பனியில் உறைந்த சூரியனே – 25

அத்தியாயம் – 25

“வாட்…! என்ன பாப்பா சொல்ற?” இப்படி ஒரு விஷயத்தை எதிர்பாராத ஷர்வா அதீதமாக அதிர்ந்து போனான்.

“ஆமாண்ணா…” என்றவளிடம் இருந்து கண்ணீர் வழிய துவங்கியது.

“யாரு அவனுங்க? நம்ம வீட்டுக்கு எதுவும் வந்திருக்காங்களா?”

“வந்தது இல்லைண்ணா. இது புதுப் பிரண்ட்ஸ். இவங்களை நீ பார்த்தது இல்லை. எனக்கும் இப்போ சமீபமா தான் அவங்களைத் தெரியும். அதுவும் ஸ்கூல் விட்டு வரும் போது தற்செயலா ஒருநாள் சபரீஷ் அண்ணா கூட அவங்களைப் பார்த்திருக்கேன். அண்ணா கூட ரொம்பக் குளோஷா சிரிச்சு பேசிட்டு இருந்தாங்க…”

“இன்னைக்கு உன்னைக் கலாட்டா பண்ணும் போது அந்தப் பசங்க கூடச் சபரியும் இருந்தானா?”

“இல்லண்ணா. அவங்க மூணு பேர் மட்டும் தான் இருந்தாங்க. ஆனா என்னைப் போட்டோல ஏற்கெனவே பார்த்து இருப்பாங்க போல. கமெண்ட் பண்ணும் போது போட்டோல பார்த்ததை விட நேரில் நல்லா இருக்கேன்னு அசிங்கமான வார்த்தை சொல்லி கமெண்ட் அடிச்சாங்க…” என்று சொல்லிவிட்டு அருகில் இருந்த அண்ணனின் தோளில் சாய்ந்தே அழுதாள்.

ஷர்வாவிற்குக் கொதித்துக் கொண்டு வந்தது. அவன்களை ஏதாவது செய்து விட வேண்டும் என்று கைகள் பரபரத்தது. அதைவிட இப்படிப் பட்ட நண்பர்களை வைத்திருக்கும் சபரீஷ் மீது அதிக ஆத்திரம் வந்தது. அவனுக்கும் தெரிந்து தான் தங்கை கேலி செய்யப்பட்டாளா என்ற சந்தேகமும் வர, உள்ளே நிம்மதியாகத் தூங்கி கொண்டிருப்பவனைத் தூக்கி போட்டு மிதிக்கத் தோன்றியது.

ஆனால் இப்பொழுது தங்கையின் கண்ணீர் பெரிதாக இருக்க, வேதிகாவின் தோளை தட்டி கொடுத்துத் தேற்ற முயன்றான்.

“அண்ணா பார்த்துக்கிறேன் பாப்பா. நீ அழுகாதே! நாளைக்கு ஈவினிங் அண்ணா வர்றேன். அப்போ அவன்களைக் காட்டு! அம்மா உன் நல்லதுக்குச் சொல்றாங்கன்னு தான் அமைதியா போவோம்னு பார்த்தேன். ஆனா சபரி பிரண்ட்ஸ்னு தெரிஞ்ச பிறகு இந்த விஷயத்தை இப்படியே விடக் கூடாது…” என்றான் கோபமாக.

“அம்மாகிட்ட நீ சபரி பிரண்ட்ஸ்னு சொல்லலையா பாப்பா?”

“சொல்லலைண்ணா…”

“சொல்ல வேண்டியது தானே பாப்பா? அவங்க சபரிகிட்ட பேசி இருப்பாங்க தானே?”

அவனின் தோளில் இருந்து நிமிர்ந்து கண்ணைத் துடைத்துக் கொண்டவள் “பச்ச்…! போ அண்ணா! அம்மாவுக்கு எப்பவும் என்னைக் குறை சொல்றது தான் வேலை. நான் சொல்லி ஒருவேளை என்னை அம்மா திட்டினா என்னால் தாங்க முடியாது…” என்றாள்.

“சேச்சே…! அப்படியெல்லாம் நினைக்காதே பாப்பா. அம்மா அவ்வளவு மோசமில்லை. சொல்லியிருந்தால் சபரியை கூப்பிட்டு கண்டித்து வச்சிருப்பாங்க…” என்று ஷர்வா சொல்ல,

“ஆனா அவனைத் திட்டுறதுக்கு முன்னாடி என்னைத் தான் முதலில் ஏதாவது சொல்லி திட்டுவாங்க. நான் சொல்லிட்டு திட்டு வாங்குறதுக்குச் சொல்லாமலேயே இருந்திடலாம்…” என்றாள்.

