பனியில் உறைந்த சூரியனே – 34

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 34

விதர்ஷணா அன்று மிகவும் சந்தோசமாக இருந்தாள். தன் மனதுக்குப் பிடித்தவன் தன்னை விரும்புவதாகச் சொன்னது மட்டுமில்லாமல் இனி தன்னைக் கைபிடிக்க ஆக வேண்டிய காரியங்களை அவனே பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கை உண்டாக வீட்டிற்குள் சந்தோசமாக வளைய வந்தாள்.

அவளின் நடவடிக்கையைக் கருணாகரன் வினோதமாகப் பார்த்தாலும் ‘இன்னும் கொஞ்ச நாள் தான். அதற்குள் உனக்குத் திருமணம் முடித்து வைத்து விடுவேன்’ என்று மகளிடம் மானசீகமாகச் சொல்லிக் கொண்டார்.

அன்று மாலை வர போகும் மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தடபுடலாகச் செய்ய ஆரம்பித்தார்.

அதைக் கவனித்தாலும் இதனால் எனக்கு ஒன்றும் இல்லை என்பது போல வீட்டில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தைப் புறம் தள்ளி நிறுத்தி, அவளின் ஜித்தனை மட்டும் மனதில் வரித்து அவனுடன் கனாவில் உலா போய்க் கொண்டிருந்தாள்.

பூர்வாவிற்கு அழைத்து ஷர்வா தன் மனதை சொன்னதைச் சொல்லி, தன் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டாள்.

“ஜெட் வேகம் தான்டி நீ! காதல்னு சொல்லி கொஞ்ச நாளில் கல்யாணம் வரை வந்திட்ட. சும்மாவே காற்றில் பறப்பது போலத் தான் சுத்துவ. இப்போ கேட்கவா வேணும்? என்ஜாய் பண்ணுடி. ஆனாலும் சொன்னது போலவே தாலி கட்டிட்டியேடி! தாலி கட்டிட்டியே…! என்று ராகமாகப் பாடி தோழியைக் கேலி செய்து வாழ்த்தினாள் பூர்வா.

“என் புருஷனுக்கு நான் தாலியும் கட்டுவேன். மெட்டியும் போடுவேன். உனக்கு என்னடி உப்பிய பூரி…” என்று வாயாடி கொண்டிருந்த விதர்ஷணாவின் அறை கதவு தட்ட பட, பூர்வாவிடம் விடை பெற்றுவிட்டு சிரித்த முகத்துடன் போய்க் கதவை திறந்தாள்.

“என்ன தர்ஷி ரொம்பச் சந்தோஷமா இருக்க? சாயந்திரம் மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க வரப் போறதை நினைச்சு அழுதுகிட்டு இருப்ப. உன்னைச் சமாதானப்படுத்திப் பெரியப்பாகிட்ட இந்தப் புரோகிராமை நிறுத்த சொல்லி பேசுவோம்னு வந்தேன். அதுக்குத் தேவையே இல்லை போல. வர போற மாப்பிள்ளையைக் கட்டிக்கச் சந்தோஷமா தயார் ஆகிட்ட போல. உன் போலீஸ்காரர் கதி அதோ கதி தானா?” என்று கேலியாகக் கேட்ட தேவாவிடம்,

“என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது?” என்று உக்கிரமாக முறைத்து கேட்டாள்.

“கல்யாணத்துக்குத் தயாரா இருக்குற கல்யாண பொண்ணு போலத் தெரியுது…” தேவா கேலியை தொடர்ந்தான்.

“கல்யாணத்துக்குத் தயார்னு வேணும்னா சொல்லு! ஆனா இன்னைக்கு வர போற ஆளு கூட என்னைக் கனெக்ட் பண்ணி பேசாதே…!” கண்டிப்புடன் சொன்னாள்.

“ஓ…! அப்போ வேற யார் கூட?” வியந்து கேட்டான்.

“தெரியாத மாதிரி கேட்காதே அண்ணா. என் ஜித்தா தவிர வேறு யார்? என் ஜித்தா கூடத் தான்! என் ஜித்தா கூட மட்டும் தான்…!” என்று அழுத்தி சொன்னாள் விதர்ஷணா.

