பனியில் உறைந்த சூரியனே – 3
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 3
இரவு பதினோரு மணி அளவில் தன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஷர்வஜித்தின் முகத்தைத் தலை கவசம் மறைத்திருந்தது.
உடலில் இப்போது காக்கி உடை இல்லாமல் கலர் உடை இருந்தது.
ஷர்வஜித் வழக்கமாகப் பல நேரங்களில் தன் இரு சக்கர வாகனத்தில் தான் ரோந்து பணியில் ஈடுபடுவான். அது அவன் இந்த வேலையில் சேர்ந்தது முதல் நடக்கும் நடைமுறை தான்.
அதுவும் பிரதான சாலையை விடச் சிறிய தெருக்களில் தான் அவனின் ரோந்து அதிகமாக இருக்கும்.
ஏனெனில் பிரதான சாலையை விட இது போல் தெருவிற்குள் தான் குற்றம் நடக்க அதிகம் வாய்ப்பு என எண்ணுபவன். அவன் எண்ணத்திற்குத் தகுந்தாற் போலப் பல குற்றங்கள் அவன் தெருவிற்குள் நுழைந்து செல்லும் போது நடந்திருக்கின்றன.
அப்படி ஒன்று தான் அன்று அரவிந்த் அந்தப் பெண்ணின் கையைப் பிடிக்கும் காட்சியும் அவன் கண்ணில் பட்டது.
அரவிந்தைப் பற்றி நினைத்ததும் ஒரு இளைஞனைக் கெட்ட பழக்கங்களில் இருந்து மாற்றி விட்ட திருப்தி வந்து அவனைச் சிறு சந்தோசம் கொள்ள வைத்தது.
ஆம்! சிறு சந்தோசம் மட்டுமே. நிச்சயமாக ஷர்வஜித்திற்கு இந்தச் சந்தோசம் மட்டும் போதாது.
இன்னும், இன்னும் என அவன் மனம் அடுத்தும் இது போல இருக்கும் ஆட்களை நல்வழிக்குக் கொண்டு வரவே அவனின் அடுத்தச் சிந்தனை போகும்.
அவனுள் எரிந்து கொண்டிருக்கும் ஒரு தீ அவனின் மரண வேளையிலும் அவனை விட்டுப் போகாது என்றே அவனுக்குத் தோன்றியது.
தன் மனதின் தீக்கான காரணத்தை நினைத்துப் பார்த்த ஷர்வஜித்தின் கண்கள் ரத்த நிறம் பூசிக் கொண்டது.
மனதில் எண்ணங்களைச் சுழல விட்டாலும் அவனின் கவனம் சுற்றுப்புறத்தையும் ஆராய்ந்து கொண்டே தான் வந்தது.
அப்படிப் பார்த்துக் கொண்டே வர திடீரென அவன் இருந்த தெருவின் நேரெதிராக அந்தத் தெருவின் கடைசியில் யாரோ ஓடி வருவது தெரிந்தது.
அதைப் பார்த்ததும் தன் எண்ணங்கள் அனைத்தையும் விரட்டி அடித்தவன். தன் கவனம் முழுவதையும் ஓடி வருபவரின் மீது வைத்து தன் வாகனத்தின் வேகத்தைக் கூட்டினான்.
ஷர்வஜித்திற்கு முதலில் தூரத்தில் பார்க்கும் போது ஓடி வருவது யார் எனத் தெரியாமல் நிழல் உருவமாக இருக்க, பின்பு தன் கண்களில் கூர்மையைக் கூட்டிப் பார்த்தப்பொழுது தான் அங்கே ஓடிவருவது ஒரு பெண் என அறிந்து கொண்டான்.
‘அந்தப் பெண் ஏன் அப்படி ஓடி வருகிறாள்?’ என நினைத்துக் கொண்டே இன்னும் கூர்மையாக அவள் பின்னால் பார்க்க அங்கே இருவர் அவளைத் துரத்திக் கொண்டு வருவது தெரிந்தது.
