பனியில் உறைந்த சூரியனே – 38

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 38

உன்னுடைய அன்பு தான் சூரியன் போலத் தகித்த என் மனதை பனியாய் குளிர வைத்தது என்று ஷர்வா சொல்ல “எப்போ இருந்து உருக ஆரம்பிச்சீங்க?” என ஆர்வமாகக் கேட்டாள் விதர்ஷணா.

“எப்போ இருந்துன்னு எல்லாம் உறுதியா தெரியாதுடா. ஆனா அம்மாகிட்ட உன் காதல் எப்படிப்பட்டதுனு நீ சொல்லிட்டு போனதே என் மனதை அதிகமா தாக்கியது. அன்னைக்கு என் மனசு ரொம்பவே தடுமாறிப் போயிருந்தது. இல்லை என் வாழ்க்கையில் காதல், கல்யாணத்துக்கு எல்லாம் இடம் இல்லைனு எனக்கு நானே சொல்லி மனசை இறுக்கி பிடிச்சுக்கிட்டேன்.

ஆனா அடுத்தடுத்து நீ காட்டின நேசம் மட்டும் இல்லாம ஒரு கட்டத்தில் நீ என்னை இப்பயே கணவன் ஸ்தானத்தில் வச்சு பார்க்கிறனு தெரிஞ்சதும் உண்மையில் ஆடிப் போய்ட்டேன்.

அப்படி உன் மனசு நினைக்கிற நிலைக்கு வந்திரக் கூடாதுனு தான் உன் மேல அளவுக்கு அதிகமா வெறுப்பா இருக்குற மாதிரி உன்னைப் பார்க்கிற ஒவ்வொரு முறையும் காட்டிப்பேன். ஆனா அதையும் தூசு போலத் தட்டி விட்டுட்டு திரும்ப உற்சாகமா வந்து நிற்ப பார்! ‘என்ன அன்பு டி உன் அன்பு’ன்னு உன்கிட்ட மனசுக்குள்ளேயே கேட்டுப்பேன்.

உன்னை முழுசாக வெறுக்கவும் முடியாமல், உன்னை ஏத்துக்கவும் முடியாமல் நான் எடுத்து வச்சிருந்த முடிவு என்னைத் திண்டாட வச்சது. அன்னைக்கு நீ கோபமா வந்து அகிலன் விஷயம் பேசி என்னைத் திட்டினியே? என்னை விரும்புறவ என்னைப் புரிஞ்சுக்காம குறை சொல்ல வந்துட்டாளேனு தான் வேதி விஷயத்தைச் சொன்னேன். நீ கண்டு பிடிச்சது சரி தான். இதுக்கு முன்னாடி தயாவுக்குத் தான் இந்த விஷயம் சொல்லியிருக்கேன்.

ஆனா உன்னிடம் சொன்ன மாதிரி இவ்வளவு விளக்கமா என் மனநிலையோடு எல்லாம் அவனிடம் சொன்னது இல்லை. உன்னிடம் மட்டும் தான் என் மன உணர்வுகளோட சேர்த்துச் சொல்லியிருக்கேன்…” என்று அவன் சொல்ல விதர்ஷணாவிற்கு மனம் நெகிழ்ச்சியாக இருந்தது.

அவனின் உணர்வுகளை அவளைத் தவிர வேறு யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லையே. அதிலேயே அவனின் மனதில் தனக்கான இடம் எத்தகையது என்று நினைத்துப் பார்த்தவளின் மனம் நெக்குருகி நின்றது.

தன் மீதான அவனின் அதீத காதலை சொல்ல இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா என்ன? கண்கள் பனிக்க அதில் காதலும் நிறைந்திருக்கப் பொங்கிய உணர்ச்சி பிரவாகத்துடன் கணவனைப் பார்த்தாள்.

அவளிடம் தன் மனதை எல்லாம் கொட்டி விட முடிவெடுத்தவன் போல ஷர்வா நிறுத்தாமல் பேசிக்கொண்டே போனான்.

“அன்னைக்குப் பேப்பரில் உன் பேரு வந்ததும் எவ்வளவு துடிச்சு போனேன் தெரியுமா? உன் பேருக்குக் களங்கம் வர வைக்கப் பார்க்கிறாங்களேன்னு அவ்வளவு ஆத்திரம். அந்த நியூஸ் எழுதினவன் இப்போ எப்படி இருக்கான் தெரியுமா?” என்று கேட்டு நிறுத்த,

“எப்படி?”

“கையில் மாவு கட்டோடு…” என்றான் அமையதியாக.

“வாட்…! இது எப்போ?”

“அன்னைக்கே…” என்றவன் தோளை குலுக்கிக் கொண்டான்.

“ஓ…! எனக்காகவா? ஆனா அவன் யாரு? எதுக்கு என் பேரை கெடுக்க நினைக்கணும்?”

