பனியில் உறைந்த சூரியனே – 40

அத்தியாயம் – 40

“உனக்கு எவ்வளவு தெனாவட்டு இருந்திருந்தா இந்த விக்ரமோட இடத்துக்கே வந்து என்னையவே நோட்டம் விட்டுருப்ப?” என ஆங்காரமாகக் கேட்டவன் தன் எதிரில் இருந்தவனை ஓங்கி அறைந்தான்.

அடி வாங்கிக் கன்னங்கள் கண்ணிப் போன பிறகும் இறுகிய அவனின் உதடுகள் சிறிதும் அசைய வில்லை.

தான் மாட்டிக் கொண்ட வருத்தம் அவனுக்கு நிறையவே இருந்தது. கவியுகனிடம் வேலைக்குச் சேர்ந்த நாளில் இருந்து அவன் இதுவரை பார்த்த எந்த வேலையிலும் மாட்டிக் கொண்டதே இல்லை. அதனால் தான் துணிந்து அவனை இங்கே துப்பறிய கவியுகன் அனுப்பி வைத்தான்.

முதல் முறையாகத் தான் தோற்று விட்டதில் குற்றவுணர்வுடன் இருந்தாலும் நாற்காலியோடு சேர்ந்து கை, கால்கள் கட்டப்பட்டு இருந்த நிலையிலும் கவியுகனுக்குத் தான் இருக்கும் இடத்தை எப்படித் தெரிவிப்பது என்பதில் மட்டுமே அவனின் கவனம் இருந்தது.

அவர்கள் தன்னைத் துரத்தும் போதே தன் கைபேசி வழியாகக் கவியுகனுக்குச் சுருக்கமாகத் தகவல் தெரிவித்திருந்தான்.

ஆனால் தான் மாட்டிக்கொண்ட பிறகு தான் இருக்கும் இடம் பற்றித் தெரிவிக்க முடியாமல் போனதில் குழம்பி போய் இருந்தான்.

அவனைப் பிடித்ததும் முதலில் அவனின் கைபேசியைத் தான் பறித்தார்கள்.

‘தன்னை இவர்கள் வைத்திருக்கும் இடம் புதிது. இதுவரை தங்களுக்குத் தெரியாத இடம். அப்படியிருக்கக் கவியுகன் எப்படி என்னைக் கண்டுபிடித்து இங்கே வருவானோ? இந்த இடத்தைப் பற்றிக் கவிக்கு எப்படித் தகவல் சொல்வது?’ என்று அதே சிந்தனையில் அவன் இருந்த போது மீண்டும் அவன் மேல் விழுந்த அடி கூட அவனுக்கு உரைக்கவே இல்லை.

“விடு விக்ரமா…! போதும்… நிதானத்திற்கு வா…!” என்று அவனைச் சாந்தப்படுத்தினான் அவனின் நண்பன்.

நண்பனின் பேச்சில் நிதானத்திற்கு வந்த விக்ரம் அமைதியாகச் சென்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து எதிரே இருந்தவனையே தீவிரமாகப் பார்க்க ஆரம்பித்தான்.

அவனின் பார்வை எதிரில் இருப்பவனின் மனதையே ஊடுருவிச் செல்வது போல இருக்க, தானும் பதிலுக்குப் பதில் எனப் பார்த்துக் கொண்டிருந்த கவி அனுப்பிய ஆளின் பார்வை ஒரு கட்டத்தில் அவனின் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் தழைய ஆரம்பிக்க, அதைக் கண்ட விக்ரமின் உதடுகள் இகழ்வுடன் சுளித்துக் கொண்டது.

அவன் பிடிபட்டதும் எந்த அளவு தன் கோபத்தை வெளி காட்டினானோ அதை விட அதிகப் பொறுமையுடன் தன்னை ஊடுருபவனின் நிதானத்தில் அவனை நினைத்து உள்ளுக்குள் ஆச்சரியமாக உணர்ந்தான் கவியுகன் அனுப்பி வைத்த ஆளான தியாகு.

“சோ…! என்னை வேவு பார்க்க என் இடத்திலேயே நுழைந்தது மட்டும் இல்லாம நான் பேசியதையே ரிக்கார்ட் பண்ணிருக்க. இதுக்கு உனக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?” எனக் கேட்டுப் புருவத்தை உயர்த்திப் பார்த்தான்.

வார்த்தையாலேயே அவன் மிரட்டியும் தியாகு கொஞ்சமும் அசராமல் அமைதியாக இருக்க, கால் மேல் கால் போட்டு, தன் கையால் ஒரு பக்க கன்னத்தைத் தாங்கி கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்த விக்ரம் “குட்…!” என்றான் மெச்சுதலாக.

