பனியில் உறைந்த சூரியனே – 37

அத்தியாயம் – 37

நடந்து கொண்டிருப்பது கனவா? இல்லை நனவா? என இன்னும் நம்ப முடியா மனநிலையில் ஷர்வா கட்டிய தாலியை கழுத்தில் வாங்கித் திருமதி ஷர்வஜித்தாக மணமேடையில் நின்றிருந்தாள் விதர்ஷணா.

ஒருவேளை தன் ஆசைதான் கனவாக நடந்து கொண்டிருக்கிறதோ என்று நினைத்தவள் தன் நடு விரலை மடக்கி பிடித்து இன்னொரு கையில் பலமாகச் சுண்டி விட்டு கொண்டாள். ‘சுரீர்’ என்று வலி தெரிய ‘அப்போ கண்டிப்பா கனவில்லை’ என்று தனக்குத் தானே சொல்லி கொண்டாள்.

“நிஜம் தான்…! நிஜத்திலும் நிஜம்…!” என அவளின் காதோரம் குனிந்து மெல்லச் சொன்னான் ஷர்வஜித்.

தன் அருகில் கேட்ட தன்னவனின் கம்பீர குரலில் அவனை நிமிர்ந்து பார்த்தவள் கண்களில் காதல் நிரம்பி வழிந்தது.

தன் ஆசையை அப்படியே நிறைவேற்றி வைத்தவன் மீது அவளின் பிரியம் கூடிக் கொண்டே போனது.

அவளின் கண்களைப் பார்த்தவன் சில நொடிகளுக்குப் பிறகு தன் தொண்டையை லேசாகக் கமறி சரி செய்து “கனவா, நிஜமானு பார்க்க எல்லாரும் கிள்ளி தான் பார்ப்பாங்க. நீ என்ன சுண்டி விளையாடிட்டு இருக்க?” எனக் அவளின் கவனத்தைத் திசை திருப்ப கேட்டான்.

“எத்தனை நாளைக்குத் தான் கிள்ளியே பார்க்கிறது? நான் புதுசா ஏதாவது ட்ரை பண்ணலாமேன்னு தான். எப்படி நல்ல ஐடியா இல்ல?” எனக் குதூகலமாகக் கேட்டாள்.

அவளின் கேள்வியில் ஷர்வா அவளை வித்தியாசமாகப் பார்த்து வைக்க, அவனின் பார்வையின் அர்த்தம் புரியாதவள் ‘என்ன?’ எனப் புருவங்களை உயர்த்தினாள்.

அதற்கு அவன் பதில் சொல்லும் முன் “ஷர்வா போட்டோ எடுக்க வந்திருக்காங்க பாரு. நீங்க இரண்டு பேரும் பேசிட்டு இருக்கிறதை பார்த்து அங்கேயே நிற்கிறாங்க‌..‌.” என்று கேலியுடன் சொன்னான் அவர்களை விட்டு சிறிது தள்ளி நின்றிருந்த தயாகரன்.

அவசர, அவசரமாக ஏற்பாடு செய்திருந்தாலும், மகளின் திருமணத்தைச் சிறப்பாகவே ஏற்பாடு செய்திருந்தார் கருணாகர விக்ரமன்.

அவரைத் திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்ததுடன், விரைவிலேயே தங்கள் திருமணம் நடக்க வேண்டும் என்று ஷர்வா சொல்லியதில் சந்திராவிடம் கலந்து பேசி, தேவாவிடமும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டு திருமண வேலையை வேகமாக ஆரம்பித்தார்.

அவ்வளவு மறுத்த தன் பெரியப்பா எப்படி உடனே திருமணத்திற்குச் சம்மதம் சொன்னார் எனப் புரியாமல் அவரிடமே கேட்டான் தேவா.

அவன் கேள்வியில் சில நொடிகள் மௌனமாக இருந்தவர் பின்பு “என் கௌரவத்தை மொத்தமா குழிதோண்டிப் புதைக்க ஏற்பாடு பண்ணிட்டான் அந்த ஷர்வஜித். உங்க பொண்ணு இப்போ மேஜர். நாங்க இரண்டு பேரும் நாங்களா கல்யாணம் பண்ணிட்டுப் பேப்பரில் நியூஸ் கொடுப்போம். நீங்களா பண்ணி வைக்கிறீங்களா? இல்லை உங்க பேரை நாறடிக்கட்டுமான்னு மிரட்டுறான். இவளும் அந்தப் போலீஸ்கார பைய தான் வேணும்னு நிக்கிறா.