“நீ தான் அவர் இன்னும் உன்னை விரும்பலனு சொன்னியே… அப்புறம் எப்படி இவ்வளவு நம்பிக்கையா சொல்ற?”

“அது முந்தைய நாள் முன் வரை. இப்போ ஜித்தா அவர் மனசை சொல்லியாச்சு. சொல்ல வச்சுட்டோம்ல…” என்று சுடிதாரில் இருந்த கழுத்துப் பட்டையைத் தூக்கி விட்டு கொண்டாள்.

“இது எப்போ நடந்துச்சு?” தேவா ஆச்சரியமாகக் கேட்க,

“நேத்து தான். அப்பா மாப்பிள்ளை பார்க்கிறதை சொல்லி உங்க பதில் தெரியலைனா சூசைட் பண்ணிக்குவேன்னு சொன்னேன். அப்போ தான் சொன்னார்…” என்று சிலதை மட்டும் அண்ணனிடம் சொன்னாள்.

“என் தங்கச்சி கெட்டிக்காரி தான். நினைச்சதை சாதிச்சுட்டியே. வெரிகுட்…!” என்றான் மெச்சுதலாக.

“சரி, அடுத்து என்ன செய்யப் போற? இன்னைக்கு மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க வருவாங்களே?”

“அது நான் ஒன்னும் செய்யத் தேவை இல்லைண்ணா. அவரே செய்வார். இன்னைக்கு யாரும் வர மாட்டாங்க…” நம்பிக்கையுடன் சொன்னாள்.

“சரிதான்! கல்யாணத்துக்கு இந்த அண்ணனை எல்லாம் கூப்பிடுவியா? இல்ல கல்யாணம் முடிச்சுட்டு நியூஸ் சொல்லுவியா?” என்று தேவா கேலியுடன் கேட்க,

“யாருக்கும் தெரியாமல் திருட்டுக் கல்யாணம் பண்ணிட்டு போவேன்னு நினைச்சியா அண்ணா? என் காதலை மறுக்குற அப்பா சம்மதத்தோட அவர் முன்னாடி தான் கல்யாணம் பண்ணிப்பேன்….” என்று திடமாகவே சொன்னாள்.

“சும்மா விளையாட்டா கேட்டேன் டா தர்ஷி. இதுக்கு ஏன் இவ்வளவு டென்ஷனா பதில் சொல்ற. உன் கல்யாணத்தை ஜாம், ஜாம்னு நடத்திரலாம். கவலையை விடு…!” என்றவன்,

“பெரியப்பாகிட்ட நீயே பேசிடுறது நல்லதுடா. கடைசி நேரத்தில் தெரிஞ்சு டென்ஷனாகி உடம்புக்கு எதுவும் இழுத்து விட்டுக்கப் போறார். போய்ப் பேசு! போ! நானும் வந்து பேசுறேன்…”

“நீ சொல்றது சரிதான்ணா. ஆனா அப்பா என்கிட்ட முகம் கொடுத்துக் கூடப் பேச மாட்டிங்கிறார். நான் என்ன செய்ய?” என்று வருத்தத்துடன் கேட்டாள்.

“அதுக்காக அப்படியே விட்டுற கூடாது தர்ஷி. உன் நிலையை நீ எடுத்து சொல்லி தான் ஆகணும். வந்து பேசு! வா…!” என்று தங்கையை அழைத்துச் சென்றான்.

மாடியில் இருந்து கீழே இறங்கியதும் விதர்ஷணாவின் கால்கள் தயங்கி நின்றன. அவளே தந்தையிடம் பேச வேண்டும் என்று நினைத்தவள் தான். ஆனால் ஒவ்வொரு முறையும் அவரின் உதாசீனத்தில் அமைதியாகக் கடந்து சென்றிருந்தாள்.

இன்றும் உதாசீனம் வருமோ என்று நினைத்தவளுக்குக் கால்கள் நகர மறுத்தன.

அதைக் கண்ட தேவா “தயங்காதே தர்ஷி. வா…! எப்ப இருந்தாலும் பேசித்தான் ஆகணும்…” என்றவன் அவளின் தோளை தட்டி கொடுத்து அழைத்துச் சென்றான்.

இருவரும் சேர்ந்து வருவதைப் பார்த்ததும் கருணாகரன் கேள்வியுடன் பார்த்தார்.