‘இப்போது எதற்கு இந்தக் குட்?’ என்பது போலத் தியாகு அவனைக் கேள்வியாகப் பார்க்க, “அந்த ஜித்தன் கில்லாடி தான்! என்னை வேவு பார்க்க நல்ல திடமான ஆளாத்தான் அனுப்பி இருக்கான். அந்த டிடெக்டிவ் சும்மா வெத்து வேட்டு தான். அவனைக் கூட வச்சுக்கிட்டு அந்த ஷர்வஜித் என்னத்தைக் கிழிச்சிற போறான்னு கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டேன்.

ஆனா எதிரியோட மதிப்பை இவ்வளவு குறைவா மதிப்புப் போட கூடாதுனு அந்த ஜித்தன் எனக்கே பாடம் கத்துக் கொடுத்திருக்கான். அவன் கத்துக் கொடுத்த பாடத்துக்கு நான் குருதட்சணை கொடுத்தாகணுமே…” என்று சொன்னவனின் கண்கள் விபரீதமாகப் பளபளத்தது.

அந்தப் பளபளப்பில் இப்போது தியாகுவிற்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. அவன் தைரியசாலி தான். ஆனால் ஒருவன் எதிரில் நின்று கொண்டு தன்னைக் காவு கொடுக்கப் போவது போல் பார்த்ததில் உயிர் பயத்தில் நடுங்கித்தான் போனான்.

“இவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் அருண்?” எனத் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த நண்பனிடம் கேட்டான்.

“உனக்கு என்ன செய்யத் தோணுதோ அதைச் செய் விக்ரமா…” என்று அருண் அமைதியாகப் பதில் சொல்ல, அவனைப் பார்த்து அர்த்தத்துடன் சிரித்தான் விக்ரம்.

பின்பு தியாகுவின் புறம் திரும்பியவன் “உனக்குத் தண்டனை கொடுக்குறதுக்கு முன் எனக்குப் பாடம் கத்துக்கொடுத்த குருவிற்குத் தட்சணை கொடுப்பது தானே நியாயம்?” என்று புருவம் உயர்த்திக் கேட்டவன், கைபேசியை எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்தவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து ‘வேண்டாம்’ என்பது போலத் தலையை அசைத்தான் தியாகு.

அவனைக் கண்டு கொள்ளாமல் தன் காரியத்தில் கண்ணாக இருந்தவன் “விதர்ஷணாவை தூக்கிட்டு எனக்குக் கால் பண்ணு…” என்று உத்தரவு இட்டுவிட்டு கைபேசியை அணைத்தான்.

தன்னையே கண்களில் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து “என்ன தியாகு இதுக்கே பயந்தா எப்படி? இதானே என்னோட ஆரம்பம்! மீதி எல்லாம் போகப் போகப் பார்க்கத்தானே போற…” என்றவன் மேலும் அவனைக் கண்டு கொள்ளாமல் அருணின் புறம் திரும்பியவன்,

“நீ போய் நாம கிளம்புறதுக்கான வேலையைப் பார் அருண். என் பிளானை எல்லாம் அந்த ஷர்வஜித் மாத்தி விட்டுட்டான். அவனுக்கு ஒரு ஆட்டம் காட்டிட்டு நாம கிளம்பிருவோம்…” என்று அவனை அனுப்பி வைத்தவன், அங்கே மேஜையின் மீது இருந்த கத்தியை எடுத்துக் கொண்டு கண்கள் ஜொலிக்கத் தியாகுவை நோக்கி வந்தான்.


ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தபடி உல்லாசமாக வேக நடைபோட்டுத் தங்கள் அறைக்குள் வந்த விதர்ஷணாவின் நடை எதிரே வந்த ஷர்வாவின் மீது மோதி நின்றது.

வேகமாக வந்து தன் மீது மோதிய மனைவியைத் தடுத்து நிறுத்திய ஷர்வா, “என்ன விதர்ஷணா, எதுக்கு இவ்வளவு வேகம்? ரொம்பச் சந்தோஷமா வேற இருக்க… என்ன விஷயம்?” என்று விசாரித்தான்.

“இன்னைக்குக் காலேஜ் போகலாம்னு இருக்கேன். அதுதான் சந்தோஷம்…” என்று சொன்னவளை வியப்பாகப் பார்த்தான்.

அவனின் வியப்பை பார்த்து “என்ன அப்படி ஆச்சரியமா பார்க்குறீங்க?” என்று கேட்டாள்.

“உனக்குப் படிக்க அவ்வளவு பிடிக்குமா? காலேஜுக்கு இவ்வளவு ஜாலியா கிளம்புற…”

“படிக்கப் பிடிக்கும் தான். ஆனா என் சந்தோஷத்திற்குக் காரணம் காலேஜுக்குப் போய்ப் படிக்கப் போறதுக்காக இல்லை…”

“பின்ன வேற எதுக்கு?”

