பனியில் உறைந்த சூரியனே – 29

அத்தியாயம் – 29

அகிலனை உள்ளே சென்று பார்த்து விட்டு வெளியில் வந்த விதர்ஷணா தோழியின் கையைப் பிடித்துக் கொண்டு “என்னடி, அகிலன் இப்படி எலும்பும், தோலுமா இவ்வளவு மோசமா இருக்கான்?” என்று வருத்ததுடன் கேட்டாள்.

“நீ அகிலனை பார்த்து ரொம்ப நாள் ஆச்சுல? அந்த விஷயத்துக்குப் பிறகு அப்படித் தான் இருக்கான் தர்ஷி. தவறு செய்த குற்றவுணர்வு அவனைப் போட்டு அரிக்கிது. அதோட அப்பா, அம்மாவும் விஷயம் தெரியாம அவனைத் தாங்கவும் இன்னும் குற்றவுணர்வு கூடி போயிருச்சு போல. அவனோட அழுத்தம் தான் அவனை இன்னைக்குச் சாவு வரை கொண்டு வந்துருச்சு…” என்றாள் பூர்வா.

“ஹேய்…! என்ன பூரி அப்போ போன் போட்டு ஜித்தா தான் காரணம்னு சொல்லி அழுத, இப்போ என்ன வேற சொல்ற?”

“அப்பவா? அப்போ என்ன சொன்னேன்?” என்று பூர்வா தான் சொன்னதையே மறந்தவளாகக் கேட்க,

“அடியே…! என்னடி கொழுப்பா? அகிலனை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறேன். ஜித்தா தான் அகிலன் இப்படி முடிவு எடுக்கக் காரணம்னு சொல்லி அழுத, அதைக் கேட்டு நான் வேற அவரைப் போய்ப் பார்த்து திட்டிட்டு வர்றேன். இப்போ என்ன சொன்னேன்னு கூலா கேட்குற?”

“அச்சோ…! என்னடி சொல்ற? அண்ணாவை திட்டினியா? அண்ணா செய்தது சரி தான்டி. நான் தான் அகிலனை அப்படிப் பார்த்ததை வச்சும், நாம ஈவ்னிங் பேசினதை வச்சும் ஏதோ உளறிட்டேன். அண்ணா அகிலனை பார்த்து நிறைய அட்வைஸ் பண்ணினாராம். அதை எல்லாம் கேட்டு அகிலன் சரி இனி நல்லவனா இருப்பேன். இப்படித் தவறான வழிக்கு போகமாட்டேன்னு எல்லாம் சொன்னானாம். தயா மூலமும் அகிலன் நார்மலாக நிறைய முயற்சி எடுத்தாராம். இது எல்லாம் எனக்கு இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அண்ணா வந்தப்ப தான் தெரியும். நீ இவ்வளவு முயற்சி எடுத்தும் இந்தப் பைய இப்படிப் பண்ணிட்டானேனு தயா அண்ணாகிட்ட சொல்லிட்டு இருந்தார்…” என்றாள்.

“அப்புறம் ஏன் அகிலன் இந்த முடிவுக்கு வந்தான்?”

“அதுக்குக் காரணம் அப்பா தான்…”

“என்னடி சொல்ற? அப்பாவுக்கு விஷயம் தெரிஞ்சு திட்டிட்டாரா?”

“இல்லை, அப்பா திட்டலை தர்ஷி. எப்பயும் அவனைத் திட்டிக்கிட்டே இருக்குற அப்பா இப்போ அவனைத் தாங்கவும், அகிலனுக்குக் குற்ற உணர்ச்சியா போயிருச்சு. அதனால் அப்பாகிட்ட இவனே விஷயத்தைச் சொல்லிட்டான்…”

“என்னடி?” என்று விதர்ஷணா அதிர்வாகப் பார்க்க,

“ஆமா, அவனே சொல்லிட்டான். ஆனா அப்பா திட்டலை, அடிக்கலை, ஒன்னுமே சொல்லலையாம். அதிர்ந்து போய்ட்டார். அமைதியா இருந்தாராம். அப்புறம் அம்மாகிட்ட போய் அகிலன் தப்பான வழியில் போற அளவுக்கு நான் தான் அவன் மனதை கெடுத்துட்டேன்.

