பனியில் உறைந்த சூரியனே – 42
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 42
“ஆ…!” என்ற அலறல் சத்தம் கேட்டு மேனி நடுங்க நின்றிருந்தாள் விதர்ஷணா.
“யெஸ்… அப்படித் தான் கத்து! நீ கத்துறது அப்படியே காதில் தேன் பாய்றது போல இருக்கு…” என்று கொடூரமாகக் கேட்ட தேவாவின் குரல் அவளின் நடுக்கத்தைக் கூட்டியதே தவிரக் குறைக்கவில்லை.
‘தன் அண்ணனுக்குள் இத்தனை கொடூரமா ஒளிந்திருந்தது?’ என்று நினைத்துக்கொண்டவளுக்குக் கண்களின் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
தியாகுவின் வலி தாங்கிய சத்தம் மட்டும் இல்லாமல் அவனின் வேதனையையும் கண்ணால் பார்க்க வைத்துக் கொண்டிருந்தான் விக்ரமதேவா.
விதர்ஷணா இருந்த அறைக்கும், தியாகு இருந்த அறைக்கும் இடையே ஒரு ஜன்னல் இருக்க, அதைத் திறந்து வைத்து அவனைத் தொடையில் கத்தியை வைத்து கீறியதை பார்க்கும் படி செய்தான்.
அவள் கண்ணை மூடினால் இன்னும் பலமாக அவனைக் குத்துவேன் என்று தேவா மிரட்டியதால் பயந்து போய் அவனின் கொடூரத்தை பார்த்துக் கொண்டிருந்தாள் விதர்ஷணா.
ஏற்கனவே தியாகுவின் கையிலும், தோளிலும் ரத்தம் லேசாகக் கசிந்து கொண்டிருந்த கட்டுத் தெரிந்தது.
இப்போது தொடையில் இருந்து ரத்தம் வேகமாக வெளியேறிக் கொண்டிருந்தது. சில நிமிடங்கள் அவனின் வலியையும், ரத்தம் வெளியேறுவதையும் திருப்தியுடன் பார்த்தவன், “ரகு…!” என்றழைத்தான்.
அவன் வந்ததும் “கட்டுப்போடு! அருண் ஏற்பாடு பண்ணிட்டானா?”
“அந்த ரூமில் வைத்து கிளம்ப எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு இருக்கான். இப்போ முடிஞ்சுரும். இங்கே வேலையை முடிச்சுட்டு கிளம்ப வேண்டியது தான்…” என்று ரகு சொல்ல, “ஓகே…” என்று விட்டு விதர்ஷணா இருந்த அறைக்கு வந்தான்.
அவள் தியாகுவிற்குக் கட்டுப் போடுவதையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, “என்ன கத்தி வச்சு கீறியும் விட்டுட்டு, கட்டும் போடுறான்னு பார்க்கிறியா? என்னை வேவு பார்க்க வந்ததற்கான தண்டனை அது. அவனை எப்படியும் கொல்லத்தான் போறேன். ஆனா அதுக்கு முன் ஏன் என்னை வேவு பார்க்க வந்தோம்னு வருந்த வேண்டாமா?
அதான் இந்த ட்ரீட்மெண்ட். அவன் உயிர் சட்டுனு போயிற கூடாது. உடம்பின் ஒவ்வொரு அணுவும் வலியில் துடிச்சுட்டு அப்புறம் தான் அவன் உயிர் போகணும். இப்போ போடுவது சும்மா லேசான கட்டு தான் ரத்தம் அதிகம் வெளியேறுவதைத் தடுக்குமே தவிர உள்ளுக்குள் இருக்கும் வலி உயிர் போய் விடுவதே மேல்னு நினைக்க வச்சுரும். எப்படி என் ட்ரீட்மெண்ட்?” என்று இமையை உயர்த்திக் கூலாகக் கேட்டான்.
“நீ ஏன் இவ்வளவு வக்கிரமா இருக்க?” கண்ணில் வலியுடன் கேட்டாள் விதர்ஷணா.
“ஹ…! இது எல்லாம் ஒரு வக்கிரமா? என் வக்கிரத்தின் அளவுகோல் தான் உனக்குத் தெரியுமா? என்னைப் பற்றித் தான் உனக்கு ஒன்றுமே தெரியாதே? நானே சொல்றேன் எல்லாம் கேட்டுக்கோ! இதை எல்லாம் எப்படி உன்கிட்ட பயமில்லாம சொல்றேன் தெரியுமா? நான் சொல்ல சொல்ல உன் முகத்தில் ஒரு மரணப் பயம் வந்து போகுது பார். அதைப் பார்க்க எனக்குப் பரம திருப்தியா இருக்கு. அதுவும் ஒவ்வொரு முறையும் நான் உன்னை அழவைக்க ஏதாவது பண்ணிட்டு நீ அழுகுறதை பார்த்து வெளிப்படையா சந்தோஷப்பட முடியாம எத்தனை நாள் கஷ்டப்பட்டுருக்கேன் தெரியுமா?
