பனியில் உறைந்த சூரியனே – 22

அத்தியாயம் – 22

கட்டிலில் படுத்திருந்த சந்திரா கோபத்தில் தான் இருக்கிறார் என்று நினைத்து “அம்மா…! சாரி மா…” என்று சொல்லிக்கொண்டே திரும்பத் திரும்ப ஷர்வா அழைத்துப் பார்க்க, சந்திராவிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை.

அதனால் அவரின் எதிரே தரையில் மண்டியிட்டு அமர்ந்தவன் அவரின் தோளில் கை வைத்து “நான் பேசினது தப்பு தான்மா…” என்று அவரை அசைக்க, அப்பொழுதுதான் அவர் உணர்வே இல்லாமல் இருக்கிறார் என்பதை உணர்ந்தான்.

அதை உணர்ந்ததும் ஷர்வாவின் மூச்சும் நொடிகளில் தடுமாறியது. அன்னைக்கு என்னானதோ என்று பரிதவித்தவன் குரல் சட்டெனக் கலங்கி போக “ம்மா…” என்றான் தீனக்குரலில்.

அந்நேரம் அவனுக்கு அவன் பதவியும் மறந்து போனது. அவர் மேல் அவன் கொண்ட கோபமும் காற்றில் கரைந்து போனது. குழந்தையெனப் பரிதவிக்க ஆரம்பித்தான். “அம்மா… அம்மா…” என்றழைத்து தோளையே குலுக்கிக் கொண்டு இருக்க, அவரிடம் அசைவே இல்லாமல் போகவும், மிகவும் பயந்து போனான்.

சில நொடிகளுக்குப் பின் தன்னைச் சுதாரித்துக் கொண்டவன், அவரின் மூக்கினருகில் விரல் வைத்துப் பார்த்தான். மூச்சுக்காற்று வந்து கொண்டிருந்தது. அதை உணர்ந்து தான் அவனுக்கும் நிதானமாக மூச்சுவிட முடிந்தது.

அன்னையின் மூச்சுக்காற்றை உணர்ந்து நிம்மதி அடைந்தவன், விரைந்து வெளியே வந்து சாப்பாட்டு மேஜையின் மீது இருந்த தண்ணீர் மக்கை எடுத்துக்கொண்டு மீண்டும் அறைக்குள் ஓடினான்.

அவரின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து, அறைக்குள் நன்றாகக் காற்று வரும்படி செய்து விட்டு, அவரின் இரத்த அழுத்த மாத்திரையை எடுத்துக்கொண்டு வந்தான். தண்ணீர் முகத்தில் பட்டதில் சந்திரா கண்ணைத் திறக்க முயன்று கொண்டிருந்தார். அதைக்கண்டு ஒரு துணியில் தண்ணீரை விட்டு நனைத்து அவரின் முகத்தைத் துடைத்து விட்டான்.

அதில் சந்திராவிற்கு நன்றாகவே உணர்வு வந்துவிட, “என்னம்மா இப்படிப் பயமுறுத்துட்டீங்க?” என்றான் கலங்கிய குரலில்.

மகனின் கலக்கத்தைப் பார்த்த சந்திரா, தன் கையைக் கொண்டு அவனின் கன்னத்தைத் தடவி ஆறுதல் படுத்த போனவருக்கு, மகனின் கலக்கத்திற்கும், தன் மயக்கத்திற்குமான காரணமும் ஞாபகத்தில் வர, விருட்டெனத் தன் கையைப் பின்னால் இழுத்துக் கொண்டார்.

அவரின் செயலில் ஷர்வாவிற்கு அடி வாங்கியது போலானது. ஆனாலும் அவரை அப்படியே விட்டு விடாமல் அவரின் கையைப் பிடித்துத் தானே தன் கன்னத்தில் அழுத்தி வைத்துக்கொண்டான். அவனிடமிருந்து தன் கையை விடுவிக்கச் சந்திரா அமைதியாக முயற்சிக்க, “நான் பேசுனது தப்பு தான்மா. உங்களை நான் அப்படிப் பேசி இருக்கக்கூடாது. எல்லாம் விதர்ஷணா மீதிருந்த கோவம் தான்மா.

நீங்களும் அவளுக்குச் சப்போர்ட் பண்றீங்களே அப்படிங்கிற வருத்தத்தில் தான்மா என்ன பேசுறோம்னு தெரியாம கோபத்தில் பேசிட்டேன். நான் சொன்ன வார்த்தை உங்களை எவ்வளவு பாதித்திருக்கும்னு எனக்குப் புரியுது மா. நான் பேசினது தப்புன்னு இரண்டு அடி வேணாலும் அடிச்சுக்கோங்க. ஆனா என்கிட்ட பேசாம இருந்து தவிக்க விடாதீங்க. என்கிட்ட பேசுங்கமா…” என்று மனதார மன்னிப்புக் கேட்டு அன்னையிடம் மன்றாடி நின்றான்.