எதுக்கு எடுத்தாலும் அவனைத் திட்டாம உட்கார வச்சு நல்லது, கெட்டது எடுத்து சொல்லி அவன்கிட்ட தன்மையா பேசியிருந்தா இப்படித் தவறான வழிக்கு போக அவனுக்குத் தோணிருக்காதுன்னு ரொம்ப வருத்தப்பட்டாராம். இது எல்லாம் நான் வீட்டில் இல்லாத சமயம் நடந்து இருக்கு. எனக்கு ஒன்னுமே தெரியலை. அவனோட தடுமாறும் இந்த வயசில் நான் ஒரு பிரண்டா எடுத்து சொல்லாம அவனை எதுக்கு எடுத்தாலும் திட்டியதில் இப்போ இப்படி ஆகிட்டான்னு அப்பா தன்னையே குற்றவாளி ஆக்கிக்கொள்ளவும், அகிலனுக்கு அது தாங்கலை.

இப்படித் தன்னையே குற்றம் சொல்லிக்கிற அப்பாகிட்ட போய்க் கடத்தல் நாடகம் ஆட நினைச்சேன்னு குற்றவுணர்ச்சில சூசைட் அட்டம்ட் பண்ணிட்டான்…” என்று பூர்வா சொல்ல,

அந்த நேரத்தில் விதர்ஷணாவிற்குச் சபரீஷின் ஞாபகம் வந்தது. அவனும் குற்ற உணர்வு தாங்காமல் தானே தற்கொலை செய்து கொண்டான்.

வாழ வேண்டிய வயதில் ஏன் இப்படித் தடுமாறணும்? பின்பு குடும்பத்தினரை நினைத்துக் குற்றவுணர்வில் தவித்து இப்படித் தற்கொலை பண்ணனும்? என்று அந்த இளைஞர்களை நினைத்து விதர்ஷணாவின் மனது வருத்தம் கொண்டது.

“சரி பூர்வி. இனியாவது அகிலன் இந்த மாதிரி முடிவுக்குப் போகாத மாதிரி கவனமா பார்த்துக்கோங்க…”

“ஆமா தர்ஷி. இனி கவனமா இருப்போம். அதோட தற்கொலை எண்ணம் வராமல் அகிலன் மாறக் கவுன்சிலிங் தருவாங்களாம். அதுக்கு ஏற்பாடு செய்றதா தயாவும், அண்ணாவும் பேசிக்கிட்டாங்க. இனி அகிலன் மாறிடுவான்னு நம்பிக்கை இருக்கு…” என்றாள் பூர்வா.

“சந்தோஷம் பூரி…!” என்ற விதர்ஷணா சிறிது நேரத்திற்குப் பிறகு அங்கிருந்து சென்றாள்.


அன்று வீட்டிற்குள் நுழையும் போதே கடுமையான கோபத்துடனே நுழைந்தார் கருணாகரன். அவர் கையில் ஒரு செய்தித்தாள் இருந்தது. அதைச் சுருட்டி பிடித்து அவர் இறுக்கிய விதத்திலேயே அவரின் கோபம் நன்றாகவே தெரிந்தது.

“விதர்ஷணா…! விதர்ஷணா…!” என்று அதே கோபத்துடன் அழைக்க, தன் அறைக்குள் இருந்த விதர்ஷணா விரைந்து வெளியே வந்தாள்.

மகளைப் பார்த்ததும் “என்ன விதர்ஷணா இது? என்ன காரியம் செய்து வச்சுருக்க? என் மகளா நீ? என் கௌரவத்தைக் குழி தோண்டி புதைச்சுட்டியே…!” என்றவர் செய்தித்தாளை மகளின் முன் தூக்கி எறிந்தார்.

விதர்ஷணாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அன்று காலையில் தான் தந்தை வெளியூரில் இருந்து வருவார் என்று அவளுக்குத் தெரியும். ஆனால் வரும்போதே இவ்வளவு கோபம் ஏன் என்று புரியாமல் தந்தையைத் திகைத்துப்போய்ப் பார்த்தாள்.

“இன்னும் ஏன் அப்படியே நிற்கிற? பேப்பரை எடுத்துப் பாரு! என் மானத்தை வாங்க எல்லா வேலையும் செய்துட்டு ஒன்றும் தெரியாத பாப்பா மாதிரி நிற்கிற…” என்று அதட்டினார் கருணாகரன்.

அவரின் அதீத கோபத்தில் விதர்ஷணாவின் உடம்பு நடுங்கியது. கீழே கிடந்த செய்தித்தாளை மெல்ல எடுத்துப் பிரித்துப் பார்த்தாள். ஐந்தாவது பக்கத்தில் கருணாகரன் பேப்பரை மடித்து வைத்திருந்தார்.

