பனியில் உறைந்த சூரியனே – 32

அத்தியாயம் – 32

சில நொடிகள் என்ன நடந்தது என்று ஷர்வாவிற்குப் புரியவேயில்லை. என்றும் போல ஏதோ பேச தான் வந்திருக்கிறாள் என்று நினைத்து அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அருகில் வந்து செயினைக் கழுத்தில் போட்டவளை திகைத்துப் பார்த்தான்.

தன் கழுத்தில் விழுந்த செயினைக் குனிந்து பார்க்க, நெஞ்சை தொடும் நீளத்தில் இதய வடிவிலான டாலருடன் தொங்கிக் கொண்டிருந்தது. “விதர்ஷணா, என்ன இது? எதுக்கு இந்தச் செயினை இப்ப என் கழுத்தில் போட்ட?” என்று கேட்டுக்கொண்டே அதைக் கழற்ற முயன்றான்.

கையெட்டும் தூரத்தில் தான் அவள் இருந்ததால் வேகமாக அவனின் கையைப் பிடித்துத் தடுத்து “கழட்டாதீங்க ஜித்தா! இதை நீங்க கழட்டுனீங்கனா, அடுத்த நிமிடம் என் உயிர் என்னை விட்டு போய்டும். தானாகப் போகாது. நானே போக்கிக்குவேன்…” என்றவளின் பேச்சை கேட்டு “என்னடி சொன்ன?” என அதிர்ந்து கேட்டான்.

அவனின் “டி”யை கூடக் கவனிக்காமல், “எப்பயும் போல நான் உளருறேன்னு நினைக்காதீங்க ஜித்தா. நிஜமா நடக்கப்போறதை சொல்றேன். உங்க மனசு நிறைய என்மேல லவ் இருந்தும் அதைக் கொஞ்சம் கூட வெளிக்காட்டிக்காம என்னை விரட்டுவதிலேயே குறியாக இருக்கும் நீங்க, எப்படியும் என்னை இப்பக்குள்ள கல்யாணம் முடிக்கப் போறதில்லை. அதுதான் நான் முந்திக்கிட்டேன். இது தாலி இல்லை தான்! இது வெறும் செயின் தான்!

ஆனால் இதை ஒரு தாலிக்கு சமமான புனிதமான செயினா நான் நினைக்கிறேன். ஒரு மனைவி எப்படிக் கணவன் இறந்த பிறகு அவன் கட்டிய தாலியை அவள் துறப்பாளோ, அதுபோல நான் இறந்த பிறகுதான் இந்தச் செயின் உங்க கழுத்தை விட்டு இறங்கணும். அதுக்கு முன்னாடி இறங்கினால் நான் இறந்ததற்குச் சமம்…!” என்றவள் சட்டென அதிர்ந்து கன்னத்தில் கை வைத்து நின்றாள்.

அவளின் கன்னம் தீயாக எரிந்து கொண்டிருந்தது. எதிரே ஷர்வா ருத்ராவதாரமாக நின்றிருந்தான். “இன்னும் ஒரு நிமிஷம் நீ இங்க நின்னா நானே உன்னைக் கொன்னுருவேன் கொன்னு! போடி இங்கிருந்து…!” என்றான்.

அவனின் வார்த்தையில் ஜொலித்த கோப அக்னிக்கு இறையாகாமல் போனதே பெரிது என்பது போல அவனை விட்டு வேகமாகப் பின்னால் நகர்ந்தாள் விதர்ஷணா.

அவள் செல்லாமல் நகர்ந்து மட்டும் நிற்பதை பார்த்து, “இங்கிருந்து போன்னு சொன்னேன். வாங்கின அறை பத்தாதா? செத்துருவேன்னு சொன்ன இல்ல? போ…! போய்ச் சாவு! போ…!” என்று கத்தினான்.