அவன் மாட்டேன்னு சொன்னாலும் இவளே ஓடி போய்க் கல்யாணம் பண்ணிப்பா போல. ஏற்கனவே பேப்பரில் வேற இவங்க இரண்டு பேரு பேரையும் போட்டு பாதி மானம் போயிருச்சு. மீதி மானமும் போறதுக்கு முன்னாடி நானே கல்யாணத்தை நடத்தி வச்சுரலாம்னு முடிவு பண்ணிட்டேன். நீயும் உன் தங்கச்சிக்கு தானே சப்போர்ட். நான் மட்டும் தனியா நின்னு என்னத்தைச் சாதிக்கப்போகிறேன்? உங்க விருப்பப்படியே கல்யாணம் நடக்கட்டும்…” என்று எரிச்சல் மிகுந்த குரலில் சொன்னவர் தேவாவிடமும் சிறிது திருமண வேலையைப் பிரித்துக் கொடுத்தார்.

தன் பெரியப்பா சம்மதம் சொன்னதை இன்னும் நம்பமுடியாமல் பார்த்தாலும் அதற்கு மேல் குடைந்து கேட்காமல் கல்யாண வேலையை எடுத்துக் கொண்டான் தேவா.

ஷர்வா திருமண வேலையை அன்னையிடம் ஒப்படைத்து விட்டு முழுமூச்சாகக் குழந்தைகளைக் கண்டுபிடிப்பதை செய்து அதை வெற்றிக்கரமாக முடித்து விட்டும் வந்து விட்டான்.

இருவீட்டாரின் பக்கமும் மிகவும் முக்கியமான சொந்தங்களை அழைத்துத் திருமண நிகழ்வுகள் சிறப்பாகவே நடந்தன.

இதோ இந்த நொடி மணமக்களாக மேடையில் நிற்பவர்களைப் பார்த்துச் சந்திரா சந்தோஷக் கண்ணீர் விட்டார்.

எங்கே மகன் தனி மரமாக நின்று விடுவானோ என்ற அவரின் பயம் போய் இன்று அவனை மணக்கோலத்தில் பார்த்துப் பூரித்துப் போய் நின்றிருந்தார்.

விதர்ஷணாவின் சந்தோஷத்தின் அளவை அளவுகோல் வைத்து அளக்க முடியாது என்பது போல் சந்தோஷத்தில் மிதந்தாள் என்று தான் சொல்லவேண்டும்.

சற்று நேரத்திற்கு முன் எப்போதும் இருக்கும் இறுக்க முகம் கலைந்து மென்மையான முகப் பாவத்துடன் தன் கழுத்தில் மங்கள நாணை சூட்டியவனை இன்னும் அவளின் மனம் இனிமையுடன் நினைத்துக் கொண்டது.

அவளின் காதலை ஜெயிக்க வைத்து விட்டான் அவளின் ஜித்தன். தன் காதல் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தவனை மேடையில் நிற்கிறோம் என்பதனையும் மறந்து அவ்வப்போது காதலுடன் பார்த்துக்கொண்டாள்.

அவளின் பார்வையைக் கவனித்தவன் மெல்ல அவளின் காதருகில் குனிந்து “மேடைல நிற்கிறோம் டா. ஏற்கனவே உங்க அப்பா நம்ம மேல செம்ம காண்டுல இருக்கார். நீ அதைப் பெருசாக்கி விட்டுறதே! அவசரமா கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தவரே மண்டபம் முக்கால்வாசி நிறையுற அளவுக்கு ஆட்களை அழைத்திருக்கிறார். அவங்க முன்னாடி மானம் போயிருச்சுனு உன்னைத் திட்ட போறார். இனி காலம் முழுவதும் நீ என் பக்கத்தில் தான் இருக்கப் போற. அப்போ நல்லா பார்த்துக்கோ…!” என்று கிசுகிசுக் குரலில் சொன்னான்.

அவனிடம் நல்ல பிள்ளையாகச் ‘சரி’ எனத் தலையசைத்தவள், தந்தை எங்கே என்று பார்த்தாள்.

அவர் கீழே உறவினர் ஒருவரிடம் பேசிக் கொண்டே மேடையைத் தான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் பார்வையைச் சந்தித்தவள், தந்தையை அதிகமாக மிரட்டி தான் இந்தத் திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்து இருப்பானோ என்று நினைத்தாள்.

அதைப் பற்றி அவனிடம் கேட்க கூட நேரமின்றி அவன் வழக்கு விஷயத்தில் தீவிரமாக இருந்ததால் அவளுக்கு முழுவதும் விவரம் எதுவும் தெரியாமல் போனது. அவள் கேட்டிருந்தாலும் அவன் உடனே சொல்லியிருக்கப் போவதில்லை என்பது அவள் அறியாத உண்மை.

தனிமை கிடைக்கும் போது இந்த விஷயத்தைப் பற்றி விவரமாகக் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

அதன்பிறகு சில உறவினர்களும் சில முக்கிய நபர்களும் மேடைக்கு வந்து கொண்டே இருக்க அவர்களுக்கு நேரம் சரியாகச் சென்றது.

அனைத்தும் முடிந்து ஷர்வாவின் வீட்டிற்குச் செல்லும் நேரம் வந்த போது தன் அருகில் நின்ற அண்ணனை கண்கலங்க பார்த்தாள் விதர்ஷணா.