அந்தப் பக்கத்தின் கீழே “காதலில் விழுந்த விக்ரம் அறக்கட்டளை, விக்ரம் கல்வியகத்தின் உரிமையாளரின் மகள்” என்று பெரிய எழுத்துகளில் தலைப்பிட்டு, அதன் கீழே ‘இரவு நேரத்தில் காதலனை பார்க்க காதலனின் வீட்டிற்கே சென்றார். அவரின் காதலன் சென்னையின் அசிஸ்டெண்ட் கமிஷனர் ஷர்வஜித் என்பது குறிப்பிட தக்கது’ என்று இன்னும் விலாவாரியாக அவள் அந்த வீட்டில் எவ்வளவு நேரம் இருந்தாள் என்று மட்டும் அல்லாமல், சில கற்பனைகளையும் கலந்து அசிஸ்டெண்ட் கமிஷ்னர் ஷர்வஜித்தும், விக்ரம் குழுமத்தின் மகள் விதர்ஷணாவும் காதல் பறவைகளாகச் சுற்றி திரிகிறார்கள்’ என்று அந்தச் செய்தி முடிந்திருந்தது.

செய்தியை திகைத்தபடி படித்துக் கொண்டு வந்த விதர்ஷணா கடைசி வரியை பார்த்து ‘அடப்பாவிகளா! நான் துரத்த என் ஜித்தன் என் கையில் சிக்காம ஜித்து வேலை காட்டிட்டு இருக்கார். இவன் என்னமோ எங்க கூடச் சேர்ந்து சுத்தினது போல நியூஸ் போட்டுருக்கான், மட மண்டையன்!’ என்று மானசீகமா செய்தி எழுதியவனைத் திட்டியவள் ‘ஹ்ம்ம்! என் ஜித்தாவும், நானும் அப்படிச் சுத்தினா எப்படி இருக்கும்?’ என்றும் நினைத்துக் கொண்டவளுக்கு ஆசை கண்ணில் மின்னியது.

செய்தியை படித்து விட்டு மகள் ஏதாவது சொல்லுவாள் என்று கருணாகரன் காத்திருக்க, அவளோ கனவு காண்பவள் போல இருந்த நிலையைப் பார்த்து, “விதர்ஷணா…!” என்று இன்னும் கோபம் ஏற கத்தினார்.

அதில் திடுக்கிட்டு தந்தையைப் பார்த்த விதர்ஷணா “என்னப்பா?” என்று கேட்டாள்.

“என்ன, என்னப்பா? நீ தான் பதில் சொல்லணும். என்ன தைரியம் இருந்தா நீ அவன் வீடு தேடி போயிருப்ப? அதுவும் ராத்திரியில்! உன் மனசில என்ன நினைச்சுட்டு இருக்க விதர்ஷணா? அவனிடம் வந்த உன் காதல் சரி வராதுன்னு நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன். அப்படி இருக்கும் போது, நைட் அவனைப் பார்க்க போனது மட்டும் இல்லாமல், ஒரு பேப்பரில் நியூஸ் வர்ற அளவுக்குக் கொண்டு வந்து விட்டுருக்க. இதனால இப்போ நம்ம வீட்டு மானமே போயிருச்சு. பேப்பரில் இப்படி நியூஸ் வர்ற அளவுக்கு உன் நடத்தை இருக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை விதர்ஷணா…”

தந்தையின் கோபத்தைப் பார்த்து உள்ளுக்குள் பயமாக இருந்தாலும் தன் நிலையைச் சொல்லவேண்டிய கட்டாயத்தில் “ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டியது இருந்ததுப்பா. அதனால்தான் அந்த நேரத்தில் அவர் வீட்டிற்குப் போனேன். அங்கே அவரோட அம்மாவும் இருந்தாங்கப்பா. தனியா ஒன்னும் இல்லை…” என்றாள்.

“அந்த ஆள் கிட்ட வீடு தேடிப் போய்ப் பேசுற அளவுக்கு உனக்கு என்ன அப்படி முக்கியமான விஷயம் இருக்கப் போகுது? அவங்க அம்மாவும் இருந்தாங்கன்னா அப்போ உன்னை அந்த அம்மாவும் சேர்ந்து தான் தூண்டிவிடுகிறார்களா? இது கொஞ்சம் கூடச் சரியில்லை விதர்ஷணா. இனி நான் நீ செய்வதை எல்லாம் பார்த்துட்டு பொறுமையா இருக்கப் போறது இல்லை. நீ படிச்சது எல்லாம் போதும். உனக்குச் சீக்கிரம் கல்யாணம் பண்ணலாம்னு நான் முடிவு எடுத்துட்டேன். எப்போ பேப்பரில் வர்ற அளவுக்கு விஷயம் கை மீறி போச்சோ இனியும் நான் சும்மா இருப்பதில் அர்த்தமில்லை. உனக்கு மாப்பிள்ளை பார்க்க போகிறேன். சீக்கிரம் கல்யாணத்துக்குத் தயாராக இரு…!” என்றவர் அவரின் அறைக்குச் சென்றார்.