அவன் பேச, பேச மகனின் முகத்தை உணர்வில்லாமல் வெறித்த சந்திரா,வலுக்கட்டாயமாக அவன் கன்னத்தில் இருந்து தன் கையில் இழுத்துக் கொண்டார்.

“அம்மா ப்ளீஸ்…! பேசுங்க…!” என்றான் கெஞ்சலாக.

சந்திராவின் அமைதி தொடர “அம்மா என் மேல் இருக்கும் கோபத்தில் உங்களுக்கு மயக்கமே வந்திருச்சு. அதனால் இப்போ எழுந்து பி.பி. மாத்திரை மட்டும் போட்டுக்கோங்க. அப்புறம் கூட என்கிட்ட பேசினால் போதும்…” என்று இறங்கி வந்தான்.

ஆனால் அதற்கும் சந்திரா எந்தப் பிரதிபலிப்பும் காட்டாமல் கண்ணை இறுக மூடிக்கொண்டார். அன்னையின் தொடர்ந்த மௌனம் ஷர்வாவை வதைக்க ஆரம்பித்தது. “அம்மா…” என மீண்டும் அழைத்தான். அவனுக்குப் பதில் சொல்ல விருப்பமில்லாத சந்திரா படுக்கையில் திரும்பி படுத்துக்கொண்டார்.

அங்கே அசிஸ்டெண்ட் கமிஷனர் என்ற கண்டிப்பான போலீஸ்காரன் மறைந்து, அன்னைக்குக் குழந்தையாக மட்டும் இருந்து அவரைப் பேசவைக்க வழி தெரியாமல் சின்னஞ்சிறு சிறுவனாகத் தடுமாறி நின்றான்.

எவ்வளவு கொடிய பழியை அன்னையின் மீது சொல்லி விட்டான். தன் மேல் இருக்கும் பாசத்தில் தனக்காக மட்டுமே இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் தாயை தானே வார்த்தையால் கொன்றால் அவரின் மனது அதை எப்படித் தாங்கும்? வேதி தங்களை விட்டுச் சென்ற காலத்தில், ‘நானும் தான் அவள் சாகக் காரணம்’ எனத் தன்னையே வருத்திக் கொண்ட அன்னையிடம், ‘கண்டிப்பாக நீங்கள் காரணம் இல்லை. உங்கள் மீது ஒரு தவறும் இல்லை’ என்று சொல்லி அவரை அந்த மனநிலையில் இருந்து மாற்றி வெளியே கொண்டு வந்தவனே அவன் தான்.

ஆனால் அவ்வாறு சொன்ன தானே இப்பொழுது நீங்கள் தான் வேதி இறப்பிற்குக் காரணம் என்று சொன்னதில் அவரின் மனது உடைந்திருக்கும் என்று நன்றாக அறிந்து கொண்டான்.

தானே பழியையும் சுமத்தி விட்டு, தானே எப்படி இனி அவரைத் தேற்ற போகின்றோம்? என்ற பயம் அவனின் மனதை கிள்ள தானும் அந்நொடி மனம் உடைந்து போனான்.

அதே நேரம் தன்னை இப்படிப் பேசும் நிலைக்குத் தள்ளிவிட்டவளின் மீது வெறியே வந்தது. ‘விதர்ஷணா’ மீது மீண்டும் கட்டுக் கடங்காத கோபம் வந்து அமர்ந்து கொண்டது.

அவள் தன் வாழ்க்கையில் தலையிடும் முன், ‘இந்த வீட்டில் மனதில் சோகங்கள் இருந்தாலும், சுமூகமாகவே தன் வாழ்க்கை முறை சென்று கொண்டிருந்தது. ஆனால் இன்று? தன் அன்னையிடமே தன்னை அந்நியராக்கி சென்று விட்டாள். இதை எப்படிச் சரி செய்யப் போகின்றேன்?’ விடை தெரியாமல் அந்த வீரமான இளைஞனும் விழி கலங்கி போனான்.

ஆம்! அன்னையின் நிராகரிப்பில் ஷர்வாவின் கண்கள் லேசாகக் கலங்கி இருந்தன. அதைக் கூடக் கண்டு கொள்ளாமல் அன்னையின் முதுகையே பார்த்தபடி நின்றிருந்தான்.

“அம்மா பசிக்குது…” என்றான். அப்படிச் சொன்னாலாவது தன்னிடம் பேசுவார் என்ற எண்ணத்தில்.