“கண்கலங்காதே தர்ஷி! நீ ஆசைப்பட்ட வாழ்க்கை உனக்குக் கிடைச்சுருக்கு. அதை மட்டும் நினைத்துச் சந்தோஷத்தோட கிளம்பு…!” இதமாகச் சொன்னான் தேவா.

“சந்தோஷமா தான் அண்ணா இருக்கு. ஆனா அப்பா என்மேல் இன்னும் கோபமா இருக்கார் போல. என்கிட்டே சரியா பேசக்கூட இல்லை. அவரை நீ தான் இனி பார்த்துக்கணும்…”

“நான் பார்த்துக்காம யார் பார்த்துப்பா? நான் நல்லா பார்த்துக்கிறேன். நீ கவலைப்படாதே…!” என்றான்.

அண்ணன், தங்கை இருவரும் பேசிக் கொண்டிருக்க, சற்று தள்ளி நின்று தயாவிடம் பேசிக் கொண்டிருந்தாலும், ஷர்வாவின் பார்வை முழுவதும் விதர்ஷணா மீது தான் இருந்தது.

“என்ன ஷர்வா கல்யாணமே வேண்டாம்னு இருந்த? இப்போ சார் மொத்தமா பிளாட் தான் போல?” கேலி செய்து சிரித்தான் தயா. அப்போது அங்கே கவியுகனும் இருந்தான்.

அவனின் கேலியில் அவனும் சிரித்து விட்டு “சரி ஷர்வா… நீங்க பேசிட்டு இருங்க. நான் கிளம்புறேன்…” என்று விடைபெற்றுச் சென்றான்.

அவனுக்கு விடை கொடுத்துவிட்டு தயாவின் புறம் உதட்டோர சிரிப்புடன் திரும்பிய ஷர்வா “நீ பூர்விகிட்ட பிளாட் ஆனதை விட நான் கொஞ்சம் தான்…” அவனின் காலையே வாரினான்.

“க்கும்… என்னத்தைப் பிளாட் ஆகி என்ன செய்ய? உனக்கு முன்னாடியே சீனியர் நானு. இன்னும் சிங்கிளா நிற்கிறேன். கொஞ்ச நாள் முன்னாடிதான் தர்ஷி பொண்ணு உன்னை லவ் பண்றதா சொல்லி, உன்னைப் பற்றித் தெரிய விவரம் கேட்டா. ஆனா இப்போ இரண்டு பேரும் காதல் ஜோடி மட்டும் இல்லாம கல்யாண ஜோடியும் ஆகிட்டிங்க. இப்போ நீ சீனியர் ஆகிட்ட…” என்று பெருமூச்சு விட்டான்.

அவனைக் கண்டு சிரித்த ஷர்வா “நீயும் சீக்கிரம் புதிய மாப்பிள்ளையாக மாற இந்தப் புதுமாப்பிள்ளை ப்ளஸ் பண்றேன்டா…” என்றான் கிண்டலாக.

“எல்லாம் நேரம் தான்டா…” என்று அலுத்தான் தயா.

அப்பொழுது அங்கே வந்த விதர்ஷணா “அண்ணா என்ன சொல்றாங்க ஜித்தா?” என்று கேட்டாள்.

“நான் சீனியர் ஆகிட்டேனாம். கேலி பண்றான்‌‌…” என்றான் புன்னகையுடன்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பூரியும் இதே தான் சொன்னா…” என்று சொல்லும் போது அங்கே பூர்வாவும் வர, “பார், நமக்குப் பின்னாடி லவ் பண்ணி கல்யாணமும் பண்ணிக்கிட்டாங்க. நாமளும் இருக்கோமே…” என்று அவளிடம் புலம்பியவன், “பேசாம நாமளும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாமா? நீயும் கல்யாணம் முடிஞ்ச பிறகு படிச்சுக்கோ…” என்று தயா சொல்லவும்,

“ஓ…! பண்ணிக்கலாமே…” என்று வேகமாகத் தலையை ஆட்டினாள் பூர்வா.

அவள் சம்மதம் சொல்லவும் சந்தோஷமாகக் கத்த போன தயா கடைசி நிமிடத்தில் கப்பென வாயை மூடி, “ம்கூம்…! உன்னை நம்ப முடியாது. நான் கேட்குறதுக்கு எல்லாம் சம்மதம் சொல்ற மாதிரி சொல்லி என் காலையே வாரி விட்டுருவ…” என்று போலி பயத்துடன் சொன்னவன், “எப்படி என் காலை வாரி விடலாம்னு நினைச்சிருந்த சொல்லு…!” என்று கேட்டான்.

“அதுவா…? என் மாமனார்கிட்டயும், உங்க மாமனார்கிட்டயும் நீங்களே பேசி சம்மதம் வாங்குங்க. நாம இப்போவே கல்யாணம் பண்ணிக்கலாம்…” என்றாள் கிண்டலுடன்.

