பனியில் உறைந்த சூரியனே – 36

அத்தியாயம் – 36

நிதானம்! நிதானம்! என மீண்டும், மீண்டும் தனக்குத் தானே சொல்லிக்கொண்டான் ஷர்வஜித்.

அவன் கேட்ட நிதானம் சிறிதளவு மட்டும் அவனிடம் வந்து சேர சில நிமிடங்கள் பிடித்தன.

அந்தச் சில நிமிடம் கடந்த நிலையில் கண்களைத் திறந்தவன் கண்கள் ரத்தம் நிறம் கொண்டு சிவந்திருந்தன.

அவனின் ரத்தநாளங்கள் ‘எதிரில் இருப்பவனை ஏதாவது செய்து விடு!’ எனத் துடித்துக் கொண்டிருந்தன. ஆனாலும் எதுவும் செய்ய முடியாத தன் கையெறு நிலை அவனைக் கட்டிப்போட “சொல் சேகர்…!” என்றான் இழுத்துப்பிடித்த பொறுமையுடன்.

“எனக்கு எதுவும் தெரியாது சார்…” தலையைத் தொங்க போட்டு, கிழிந்த உதடுகளின் வழியே வார்த்தைகளை முனங்க விட்டான் சேகர்.

‘தேஞ்ச ரிக்கார்ட்’ எனத் தனக்குள் பற்களைக் கடித்து முனங்கினான் ஷர்வா.

சேகரை பிடித்து அரை நாளாகியிருந்தது. இந்த அரை நாளில் சரவணன் சொன்ன விஷயங்களுடன், சேகர் சொன்ன சில விஷயங்கள் ஒத்துப் போனது. பிள்ளைகளை எப்படிக் கடத்துவோம், எப்படிக் கைமாத்துவோம் என்று சொன்னவன், சேகர் யாரிடம் கடைசியாகக் குழந்தைகளைக் கொடுத்தான் என்பதைச் சொல்ல மறுத்தான்.

அதைச் சொல்ல வைக்க ஷர்வாவும் பல வழிகளில் முயன்று விட்டான். அடித்துப் பார்த்தான். பொறுமையாகப் பேசிப் பார்த்தான். உண்மையைச் சொன்னால் அவனுக்குக் கிடைக்கும் தண்டனையைக் குறைக்கத் தான் ஏற்பாடு செய்வதாகக் கூடச் சொல்லிப் பார்த்தான். எதற்கும் சேகர் மசிவதாக இல்லை. தான் பிள்ளையைக் கொடுத்த ஆளைப் பற்றி எந்த விவரமும் தனக்குத் தெரியாது. மேலிடத்தில் இருந்து தனக்கு வந்த உத்தரவு படி தான் புதிதாக வந்த ஆளிடம் கொடுத்ததாகச் சொன்னான். அதற்கு மேல் ஒரு குறிப்பும் கொடுக்க மறுத்து விட்டான்.

ஷர்வாவிற்கு அவன் பொய்ச் சொல்லுவதாகப் பட்டது. அவன் பிள்ளைகளைக் கொடுத்த ஆளை பற்றிச் சிறு குறிப்பாவது அவனுக்குத் தெரிந்திருக்கும் என்று உறுதியாக நம்பினான்.

சேகரின் பேச்சு முறையும், அவனின் உடல் மொழியும் அவனிடம் ஏதோ குறிப்பு உள்ளதை உணர்த்த அந்தக் குறிப்பை எப்படியாவது அறிந்து விடத் துடித்தான்.

அந்தத் துடிப்பு பிள்ளைகளை நினைத்து வந்த துடிப்பு! சேகரின் ஒரு வாக்குமூலம் குழந்தைகளைக் காப்பாற்ற உதவும் என்பதால் அதைப்பற்றி அறியும் முனைப்பு அவனை உந்தி தள்ளியது.