எந்த அன்னை பிள்ளை பசி என்று தெரிந்தும் படுத்திருப்பார்? சந்திராவும் அமைதியாக மெல்ல எழுந்து அமர்ந்தார். பின்பு கலங்கி இருந்த தன் கண்ணைச் சேலையால் துடைத்து விட்டு மகனை திரும்பியும் பார்க்காமலேயே அப்பக்கமே கட்டிலை விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தார்.

நான்கு அடிகள் எடுத்து வைத்ததுமே அவரின் கால்கள் தள்ளாட ஆரம்பித்தன. ஷர்வா அதைக் கண்டு வேகமாக அன்னையைப் பிடிக்க விரைந்தான். ஆனால் அதற்குள் சுவற்றைப் பிடித்து நின்று கொண்ட சந்திரா, தன்னைக் கை தாங்க வந்தவனின் கையைத் தடுத்து நிறுத்தினார்.

“என்னம்மா இது? என் உதவியைக் கூட ஏத்துக்க மாட்டீங்களா? அட்லீஸ்ட் பி.பி. மாத்திரையாவது போட்டுட்டு நடங்க…” மாத்திரையை எடுத்து வந்து நீட்ட, அவன் கையில் இருந்ததை வாங்காமல் கொஞ்சம் தள்ளி இருந்த வேறு ஒரு கவரில் இருந்த மாத்திரையை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தார். ஷர்வாவிற்கு வேடிக்கை பார்க்கும் நிலை மட்டுமே உண்டாகிற்று.

அப்படியே விட்டால் மனதை போட்டு மேலும் குழப்பிக் கொள்வார் என்றுதான் எழும்ப வைத்தான். ஆனால் நடக்கவே கஷ்டபடுவதைப் பார்த்து, கையறு நிலையில் நின்றான்.

மீண்டும் அவரைப் பேச வைக்கும் முயற்சியில் சமையலறைக்குள் நுழைந்தவரை திருப்பி, “நீங்க பேசாம எனக்குச் சாப்பாடு வேண்டாம்மா…” என்றான்.

அப்படிச் சொன்ன மகனை நேருக்கு நேர் பார்த்த சந்திரா, “உன்கிட்ட முன்ன போலப் பேசும் தகுதி எனக்கு இல்லை ஷர்வா. நீ கோபத்தில் சொன்னாலும், நானே நினைச்சு வருந்திட்டு இருக்குற விஷயத்தைத் தான் நீ சொல்லியிருக்க. ஆனா என்ன என் மகன் நீயே சொன்னதும் நெஞ்சே வெடிக்க மாதிரி வலி கூடிருச்சு. அந்த வலி குறைய நாள் ஆகும். அது வரை இப்படியே விட்டுட்டு ஷர்வா. என் வலி குறையிறப்ப நானே உன்கிட்ட பேசுறேன்…” என்றார் வார்த்தையிலும் வலியை தாங்கியவராக.

அவரின் பேச்சில் தவித்தவன் “அம்மா, சாரிம்மா. இந்த வீட்டில் நீங்களே என்கிட்டே பேசலைனா நான் யார்கிட்ட பேசுவேன்?” எனக் கேட்டான் இறைஞ்சலாக.

அவனிடம் மேலும் பேச சக்தி இல்லாத சந்திரா பட்டெனத் தன் கையை எடுத்து கும்பிட்டார் “ப்ளீஸ் ஷர்வா. என்னைக் கட்டாயப் படுத்தாதே…!” என்று சொல்ல அவரின் கைகளைக் கண்டு சட்டெனப் பின் வாங்கி, அவர் கும்பிட்டதை நம்ப முடியாமல் பார்த்தான்.

அன்னையின் செயலில் உண்டான வேதனை முகத்தில் தெரிய, “கையைக் கீழே இறக்குங்க மா. உங்களுக்கு எப்போ பேச விருப்பமோ அப்பயே பேசுங்க. இனி நான் கட்டாயப்படுத்த மாட்டேன்…” எனக் கலங்கிய குரலில் சொன்னவன், மேலும் நொடிகள் கூட நிற்காது அங்கிருந்து விரைந்தான்.

அன்னையின் மனம் அமைதியடைய வழி கொடுத்து, அவர் கேட்ட படி சில நாட்கள் அவர் போக்கில் விட்டு விட முடிவெடுத்துக் கொண்டான்.


“இன்னும் சரவணன் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கலையா கவி?” எனக் கேட்டுக்கொண்டிருந்தான் ஷர்வா.