“இல்லடா வேதி, அம்மா அப்படியெல்லாம் செய்ய மாட்டாங்க…” என்று ஷர்வா சொல்ல, மறுப்பாகத் தலையசைத்தாள் வேதிகா.

அன்னையின் கண்டிப்பு தங்கையை அப்படி மாற்றி இருக்கிறது என்பதை உணர்ந்த ஷர்வா “சரி விடு! நான் காலையில அம்மாகிட்ட பேசிக்கிறேன். நீ எதைப் பற்றியும் நினைக்காமல் அமைதியா போய்ப் படு! இனி ஒரு பிரச்சனையும் வராம பார்த்துக்க வேண்டியது அண்ணன் பொறுப்பு…” என்றான்.

“சரி…” என்று அவள் தலையசைக்க மேலும் சிறிது நேரம் பேசி, தங்கையைச் சமாதானம் செய்து அவளின் அறைக்கு அனுப்பினான். வேதிகா அவளுடைய அறைக்குச் செல்லவும், தானும், சபரீஷும் தங்கி இருந்த அறைக்கு வந்தான். உள்ளே சபரீஷ் இழுத்துப் போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்ததும் கோபம் வர, படுத்துக் கொண்டிருந்தவன் முதுகில் படீரென்று ஒரு அடி போட்டான். அதில் சபரீஷ் அலறி அடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்து “டேய்…! எவன்டா அது அடிக்கிறது?” என்று தூக்கக்கலக்கத்துடன் கத்தினான்.

“ஹா…! உன் அண்ணன்…” என்று ஷர்வா எகத்தாளமாகச் சொல்ல, கண்ணை நன்றாகத் திறந்து பார்த்த சபரீஷ், “ஏன் அண்ணா என்னை அடிச்ச?” என்று கோபத்துடன் கேட்டான்.

“அங்க வேதி பாப்பா அழுதுகிட்டு இருக்கா. உனக்கு என்னடா தூக்கம் கேட்கிறது?” என்றான்.

“என்னது…! இன்னமுமா அழுகிறா? எவனோ கலாட்டா செய்ததெல்லாம் ஒரு பெரிய விஷயம்னு நினைச்சு அழுகுறாளாக்கும்? பேசாம போய்த் தூங்கச் சொல்லுண்ணா…” என்று சொன்னவனை ஆத்திரத்துடன் முறைத்தான் ஷர்வா.

இன்னும் வலித்த முதுகை தேய்த்து விட்ட சபரிஷுக்கு அண்ணனின் முறைப்பிற்கான காரணம் தெரியாமல் பார்த்தான்.

“எவனோ ஒன்னும் கலாட்டா செய்யலை. உன் பிரெண்ட்ஸ் தான் கலாட்டா செய்திருக்கிறாங்க. அசிங்கமா வேற பேசியிருக்கிறானுங்க. யாருடா அது? உன் புதுப் பிரண்ட்ஸாமே? அவங்களுக்கு எப்படி நம்ம பாப்பா போட்டோ கிடைச்சது?” என்று வரிசையாகக் கோபத்துடன் கேள்விகளை அடுக்கினான்.

அண்ணனின் பேச்சை கேட்டுப் பேய் அறைந்தது போலச் சில நொடிகள் திடுக்கிட்டவன், தன் முகப் பாவனையை மாற்றி, கோப முகத்தைப் பூசி கொண்டவன், “என்ன அண்ணா சொல்ற? என் பிரண்ட்ஸ் யாரும் அப்படி எல்லாம் செய்ய மாட்டாங்க. எல்லாரும் நல்ல பசங்க. நான் யார்கிட்டயும் பாப்பா போட்டோவை காட்டலை…” என்றான்.

“நல்ல பசங்க யாரும் பிரண்டோட தங்கச்சியை அசிங்கமா கமெண்ட் பண்ண மாட்டாங்க சபரி. போட்டோவை விட நேரில் எப்படி இருக்கானு கமெண்ட் பண்ணிருக்காங்க. உன் பிரண்ட்ஸ் நீ காட்டாம எப்படி நம்ம பாப்பா போட்டோ பார்த்திருக்க முடியும்?” என்று காட்டமாகக் கேட்டான்.

“இல்லைண்ணா, நிஜமா தான் சொல்றேன். நான் யார்கிட்டயும் காட்டலை. என்னை நம்புண்ணா…” எனக் கெஞ்சலாகச் சொன்னான்.