“அப்பா…” என விதர்ஷணா வாயை திறந்ததும் அவரின் கேள்வி பார்வை கோபப் பார்வையாக மாறியது.

“என்கிட்ட யாரும் பேச வேண்டாம்னு சொல்லு தேவா…”

“பெரியப்பா என்ன இது? அவ உங்ககிட்ட பேசாம வேற யாருக்கிட்ட பேசுவா? தர்ஷி என்ன சொல்ல வர்றான்னு கொஞ்சம் கேளுங்களேன்…”

“நீயும் அவளுக்குச் சப்போர்ட் பண்ணாதே தேவா! நீ அன்னைக்கு என்ன சொன்ன? நான் பேசி அவ மனசை மாத்துறேன். நீங்க ரொம்பக் கன்ரோல் பண்ணி அவளைத் தவறான முடிவு எடுக்க வச்சுறாதீங்கனு சொன்னதால் தான் கொஞ்ச நாள் விட்டுப் பிடிச்சேன். ஆனா ஒழுங்கா படிப்பை கூட முடிக்கலை. அதுக்குள்ள அவன் பின்னாடி சுத்தி இப்படி என் மானத்தையே வாங்கி வச்சுருக்கா. இன்னும் என்ன நடக்கக் காத்திருக்கா?” கோபமாகக் கத்தினார்.

அவர் அறையில் தான் பேசிக் கொண்டிருந்தார்கள் என்பதால், அவரின் சத்தம் கேட்டு வேலைக்காரர்கள் ஒரு நிமிடம் வேலையை நிறுத்தி விட்டு அவரின் அறையைப் பார்த்ததை அறையினுள் இருந்தவர்கள் உணரவில்லை.

விதர்ஷணா தந்தையின் கோபத்தில் கண்கலங்க நின்று கொண்டிருந்தாள்.

பெரிய தந்தையை நிதானமாகப் பார்த்த தேவா “நீங்க இவ்வளவு கோபப்படுற அளவுக்கு நம்ம தர்ஷி எந்தத் தப்பும் செய்ததா எனக்குத் தோணலை பெரியப்பா. யாரும் செய்யாத தப்பை அவ செய்யலை. காதலிக்காம இருக்குறவங்க யார்னு விரல் விட்டு எண்ணக் கூடிய நிலையில் தான் ஊர், உலகம் இருக்கு.

நம்ம தர்ஷி காதலிச்சுட்டு நமக்குத் தெரியாம ஒன்னும் கல்யாணம் பண்ணிக்கலையே? நம்ம அனுமதி கேட்டு, இதோ நீங்க திட்டுவதையும் வாங்கிக்கிட்டு தான் நிக்கிறா. நீங்க இப்படிப் பேசுறது நியாயமே இல்லை பெரியப்பா…” தங்கைக்காக வாதாடினான் தேவா.

“என்ன தேவா நீயும் அவ கூடச் சேர்ந்துட்டியா? நீயும் எவளையாவது விரும்புறயா? அதான் பக்கத்து இலைக்குப் பாயாசமா?” எனக் கடுப்புடன் கேட்டார்.

அவர் அப்படிக் கேட்டதும் தேவாவின் முகம் இறுகியது. ஏதோ சொல்ல வந்தவன் தன்னை நிதானித்து வாயை இறுக மூடிக்கொண்டான்.

தனக்காகப் பேச போய் அண்ணனும் திட்டு வாங்குகிறான் எனப் பதறிய விதர்ஷணா “அப்பா திட்டணும்னா என்னைத் திட்டுங்க. அண்ணாவை ஏன் இப்படிப் பேசுறீங்க? இப்போ உங்களுக்கு என்னப்பா பிரச்சனை? நான் காதலிச்சது தப்புன்னு சொல்றீங்களா? இல்லை ஷர்வஜித்தை காதலிச்சது தப்புன்னு சொல்றீங்களா?

எனக்கு என்னமோ நான் காதலிச்சதை விட ஷர்வஜித்தை நான் காதலிச்சது மட்டும் தான் உங்களுக்குத் தப்பா தெரியுதுன்னு நினைக்கிறேன். நான் காதலிச்சவர் ஒன்னும் சாதாரண ஆள் இல்லையே? ஒரு கௌரவமா வேலையில் இருக்குறவரை தானே விரும்பினேன்.