“இந்த இடத்தில் நீ ஒரு விஷயம் புரிஞ்சுக்கணும் விதர்ஷணா. உன் இடத்தில் வேற பொண்ணு பெயரை போட்டு இப்படிக் களங்கம் விளைவிக்க முயலும் நியூஸ் எனக்குக் கிடைச்சாலும் அப்பவும் நான் இதேதான் செய்வேன்…” என்று சொல்லவும், ‘புரிகிறது’ என்னும் விதமாகத் தலையை அசைத்தவள் “இப்படி நீங்க சொல்வதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் ஜித்தன் பொண்ணுங்களுக்கு நல்லது செய்றாருன்னு எனக்குச் சந்தோஷம் தான்…” என மகிழ்ச்சியுடனே சொன்னாள்.

அவளின் இந்தப் புரிதல் அவனுக்குப் பிடித்திருந்தது. தன் மகிழ்வை தன் கைகளுக்குள் இருந்த அவளின் கையை அழுத்தி விட்டுக் காட்டினான்.

அதில் அப்பொழுது தான் இன்னும் தன் கையைப் பிடித்துக் கொண்டுதான் பேசிக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வு அவளுக்கு வர, அவனின் தடைகளை மீறி இன்னும் தன் கைகளைப் பற்றி இருப்பது அவளுக்கு உள்ளுக்குள் மகிழ்வாக இருந்தது.

ஆனால் அதை வெளிப்படையாகக் காட்டிவிட்டால் அவனுக்கு மீண்டும் தயக்கம் வந்து ஒட்டிக் கொள்ளும் என்பதை உணர்ந்தவள் சாதாரணமாக இருந்தாள். அவனிடம் இன்னும் பேச்சை வளர்க்கும் பொருட்டு, “இன்னும் நீங்க யார் சொல்லி அந்த ஆள் நியூஸை எழுதினாருன்னு சொல்லையே?” எனக் கேட்டாள்.

“அது… உன் அப்பா மேல் உள்ள கோபத்தில் ஒருத்தன் செய்த வேலை. அவனிடம் வம்பு இழுத்திருப்பார் போல. அவர் மேல இருந்த கோபத்தை இப்படிக் காட்டியிருக்கான். ஆனா உங்கப்பா நான் தான் இந்த வேலையைப் பார்த்து இருப்பேன்னு என் மேல கோபப்பட்டார்…” என்றான்.

“எப்போ கோபப்பட்டார்? யார் கூட என்ன பிரச்சனை?”

“நியூஸ் வந்த சமயத்தில் தான் போன் போட்டு திட்டினார். அப்புறம் நான் தான் உன் மனதை கெடுத்துட்டேன்னு சொன்னார். அந்தச் சமயத்தில் நான் உன்னை விட்டு விலகி இருக்கணும்னு நினைத்து இருந்ததால் கோபத்தில் நான் உன்னை விரும்பலை. அப்படி விரும்பினா உங்களிடம் நேராவே வந்து பொண்ணு கேட்பேன்னு திட்டிட்டு வச்சிட்டேன்…”

“நீங்க அப்பயே அவரால் தான் பேப்பரில் நியூஸ் வந்துச்சுனு ஏன் சொல்லலை?”

“அப்போ எனக்கே முழுசா விஷயம் தெரியாதுடா. பத்திரிக்கையில் எழுதியவனை மட்டும் தான் அப்போ தெரியும். ஒரு பொண்ணைப் பற்றி எதுவும் தெரியாமல், தீர‌ விசாரிக்காம தப்பா நியூஸ் வந்ததும், உடனே கட்டுரை போல எழுதி போட்டவன், இனியும் இப்படி ஒரு தப்பை செய்துற கூடாதுனு தான் அவன் கையை உடைச்சேன்.

நியூஸ் கொடுத்தவன் யாருனு எனக்குச் சமீபத்தில் தான் தெரியும். தெரிந்த சமயம் என் மனதை உன்னிடம் காட்டிட்டு உன் அப்பாவிடம் பொண்ணு கேட்டு போய்ட்டேன்…” என்று சிறு புன்னகையுடன் சொன்னான்.

அவன் சொன்னதைக் கேட்டுக் கொண்டவளுக்கு அந்தச் செய்தி தான் தங்களை இவ்வளவு சீக்கிரம் ஒன்று சேர்த்திருக்கிறது என்ற எண்ணம் இருந்தது. அந்தச் செய்தி மட்டும் வரவில்லை என்றால் தந்தை தன் காதலை கிடப்பில் போட்டிருப்பார்.