தம்பியை நம்பாமல் பார்த்தாலும், நம்பு என்று கெஞ்சுபவனையும் மேலும் துருவ முடியாமல் அதை விட்டவன் “சரி அதை விடு! அந்த உன் பிரண்ட்ஸ் யாரு? உனக்கும், அவங்களுக்கும் எத்தனை நாளா பழக்கம்? பெண் பிள்ளைகளை வழி மறைச்சுக் கலாட்டா பண்ற நபர்கள் கூட உனக்கு என்ன பிரண்ட்ஸ்ஷிப்?” எனக் கேட்டான்.

“இல்லைண்ணா, என் பிரண்ட்ஸ் யாரும் அப்படிச் செய்ய மாட்டாங்க…” என்று அவன் சொன்னதையே திருப்பிச் சொல்ல, அவனைக் காட்டமாக முறைத்த ஷர்வா “சும்மா சொன்னதையே சொல்லாதே சபரி. பாப்பா அந்தப் பசங்க கூட நீ குளோசா சிரிச்சு பேசுறதை பார்த்திருக்கா. நண்பர்கள் இல்லனா எப்படி அப்படிக் குளோசா பார்த்திருக்க முடியும்? உன் பிரண்ட்ஸ்கிட்ட சொல்லி வை! இனி ஒரு முறை இப்படிச் செய்தா தூக்கி போட்டு மிதிச்சிருவேன். உன்னையும் சும்மா விட மாட்டேன் உன் தோலை உரிச்சுடுவேன்…” என்று கடுமையாக எச்சரித்தவன் கொஞ்சம் தள்ளி இருந்த தன் படுக்கையில் சென்று விழுந்தான்.

அண்ணனையே திகைத்து பார்த்தப் படி பல நிமிடங்கள் அமர்ந்திருந்த சபரீஷ் ‘முட்டாள் பசங்க. இருங்கடா நாளைக்கு இருக்கு உங்களுக்குக் கச்சேரி’ என்று தனக்குள் சொல்லிய படி படுக்கையில் சாய்ந்தான்.

மறுநாள் மாலை கல்லூரி முடிந்ததும், நேராகச் சபரீஷ் சென்று நின்ற இடம் அவனின் நண்பர்களின் இருப்பிடம் தான்.

அந்தப் பகுதியே ஆட்கள் நடமாட்டம் கொஞ்சம் குறைவாகவே இருக்க அதில் சென்று அந்தச் சிறிய வீட்டின் கதவை தட்டினான்.

கதவை திறந்த ஒருவன் “டேய் சபரி! வா, வா! என்ன இன்னைக்கு வீட்டுக்கே வந்துட்ட? இன்னும் கொஞ்ச நேரத்தில் கிரவுண்ட்ல பார்ப்போமே?” என்ற படி வரவேற்றான்.

“நான் வர்றது இருக்கட்டும். நேத்து நீங்க மூணு பேரும் என்னடா செய்தீங்க?” என்று கோபத்துடன் கேட்டபடி வீட்டிற்குள் நுழைந்தான்.

அந்த வீடு மிகவும் சிறியதாக இருந்தது. சமையல் செய்ய ஒரு மேடையும், அதில் வாடகைக்கு எடுத்த ஒரு சிறிய சிலிண்டர் அடுப்பும், மேடை முழுவதும் பாத்திரங்கள் இரைந்தும் கிடந்தன.

ஆங்காங்கே கொடி கட்டப்பட்டு, ஆண்களின் துணிகள் அழுக்கும், துவைத்ததுமாகக் கலந்து கிடந்தன. பார்க்கவே அது ஆண்கள் மட்டும் இருக்கும் வீடு என்று நன்றாகவே பறைசாற்றியது.

சபரீஷின் பேச்சுச் சத்தம் கேட்டு அவ்வீட்டின் ஒரு படுக்கை அறையாக இருந்த அந்த அறைக்குள் இருந்து இரு இளைஞர்கள் லுங்கியும், பனியனுமாக வந்தார்கள்.

“என்னடா சபரீஷ் வரும்போதே கோபமா வர்ற? என்ன விஷயம்?” என்று இலகுவாகக் கேட்டபடி வந்த ஒருவன் ஒரு ஓரமாக விரித்து வைத்திருந்த பாயின் மேல் அமர்ந்து காலை ஆட்டிக் கொண்டே அவனின் பதிலுக்காகக் காத்திருந்தான்.