மீண்டும், மீண்டும் சேகர் தெரியாது என்ற வார்த்தையை மட்டும் சொல்ல, ஒரு முடிவுக்கு வந்தவன், தன் அருகில் நின்றிருந்த வேலவனிடம் கண்ணைக் கட்டினான்.

அவனின் குறிப்பை உணர்ந்து வெளியே சென்ற வேலவன், திரும்பி வரும் போது கூடவே இன்னும் ஒருவரும் வந்தார்.

“வாங்க டாக்டர்…! செக் பண்ணுங்க…!” எனச் சேகரை நோக்கி கை காட்டினான்.

ஆமோதிப்பாகத் தலையசைத்த மருத்துவர் சேகரிடம் சில பரிசோதனைகளைச் செய்ய ஆரம்பித்தார்.

விசாரணையின் நடுவில் ஏன் மருத்துவச் சோதனை நடக்கிறது எனப் புரியாமல் சேகர் முழிக்க, அதைக் கண்ட ஷர்வா, “என்ன சேகர்… எதுக்கு இப்போ உன்னை டாக்டர் செக் பண்றார்னு யோசிக்கிறியா? நீயா உண்மையைச் சொல்ல மாட்டேன்னு அடம் பிடிக்கிற. உன்னை உண்மையைச் சொல்ல வைக்கத் தான் டாக்டர் வந்திருக்கார்…” எனச் நிதானமாகச் சொன்னான்.

மருத்துவர் எதற்கு என இன்னும் புரியாமல் முழிக்க, “சேகர் ரொம்பக் குழம்பி போயிருக்கான் டாக்டர். நீங்க இப்போ எப்படி விசாரிப்பிங்கன்னு கொஞ்சம் அவனுக்கும் புரியுற மாதிரி சொல்றீங்களா?” என மருத்துவரை பார்த்துக் கேட்டான்.

“நாம இவரை இப்போ உட்படுத்த போவது Narco Analysis சோதனை. அதாவது உண்மை கண்டறியும் சோதனை. இந்தச் சோதனை செய்ய முதலில் இவர் உடல் எந்த அளவு ஆரோக்கியமா இருக்குனு செக் பண்ணனும். அப்படி ஆரோக்கியமா இருந்தா நான் ஒரு ஊசி போடுவேன்.

இவரின் உடலுக்குள் மயக்க மருந்தை செலுத்துவதால் இவரோட கற்பனைத் திறனை மட்டுப்படுத்தி மனதை அரை மயக்க நிலைக்குக் கொண்டு சென்று இவரிடமிருந்து வாக்குமூலமோ அல்லது வழக்கின் கண்டு பிடிக்கப்படாத ரகசியங்களையோ அறிந்து கொள்ளும் முயற்சி தான் இந்த உண்மை கண்டறியும் சோதனை.

இந்த ஊசி மருந்து இதயத்துடிப்பின் வேகத்தை, ரத்தநாளங்களின் ஓட்டத்தை, முதுகெலும்பின் வலுவை, இவை எல்லாவற்றையும் விட மூளையின் செயல்பாட்டைச் சோர்வடையச் செய்யும்.

அதனால் இந்த நிலையில் இருப்பவரிடம் நமக்கு என்ன தகவல் தேவையோ அதை மட்டும் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இந்த முறையில் மயக்கத்தில் ஆழ்மனதில் மறைந்திருக்கும் உண்மையை வெளிப்படுத்துவதால் நமக்குத் தேவையான உண்மை கிடைக்கும்.

இந்த மருந்துகள் கொடுக்கப்படும் போது பரிசோதனைக்கு உள்ளாபவரின் வயது, உடல் நிலை, ரத்த அழுத்தம் இதில் ஏதாவது கவனக்குறைவாக இருந்தால் மயக்க நிலைக்குச் சென்றவர் மீண்டும் நினைவு திரும்பாமலேயே மரணத்தைத் தழுவும் ஆபத்தும் உண்டு. அதான் எல்லாம் சரியா இருக்கானு செக் பண்றேன்…” என மருத்துவர் விவரமாகச் சொல்லி முடிக்க, அவர் சொன்னதைக் கேட்டு சேகர் விழுக்கென நிமிர்ந்து பார்த்தான்.