அதைப் பார்த்ததும் சினம் ஏற ‘இவன்களை?’ என வாய்க்குள் முணுமுணுத்தபடி பற்களைக் கடித்துக் கொண்டு வண்டியைப் பறக்க விட்டான்.
அவன் அந்தப் பெண்ணை நெருங்கப் போகும் சமயத்தில் அங்கே ஓடி வந்த பெண்ணிற்கும் ஷர்வஜித் இன்னும் நகர்ந்து சென்ற தூரத்திற்கும் இடையே இன்னொரு கிளை தெரு இருக்க அதில் சட்டென நுழைந்து ஓடினாள்.
அடுத்தத் தெருவில் அவள் நுழைவதை கவனித்துக் கொண்டே, அவள் போன பக்கத்தைப் பார்த்து போக, அதற்குள் அந்தப் பக்கம் போனவள் திரும்ப ஷர்வஜித்தின் பக்கமாக ஓடிவந்தாள்.
இந்தப் பெண் என்ன செய்கிறாள்? எதற்கு இப்பொழுது மாறி மாறி ஓடி வருகிறாள்? எனப் புரியாமல் தன் பக்கமாக அவள் ஓடி வருவதால் அவன் வண்டியின் வேகத்தைக் குறைத்து வெளிச்சம் இல்லாத இடத்தில் ஓரம் கட்டி நிறுத்தினான்.
வண்டியை நிறுத்தி விட்டுக் கவனித்துப் பார்க்க, அவள் திரும்ப இந்தப் பக்கம் ஓடி வந்ததின் காரணம் புரிந்தது. ஏனெனில் இன்னும் இருவர் அவள் புகுந்து வெளிவந்த தெருவில் இருந்து அவளை மடக்கிப் பிடிக்க முயன்றிருக்கிறார்கள் என அறிந்தான்.
அந்தப் பெண்ணிற்கும் அவளைத் துரத்தி வந்த நால்வருக்கும் இடையே பல அடி தூரமாக இருந்த தூரம் குறைந்து கொண்டே வந்து சில அடிகள் தூரமாக ஆனது.
உயிரைக் கையில் பிடித்தது போல் ஓடிவந்தவள் கண்ணில் இருட்டில் ஓரமாக வண்டியுடன் நின்றிருந்த அவன் கருத்தில் படவே இல்லை.
பின்னால் திரும்பி பார்த்துக் கொண்டே வந்தவள் அவர்கள் தன்னை நெருங்கியதை உணர்ந்து வேகத்தைக் கூட்டி முன்னால் பார்த்து அவனைத் தாண்டி ஓடப் போனவளை ஓரமாக நின்றிருந்தவன், தன் கையை நீட்டிப் பிடித்து இழுத்து ஓரமாக நிறுத்த பார்த்தான்.
அந்த நான்கு பேருக்குத் தப்பி ஓடி வந்தவள், திடீரென இந்தப் பக்கம் ஒருவன் கையில் தான் அகப்படவும், பதறித் துடித்து “ஹேய்…! யாருடா நீ? என் கையை விடுடா! விடு…!” என்று அவனிடம் இருந்து தன்னை விடுவிக்கப் போராடினாள்.
அவளின் திமிறலை எல்லாம் தன் பலம் கொண்டு அடக்கியவன் “ஷ்ஷ்…! ஐ’யம் போலீஸ்…!” என்று அவள் காதில் நன்றாக விழுமாறு அழுத்திச் சொல்லவும், அந்த நான்கு பேரும் அருகில் வரவும் சரியாக இருந்தது.
அவனிடம் இருந்து திமிறி ஓடப் போனவள் காதில் ‘போலீஸ்’ என்ற வார்த்தை விழுந்து அவளை அப்படியே சட்டென அமைதியாக நிற்க வைத்தது.
அவளைத் துரத்திக் கொண்டு வந்தவர்கள் நால்வருமே எதிரில் நடப்பதைப் பார்த்தார்கள்.