‘என்னது மாப்பிள்ளையா?’ எனத் திடுக்கிட்ட விதர்ஷணா “அப்பா நான் சொல்றதைக் கேளுங்க…” என்று அவரின் பின்னாலேயே ஓடினாள். ஆனால் அவள் பேசுவதை இனியும் கேட்க தயாராக இல்லாத கருணாகரன் தன் கோபத்தைக் கதவை மூடும் வேகத்தில் காட்டினார்.

விதர்ஷணா எவ்வளவோ கதவை தட்டியும் கருணாகரன் சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. செய்தித்தாளில் மகளின் காதல் விஷயம் வந்ததில் அதிகமாகக் கொதித்துப் போய் இருந்தார் கருணாகரன்.

பதில் சொல்லாத தந்தையை நினைத்து வருந்திய விதர்ஷணா கையிலிருந்த செய்தித்தாளை வெறித்துப் பார்த்தாள். ‘எவனவன் என்னை இவ்வளவு க்ளோசா வாட்ச் பண்ணி மெனக்கெட்டு அதைப் பேப்பரில் எழுதியவன்? நான் ஒன்னும் சினிமா ஸ்டார் இல்லையே? அவர்கள் தான் இது போல் கண்காணிக்கபட்டுப் பேப்பரில் இப்படிக் கிசுகிசுவில் அடிபடுவதைப் பார்த்திருக்கிறாள். ஆனால் இது ஏதோ வேண்டும் என்றே வந்த செய்தி போல இருக்கே. அப்பா இதை யோசிக்கவில்லையா?’ என்று சிந்தனையுடன் செய்தித்தாளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

உண்மையில் கருணாகரனுக்கு எப்படி, யார் இந்தச் செய்தியை எழுதியது என்று சிந்தனை போகவே இல்லை. எப்பொழுதும் போல அவரின் கௌரவ எண்ணம் வேறு சிந்தனைக்கு அவரைப் போக விட வில்லை என்பதை விட, அவருக்கு மகளிடம் இந்த மாதிரியான நடவடிக்கை இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இன்னும் அவள் எதுவும் விபரீதமாகச் செய்யும் முன் தான் முந்திக் கொள்ள வேண்டும் என்றே அவர் நினைத்தார்.

விதர்ஷணா செய்தித்தாளை யோசனையுடன் வெறித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், ஷர்வஜித்தும் அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தான்.

விதர்ஷணா தன் வீடு வரை வந்தது எப்படிச் செய்தியாக வந்தது? பேப்பரில் செய்தி வரும் அளவிற்குத் தன்னைக் கண்காணிப்பவர் யார்? கண்காணிப்பது என்னையா? இல்லை விதர்ஷணாவையா? என்று ஆராய்ச்சியுடன் பார்த்தவன் முதலில் இந்தச் செய்தியை எழுதியவர் யாரெனக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

சிறிது நேரத்தில் தன் கைபேசியில் தொடர்ந்த சில அழைப்புகளுக்குப் பின் யார் செய்தியை எழுதியது? என்ற விபரம் அவனின் கை வந்து சேர்ந்தது.

ஷர்வாவின் முகம் பலத்த யோசனையைத் தத்தெடுத்துக் கொண்டது. யோசனையின் முடிவில் தன்னைச் சுற்றி மட்டுமில்லாது விதர்ஷணாவை சுற்றியும் வலை பின்ன படுவதை நன்றாக உணர்ந்து கொண்டான்.

விதர்ஷணாவுடன் தன்னையும் சுற்ற நினைக்கும் வலையில் சிக்கிக் கொள்ள விருப்பம் இல்லாதவன் அந்த வலையை அறுத்துக்கொண்டு வெளியே வர என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தான்.

ஆனால் அவனின் யோசனை நிறைவேறாத வண்ணம் அடுத்தடுத்து நடந்த காரியங்கள் அந்த வலைக்குள் சென்று அவனைச் சிக்க வைத்தது.