“இல்லையே ஷர்வா. ஒரு தகவலும் பிடிபட மாட்டிங்குது. நாலு பேரும் சொன்னதை வச்சு சரணவன் கருணாகர விக்ரமன் அறக்கட்டளை, இல்லனா அவர் ஸ்கூல், காலேஜில் வேலை செய்யாலம்னு நினைச்சு அந்த இடத்தில் எல்லாம் எனக்குத் தெரிஞ்ச வகையில் விசாரிச்சுட்டேன். ஆனா சரவணன்கிற பெயரில் யாரும் இல்லை. அவன் இவனுங்கிட்ட எல்லாம் வேற பெயர் சொல்லிருக்கணும்னு நினைக்கிறேன்…” என்றான்.

“ஹ்ம்ம்… அதான் எனக்கும் தோணுது கவி. அவன் போட்டோ கிடைச்சாலாவது ஏதாவது செய்யலாம். நாலு பேரும் ஒன்னு போலப் போட்டோ இல்லைன்னு வேற சொல்றானுங்க. அவங்க கொடுத்த போன் நம்பர் அட்ரசும் போலி. அதோட இப்போ அந்தச் சிம் ஆக்டிவ்லையே இல்லை. அவன் இந்நேரம் அதைத் தூக்கி போட்டிருப்பான். அவனைப் பிடிக்க வேற வழி தான் யோசிக்கணும்…” என்றான்.

“வேற என்ன செய்யலாம்னு சொல்லு ஷர்வா, செய்துருவோம்…” என்றான் கவி.

“சரவணனை பற்றி நாம பார்க்கிறதுக்கு முன்னாடி எனக்கு வேறு ஒரு தகவல் வேணும் கவி. அந்தச் சிபாரிசு கடிதம் நீ மத்த காப்பகத்தில் இருந்தும் காப்பி வாங்கிட்டு வந்தியே அதை எல்லாத்தையும் படிச்சு பார்த்தியா?” எனக் கேட்டான்.

“மத்த காப்பகத்தில் அதை வாங்க நான் மறைமுகமா எத்தனை வேலை பார்க்க வேண்டி இருந்துச்சு. அப்படிக் கஷ்டபட்டு வாங்கினதை கவனிக்காம இருக்கு முடியுமா? படிச்சேன் ஷர்வா. மூனுமே ஒன்னு போலத் தான் இருந்துச்சு…” என்றான்.

“யெஸ்…! தெரசமா காப்பகத்தில் இருந்து வந்ததும் சேம் தான். ஒரு எழுத்து கூட மாறாம அப்படியே இருந்தது. அதைப் பற்றிய மேலும் விவரம் தான் நீ சேகரிச்சுட்டு வரணும் கவி. அது கூட எனக்கு இன்னும் ஒரு சந்தேகமும் இருக்கு. அது ஏற்கனவே நான் பாதி விசாரிச்சிட்டேன். மீதி வேலை கொஞ்சம் அலைச்சல் அதிகம் உள்ளது. கிடைக்கக் கஷ்டமானதும் கூட. அதான் உன்னை அனுப்புறேன். உன் வாட்ஸ்அப்க்கு ஒரு மெசேஜ் அனுப்புவேன். அதை வீட்டுக்குப் போன பிறகு படிச்சு பாரு. அதில் நான் சொன்ன லிஸ்ட் எல்லாம் வேணும்…” என்றான்.

“என்ன ஷர்வா பேச்சில் சொல்ல முடியாத அளவு அவ்வளவு சீக்ரெட்டா?” என்ற கவி கேட்க,

“ரொம்பச் சீக்ரெட் தான் கவி. மெசேஜ் படிக்கும் போது உனக்கே புரியும்…” என்றான்.

“ஓகே ஷர்வா. அதையும் என்னனு பார்த்திருவோம்…” என்றான் கவியுகன்.

அவர்கள் பேசி முடித்து விட்டு அந்த ஹோட்டலை விட்டு வெளியே வர, எதிரே வந்தாள் விதர்ஷணா.

அங்கே அவனை எதிர்பாராமல் சந்தித்தவளுக்கு ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது. அன்று அவன் தன்னை வீட்டை விட்டு வெளியே போகச் சொன்ன பிறகு அவனை மீண்டும் பார்க்க எந்த முயற்சியும் எடுக்க வில்லை.

அவனின் மீது இருந்த வருத்தம் மட்டும் இல்லாது, அண்ணன் சொன்ன படி சில நாட்கள் விட்டுபிடிப்போம் என்று அவள் நினைத்ததும் தான் காரணம்.

இன்று தற்செயலாகப் பார்த்து அவள் மெய் மறந்து நிற்க, அவள் இங்கேயும் தன்னைப் பின் தொடர்ந்து வந்து பார்க்கிறாளோ என்று நினைத்த ஷர்வாவிற்கு அவளைக் கண்டதும் கடுப்பு தான் வந்தது.