சில மாதங்களுக்குப் பிறகு அவரிடம் சம்மதம் கேட்டாலும் திரும்பவும் தட்டிதான் கழித்திருப்பார் எனத் தெரியும். தான் அவரைச் சம்மதிக்க வைக்க இன்னும் ‌அதிகம் போராடி இருந்திருக்க வேண்டும். இப்பொழுது அந்தச் செய்தியால் அப்பா மாப்பிள்ளை பார்க்க அவசரப் பட அதிலிருந்து தப்பிக்கத் தானும் ஜித்தனிடம் சென்று செயின் போட்டு அதிரடி செய்ய, அவனும் தன் மனதை திறக்க என எல்லாம் அதிவேகமாக நடக்கக் காரணமே அந்தச் செய்தி தான் மூலக் காரணம் என்பதால் கெட்டதிலும் மிகப் பெரிய நன்மை நடந்திருப்பதாக நினைத்துக் கொண்டாள்.

அவளின் அமைதியைப் பார்த்து “என்ன யோசனை டா?” எனக் கேட்டான்.

அவள் அந்தச் செய்தி பற்றித் தான் நினைத்ததைச் சொன்னாள்.

அதைக் கேட்டவனின் முகம் யோசனையுடன் சுருங்கியது. அவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள் “என்னாச்சு?” என்றாள்.

‘ஒன்றுமில்லை’ என யோசனையை விட்டு வெளியே வந்து தலையசைத்தான்.

“நீங்க இன்னும் எப்படிப் பொண்ணு பார்க்க வர இருந்தவங்களை நிறுத்தினீங்க? அப்பாவிடம் என்ன பேசி நம்ம கல்யாணத்திற்குச் சம்மதிக்க வைத்தீங்க? இதை எல்லாம் என்னிடம் நீங்க இன்னும் சொல்லலையே…” என்று கேட்டாள்.

“இரண்டும் அவசியம் தெரிந்து தான் ஆகணுமா?” கண்ணில் சிரிப்புடன் கேட்டான்.

“கண்டிப்பா தெரியணும்…” என்று அழுத்திச் சொன்னாள்.

“ஓகே…சொல்றேன்… மாப்பிள்ளை வீட்டில் நாங்க இரண்டு பேரும் விரும்புறோம். என் மாமனார் சம்மதத்திற்குத் தான் வெயிட் செய்தோம். ஆனா அவருக்கு நாங்க சேருவதில் விருப்பம் இல்லைனு உங்களிடம் சம்பந்தம் பேசியிருக்கார்னு சொன்னேன். அதுவே அவங்களுக்குப் புரிந்து போயிருச்சு.

நியூஸ் பார்த்தே அதைப் பெரிதாக எடுத்துக்காம ஓகே சொன்னவங்க தானே… அதனால் நான் சொன்னதையும் நல்ல விதமாகவே புரிந்து கொண்டாங்க. உங்க லவ் சக்ஸஸ் ஆகட்டும்னு விஷ் பண்ணிட்டு விலகிட்டாங்க…”

“எங்க அப்பா அவ்வளவு கோபமா இருந்தார்? அவரை எப்படிச் சம்மதிக்க வைத்தீங்க?”

“அவரிடம் என்ன சொல்ல? கௌரவ மூட்டையைத் தூக்கி சுமக்கிறவர். நாங்களே கல்யாணம் பண்ணிட்டு பேப்பர்ல நியூஸ் கொடுத்தா உங்க கௌரவம் கீழே போயிரும்னு சொன்னேன் சம்மதிச்சிட்டார்…” என்று அசால்ட்டாகச் சொல்லி தோளைக் குலுக்க, “இதுலயே சம்மதம் சொல்லிட்டாரா?” என்று யோசனையுடன் கேட்டாள்.

“ம்ம்… ஆமா…” என்று வெளியில் சொன்னவன், இது மட்டுமே அவரைச் சம்மதிக்க வைக்க வில்லை என்று நினைத்துக்கொண்டான். ‘உனக்கு இப்போதைக்கு நாங்கள் பேசிக்கொண்டது அனைத்தும் தெரிய வேண்டாம்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

விதர்ஷணாவும் அதற்கு மேல் ஒன்றும் கேட்காமல் விட்டாள்.

தொடர்ந்து இருவரும் சிறிது நேரம் மௌனமாக இருந்தனர். பின்பு தானே பேச்சை ஆரம்பித்தான் ஷர்வா.

“அன்னைக்கு நீ உன் பெயர் என் கூடச் சேர்ந்து கெட்டுப் போனா பரவாயில்லைன்னு சர்வ சாதாரணமாகச் சொன்னீயே? அப்போ ஏற்பட்ட என் உணர்வுகளை வார்த்தையால் சொல்ல முடியாது. ஏன்டி என் மேல இவ்வளவு அன்பை வச்சு என்னைத் தவிக்க விடுறனு அலறணும் போல இருந்தது.