இன்னைக்கு ஒரு நாளாவது வெளிப்படையா நீ பயந்து அழுகிறதை பார்த்து ரசிக்கணும்னு ஆசை பட்டு தான். அது மட்டும் இல்லாம என்னைப் பற்றி எல்லா உண்மைகளையும் தெரிஞ்ச அடுத்த நிமிடம் நீ உயிரோடு இருக்க மாட்ட…” என்றவன் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்து “இன்னும் அரைமணி நேரம் தான். அதுக்குப் பிறகு நீ உயிரோடு இருக்க மாட்ட? நானும் இந்த இடத்தில் இருக்க மாட்டேன்…” என்று சிரித்துக்கொண்டே சொன்னவனை, பயத்துடன் கேள்வியாகப் பார்த்தாள் விதர்ஷணா.
“என்ன எங்கே போகப் போறேன்னு பார்க்கிறயா?” என்றவன் “விஷ்ஷ்…” என்று கையைப் பறப்பது போலக் காட்டினான்.
“என்னைப் பிடிக்க உன் ஜித்தன் போட்ட திட்டம் எல்லாம் வீணாய்ப் போய் உன் பிணத்தைப் பார்த்து அவன் துடிக்கப் போறது தான் அவனுக்குக் கிடைக்கப் போற பலன். இதில் எனக்கு என்ன வருத்தம்னா அவனோட வலியையும், உன் அப்பனோட அழுகையையும் பார்க்க எனக்குத் தான் கொடுத்து வைக்கலை. ப்ச்ச்…!” என்று உதட்டை பிதுக்கி வருத்தம் போல உச்சு கொட்டியவனைப் பார்த்து விதர்ஷணாவிற்கு உள்ளுக்குள் கொதித்துக் கொண்டு வந்தது.
ஆனால் முகத்தில் எதையும் காட்டாமல் ‘நீ நினைக்கிறது எதுவும் நடக்காதுடா! நடக்கவும் என் ஜித்தன் விடமாட்டார்’ என்று உள்ளுக்குள் கர்வமாக நினைத்துக் கொண்டாள்.
‘உன்னோட ஆட்டமும் நீ சொன்ன அதே அரைமணி நேரம் தான்!’ என்று நினைத்து அவனைப் பார்த்து இகழ்வாகச் சிரிக்கத் தோன்றிய உதடுகளைக் கஷ்டப்பட்டு அடக்கி வைத்தாள்.
அவள் மனதிற்குள் நினைத்துக் கொண்டதை அறியாமல் அவளின் உணர்ச்சி துடைத்த முகத்தைக் கண்டுவிட்டு, “என்ன ஆரம்பிப்போமா? எங்க அப்பா, அம்மாவை ஏன் கொன்னேன்னு கேட்டேல? அதைப் பற்றிப் பாதியில் இருந்து சொன்னால் உனக்குப் புரியாது. முதலில் இருந்து சொல்றேன் அதை எல்லாம் கேட்டுட்டு எல்லாமே உனக்கு மட்டும் நான் விஷயத்தைச் சொன்ன மகிழ்ச்சியில் சந்தோஷமா செத்துப் போ!
“நீ பிறந்து எங்க அம்மா உன்னை வளர்க்க ஆரம்பித்ததில் இருந்தே நீ ஏன் என் இடத்துக்கு வந்தனு உன்மேல் மட்டும் இல்லாம என் அப்பா, அம்மா மேலயும் எனக்குக் கோபம் இருந்துக்கிட்டே இருந்தது. அடுத்து நான் வளர்ந்து காலேஜ் படிக்கும் போது எனக்கு ஒரு பெண்ணைப் பிடிச்சிருந்தது. அவளுக்கும் என்னைப் பிடிச்சிருந்தது…” என்று சொல்லவும் அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் விதர்ஷணா. ‘இது என்ன புதுக்கதை?’ என்று தோன்றியது.
அதை அவள் பார்வையில் கண்டு கொண்டவன், “யெஸ்… நாங்க இரண்டு பேரும் லவ் பண்ணினோம். இது அப்போ ஸ்கூல் படிச்சுட்டு இருந்த உனக்கும் தெரியாது. அதே நேரம் உன் அப்பனுக்கும் தெரியாது.
காலேஜ் முடிச்சுட்டு வீட்டில் விஷயத்தைச் சொல்லுவோம்னு நினைச்சுட்டு இருந்த நேரத்தில் அவ போட்டோ என் புக்கில் இருக்குறதை ஒரு நாள் என் அம்மா பார்த்துட்டாங்க. அந்தப் பொண்ணு யாரு என்னனு விஷயத்தைக் கேட்கவும் நானும் சொன்னேன்.
எப்படியும் என் காதலுக்கும், என் ஆசைக்கும் மறுப்புக் கிடைக்காதுன்னு ரொம்ப நம்பிட்டு இருந்தேன். ஆனா நடந்ததே வேறு. என் காதலைப் பற்றித் தெரிந்ததும், என் அம்மா சொன்ன வார்த்தை என்ன தெரியுமா?
