் உங்களுக்கு ஒரு தகவல் சொல்லத்தான்…” என்று சொல்லி நிறுத்தி அவரின் முகத்தைப் பார்த்தான்.

‘என்ன…?’ என்பது போல் கருணாகரன் பார்க்க, “நானும், விதர்ஷணாவும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருக்கோம். நல்லா கவனிங்க உங்களிடம் சம்மதம் கேட்கலை. தகவல் தான் சொல்றேன். கல்யாணம் முடிஞ்ச கையோட ஒரு அறிவிப்புக் கொடுக்கப் போறேன். என்னனு தெரியுமா ‘விக்ரம் கல்வியகத்தில் உரிமையாளரான கருணாகரன் அவரின் மகளை எனக்குத் திருமணம் செய்ய வைக்க மறுத்ததால் நாங்களே பதிவு திருமணம் செய்து கொண்டோம்’ அப்படின்னு அறிவிப்புக் கொடுப்பேன்.

இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன் என் குடும்பப் பெயர் பேப்பரில் வந்ததுன்னு கேவலமா சொன்னீங்களே…? இப்போ உங்க குடும்பப் பெயர் வரும். அடுத்து தேவாகிட்ட ஆதாரம் கிடைச்சாலும் கிடைக்கலைனாலும் எப்படியும் கடத்தல் சம்பந்தமா பேப்பரில் வரும்.

இப்போ என்ன பண்ண போறதா இருக்கீங்க மிஸ்டர்.கருணாகரன்? ஒரு மனிதனுக்குக் குடும்ப மானம், மரியாதை, கௌவுரவம் இருக்க வேண்டியது தான். அது நியாயமான ஆசையும் கூட… ஆனா செருக்கும், அகம்பாவமும் இருக்கக் கூடாது. அதே நேரம் கௌவுரவப் பேரை வைத்து உங்களுக்குக் கீழே இருக்குறங்களை மட்டமாகவும் நினைக்கக் கூடாது…” என்று அழுத்தி சொல்லி நிறுத்தியவன், மீண்டும் “சரி எங்க கல்யாண தகவலை சொல்ல வந்தேன்… சொல்லி முடிச்சுட்டேன். கிளம்புறேன்…!” என்று ஷர்வா கிளம்பப் போக,

“உங்க கல்யாணத்தை நானே நடத்தி வைக்கிறேன்” என்று சொல்லி அவனின் நடையை நிறுத்தினார் கருணாகரன்.

அவரைத் திரும்பி பார்த்து இகழ்வான சிரிப்பு சிரித்தவன் “என்ன உங்க கௌரவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியா…?” என்று கேட்டான்.

‘இல்லை…’ என்று தலையசைத்தார் கருணாகரன். அவரை ஆச்சரியமாகப் பார்த்தவன் “வேற என்ன விஷயம்…?” என்று கேட்டான்.

“நீ சொன்ன மாதிரி கௌரவச் செருக்கோட இருந்து நான் என்ன சாதிச்சுட்டேன்? என் செருக்கால நானே என் மகள் பெயர் தப்பா வர காரணமா இருந்திருக்கேன். செருக்கோடு சுத்தின எனக்கு என் அருகில் இருந்தவர்களின் குணம் என்னனு தெரியலை. இத்தனை நாளும் மகன்னு நான் நினைச்சவன் என்னை விரோதியா நினைச்சுட்டு இருக்கான்.

ஆனா அது கூட எனக்குத் தெரியலை. என் அறக்கட்டளைல வேலை செய்தவன் எனக்கு எதிரா வேலை பார்த்திருக்கான். அதுவும் எனக்குத் தெரியலை. இப்படி என்ன சுத்தி என்ன நடக்குதுனே தெரியாம கௌரவ மூட்டையைத் தலையில் சுமந்து நான் எதுவுமே சாதிக்கலை. என்னோட முட்டாள் தனமும் இதில் நிறைய இருக்கு. யாரு எப்படிப்பட்டவங்கனு கூட ஆராயத் தெரியாம இருக்கும் நானெல்லாம் இனியும் நான் தான் உசத்தி. எனக்குக் கௌவுரவம் தான் முக்கியம்னு இருந்து என்ன சாதிக்கப் போறேன்? நீ சொன்ன மாதிரி இந்த என் செருக்கு தான் தேவாவை ஏதோ வகையில் பாதிச்சுருக்கும் போல. இல்லைனா அவனுக்கு ஏன் என் மேல இவ்வளவு கோபம் வரப் போகுது?” என்று வேதனையைச் சுமந்த குரலில் சொன்னவர்,