“சபரிக்கு நாம நேத்து என்ன செய்தோம்னு தெரியணுமாம்…” கதவு திறந்து விட்டவன் கிண்டலாகத் தன் நண்பனிடம் சொல்லி கொண்டே அவனின் அருகில் தானும் காலை ஆட்டிக்கொண்டு அமர்ந்தான்.

அவர்களின் இலகுவான, கிண்டலான பேச்சை கேட்டு சபரிஷுக்குக் கோபம் வந்தது.

“என்னடா என்கிட்டயே உங்க நக்கலை காட்டுரீங்களா?”

“சேச்சே…! எங்களோட ஃப்ரெண்ட் நீ. உன்னைப் போய்க் கிண்டல் அடிப்போமா? நீ சொல்லு, எதுக்கு இவ்வளவு கோபமா இருக்க?” என்று கேட்டான் மூன்றாமவன்.

“என் பர்சில் இருந்து ஃபேமிலி போட்டோவை எப்போடா எடுத்துப் பார்த்தீங்க? பார்த்தது மட்டும் இல்லாமல் என் தங்கச்சியையே வழி மறைச்சு கேலி பண்ணிருக்கீங்க. என்னடா நெனச்சுக்கிட்டு இருக்கீங்க உங்க மனசுல?” எனக் குறையாத கோபத்துடனும், ஆத்திரத்துடனும் கேட்டான்.

“அது தற்செயலாகத் தான் பார்த்தோம் சபரீஷ். ஆனா உன் தங்கச்சிகிட்ட நாங்க ஒண்ணும் கலாட்டா செய்யலையே. சும்மா ரோட்டில் போகும்போது உன் தங்கச்சி மாதிரி ஒரு பொண்ணு போனா. அப்பத்தான் உன் பர்ஸில் இருந்த போட்டோவை பார்த்தது ஞாபகம் வந்து, நம்ம சபரி தங்கச்சியாச்சேன்னு ரெண்டு வார்த்தை பேசினோம். அவ்வளவுதான் சபரி. நாங்க தப்பா எதுவும் பேசல…” என்றவனைக் கண்ணில் மின்னிய கோபத்துடன் பார்த்தவன்,

“சும்மா பொய் சொல்லாதீங்கடா! நீங்க அசிங்கமாகக் கமெண்ட் பண்ணியதா என் தங்கச்சி சொன்னா. அவ சொல்லலைன்னாலும் ஒரு பொண்ணுகிட்ட நீங்க எப்படிப் பேசுவீங்கன்னு எனக்கே தெரியும்…” என்றான்.

“உனக்குத் தெரியாம இருக்குமா சபரி? நீயும் ‌எங்க கூடச் சேர்ந்து அந்தப் பாடத்தை நன்றாகக் கற்றுகிட்டு இருக்கியே…” என்று ஒருவன் கிண்டலாகச் சொன்னான்.

அதில் சபரீஷின் முகம் கன்றியது.

ஆனாலும் நொடியில் சமாளித்துக் கொண்டவன், “அவங்களும் என் தங்கச்சியும் ஒன்னாடா? ஏதோ கிரிக்கெட் விளையாடும்போது பழகினோம் ஃபிரண்டு ஆனோம்‌. நானும் உங்க கூடச் சுத்தினேன். அதுக்காக என் தங்கச்சியவே தப்பா பார்ப்பிங்களா?” என்றவனை மேலும், கீழும் பார்த்து நக்கலாகச் சிரித்து,

“என்ன சபரி உனக்கு இவ்வளவு கோவம் வருது? எங்க கூடச் சேர்ந்து நீ மத்த பொண்ணுங்களை ருசி பார்த்த போது இப்படிக் கோபத்தில் கொந்தளிக்கலையே. அப்ப நீயும் சேர்ந்து நல்லா என்ஜாய் தான பண்ணின! உன் தங்கச்சின்னு வரும்போது மட்டும் உனக்குக் கொதிக்குதாக்கும்?” என்று கேட்டான்.

“டேய் சுரேஷ்…! அது வேற பொண்ணுங்கடா‌. ஆனா இவ என் தங்கச்சி. என் தங்கையை நீங்க கேலி பண்ணும் போது என்னால எப்படிப் பார்த்துட்டு சும்மா இருக்க முடியும்?” என்றான்.

“ஹா…! அவ உனக்குத்தான தங்கச்சி. எங்களுக்கு இல்லையே? அவளும் எங்களைப் பொறுத்தவரை, நீ எங்க கூடச் சேர்ந்து என்ஜாய் பண்ணினீயே? அது மாதிரி ஒரு பொண்ணு தான்…” என்றான் சுரேஷ்.