அதை வெளியே காட்டாமல் அடக்கிக்கொண்டு போனா, உனக்குக் கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கிறாங்கனு சொல்ற. எனக்கு நிஜமா அன்னைக்கு என்ன சொல்றது, என்ன செய்யுறதுன்னு கூடத் தெரியலை. உன் மேல விருப்பம் வந்த பிறகு அதை மறைக்கிறதே கொடுமைனா, என் மனசுக்குப் பிடிச்சவளுக்கு இன்னொருத்தர் கூடக் கல்யாணம்னு கேள்வி படுவது கொடுமையிலும் கொடுமைன்னு அன்னைக்குத் தான் உச்சில அடிச்சது போலப் புரிந்தது.

ஆனா புரிந்து என்ன செய்ய? காதல்னு சொல்லி கல்யாணம் முடிச்சா மட்டும் ஆச்சா? அதைத் தாண்டிய வாழ்க்கை அப்படினு கேள்வி வரும் போது உனக்கு நான் வேண்டாம்னு தான் என் மனசு சொல்லுச்சு. அதான் அமைதியா விலகிப் போனேன்…” என்று அவன் சொல்ல,

“ஆனா தாம்பத்தியம் மட்டுமே வாழ்க்கை இல்லையே ஜித்தா?” எனக் குறுக்கிட்டு கேட்டாள் விதர்ஷணா.

“அது மட்டுமே வாழ்க்கை இல்லைனாலும், அது இல்லாமலும் வாழ்க்கை இல்லை டா. காதல் வாழ்க்கை சில நாள் ரசிக்கலாம், இல்லை சில வருடங்கள் ரசிக்கலாம். அதன் பிறகு நமக்கே ஒரு சலிப்பு தட்டும்…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே விதர்ஷணா மறுப்பாகத் தலையசைக்க,

“உனக்கு இன்னும் வெளி உலகம் தெரியலை டா. கல்யாணம் ஆனா சில மாதங்களிலேயே உறவுகள் குழந்தை பற்றிக் கேட்பாங்க. அதற்குப் பிறகு சில குதர்க்கமான கேள்விகள் வரும். அது எல்லாத்தையும் கடந்து வரணும். அது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. அப்படிப்பட்ட கேள்விகளுக்கு நீ பதில் சொல்ல முடியாம தவிக்க வேண்டி இருக்கும். இத்தனை சிக்கலில் கல்யாணம் பண்ணிக்கனுமானு தான் வேண்டாம்னு சொன்னேன்.

ஆனா என்னை நீ எங்கே சும்மா விட்ட? செயினைக் கழுத்தில் போட்டு தாலியோட ஒப்பிட்டு, சாவேன்னு மிரட்டி, என் மனதில் இருக்கிறதை சொல்ல வச்சு, இதோ இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்குற…” என்று அலுத்தது போலச் சொன்னாலும் அவனின் முகம் பூரிப்பை தான் வெளிப்படுத்தியது.

அப்பூரிப்பை கண்டாலும் “அதில் உங்களுக்கு ரொம்ப வருத்தம் போல?” என வேண்டும் என்றே மூக்கு விடைக்கக் கேட்டாள்.

அவள் முகம் போன போக்கைப் பார்த்து அதரங்கள் விரிய சிரித்தவன், “வருத்தம் இல்லை. ஆனா உன் வாழ்க்கையைக் கேள்விக்குறி ஆக்கிட்டனோன்னு கில்டியா இருக்கு…” என வேதனையுடன் முடித்தான்.

“ஐயோ…! ஏன் கில்டி அது, இதுன்னு பெரிய வார்த்தையெல்லாம் பேசறீங்க? அப்படியெல்லாம் எதுவும் தேவையில்லை. இத்தனை நாளும் நீங்க எனக்குக் கிடைக்க மாட்டீங்களோ? என் காதல் ஒரு தலை காதலாகவே போயிருமோன்னு எல்லாம் எவ்வளவு தவிச்சுப் போயிருந்தேன் தெரியுமா? ஆனா இன்னைக்கு என் மனசு அப்படியே இறக்கை இல்லாம பறக்கிற மாதிரி இருக்கு. இன்னைக்கு நான் மிஸஸ்.விதர்ஷணா ஷர்வஜித்னு சொல்லும் போதே என்னவோ பெரிய சாதனை பண்ணிட்டது போல இருக்கு…” என்று லயிப்புடன் சொன்னாள்.

“ஆனா உன்னோட இந்தச் சந்தோஷம் எத்தனை நாளைக்கு நிலைச்சு நிற்கும்னு தெரியலையே? இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட நீ ஆர்வமா என் பக்கத்தில் வரும் போது என்னை அறியாமலேயே தள்ளி போறேன். இப்படி நான் நடந்துக்கும் முறை உன்னைக் காயப்படுத்துமே? அது எனக்குக் கில்டியை தர தானே செய்யும்…” எனத் தன் மனநிலையைச் சொன்னான்.