◆◆◆

சரவணனை பிடிக்கத் தீவிர முயற்சிகள் நடந்து கொண்டிருந்தது. ஐவரிடமும் விசாரணை நடத்தியதில் சரவணனின் அங்க அடையாளங்களைக் கேட்டறிந்து அதன் மூலம் ஒரு படத்தைக் கணினி மூலம் வரைய வைத்து, காப்பக வழக்கை எடுத்துள்ள ஐந்து காவல் நிலையத்திற்கும் ஷர்வா அனுப்பி வைத்தான்.

விரைவில் வழக்கை ஒரு முடிவுக்கு வரவைக்க, இனி மறைமுகம் தேவை இல்லை என முடிவுக்கு வந்தவன், காவல் நிலையங்களைத் தொடர்பு கொண்டு, வழக்கை துரிதப்படுத்த ஏற்பாடு செய்தான். ஒரு பக்கம் காவலர்களும், இன்னொரு பக்கம் கவியுகன் ஆட்களும் சரவணனை பிடிக்கக் களத்தில் இறங்கினர்.

அதோடு தங்களிடம் இருந்த ஐந்து குற்றவாளிகளையும் அந்தந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்தான். காப்பகத்திற்குக் கண்டுபிடித்த குற்றவாளிகளைப் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டது.

சரவணனை பிடிக்க முதல் கட்டமாகக் குழந்தைகள் கடத்தலில் இதற்கு முன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் வரிசையில் சரவணன் இருக்கிறானா என்று சோதனை நடந்து கொண்டிருந்தது.

அடுத்ததாகச் சரவணனுடன் வந்தவர்கள் அடையாளங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களைப் பற்றிய விவரமும் குற்றவாளிகள் வரிசையில் உள்ளதா என்று சோதனை செய்ய ஆரம்பித்தார்கள். இந்த வேலைகள் எல்லாம் துரித வேகத்தில் நடந்து கொண்டிருந்த வேளையில் ஷர்வஜித்திற்குக் கிடைத்த ஒரு புதுத் தகவல் அவனைத் திகைப்படைய வைத்தது.

சென்னையின் இன்னொரு மூலையில் வேறு இரண்டு காப்பகத்தில் குழந்தைகள் காணாமல் போனதாகத் தகவல் வந்து சேர்ந்தது.

அன்று கமிஷ்னரிடம் சில விஷயங்கள் பேசிக்கொண்டிருந்த போது மீண்டும் கடத்தல் சம்பவம் நடந்திருப்பதைப் பற்றித் தனக்குத் தகவல் வந்திருப்பதாகச் சொல்லி அதைப் பற்றிய விவரத்தை அவனிடம் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்த ஷர்வா அந்தச் சம்பவம் நேற்று தான் நடந்தது என்பதை அறிந்து கொண்டான்.

அதோடு அந்த வழக்கு விஷயத்தில் குறிப்பிட்டிருந்த சில விஷயங்கள் நெருடலாக இருக்க, அதை எல்லாம் கூர்ந்து கவனித்தான்.

அந்த இரண்டு காப்பகத்திலும் குழந்தைகளைக் கடத்த பயன்படுத்தப்பட்டிருந்த முறைகள் சில இந்த ஐந்து காப்பகத்தில் எப்படிக் கடத்தப்பட்டார்களோ அதேபோல் சில வழிமுறைகள் அந்தக் காப்பகத்திலும் பின்பற்றி இருப்பதை அறிந்து கொண்டான்.

அதை அனைத்தையும் கமிஷ்னரிடம் குறிப்பிட்ட ஷர்வா அந்த வழக்கையும் தன் பொறுப்பில் ஏற்றுக் கொள்வதாகச் சொன்னான். ஏற்கனவே அவன் பொறுப்பில் வழக்கு இருப்பதால் இதையும் அவனிடமே ஒப்படைத்தார்.

அதை வாங்கிக் கொண்டு வந்தவன் அடுத்து கவியுகனுக்குத் தொடர்பு கொண்டான். கவியை அழைத்து விவரத்தை சொன்னவன் அங்கே சென்று விசாரிக்கச் சொன்னான். அடுத்ததாக அந்தக் காப்பகம் உள்ள ஏரியா காவல்நிலையத்திற்குத் தொடர்பு கொண்டு வழக்கு பற்றி மேலும் விவரங்கள் அறிந்து கொண்டான்.