அவன் சொல்லிக் காட்டிய விதத்தில் சபரீஷின் உடல் கோபத்தில் நடுங்கியது. “டேய்…! திரும்பத் திரும்பச் சொல்றேன். என் தங்கச்சியும் அவங்களும் ஒன்னு இல்ல. என் தங்கச்சிகிட்ட இது மாதிரி இனிமே நடந்துக்காதீங்க. அவ வீட்டில் வந்து எல்லார்கிட்டயும் சொல்லிட்டா. என் ஃப்ரெண்டு தான் நீங்கன்னு வேற அவளுக்குத் தெரியும். இதுக்கு மேல என் தங்கச்சிகிட்ட வம்பு பண்ணாதீங்க. அப்படி எதுவும் செய்தீங்கனா நான் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன். ஆமா…” என்றான்.

அவனின் மிரட்டலில் அவனைக் கூர்ந்து பார்த்த ஒருவன் “என்ன சபரி மிரட்டுறியா? உன் மிரட்டலுக்கு எல்லாம் பயப்படுறவங்க நாங்க இல்ல. நாங்க ஏற்கனவே ருசி பார்த்த பொண்ணுங்க எல்லாம் உன் தங்கச்சி போல ஸ்கூல், காலேஜ் படிக்கிற பொண்ணுங்க தான். அவங்ககிட்ட மிரட்டி தான் எங்க காரியத்தைச் சாதிச்சோம். அதுபோல நீயும் ஒரு மூணு பொண்ணு கிட்ட எங்க மாதிரிதான் நடந்து கிட்ட. அது ஞாபகம் இருக்கா? இல்ல மறந்துடுச்சா?” என்று கேட்டான்.

“ஆமாடா, நம்ம சபரி முதல் தடவை தான் பயந்தான். இரண்டாவது தடவையும், மூன்றாவது தடவையும் அந்தப் பொண்ணுங்களை எப்படி மிரட்டினான்? நம்மளையே மிஞ்சிருவான் போலனு இல்ல நான் நினைச்சேன்! அப்படி இருந்தது சபரியோட பர்பாமன்ஸ்! இப்போ அவன் தங்கச்சின்னு வரும்போது மட்டும் ரொம்ப நல்லவன் போலப் பேசுறான்.

ஆனாலும் சும்மா சொல்ல கூடாது சபரி, உன் தங்கச்சி அப்படியே ஆளையே தூக்குற அழகு. செம்மையா இருக்கா…” என்று ஒரு மாதிரி கண்கள் சொருகி கிறக்கமாகச் சொன்னவனை அதற்கு மேலும் பார்த்துக் கொண்டிருக்க முடியாமல் அவன் மீது அடிக்கப் பாய்ந்திருந்தான் சபரீஸ்வரன்.

இவன் ஒருவனாக அங்கே இருக்க, அவர்கள் மூவர். மூவரின் பலம் வெல்ல, சபரீஸ்வரன் அடித்ததை விட அடி நிறைய வாங்கியிருந்தான்.

மூவரையும் சமாளிக்க முடியாமல் அவனே விலக, அவனை மேலும் அடிக்கக் கை ஓங்கிய சுரேஷ் “எங்க மேலேயே கை வைப்பியாடா நீ? ஒழுங்கா ஓடி போயிரு! இல்லை கொஞ்ச நேரத்தில் பிணமாகிருவ…” என்று மிரட்டினான்.

தகாத நட்பு கொண்டதற்குத் தன்னையே நொந்து கொண்டு மூவரையும் ஒன்றும் செய்ய முடியாமலேயே அங்கிருந்து வெளியேறினான் சபரீஸ்வரன்.

காலை நொண்டி கொண்டே வீட்டிற்குள் நுழைந்த மகனை பதட்டத்துடன் எதிர் கொண்டார் சந்திரா. “சபரி என்னாச்சுட்டா?” எனக் கேட்டார்.

“ஒன்னுமில்லைமா, விளையாடும் போது விழுந்துட்டேன்…” குற்றவுணர்ச்சியில் தலையை நிமிராமல் பதில் சொல்லி விட்டு நடந்தான்.

“இப்படியா விழுந்து வைப்ப?” என்று திட்டியவர், “இங்கே உட்காரு. மருந்து போடுறேன். எங்கே நடந்து போய்கிட்டே இருக்க?”

“மருந்து எல்லாம் வேண்டாம்மா. நான் என் ரூமுக்கு போறேன்…” என்று நிற்காமல் காலை இழுத்துக் கொண்டே நடந்தான். ஒருவன் காலிலேயே பலமாக அடித்ததில் நடக்கவே சிரம பட்டான். ஏனோ அன்னையின் முகத்தை நிமிர்ந்து பார்க்க கூசியது.