உன் காதல் நிறைவேறாது! இதை மறந்துரு! இது மட்டும் தான்! இப்படிச் சொன்னது முதல் பதில் மட்டும் இல்லை. இறுதி பதிலும் கூட! அதுக்கு மேல அவங்க என் காதலைப் பற்றி விசாரிக்கவே இல்லை. நடக்காது மறந்துரு! இதே தான் திரும்ப, திரும்பச் சொன்னாங்க.
அடுத்து எங்க அப்பாகிட்டயும் அவங்க விஷயத்தைச் சொல்ல, அவரும் வார்த்தை மாறாம அதே பதில். என்னடா இவங்க இப்படி மறுக்குறாங்க. என்ன விஷயம்னு தூண்டி துருவி விசாரிச்சா, அவங்க சொன்ன பதில் கருணாகர விக்ரமன்…!” என்று சொல்லி நிறுத்தி விதர்ஷணாவை கூர்மையாகப் பார்த்தான்.
“எங்க அப்பா என்ன பண்ணினார்?” என்று கேட்டாள்.
“காதல் விஷயத்தில் என்ன பண்ணுவார்னு உனக்குத் தெரியாதா என்ன?” என்று திருப்பிக் கேள்வி கேட்டான்.
“நீ தான் எங்க அப்பாவுக்கு உன் காதலைப் பற்றித் தெரியாதுன்னு சொன்னியே? அப்புறம் எப்படி அவர் காரணம் ஆவார்?” என்று புரியாமல் கேட்டாள்.
“தெரியாது தான்! ஆனா தெரிய கூடாதுனு மறைச்சதே என் அப்பா, அம்மா தான். அவங்க மறுத்ததுக்கான காரணம் உன் அப்பனைக் காரணம் காட்டித்தான். என் அண்ணனுக்கு இப்படிக் காதல் கல்யாணம் பண்ணி வைக்கிறது பிடிக்காது. அதுவும் நீ விரும்புற பொண்ணு வசதி குறைவானவ. அவளைக் கண்டிப்பா என் அண்ணா ஏத்துக்க மாட்டார். மறந்துடுனு சொல்லி, சொல்லியே என்னை நோகடிச்சார் என்னோட அப்பா. நான் எவ்வளவோ பேசிப் பார்த்தேன்.
ஆனா அவங்க உன் பெரியப்பாவிற்குப் பிடிக்காது. கௌரவக் குறைச்சலா நினைப்பார். விட்டுடு! இதைத் தவிர அவங்க பேசத் தயாரா இல்லை. நான் பேசிப் பார்க்கிறேன்னு சொன்னதுக்கு என்னையும் பேசக் கூடாதுன்னு என்னைக் கட்டி போட்டுட்டாங்க. என் ஆசையைக் கெடுக்கப் பெரியப்பாவாகவே இருந்தாலும் அந்த ஆள் யாருன்னு எனக்கு ஆத்திரம். ஏற்கனவே இந்த ஆள் லேட்டா உன்னைப் பெத்து, உங்க அம்மா செத்து, என் அம்மாவை வளர்க்க விட்டுடாரேனு அவர் மேல் ஏகப்பட்ட கடுப்பில் இருந்தேன்.
அதோட அவர் பேர் சொல்லி எனக்குக் கிடைச்ச மறுப்பில் அந்த ஆளு மேல கொலைவெறியே வந்தது. அவர் மேல எனக்கு இருந்த வெறுப்பையும் என்னைப் பெத்தவங்க காட்ட விடலை. ஆனா அப்படி அவங்க காட்ட விடாம தடுத்தது எவ்வளவு நல்லதுன்னு எனக்குப் பின்னாளில் தான் புரிந்தது. அது என்னனு அப்புறம் சொல்றேன்…” என்றவன் மேலும் தொடர்ந்தான்.
“காதலிக்கிறது ஒரு குத்தமா? இதை ஏன் இப்படி மறுக்குறாங்க? பேசி பார்த்துட்டு மறுத்தால் கூடப் பரவாயில்லை. அப்படி எதுவும் செய்யாமல் தன் ஒரே மகனின் ஆசையைக் கூட நிறைவேற்றாத பெத்தவங்க எதுக்கு இருக்காங்க அப்படின்னு என்ன பெத்தவங்க மேல ஆத்திரம் வந்தது.
என்னோட அந்தக் கோபத்தை யாரு மேலனாலும் காட்டணும்னு பயங்கரமான வெறி. ஆத்திரம், கோபம் என்னோட வலி, எனக்குக் கிடைச்ச மறுப்பு எல்லாத்தையும் எதிலனாலும் காட்டணும்னு நினைச்சு ஒரு நாள் எங்க அப்பாவும், அம்மாவும் மட்டும் தனியாகக் கிளம்பினப்ப அவங்க போறதா இருந்த காரில் இருந்த பிரேக்கை கட் பண்ணி விட்டுட்டேன்.
அப்ப அவங்களைக் கொலை பண்ணனும்னு நினைச்சுப் பிரேக்கை கட் பண்ணி விடலை. சின்ன ஆக்ஸிடென்ட் ஆகும். கை, கால் உடைந்து வருவாங்க. அது என் வலிக்கு மருந்தாகும்னு நினைச்சு ஆத்திரத்தில் பண்ணினேன்.