சின்ன வயசில் இருந்து எனக்கு எது பிடிக்கும்னு கேட்டு அதை வாங்கிக் கொடுத்த நீங்க, என் மனசுக்கு பிடிச்சவரை மட்டும் ஏன் வெறுத்து ஒதுக்குறீங்க?

உங்க கௌரவத்தைப் பெரிசா நினைச்ச நீங்க, உங்க மகளோட சந்தோஷத்தை ஏன் நினைச்சுப் பார்க்காம போனீங்க?” எனக் கலங்கிய குரலில் பேசிக் கொண்டே போனாள்.

“உன் பேச்சை கொஞ்சம் நிறுத்துறியா? நீ கேட்டது போல நானும் கேட்கலாமே? உனக்கு ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்த நான் உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்க மாட்டேனா? இப்பயே என்ன அவசரம்னு அந்தப் பையன் உனக்கு வேணும்னு இப்படிப் பைத்தியம் போல அவன் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்க?” சிடுசிடுவெனக் கேட்டார்.

“பிடித்தம் யாருக்கும் இந்த வயசில் தான் வருவேன்னு சொல்லிட்டு வருவதில்லைபா. தடுமாறி போகும் விடலை பருவத்திலும் நான் இல்லை. அதைவிட நல்லது எது, கெட்டது எதுன்னு பிரிச்சு பார்க்க எனக்குக் கத்துக் கொடுத்துருக்கீங்க. ஆனா அதை நீங்க தான் கடை பிடிக்கத் தவறிட்டீங்க…” என்று இன்னும் பேச்சை தொடர்ந்தவளை கடுமையாக ஏதோ சொல்ல வாயை திறந்தார் கருணாகரன்.

அதற்குள் அவரின் கைபேசி அவரை அழைக்க, அதை எடுத்து யார் அழைப்பது எனப் பார்த்தவரின் கண்கள் யோசனையுடன் சுருங்கின.

போனை எடுத்துப் பேசியவர் முகம் நிமிடத்துக்கு நிமிடம் உணர்ச்சிக் குவியலாக மாறிக் கொண்டே போனது.

தேவா அப்போது இறுகி போய் நின்றவன், அதன்பிறகும் அப்படியே இருந்தான்.

விதர்ஷணா தந்தையின் முகத்தைக் கேள்வியுடன் பார்த்தாள்.

பேசி முடித்துவிட்டுப் போனை வைத்தவர், “இப்ப உனக்குச் சந்தோஷம் தானே?” என்று ஆத்திரத்துடன் மகளைப் பார்த்து கேட்டார்.

“என்னாச்சுப்பா?” விதர்ஷணா புரியாமல் கேட்க, “நீயும், அந்தப் போலீஸ்காரனும் சேர்ந்து என் மானத்தை வாங்கிட்டீங்கல? போங்க…! போய்ச் சந்தோசமா இருங்க. இதோ இவனையும் கூட்டிக்கிட்டு போ! நீங்க எல்லாரும் சந்தோசமா இருங்க. நான் அவமானப்பட்டே சாகுறேன்…” எனப் பிள்ளைகள் இருவரையும் பார்த்து கத்த ஆரம்பித்தார்.

“இப்போ என்னாச்சு பெரியப்பா? எதுக்கு இவ்வளவு கோபம்?” என்று கேட்டான் தேவா.

“இன்னும் என்ன ஆகணும்? பத்திரிகையில் வந்த செய்தி பொய்னு சொல்லி, ஒரு நல்ல இடத்தில் இருந்து கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணினேன். ஆனா அந்தப் போலீஸ்காரன், பொண்ணு வீட்டில் என்னமோ சொல்லி வச்சு அவங்க பொண்ணு பார்க்க வரலைனு சொல்லிட்டாங்க. இதுல எனக்கு அட்வைஸ் வேற. நல்ல மாப்பிள்ளையை விட்டுட்டு வெளியிடத்தில் ஏன் மாப்பிள்ளை தேடுறீங்கன்னு என்னையவே கேள்வி கேட்குறாங்க…” ஆத்திரமாகச் சொன்னவர்,

“கல்யாணப் பேச்சு நின்றதில் ரெண்டு பேருக்கும் சந்தோசம் தானே? இதுக்குத்தானே எல்லாரும் ஆசைப்பட்டீங்க? நீங்க ஆசைப்பட்டதே நடந்துருச்சு. சந்தோசமா இருங்க, போங்க…!” என்று இருவரையும் விரட்டி அடிப்பது போல் பேசினார்.