அவனின் கத்தலில் விதர்ஷணாவின் மேனி நடுங்க ஆரம்பித்தது. அதற்குள் அவனின் சத்தம் கேட்டு என்னவோ, ஏதோ என்று பயந்து “என்னாச்சு சார்?” என்றபடி அங்கே வந்தார் வேலவன்.

அவரைப் பார்த்ததும் சட்டென அமைதியானவன், “ஒன்னும் இல்லை வேலவன். எனக்கு நீங்க ஒரு உதவி பண்ணனுமே. இவளை கொண்டு போய் என் வீட்டில் விட முடியுமா?” என்று கேட்டான்.

அவளைத் திரும்பி பார்த்த வேலவன், அவள் நடுங்கி கொண்டு நிற்பதை பார்த்து ‘ஏதோ பிரச்சனை போல’ என்று நினைத்தவர் “விட்டுறேன் சார்…” என்றார்.

“நானே போய்க்குவேன்…” என்று விதர்ஷணா வேகமாகச் சொல்ல, அவள் புறம் மீண்டும் அக்னி பார்வையைச் செலுத்தியவன், “சொன்னதை மட்டும் செய்…!” எனப் பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னான்.

‘அம்மாடியோ! என் ஜித்தாவா இது? என்னமா கோபம் வருது’ என்று நினைத்தவள் அங்கிருந்து செல்லும் முன் அவனின் கழுத்தில் தான் போட்ட செயினையும், அவனின் முகத்தையும் ஒரு முறை பார்த்து விட்டே சென்றாள்.

அதைக் கவனித்தவன் “பார்வை பார்! பார்வையை…!” எனக் கடுப்புடன் சொல்லிக் கொண்டான்.

விதர்ஷணாவின் காரை வேலவன் ஓட்ட பின்னால் அமர்ந்திருந்தவள் அவர் செல்லும் பாதையைப் பார்த்து, “என்ன அண்ணா இந்தப் பக்கம் போறீங்க? என் வீட்டுக்கு வழி இந்தப் பக்கம் இல்லை. லெப்ட்ல திரும்பணும்…” என்றாள்.

“என்னம்மா, நீங்க சார் சொன்னதைக் கவனிக்கலையா? சார் உங்களை அவர் வீட்டில்தான் விடச் சொன்னார். இப்போ நாம அவர் வீட்டுக்கு தான் போய்க்கிட்டு இருக்கோம்…” என்றார்.

‘என்னது ஜித்தா வீட்டிலா? அப்படியா சொன்னார்? என் காதில் சரியா விழலையோ?’ என்று தனக்குள் கேட்டு கொண்டவள், ‘க்கும்! நீ வாங்கின அறைக்கு உன் காது இரண்டு நாளைக்குனாலும் கேட்காது’ என்று அவளின் ஒரு பக்க காது வலியே வந்து அவளை இடிந்துரைத்து நான் இன்னும் உன்னிடம் தான் ஒட்டி கொண்டிருக்கிறேன் எனக் காட்டியது.

கன்னத்தோடு சேர்ந்து காதையும் தேய்த்து விட்டு கொண்டாள். ‘ஹப்பா! என்னா ஒரு அடி? இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு கோபம் வர கூடாது ஜித்தா’ என நினைத்துக் கொண்டாள்.

வேலவனுடன் வந்த விதர்ஷணாவை கேள்வியுடன் பார்த்த சந்திராவிடம் “சார் தான் இங்கே விடச் சொன்னார் மேடம்…” என்று வேலவன் சொல்லவும்,

“ஓ…! சரிங்க வேலவன், நான் பார்த்துக்கிறேன்…” என்று சந்திரா சொல்ல, வேலவன் அங்கிருந்து கிளம்பினார்.

“உள்ளேவா விதர்ஷணா! என்னாச்சு? எதுக்கு உன்னை வேலவனோடு அனுப்பி வச்சிருக்கான்?” என்று கேட்டவருக்கு, “அது வந்து அத்தை… அது…” என்று மேலும் சொல்ல முடியாமல் தயங்கினாள் விதர்ஷணா.