ஒருவன் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற நிற்கின்றான் என்று புரிந்து கொண்டார்கள். ஆனாலும் தாங்கள் நான்கு பேர் அவன் ஒருவன். ஆள் அதிகம் நடமாட்டம் இல்லாத தெரு, எல்லாம் சேர்ந்து அவர்களுக்குத் தைரியம் தர ஷர்வாவும் அந்தப் பெண்ணும் இருக்கும் இடத்திற்கு நெருங்கி வந்தார்கள்.
இன்னும் தலை கவசத்தைக் கழற்றாமல் இருந்த ஷர்வா அந்தப் பெண் பக்கம் திரும்பி “என் வண்டி ஓரமாகவே நில்லு! எங்கேயும் ஓடாதே…!” என்று உத்தரவு போலச் சொல்லிவிட்டு… அந்த நால்வரையும் அளவெடுப்பது போல் பார்த்தான்.
தூரத்து வெளிச்சத்திலேயே அவர்களை ஓரளவு கணித்திருந்ததால் இந்த அரை இருட்டிலும் கண்களுக்கு நன்றாகப் புலப்பட்டார்கள்.
அந்த நால்வரும் இவர்கள் அருகில் வந்து மூச்சு வாங்க நின்று “என்ன உனக்கு ஹீரோனு நினைப்பா? தெனாவட்டா நிக்கிற?” என ஒருவன் கேட்க…
இன்னும் ஒருவன் அந்தப் பெண் நின்றிருந்த பக்கம் போய்க் கொண்டே, “என்னமா உன்னை எவ்வளவு தூரம் துரத்துறது? இவன் பின்னாடி போய் நின்னுட்டா அப்படியே உன்னைப் பயந்து போய் விட்டுட்டு போயிருவோமாக்கும்?” எனச் சொல்லிக் கொண்டே ஷர்வாவை தாண்டிப் போகப் போனான்.
ஷர்வஜித் அவசரமே பட வில்லை. நான்கு பேரையும் தலை கவசத்தின் கண்ணாடி வழியே கூர்ந்து பார்த்தான்.
தன்னைத் தாண்டிப் போனவனைப் போக விடாமல் அவன் பக்கம் சட்டெனத் திரும்பியவன் அவனின் கையைப் பிடித்துப் பின்னால் திருகி ஒரு சுழற்றுச் சுழற்றினான்.
ஷர்வஜித்திடம் அகப்பட்டவனுக்கு நிச்சயம் என்ன நடந்தது எனவே புரியவில்லை. அத்தனை வேகம் ஷர்வாவின் அதிரடியில் இருந்தது.
அதைப் பார்த்ததும் மற்ற மூவருமே திகைத்து தான் போனார்கள்.
திகைத்தாலும் சுதாரித்து ஷர்வாவை பிடிக்க மூவரும் ஒன்றாக அவன் மீது பாயப் போக, அதைக் கவனித்த ஷர்வா தன் கையில் மாட்டியிருந்தவனை அவர்கள் மூவர் மீதும் வேகமாகத் தள்ளி விட்டான்.
நால்வருமே அந்த வேகத்தை எதிர் பார்க்காமல் தரையில் விழுந்தார்கள்.
விழுந்தவர்கள் எழ முயலும் போதெல்லாம் அவர்களை எழ விடாமல் ஒருவர் பின் ஒருவராக நால்வரையும் மாறி மாறித் தாக்க ஆரம்பித்தான்.
எவராலும் அவ்வளவு விரைவாக நால்வரையும் தாக்குவது என்பது சிறிது கஷ்டமான காரியம் தான். ஆனால் அவனின் மனதில் எரிந்து கொண்டிருக்கும் தீக்குத் தீனி போடுவது போல மாட்டிய நால்வரையும் விட அவன் தயாராக இல்லை.
வழக்கத்தை விடப் பல மடங்கு கோபத்தில் அவர்களைத் தாக்கினான்.
அவனின் அடியின் வேகத்தைச் சமாளிக்க முடியாமல் “ஹய்யோ…! அடிக்காதே…!” என அவர்களால் கத்த தான் முடிந்தது.