அடுத்தடுத்து நடந்துகொண்டிருக்கும் குழந்தைகள் கடத்தல் ஷர்வாவை ஓய்வில்லாமல் சுழல வைத்தது.

அதனுடன் சேர்ந்து விதர்ஷணா விஷயமும் அவனின் மூளையைக் குடைந்து கொண்டிருந்தது. பத்திரிக்கையில் செய்தி வந்ததில் மகளின் மீது மட்டுமில்லாமல் ஷர்வாவின் மீதும் கருணாகரனுக்கு மிகுந்த கோபம் உண்டானது.

அவன்தான் மகளின் மனதில் சலனத்தை உண்டு செய்து அவளை இப்படி இரவு வீடு தேடி வரும் அளவிற்கு மாற்றி வைத்து விட்டான். அதனால் தான் மகள் தன்னை எதிர்த்துப் பேசுகிறாள் என்று நினைத்தார்.

அந்தக் கோபத்தில் அவனின் கைபேசி எண்ணை விசாரித்து அறிந்து கொண்டவர் அவனுக்குத் தொடர்பு கொண்டார்.

“என்ன போலீஸ்காரன் வேலையை விட்டுட்டுப் பெண்ணைப் பிடிக்கிற வேலையைப் பார்க்க ஆரம்பிச்சுட்டியா?” என்று எடுத்ததும் கோபமாக இரைந்தார்.

“யாரது?” என்று ஒரு நிமிடம் குழம்பிய ஷர்வா பெண்ணைப் பற்றிச் சொல்லவும், “போலீஸ் வேலை மட்டும்தான் என் வேலை. பெண்ணைப் பிடிக்கிற வேலையை எல்லாம் நான் பார்ப்பது இல்லை…” என்று அலட்சியமாகப் பதில் சொன்னான்.

“என்னடா திமிரா? நீ பெண்ணைப் பிடிக்காமல் தான் என் பொண்ணு இப்படி உன் பின்னாடி பைத்தியமா சுத்தி, சுத்தி வர்றாளா? நீதான்டா காரணம். நீதான் அவ மனசை கெடுத்துட்ட. இதுக்கு முன்னாடி தான் உண்டு, படிப்பு உண்டுன்னு இருந்தவள் இப்போ என்னை எதிர்த்துப் பேசுவது மட்டுமல்லாம நீதான் அவளின் உலகம் என்பது போல் பேச வைச்சுட்ட. பேப்பரிலும் நீதான் நியூஸ் கொடுத்திருப்ப. உங்க இரண்டு பேரு பழக்கம் ஊருக்கே தெரிஞ்சு நான் அவமான படணும். இதானே உன் ப்ளான்?” என்று ஷர்வாவின் மீது இருந்த கோபத்தைக் கொட்ட ஆரம்பித்தார்.

“மிஸ்டர்.கருணாகரன்! ஒரு நிமிஷம் மூச்சு விட்டுக்கோங்க. நான் எந்தப் பெண்ணின் மனதையும் கெடுக்கவும் இல்லை. அதற்கு எனக்கு அவசியமும் இல்லை. புரிஞ்சுதா? அப்படி ஒரு வேளை உங்க பெண்ணை எனக்குப் பிடிச்சிருந்தா நானே நேரடியா வந்து பேசுவேனே தவிர இப்படி அல்பத்தனமாக எல்லாம் செய்ய மாட்டேன். அதையும் முதலில் புரிஞ்சுகோங்க. இனி எனக்குத் தேவையில்லாமல் போன் செய்யும் வேலை வேண்டாம்…” என்று கண்டிப்புடன் சொன்னவன் பட்டென்று கைபேசியை அணைத்து வைத்தான்.

அவனின் அந்த அலட்சியமான பேச்சில் கொதிப்படைந்த கருணாகரன் போனையே வெறித்துப் பார்த்தார்.

‘என் பெண்ணின் மனசை கெடுத்துட்டு இவன் இப்படிச் சொல்லிட்டா நான் நம்பிருவேனா? விதர்ஷணா என் பெண்ணாக இருக்கும் வரை மட்டும் தானே உன் இந்த ஆட்டம் தொடரும். அவளைச் சீக்கிரமா வேறு ஒருத்தனுக்கு மனைவியா மாத்துறேன். அப்பத்தான் எனக்கு நிம்மதி. அன்னைக்கு ஸ்கூல் விஷயத்தில் பிரச்சனை வந்தப்ப பத்திரிக்கையில் என் ஸ்கூல் பெயரை வர வைப்பதாகச் சொல்லிவிட்டு போன உன்னால சின்னதா தான் வர வைக்க முடிஞ்சது. அதுக்கும் சேர்த்து வச்சு என் மகள் பெயரையும் உன்கூட இணைச்சு என்னை நீ பழிவாங்கிவிட்டல? இனியும் நான் சும்மா இருப்பதில் அர்த்தமே இல்லை. என் வேலையை ஆரம்பிக்கிறேன் பார்!’ என்று மனதிற்குள் அவனுக்குச் சவால் விட்டுக்கொண்டு விதர்ஷணாவிற்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலையை ஆரம்பித்தார்.