அவனின் பார்வையைக் கண்டு கொள்ளாமல் “ஓகே டாக்டர்… சேகருக்கு இப்போ நல்லாவே புரிஞ்சிருக்கும். இனியும் நாம தாமதிக்க வேண்டாம். அவனைச் செக் பண்ணிட்டு ஊசியைப் போட்டுருங்க. சீக்கிரம் விசாரணையை ஆரம்பிச்சு அவன் கடத்திய பிள்ளைகளைப் பற்றித் தெரிஞ்சுக்கணும்…” என்றான் ஷர்வா.

அவன் அப்படிச் சொல்லவும் மருத்துவர் தயக்கத்துடன் அவனைப் பார்த்து “சாரி ACP சார்… நான் இப்போ ஊசி போட முடியாது…” என்றார்.

“வாட்…! என்ன சொல்றீங்க டாக்டர்? இவனிடம் இருந்து தான் பிள்ளைகளைக் காப்பாத்த முக்கியமான தகவல் கிடைக்க வேண்டி இருக்கு. இவன் போலீஸ் டீரிட்மென்ட் எதுக்கும் அசையலைன்னு தான் உங்களை வர வச்சுருக்கோம். அப்படி இருக்கும் போது ஏன் ஊசி போட முடியாதுன்னு சொல்றீங்க?”

“ஊசி போடும் நிலையில் இவர் உடல் நிலை இல்லை. இப்போ மயக்க மருந்து கொடுத்தா, கண்டிப்பா இவர் திரும்ப உயிரோடு கண்ணு முழிப்பார்னு சொல்ல முடியாது. அதனால்தான் சொல்றேன்…” என்று மருத்துவர் கையை விரித்தார்.

“என்ன டாக்டர் இப்படிச் சொல்றீங்க?” என்று ஷர்வாவின் முகம் சோர்வில் சுருங்க, சேகரின் முகமோ பிரகாசமடைந்தது.

அவனின் பிரகாசத்தை ஓரக் கண்ணில் கண்ட ஷர்வா மருத்துவரிடம் திரும்பி “சரி டாக்டர்… ஆனா எனக்கு ஒரு விஷயம் மட்டும் தெளிவு படுத்துறீங்களா?” என்று கேட்டான்.

“கேளுங்க…”

“இப்போ சேகருக்கு ஊசி போட்டா, ஊசி போட்ட உடனே உயிர் போய்விடுமா?”

“இல்லை… போட்டதும் உயிர் போகாது. முதலில் மயக்கத்தில் மட்டும் ஆழ்ந்து போவார். அப்புறம் சிறிது நேரம் கழித்துத் தான் கொஞ்சம், கொஞ்சமாக அவரின் உடல்நிலை மோசமடையும். மயக்கம் தெளியும் நேரத்திற்குள் அவர் அதிலிருந்து மீள வில்லை என்றால் காப்பாற்றுவது கடினம்…”

“சோ… ஊசி போட்டதும் உயிர் போகாது. நேரமெடுக்கும்… சரிதானே? நடுவில் நமக்குக் கொஞ்ச நேரம் இருக்கு. அந்தச் சிறிது நேரமே எனக்குப் போதும். ஊசியைப் போட்டு விடுங்க டாக்டர்…!” என்றவனின் அழுத்தமான குரலில் சேகர் அரண்டு போய்ப் பார்த்தான்.