“அப்பாவை பார்க்க போறேன். அதுதான் சந்தோஷத்திற்குக் காரணம்…” என்று சொன்னவளை ‘இதுக்கு எதுக்கு இவ்வளவு சந்தோசம்?’ என்பது போலக் கேள்வியாகப் பார்த்தான்.

அவனின் கேள்வியான பார்வையைப் புரிந்து கொண்டவள் “ரொம்ப ஓவரா நான் ரியாக்ட் பண்றேன்ல…” என்று கேட்டவள், அவனின் பதிலை எதிர்பார்க்காமல், “எனக்கு அப்பாவை ரொம்பப் பிடிக்கும். அவர் என்னிடம் பேசாமல் ஒரு நாளும் இருந்தது இல்லை. வெளியூர் போனால் கூட எனக்காகக் கொஞ்ச நேரம் ஒதுக்கி என்கிட்ட பேசுவார்.

ஆனா என்னோட காதல் விஷயம் தெரிஞ்ச பிறகு என்கிட்ட பேசுறதையே குறைச்சுக்கிட்டார். ஆனா அப்படி இருக்கும் போதும் வேலைக்காரர்கள் மூலமா என்மீது அவருக்கு இருக்கும் அவரோட அக்கறையை வெளிக்காட்டி விடுவார்.

அப்படிப்பட்ட அப்பா நம்ம கல்யாணம் முடிஞ்ச பிறகு ஒரு நாளும் பேசலைன்னு எனக்கு ரொம்ப வருத்தமா இருந்தது. ஆனா இன்னைக்கு நான் வீட்டுக்குப் போன் பண்ணி அங்கே வேலை செய்யும் சமையல் காரம்மாவிடம் பேசும் போது, அப்பா என்னை ரொம்ப மிஸ் பண்ணுவதாகச் சொன்னாங்க.

அதோட நான் வீட்டில் இருக்கும் போது நான் சரியா சாப்பிட்டேனா, இல்லையான்னு சமையல் அம்மாகிட்ட வழக்கமா விசாரிக்கிறது போல, இப்போ நான் வீட்டில் இல்லை என்பதையே மறந்து அவங்ககிட்ட விசாரிச்சுருக்கார். அவங்க இதையெல்லாம் சொன்னதும் எனக்கு இப்பவே அப்பாவை பார்க்கணும்னு ரொம்ப ஆவலா இருக்கு.

அதுதான் நம்ம கல்யாணத்துக்காக எடுத்திருந்த ஒரு வார லீவை கேன்சல் பண்ணிட்டு இன்னைக்கே காலேஜுக்குக் கிளம்பிட்டேன். என்னமோ என் உள் மனசு அப்பா இன்னைக்கு என்கிட்ட பேசுவாருன்னு சொல்லுது. அதுதான் என்னை அறியாமையிலேயே ரொம்பச் சந்தோசத்தை எனக்குக் கொடுத்திருக்கு. நான் போய் அப்பாவை பார்த்துட்டு வர்றேன்…” என்று சந்தோசமாக ஷர்வாவிடம் சொன்னாள்.

தந்தை தன்னிடம் பேசுவார் என்ற நம்பிக்கையில் சந்தோசமாக ஆர்பரிக்கும் மனைவியை ஆதுரமாகப் பார்த்தான் ஷர்வா.

அவனின் கண்கள் கனிவுடன் மனைவியைப் பார்த்துக் கொண்டிருக்க, முகம் முழுவதும் பொங்கிய உணர்ச்சியுடன் நின்றிருந்த விதர்ஷணா, கல்லூரிக்குக் கிளம்புவதற்காக நகரப் போனவள், அப்பொழுதுதான் தாங்கள் இருவரும் நின்றிருந்த நிலையைக் கண்டாள்.

தான் மோதிய போது தன்னைப் பிடித்து நிறுத்த தன் தோளின் மீது அவன் வைத்திருந்த கை இன்னும் அங்கேயே இருந்தது.

அதுமட்டுமில்லாமல் அவனின் இன்னொரு கை அவளின் மற்றொரு கையின் மணிக்கட்டை பிடித்துக்கொண்டிருந்தது‌. அவனின் கை பிடிப்பில் தான் இவ்வளவு நேரம் நின்றிருந்திருக்கிறேன் என்று நினைத்தவளுக்கு இதுவரை தெரியாத சங்கடம் வந்து அவளை ஒட்டிக்கொண்டது.

கழுத்து அருகில் இருந்த அவன் கை ஏற்படுத்திய குளிர்ச்சி தன் தோளில் வழியாகவே தன் உடல் முழுவதும் பரவியது போல் உணர்ந்தாள். அவனாக இவ்வளவு நெருக்கத்தில் சாதாரணமாகத் தொடும் உரிமை தொடுகை… அவளின் மேனி எங்கும் சிலிர்ப்பை ஓட வைத்தது.