“என் மகளும் என் மேல வெறுப்பா வெறுத்து போறதுக்கும் நானே காரணமா இருக்கப் போறது இல்லை. அவ விருப்பப்பட்ட வாழ்க்கை அவளுக்குக் கிடைச்சு அவளாவது சந்தோஷமா இருக்கட்டும். நானே உங்க கல்யாணத்தை நடத்துறேன்…” என்றார்.


அன்று தாங்கள் பேசிக் கொண்டதை சொன்ன கருணாகரன் மகளைப் பார்த்து “மாப்பிள்ளை சொன்ன மாதிரி தான் தேவா காதல் விஷயத்தில் நடந்து இருக்கு. ஏற்கனவே நம்ம மேல கொஞ்சம் கோபமா இருந்தவனை அவனின் காதல் விஷயம் வேறு வகையில் அவனை மாத்தி இருக்கு. நான் மறுப்பேன்னு தெரிஞ்சு என் தம்பியும், தனமும் என் மனம் போல நடந்துக்கணும்னு மகனின் வெறுப்பைச் சம்பாதித்து அவனாலேயே உயிரை விடுவாங்கனு கொஞ்சம் கூட எனக்குத் தெரியலை. அவங்க அவனால சாகுறதுக்குக் காரணம் என் கௌரவுரவச் செருக்குத் தான்னு இப்போ தெரிந்த பிறகு, என்னை நினைச்சா எங்கே கேவலமா இருக்கு…” என்று தான் இத்தனை நாளும் இருந்த நிலையை நினைத்து விரக்தியுடன் புலம்பினார்.

பின்பு மகளைப் பார்த்து, “மாப்பிள்ளை அன்னைக்கு இன்னும் நிறையப் பேசினார். அவர் என்னைப் பார்க்க வந்ததே நாங்களே கல்யாணம் முடிச்சுப்போம்னு சொல்லி மிரட்டலா பேசி என்னைக் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்ல வைக்கத் தானாம்.

அதை மட்டும் பேச வந்தவரை நான் தான் அவங்க வீட்டு விஷயம் பேசி, அவங்க தங்கச்சி பற்றி எல்லாம் பேசவும், உணர்ச்சி வசப்பட்டுத் தேவா பற்றிச் சொல்லி, அப்போ உங்க பேர் பேப்பரில் வந்தா என்ன செய்வீங்கணும் கேட்டார்.

விஷயம் தெரிஞ்சு ஆடிப் போயிட்டேன். அப்போதான் உரைச்சது என் முதுகுக்குப் பின்னாடி என்ன இருக்குனு பார்க்காம, அடுத்தவங்க முதுகில் என்ன இருக்குனு பார்த்துக் குறை சொல்ல எனக்கு எல்லாம் என்ன தகுதி இருக்கு? நான் பெரிய இவன்னு நினைச்சு நடந்துகிட்ட முறையில் என்ன நல்லது நடந்தது?

தேவா விஷயத்தில் தான் நான் தவறிட்டேன் உன் விஷயத்திலாவது ஒரு நல்ல அப்பனா நடந்துப்போம்னு தான் கல்யாணத்துக்குச் சரி சொன்னேன்.

நான் சரின்னு சொன்ன பிறகு தேவா பற்றி இன்னும் சில விஷயங்கள் கணிக்கவே முடியலை. ஒரு வேளை நாங்க அவனை நெருங்கினா, அவன் உங்க மேலயும், விதர்ஷணா மேலயும் தான் கோபப்பட வாய்ப்பிருக்கு. அவன்கிட்ட கவனமா இருங்கன்னு சொன்னார். கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்ன விஷயத்தில் கூட நான் என்ன சொல்லி உங்ககிட்ட சம்மதம் வாங்க வந்தேனோ அதே சொல்லுங்கனு சொன்னார். அதைத் தான் நான் தேவாகிட்டயும் சொன்னேன்.