“என்ன விளையாடுறீங்களா மிஸ்டர்.ஷர்வா? ஒரு உயிர் போகும்னு தெரிஞ்சே நான் எப்படி ஊசி போட முடியும்? என்னால முடியாது…”

“நீங்க ஒரு குற்றவாளியின் உயிருக்கு இவ்வளவு மதிப்புக் கொடுக்கத் தேவையில்லை டாக்டர். இவன் இதுவரை எத்தனை பிள்ளைகளைக் கடத்திருக்கான் தெரியுமா? அத்தனை பிள்ளைகளும் இப்போ உயிரோட இருக்காங்களானே தெரியலை. இப்போ கடத்திய பிள்ளைகளின் விவரத்தை இவன் சொன்னா அந்தப் பிள்ளைகளை மீட்க முடியும்னு தெரிஞ்சே இவன் உண்மையைச் சொல்ல மாட்டேன்னு அடம் பிடிக்கிறான்.

இப்போ இவனின் உயிரை விட எனக்கு அந்தப் பிள்ளைகள் தான் முக்கியம். குற்றவாளியை விடப் பிஞ்சு குழந்தைகளை மட்டும் மனதில் வைத்து இதை நீங்க செய்யணும் டாக்டர்…” என வெகுவாகப் பேசி மருத்துவரை சம்மதிக்க வைத்தான்.

மருத்துவர் மறுத்து பேசும் போது சந்தோஷமாகவும், ஷர்வா செய்தே ஆக வேண்டும் என்று சொல்லும் போது உயிர் பயத்திலும் மிரண்டு போயிருந்தான் சேகர்.

அந்த மிரட்சியைத் தான் ஷர்வாவும் எதிர்பார்த்தான். குற்றவாளியை குழப்பத்தில் ஆழ்த்தி, அவனுக்கு உயிர் பயத்தை உண்டு செய்து, உண்மையை வர வைக்க மருத்துவருடன் சேர்ந்து ஷர்வா செய்யும் யுக்தியே இது.

சிறிது நேரம் மறுப்பது போலவும், சம்மதிக்க வைக்கப் போராடுவது போலவும் சேகர் முன்னிலையில் இருவரும் வேண்டும் என்றே வழக்காட… சேகருக்கு உயிர் பிழைத்தால் போதும் என்ற மனநிலையே உண்டாகிற்று.

இறுதியில் அரை மனதாகச் சம்மதம் சொல்வது போல மருத்துவர் சொன்ன நொடியில், உயிர் பயத்தில் மிரண்ட சேகர் “ஊசி எல்லாம் வேண்டாம் சார். நானே உண்மையைச் சொல்லிடுறேன்…” என்று அலறினான்.

‘அப்படி வா டா வழிக்கு…’ எனத் தனக்குள் சொல்லிக் கொண்ட ஷர்வா, மருத்துவரை பார்த்து சேகர் கண்டு கொள்ளாத வகையில் அர்த்தமாக மென்னகை புரிந்தான்.

மருத்துவரும் அதை உள்வாங்கிப் பிரதிபலித்து ‘வெற்றி!’ என்பது போலக் கட்டை விரலை லேசாக அசைத்துவிட்டு வெளியே சென்றார்.

“ம்ம்… சொல் சேகர்…! யாரிடம் குழந்தைகளைக் கொடுத்த…?”

“நிஜமா எனக்குக் குழந்தைகளை வாங்கிட்டு போனவனோட விவரம் தெரியாது சார்…” என்று மீண்டும் சொன்னவனை ஷர்வா உக்கிரமாகப் பார்த்து “என்னடா திரும்பச் சொன்னதையே சொல்லி என்னை ஏமாத்தலாம்னு பார்க்கிறியா?” எனக் கேட்டான்.

“இல்லை சார்… நிஜமா தான் சொல்றேன். அவனைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனா அவன் யாரிடம் கடைசியா பிள்ளைகளைக் கொடுப்பான்னு எனக்குத் தெரியும்…” என்றான்.

அவனின் பேச்சில் ஷர்வா சுறுசுறுப்பானான். “யார் அது…? அவனை மட்டும் உனக்கு எப்படித் தெரியும்?”