ஆனா அவங்களுக்கு அல்பாயுசு. நான் நினைச்சது போலப் பிள்ளையோட ஆசையை நிறைவேற்றாத இந்த அப்பா, அம்மா உயிரோட இருக்கத் தேவையில்லைனு கடவுளே அவங்களைக் கூப்பிட்டுக்கிட்டார் போலன்னு நினைச்சுக்கிட்டேன். நானே அவங்க சாவாங்கனு நினைச்சுப் பார்க்கலை.
ஒரு வேளை போலீஸ் கிட்ட மாட்டிப்பேனோன்னு கூடப் பயந்திருக்கேன். ஆனா அப்படி எதுவும் நடக்கலை. அவங்க விஷயம் ஆக்ஸிடென்ட்னு முடிஞ்சு கடவுள் அதிலும் என் பக்கம் தான் இருந்தார்…” என்று அலட்சியமாகச் சொல்லி தோளைக் குலுக்கி விட்டுக்கொண்டான்.
‘எவ்வளவு அலட்சியமாகச் சொல்கின்றான்? சிரித்த முகத்துடன் வெளியே சென்றவர்கள் உயிரல்லா மூட்டையாக வந்த போது ஒன்றுமே அறியாதவன் போல, இவன் அழுத அழுகை எல்லாம் எவ்வளவு நடிப்பு? அன்றைக்கு மட்டும் இல்லாமல் அதைத் தொடர்ந்த வருடங்களிலும் போலி முகமூடியுடனே தங்களுடன் வாழ்ந்திருக்கின்றான்’ என்று நினைத்தவளுக்கு வேதனையுடன் கண்ணீர் வர பார்த்தது.
கண்ணில் இன்னும் அவளின் சித்தப்பாவும், தனாம்மாவும் சிரித்த முகத்துடன், ரத்தம் தோய்ந்த முகத்துடன் அவளின் மனகண்ணில் வந்து போக, வேதனையை அடக்க முடியாமல் விசும்பினாள்.
அவள் அழுவதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து “கொலைகாரப் பாவி…!” என்று கடிந்த பற்களிடையே வார்த்தையைத் துப்பினாள். பெற்றவர்களைக் கொன்று விட்டு அசால்ட்டாகத் தோளை குலுக்கியவன் முகத்தில் காறி உமிழத் தோன்றியது.
ஆனால் தான் அவசரப்படக்கூடாது என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
அவள் கொலைகாரப்பாவி என்று சொன்னதைக் கேட்டும் அமைதியாக இருந்த விக்ரம் “ப்ச்ச்…! என்னைக் கொலைக்கார பாவி ஆக்கினதே உன் அப்பன் தான் மா அவனைப் போய்ச் சொல்லு…!” என்றான் அலட்சியமாக.
“உன் தப்புக்கு என் அப்பாவை குறை சொல்லாதேடா! நான் என் காதலுக்குப் போராடினது போல நீயும் போராடியிருந்தா நீயும் ஜெயிச்சுக்கலாம். ஆனா அதைச் செய்யாம கோழைத்தனமா இருந்து கொலையும் பண்ணிட்டு அதுக்கு என் அப்பாவை பழி சொல்லுவியா?
என் அப்பா கௌரவம்னு பேசுவாரே தவிர, அவர் ஒன்னும் உன்னைப்போலக் கெட்டவர் இல்லை. பாசத்துக்காக இறங்கி வருபவர் தான். அதுவும் இல்லாம ஜித்தன் மேல அவருக்குத் தனிப்பட்ட ஒரு வெறுப்பு இருந்ததால் தான் அவரை மாப்பிள்ளையா ஏற்க மாட்டேன்னு மறுத்தார்.
அவருக்கு மட்டும் ஜித்தன் மீது தனிக் கோபம் இல்லனா என் காதலுக்கு எப்பயோ சம்மதம் சொல்லிருப்பார். இதே தான் உன் விஷயத்திலும் நடந்திருக்கும். ஆரம்பத்தில் கௌரவம்னு பேசினாலும் நீ கொஞ்சம் உன் முடிவில் உறுதியா இருந்திருந்தா அவரே உனக்குக் கல்யாணம் பண்ணி வச்சிருப்பார்.
என் அப்பாவை சித்தப்பாவும், தனாம்மாவும் கூடப் புரிஞ்சுக்கலைனு நினைக்கிறேன். இல்லனா அவங்களே என் அப்பாகிட்ட உனக்காகப் பேசிருப்பாங்க. அவங்க மேலயும் தப்பு இருக்கு. என் அப்பா நல்லவரா இல்லைனா ஒரு அறக்கட்டளை ஆரம்பிச்சு அநாதை பிள்ளைகளுக்கும், ஏழைகளுக்கும் உதவுவாரா? அதை ஏன் யாரும் யோசிக்கலை?” என்று கேட்டாள்.