சில நிமிடங்கள் அச்சிலிர்ப்பை அனுபவித்து நின்றவள் பிறகுதான் அவனுக்கு இருக்கும் ஒதுக்கமும், பயமும் ஞாபகம் வந்து ஆராய்ச்சியாக அவனை நிமிர்ந்து பார்த்தவள் முகம் ஆச்சரியத்தைப் பிரதிபலித்தது.

அவளின் ஆச்சரியத்திற்குக் காரணம் ஷர்வாவின் இயல்பான புன்னகை முகம் தான்.

இத்தனை அருகாமையில் ஷர்வா இயல்பாக நிற்பதே அதிசயம் என்றால் புன்னகை முகமாக நிற்பது அவளுக்கு அதை விட அதிசயமாகத் தெரிந்தது.

தன் செவ்விதழ்களை லேசாகப் பிளந்து தன்னை அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் மனைவியைப் பார்த்து ஷர்வாவின் புன்னகை இன்னும் அதிகமாகியது.

“எதுக்கு என்னை இவ்வளவு ஆச்சரியமா பார்க்கிற?” என்று கேட்டுக்கொண்டே அவள் நெற்றியுடன் தன் நெற்றியை லேசாக முட்டினான்.

அவனின் அச்செயலில் விதர்ஷணாவின் வாய் இன்னும் தான் பெரிதாக விரிந்தது.

அதைக் கண்டு “ஹா… ஹா…!” எனச் சத்தம் போட்டே சிரித்துவிட்டான் ஷர்வா.

அவளின் உடல் சிலிர்த்து நின்ற போதே தான் அவளைப் பிடித்திருந்த விதத்தை ஷர்வா உணர்ந்துவிட்டான். அடுத்த நிமிடம் சட்டெனத் தன் கையை எடுக்கப் போனவன் மனைவி நின்ற மோன நிலையைக் கண்டதும் அந்த எண்ணத்தைக் கைவிட்டு தான் சாதாரணமாக இருப்பதாகக் காட்டிக்கொண்டான்.

தன்னுடைய இந்த ஒதுக்கம் அவளை வருந்த வைக்கும் என்று நினைத்துதான் அப்படிக் காட்டிக் கொள்ள நினைத்தான். ஆனால் விதர்ஷணா நின்ற மோன நிலையையும், நொடிப் பொழுதில் அவள் முகத்தில் தெரிந்த உணர்ச்சிக்குவியலும் அவனையும் ஏதோ செய்ய, அவளுக்காக என்று நினைத்துச் சாதாரணமாக நின்றவனைத் தன்னை அறியாமலேயே இயல்பான நிலைக்கு அவனின் உடல் மாற்றிக் கொண்டது.

விதர்ஷணாவின் காதல் அவனைத் தீண்டி, கொஞ்சம் கொஞ்சமாக அவனை மாற்ற ஆரம்பித்திருந்தது.

இன்னும் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மனைவியின் கவனத்தைத் திருப்ப, “உனக்கு ஒரு கிப்ட் வாங்கினேன் விதர்ஷணா…” என்று சொல்லிக்கொண்டே மெல்ல நகர்ந்து அங்கிருந்த மேஜையின் மீதிருந்த ஒரு சின்னப் பெட்டியை எடுத்துக் கொண்டு வந்தான்.

“என்ன கிப்ட்?” என்று ஆர்வமாகக் கேட்டாள். கணவனின் முதல் பரிசல்லவா? தன்னால் அவளிடம் ஒரு பரபரப்பு வந்து ஒட்டிக்கொண்டது.

“பிரிச்சு பார்…!” என்று அவளின் கையில் கொடுக்க, ஆர்வமாக வாங்கிப் பிரிக்க ஆரம்பித்தாள்.

“உன் அளவுக்கு எல்லாம் நான் காஸ்ட்லியா வாங்கலை டா…” அவள் அதிகம் எதிர்பார்த்து ஏமாந்து விடக் கூடாது என்று முன்னெச்சரிக்கையுடன் சொன்னான்.

பெட்டியை சுற்றி இருந்த அழகிய காகிதத்தைப் பிரித்துக் கொண்டிருந்தவள் கைகள் அப்படியே நிற்க, தலையை மட்டும் உயர்த்தி அவனைப் பார்த்து “இந்தப் பாக்ஸுக்குள்ள நீங்க ஒரு ரூபாய்க்கு ஏதாவது வாங்கி வச்சுத் தந்திருந்தா கூட நான் இதே ஆர்வத்தோடு தான் பிரிச்சுப் பார்த்திருப்பேன்.