“அவன் மும்பைல இருக்கான் சார். எனக்குப் பழக்கமான தோஸ்த் தான். அவன்கிட்ட தான் கடைசியா குழந்தைகள் போகும். அவன் தான் அங்கிருந்து பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி விடுவான்…” என்றவன் அவன் யார் எங்கிருப்பான் என்று விவரம் சொல்ல, அந்த நொடியில் இருந்து ஷர்வாவின் வேகம் ஆரம்பித்தது.

அடுத்தவன், அடுத்தவன் என்று தேடி அலைய தேவையில்லாமல் முக்கியமான ஆளையே சேகர் அடையாளம் காட்டியதில் இந்தப் பிள்ளைகளையாவது காப்பாற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் அதி வேகமாகச் செயலில் இறங்க ஆரம்பித்தான்.

அடுத்துச் செய்ய வேண்டியதை துரிதமாகத் திட்டமிட்டு காயை நகர்த்தியவன் சென்று நின்ற இடம் மும்பையில்.

சேகர் ஓரளவு தெளிவாகவே விஷயத்தைச் சொல்லியிருந்ததால் வெளிநாட்டிற்கு அனுப்ப தயாராக இருந்த குழந்தைகள் இருக்கும் இடத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இருந்தான் ஷர்வஜித்.

மும்பையில் அந்தக் குறுகிய சாலையில் ஷர்வாவும், அவனின் அருகில் வேலவனும், மும்பை காவல் துறையைச் சேர்ந்த இரண்டு காவலர்களும் தக்க தருணத்தை எதிர் பார்த்து காவல் வாகனத்தில் அமர்ந்த படி காத்திருந்தார்கள்.

சேகர் மூலமாக நாளை தான் வெளிநாடு செல்ல போகும் நாள் என்று அறிந்ததும், உடனே மும்பை காவல் நிலையத்திற்குத் தகவல் சொல்லி, சில துரித ஏற்பாடுகளைச் செய்து விட்டு, தமிழ் நாட்டைச் சேர்ந்த ஐந்து காவலர்களையும் அழைத்துக் கொண்டு விரைவில் அங்கு வந்து சேர்ந்திருந்தான்.

“எல்லா ஏற்பாடும் சரியா இருக்கா இன்ஸ்பெக்டர்? அந்தப் பக்கம் இருக்கும் நம்ம ஆளுங்களை அலர்ட்டா இருக்கச் சொல்லுங்க. ஜஸ்ட் மிஸ்ல கூடக் குற்றவாளிகள் தப்பிக்கக் கூடாது. அதே நேரம் குழந்தைகளையும் பத்திரமா மீட்கணும்…” என்று மும்பையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டரிடம் ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தான் ஷர்வா.

“எல்லாம் சரியா போய்கிட்டு இருக்கு சார். குற்றவாளிகள் அவங்க இடத்தில் இருந்து கிளம்பியதும் நம்ம ஆளுங்க குறிப்பிட்ட இடைவெளி விட்டு அவங்களைப் பின் தொடர்வார்கள். அதே நேரம் நேரெதிராக முன் பக்கம் இருந்தும் நம்ம ஆளுங்க இங்கே இருந்து மேலே செல்ல விடாமல் தடுத்து நிறுத்துவார்கள். நாம் இங்கே மடக்கி பிடித்ததும் பின்பக்கம் இருந்து அவர்களும் அட்டாக் செய்வார்கள்…” என்றார்.

“ஓகே…! சரியா குற்றவாளிகள் வேன் பதினொரு மணிக்கு இந்தப் பக்கம் வரலாம். வந்ததும் நாம ஏற்கனவே போட்டு வச்ச பிளான் படி எல்லாம் சரியா நடக்கணும். யாரும் அசந்துராதீங்க…” என்று தன் கூட வந்திருந்த காவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்தான்.