தன்னவனிடம் உரிமையுடன் செய்த விஷயத்தை அவனைப் பெற்றவரிடம் சொல்ல முடியாமல் தடுமாறினாள்.

அவளை யோசனையுடன் பார்த்த சந்திரா அப்பொழுதுதான் அவளின் கன்னத்தைக் கவனித்தார். கன்னம் சிவந்து கைத்தடம் லேசாகத் தெரிந்து கொண்டிருந்தது. அதைக் கண்டவர் “என்னாச்சு விதர்ஷணா? யாரு உன்னை அடிச்சா?” என்று பதற்றத்துடன் கேட்டார்.

தன் கன்னத்தைத் தடவி விட்டுக்கொண்டே “அவர்தான் அடிச்சார் அத்தை…” என மெதுவாகச் சொன்னாள்.

“எதுக்கு?”

“அது வந்து, என் மேல ஒரு கோபம். அதுதான்…” என்று விரிவாகச் சொல்ல முடியாமல் தடுமாறிக் கொண்டு அவள் இருக்கும் போதே வேகமாக அங்கே வந்து சேர்ந்தான் ஷர்வா.

அவனைக் கண்டதும் “எதுக்கு ஷர்வா இவளை அடிச்ச?” என்று கேட்டார். விதர்ஷணாவை அடித்ததில் மகனிடம் பேசாமல் இருந்த கோபம் எல்லாம் பின்னுக்குச் சென்று விட்டது.

“இவ பேசின பேச்சுக்கு இன்னும் ரெண்டு அடி போடாம விட்டேன்னு சந்தோசப்படுங்கம்மா…” என்று விதர்ஷணாவை முறைத்துக்கொண்டே சொன்னான்.

“அப்படி என்ன பேசினா?”

“ம்ம்… இவ சாகப் போறாலாம். சாகட்டும்னு விடட்டுமா?” என்று கடுப்புடன் கேட்டான்.

“என்ன?” என்று சந்திரா அதிர்ச்சியுடன் விதர்ஷணாவை பார்த்தார்.

“அது ஒன்னும் இல்லை அத்தை. சும்மா விளையாட்டுக்கு…” என்று விதர்ஷணா இழுக்க, “எதில் விளையாடுவதுன்னு விவஸ்தை இல்லையா இவளுக்கு?” என்று கோபமாகக் கேட்டான் ஷர்வா.

அவனின் கோபத்தில் தெரிந்த உரிமையில் விதர்ஷணா வாயடைத்து நின்றாள். லேசாக வாயை திறந்தபடி அவள் நின்று கொண்டிருந்த போது “அம்மா…” என்று ஷர்வா, சந்திராவை தயங்கி அழைத்தான்.

மகனின் தயக்கத்தை யோசனையுடன் பார்த்து “என்ன ஷர்வா?” என்று கேட்டார்.

“நான் இவகிட்ட கொஞ்சம் தனியா பேசணும்…” என்றான். வீட்டில் அன்னையின் முன் ஒரு இளம் பெண்ணிடம் தனியாகப் பேசவேண்டும் என்று சொன்னால் அவர் எப்படி எடுத்துக் கொள்வாரோ என்று நினைத்தவனின் குரலில் தயக்கம் மிகுதியாகவே இருந்தது.

மகனிடம் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்த சந்திரா “போய்ப் பேசு ஷர்வா…” என்று சம்மதம் சொன்னார்.

‘ஐயோ! தனியாவா? உள்ள கூட்டிட்டுப் போய்த் திரும்ப அடிப்பாரோ?’ என்று விதர்ஷணாவிற்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. சந்திராவை தயக்கத்துடன் பார்த்தாள்.

அவளின் பார்வையைக் கண்டு “நான் ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டேன். போய்ப் பேசு…!” என்று ஆறுதலாகச் சொன்னார்.