“ஏய்…! நீ தாண்டி உங்க அப்பாவை சரியா புரிஞ்சுக்கலை. உங்க அப்பா என்ன ஆரம்பத்தில் இருந்தேவா அறக்கட்டளை ஆரம்பிச்சு உதவி செய்றார்னு நினைச்ச? என் அம்மா, அப்பா செத்ததுக்குப் பிறகு தான் ஞானோதயம் வந்தது போல ஏதோ பாவம் செஞ்சதால் தான் இரண்டு பேரும் ஒரே நேரத்தில் இறந்துட்டாங்க போலன்னு, புண்ணியக் கணக்கு சேர்க்க, அறக்கட்டளை ஆரம்பிச்சார். மறந்துட்டியா?” என்று ஆத்திரமாகக் கேட்டான் விக்ரமதேவா.
அவன் சொன்ன பிறகு தான் அவளுக்கும் ஞாபகம் வந்தது. உண்மை தான்! சித்தப்பா, தனாம்மா இறந்த பிறகுதான் அறக்கட்டளையைத் தந்தை ஆரம்பித்தார். ஆனாலும் அவ்வளவு வலுவாகக் காதல் விஷயத்தைத் தந்தை மறுப்பாரா?
என் விஷயத்தில் இப்போது சம்மதம் சொன்னாரே? அது எப்படி? அண்ணன் சொன்னது போல அப்பா அப்படிப் பட்டவர் தான் என்றால் ஜித்தன் எப்படித் தங்கள் திருமணத்திற்குச் சம்மதம் வாங்கிருப்பார். தான் தான் தந்தையைச் சரியாகப் புரிந்து கொள்ள வில்லையா? என்று குழம்பினாள்.
அவள் குழம்பிய முகத்தைப் பார்த்தவன் “என்ன உன் மரமண்டையில் ஏறுச்சா? கண்டிப்பா உன் அப்பன் என் காதலுக்குச் சம்மதம் சொல்லிருக்க மாட்டான்…” என்று கடுமையாகச் சொன்னான்.
தந்தையைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியாமல் குழம்பிய விதர்ஷணா அமைதியாக இருந்தாள். இதற்கு அவர் தான் பதில் சொல்ல முடியும் என்று நினைத்துக் கொண்டாள். அதோடு அன்று தன்னிடம் கோபத்தோடு தந்தை பேசும் போது தேவாவை பார்த்து நீயும் காதலிக்கிறியா என்று கேட்டப் போது அவன் இறுகிய முகத்துடன் நின்றது ஞாபகத்தில் வர,
“காதலிச்சேன்! காதலிச்சேன்னு சொல்றியே? யாரை காதலிச்ச? இன்னும் ஏன் அவங்களைப் பற்றி வெளியே சொல்லாம இருக்க? என் அப்பா சம்மதிக்க மாட்டேன்னு சொன்னாலும், உன்னைக் கட்டுப்படுத்த தான் உன் அப்பா, அம்மா இல்லையே, நீயே கல்யாணம் பண்ணிருக்க வேண்டியது தானே? ஏன் இத்தனை வருஷம் ஆகியும் நீ கல்யாணம் பண்ணிக்கலை?” என்று கேட்டாள்.
அவள் கேட்டதும் அவ்வளவு நேரம் அலட்சியமாக இருந்த தேவாவின் முகத்தில் வேதனையில் சாயல் வந்து அமர்ந்தது. அதனைக் கண்டவள் கண்கள் யோசனையுடன் சுருங்கியது.
“அவள் உயிரோடு இருந்தா நான் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கேன். எனக்கு எவன் சம்மதமும் தேவை இல்லைன்னு தூக்கிட்டு வந்தே தாலி கட்டிருப்பேன்…” என்றவன் குரலில் அவளை இழந்த சோகம் வந்து போனது.
அவன் சொன்னதைக் கேட்டுஅதிர்ச்சி அடைந்த விதர்ஷணா “என்ன சொல்ற? அவங்க இப்போ உயிரோடு இல்லையா?” என்று கேட்டாள்.
‘இல்லை’ என்று தலையசைத்தவன், “நாங்க காலேஜ் படிச்சுட்டு இருந்த கடைசி வருஷம் ஒரு ஆக்ஸிடெண்ட்ல என்னை விட்டுப் போய்ட்டா…” என்றான் கரகரத்த குரலில்.
“ப்ச்ச்…! அவங்க உயிரை எடுத்து உன் பாவக்கணக்கை கடவுள் தீர்த்திருக்கக் கூடாது…” என்று பரிதாபப்பட்டாள் விதர்ஷணா.
அவள் சொன்னதைக் கேட்டுப் புருவத்தைச் சுளித்தவன் “என்ன சொல்ற?” இடுங்கிய பார்வையுடன் கேட்டான் தேவா.