“இல்லை… அப்படி எல்லாம் கில்டியா ஃபீல் பண்ணாதீங்க…” என்று அவனை ஆறுதல் படுத்தியவளுக்கு அன்று அவன் திருமணம் வேண்டாம் என முடிவெடுத்தற்கான சொன்ன காரணம் ஞாபகத்தில் வந்தது.


அன்று அவள் “உங்களால் சாதாரணத் தாம்பத்திய வாழ்க்கை வாழ முடியாதுனு எப்படிச் சொல்றீங்க? இந்த வீட்டில் நடந்த பிரச்சனைக்கும், உங்களின் அந்தரங்க வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டதும் சில நொடிகள் அங்கிருந்த சபரீஷின் புகைப்படத்தை வெறித்தவன்,

“சபரீஷோட அண்ணன் தானே நான் விதர்ஷணா. அவனுக்கு வந்த பெண்கள் மீதான வக்கிர குணம் எனக்கும் வராதுன்னு என்ன நிச்சயம்?” எனக் கேட்டவனைத் திகைத்துப் பார்த்தாள்.

“என்ன சொல்ல வர்றீங்க நீங்க?” திக்கியபடியே கேட்டாள்.

அவள் புறம் திரும்பியவன் அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டே “நானும் சபரீஷ் மாதிரி பெண்கள் மீது வக்கிரம் கொண்டு விடுவேனோனு பயம். அந்த வக்கிர குணத்தை நான் மற்ற அந்நிய பெண்களிடம் காட்ட மாட்டேன்னாலும், எனக்கு வர போற மனைவிகிட்ட காட்ட மாட்டேன்னு உறுதி இல்லையே?” எனக் சொன்னவனை இன்னும் புரியாமல் தான் பார்த்தாள்.

அவளின் புரியாத பார்வையைப் பார்த்து, “இப்போ நீ என் மனைவியா வந்தபிறகு கணவன் முறையில் உன்னை நான் அணுகும் போது உன்கிட்ட ரொம்ப வக்கிரத்தோட நடந்துருவேனோனு பயமா இருக்கு. உன் மேல எனக்குக் காதல் நிறையவே இருக்கு. ஆனா தாம்பத்திய வாழ்க்கையில் என் காதல் வெளிப்படாம வக்கிரமா நடந்து உன்னைக் காயப்படுத்திருவேனோனு ரொம்ப, ரொம்பப் பயமா இருக்கு.

அந்த நேரத்தில் நான் எப்படி நடந்துப்பேன்னு எனக்கே உறுதி இல்லாம உன் வாழ்க்கையில் விளையாட எனக்கு விருப்பம் இல்லை. இந்தப் பயம் எனக்குள் வந்ததினால் தான் என் வாழ்க்கையில் கல்யாணம் பண்ணி ரிஸ்க் எடுக்க விரும்பல. காதல், கல்யாணம்னு பேச்சு வந்தாலே நான் தள்ளி நின்றதுக்குக் காரணம் இது தான். அதே போலக் காதல், கல்யாணம்னு பேச்சு வந்தப்ப எல்லாம் என் கை நடுங்குறதுக்குக் காரணமும் இது தான்.

நான் எதனால் கல்யாணம் வேணாம்னு முடிவு எடுத்தேன்னு ஞாபகம் வந்தாலே அங்கே வேதியோட நிலையும், சபரியும் தான் கண்ணு முன்னாடி வருவாங்க. அதோட ஒரே நேரத்தில் மூணு பேருக்கும் கொல்லி வச்சதை நினைத்து என் கை தன்னால் நடுங்க ஆரம்பிச்சுடும்…” என்று அன்று ஷர்வா சொன்னதை நினைத்துப் பார்த்த விதர்ஷணாவிற்கு, அவனிடம் தான் சொன்னதும் ஞாபகத்தில் வந்தது.

அன்று ஷர்வா காதலை சொல்லிவிட்டாலும், தான் சொன்ன விஷயத்தை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் ஏதோ ஒரு தயக்கம் அவனைத் தடை செய்ய அவளின் பேச்சுக்கு சிறிது நேரம் மறுப்புச் சொல்லிக்கொண்டே வந்தான். அப்பொழுது அவனை மேலும் தெளிவாக்கும் பொருட்டுத் தான் பேசியதை இன்று நினைத்துப் பார்த்தாள் விதர்ஷணா.