ஆனாலும் அவனுக்கு என் மேல ஏதோ சந்தேகம் தான் போல. ஒரு மாதிரி பார்த்தான். அப்போதான் இதுக்கு முன்னாடியும் நம்மளை அவன் இப்படி ஒரு மாதிரி பார்த்துருக்கானேனு தோனுச்சு. அப்போ எனக்கு அது எல்லாம் பெருசா தெரியலை. அப்புறம் உங்க கல்யாணத்தன்னைக்கு மாப்பிள்ளை சொல்லி தான், வேண்டா வெறுப்பா நான் கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னது போல நடந்துகிட்டேன்.

தேவா என்னைக் கவனிச்சுட்டே இருந்தான். அவனுக்கு நம்ம‌ மேல சந்தேகம் வந்திடக் கூடாது. அதனால் எப்பவும் போல என்கிட்ட வெறுப்பா இருக்குற போல இருங்கன்னு மாப்பிள்ளை சொல்லிட்டார். அதனால்தான் உன் கல்யாணத்தன்னைக்கு கூட நான் உன்கிட்ட பேசாம அமைதியா இருந்தேன். உன்கிட்ட சரியா பேசாம இருந்ததுக்குச் சாரிமா…” என்று வருந்தி மன்னிப்பு கேட்டார்.

“உங்க சூழ்நிலை எனக்குப் புரிந்ததுப்பா. மன்னிப்பு எல்லாம் வேண்டாம். விடுங்க…” என்றாள் விதர்ஷணா

“ஹம்ம்…சின்ன வயசுல அவன் கூட நீ இருக்கும் போதெல்லாம் காயம் படும் போது அண்ணன், தங்கச்சி தானே விளையாடும் போது தெரியாம காயம் பட்டிருக்கும்னு நினைச்சுருக்கேன். ஆனா எல்லாமே அவன் வேணுமே செய்துருப்பான்னு இப்போ தெரியும் போது என் உயிரே நடுங்குது…” என்றார்.

“அவன் ரொம்பச் சாமர்த்தியமா இருந்து இருக்கான்பா. நமக்குத் தான் அதை இனம் காண தெரியலை…” என்று விதர்ஷணாவும் சொல்ல, ஆமோதிப்பாகத் தலையசைத்தார் கருணாகரன்.

“அவனை என் மகனா தானே நினைச்சேன். அவன் இப்படி வழி மாறிப் போவான்னு நினைக்கலையே?” என்று புலம்பி வருந்திய கருணாகரன் “சமீபத்தில் கடத்திய குழந்தைகளைப் பார்த்தோமே… எல்லாமே பிஞ்சு குழந்தைகள். அவங்களை வச்சு இவனுக்கு என்ன பிசினஸ் கேக்குது? அந்தப் பிள்ளைகளைப் பார்க்க பார்க்க என் மனது துடித்துப் போய் விட்டதுமா. நம்ம தேவால இந்தப் பிள்ளைகளைக் கடத்தியதற்குக் காரணம்னு நினைச்சு டிவில கூட அந்தச் செய்தியைப் பார்க்க முடியாமல் மனசுல ரணமா இருந்துச்சுமா…” என்று வருத்தத்துடன் சொன்னார்.

“எனக்கு அப்ப அது ஒரு செய்திதான்பா. ஆனா அதையே இப்ப நினைச்சுப் பார்க்க எனக்கும் ரொம்பக் கஷ்டமா இருக்குப்பா…” என்றாள் விதர்ஷணா.

இங்கே தந்தையும், மகளும் மேலும் அவனைப் பற்றி வேதனையுடன் பேசிக் கொண்டிருந்த அதே நேரம், அங்கே “செத்து தொலைடா…!” என்று கத்தியபடி ஷர்வாவின் நெற்றிக்கு நேரே துப்பாக்கியை குறி வைத்திருந்தான் விக்ரமதேவன்.