“யாரை காரணம் வச்சு நீ உன் அம்மா, அப்பாவை கொன்னயோ, அவங்க கூடவே உன்னை வாழ விடாம கடவுள் செய்துட்டார் பார்த்தியா? அப்பா, அம்மாவை கொன்னதுக்குப் போலீஸில் மாட்டலைன்னு கவலைப் பட்டியே? ஆனா கடவுள் கணக்கைப் பார்! உன்னை விட்டுட்டு உன் வாழ்க்கை துணையா வர வேண்டியவளை இல்லாமல் ஆக்கிட்டார். பாவம் அவங்க! உன்னைக் காதலிச்ச பாவம் அவங்களை இப்படி ஆக்கிருச்சு…” என்றாள்.
அவள் சொன்னதைக் கேட்டு கொதித்தெழுந்தவன் “ஏய்…! என்னடி திமிரா? என்னைக் காதலிச்ச பாவம் தான் அவளைப் பழி வாங்கிருச்சுனு சொல்ற. உனக்கு எவ்வளவு திமிர் இருக்கும்?” என்று மீண்டும் அவளின் கழுத்தைப் பிடித்தான்.
ஆனால் முன்பு போல் இல்லாமல் இப்போது தானும் வலுவாக எதிர்த்த விதர்ஷணா அவனின் கையைப் பிடித்துத் தள்ளி விட்டாள்.
அவன் தள்ளி நின்றதும் “உண்மையைச் சொன்னா எரியுதோ? நீ நல்ல புத்தியா இருந்திருந்தா உனக்கும் நல்லது நடந்திருக்கும். தனாம்மா உன்னை ஆசையா சீராட்டி வளர்த்தும் இப்படி மோசமானவனா வளர்ந்து நிக்கிறனா அதுக்குக் காரணம் எதையுமே நல்லவிதமா யோசிக்காம கெட்டதையே யோசிக்கிற உன் புத்தி தான்.
உன் புத்தி நல்லதை மட்டும் நினைச்சு நல்லதையே செய்துருந்தா நீயும் நல்லவனா ஆகிருப்ப. நீ ஆசைப்பட்ட வாழ்க்கையும் உனக்குக் கிடைச்சிருக்கும்…” என்று கத்தி சொன்னாள்.
அவள் சொன்னதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஓங்கி ஒரு அறைந்திருந்தான் தேவா.
அடி வாங்கிக் கன்னத்தில் கை வைத்து நின்றவள், “நீ இன்னும் அடிச்சாலும் சொல்லுவேன். நீ ஏன் இப்படி மோசமா மாறின?” என்றாள்.
“ஏன்னா நான் தான் முதன்மையா இருக்கணும். என்னை யாரும் டாமினேட் பண்ண கூடாது. நான் தான்! நான் மட்டும் தான் என்னைச் சுத்தி உள்ளவங்களை விடப் பெரியவனா இருக்கணும்…” என்று தானும் கத்தினான் விக்ரமதேவா.
“முதன்மையா இருக்கணும்னா என்ன அர்த்தம்? இதுவரை நீ அப்படி நீ பெரிய இவன்னு காட்டிகிட்டது இல்லையே?” என்று குழம்பிக் கேட்டாள்.
“உன் அப்பன்கிட்டையும், உன் கிட்டயும் வேணும்னா காட்டலைன்னு சொல்லு! என் தொழில் வட்டத்தைப் பொறுத்தவரை நான் தான் இங்கே தலை. எனக்குக் கீழே எத்தனை பேர் வேலை பார்க்கிறாங்க தெரியுமா? நீ நினைக்கிற மாதிரி என் சாப்ட்வேர் கம்பெனியை சொல்லலை. கடத்தல் தொழிலில். அதில் நான் தான் ராஜா…!” என்று திமிராகச் சொன்னான்.
“என் சாப்ட்வேர் கம்பெனி வெறும் வெளி பார்வைக்குத் தான். சும்மா சின்னச் சின்னப் பிராக்ஜெட் மட்டும் தான் ஓடிட்டு இருக்கு. அது எனக்கு இருக்குற இன்னொரு முகம் தெரிய கூடாதுன்னு ஏற்படுத்திக்கிட்ட தொழில்.
“என்னோட லவர் இறந்த பிறகு கொஞ்ச நாள் பைத்தியம் மாதிரி மனசுக்குள்ளே வெந்து போய்த் திரிஞ்சேன். அப்போ ஒருநாள் குடிக்கப் பப்க்கு போனேன். அப்புறம் அதுவே தொடர்கதையாச்சு. அங்கே வச்சு தான் ஒருத்தனை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சது.
அவன் கடத்தல் தொழில் செய்யற ஆள். அவன் கூட ஆரம்பத்தில் சாதாரணமா பேச ஆரம்பிச்சு, அப்புறம் அவன் என்ன வேலை பார்க்கிறான்னு தெரிஞ்சு, மெல்ல, மெல்ல நானும் அவன் ஆளா மாறிட்டேன்.
அந்தச் சமயம் தான் நான் படிப்பை முடிச்சிருந்த சமயம். உங்க அப்பா என் கூடக் கல்லூரியை பார்த்துக்கோ வான்னு கூப்பிட்டப்ப எனக்கு அவர் மேல இருந்த வெறுப்பில் அவர் கூட வேலை பார்க்க பிடிக்கலை. அதனால் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு தள்ளிப் போட்டேன்.