அந்த நேரத்தில் ஒரு காவல்துறை வண்டி ஒன்று வேகமாக அங்கே வந்து நின்றது. அதில் இருந்து மூன்று கான்ஸ்டபிள்ஸ் இறங்கி ஓடி ஷர்வாவின் அருகில் வந்து நிற்க, தன் தலை கவசத்தைக் கழற்றியவன், அவர்களுக்கு ஜாடை காட்ட ‘சரி…’ என அந்த நால்வரையும் பிடித்து இழுத்து ஜீப்பில் ஏற்றினர்.
ஜீப்பில் நால்வரையும் ஏற்றிவிட்டு அருகில் வந்த ஒரு கான்ஸ்டபிள் அவனுக்கு ஒரு சல்யூட் வைத்து விட்டு நிற்க, அவரின் வணக்கத்தை ஏற்றுக் கொண்டவன் “கிளம்புங்க! நான் அப்புறம் ஸ்டேஷன் வர்றேன்…” என்று மட்டும் சொல்ல, அவர் கிளம்பினார்.
தன் பின்னால் இருட்டான பகுதியில் நின்றிருந்த அந்தப் பெண்ணை “இந்தப் பக்கம் வெளிச்சத்துக்கு வா…!” என்று அழைத்துக் கொண்டே தன் காதில் மாட்டியிருந்த புளுடூத்தை கழற்றி சட்டைப் பையில் போட்டு விட்டு, தன் வண்டியை எடுக்கத் திரும்ப, அவ்வளவு நேரம் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்த அந்தப் பெண், தலை கவசம் இல்லாத அவனின் முகத்தைப் பார்த்து, வேகமாக அருகில் வந்து “ஜித்தா…!” என்று அழைத்துக் கொண்டே அவனைப் பின்னால் இருந்து இறுக அணைத்திருந்தாள்.
தன் வண்டியின் அருகில் போனவனை அந்தப் பெண் அப்படி வந்து அணைப்பாள் என்று எதிர்பார்க்காததால் திகைத்து தான் போனான்.
தன்னை அணைத்து நின்றவளின் உடல் நடுங்கிக் கொண்டிருப்பதை அவனால் நன்றாக உணர்ந்து கொள்ள முடிந்தது.
ஆனாலும் அந்த அணைப்பை ஏற்றுக் கொள்ளாமல், அவளின் ‘ஜித்தா’ என்ற விளிப்பில் கோபத்துடன் அவளைத் தன்னை விட்டுப் பிரித்துத் தன் முன் பக்கம் கொண்டு வந்து அவளைத் தள்ளி நிறுத்தியவன் முகத்தில் கடும் கோபம் இருந்தது.
“ஹேய்…! அறிவிருக்கா உனக்கு? இப்ப எதுக்கு வந்து இப்படிக் கட்டிப்பிடிக்கிற? முட்டாள்…!” என்று வெறுப்புடன் திட்டினான்.
அவனின் வெறுப்பு வார்த்தையில் தான் செய்துவிட்ட காரியத்தின் வீரியம் புரிய, ‘என்ன காரியம் செய்து விட்டேன்… இப்படியா போய் அணைப்பது?’ என்று தன்னையே திட்டிக் கொண்டவள் அவனின் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாமல், கூச்சத்துடனும், அவன் திட்டியதால் உண்டான வேதனையுடனும் நின்றிருந்தாள்.
அவளின் கூச்சத்தையும், வேதனையையும் கண்டு கொள்ளாத ஷர்வா “அந்த வெளிச்சம் பக்கம் வந்து நில்லு! உன்னை விசாரிக்கணும்…” என்றான்.