அவள் சொன்னதைக் கேட்டதும் தயாவின் முகம் கோணியது. “அதானே பார்த்தேன்… நீ எனக்குச் செக் வைக்காம விட மாட்டியேன்னு. நீ படிச்சு முடிக்கிற வரை தனியா கொஞ்ச நேரம் மீட் கூடப் பண்ண கூடாதுனு நம்ம வீட்டு பெருசுங்க ஸ்ரிக்ட்டா ஆர்டர் போட்டுருக்காங்க.

இதில் நான் இப்போவே கல்யாணம்னு சொன்னா இன்னும் ஒரு வருஷத்துக்குப் பிறகு கல்யாணம் பண்ணி வைக்கிறோம்னு வேணும்னே என்னைப் பழி வாங்குவாங்களே இரண்டு பேரும்…” என்று புலம்ப அவனைப் பார்த்து மூவரும் சிரித்தனர்.

பின்பு சிறிது நேரத்திற்குப் பிறகு “தயா அண்ணா உங்க பிரண்டா கிடைக்க நீங்க கொடுத்து வச்சுருக்கணும் ஜித்தா. உங்களைப் பற்றி விவரம் கேட்டதும் நீ அவன் மனைவியா ஆன பிறகு கூட அவனைப் பற்றி எனக்குத் தெரிந்ததைச் சொல்லமாட்டேன். உனக்கு வேணுமா நீயாதான் தெரிஞ்சுக்கணும்னு சொல்லிட்டாங்க. அண்ணாவோட அந்தக் குணம் எனக்கு ரொம்பப் பிடிச்சது…” என்று விதர்ஷணா சொல்ல ‘கேட்டுக்கோ’ என்பது போலப் பூர்வாவைப் பார்த்துச் சீண்டினான் தயா.

‘ஐய்ய! ரொம்பத் தான்!’ என்று பூர்வா நொடிக்க, தயா அப்படித்தான் சொல்லுவான் என்று அவனை அறிந்தவன் என்பதால் ஷர்வா மென்னகை மட்டும் புரிந்த படி நின்றான்.

பின்பு அங்கே வந்த சந்திரா “நாம கிளம்பலாமா ஷர்வா?” என்று கேட்க, “கிளம்புவோம் மா…” என்றவன் “என்ன விதர்ஷணா, உன் தேவா அண்ணாகிட்ட சொல்லியாச்சு தானே? இனி நாம கிளம்புவோமா?” என்று கேட்டான்.

“சொல்லிட்டேன் ஜித்தா. நீங்களும் சொல்லிருங்களேன்…” என்றாள்.

அப்பொழுது அங்கே தேவா வர, அவனின் கையைப் பற்றிக் குலுக்கி விட்டு சினேகப் புன்னகை ஒன்றை சிந்தியவன் “அப்போ நாங்க கிளம்புறோம்…” என்றான்.

தேவாவும் புன்னகை புரிய “ம்ம்… போயிட்டு வாங்க! எங்க தர்ஷியை நல்லா பார்த்துக்கோங்க…” என்றான்.

“ஓ…யெஸ்…! அவளை நல்லபடியா பார்த்துக் கொள்ள வேண்டியது என் பொறுப்பு…” என்று புன்னகையுடனே சொன்னவன் அவனிடம் விடை பெற்றான்.

‘வேறு சடங்கு சம்பிரதாயங்கள் வேண்டாம். திருமணம் முடிந்ததும் நான் விதர்ஷணாவை அழைத்துச் சென்று விடுவேன்’ என்று ஷர்வா ஏற்கனவே சொல்லியிருந்ததால் அவர்கள் கிளம்புவதற்கான முறைகள் மட்டும் அங்கே நடந்து கொண்டிருந்தன.

கிளம்பத் தயார் ஆனதும் தந்தையைத் தான் தயக்கத்துடன் திரும்பத் திரும்பப் பார்க்க ஆரம்பித்தாள் விதர்ஷணா.

உனக்கு நல்லபடியாகக் கல்யாணம் முடித்து வைப்பது என் கடமை! அதைத் தவிர என்னிடம் வேறு எந்தச் சலுகையும் எதிர்பார்க்காதே! என்று கருணாகரன் நினைத்தாரோ? அவளின் அருகில் கூட அவர் வரவில்லை. வந்தவர்களை வரவேற்கும் சாக்கில் ஒதுங்கியே நின்று கொண்டார். தூரத்திலிருந்து அவரின் பார்வை அவ்வப்போது அவளின் மீது படிந்து மீண்டதை தவிர, உனக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது போல் தான் அவரின் நடவடிக்கை இருந்தது.

கிளம்பும் முன் சொல்லிக் கொள்ளத் தந்தையின் அருகில் கணவனுடன் சென்றாள்.

“அப்பா…!” என அவள் அழைத்த நிமிடத்தில் “அதான் நீ கேட்ட படியே எல்லாம் நடந்துருச்சே? இன்னும் இங்கே ஏன் நிற்கிற? கிளம்பு…!” மகளின் முகத்தைக் கூடப் பார்க்காமல் கடுப்புடன் சொன்னார்.