விதர்ஷணா பெண் பார்க்கும் படலம் நின்று போனதில் உள்ளுக்குள் மகிழ்ச்சியாகத்தான் உணர்ந்தாள். ஆனால் தந்தையின் அதீத கோபம் அந்த மகிழ்ச்சியை மட்டுப்படுத்த அமைதியாக நின்றிருந்தாள்.

அவரின் பேச்சில் எரிச்சல் அடைந்த தேவா “தர்ஷி வா போவோம்…” என்று அவளின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றவன், அறை வாயிலுக்குச் சென்றதும் திரும்பி கருணாகரனை பார்த்து “உங்க மானத்தை வெளியில் இருந்து வந்து யாரும் கெடுக்க வேண்டாம். நீங்களே போதும்…!” என அழுத்தி சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

சிறிது நேரம் கடந்த நிலையில் காலையிலிருந்து இருந்த பரபரப்பு அடங்கி வீடே அமைதியாகியிருந்தது. செய்து கொண்டிருந்த வேலைகள் அப்படியே நிறுத்தப்பட்டிருந்தன.

மாடியறையில் அமர்ந்திருந்த அண்ணனும், தங்கையும் மௌனமாக அமர்ந்திருந்தார்கள். அந்த மௌனத்தை முதலில் கலைத்த விதர்ஷணா “என்ன அண்ணா அப்பா இப்படி இருக்கார்? எப்படியும் அப்பாவை சம்மதிக்க வச்சுறலாம்னு நினைச்சேன். ஆனா…?” என்று இழுத்து நிறுத்தியவள் பெருமூச்சு விட்டாள்.

“நீ பெரியப்பாவை சாதாரணமா நினைச்சுக்கிட்டு இருக்கத் தர்ஷி. நீ நினைக்கிற மாதிரி அவ்வளவு சுலபத்தில் அவரைச் சம்மதிக்க வைக்க முடியாது…”

“இல்லைண்ணா. எனக்கு நம்பிக்கை இருக்கு…” என்று சொல்லிக் கொண்டிருந்தவள் தேவாவின் மறுப்பான தலையசைப்பைப் பார்த்துப் பேச்சை நிறுத்தினாள்.

“அவரைப் பற்றி முழுசா உனக்கு ஒன்னும் தெரியாது தர்ஷி. அவர் நினைச்சா உங்க கல்யாணத்தை நிறுத்த என்ன வேணும்னாலும் செய்யலாம்…”

“என்ன அண்ணா அப்பாவை ஏதோ வில்லன் ரேஞ்சுக்கு சொல்ற? அப்பா அப்படி எல்லாம் செய்ய மாட்டார் அண்ணா. எனக்கு நம்பிக்கை இருக்கு…” திடமாக மறுத்தாள்.

“ஓகே, நம்பலைனா விடு! உனக்கே இன்னும் கொஞ்ச நாளில் தெரியும். அந்தப் பேச்சை விட்டுரலாம். உன் கல்யாணம் ஷர்வஜித் கூட நடக்கணும்னா அதுக்கு ஒரே வழிதான் இருக்கு…” எனச் சொல்லி பேச்சை நிறுத்தியவனை ஆர்வமாகப் பார்த்த விதர்ஷணா “என்ன அண்ணா அது?” எனக் கேட்டாள்.

“நீயே இந்த வீட்டை விட்டுப் போய்க் கல்யாணம் செய்துகிறது தான் அது. இதைத் தவிர வேற வழி இல்லை. பெரியப்பா சம்மதம் வாங்கின பிறகு தான் நீ கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சா, அது இந்த ஜென்மத்தில் நிச்சயம் நடக்காது. அது மட்டும் உறுதி…” என்றான்.