அவன் திட்டியதில் முகம் வாடி இருந்தவள், அவன் விசாரிக்கப் போவதாகச் சொன்னதும் வெகுண்டு, “ஹலோ… என்ன நக்கலா? நான் யாருன்னு உங்களுக்குத் தெரியாது? என்னவோ இப்பத்தான் என்னை முதல் தடவையா பார்க்கிறது போல ரியாக்ஷன் கொடுக்குறீங்க? இப்படித் தெரியாதது போல நடந்துக்கிட்டான அப்படியே விட்டுருவேனா?” என்று பொரிந்தவள் குரலில், இப்போது கூச்சம் தொலை தூரம் போயிருக்க, அவன் தன்னைத் தெரியாதது போலப் பேசுவது முன்னுக்கு வந்து விட்டது.
அவள் அப்படி விளையாட்டாகப் பேசவும் வெளிச்சம் இருந்த பக்கம் நடந்து கொண்டிருந்தவன் நின்று கடுப்புடன் அவளை முறைத்து “ஆமா யார் நீ? இந்த நேரத்தில் இங்க என்ன பண்ணுற? உங்க வீடு எங்க இருக்கு?” என்று காவல் அதிகாரியின் தோரணையுடன் சிறிது நக்கலும் கலந்து விசாரிக்க ஆரம்பித்தான்.
“ஹேய்…! இது அநியாயம்? என் வீடு உங்களுக்குத் தெரியாது? என்னை நிஜமாவே உங்களுக்குத் தெரியாது? விளையாடாதீங்க…!”
“யார் விளையாடுறா? நானா? கொஞ்ச நேரத்துக்கு முன்ன அப்படித் தலைதெறிக்க ஓடி வந்த பொண்ணா நீ? என்னமோ பிக்னிக் வந்தது போல என்கிட்ட நிதானமா பேசிக்கிட்டு இருக்கிற. இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்ன நடக்க இருந்த விஷயத்தோட வீரியம் புரிஞ்சதா? இல்லையா? அவனுங்க கையில் நீ மாட்டியிருந்தா, உன் நிலைமை என்ன ஆகியிருக்கும்? அது கொஞ்சம் கூட உன் புத்தியில் உரைக்காமல், லூசு போல என்கிட்ட பேசிக்கிட்டு இருக்கிற…”
“அவனுங்க கையில் மாட்டியிருந்தா என்ன பண்ணிருப்பேன்? இப்படி நின்னு பேசிக்கிட்டு இருந்திருக்க மாட்டேன். என்கிட்ட இப்ப நிறுத்தி வச்சு விசாரணை பண்ணுற நீங்க, என் பிணத்தை வச்சு விசாரணை நடத்தி இருப்பீங்க. அவ்வளவு தான்…!” என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டு தோளைக் குலுக்கி விட்டுக் கொண்டாள்.
அவளின் அந்தச் சாதாரணக் குரலில் “சரிதான்…! உன்னை எல்லாம் அப்படியே சாகட்டும்னு விட்டு இருக்கணும். உன்னைப் போல ஆளுக்கு எல்லாம் உயிரோட மதிப்பு எங்க தெரிய போகுது?” என்று வெறுப்பாகச் சொல்லிவிட்டு, “சரி அதைப் பத்தி பேசி என் நேரத்தை வீணாக்க விரும்பலை. சொல்லு…! எதுக்கு இந்த நேரத்தில் வெளியே சுத்திக்கிட்டு இருக்க? உன்னைத் துரத்தினது யாருன்னு உனக்குத் தெரியுமா? எங்க போய்ட்டு வர்ற? நடந்ததை எல்லாம் வரிசையா சொல்லு?” என்று அவன் தன் விசாரணையை ஆரம்பிக்க…
அவன் கேள்வியை எல்லாம் பொறுமையாகக் கேட்டவள் “நீங்க கேட்ட கேள்விக்கு எல்லாம் பதில் சொல்றேன். அதுக்கு முன்னாடி நான் ஒரே ஒரு கேள்வி உங்களைக் கேட்கலாமா?” என்றாள் .
தன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் தன்னையே திருப்பிக் கேள்வி கேட்டவளை முறைத்துக் கொண்டே ‘என்ன கேள்வி?’ என்பது போல மட்டும் ஒரு பார்வை பார்த்தான்.