கருணாகரன் ஷர்வாவும் தன் மகளை விரும்புகிறான். அவன் தான் தன் மகளின் மனதில் சலனத்தை உண்டு பண்ணிருக்க வேண்டும் என்று அவர் நம்பினார். அதனால் அவனைத் திட்ட நினைத்து அவனுக்குத் தொடர்பு கொண்டார். மகள் தான் விரட்டி, விரட்டி காதல் செய்யும் அளவிற்குச் சென்றாள் என்று அறிந்தால் அந்தத் தந்தையின் மனம் தாங்குமோ?

உங்கள் மகள் தான் என் பின்னால் சுற்றுகிறாள் என்று சொல்ல ஷர்வாவிற்கு நொடி பொழுது போதும். ஆனாலும் அதைச் சொல்லாமல் தவிர்த்தான். பெண்கள் மீது அவனுக்கு இருக்கும் மரியாதை அவனைச் சொல்லவும் விட வில்லை. அதோடு பத்திரிகையில் செய்தி வந்ததற்கு அடிப்படை காரணமே அவர் தான் என்றும் ஒரு யூகம் இருந்தது. ஆனால் அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

ஷர்வா தன்னை முந்தி கொள்ளக் கூடாது என்று தனக்கு வரன் பார்க்க ஆரம்பித்திருந்த தந்தையைப் பார்த்து விதர்ஷணாவின் மனம் நொந்து போனது. அவரிடம் பேசி இந்த முடிவில் இருந்து பின் வாங்க வைக்கலாம் என்று நினைத்தால் அதற்குச் சிறிதும் இடம் கொடாமல் மகளைப் பேசவே விடாமல் அவளை விலக்கி வைத்தார்.

தன் மகளே தன் கௌரவத்தைக் குறைக்கும் காரணி ஆகிவிட்டாளே என்று நொந்திருந்தவரின் மனது பேச தயாராகவும் இல்லை.

அதனால் செய்வதறியாது தவித்த விதர்ஷணா சந்திராவிடம் போய் நின்றாள்.

சோர்வான முகத்துடன் வந்து நின்ற விதர்ஷணாவை பார்த்து “என்னம்மா இப்படி முகம் எல்லாம் சுருங்கி போய் வந்து நிக்கிற? என்னாச்சு?” எனக் கேட்டார்.

“நீங்க நியூஸ் பேப்பர் பார்த்தீங்களா அத்தை?” என மெல்லிய குரலில் கேட்டாள்.

அக்கேள்வியில் அவளின் சோர்விற்கான காரணத்தைப் புரிந்து கொண்டவர் “பார்த்தேன்மா! எப்படிப் பேப்பர் வரை நியூஸ் போச்சுன்னு தெரியலையே. உனக்காவது தெரியுமா?” என்று கேட்டார்.

“எனக்கும் தெரியலை அத்தை. அப்பா என் மேல இருக்குற கோபத்தில் விசாரிக்க மறந்துட்டார் போல. அண்ணா அப்பாகிட்ட வந்து பேசினப்ப நீயே போய் விசாரின்னு சொல்லிட்டாராம். அண்ணா விசாரிச்சு சொல்றேன்னு சொல்லிருக்கான். இவர் எதுவும் விசாரிச்சாரா அத்தை?”

“தெரியலைமா. பேப்பரை பார்த்துட்டு யார் யாருக்கோ போன் போட்டான். அப்புறம் வழக்கமான வேலையைப் பார்க்க ஆரம்பிச்சுட்டான்…”

“ஓ…! சரி அத்தை. ஆனா யாருனு தெரிஞ்சாலும், தெரியாட்டாலும் இனி அப்பாவை தடுத்து நிறுத்த முடியாது போல இருக்கு அத்தை. எனக்குத் தீவிரமா மாப்பிள்ளை பார்த்திக்கிட்டு இருக்கிறார். எனக்கு என்ன செய்றதுனே தெரியலை…”

“என்னம்மா சொல்ற, மாப்பிள்ளை பார்க்கிறாரா? நீ இன்னும் படிச்சு முடிக்கலையே?” என்று அதிர்ந்து கேட்டார்.