அவரின் சிடுசிடுப்பில் விதர்ஷணாவின் முகம் வேதனையைச் சுமக்க ஆரம்பித்தது. அவ்வளவு நேரம் இருந்த இதம் தொலைய கண்கலங்க நின்றவளின் கையைப் பிடித்து அழுத்தினான் ஷர்வா.

ஷர்வா இயல்பாக அவளிடம் பேசினாலும், காதலுடன் பார்த்தாலும் காலையில் இருந்து அவளைச் சாதாரணமாகக் கூடத் தொட்டு பேச தயக்கம் காட்டினான். தாலி கட்டி முடித்ததும் மணமேடையைச் சுற்றி வரும் போது கூட அவளின் கையைப் பிடித்திருக்கையில் ஒருவித அசவுகரியத்தைக் காட்டி வந்தவன், அவளின் கண்ணீரை கண்ட நொடியில் அவளின் கையைத் தயக்கம் இல்லாமல் தொட்டதைக் கூட உணராமல், மனைவியைச் சமாதானப் படுத்துவது மட்டுமே பிரதானமாக இருக்க, உரிமையுடன் கைகளைப் பற்றிக் கொண்டான்.

விதர்ஷணா காலையில் அவனின் அசவுகரியத்தை உணர்ந்து அவனின் மனநிலையை நினைத்து வருந்தியவள், இப்பொழுது தந்தையின் பாராமுகத்தில் வேதனையுடன் இருந்தவள் கணவன் தயக்கம் இல்லாமல் தன் கையைப் பற்றிக் கொண்டதை உணர்வே இல்லை.

தந்தையின் முகத்தைத் தான் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். கருணாகரன் சிறிதும் அசையாமல் அதே இறுக்கத்துடன் இருக்க, அவரைத் தீர்க்கமாகப் பார்த்த ஷர்வா “நாங்க கேட்டதை நல்லபடியாக நடத்திக் கொடுத்தற்கு நன்றி…!” உறவு முறை கூடச் சொல்லாமல் அழுத்தமாகச் சொன்னவன் விதர்ஷணாவை ‘வா…’ என்று நகர்த்திக் கொண்டு அங்கிருந்து சென்றான்.


ஷர்வாவின் வீட்டில் அந்த இரவு நேரம் விதர்ஷணா கணவனின் அறையில் நகத்தைக் கடித்தபடி அமர்ந்திருந்தாள்.

அந்த வீட்டிற்கு வந்த நிமிடத்தில் இருந்து இந்த நொடி வரை சந்திராவின் பின்னாலேயே தான் சுற்றிக் கொண்டிருந்தாள். ஷர்வா வீட்டிற்குள் நுழைந்த சிறிது நேரத்திலேயே கைபேசியைக் கையில் எடுத்தவன் அதிலேயே தீவிரமாக மூழ்கி போனவன் போல அடிக்கடி யாரிடமோ பேசிக் கொண்டே இருந்தான்.

அவனுக்குக் குழந்தைகள் கடத்தல் விஷயமாக இன்னும் பல வேலைகள் கிடப்பில் இருந்தன. ஆனால் திருமணத்தன்றே விதர்ஷணாவை தனியாக விட்டு கிளம்பி விட்டான் என்ற பேச்சு வரக்கூடாது எனப் போன் மூலமாகவே அவனின் சில வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சில முக்கிய உறவினர்கள் வேறு அங்கே இருந்ததோடு பூர்வாவும் மாலை வரை அவளுடன் இருந்ததால் விதர்ஷணாவிற்குப் பொழுது நன்றாகவே போனது.

இரவு வந்ததும் ஷர்வாவின் அறைக்கு அவளை அனுப்பி வைக்க, ஒரு வித பதட்டத்துடன் உள்ளே வந்திருந்தாள். அந்த அறையில் அன்றைய நாளுக்கான எந்த அலங்காரமும் அங்கே இல்லை. ஷர்வா அன்னையிடம் எதுவும் வேண்டாம் என்று கண்டிப்புடன் சொல்லியிருந்தான்.

அவள் அந்த அறைக்கு வந்து பல நிமிடங்கள் கடந்த நிலையிலும் ஷர்வா இன்னும் அறைக்கு வந்திருக்கவில்லை. மொட்டை மாடியில் நின்று போன் பேசிக் கொண்டிருப்பதை அறிந்து கொண்டவள் அமைதியாக அறையில் அமர்ந்திருந்தாள்.

தந்தையின் பாராமுகத்தில் மனம் சுணங்கி இருந்தாலும் மனம் நிறைந்தவனையே கைபிடித்ததில் ஒருவித நிறைவுடனே இருந்தாள். சில நிமிடங்களுக்கு மேல் அவளை அமைதியாக அமர விடாமல் அவளின் கால்கள் துருதுருக்க அறையினுள்ளேயே நடக்க ஆரம்பித்தவளின் கண்ணில் அன்றைய செய்தி தாள் பட அதைக் கையில் எடுத்து பார்க்க ஆரம்பித்தவள் கண்கள் வியப்பில் விரிந்தன.