எனக்கு இதில் இருக்கும் பொருளோட விலை முக்கியம் இல்லை. இதை யார் வாங்கித் தந்தாங்க என்பது தான் முக்கியம். இதை வாங்கிக் கொடுக்குறது நீங்க. அந்த ஒரு காரணமே போதும். நான் இவ்வளவு ஆர்வமா இருக்குறதுக்கு…” என்றவள் மீண்டும் குனிந்து பெட்டியைப் பிரிக்க ஆரம்பித்தாள்.

சர்வசாதாரணமாகச் சொல்லிவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தவளை கண்ணில் காதல் பெருக பார்த்த ஷர்வாவின் கைகள் அவளை அணைத்துக் கொள்ளப் பரபரத்தது.

முரட்டுதனமாக அணைத்து விடுவோமோ என்று பயந்தவன் தன் இருகைகளையும் கால்ச்சட்டையின் பையினுள் விட்டுக்கொண்டான்.

அவனின் தவிப்பை உணராமல் பரிசு பெட்டியை பிரித்தவள் “வாவ்…! ஒரு பாக்ஸ்ல இரண்டு கிப்ட். இரண்டுமே சூப்பரா இருக்கு ஜித்தா…” என்று குதூகலித்தவள் “நீங்களே போட்டு விடுங்க…” எனத் திருப்பி அவனிடமே நீட்டினாள்.

அவள் கொடுத்ததை வாங்க கை நீட்டியவனின் வலது கை மெல்ல நடுங்கி கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்தவள் அவனின் முகத்தை ஆராய்ந்தாள்.

கண்களில் காதலும், முகத்தில் மென்மையும் கலந்து இருந்தவனின் முகம் அவளைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. வேதியைப் பற்றி நினைத்து ஏதாவது பதட்டத்தில் தான் அவன் கைகள் நடுங்கியதோ என்று எண்ணியவளுக்கு அவன் முகமே அப்படி இல்லை என்று பட்டியம் கூற, புரியாமல் முழித்தவள்,

“என்னாச்சு ஜித்தா? உங்க கை ஏன் இப்போ நடுங்குது? வேதியை ஞாபகப்படுத்துற மாதிரி ஏதாவது செய்துட்டேனா?” என்று பரிதவிப்புடன் கேட்டாள்.

‘உன்னை முரட்டுத்தனமாக அணைத்து விடுவேனோ என்ற பயத்தில் என் கை நடுங்குகிறது’ என்று அவளிடம் சொல்லமுடியாமல் மனதோடு சொல்லிக்கொண்டவன், அவளின் பரிதவிப்பை பார்த்து இதமான புன்னகையுடன் “ஒன்னும் இல்லடா…! சும்மா கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்…” என்று சாதாரணக் குரலில் சொல்லி “கொடு… போட்டு விடுறேன்…” என்று அவள் கையில் இருந்த பரிசை வாங்கினான்.

அவனின் சமாளிப்பை நம்ப முடியாமல் “என்னனு சொல்லுங்க ஜித்தா. காரணம் இல்லாம இப்ப ஏன் கை நடுங்குது?” சிறிது பதட்டத்துடன் கேட்டாலும் அழுத்தமாகவே கேட்டாள்.

அவளின் பதட்டத்தைப் பார்த்து தன் நிலையை மெல்ல சொன்னான்.

“ஓ…! ஆனா இதில் ஏன்‌ இவ்வளவு தயக்கம் ஜித்தா? கண்டிப்பா நீங்க முரட்டு தனமா நடந்துக்க மாட்டீங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு. அப்படியே ஒருவேளை நீங்க இறுக்கினாலும் நான் ‌தாங்கிப்பேன்…” என்று மெதுவான குரலில் சொன்னாள்.

“இல்லைடா… வேண்டாம்…” என்று அவனின் வாய் மறுத்தாலும் அவனின் மனம் வேண்டும் என்று அடம் பிடித்தது. ஆனால் அவனின் பயம் அவனைப் பயமுறுத்த தயங்கி நின்றான்.

தயக்கத்துடன் கூடிய கணவனின் நிலையைப் பார்த்து விதர்ஷணாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

துடுக்குத்தனம் நிறைந்தவளாக இருந்தாலும் தானாக முதலில் அணைக்கவும் தயக்கமாக இருந்தது. ஆனாலும் அப்பட்டமாகத் தெரிந்த அவனின் பரிதவிப்பையும், நடுக்கத்தையும் பார்த்துக் கொண்டு அமைதியாகவும் இருக்க முடியவில்லை.

அதனால் தன் தயக்கத்தை ஒதுக்கி வைத்து “நா… நானே…” என்று வார்த்தைகள் தடுமாறச் சொன்னவள் அவனை அணைக்கக் கைகளை உயர்த்த, அதற்கு முன் கணவனின் அணைப்பில் இருந்தாள் விதர்ஷணா.

தான் தயங்கி மனைவியையும் தவிக்க வைக்கிறோம் என்று உணர்ந்த ஷர்வா அவளை இழுத்து அணைத்திருந்தான்.