‘ஐயோ அத்தை! நான் அதுக்குப் பயப்படலை. திரும்ப இவர் அடிச்சா என்னோட இன்னொரு காதும் பஞ்சராகிருமே. அதுதான் பயப்படுகிறேன்’ என்று உள்ளுக்குள் அலறினாள்.

அவளின் அரண்டு போயிருந்த முகத்தைக் கண்டுகொள்ளாமல் அறையை நோக்கி நடந்த ஷர்வா “உள்ளே வா…!” என்று அவளிடம் சொல்லிவிட்டுச் சென்றான்.

பலியாடு போல் ஷர்வாவின் பின் நடந்து சென்றாள். அவள் உள்ளே வந்ததும் கதவை லேசாக அடைத்தவன் அறையின் நடுவில் நின்றிருந்தவளை முறைத்துப் பார்த்தான்.

‘ஐயோ! பார்க்கிற பார்வையே சரியில்லையே! இப்ப நான் என்ன செய்யன்னு தெரியலையே? அப்படி என்ன பெரிய தப்புச் செய்துட்டேன்? ஒரு செயினைக் கழுத்துல போட்டது குத்தமா?’ என்று நினைத்துக்கொண்டே அவனின் கழுத்தை பார்த்தாள்.

அவனின் கழுத்தில் இப்பொழுது அந்தச் செயின் தெரியவில்லை. மேலே வரை சட்டை பட்டன் போட்டிருந்ததால் ஒருவேளை சட்டையினுள் இருக்குமோ என்று நினைத்து அதைக் கவனித்துப் பார்க்க முயன்றாள். அவளின் முயற்சியைக் கடுப்புடன் பார்த்தவன் “அங்கே ஸ்டேஷனில் வைத்து என்ன சொன்ன? திருப்பிச் சொல்லு…!” என்று கேட்டான்.

‘அறை வாங்க தயாரா இருந்துக்கோ தர்ஷி’ என்று தனக்குத் தானே தைரியம் சொல்லி கொண்டவள், அவனின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் “நான் போட்ட செயின் எங்கே?” என்று கேட்டாள்.

“ஏன் செயினைக் கழட்டிட்டேன்னு சொன்னா என்ன செய்வதாய் உத்தேசம்?” என இடுங்கிய பார்வையுடன் கேட்டான்.

அவனின் கேள்வியில் விதர்ஷணாவின் முகமும் இறுகி போக, “நான் சொன்னதைச் செய்வேன். செத்துப் போயிருவேன்…” எனச் சொன்னவளை பார்த்தவன் விழிகள் சிவந்து இருக்க, தன் காவல் உடையில் இருந்த துப்பாக்கியை வேகமாகக் கையில் எடுத்து, நொடி பொழுதில் அவளிடம் அதைத் தூக்கி எறிந்தான்.

தன்னிச்சையாக அதைக் கையில் சரியாகப் பிடித்த பிறகுதான் தன் கையில் துப்பாக்கி இருப்பதையே முழுமையாக உணர்ந்தாள்.

“சாகப் போறனு சொன்ன இல்ல. இந்தத் துப்பாக்கியை வச்சு சுட்டு செத்துக்கோ…!” என்றான் கடுமையாக.

அவனின் வார்த்தையில் வலித்த மனதுடன் “நான் செத்தா உங்களுக்கு ஒன்னுமே இல்லை தானே?” என்று கேட்டுக்கொண்டே விதர்ஷணா தன் நெற்றி பொட்டில் துப்பாக்கியை வைத்தாள்.

அவள் செய்வதைப் பார்த்துக் கொண்டே இருந்தவன் “ஒரு நிமிஷம்…” என்று சொல்லி அவளை இடையிட்டான்.