“இன்னும் நல்லா யோசிச்சு முடிவெடு…!” என்று ஷர்வா சொல்ல, “நான் நல்லாவே யோசிச்சு தான் சொல்றேன். எனக்கு உங்க கூட வாழ்வதில் முழு விருப்பம் தான். அதோட உங்க பயம் அனாவசியம்…” என்று சொன்னவளை ‘எப்படிச் சொல்ற?’ என்பது போலப் பார்த்தான்.

“நீங்க என்கிட்ட வேதியைப் பற்றிச் சொன்னப்ப உங்க உடம்பும் கையும் ரொம்ப நடுங்கிட்டு இருந்தது. அப்போ நீங்க எங்க குடும்பத்தில் இப்படி நடந்ததால் தான் நான் கல்யாணம் பண்ண வேண்டாம்னு முடிவெடுத்தேன்னு சொன்னது ஞாபகம் வரவும் தான், நான் வேணும்னே நம்ம கல்யாணம் எப்போன்னு கேட்டுப் பேச்சை மாத்தினேன். நான் கல்யாண பேச்சை எடுத்ததும், சிறு அதிர்ச்சியில் உங்க உடம்பு நடுக்கம் குறைவதை பார்த்தேன்.

அந்த நேரத்தில் உங்களுக்கு அந்தப் பிரச்சனையால் தான் கல்யாணம் வேண்டாம்னு நீங்க முடிவெடுத்தது உங்க நினைவிலேயே இல்லை. அந்த அளவு வேதி விஷயத்தில் பாதிக்கப் பட்டிருந்தீங்கனு புரியுது. எப்பவும் கல்யாண பேச்சை எடுத்தா நடுங்குற உங்க கை அன்னைக்கு நடுக்கத்தைக் குறைத்துக் கொண்டது.

இதிலிருந்தே தெரியுது சபரீஷ் செய்த மாதிரி தானும் செய்திருவேனோனு பயப்படுற பயம் தேவை இல்லாததுனு. அதோட நீங்க எடுத்த முடிவும் அவசியம் இல்லாதது…” என்று சொன்னதை நினைத்துப் பார்த்து விட்டு அதில் இருந்து வெளியே வந்த விதர்ஷணா, தன் கையை உரிமையுடன் பற்றியிருந்த அவனின் கைகளைப் பார்த்தாள். அவன் யோசனையில் ஆழ்ந்திருந்தவளின் முகத்தையே அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவள் தன் முகத்தைப் பார்த்ததும் “என்ன பலமான யோசனையில் இருந்த? நீயா யோசனையில் இருந்து வெளியே வரட்டும்னு அமைதியா பார்த்திட்டு இருந்தேன். சொல்லுமா என்ன விஷயம்?” எனக் கேட்டான்.

“நீங்க அன்னைக்குச் சொன்னதைத் தான் நினைச்சுப் பார்த்தேன். அன்னைக்குச் சொன்னதைத் தான் இன்னைக்கும் சொல்றேன். உங்க பயம் அனாவசியமானது. உங்க பயம் தான் தொடுகை விஷயத்தில் உங்களைத் தள்ளி போக வைக்கிறதே தவிர, இந்த விஷயத்தில் கண்டிப்பா வக்கிர புத்தியால் இல்லை.

அதுக்கு உதாரணம் அன்னைக்குக் கொஞ்சநேரம் என் கையைப் பிடிச்சிருந்தப்ப உங்கள் கை நடுக்கம் குறைஞ்சது. அதே போல இதோ இப்போ கூட என் கையைத் தயக்கத்தோடு நீங்களா பிடிக்கும் போது இருந்த விறைப்புத் தன்மை இப்போ குறைஞ்சிருச்சு. ரொம்ப இயல்பா தான் இப்போ என் கையைப் பற்றியிருக்கீங்க. ஒருவேளை அப்படியே உங்க பயம் போகலைனாலும் பரவாயில்ல எனக்கு உங்க கூட உங்களின் அன்புக்கு சொந்தமானவளா இருந்தா போதும்…” என்று இலகுவாகச் சொன்னவளை மனம் இளக பார்த்தான் ஷர்வா.

‘தான் வைத்த பிரியத்தை மட்டும் பற்று கோலாகக் கொண்டு, அவனை அவனாக ஏற்றுக் கொள்ளும் விதர்ஷணாவின் அன்பு அவனை அடியோடு சாய்த்தது. தன்னவளின் இந்த உன்னத அன்பிற்காகவே தன் பயத்தைத் தான் விரைவிலேயே தன்னை விட்டு விரட்டி விட வேண்டும்’ என மனதிற்குள் உறுதி எடுத்துக் கொண்டான்.

அந்த உறுதியுடன் தான் பிடித்திருந்த அவளின் கைகளில் அழுத்தம் கொடுத்தவன் தன் இன்னொரு கையினால் அவளின் விரல்களை ஒவ்வொன்றாக வருட ஆரம்பித்தான்.