“என்ன அண்ணா இப்படிச் சொல்ற? கொஞ்ச நேரத்துக்கு முன் என் கல்யாணத்தை ஜாம், ஜாம்னு நடத்தி வைப்பன்னு சொன்ன? அது எல்லாம் சும்மா தானா? நீயும் அப்பா மாதிரி நான் என் மனசுக்குப் பிடிச்சவரை கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுனு இப்படிச் சொல்றியா?” என வருத்தத்துடன் கேட்டாள்.

அதற்குத் தேவா பதில் சொல்லும் முன் அவளின் கைபேசி ஒலி எழுப்ப, அதை எடுத்துப் பார்த்தாள். அதில் ஒளிர்ந்த எண்ணை ஆச்சரியத்துடன் பார்த்தவள் முகம் பிரகாசமாக ஜொலித்தது.

அதைக் கண்ட தேவா “என்ன உன் ஜித்தாவா?” எனக் கேட்டான்.

“ஆமாண்ணா, எப்படிக் கண்டு பிடிச்ச?”

“உன் முகம் தான் நூறு லைட்டை ஒரே நேரத்தில் போட்ட மாதிரி ஜொலிக்குதே! அதை வச்சு தான். சரி… நீ பேசு! நான் என் ரூமில் இருக்கேன்…” என்றவன் எழுந்து சென்றான்.

அவன் எழுந்து சென்றதை கூடக் கவனிக்காமல் போனில் ஒளிர்ந்த பெயரை பார்த்த விதர்ஷணாவிற்கு அவன் தன்னை அழைப்பதை இன்னும் நம்ப இயலவில்லை.

சந்திராவிடம் கேட்டு அவனின் எண்ணை வாங்கி வைத்திருந்தவள் ஒரு முறை கூட அவனை அழைத்துப் பேசவில்லை. என்றாவது ஒரு நாள் பேச வேண்டும் என்ற ஆசை மட்டும் நிறைய இருந்தது.

ஆனால் இப்போது முதல் முறை தொலைபேசி அழைப்பு அவனிடம் இருந்து வரவும், விதர்ஷணாவின் மனம் உவகைக் கொண்டது.

பச்சை நிறத்தை அழுத்தி விட்டுக் காதில் கைபேசியை வைத்தவள் பேசும் முன் “விதர்ஷணா…!” எனப் பதட்டத்துடன் ஷர்வாவின் குரல் ஒலித்தது.

“என்னாச்சு ஜித்தா?” அவனின் பதட்டத்தை உணர்ந்தவளும், அதே பதட்டத்துடன் கேட்டாள்.

“அங்கே எதுவும் பிரச்சனை இல்லையே? ஏன் போன் எடுக்க லேட் செய்த?”

“அது… என் போனில் உங்க பேரை பார்த்ததும் அப்படியே பார்த்துக்கிட்டே இருந்துட்டேன். அதான்…” என்றவள் சொல்லி நிறுத்த, கேட்டவன் சில நொடிகள் மௌனமாகிப் போனான்.

“ஜித்தா…?” மௌனம் உணர்ந்தவள் அவனைக் கலைக்க அழைக்க,

அதில் கலைந்தவன் “எதுவும் பிரச்சனையானு கேட்டேனே. அதுக்குப் பதில் சொல்லலை?” எனக் கேட்டான்.

“நீங்க மாப்பிள்ளை வீட்டில் என்ன பேசினீங்க?”

தான் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் திருப்பிக் கேள்வி கேட்டவளை “விதர்ஷணா…!” என அழுத்தி அழைத்தான்.

“நான் திட்டு வாங்கியதை சொல்ல வேணாம்னு பார்த்தேன். அதுக்கு ஏன் இப்படிக் கோபமா கூப்பிடுறீங்க? ஆமா…! அப்பா திட்டினார். உங்களையும், என்னையும்! அதோட எனக்குச் சப்போர்ட் செய்த அண்ணாவையும்…” என்றாள்.

“ஓ…! உன் அண்ணாவை எதுக்குத் திட்டினார்?”

“நீயும் லவ் பண்றீயா? அதான் அவளுக்குச் சப்போர்ட்டா பேசுறியானு திட்டினார். பாவம்! அண்ணா முகமே வாட்டி போயிருச்சு. அண்ணா இன்னும் ஒரு பொண்ணைக் கூடத் திரும்பி பார்த்தது இல்லை. வேலை, வேலைனு ஓடுறான். அவனைப் போய் அப்படிச் சொல்லிட்டார்…” என்று வருத்தத்துடன் சொன்னாள்.