மென்மையான அணைப்பு!

அவளைத் தான் எந்த விதத்திலும் காயப்படுத்தி விடக் கூடாது என்று எண்ணம் மனம் முழுவதும் ஓட அதைத் தன் அணைப்பில் காட்டினான்.

ஒவ்வொரு செயலின் மூலமும் தன்னிடம் அவள் காட்டும் காதல் அவனை அடியோடு சாய்த்துக் கொண்டிருந்தது. விதர்ஷணாவின் மனமும் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.

‘தான் தயங்குகிறோம் என்று தெரிந்ததும் அவனின் தயக்கத்தை உடைத்துக் கொண்டு வந்து விட்டானே’ என்று மனம் மகிழ கணவனின் அணைப்பை சுகமாக ஏற்றுக் கொண்டாள்.

சில நிமிடங்களுக்குப் பிறகு மெல்ல விலகிய ஷர்வா “தேங்க்ஸ் டா…” என்று மென்மையாக உதிர்த்து விட்டு, தன் கால் சட்டையில் போட்டிருந்த பரிசை திரும்ப எடுத்து மனைவியின் கையைப் பூப்போலப் பற்றினான்.

சிறிது வெட்கத்தைத் தாங்கியிருந்த அவளின் முகத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டே முதலில் அவளுக்காக ஸ்பெஷலாக வாங்கிய கை கடிகாரத்தை அணிந்து விட்டவன், “எப்படி இருக்கு விதுமா? உனக்குப் பிடிச்சுருக்கா?” என்ற அவனின் கேள்வியில் நடப்பிற்கு வந்தவள்,

“ரொம்பப் பிடிச்சிருக்கு ஜித்தா. நான் எப்பவும் லேடிஸ் வாட்ச் மாதிரி மெல்லிசா இல்லாம, ஜென்ட்ஸ் வாட்ச் மாதிரி கொஞ்சம் கணமா தான் வாங்குவேன். என்னோட விருப்பத்தைக் கவனிச்சு வச்சு அது மாதிரியே அழகா வாங்கியிருக்கீங்க. ஐ லைக் இட்…!” என்றாள் சந்தோசமாக.

அவளின் சந்தோஷம் அவனையும் தொற்றிக்கொள்ளத் தானும் மகிழ்ந்தவன் “இது வெறும் வாட்ச் மட்டும் இல்லைடா. இதோ சைட்ல வழக்கமான பட்டன் கூட இன்னொரு பட்டன் இருக்கு பாரு. அதைப் பிரஸ் பண்ணு…” என்றான்.

அவன் சொன்ன பிறகு தான் இன்னொரு பட்டனும் இருப்பதைக் கவனித்தாள். அதை அழுத்தியதும் மெல்லிய தகடு போல வெளியே வந்தது.

அதனுள் கைபேசி திரை போலக் கண்ணாடி தெரிய அதை ஆச்சரியமாகப் பார்த்தவள், “வாவ்…! இது என்ன இப்படி இருக்கு? இப்படி ஒரு ஸ்கிரீன் இருப்பதே வெளியே தெரியலையே. இதை எப்படி யூஸ் பண்றது?” என்று கேட்டாள்.

“அந்த ஸ்கிரீனை டச் பண்ணினா போன் போல யூஸ் பண்ணலாம். இதில் GPS, ரெக்கார்ட் வசதியும் இருக்கு. நீ வீட்டை விட்டு வெளியே போன பிறகு உனக்கு எதுவும் ஆபத்து வந்தா லெப்ட் சைட் ஒரு பட்டன் இருக்கு பாரு அதை க்ளிக் பண்ணு. அது என் போன் கூடக் கனெக்ட் ஆகியிருக்கு. அதனால் அதை க்ளிக் பண்ணினா எனக்குப் போனில் அலர்ட் காட்டும். இது வெறும் வாட்ச் மட்டும் இல்லை. ஒரு பாதுகாப்புக் கருவியும் கூட…” என்றவன் மேலும் அந்தக் கைக்கடிகாரத்தை எப்படி எல்லாம் உபயோகிக்க முடியும் என்று விளக்கி கூறினான்.

“வெறும் வாட்சா மட்டும் இல்லாம என் சேப்டியை யோசிச்சு இவ்வளவு அழகா ஒரு கிப்ட் வாங்கிட்டு இதைப் போய்க் காஸ்ட்லி இல்லனு சொல்லிட்டிங்களே ஜித்தா. இது தான் பெஸ்ட் கிப்ட்…” என்றவளுக்கு அவனின் அக்கறை மனதை நெகிழ்த்தியது.