அதில் கூசி சிலிர்த்தவள், படபடத்த கண்களை இறுக மூடி கொண்டாள்.

விரல்களை வருடியபடியே “விது மா…!” என மென்மையாக அழைத்தான்.

அவனின் புது அழைப்பில் மூடியிருந்த கண்களைப் பட்டெனத் திறந்து அதிசயத்தைக் கண்டவள் போல் கருவிழிகளை அகல திறந்து பார்த்தாள்.

மனைவியின் விழி வீச்சில் வீழ துடித்த மனதை அடக்கி, “விது மா…” என்றான் மீண்டும்.

வருடிய விரலின் வழியே ஏற்பட்ட சிலிர்ப்பை விட அவனின் ‘விது மா’ என்ற அழைப்பில் அதிகச் சிலிர்ப்பை உணர்ந்தவள் “என்ன திடீர்னு?” என வார்த்தைகள் தந்தி அடித்துக் கொண்டு வந்தன.

மனைவியின் மயக்கத்தை உணர்ந்தவன் அழகாகப் புன்னகை ஒன்றை சிந்தி “சும்மா தான்…!” என்றவன் கண்ணைச் சிமிட்டினான்.

அவன் வீராப்பாக விறைத்துக் கொண்டு திரியும் போதே அவனின் மீது பித்தாக இருந்தவள் அவனின் இன்னொரு பரிமாணத்தைக் கண்டு சொக்கி தான் போனாள்.

இமைகள் படபடவெனப் பட்டாம் பூச்சியைப் போல் சிறகடித்தது.

படபடப் பட்டாசாகப் பொரிபவள் இப்பொழுது படபடத்துப் போனதில் அவளின் உணர்வுகளின் நிலையை உணர்ந்தவன் தன் பயம் போகாத நிலையில் இதற்கு மேலும் அவளைச் சோதிக்கக் கூடாது எனத் தன் செய்கையை நிறுத்திக்கொண்டான்.

விரல்களை வருடியதை நிறுத்தியவன் கையை மட்டும் விடாமல், “நீ எனக்குப் புதுசா பேர் வச்சுருக்கியே… நீ ஏமாந்து போயிற கூடாதுனு நான் உனக்கு இந்தப் பேர் வச்சேன். இது பெரிய விஷயம் ஒன்னும் இல்லை. நார்மலா இருடா…” என்று அவளைச் சகஜநிலைக்குக் கொண்டு வந்தான்.

அதில் நிதானத்திற்கு வந்தவள், “விரும்பி வைக்கலை. எனக்காக வச்சிங்களாக்கும்?” என விடைப்பாகக் கேட்டாள்.

‘பட்டாசு பேக் டூ பார்ம்’ உள்ளுக்குள் அவளை நினைத்துச் சிரித்துக் கொண்டவன், “நானும் விரும்பி தான் வச்சேன் மா. அதை நீ நம்பணும்…” எனப் புன்னகையுடனே சொன்னான்.

“போனா போகுதுனு நம்புறேன்…” எனக் கெத்தாகச் சொன்னவள், “ஆனா என் ஜித்தா அளவுக்கு இந்தப் பேர் இல்லை. கொஞ்சம் சுமார் தான்…!” எனச் சொல்லி பழிப்புக் காட்டினாள்.

“ஹேய்…! ஜித்தா என் பேரு டா. விது தான் உன் பேரு. உன் பேரையே சுமார்னு சொல்ற?” சிரிப்புடனே கேட்டான்.

“யா…யா…! தெரியும்…தெரியும்…! ஆனா உங்க விதுவை விட என் ஜித்தா தான் கெத்து…! தெரியுமா?” என அவனை அவனிடமே பெருமையாகப் பேசி புருவத்தை உயர்த்திக் காட்டினாள். அவளின் பெருமை பீற்றலில் “ஹா…ஹா…ஹா…!” எனச் சத்தம் போட்டுச் சிரித்தான் ஷர்வா.

வெகு வருடங்களுக்குப் பிறகான மனம் விட்டு சிரித்த அவனின் சிரிப்பை வாஞ்சையுடன் பார்த்தாள் விதர்ஷணா.

சிரித்து முடித்தவன் “சரியான வாலு நீ…!” என்று தன் நெற்றியை வைத்து அவளின் நெற்றியில் மெதுவாக முட்டினான். வெகு இயல்பாக இருந்தது அவனின் செய்கை.

அவள் அருகில் வந்தாலே இரண்டு அடிகள் பின்னால் போனவனின் இந்தச் செய்கை அவனின் பயம் தேவையற்றது நன்றாகவே உணர வைப்பதாக இருந்தது விதர்ஷணாவிற்கு.

ஆனால் அவனின் இந்த இலகு தன்மையை அவனிடம் பெரிதாகச் சொல்லி சுட்டிக்காட்டாமல் அமைதியாகத் தனக்குள் மட்டும் கிரகித்துக் கொண்டாள்.