வேலை பார்க்காம இருந்ததில் ஒவ்வொரு விஷயத்துக்கும் உன் அப்பன்கிட்ட கை நீட்டி காசு வாங்க வேண்டி இருந்தது. அது வேற கடுப்பா இருந்தது. இதுக்கு ஏதாவது வழி இருக்கானு பார்த்தப்ப, அந்தக் கடத்தல் காரன் கூட ஒரு விஷயத்தில் நான் கூட இருந்ததில், என் பங்கு காசுனு கொஞ்சம் கொடுத்தான்.
அது ஒன்னும் ஒரு ரூபாய் இல்லை ஒரு லட்சம். கூட வந்ததுக்கே இவ்வளவு காசுனா அவனுக்கு எவ்வளவு கிடைச்சுருக்கும்னு யோசிச்சேன். ஒரு நாள் அவனே சொன்னான். அவனுக்கு அந்த டீலிங்கில் பத்து லட்சம் கிடைச்சதாம்.
அதுவும் அவன் கூட இருந்தவங்க எல்லாம் அவனுக்குக் கொடுத்த மரியாதையைப் பார்த்து எனக்கும் ஆசை வந்துச்சு. இன்னும் அவன் கூடச் சேர்ந்துகிட்டேன். ஒரு ஆறு மாதம் உங்க அப்பாகிட்ட டைம் வாங்கிட்டு அவன் கூட யாருக்கும் தெரியாமல் வேலை பார்த்தேன். சின்னக் குழந்தைகளைக் கடத்தி வெளிநாட்டுக்கு அனுப்பினா நல்லா லாபம் கிடைக்கும்னு தெரிஞ்சுகிட்டேன்.
பிறகு நானும் அவனை மாதிரி தனியா செய்தா என்னனு தோனுச்சு. சில ஆளுங்களை அதுக்கு ஏத்த மாதிரி பிடிச்சுக்கிட்டேன். சில திட்டம் போட்டேன் அதன் படி முதல் வேலையா தனியா சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிக்கப் போறேன்னு உன் அப்பன்கிட்ட சொல்லிட்டு, உங்க கூட ஒரே வீட்டில் இருந்தா உங்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டியது வரலாம்னு தனியா வீடு எடுத்துத் தங்கி கிட்டேன்.
அடுத்து என் ஃப்ரெண்ட்ஸை போய்ப் பார்த்தேன். அவங்க கிட்ட கொஞ்சம் போட்டு வாங்கினதில் அவங்களுக்கும் என் கூடச் சேர விருப்பம் இருந்தது. என்கூடச் சேர்த்துக்கிட்டேன். அப்புறம் சின்னச் சின்ன ப்ராக்ஜெட் மட்டும் எடுத்து வேலை செய்து கொண்டே, ஒருபக்கம் கடத்தல் வேலையையும் ஆரம்பிச்சேன்…”
“சின்னப் புள்ளைகளைப் போய்க் கடத்தி வித்துருக்கயே உனக்கு வெட்கமா இல்ல…? அதனால உனக்கு என்னடா கிடைத்தது? என்று ஆங்காரமாகக் கேட்டாள்.
“என்ன கிடைத்ததா…? பணம்…! பணம்…! சுலபமான வழி… நிறையச் சம்பாத்தியம். அப்படிக் கிடைக்கிற பணத்தை எவன் வேணாம்னு சொல்லுவான்? எனக்கு நிறையப் பணம் வேணும். நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பணம் வருதுனா நான் இன்னும் கூடச் செய்வேன்…” என்றான் தெனாவட்டாக.
“ச்சே…! பிள்ளைகளைக் கடத்தி அதன் மூலமாக வரும் பணம் உனக்கு ஜீரணிக்குமா…?”
“அதெல்லாம் ஜீரணிக்கும். எனக்குப் பணமும் வேணும். பெரிய ஆளாகவும் ஆகணும். அதுக்கு எனக்கு இதுதான் சுலபமான வழி. எனக்குப் பிடிச்சிருக்கு நான் செய்வேன். இதுக்கு மேல அதைப் பத்தி கேட்காதே…” என்று கண்டித்தவன்,
“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா…? நான் எங்க இருந்து எப்படிக் குழந்தைகளைக் கடத்தலாம்னு திட்டம் போட்டப்போ ஒரு நல்ல ஐடியாவை ஏற்படுத்தித் தந்தது யார் தெரியுமா?” என்று புருவம் உயர்த்திக் கேட்டு நிறுத்தினான்.
அவன் வழி மாறிப்போனதை சொல்லும்போதே நடந்த விஷயங்களை நம்பமுடியாமல் நின்றிருந்த விதர்ஷணா அவன் பேச்சை நிறுத்தவும் ‘யார்?’ என்பது போலப் பார்த்தாள்.
“மிஸ்டர்.கருணாகர விக்ரமன்…!” என்று சொல்லி கேலியாகச் சிரித்தான்.
“என்ன சொல்ற? என் அப்பா கடத்தல் விஷயத்தில் என்ன பண்ணினார்?” என்று அதிர்ந்து கேட்டாள்.