இருவரையும் கவனித்த கவி “சரிதான்…!” என்று கேலியுடன் சொல்ல, அதில் அவனின் புறம் திரும்பிய ஷர்வா “என்ன சரிதான்?” எனக் கேட்டான்.

எதிரே ஷர்வாவை விழுங்குவது போலப் பார்த்துக் கொண்டிருந்த விதர்ஷணாவை கவி கண்ணால் காட்டி கேலியாகச் சிரிக்க, அவனை முறைத்தான் ஷர்வா.

“லூசுக்கு எல்லாம் என்னத்துக்குக் கேலி. சும்மா வா…!” என்று கவியை அதட்டிய ஷர்வா அவனையும் அழைத்துக் கொண்டு நடந்தான்.
“லூசா…? யாரு?” எனக் கவி நடந்து கொண்டே கேட்க, “ஹா…! நீ சரிதான்னு சொன்ன ஆளு தான்…” என்று சொல்லிகொண்டே சென்றான் ஷர்வா.

தன்னைப் பார்த்துக் கொண்டே சென்றவன் சொன்ன “லூசு” என்ற வார்த்தையில் தான் உணர்வுக்கு வந்தாள் விதர்ஷணா.

“என்னையா லூசு சொல்றாரு என் ஜித்தா?” என்று அவள் அதிர்ந்து அவனைப் பார்க்க, அவனோ உன்னைத்தான் தான் என்பது போல ஒரு பார்வை பார்த்துவிட்டு அதன் பிறகு அவளைச் சட்டையே செய்யலாம் அவளைத் தாண்டி சென்றே விட்டான். அவனின் முதுகை முறைத்துக் கொண்டு நின்றாள் விதர்ஷணா.

அவள் அருகில் அப்பொழுது வந்த பூர்வா, “என்ன தர்ஷி உள்ளே நான் இடம் போட்டு ரொம்ப நேரம் ஆச்சு இன்னும் என்ன இங்கே நிக்கிற? ஆமா யாரை அப்படிப் பார்க்கிறே?” எனக் கேட்டாள்.

“ஜித்தா…” என அவள் வாய் தன் போக்கில் சொன்னது.

“அண்ணாவா? எங்கே? நான் பார்க்கலையே?” என்று பூர்வா சொல்ல, இப்பொழுது அவளை முறைத்துப் பார்த்தாள் விதர்ஷணா.

“என்ன தர்ஷி முறைக்கிற? அண்ணாவை நான் பார்க்கலையே, அதுதான் கேட்டேன்….” என்றாள்.

“தயா அண்ணா கிட்ட இருந்து போன் வந்தா நான் பக்கத்துல நடந்து வந்தாலே உனக்குத் தெரியாது. இதில் என் ஜித்தாவா உன் கண்ணுக்குத் தெரிவார்? நீ போன் பேசிகிட்டே உள்ள போயிட்ட. அவர் இப்பதான் வெளியே போனார்…” என்றாள் விதர்ஷணா.

“ஓ…! அப்படியா? சரி, அதுதான் போய்ட்டார் தானே? உள்ள வராம ஏன் நிக்கிற?” என்று கேட்க… அவளுடன் சேர்ந்து உணவகத்திற்குள் நடந்துகொண்டே “இந்த ஜித்தா பாருடி பூரி. என்னை லூசுன்னு சொல்லிட்டுப் போறாரு…” என்றாள்.

உள்ளே ஒரு இருக்கையில் அமர்ந்து “லூசுனா? எப்பச் சொன்னார்?” என்று கேட்க… “இப்பதான் அவர் பிரண்டு கிட்ட என்னை லூசுன்னு சொல்லிகிட்டே போறார். என்னைப் பார்த்தா லூசுவா தெரியுது?” என்று வருத்தத்துடன் கேட்டார்.

“சீச்சி…! நீ லூசு எல்லாம் இல்ல தர்ஷி. ஆனா லூசு போல…” என்று கூறி பூர்வா கேலி செய்ய, “என்னடி உனக்கும் கேலியா இருக்கா?” என்று தோழியை முறைத்தாள்.

“கோபப்படாதே தர்ஷி. நீ சும்மா அண்ணா பின்னாடி சுத்துற இல்ல, அதான் கோபத்தில் சொல்லிட்டுப் போனார். அவர் உன்னை விரும்ப ஆரம்பிக்கிற வரை அப்படித்தான் இருக்கும். இதுக்கெல்லாம் கோவிச்சுக்காதே! சோர்ந்து போகாதே…!” என்று தோழியைச் சமாதானப்படுத்தினாள்.