“என்ன?” என்று கேள்வியாக விதர்ஷணா அவனைப் பார்க்க “அந்தத் துப்பாக்கியை உன் நெற்றியில் வைத்து அழுத்துவதற்கு முன், முதலில் என்னைச் சுட்டுட்டு, அப்புறமா உன்னைச் சுட்டுக்கோ…!” என்றவனின் குரல் சலனமே இல்லாமல் நிறுத்தி, நிதானமாக வெளியே வந்தது.

அவன் சொன்னதைக் கேட்டதும் விதர்ஷணாவின் கைகள் நடுக்கத்துடன் துப்பாக்கியை கீழே இறக்கியது. “என்ன பேசுறீங்க? உங்களை எப்படி என்னால சுட முடியும்?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்.

“ஏன் இவ்வளவு அதிர்ச்சி? நீ எப்படியும் சாகப்போற! அதுக்கு முன்னாடி என்னைச் சுடுவதில் உனக்கு என்ன கஷ்டம்? என்னைச் சுட்டுவிட்டு, அப்புறமா உன்னைச் சுட்டுக்கோ…!” என்றான்.

“ஜித்தா! என்ன பேசுறீங்க? நீங்க எதுக்குச் சாகணும்? நான் எதுக்கு உங்களைச் சுடணும்? நீங்க என்னை விரும்பாமல் இப்படித் தவிக்க விடுவதற்கு நான் தான் சாகணும். நாளைக்கு என்னைப் பொண்ணு பார்க்க வரப் போறாங்களாம். எங்க அப்பா எல்லா ஏற்பாடும் செய்துட்டார். அவங்க என்னைப் பிணமா பார்த்துட்டு போகட்டும். நீங்க உங்க மனசையும் என்கிட்ட சொல்ல மாட்டீங்க. என் மனசை சொன்னாலும் ஏத்துக்க மாட்டிங்க.

அப்படி இருக்கும்போது நான் ஏன் வாழணும்? நான் சாகுறது தான் சரி! நீங்க உங்கள் கடமையைப் பார்த்துக்கிட்டு நிம்மதியா இருங்க…” என்று சொன்னவள் மீண்டும் துப்பாக்கியை எடுத்து நெற்றியில் வைக்கப் போனாள். அடுத்த நொடியில் மீண்டும் அவளின் கன்னம் எரிந்தது. துப்பாக்கி தூரத்தில் போய் விழுந்து கிடந்தது.

“செத்துப் போயிருவியா டி? செத்து போவியா?அதுவும் என்னை விட்டுட்டு செத்துப் போவியா? எங்க திருப்பிச் சொல்லு…!” என்று சொல்லிக்கொண்டே மீண்டும் அவளை அடிக்கக் கையை ஓங்கிய வேகத்தில் அப்படியே இறக்கி, அவளைப் பிடித்து இழுத்து இறுக அணைத்துக் கொண்டான்.

ஆனால் அணைத்த வேகத்தில் பட்டென அவளை விட்டு விலகி தள்ளிப்போய் நின்றவன் “போய்ச் சாவு! போ…! போ…!” என்று ஆங்காரமாகக் கத்தினான்.

“எனக்குப் பிடிச்சவங்க எல்லாருமே செத்துப் போய்ருங்க. நானும் சாகுறேன். நீ சாவதை பார்த்து உயிரோடு இருந்து கொண்டு துடிதுடித்துப் போவதற்கு இனி எனக்குத் தெம்பில்லை. நீ சாவதாக இருந்தால் என்னைச் சுட்டுக் கொன்னுட்டு அதுக்குப்பிறகு போய்ச் சாவு…!” என எதிரே தெரிந்த சுவரில் புகைப்படமாகத் தொங்கிக்கொண்டிருந்த தன் தந்தையின் புகைப்படத்தையும், உடன்பிறந்தவர்களின் புகைப்படத்தையும் வெறித்துக் கொண்டே பேசிக்கொண்டு போனான்.