முதல் பக்கத்திலேயே கீழே பெரிய விளம்பரம் போடும் பகுதியில் தானும், கணவனும் புன்னகையுடன் நின்றிருக்கும் திருமண அறிவிப்பிற்கான செய்தியை பார்த்து ஆச்சரியப்பட்டாள்.

அவள் அப்படி வியந்து நின்றிருக்கும் போதே அறைக்குள் வந்த ஷர்வா அவளின் நிலையைக் கண்டு “என்ன அப்படி ஆச்சரியமா பார்க்கிற விதர்ஷணா?” என வினவினான்.

அவனின் பேச்சுக் குரலில் வியப்பு மாறாமல் அவனைப் பார்த்து “நம்ம திருமண அறிவிப்பை யார் பேப்பரில் கொடுத்தது?” எனக் கேட்டாள்.

அவளின் கேள்விக்கு ஷர்வா ஒரு புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுக்க, அதுவே சொன்னது அவன் தான் என்று. அதனால் “ஏன்?” என்று மட்டும் கேட்டாள்.

அதற்கும் அவன் மெல்லிய புன்னகையை மட்டும் மீண்டும் பதிலாகத் தர, “பதில் சொல்லுங்க ஜித்தா…” சிறு சிணுங்கலுடன் கேட்டாள்.

“என் மனைவி காதலிச்சவனையே கைபிடிச்சுட்டானு தெரிவிக்க, உன்னைப் பற்றித் தவறா சித்தரிக்க முயன்ற பத்திரிக்கையிலேயே இந்த அறிவிப்பை கொடுத்தேன்…” என்றான் அமைதியான குரலில்.

அவனின் பதிலில் விதர்ஷணாவின் உள்ளம் நெகிழ்ந்து போனது. காதலித்தது மட்டும் தான் அவள். இன்று இருவரும் கணவன், மனைவி என்ற சொந்த பிணைப்புடன் மாறிப் போனது அவனின் முயற்சி இல்லாமல் சிறிதும் நடந்திருக்காது என நன்றாகவே அறிந்தவள் அவள்.

அவனின் மனதை திறந்த நாளில் இருந்து அனைத்தையும் அவனின் செயலாக மாற்றிக் கொண்டதிலேயே உற்சாகம் கொண்டிருந்தாள். இப்போது இன்னும் அதிகமாக மாறியிருந்தது.

‘என்னவன் எனக்காகச் செய்தான்’ என்று உள்ளம் கொண்டாட்டம் போட வேகமாக அவனின் அருகில் வந்தாள். அவள் வந்த வேகத்தைப் பார்த்துத் தன்னால் இரண்டு அடிகள் பின்னால் போனான் ஷர்வா.

அதைக் கண்டவள் கால்கள் அப்படியே நின்றது. ஏதோ ஆர்வத்தில் அவனை நெருங்கி விட்டாளே தவிர அதிகப் பட்சம் கைகுலுக்குவதைத் தவிர அவள் அதிகப்பிரசங்கித் தனமாகச் செய்திருக்க மாட்டாள் என அவளுக்கே தெரியும்.

ஆனால் அதைக் கூட அவன் தவறாக நினைத்து விடுவானோ என அவள் மனம் தடுமாறிப் போனது. அதை அவளின் கால்களும் பிரதிபலிக்க இப்பொழுது தானே இரண்டு அடிகள் பின்னால் நகர்ந்தாள்.

அவளின் தடுமாற்றத்தைக் கண்டவனுக்குத் தன்னுடைய தவறு உரைத்தது. ‘அவ இப்போ உன் மனைவிடா!’ எனத் தனக்குத் தானே உள்ளுக்குள் அழுத்தமாகச் சொல்லிக் கொண்டவன், தானே தன் கால்களை விரைந்து போட்டு அவளின் அருகில் சென்றான். கையெட்டும் துரத்தில் அவளின் எதிரே நின்றவன்,

“சாரி விதர்ஷணா. என்னைப்பற்றி நான் தான் ஏற்கனவே சொல்லிருக்கேனே? என்னால என்னைச் சட்டுன்னு மாத்திக்க முடியலை. உனக்காகவே சீக்கிரம் மாத்திக்கிறேன். ஆனா அதுவரை எப்பவும் போல என்கிட்ட உரிமையுடன் இரு…!” என்றான்.

உரிமை கொண்டாட அவளுக்கு விருப்பம் தான். எல்லாம் தெரிந்து தான் அவனைக் கைபிடித்தாள். ஆனால் எல்லா நேரமும் தானே வழிய செல்ல முடியாதே என அவளின் பெண்மனம் நினைத்துக் கொண்டது.