அவள் அந்த மகிழ்வில் இருந்து மீளும் முன் அவளின் மோதிர விரலை பிடித்தவன் தன்னுடைய இன்னொரு பரிசான அழகிய வேலைபாடு அமைந்த மோதிரத்தை மென்மையாக விரலில் நுழைத்துப் போட்டு விட்டவன், தன் கையை அகற்றாமல் மோதிரத்தோடு சேர்த்து விரல் முழுவதையும் பொக்கிஷத்தைத் தீண்டுவது போல ரசனையுடன் தீண்டினான்.

கணவனின் உரிமை தீண்டலில் கரைந்து கொண்டிருந்தாலும் இந்தச் சிறிது நேரத்தில் அவனின் கை நடுக்கம் முற்றிலும் நின்றிருந்ததை ஆச்சரியத்துடன் உள் வாங்கிக் கொண்டாள்.

ஷர்வா அவளை அணைத்த நொடியில் இருந்தே தன் கை நடுக்கத்தையே மறந்திருந்தான். நடுக்கம் இந்த நேரத்திற்குள் மெள்ள, மெள்ள குறைந்து பின் நின்றது கூட அவனின் கவனத்தில் இல்லை.

விதர்ஷணாவின் மென்மையும், அவளிடம் நொடிக்கு நொடி வந்து போகும் உணர்வுகளும் மட்டுமே அவனின் மனதை ஆக்கிரமித்திருந்தது.

சில நொடிகளுக்குப் பிறகு தன் உணர்விற்கு வந்தவன் “பிடிச்சிருக்கா?” என்று குரல் கரகரக்க கேட்டான்.

தானும் உணர்வில் கட்டுண்டு இருந்தவள் வார்த்தைகளாகப் பேசமுடியாமல், “ம்ம்…” என்ற ஒலியை மட்டும் பதிலாகத் தந்தாள்.

அம்மோதிரம் கம்பி வலைகளாக வளைந்து நெளித்து இதய வடிவில் முடிவதுபோல் அமைத்திருந்தது. அவ்வடிவே பூக்கோலம் போட்டது போல அழகாக இருக்க, அதை ரசித்ததை விடத் தன் ஜித்தாவின் வருடலை அதிகம் ரசித்தாள் விதர்ஷணா.

நிமிடங்கள் கடந்த நிலையில் முதலில் சுதாரித்த ஷர்வா, “ஓகேடா விதர்ஷணா… உனக்குக் காலேஜுக்கு டைம் ஆகிருச்சு. நீ கிளம்பு…! கவனமா போயிட்டு வா…! கொஞ்ச நாளைக்குக் காலேஜ் முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வந்துரு. அப்படியே ஒருவேளை வெளியே போக வேண்டிய வேலை வந்துச்சுன்னா மறக்காம எனக்கு இன்பார்ம் பண்ணுரு…” என்றான்.

அவளின் பத்திரத்தைப் பற்றி அவன் மிகவும் கவலைப்படுவதாகத் தோன்ற “நீங்க என்னை நினைத்து இவ்வளவு கவலைப்படத் தேவையில்லை ஜித்தா. நான் கவனமா தான் இருப்பேன். நீங்க உங்க கேஸ் விஷயத்தை நிம்மதியா பாருங்க…” என்று தைரியமாகச் சொன்னாள்.

மனைவிக்கு அத்தனை விளக்கங்கள் கொடுத்து வைத்திருந்தாலும் ஏனோ ஷர்வாவின் மனது சமாதானமடைய மறுத்தது. அதனாலேயே மீண்டும், மீண்டும் அவளிடம் அவளின் பத்திரத்தைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொன்னான்.

சிறிது நேரம் இருவரும் பேசியிருந்து விட்டு அவரவர் வேலையைப் பார்க்க கிளம்பினர்.


கல்லூரிக்குச் சென்று தோழிகளின் வாழ்த்து மழையிலும், கிண்டல், கேலியிலும் நனைந்து வெளியில் வந்த விதர்ஷணாவிற்கு அடுத்து தன் தந்தையைக் காணப்போகும் ஆவல் மிகுதியாக இருக்க, இடைவெளியின் போது அவரைக் காணச் சென்றாள்.

கல்லூரி சம்பந்தமான விஷயம் பேசப் போவது போல அவரிடம் அனுமதி கேட்டவளுக்கு அது கிடைக்குமோ என்று சந்தேகம் இருந்தது.

ஆனால் அவளின் சந்தேகத்திற்குத் தேவையே இல்லை என்பது போலச் சிறிது நேரத்திலேயே அனுமதி கிடைக்கச் சந்தோஷத்துடன் உள்ளே சென்றாள்.

உள்ளே நுழைந்த மகளின் முகத்தை முதலில் ஆர்வமாகப் பார்த்த கருணாகரன் பின்பு சட்டெனத் தன் பாவனையைக் கடுமையாக மாற்றிக் கொண்டு “என்ன விஷயம்?” என்று விசாரித்தார்.