“கவனமாய் இருப்போம் சார்…” என்று அவனுடன் இருந்த காவலர்கள் சொல்ல, அதைத் தலையசைத்து ஏற்றுக் கொண்டவன், ஒரு நிமிடம் கண்ணை மூடி தன்னை நிதானத்திற்குக் கொண்டு வந்தான். பிள்ளைகளைப் பத்திரமாக மீட்டு விட வேண்டும் என்று அவனுக்கு அவனே உறுதி கூறிக்கொண்டான்.

நேரம் கடந்து பதினொரு மணியளவில் இவர்கள் இருக்கும் இடத்தை நெருங்கி வேன் வந்து கொண்டிருப்பதாக, அந்தப் பக்கம் இருந்து அதனைத் தொடர்ந்து வரும் காவலர்கள் தகவல் தெரிவிக்கவும், மற்ற காவலர்களும் தயார் நிலையில் நின்றனர்.

நேரம் நெருங்கியது. வேன் ஷர்வா இருந்த வாகனத்தைக் கடந்து செல்வதைக் கண்டவன் மறைவிடத்தை விட்டு வெளியே வந்து அதை ஒட்டிய படியே வாகனத்தைச் செலுத்தச் சொன்னான்.

வாகன ஓட்டியும் துரிதமாகச் செயல் பட்டு வேனை உரசுவது போல் சரியாகச் செலுத்த ஆரம்பித்தார்.

இவர்கள் வலது பக்கம் வேனை நெருக்க, அதே போல இடது பக்கம் இருந்தும் இன்னொரு காவல் வாகனம் வேனை நெருங்கி வர ஆரம்பித்தது.

வேன் டிரைவர் ஆபத்தை உணர்ந்து வண்டியை வேகமாகச் செலுத்தி தப்பிக்க முயல, வேனை நெருங்கி வந்து கொண்டிருந்த இரு காவல் வண்டியில் இருந்தவர்களும், ஒரே நேரத்தில் வேகமாக வண்டியின் சக்கரத்தை குறிவைத்து சுட ஆரம்பித்தார்கள்.

சரியாகச் செலுத்தப்பட்ட தாக்குதலில் தோட்டாவை வாங்கிக் கொண்டு காற்றை வெளியிட்டது வேனின் சக்கரம். திடீர் தாக்குதலில் தன் கட்டுப்பாட்டை இழந்து வேன் தடுமாற ஆரம்பிக்க, அதே நேரம் முன்னால் வந்த இன்னொரு காவல் வாகனம் வேனை மேலும் செல்லவிடாமல் தடுத்து நிறுத்த முயன்றது.

அந்த நேரத்தில் சாலையில் அதிகம் போக்குவரத்து இல்லை என்பதால் அவர்களின் தாக்குதலில் வேனை செலுத்திக் கொண்டிருந்தவன் சக்கரம் பழுதடைந்து இருந்தாலும் பரவாயில்லை என வாகனத்தின் வேகத்தைக் குறைத்துப் பின் பக்கமாகச் செல்ல முயன்றான்.

ஆனால் அந்த நேரம் சரியாகப் பின்னால் தொடர்ந்து வந்த காவல் வாகனம் வேனை மேலும் செல்ல விடாமல் முட்டுக்கட்டை போட்டது.

திட்டமிட்டபடி வேன் சுற்றிவளைக்கப்பட்டது. தாங்கள் மடக்கப்பட்டதை உணர்ந்து வேனில் இருந்த ஆட்கள் தாக்குதலை கையில் எடுத்தனர்.

தங்களிடமிருந்த துப்பாக்கியால் தாக்க ஆரம்பித்தார்கள். “போலீஸுக்கு எப்படிடா தகவல் தெரிஞ்சது?” வேனில் இருந்த தலைவன் உக்கிரமாகக் கத்திக் கொண்டே காவலர்களைத் தாக்க ஆரம்பித்தான்.