விதர்ஷணா பிரமை பிடித்தவள் போல் அவனின் முதுகை பார்த்த படியே நின்றாள். ‘என் ஜித்தா என்ன சொன்னார்? என்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னாரா? நான் இல்லாமல் அவருக்கு வாழ்க்கை இல்லைன்னு சொன்னாரா? நான் சாவதற்கு முன் என்னை அப்படிப் பார்க்க சக்தி இல்லாமல் அவர் சாகவேண்டும் என்று சொன்னாரா?’ என்று ஒவ்வொன்றாக மனதில் நினைத்துப் பார்த்தவள் மேனி சிலிர்த்து நின்றது.

அவளின் ஜித்தன் அவளை விரும்புகிறார் என்பது மட்டும் அவள் என் மனதில் தங்கிப் போக, வேகமாக அவனின் எதிரே போய் நின்றாள்.

புகைப்படத்தை வெறித்துக் கொண்டிருந்தவன் பார்வையைத் திருப்பி விதர்ஷணாவை பார்த்தான். தானும் தன் பார்வையைத் தளர்த்தாமல் விடாமல் அவனைப் பார்த்தவள் “என் மேல இவ்வளவு அன்பு இருந்தும் எதுக்காக என்னை விரட்டி, விரட்டி அடிச்சீங்க ஜித்தா?” என்று அமைதியாகக் கேட்டாள்.

ஆனால் அவனோ பதில் சொல்லாமல் மீண்டும் புகைப்படங்களை வெறிக்க ஆரம்பித்தான். “பதில் சொல்லுங்க ஜித்தா. பதில் சொல்லாமல் திரும்பவும் அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? ஏன் என்னை விரட்டினீங்க? இப்போ எப்படி என்னைப் புடிச்சிருக்குன்னு சொல்றீங்க? சொல்லுங்க! எனக்குப் பதில் தெரிஞ்சாகணும்…” என விடாமல் கேட்டாள்.

“இப்பவும் கூட என் வாழ்க்கையில் உன்னை நுழைய விடாமல் விரட்டி விடணும்னு தான் எனக்குத் தோணுது. ஆனா விரட்ட முடியாத அளவிற்கு நீ என்னைக் கொண்டு வந்து நிறுத்திட்ட. சும்மா நிறுத்தலை. என் நெஞ்சு நிறைய உன் மீதான என் காதலை அடைச்சு வச்சுருக்கிற நான், எப்பயும் என் மனசை உன்கிட்ட காட்டக்கூடாதுன்னு இருந்தேன். ஆனா நீ என் மனசை வெளியே சொல்ல வேண்டிய சூழ்நிலையில் கொண்டு வந்து நிறுத்தியிருக்க…” என்றவன் தொடர்ந்து,

“உனக்கு என்னைப் பற்றி என்ன தெரியும்? கண்முன்னாடி என்னை விரும்புவதாகச் சொல்லி ஒரு பெண் வரும்பொழுது அவளை விரட்டி அடிக்கும் வலி உனக்குக் கண்டிப்பாகத் தெரியாது. அதை விட அந்தப் பெண் என் மனதுக்குப் பிடித்தவளாக இருந்தும் அவளை வெறுப்பு பார்வை பார்த்து, துச்சமாக மதித்து, நீ என் வாழ்க்கையில் நுழையவே கூடாதுனு விரட்டி அடிக்கும் சூழ்நிலை வரும்போது, அதைத் தாங்கும் சக்தி எனக்கு இல்லாமல் இருந்தும் அதை உனக்காக மட்டுமே செய்தேன் என்றும் உனக்குத் தெரியாது.