“அது எல்லாம் இனி அவருக்கு முக்கியம் இல்லையாம். நான் இனி இப்படி இருந்தா அவர் மானத்தை வாங்கிருவேணாம். அதான் வேகமா இந்த வேலையை ஆரம்பிச்சுட்டார்…” என்றவள் கண்கள் கலங்க ஆரம்பித்தது.

கண்ணைத் துடைத்துக் கொண்டே “நான் இவரை விரும்பித்தான் ஆகணும்னு வேணும்னே விரும்பலையே அத்தை? என்ன காரணம்னே தெரியாம இவர் பக்கம் என் மனசு சாஞ்சுருச்சு. அதை என்னால தடுக்கவும் முடியலை. இவரைப் பார்க்காம இருக்குறதும் எதையோ இழந்தது போல என்ன தவிக்க வைக்குது. நான் என்ன பண்ணுவேன்? ஒரு கௌரவமான வேலையில் இருக்குறவரை தானே விரும்பினேன்? ரௌடியையோ, பொறுக்கியையோவா விரும்பினேன்? அதை ஏன் அப்பா புரிஞ்சுக்கவே மாட்டிங்கிறார்?” என்று புலம்பினாள்.

“உன் மனசு புரியுதுமா. ஆனா உன் அப்பாவையும் தப்பு சொல்ல முடியாதே! ஒரு தகப்பனா அவர் தன் பொண்ணு வாழ்க்கையை நினைச்சு பயப்படுறார். அவர் பயமும் நியாயம் தான். இப்ப என்ன செய்யலாம் சொல்லு! நான் வேணும்னா உங்க அப்பாகிட்ட பேசி பொண்ணு கேட்கட்டா? எனக் கேட்டார்.

“அதுக்கு இவர் சரிவரணுமே அத்தை. இவர் சம்மதம் இல்லாம நாம என்ன செய்ய முடியும்?”

“ஆமா அது தான் இப்போ பெரிய இடைஞ்சல். சம்பந்தப் பட்டவனே மறுக்கும் போது நானும் என்ன செய்றதுன்னு எனக்குத் தெரியலையே…” என்றார்.

மேலும் என்ன செய்வது என்று தெரியாமல் தான் இந்த விஷயத்தில் என்ன செய்யப் போகிறேன்? என்ற விடை தெரியாத கேள்வியுடன் அங்கிருந்து கிளம்பினாள்.

விதர்ஷணா வீட்டை விட்டு வெளியில் வந்து சாலையில் நின்றிருந்த தன் காரை நோக்கி நடந்த பொழுது, கேட் கதவை திறந்து உள்ளே வந்தான் ஷர்வா.

அவளை அங்கே பார்த்ததும் அவனின் கண்ணில் முதலில் வந்து சென்றது கோபம் தான்.

எதிரெதிரே இருவரும் வந்திருக்க அவளை முறைத்துக் கொண்டே “பேப்பரில் பேர் வர்ற அளவுக்கு வந்தாச்சு. இன்னும் இங்கே வந்து நிற்கிற. ஏன் உன் பேரை நீயே கெடுத்துக்கிற?” என்று கேட்டான்.

அவனை நிதான பார்வை ஒன்றை பார்த்த விதர்ஷணா “என் பேர் உங்க கூடச் சேர்ந்து தான் கெட்டுப் போகுதுனா தாராளமா கெட்டு போகட்டும்…” என்றவளை பார்த்தவன் கண்ணில் என்ன இருந்தது என்று அவளால் சிறிதும் அறிந்து கொள்ள முடியவில்லை.

விளங்கா பார்வை பார்த்தவனைத் தானும் பார்த்தது பார்த்த படியே நின்றாள்.

சில நொடிகளில் பார்வையை விளக்கி கொண்ட ஷர்வா வேறு எதுவும் பேசாமல் வீட்டிற்குள் செல்ல போக, “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் ஜித்தா…” என்று அவனின் நடையை நிறுத்தினாள் விதர்ஷணா.

‘என்ன?’ என்பது போல் அவன் பார்த்துக் கொண்டு நிற்க “நாம எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்?” என அன்று கேட்ட கேள்வியை மீண்டும் கேட்டவளின் குரல் அன்று இருந்ததை விடப் பல மடங்கு தீவிரத்துடன் வந்தது.