அவன் பாவனையைப் பார்த்து “ஓ…! கண்ணாலேயே கேள்வி கேட்குறீங்களா? இது தான் கண்ணால் பேசுவதா?” என்று அவனை நக்கல் அடித்தவள், அவன் பார்வையில் உஷ்ணம் கூடுவதைப் பார்த்து தன் வாயை அடக்கிக் கொண்டு “இல்ல நீங்க நிஜமாவே போலீஸ் தானா? நான் நீங்க ஏதோ ஆபீஸில் வொர்க் பார்க்கிறவரா இருக்கும்னு இத்தனை நாளும் நினைச்சுக்கிட்டு இருந்தேன்…” என்று வியப்புடன் கேட்டாள்.
“ஓ…! அப்போ நான் போலீஸ்னு உங்க அப்பா உன்கிட்ட சொல்லலையா? இந்தக் கேள்விக்குப் பதிலை அவர்கிட்டேயே போய்க் கேட்டுக்கோ! இப்ப நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு?” என்றான் அதிகார தோரணையில்.
“ஏன் நீங்க சொன்னா குறைஞ்சா போய்ருவீங்க? அவர்கிட்ட நான் கேட்டப்ப இது எல்லாம் உனக்குத் தேவையில்லாத கேள்வினு சொல்லி என்கிட்டே ஒன்னும் சொல்லலை. நான்தான் நீங்க அப்பாவைப் பார்க்க வந்ததை வச்சு ஏதோ அப்பாவுக்குத் தெரிந்தவர் போலனு நினைச்சுக்கிட்டேன்” என்றாள்.
அவள் தந்தை சொன்னதைச் சொல்லவும் இகழ்ச்சியாகச் சிரித்தவன் “நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் யாருன்னு சொல்லிட்டு தானே உன்னைப் பிடிச்சு நிறுத்தி வச்சேன். இப்ப போலீஸ்னு தெரிஞ்சிருச்சுல? போதும் வளவளன்னு பேசாதே! விசயத்துக்கு வா…!”
அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள் “எங்க அப்பா பத்தி சொன்னதும் எதுக்கு இப்படிச் சிரிக்கிறீங்க? எங்க அப்பாவுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை?” எனக் கேட்டாள்.
“ஹ்ம்ம்…! அதுக்குப் பதிலை உங்க அப்பாகிட்டயே கேள்! நீ இப்போதைக்கு எதுக்கும் பதில் சொல்ல போறது இல்லை. நீ அப்படியே நில்லு! எனக்கு வேற வேலை இருக்கு…” என்றவன் தன் வண்டியை இயக்கி கிளம்பப் போனான்.
அவன் அப்படிக் கிளம்பவும் தன் கேள்வியை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு “ஹய்யோ…! என்னை விட்டுட்டு போய்றாதீங்க! நான் சொல்றேன்… சொல்றேன்…!” என்று வண்டியின் கைப்பிடியைப் பிடித்த படி வேகமாகப் பேசினாள்.
‘அப்படி வா வழிக்கு’ என்பது போல ஒரு பார்வை பார்த்தவன் வண்டியை விட்டு இறங்கி நின்று வண்டியின் மீது சாய்ந்து கைகளைக் கட்டிக் கொண்டு ஸ்டைலாக நின்றவன் “ம்ம்… சொல்லு…!” என்றான்.
அவனின் அந்தப் பாவனையில் அசந்து அப்படியே நின்று “அம்மாடியோ…! என்னமா லுக் விடுறான்? நிஜமாவே இவன் ஜித்தன் தான்…!” என்று மனதில் எண்ணியபடி இருக்க…
அவனோ ‘என்ன இப்படி நிற்கிறாள்? இவள் என்ன லூஸா?’ என்பது போல ஒரு பார்வை பார்த்தவன் “ப்ச்ச்…!” என்று குரலில் சலிப்பைக் காட்டினான்.