“அவர் நேரடியாக எதுவுமே செய்யலை. ஆனால் எல்லாமே அவர்தான் செய்தார்…”
“நீ என்ன சொல்ல வர? எனக்குப் புரியல…!”
“உன் அப்பா புண்ணியம் சேர்க்கணும்னு ஆரம்பிச்சாரே, ஒரு அறக்கட்டளை அதைத்தான் சொல்றேன்…” என்று சொன்னவனைக் குழப்பத்துடன் பார்த்தாள்.
“அந்த அறக்கட்டளை மூலமா அவர் அனாதை இல்லத்திற்கு உதவி செய்ய ஆரம்பிக்க, அதை நான் என் தேவைக்குப் பயன்படுத்திக்கிட்டேன். முதல் வேலையா என் ஆளு ஒரு ஆளை உங்கப்பா ஆரம்பிச்ச அறக்கட்டளையில் வேலைக்குச் சேர்ந்து விட்டேன். அடுத்து அவன் மூலமா அங்க இருந்து லெட்டர்பேடு எடுத்து தயார் செய்து அதை வைத்துக் குழந்தைகளைக் கடத்துவதற்குப் பயன்படுத்திக்கிட்டேன்…” என்று சரவணன், ராஜ் என்று ஷர்வாவிடம் வாக்குமூலம் கொடுத்தவர்கள் சொன்ன விஷயங்களை எல்லாம் ஒன்றுவிடாமல் விதர்ஷணாவிடம் சொன்னவன்,
“இப்படித்தான் எங்கள் கடத்தல் நடந்துகிட்டு இருந்தது. அது மட்டுமில்லாமல் போலீஸ் கிட்ட மாட்டிக்கிட்டா என்ன செய்யணும்னு சரவணன் கிட்ட சொல்லி வைத்திருந்தேன். அதன்படி சரவணன் மூலமாக யார் இதைச் செய்தார்கள்னு போலீஸ் விசாரணை செய்யறப்ப எல்லாம் கைக் காட்டுவது உங்க அப்பாவைத் தான்…” என்று சொன்னான்.
அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து “எங்க அப்பாவை ஏண்டா மாட்டிவிட்ட?” என்று கத்தினாள்.
அவளின் கத்தலை தூசு போலத் தள்ளிவிட்டவன், “ஹா…ஹா…! அது தான் என் ஆட்டம்! நான் பணமும் சம்பாதிக்கணும். அதேநேரம் போலீஸ்கிட்டயும் மாட்டாம இருக்கணும். அதுக்கு என்ன வழின்னு யோசித்தேன். இந்த இடத்தில் உன் அப்பா மீது எனக்கு இருந்த வெறுப்பைப் பயன்படுத்திக்கிட்டேன்.
கௌரவம், கெளரவமுன்னு தலையில தூக்கி வச்சு ஆடி என் வாழ்க்கையையே திசை திருப்பிவிட்ட ஆளை நான் ஏதாவது செய்ய வேண்டாமா? அந்தாளோட தலைக்கனத்தை இறக்கணும்னு நினைச்சேன். போலீஸில் மாட்டி அவமானப்படட்டும்னு நினைச்சேன். அதுக்கு ஏத்த மாதிரி எல்லா ஏற்பாடும் செய்து அந்த ஆளை கைகாட்ட வச்சேன். அவரை அரெஸ்ட் ஆகிறதை பார்க்கப்போகும் நாளுக்காகக் காத்திருந்தேன்.
ஆனால் அது நடக்கல. காரணம்! உன்னோட புருசன் ஷர்வஜித்! என் ஆள் வாக்குமூலம் கொடுத்தும், ஆதாரமும் கைக்கு வந்தும், உன் அப்பன் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கலை. என்னோட ஆளுங்க ஒவ்வொருத்தரா மாத்தி, மாத்தி கைது ஆனப்ப நான் அமைதியா இருந்ததுக்குக் காரணம் உன் அப்பன் மாட்டணும்னுகிற ஒரே காரணத்துக்காகத் தான். ஆனா நான் எதற்காக என் ஆளுங்க மாட்டினாலும் பரவாயில்லைனு பொறுத்துப் போனேனோ அந்த வேலையை மட்டும் உன் புருஷன் செய்யல.
ஏன் இப்படி அமைதியா இருக்கான்னு பார்த்தப்பதான் தெரிஞ்சது. உன் அப்பா ஒருத்தன்கிட்ட மல்லுக்கட்டி வம்பு இழுத்து வச்ச ஆளான கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி நடத்தும் விக்ரம் மீது அவன் கவனம் திரும்பிருச்சுனு.
அவன் யார் தெரியுமா? உன்னையும், உன் புருஷன் பேரையும் சம்பந்தப்படுத்திப் பேப்பர்ல நியூஸ் வர வச்சதே அவன்தான். அவனுக்கு அந்த நியூஸை கொடுத்தது யார் தெரியுமா? நான் தான்…!” என்று அவளை மேலும் திகைக்க வைத்தான் விக்ரமதேவன்.