என்றும் இல்லாத அவளின் அமைதியைக் கண்டு தான் அவளை வருத்தி விட்டதாகக் கருதிய ஷர்வா அவளிடம் இன்னும் தெளிவாகப் பேசி விடுவது நல்லது என நினைத்தவன் “இப்படி வந்து உட்கார் விதர்ஷணா. உன்னிடம் கொஞ்சம் பேசணும். என் மனசும் விரும்பி நம்ம கல்யாணம் நடந்திருந்தாலும், எனக்குள் இருக்கும் சில விஷயங்களை நான் தெளிவா சொல்லிவிடுகிறேன். பேசாம இருந்து ஒருத்தரை ஒருத்தர் வருத்திக்கிறதை விட ஆரம்பித்திலேயே தெளிவா பேசிவிடுவோம். அப்போதான் இப்போ நடந்தது போலச் சில சங்கடங்களை நாம தவிர்க்க முடியும். உட்கார்…!”படுக்கையைக் காட்டிச் சொன்னான்.

அவள் மெல்ல வந்து அமர, அவளுக்கும் தனக்கும் இருந்த இடைவெளியை தானே குறைத்தவன், அவளின் மடியில் இருந்த கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான். அதைச் செய்யவே அவன் மிகவும் போராட வேண்டியிருந்தது. ஆனால் அந்தப் போராட்டத்தைத் தன் முகத்தில் சிறிதும் காட்டிக் கொள்ளாமல் அவளைப் பார்த்தான்.

எப்பொழுதும் சல்வார், சட்டை, டீசர்ட், பேண்ட் என்று இருப்பவள் இன்று புடவையில் பாந்தமாக இருந்தாள். அன்றைய இரவிற்கு ஏற்ப லேசாக அழகுப் படுத்தி, மல்லிகை சூடி, காலையில் தான் போட்ட தங்கத்திலான தாலியுடன் மனைவி என்ற ஸ்தானத்தில் அவளின் அழகு கூடித் தெரிந்தது.

காலையில் மண அலங்காரத்தில் அவள் இன்னும் அம்சமாக இருந்ததை நினைத்துப் பார்த்தவன், “நீ காலையில் ரொம்ப அழகா இருந்த விதர்ஷணா…” என்றவனின் குரலில் ரசனை மிகுந்திருந்தது.

அதுவரை சாதாரணமாகக் கணவனைப் பார்த்துக் கொண்டிருந்த விதர்ஷணா அவனிடம் தெரிந்த ரசனையிலும், கண்களில் காதல் பொங்க பார்த்தவனின் பார்வையிலும் தடுமாறி போனாள்.

தன் கையை அவனுக்குக் கொடுத்து விட்டு முகத்தைக் குனிந்து பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

அவளின் அந்தச் செய்கையைக் கண்டு ஷர்வாவிற்குப் புன்னகை அரும்பியது.

இமை சிமிட்டாமல், விடாமல் பார்த்தே தன்னை ஓட வைப்பவள், தன் ஒற்றைப் பார்வைக்கே தடுமாறிப் போவது அவளின் மென்மையான உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்ட, வெகு வருடங்களுக்குப் பிறகு அவனிடம் குறும்பு தனம் வந்து அமர்ந்து கொண்டது.

“இங்கே விதர்ஷணா, விதர்ஷணானு ஒரு வாலு பொண்ணு இருந்துச்சு. அவளை இப்போ காணோம். நீ பார்த்தியா தாலி கட்டிய பொண்டாட்டி?” அவளைக் குறுகுறுவெனப் பார்த்துக்கொண்டே கேலி துள்ளி விளையாட கேட்டான் ஷர்வா.

குறும்பு நிறைந்த அந்தக் குரலில் விதர்ஷணா சட்டெனத் திரும்பி அவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

“என்ன இப்படி ஒரு ஆச்சரியப்பார்வை?” புருவத்தை உயர்த்தி இலகுவாகவே கேட்டான்.

“ஹா…! முரட்டு வீராப்பா போல ஒரு போலீஸ் ஆபிசரை பார்த்துத் தான் எனக்குப் பழக்கம். இப்போ அந்தப் போலீஸ் எங்க போனாருனு பார்க்கிறேன்…” அவனைப் போலவே சொல்லி இமையைச் சிமிட்டிக் காட்டினாள்.

“அந்தப் போலீஸ் வீட்டுக்கு வெளியே போனதும் வருவான். இப்போது சாதாரண ஷர்வா தான் இங்கே இருக்கான்…” எனச் சரிக்குச் சரியாகப் பதில் சொன்னவனைப் பார்த்து அவளின் வியப்பு கூடிக் கொண்டே போனதே தவிரச் சிறிதும் குறையவில்லை.

அவளின் பார்வையைப் பார்த்து “இதில் ஆச்சரியப் பட ஒன்னும் இல்லை விதர்ஷணா. இதான் நான். காக்கி உடையில் இருப்பது அந்த வேலைக்குத் தகுந்த மாதரி நான் போட்டுக் கொண்ட முகமூடி…” என்றவனைப் பார்த்துப் புரிந்தது என்னும் விதமாகத் தலையசைத்தவள் “நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கலாமா?” என்றாள்.