தவறு செய்து விட்டு வந்த அன்று கூடச் சாதாரணமாகச் சுற்றி திரிந்தவனுக்கு இன்று தான் செய்த தவறின் அளவு கொஞ்சம் உரைத்திருக்க, அதில் குறுகி போனான்.

“டேய்…! இங்கே சோபால உட்காருடா…!” என்று அதட்டிய சந்திரா வேகமாகச் சென்று மருந்து எடுத்து வந்தார்.

காலை ஆராய ரத்தகாயம் இல்லாமல் ஆங்காங்கே சிவந்து இருந்தது. “என்னடா இது, கீழே விழுந்தது போலவே இல்லையே?” என்று சந்திரா கேட்க, அன்னையைத் திடுக்கிட்டு பார்த்தவன் “கீழே தான் மா விழுந்துட்டேன்…” எனப் படப்படப்பாகச் சொன்னான்.

அவனின் படப்படப்பில் அவ்வளவு நேரம் தலையைக் குனிந்து கொண்டிருந்தவனின் முகத்தைச் சந்திரா பார்த்து அதிர்ந்தே போனார்.

“சபரி, என்னடா முகத்தில் இவ்வளவு காயம்?” என்று அதிகமாகப் பதறினார்.

உதட்டின் ஓரம் ரத்தம் வந்து கொண்டிருந்தது. அதோடு கண்ணின் ஓரம் வீங்கி இருந்தது.

“முகத்திலும் இவ்வளவு காயம் வர்றாப்புள்ள எப்படிடா விழுந்து வச்ச?” எனக் கேட்டுக் கொண்டே அவனின் முகத்தை ஈரத்துணி கொண்டு துடைத்து விட்டு, மருந்தை தடவி விட்டார்.

“ப்ச்ச்…! எப்படியோ விழுந்துட்டேன் விடுங்கமா…” என்று மெல்லிய குரலில் சலித்தவன் அங்கிருந்து எழுந்து தன் அறைக்குச் சென்றான்.

“இப்போ என்ன கேட்டுட்டேன்னு இவ்வளவு சலிச்சுக்கிறான்?” என்று புலம்பிய சந்திரா வேறு வேலையை ஆரம்பிக்கச் செல்ல, “என்னமா இப்படித் தனியா புலம்புறீங்க?” என்று கேட்டுக் கொண்டே வீட்டிற்குள் வந்தான் ஷர்வா.

“இந்தச் சபரி பைய கீழே விழுந்து உடம்பெல்லாம் காயத்தோட வந்திருக்கான். என்னனு விசாரிச்சா சரியா கூடப் பதில் சொல்லாம போறான்…” என்றார்.

“கீழே விழுந்துட்டானா, எங்கே?” என்று அன்னையிடம் கேட்டுக்கொண்டே தன்னுடனேயே அழைத்து வந்திருந்த தங்கையை அர்த்தத்துடன் பார்த்தான்.

அவளும் அண்ணனை ஒரு பார்வை பார்த்துவிட்டு “அண்ணனுக்கு என்னாச்சும்மா?” என்று தானும் கேட்டாள்.

“என்னாச்சுன்னு நீயே பாரு! ரூமில் தான் இருக்கான். ரொம்ப வலிச்சா சொல்ல சொல்லு! ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போகலாம்…” என்றார்.

“சரிமா, நாங்க பார்க்கிறோம்…” என்று அன்னையிடம் சொல்லி விட்டு அண்ணனின் கையை இறுகப் பற்றிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

அன்று பள்ளி விட்டதும் ஷர்வாவே தங்கையைப் பள்ளியிலிருந்து அழைத்து வந்துவிட்டான். அதனுடன் வரும் வழியில் கலாட்டா செய்த பையன்கள் இன்றும் எதுவும் நிற்கிறார்களா என்று கண்காணித்துக் கொண்டே வந்தான். நேற்று அவர்கள் கலாட்டா செய்த இடத்தைக் காட்டிய வேதிகா, பயத்துடனேயே தானும் தேடிப்பார்த்தாள்.

சபரியுடன் சண்டை போட்டதில் அன்று அவர்கள் வராதிருக்க, ஷர்வாவிடம் மாட்டாமல் போனார்கள்.

மேலே தன் அறைக்குத் தங்கையுடன் சென்ற ஷர்வா கட்டிலில் படுத்திருந்த தம்பியை பார்த்து “சபரி…” என்றழைத்தான்.