அந்த முக மாற்றத்தை விதர்ஷணாவும் நொடியில் கண்டு கொண்டாள். ஆனால் காணாதது போல “உங்க கிட்ட ஒரு கம்ளைண்ட் பண்ண வந்தேன் சேர்மன் சார்…” என்று இழுத்து நிறுத்தினாள்.

“என்ன கம்ளைண்ட்?”

“அது வந்து சார் காலையில் கேண்டின்ல ஒரு சமோசா வாங்கிச் சாப்பிட்டேன் சார். புதுசா போட்ட சமோசான்னு சொல்லித்தான் வித்தாங்க சார். ஆனா அது புதுசு இல்லை சார். நேத்து போட்ட பழைய சமோசாவை புதுசுனு சொல்லி ஏமாத்தி கொடுத்துட்டாங்க சார். இதுக்கு நீங்க தான் ஆக்ஷன் எடுக்கணும் சார்…” என்று பாவம் போல முகத்தை வைத்துக்கொண்டு அப்பாவியாகச் சொன்ன விதர்ஷணாவை செந்தணலாகப் பார்த்து வைத்தார் கருணாகரன்.

அவரின் பார்வையைப் பொருட்படுத்தாமல் அதே அப்பாவி முகத்துடன் நின்றிருந்தாள்.

மகள் தன்னைப் பேசவைக்க ஒன்றுமில்லாத காரணத்தை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறாள் என்பதை உணர்ந்தவர் “நாளைக்குப் புதுசா சமோசா போட்டு தர சொல்றேன். இப்ப போய்ப் படிக்கிற வேலையைப் பார்…!” என்று முறைத்துக் கொண்டே சொன்னார்.

“நாளைக்கு இல்லை சார். எனக்கு இன்னைக்கே புதுசா போட்ட சமோசா வேணும். நீங்க இப்பயே கேன்டினுக்குக் கால் பண்ணி சொல்லுங்க சார்…” என்று விடாமல் சொன்னவளை பார்த்து “விதர்ஷணா…” எனக் கடுப்புடன் அழைத்தார்.

“சார்…” என்று இழுத்து அழைத்தவளை “என்ன விளையாட்டுத் தனம் இது? இந்தக் காலேஜ் சேர்மனோட பொண்ணு நீ….! நீ தான் மத்த ஸ்டூடன்ட்ஸுக்கு எடுத்துக்காட்டாய் இருக்கணும். அதை விட்டுட்டுச் சமோசா சரி இல்ல, சாப்பாடு சரியில்லைன்னு வந்து தேவையில்லாம டயத்தை வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்க. போய்ப் படிக்கிற வேலையைப் பார். உன் அப்பாகிட்ட பேசணும்னா வீட்டுக்கு வா…! உன் அப்பா உன்கிட்ட பேசுவார்…” என்று அவளுக்குத் தேவையான பதிலை கருணாகரன் சொல்ல, விதர்ஷணாவிற்குச் சந்தோசத்தில் ஆர்ப்பரிக்கத் தோன்றியது.

“தேங்க்ஸ் பா…! ரொம்பத் தேங்க்ஸ்…!” சார் என்று அழைப்பதை விட்டுவிட்டு, அப்பா என்று அழைத்துத் தன் நன்றியை சொன்னவள், அவர் தன்னிடம் தந்தையாகப் பேச சம்மதம் சொல்லிவிட்டார் என்ற சந்தோஷத்தில் அவளின் கண்கள் கலங்க ஆரம்பித்தது.

அதைக் கண்ட கருணாகரனின் கண்களும் மென்மையைப் பிரதிபலித்தது. அதைக் கண்டு விட்டு திருப்தியுடன் அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

வெகு நேரம் அதே சந்தோஷம் விதர்ஷணாவின் மனதை ஆக்கிரமித்து இருந்தது. மாலையில் அந்தச் சந்தோஷத்தைக் கணவனிடம் பகிர்ந்து கொள்ளக் கல்லூரியை விட்டு வெளியேறியவளை “ஹலோ விதர்ஷணா…!” என்ற குரல் தேங்கி நிற்க வைத்தது.

குரல் வந்த திசையில் திரும்பி பார்த்த விதர்ஷணா சிறிது நேரம் கடந்த நிலையில் கடத்தப்பட்டிருந்தாள்.

அவள் கடத்தப்பட்ட சில மணிநேரத்திற்கு முன்புதான் தியாகு மாட்டிக்கொண்ட செய்தி ஷர்வாவை வந்தடைந்திருந்தது.

தியாகுவை காப்பாற்ற முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதே விதர்ஷணாவும் காணாமல் போனதாகக் கிடைத்த செய்தியும் வந்தடைய, “உன் முகத்திரை கிழியும் நேரம் வந்துவிட்டது விக்ரமதேவா…!” என்று கோபத்துடன் கர்ஜித்தான் ஷர்வஜித்.