அவனாக உணர்ந்து மட்டுமே இனி தன்னை நெருங்க வேண்டும். எந்த நிலையிலும் அவனைக் கட்டாயப் படுத்துவது போல் தான் நடந்து கொள்ளக் கூடாது எனத் தனக்குள் உறுதி எடுத்துக் கொண்டாள்.

அவளே உணர்ந்த போது அவன் தன் செய்கையை உணர மாட்டானா என்ன? அவனும் தன்னுடைய அந்த இலகுவான ஒட்டுதலை கண்டு கொண்டான். ஆனால் இது மட்டுமே தங்கள் வாழ்க்கையைத் தொடங்க போதாது என்று தெரிந்தவன் என்பதால் அவளிடம் அதைக் காட்டி கொள்ளாமல் இருந்தான்.

அவளிடம் பேச வேண்டிய முக்கியமான விஷயம் ஞாபகம் வர சாதாரண மனநிலைக்கு மாறி “ஓகே டா…! நான் சொல்ல நினைச்சதை சொல்லிடுறேன். நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்க எனக்கு எப்படியும் அவகாசம் தேவைப்படும். அந்த அவகாச காலமா உன் படிப்பு முடியும் காலத்தை எடுத்துக்குவோம். இன்னும் ஆறு மாதம் இருக்குல்ல உன் படிப்பு முடிய? இந்த ஆறு மாதத்தில் என் பயத்தைப் போக்க நான் முயற்சி எடுத்துக்கிறேன். அதுக்கு முன்னாடி நீ என் பக்கத்தில் வந்து நான் எதுவும் என்னை அறியாம விலகி போனா அதை நீ பெருசு பண்ணாம புரிஞ்சுக்கணும். பிளீஸ்…!” என்றான்.

“ம்ம்… புரியுது ஜித்தா. பிளீஸ் எல்லாம் வேண்டாம். உங்க விருப்பமே என் விருப்பம். நான் எதுவும் தவறா எடுத்துக்க மாட்டேன்…” அமைதியாகச் சொன்னாள்.

“சரிடா விது மா… படுக்கலாம். இன்னைக்கு நமக்கான நாளுன்னு தான் புல் டே லீவ் போட்டேன். நாளைக்கு அது முடியாது. நியூஸ் பார்த்திருப்பியே? அந்தக் குழந்தைகள் கடத்தல் விஷயமா எனக்கு முக்கியமான வேலை இருக்கு. அதுக்குக் காலையில் சீக்கிரமே கிளம்பணும்…” என்றான்.

“ஹ்ம்ம்… ஓகே ஜித்தா…” என்றவள் அவனை விட்டு விலகி எழுந்து அந்தப் படுக்கையின் ஓரம் படுத்துக் கொண்டாள்.

அவனும் அவளை விட்டு சிறு இடைவெளி விட்டு படுத்தவன் “விதுமா…” என மெல்ல அழைத்தான்.

அவனைப் பார்த்த வண்ணம் ஒருக்களித்துப் படுத்திருந்தவள் அவனின் முகத்தைப் பார்த்து “ம்ம்…” என்றாள்.

ஏதோ சொல்ல அழைத்து விட்டானே தவிர அவளிடம் என்ன, எப்படிச் சொல்ல எனச் சில நிமிடங்கள் தயங்கினான். பின்பு ஏதோ யோசித்தபடி “ஒன்னும் இல்லைடா. தூங்கு…!” என்றான்.

எதற்கு அழைத்தான் எனப் புரியாமல் அவனின் முகத்தையே பார்த்தபடி அவள் இருக்க, அவள் பார்க்கிறாள் என்று தெரிந்தாலும் கவனியாதது போலக் கண்ணை மூடிக் கொண்டவன் ‘அவளின் தந்தையின் மீது குற்றம் சாற்றப்பட்டிருக்கிறது என்று சொல்வோமா?’ என்று நினைத்தான். ஆனால் ‘இன்றைய அவளின் இதத்தை ஏன் தொலைய வைக்க வேண்டும்?’ என்று நினைத்துக் கொண்டவன் அமைதியானான்.

சில நொடிகள் அவனைக் கேள்வியுடன் பார்த்தவள், பின்பு அவன் உறங்குவது போலத் தெரிய ‘சொல்ல வேண்டியதை அவனே சொல்வான்’ என நினைத்துத் தானும் கண்களை மூடி கொண்டாள்.

உறங்காமல் இருந்தாலும் உறங்குவது போலப் படுத்திருந்த இருவருக்கும் இடையே இருந்த இடைவெளியை நிரப்பிக் கொண்டிருந்தது, அவர்களின் இணைந்த கைகள்!