அந்தச் சலிப்பில் சுதாரித்து “இன்னைக்கு ஒரு பிரண்டுக்கு பிரத்டே. அந்தப் பார்ட்டிக்குப் போனேன். திரும்பி காரில் வரும் போது, திடீர்னு டயர் பஞ்சர் ஆகிருச்சு. கார் நிக்கவும் என்னாச்சுனு இறங்கி பார்த்துக்கிட்டு இருந்தேன். டயர் பஞ்சர் ஆனதைப் பார்த்து என்ன செய்றதுன்னு தெரியாம யோசிச்சுக்கிட்டு இருக்கும் போதே, அந்த நாலு பேரும் எங்க இருந்து வந்தாங்கனே தெரியலை.
திடீர்னு பக்கத்தில் வந்து அசிங்கமா கமெண்ட் பண்ணிக்கிட்டே என்னைத் தொட வந்தாங்க. அதுக்குள்ள நான் அவங்ககிட்ட இருந்து தப்பிக்க இந்த ரோட்டில் ஓடி வந்தேன். அவர்களுக்கு இந்தத் தெரு நல்லா தெரியும் போல, என்னைச் சுத்தி வளைச்சுப் பிடிக்கப் பார்த்தாங்க. நீங்க காப்பாத்திட்டீங்க” என்று முடித்தவள்,
ஏதோ யோசனையுடன் சிறிது நேரம் தலை குனிந்து நின்றிருந்து விட்டு முனங்கும் குரலில் “ஸாரி…! உங்களை ஏற்கனவே பார்த்து இருக்கேன்ல. அதான் தெரிந்தவர் நீங்க. அதோட எத்தனை பெரிய ஆபத்தில் இருந்து தப்பிச்சிருக்கேன்னு நினைச்சேனா? அதான் அப்போ ஏதோ உணர்ச்சி வசப்பட்டுக் கட்டிப்….” என்று நிறுத்தியவள் அதற்கு மேல் சொல்ல முடியாமல் தடுமாறினாள்.
அவள் சொன்ன முன் பாதியை எல்லாம் கிரகித்துக் கொண்ட ஷர்வா “இந்த நேரத்தில் பாதுகாப்பு இல்லாம சுத்துற உன்னைப் போல ஆட்களையும் திருத்த முடியாது. எப்ப பொண்ணு கிடைப்பான்னு அலையுற அந்த மாதிரி நாய்ங்களையும் திருத்த முடியாது…” என்று திட்டியவன்,
அவள் சொல்ல வந்த பின் பகுதியைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், “ஆமா அவனுங்க உன் பக்கத்தில் வரும் போது என்ன மாதிரி பேசினானுங்க?” என்று கேட்டான்.
அவன் தான் அவனை அணைத்ததைப் பற்றி எதுவும் பேசாமல் தவிர்த்ததைக் கவனித்துச் சிறிது ஆசுவாசப் பட்டவள், கடைசியாகக் கேட்ட அவனின் கேள்வியில் முகம் சுளித்தாள்.
அவளின் முகச் சுளிப்பை பார்த்து “ஹேய்…! தப்பா பேசியதை கேட்கலை. அதாவது அந்தப் பேச்சை தவிர வேற எதுவும் பேசினான்ங்களா?” என்று கேட்டான்.
அவன் கேள்வி புரிந்து சிறிது நேரம் யோசித்துப் பார்த்து விட்டு “ம்ம்… நான் டயரை பார்த்துக்கிட்டு இருந்தப்ப, சூப்பர்டா…! சொன்னதை சரியா செய்துட்ட… புதையல் கிடைக்கும்னு பார்த்தா இன்னைக்குப் பொக்கிஷமே கிடைச்சுருக்குனு, ஒருத்தன் சொன்னது போலச் சத்தம் கேட்டுத்தான் என் பின்னாடி அவங்க நிற்கிறதை பார்த்தேன்…” என்றவள் அதிர்ந்து “அப்போ பிளான் பண்ணி பண்ணினாங்களா?” என்று திகைத்துப் போய் அவனைக் கேட்டாள்.
நாடியில் தன் கையை வைத்துத் தடவி கொண்டே யோசித்தவன் அவள் கேள்வியில் “ஹ்ம்ம்… விசாரிக்கிறேன். கார் எங்க இருக்கு?” என்று கேட்டான்.