“சரி, நீ அதை விடு! அகிலன் எப்படி இருக்கான்? இப்போ என்ன செய்கிறான்?” என்று கேட்டுப் பேச்சை மாற்றினாள் விதர்ஷணா.

“அகிலனை நினைச்சா தான் பயமா இருக்கு தர்ஷி…”

“ஏன்? பயப்படுற அளவுக்கு இன்னும் என்ன ஆச்சு?”

“அப்ப நடந்தது தான் டி! தப்பு பண்ணிட்டேன்னு புலம்புறான்னு சொல்லியிருந்தேன்ல. இப்போ புலம்பலை விட்டுட்டு ரொம்ப அமைதியா ஆகிட்டான். அதுமட்டுமில்லாமல் எப்பயுமே ஏதோ ஒரு சிந்தனையிலேயே இருக்கான். வீட்ல யார் கிட்டயும் சரியா பேசுறது இல்லை. அவனோட பிரண்டு அவனைக் கொல்ல வந்தது அவன் மனதை ரொம்பப் பாதிக்க வச்சிருச்சு போல. தயாகிட்ட என்ன இப்படி இருக்கான்னு கேட்டா அது கடைசி நிமிஷத்தில் காப்பாற்றினதால அப்படி இருக்கலாம்னு சொல்றாரு. அதேநேரம் இன்னுமொன்றும் சொன்னார்…”

“என்ன சொன்னார்…?”

“அன்னைக்குக் கடைசிநேரம் வரை போகாம சீக்கிரமே அவனைக் காப்பாற்றி இருந்தால் அவனுக்கு இந்த நிலைமை வந்திருக்காது. ஆனா நான் சொன்னதை எங்க ஷர்வா கேட்டான்? ஆனா அவனும் நல்லதுக்குத்தான் செய்தான். இந்தப் பையன் இப்படி ஆவான்னு நானும் நினைக்கலையேனு தயா சொன்னார்…”

“என்னடி பூரி சொல்ற? முன்னாடியே காப்பாத்த சான்ஸ் இருந்தா காப்பாற்றி இருக்க வேண்டியது தானே? ஏன் கடைசி நேரம் வரை விட்டாங்க?” எனக் கேட்டான் விதர்ஷணா.

“அண்ணா தான் சொன்னாராம். கடைசி நேரத்தில் காப்பாற்றி அவனுக்கு நடக்கவிருந்தது என்னனு தெரிஞ்சாதான் அவன் இனிமே அந்தத் தப்புச் செய்ய மாட்டான். அப்படினு சொல்லி இப்படிச் செய்தாராம். ஆனா அது அகிலனை ரொம்பப் பாதிச்சுடுச்சு. எப்படி அவனை இந்தப் பாதிப்பிலிருந்து வெளியே கொண்டு வருவதுன்னு எனக்குத் தெரியலை. அப்பா, அம்மாக்கும் முழுசாக விஷயம் தெரியாது. தெரிஞ்சா அவங்களும் அகிலன் மேல கோபப்பட்டுத் திட்ட சான்ஸ் இருக்கு. அவன் இப்படி இருக்கும்போது அவங்களும் திட்டிட்டா இந்த அகிலன் என்ன செய்வான்னு தெரியல. நான் தான் தனியா கிடந்து அல்லாடுறேன்…” என்று பூர்வா புலம்பினாள்.

“என்ன பூரி இது? அன்னைக்கு இந்த விவரம் எல்லாம் நீ சொல்லையே? அகிலன் சின்னப் பையன். ஏதோ தெரியாம தப்பு செய்திருந்தா, அவனைக் கண்டித்து வீட்டுக்கு உடனே கூட்டிட்டு வராம, கத்தியால் குத்த போகும் வரைக்கும் விட்டுட்டு, அவனை ஏன் இந்த நிலைமைக்கு ஆளாகுற மாதிரி ஆக்கி வச்சார். இந்த ஜித்தா ஏன் இப்படி நடந்துக்கணும்?” என்று கேட்டாள் விதர்ஷணா.

“அண்ணா இப்படித் தான் செய்வாராம் தர்ஷி…” என்றாள் பூர்வா.

“என்ன சொல்ற பூரி? எனக்குப் புரியலையே?”