போர்த்திப் படுத்திருந்தவன் அசையாமல் இருந்தான். “சபரி எழுந்திரு…!” என்று ஷர்வா அதட்ட, மெல்ல எழுந்து தலையைக் கூட நிமிர்த்தாமல் அமர்ந்தான்.

“என்ன சபரி கீழே விழுந்துட்டு வந்துட்டியாமே, உண்மையா?” என்று கேட்டான்.

“ஆமா…” என்றவன் திரும்பப் படுக்கப் போக, “டேய்…! படுத்தா உதை விழும். பொய் சொல்லாதே! உண்மைய சொல்லு! என்ன நடந்துச்சு? உன் பிரெண்ட்ஸ் கிட்ட போய்ச் சண்டை போட்டியா?” என்று கேட்டான்.

“ஆமான்னு சொன்னா இப்ப என்ன செய்யப் போற?” என்று கடுப்பாகக் கேட்ட சபரீஷ் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

அவனின் கோபம் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் கோபமாக இருந்தது. தான் செய்த தவறின் வீரியத்தை மறக்க, கோபத்தை ஆயுதமாக்கி கொண்டான்.

தானும் அவர்களுடன் சேர்ந்து செய்த தவறு தெரிந்தால் எங்கே தன்னைக் கேவலமாக நினைப்பார்களோ என்று நினைத்து, அவனின் மனம் துடித்துக் கொண்டிருந்தது.

நண்பர்களுடன் சாதாரணமாகப் பழக ஆரம்பித்து அவர்களின் இன்னொரு முகம் தெரிந்த பொழுது விலகி வராமல் தானும் அந்த இளமை சுகத்திற்கு ஆசைப்பட்டு, இரண்டும் கெட்டான் நிலையில் இருந்த மனதை கட்டுப்படுத்தத் தெரியாமல், பெண்களை அறிந்துகொள்ளும் ஆர்வம் தலைதூக்க அவர்களுடன் சேர்ந்து தவறு செய்யத் துணிந்து விட்டான்.

வீட்டிற்குப் பயப்படும் நிலையில் உள்ள பெண் பிள்ளைகளைக் கண்டறிந்து கொண்டு அவர்களை மிரட்டி தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொண்ட அந்த மூவரும், சபரீஷையும் ஒரு ஆளாகத் தங்களுடன் இணைத்துக் கொண்டார்கள்.

தவறு செய்யும்போது வீட்டிற்குத் தெரிந்தால் என்ன ஆகும் என்றும் அவன் யோசிக்கவில்லை. தன் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் தன் அன்னையின் முகத்தில், தங்கையின் முகத்தில் எப்படி விழிக்கப் போகிறோம் என்றும் சிந்தித்துப் பார்க்கவில்லை. அந்த நேரத்தில் அவனின் சுகம் மட்டுமே அவனுக்குப் பெரிதாகத் தெரிந்தது.

இப்பொழுது தன் தங்கையையே அவர்கள் குறி வைக்க, அதைப் பொறுக்க முடியாமல் பொங்கி விட்டான்.

வயது கோளாறினால் தட்டுத்தடுமாறி தறிகெட்டு போனவனுக்கு இப்பொழுதுதான் குடும்பத்தின்மீது பார்வை பட அவன் செய்த தவறுகள் அவனை ஓட, ஓட விரட்ட ஆரம்பித்திருந்தது.

கோபப்பட்ட தம்பியை வினோதமாகப் பார்த்த ஷர்வா “உனக்கு ஏன்டா இவ்வளவு கோவம் வருது? கேட்டா பதில் சொல்றதுக்கு என்ன நீ குறைந்து போய் விட்ட?” என்று கேட்டுக் கொண்டே திரும்பியிருந்த அவன் முகத்தைப் பிடித்துத் தன் பக்கம் திருப்பினான்.

அப்பொழுதுதான் அவன் முகத்தைக் கண்ட ஷர்வா “டேய் சபரி…! என்னடா இப்படி அடி வாங்கிட்டு வந்திருக்க? எவன்டா அவன் உன்னை அடிச்சது?” என்று பதட்டத்துடனும், கோபத்துடனும் கேட்டான்.

அண்ணனின் காயத்தைக் கண்டு தானும் பதறிய வேதிகா, “அண்ணா எனக்காக அடி வாங்கிட்டு வந்தியா?” என்று அழுகையுடன் கேட்டாள்.