“இப்போ தேவா எங்கே?”

“அண்ணா இவ்ளோ நேரம் என்கிட்ட பேசிக்கிட்டு தான் இருந்தாங்க. உங்க போன் வந்ததும் எனக்குத் தனிமை கொடுத்துவிட்டு எழுந்து போயிட்டாங்க. ஜித்தா என்ன சொல்லி அவர்களை வரவிடாம செய்தீங்க? சொல்லுங்களேன்…” எனக் கேட்டாள்.

“அதைத் தெரிஞ்சு நீ என்ன பண்ண போற?”

“ப்ளீஸ், சொல்லுங்க…!” விதர்ஷணாவின் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரிக்க… விடாமல் கேட்டாள்.

“என் பொண்டாட்டி எனக்கு ஏற்கனவே தாலி கட்டிட்டா. அதனால நீங்க ஏற்பாடு பண்ற இந்தக் கல்யாணம் நடக்காது. நிறுத்திடுங்கன்னு சொன்னேன்…” என்று சொன்னவனின் குரலில் கேலி இழந்தோடியது.

அவனின் கேலியில் “ஜித்தா…” எனச் சிணுங்கியவள் “உங்களுக்கு இப்படிக் கிண்டல் பண்ண கூடத் தெரியுமா?” என ஆச்சரியமாகக் கேட்டாள்.

“ஏன்? நானும் மனுஷன் தானே?” என இறுக்கத்துடன் கேட்டான்.

அவனின் குரல் மாற்றத்தை உணர்ந்தவள் “சாரி… சாரி ஜித்தா…! நீங்க இப்படிப் பேசி நான் கேட்டது இல்லையா? அதான் அப்படிக் கேட்டுட்டேன். சாரி…” என்றாள் பதட்டத்துடன்.

“சரி, அதை விடு விதர்ஷணா! நான் ஒரு முடிவு பண்ணியிருக்கேன். அதுக்கு உன்னோட அபிப்பிராயம் தெரியணும்…”

“என்ன ஜித்தா? சொல்லுங்க…!”

“நம்ம கல்யாணம் சீக்கிரமே நடக்கணும்னு நினைக்கிறேன். அதுக்கு நீ என்ன சொல்ற?” எனக் கேட்டான்.

“சீக்கிரம்னா?” எனப் புரியாமல் விதர்ஷணா கேட்க, “இன்னும் ஒரு வாரத்திற்குள்…!” என்றவனின் பதிலை கேட்டு அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

நேற்றுதான் அவனின் விருப்பத்தைச் சொன்னான். அதற்குள் இவ்வளவு சீக்கிரம் திருமணத்தைப் பற்றிப் பேசுவான் என அவள் நினைத்திருக்கவில்லை. அப்படியிருக்க, ஷர்வாவின் பேச்சு அவளுக்கு வியப்பாக இருந்தது.

“ஏன் இவ்வளவு சீக்கிரம்?” என்று சிறிது தடுமாற்றத்துடன் கேட்டாள்.

“நீ தானே எப்ப நம்ம கல்யாணம்? எப்ப நம்ம கல்யாணம்னு திரும்பத் திரும்பக் கேட்ட. இப்ப ஏன் இவ்வளவு ஆச்சரியம்?” என ஷர்வா கேட்டான்.

“கேட்டேன் தான். ஆனால் இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கலை. அதோட அப்பாவோட சம்மதம் வேணுமே? ஒருவேளை நீங்களும் அண்ணா மாதிரி நான் வீட்டை விட்டு வெளியே வந்து கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லுவீங்களா? என்னால கண்டிப்பா அது முடியாது. அப்பாவோட சம்மதம் இல்லாம கல்யாணம் என்பதையே என்னால நினைச்சு கூடப் பார்க்க முடியலை…” என்றாள்.

“நீ வீட்டை விட்டு வெளியில் வர வேண்டிய அவசியம் இல்லை விதர்ஷணா. உன் அப்பா முன்னிலையில், அவரோட முழுச் சம்மதத்தோட நம்ம கல்யாணம் நடக்கும். அதுக்கு நான் பொறுப்பு…” என்றான் ஷர்வஜித்.