“ஆமாம் தர்ஷி. ஆம்பள பசங்க இப்படித் தப்பு செய்யும் போது கடுமையா தண்டிப்பாராம். அகிலனுக்குப் பரவாயில்லை போல. இதே பொண்ணுங்க விஷயத்தில் ஏதாவது பசங்க தப்புச் செய்திருந்தால் அவங்க வீட்டுக்குப் போயி ரொம்ப ரகளைப் பண்ணி விடுவாராம். கான்ஸ்டபிளை விட்டு அந்த வீட்டில் அந்தப் பையனோட அம்மா, அக்கானு பெண்கள் இருந்தா அவங்களை ஸ்டேஷன் கூட்டிட்டுப் போறதா சொல்லி பயமுறுத்தி அந்தப் பையன் நான் இனிமே இந்தத் தப்புச் செய்ய மாட்டேன்னு சொல்ற வரைக்கும் விடவே மாட்டாராம்.

சிலரை எல்லாம் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிகிட்டு போய் விடுவாராம். பையன் திரும்பி வந்து மன்னிப்புக் கேட்ட பிறகுதான் அந்த லேடிஸை விடுவாராம். இப்படியெல்லாம் கேள்வி கேள்விப்பட்டேன்…” என்று பூர்வா சொல்ல அதிர்ந்தே போனாள் விதர்ஷணா.

“இது அவர் வழக்கம் தானாம் தர்ஷி. என் வேறொரு ஃப்ரெண்டு மூலமா இந்த விஷயம் என் காதுக்கு வந்தப்ப, எனக்கும் கேட்டதும் ரொம்ப ஷாக்கா இருந்தது…” என்றாள்.

“இது என்னடி அநியாயமா இருக்கு? போலீஸ்னா என்ன வேணும்னாலும் செய்யலாமா? அவர் அந்தப் பையன் திருந்த செய்த நல்லதாகவே இருக்கட்டும். ஆனா வீட்டுப் பெண்களைப் போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் கூட்டிட்டு போனா அவங்க மனசு என்ன பாடு படும்? அந்தப் பையன் தப்பு செய்தா அந்தப் பையனுக்குத் தான் தண்டனை கொடுக்க வேண்டும். இல்லைனா ஸ்டேஷன் வரை இழுத்துட்டுப் போயி நாலு அப்பு வச்சாலும் திருந்துவான். ஆனா அதை விட்டு வீட்டுப் பெண்கள்? என் ஜித்தாவா இப்படி எல்லாம் செய்கிறார்?” என்று நம்ப முடியாமல் கேட்டாள்.

“அது நம்ம வீட்டுல இப்படி ஒன்னு நடந்தா தான் அடுத்த வீட்டு பொண்ணுங்க மேல கையை வைக்கத் தோணாதுகிற எண்ணத்தில் அவர் அப்படிச் செய்கிறார் போல…” என்று பூர்வா சொல்ல,

“ஆனா இது எனக்குச் சரியா படலை பூரி. நீ தப்பு செய்தால் நானும் செய்வேன் அப்படிங்கறது போலத் தான் இருக்கு. ஏன் இப்படியெல்லாம் செய்யணும்? என்னால இதை ஏத்துக்கவே முடியல…” என்றாள் விதர்ஷணா.

அந்த நேரம் விதர்ஷணாவின் மனது ஒரு பெண்ணாய் அந்த வீட்டு பெண்களின் மனதை மட்டுமே யோசித்தது. அந்தப் பையன்களால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக அவன் வீட்டுப் பெண்களுக்குத் தண்டனை கொடுப்பது நியாயம் ஆகுமா? என்றே அவளின் மனம் சிந்தித்தது.

அவன் வீட்டிலும் பெண்கள் இருப்பதை அந்தப் பையன் நினைக்கவேண்டும் என்பது நியாயமாக இருக்கலாம். ஆனால் அவ்வீட்டுப் பெண்களை ஸ்டேஷன் என்றெல்லாம் சொல்லி அழவைப்பது அவளின் ஜித்தாவாகிற்றே! அதுவும் அவளின் மனதிற்குச் சங்கடத்தைக் கொடுத்தது.

“என்னமோ போ! இந்த விஷயத்திலேயே உனக்கும், அவருக்கும் ஏழாம் பொருத்தமா தான் இருக்கு. நீங்க ரெண்டு பேரும் விரும்பி, கல்யாணம் முடிச்சு நடக்கிற காரியமா? அவருக்கும், உனக்கும் இன்னும் எத்தனையோ குணம் வேறுபாடு இருக்கலாம். அதெல்லாம் ஒத்து வருமான்னு யோசிச்சி முடிவு பண்ணு தர்ஷி. அவசரப்பட்டு அப்புறம் கல்யாணத்துக்குப் பிறகு அவர் செய்றது ஒன்னும் பிடிக்கலைன்னு புலம்ப வேண்டியதாயிருக்கும்…” என்று அக்கறையுடன் சொன்னாள் பூர்வா.