உன் வாழ்க்கை நல்லா இருக்கணும். நீ நல்லா இருக்கணும் என்ற ஒரே நோக்கத்தில் தான் உன் மீது எனக்கு நெஞ்சு நிறையக் காதல் வந்தும், நீ எனக்கு வேண்டவே வேண்டாம்னு விரட்டி அடிச்சேன். அப்படி அடிக்கும் போதெல்லாம் ஒவ்வொரு அடிக்கும் என் நெஞ்சில் குத்திய ஊசிகளைப் பற்றி உனக்குத் தெரியாது. என் நெஞ்சில் நிறையக் காதலும் இருந்தும் நீ நல்லா இருக்கணும்னு ஒரே காரணத்துக்காக விருப்புக்கும், வெறுப்புக்கும் நடுவில் உன்னை நிறுத்தி வைத்து தராசு போல நான் எந்தப் பக்கம் சாய்வது என்று தள்ளாடும் நிலையில் நான் நின்றது உனக்குத் தெரியவே தெரியாது.

உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு என் உடம்பில் இருக்கும் ஒவ்வொரு அணுவிற்கும் தெரியும். அந்த அணுவில் ஒரு அணுவை கூட அதை உன்னிடம் வெளிப்படுத்திக் காட்டி விடக்கூடாதே என்று நான் போராடியது உனக்குத் தெரியவே தெரியாது. உனக்குத் தெரிந்ததெல்லாம் சாவது மட்டும்தானே? அதைத் தவிர உனக்கு எதுவுமே தெரியாது இல்லையா? நீ போ! சாவு போ…! போ…!” என்று பேசிக்கொண்டே வந்தவன் மீண்டும் அவளை விரட்டினான்.

ஷர்வாவின் மனதில் அடைத்து வைத்திருந்ததெல்லாம் வெளியே வந்தது. அவனின் பேச்சைக் கேட்டு திகைத்து திண்டாடி என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் வாயடைத்து நின்றாள்.

‘தன் மீது இத்தனை அன்பு கொண்டவரா இவர். இவ்வளவு விருப்பம் இருப்பவர், ஏன் வெறுப்பு இருப்பதாகக் காட்ட வேண்டும்? தான் அவரின் வாழ்க்கையில் வந்துவிடக்கூடாது என்று அப்படி என்ன வீம்பு?’ என்று நினைத்தவள் அதை அவனிடமே கேட்டாள்.

அவளின் கண்களைச் சந்தித்தவன் “முதல் காரணம் உன் வயது! உனக்கும், எனக்கும் எப்படியும் ஒன்பது வயது வித்தியாசம் இருக்கும். எனக்கு முப்பத்தி ஒன்னு முடிஞ்சிருச்சு. உனக்கு இப்போ இருபத்தி இரண்டு தான் இருக்கும். அப்படி இருக்கும் போது இவ்வளவு வயது வித்தியாசத்தில் இருப்பவளை ஏற்றுக்கொள்ள என் மனம் விரும்பவில்லை. ஆனா அதையும் உன் அன்பும், நீ ஒவ்வொரு முறையும் என்னைப் பார்க்கும் போது உன் கண்ணில் நீ காட்டிய காதலும் தான் என்னைக் கட்டிப்போட்டது. இந்த வயது வித்தியாசம் இன்னும் எனக்குத் தயக்கத்தைத் தந்துட்டு தான் இருக்கு. அதைப் பற்றி நீ என்ன நினைக்கிறனும் எனக்குத் தெரியல…” என்று நிறுத்தினான்.

அவனின் காரணத்தைக் கேட்டு கனிவுடன் அவனைப் பார்த்த விதர்ஷணா “வயது வித்தியாசத்தைப் பார்த்து யாருக்கும் யார் மீதும் அன்பு வருவதில்லை ஜித்தா. உங்க வயதை நான் பொருட்டா நினைச்சிருந்தா இத்தனை நாளும் நீங்க விரட்ட, விரட்ட உங்க பின்னாடி வந்திருக்க மாட்டேன். எனக்குத் தேவை உங்க வயது இல்லை. உங்கள் அன்பும், நேசமும் மட்டும்தான். அது கொடுங்க போதும்…” என்றாள்.