“ப்ச்ச்…! இப்போ எதுக்கு அழுகுற? உன்னைக் கேலி பண்ணினவங்களை ஏதாவது செய்வோம்னு போனேன். அவங்க மூணு பேரை என்னால சமாளிக்க முடியலைனு நானே கடுப்பில் இருக்கேன். நீ வேற பெருசா நினைச்சுட்டு அழுகாதே! போய் உன் வேலையைப் பார்…!” என்று விரட்டினான்.

தனக்காக அண்ணன் அடிப்பட்டானே என்ற தவிப்பில் வேதிகா பேச, அவனோ தன்னையே கோப்பட்டு விரட்டுவது வித்தியாசமாகப்பட்டது.

ஷர்வாவும் தம்பியை ஆராய்ச்சியுடன் தான் பார்த்தான். அவனின் இந்தப் பேச்சும், சிடுசிடுப்பும் கூட என்னானது இவனுக்கு என்று எண்ண வைத்தது.

“ஏன்டா நீ போகும் போது என்னையும் கூப்பிட்டு போயிருந்தா நான் அவன்களை ஒரு வழி பண்ணிருப்பேன். இரண்டு பேரா போயிருந்தா உனக்கும் ஒரு சப்போர்ட்டா இருந்திருக்கும். அதை விட்டு மூணு பேர்கிட்ட தனியா மாட்டி அடி வாங்கினது உன்னோட முட்டாள் தனம் தானே?அப்படி இருக்கும் போது பாப்பா மேல ஏன் எரிஞ்சு விழுற?”எனக் கேட்டான்.

‘தன்மீது தவறை வைத்துக் கொண்டு தன் அண்ணனை எப்படி அங்கே அழைத்துப் போக முடியும்? அப்படிப் போனால், நானல்லவா மாட்டிக் கொள்வேன்’ என்று சபரீஷின் எண்ணம் போனது.

“என்னடா பதிலை காணோம்? சரி அதைவிடு. நாளைக்கு என்னையும் கூட்டிட்டு போ! அவன்களை இரண்டு வப்பு வச்சா தான் என் மனசு ஆறும்…” என்றான்.

அண்ணனின் பேச்சில் திடுக்கிட்ட சபரீஷ் “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்ண்ணா…” என்று வேகமாகச் சொன்னான்.

“என்னடா உன் பிரண்ட்ஸுக்கு சப்போர்ட்டா?” தம்பியை சந்தேகமாகப் பார்த்துக் கொண்டே கேட்டான்.

“சேச்சே…! இல்லைண்ணா, ஏன் பிரச்சனையைப் பெரிசாக்கணும்னு தான் சொன்னேன்…”

“என்னடா பேசுற? நம்ம பாப்பாவை கேலி பண்ணியது மட்டுமில்லாம, கேட்க போன உன்னையும் அடிச்சு வச்சுருக்கானுங்க. அதைப் பார்த்துக் கையைக் கட்டிட்டு சும்மா போக முடியுமா?” எனக் கோபப்பட்டான் ஷர்வா.

“கோபப்படாதேண்ணா! அம்மா சொன்ன மாதிரி இந்த விஷயத்தை இத்தோடு விட்டுருவோம். நமக்குப் பாப்பா பாதுகாப்பு தான் முக்கியம். நான் சண்டை போட்டதில் இனி இப்படிச் செய்ய மாட்டாங்கன்னு தான் நினைக்கிறேன். பாப்பாவை மட்டும் நாம கவனமா பார்த்துப்போம். நாமளே இந்த விஷயத்தை மேலும் சிக்கலாகிக்க வேண்டாம்…” என்று வேதிகாவை முன்னிறுத்தி அண்ணனை சமாளித்து வைத்தான் சபரீஷ்.

தான் சண்டை போட்டு வந்ததோடு, வீட்டிற்கும் அந்த மூன்று பேரையும் தெரியும் என்று சொன்னதில் தன் நண்பர்கள் சிறிது அடங்கியே இருப்பார்கள் என்ற எண்ணம் இருந்தது சபரீஷிற்கு.

ஆனால் அவனின் நண்பர்களை அவன் இன்னும் நன்றாக அறிந்து கொள்ளவில்லை. அவன் சண்டையிட்டதே விபரீதத்தில் கொண்டு விடும் என்று அவன் சிறிதும் நினைத்துப் பார்க்கவில்லை.

பழிவாங்க என்று அவனின் நண்பர்கள் செய்த காரியத்தில், அவனின் குடும்பமே நிலை குலைந்து போகும் என்று அவன் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை.

காணாத கனவாக நிகழ்ந்த முதல் நிகழ்வாக ஒரு வாரம் கடந்த நிலையில் காணாமல் போனாள் ஷர்வேதிகா.