“அட்டாக்…!” என ஷர்வா தன் புளுடூத் வழியாகவும் கத்த, நான்கு வாகனத்தில் இருந்த காவலர்களும் ஒன்று போல் சுற்றிலும் நின்று தாக்க ஆரம்பித்தனர்.

சிறிது நேரத்தில் அந்த இடமே போராட்ட களமாக மாற ஆரம்பித்தது. வேனில் இருந்த ஆட்களை விடக் காவலர்கள் அதிகம் இருந்ததால் அவர்களின் கை ஓங்கி இருக்க,

வேனில் இருந்த நால்வரும் கை, கால் எனத் தோட்டாக்களை வாங்கிக் கொண்டு வீழ்ந்தனர்.

நான்கு குற்றவாளிகளையும் காயத்துடன் காவல்துறையினர் கைது செய்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அவர்களை அனுப்பி வைத்து விட்டு வேனை சோதனையிட, அங்கே ஆறு பிள்ளைகள் இருக்கைக்குக் கீழே மயக்கத்துடன் கிடந்தனர்.

அனைவரும் பத்து வயதிற்குள் இருந்த ஆண் குழந்தைகள். பிள்ளைகள் இருந்த நிலையை ஆராய்ந்து பார்த்தான். அவர்களின் தலை மொட்டை அடிக்கப்பட்டிருந்தது. முகத்திலும் சிறுசிறு காயங்கள் இருந்தன. அவர்களுக்கும் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தான் ஷர்வா.

குற்றவாளிகள் மும்பை காவலர்களின் பாதுகாப்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட, குழந்தைகளுக்கும் உரிய சிகிச்சை அளிக்கப் பட்டது.

குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமான மயங்க மருந்து கொடுக்கப் பட்டிருக்கிறது. அதில் இருந்து தெளிய வைக்க மாற்று மருந்து கொடுக்கப் பட்டிருக்கிறது என்று மருத்துவ அறிக்கை வந்தது. அதோடு வேறு உயிருக்கு ஆபத்தாக ஒன்றும் இல்லை என்று சொல்லவும் ஷர்வா நிம்மதி பெருமூச்சு விட்டான்.

அடுத்ததாக மும்பை கமிஷ்னர் அலுவலகம் வந்தவன் கமிஷ்னரை சந்திக்கச் சென்றான். “நம் திட்டம் வெற்றிகரமாக முடிந்தது சார். அடுத்து ப்ரசீஜர் எல்லாம் முடிச்சுட்டு குழந்தைகளையும், குற்றவாளிகளையும் என் கஸ்டடியில் அழைத்துப்போக உங்கள் அனுமதி வேண்டும்…” என்று கேட்டான்.

அவரும் அவனின் செயலை பாராட்டி விட்டு, மாநிலம் விட்டு நடந்த குற்றம் என்பதால் அதற்கான தகுந்த நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளையும், குழந்தைகளையும் தகுந்த ஏற்பாடுகளுடன் சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

ஷர்வா சென்னை வந்து இறங்கிய அன்று குழந்தை கடத்தல் பற்றிய செய்திதான் ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

செய்தியை பார்த்து விதர்ஷணா தன் ஜித்தனை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டாள். அதோடு அவளின் மனது சந்தோஷத்தில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. விடிந்தால் அவளின் ஜித்தனுடன் திருமணம் என்றால் மனம் ஆர்ப்பரிக்காதா என்ன?

அதுவும் சில நாட்களாகப் பேசாமல் இருந்த தந்தையே அவளைப் பெயர் சொல்லி அழைத்து, “ஷர்வஜித்துடன் உனக்குத் திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கிறேன்…” என்று சொன்னதால் அளவில்லா ஆனந்தத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தாள்.

அவள் சந்தோஷத்துடன் தொலைக்காட்சியைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்க, கருணாகரனோ அதை உணர்ச்சியற்று வெறித்துக் கொண்டிருந்தார்.