“ம்ம்… கேளு…!”

“என்னைப் பார்க்கும் போதெல்லாம் அவ்வளவு வெறுப்பைக் காட்டினீங்க. அப்புறம் எப்படி, எப்போ என் மேல உங்களுக்குப் பிடித்தம் வந்தது?” எனக் கேட்டாள்.

“நான் வெறுக்குற மாதிரி காட்டிக்கிட்டதுக்குக் காரணமும் நீதான். உன்னை எனக்குப் பிடிச்சதுக்குக் காரணமும் நீதான்…”

“நானா…?” என்று விழிகளை விரித்துக் கொண்டு கேட்டாள்.

“நீயே தான்…!” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னவன், “என்னை நீ முதல் முறை பார்த்த அன்னைக்கே நான் உன்கிட்ட ஒரு வித்தியாசத்தைப் பார்த்தேன். ஏதோ மயக்கத்தில் இருப்பவள் போல இருந்தே. அதுக்குப் பிறகு ஒரு வருஷத்துக்குப் பிறகு பார்க்கும் போது, அந்த ஆபத்திலிருந்து தப்பித்த அந்த நொடியில் கூட என்னை உனக்கு நெருக்கமானவனா நினைத்து அணைத்து, உடனே கலகலப்பா பேசின உன்னோட சுபாவம் எனக்கு அப்பவே வித்தியாசமா பட்டது…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

முதல் முதலில் அவனைப் பார்த்த அன்று தான் உளறியதையும், அன்றைய அவளின் மனநிலையையும் சொன்னாள்.

“என் ஆளுன்னு சொன்னீயா அப்பவேவா? கண்டதும் காதலா?” அதீத வியப்புடன் கேட்டான்.

“கண்டதும் காதல்னு சொல்ல முடியாது. ஆனா ஏதோ ஒரு தாக்கம் மனதில் விழுந்தது. அதுக்குப் பிறகு அப்போ, அப்போ என் ஞாபகத்தில் வந்து போவீங்க. ஆனா அதுக்கு மேல நான் அதைப் பெருசா எடுத்துக்கலை. ஆனா ஒரு வருஷத்துக்குப் பிறகு அந்த இக்கட்டான சூழ்நிலையில் பார்த்த போது எப்படி இருந்தது தெரியுமா? எனக்குச் சொந்தமானவரை சில நாள் பிரிவிற்குப் பிறகு திரும்பப் பார்க்கிறதைப் போல. அதான் என்னை அறியாமயே அணைச்சுட்டேன்…” ஆர்வமாகச் சொல்லிக்கொண்டே வந்தவள் கடைசி வார்த்தையில் தயங்கி நிறுத்தினாள்.

தான் தவறாக நினைத்திருப்பேனோ எனத் தயங்குகிறாள் எனப் புரிந்தவன் “அந்த நேரத்தில் உன் மனநிலை எப்படி இருந்திருக்கும்னு எனக்குப் புரிந்ததுடா. அதனால நீ வந்து அணைத்ததை நான் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை…” என இதமாகச் சொன்னான்.

அவனின் இதமான வார்த்தை விதர்ஷணாவின் மனதைக் குளிர்வித்தது.

“ஆனா அந்த இடத்தில் உங்களுக்குப் பதில் வேற ஒருத்தர் என்னைக் காப்பாற்றி இருந்தா கண்டிப்பா அப்படிச் செய்து இருக்க மாட்டேன். அது தான் முற்றிலும் உண்மைன்னு அன்னைக்கே எனக்கு நல்லா புரிஞ்சது…” என்று படபடவென்று அடுத்தடுத்து தன் மனநிலை மாற்றங்களை அவனை மனதில் ஏற்றிய நாளில் இருந்து இன்றுவரை எப்படி உணர்ந்தாள் என அருவி போல அவனிடம் கொட்டினாள்.

சிறிது நேரம் சென்ற பிறகு தான் மட்டும் விடாமல் பேசிக்கொண்டிருப்பது புரிய பட்டெனத் தன் பேச்சை நிறுத்தி ஷர்வாவின் முகத்தைப் பார்த்தாள்.

அவன் அவளையே வைத்த கண் வாங்காமல் அவள் இதழசைத்து தன் காதலை சொன்ன அழகை ரசித்துக் கொண்டிருந்தான்.

அவனின் தீர்க்கமான பார்வையில் தடுமாறியவள் “ஏன் அப்படிப் பார்க்கிறீங்க?” வெறும் காற்று தான் வருகிறது என்பது போல அவளின் குரல் ஒலித்தது.

“இதோ உன்னோட இவ்வளவு அன்பு தான்டா சூரியன் மாதிரி தீயா எரிஞ்சுக்கிட்டு இருந்த என் மனதை பனி போலக் குளிர வைத்து உன் அன்பில் என்னை உறையவே வைத்தது…” என்று குரல் கரகரக்க சொன்னான் ஷர்வஜித்.