“மெயின் ரோட்டுல இருந்து இந்த ரோட்டுக்கு திரும்பின இடத்தில் இருக்கு…”
“உன் போன் எங்க?”
“காரை செக் பண்ண இறங்கினப்ப காருக்குள்ளேயே எல்லாம் வச்சுட்டு தான் இறங்கினேன். கையில் எதுவும் எடுக்கலை…”
“ம்ம்… ஓகே…! வந்து ஏறு! அங்கே போகலாம்…” என்றான்.
அவன் வண்டியில் ஏற சொன்னதும் ஒரு நிமிடம் முழித்துவிட்டு, சந்தோஷமாக ஏறி அமர்ந்தாள்.
அவளின் முகபாவனையை ஷர்வா கவனித்தாலும், கண்டு கொள்ளாமல் அவள் அமர்ந்ததும் வண்டியை கிளம்பியவன், அவளை மறந்தவனாகச் செல்ல, பின்னால் அமர்ந்திருந்தவள் அவனின் அருகாமையில் இதமான மனநிலையுடன் பயணம் செய்தாள்.
சிறிது நேரம் அமைதியாக வந்த பிறகு, கார் நிற்கும் இடத்தைத் தெரிந்து கொள்ள வழி கேட்க வாயைத் திறந்தான் ஷர்வஜித்.
அவன் கேள்வியில் தான் இவ்வுலகிற்கு வந்தது போலக் கார் நிற்கும் திசையைக் காட்டினாள்.
காரின் அருகில் வண்டியை நிறுத்தி இருவரும் இறங்கினார்கள்.
அந்தப் பகுதி கொஞ்சம் ஒதுக்குப் புறமாக இருந்ததால், வேறு வாகனங்கள் இந்தச் சிறிது நேரத்தில் சரியாக வராததால் கார் அவள் நிறுத்தி இருந்த படியே இருந்தது.
காரின் அருகில் சென்றவன், “உன் பொருள் எல்லாம் உள்ள சரியா இருக்கா பார்…!” என்றான்.
அவள் காரில் ஏறி பார்த்துக் கொண்டிருக்க, ஷர்வா காரை சுற்றி ஒரு நோட்டம் விட்டான்.
முன் சக்கரம் அருகில் ஒரு சிறு ஆயுதம் கிடந்தது. சக்கரம் பழுதாகக் காரணம் புரியக் குனிந்து அதை எடுத்து தன் கால் சட்டையின் பையில் பத்திரப்படுத்தி விட்டு, காரை சுற்றிலும் வந்து பார்த்தான்.
வேறு எந்த வேறுபாடும் இல்லாமல் இருக்க முன் கதவு பக்கம் வந்தான்.
தன் போன், பர்ஸ் எல்லாம் சரி பார்த்து விட்டு இறங்கி வந்தவள் “உள்ளே எல்லாம் அப்படியே தான் இருக்கு. எதையும் யாரும் எடுக்கலை…” என்றாள்.
“ஹ்ம்ம்…!” என்றவன் வேறு எதுவும் கேட்காமல், “சரி கிளம்பு…! உன்னை உங்கள் வீட்டில் விட்டுறேன். காரை லாக் பண்ணு! போன், பேக் எல்லாம் எடுத்துக்க…!” என்று சொல்லி விட்டு தன் வண்டியை நோக்கி நடந்தவனை நிறுத்தியது அவள் கேட்ட கேள்வி.
“எதுக்கு என்னைத் துரத்தினாங்க ஜித்தா?” என்று கேட்டவளை திரும்பி பார்த்துக் கடுமையாக முறைத்த ஷர்வஜித்,
“என்னை அப்படிக் கூப்பிடாதே விதர்ஷணா…!” என்று குரலிலும் அதே கடுமையைக் காட்டி சொன்னான்.
அவன் கடுமையில் அப்படியே வாயடைத்து நின்றாள் விதர்ஷணா.