அவனின் கண்களையே பார்த்துக் கொண்டு தன் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தவனுக்குப் பதில் சொல்லிவிட்டு, “அடுத்தக் காரணம்?” என்று கேட்டாள்.

அவள் அப்படிக் கேட்டதும் சட்டெனத் தன் முகத்தை அண்ணாந்து மேல் சுவற்றைப் பார்த்தான். சில நிமிடங்கள் கழிந்த பிறகும் அவனிடம் பதில் வராமல் போக, “ஜித்தா?” என்று அழைத்துக் கொண்டே அவனின் தோளின் மீது தன் கையை வைத்தாள்.

அவளின் கை பட்டதும் சட்டென விலகி நின்றான் ஷர்வா. அவனின் விலகலில் அடிவாங்கியவள் போல விதிர்த்து போனாள் விதர்ஷணா. “ஜித்தா?” என்ற கேள்வியுடன் திக்கித்திணறி அவனை அழைத்தாள்.

அழைப்புக்கும் அவனிடம் பதில் இல்லாமல் போக, அப்பொழுதுதான் அவனை நன்றாக ஆராய்ந்து பார்த்தாள். ஷர்வாவின் வலது கை நடுங்கிக் கொண்டிருந்தது. அதை இடது கையால் இறுக பற்றிக்கொண்டு கையை முறித்து விடுபவன் போலப் போட்டு இறுக்கிக் கொண்டிருந்தான்.

அந்த நடுக்கத்தைக் கண்டவள் மெல்ல அவனின் வலது கையைத் தொட்டாள். உடனே அவளின் கையை விலக்கிவிட்டு “என்னைத் தொடாதே! தொடாதே…!” என்று அவளை விட்டு வேகமாக நகர்ந்து நின்றான்.

‘ஏன்? என்னாச்சு?’ என்ற கேள்வி அவள் மனம் முழுவதும் குடைந்தது. அவன் தன்னை விலக்குவது தனக்கு வலித்தாலும், அதையும் மீறி அவனுக்கு ஏதோ பிரச்சனை என்று நினைத்தவள், “ஏன் ஜித்தா, நான் தொடக்கூடாதா? ஏன் தொடக்கூடாது?” என்று மட்டும் கேட்டாள்.

ஒரு பெருமூச்சை இழுத்து விட்டவன், “என்னோட இன்னொரு காரணம் இதுதான். இது மட்டும்தான் மிகப்பெரிய முக்கியக் காரணம். காதல்னா வெறும் காதலோடு எதுவும் நிற்பதில்லை. அதையும் தாண்டி கல்யாணம் இருக்கு. அந்தக் கல்யாணத்தைத் தாண்டி இயற்கை ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் நிர்ணத்திருக்கிற ஒரு வாழ்க்கை இருக்கு. அந்த வாழ்க்கையை வாழ என்னால் முடியுமானு தெரியலை. அதுதான் என் பிரச்சனை…” என்றவனைக் கண்கள் அகல திகைப்புடன் பார்த்தவளுக்கு, அவன் சொல்ல வருவது முழுவதும் புரியாமல் போக, கண்ணைச் சுருக்கி கேள்வியுடன் பார்த்தாள்.

தன் பிரச்சினையைச் சொல்லிவிட்டு அவளின் முகத்தைக் கூர்ந்து பார்த்தவன், அவளின் கேள்வியைக் கண்டு, “என்னால் ஒரு சாதாரணத் தாம்பத்திய வாழ்க்கை நடத்த முடியுமானு எனக்குத் தெரியல. அதனால் தான் உன்னை விட்டு விலகினேன். உன்னையும் விலக்கினேன். புரிஞ்சுதா?” என்று கோபம், வருத்தம், ஆத்திரம், இயலாமை எல்லாம் கலந்து சொன்னான் ஷர்வஜித்.

இப்படி ஒரு காரணத்தை எதிர்பார்க்காத விதர்ஷணா அசையா மரம் போல் அதிர்ந்து நின்றாள்.