“நீ அதுக்கும், இதுக்கும் முடிச்சு போடாதே பூரி! என்னைப் போலவே அவரும் சிந்திக்க மாட்டார்னு எனக்கும் தெரியும். ஆனா இப்ப நீ சொன்ன மாதிரி விஷயத்தை என்னால் ஜீரணிக்க முடியலை. இதற்காகவெல்லாம் என் லவ்வை இத்தோடு விட்டுருவேன்னு கனவு காணாதே…!” என்று விதர்ஷணா வேகமாகச் சொன்னாள்.

“அடியே இவளே…! நான் என்ன கனவு காண்கிறேன்? இது போலக் குணம் வேறுபாடு இருக்கும். அதனால பார்த்து செய்னு சொன்னா என்னமோ உங்க ரெண்டு பேரையும் நான் பிரிக்க வந்தது போலப் பேசுறா…” என்று கூறி திட்டினாள் பூர்வா.

“ப்ச்ச்…! போடி பூரி! நானே அத்தை சம்மதம் கிடைச்ச பிறகும் அவரைத் திரும்பப் போய்ப் பார்க்க முடியாமல் இருக்கேன்னு வருத்தத்தில் இருக்கேன். ஜித்தா என்னை அவர் வீட்டுக்கு வரக்கூடாதுனு சொல்லிட்டார். இனி ஜித்தாவை எங்கே எப்படிப் பார்த்து, நான் லவ் பண்ணி அவரைக் கல்யாணம் முடிக்கப் போறேன்னு தெரியல. அப்பா வேற உண்மை தெரிஞ்சதில் இருந்து முறைச்சுக்கிட்டே இருக்கார்…” ஏன்று தன் காதல் பற்றிய விவரங்களைச் சொல்லி புலம்ப ஆரம்பித்தாள் விதர்ஷணா.

“ஏன் தர்ஷி, இப்படி வீட்டை விட்டே போன்னு சொல்லியிருக்கார். உனக்கு வருத்தமா இல்லையா?” எனக் கேட்டாள் பூர்வா.

அதைக் கேட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்த விதர்ஷணா பின்பு மெல்ல “வருத்தம் இல்லாம இருக்குமா? அவர் அப்படிச் சொல்லவும் மனசுக்கு ரொம்பவே கஷ்டமா இருந்தது. ஏன் மனசு வலிக்கக் கூடச் செய்தது. ஆனா இது எல்லாம் எதிர் பார்த்தது தானே? என் ஜித்தா என் ஆயுசு முழுக்க எனக்கு வேணும்னா இதை எல்லாம் தாங்கி தானே ஆகணும்னு மனசை தேத்திக்கிட்டேன்…” என்றாள்.

“எல்லாம் சரி. ஆனா உனக்குன்னு ஒரு சுயமரியாதை இருக்குல்ல தர்ஷி. ஒவ்வொரு முறையும் நீயே வழிய போய் ஏன் அவமானப் படணும்?” என்று கேட்டாள்.

“எனக்குச் சூடு சொரணையே இல்லைனு தோணுதுல?” என்று சொன்ன தோழியைப் பூர்வா முறைக்க, “அப்படித்தான் தோணும். நினைக்கலாம் தப்பே இல்ல. விடு! முறைக்காதே! ஜித்தா என்னை விரட்டுறாருனு நான் அப்படியே விட்டுட்டா என்ன நடக்கும் பூரி? என் தொல்லை விட்டதுனு அவர் நிம்மதியா இருப்பார். ஆனா நான்? என் ஜித்தா எனக்கு இல்லாம போனா நான் வெறும் நடை பிணம் தான்.

இப்போ கணவன், மனைவியா இருக்கிறவங்ககுள்ள எத்தனையோ சண்டை வரும். சத்தம் போட்டு, அடிச்சு எல்லாம் சண்டை போட்டுப்பாங்க. அவங்க எல்லாருக்குமேவா சுயமரியாதை இல்லாம போய்ருது? அவங்க அப்படிச் சண்டை போட்டும் அவங்களைப் பிணைப்பது அன்பும், காதலும் தானே! அதே அன்பும், காதலும் தான் என்னிடமும் இருக்கு. ஜித்தாவை நான் என் மனசுக்கு பிடிச்சவரா மட்டும் பார்க்கலை. அதுக்கு மேல என் கணவரா பார்க்கிறேன்…” என்றாள் விதர்ஷணா.

அவளின் அந்தப் பேச்சும் அவளின் காதலும் பூர்வாவிற்கு வியப்பையே தந்தது. ‘இவள் காதல் கிடைக்க ஷர்வா அண்ணா கொடுத்து வைத்திருக்க வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டாள்.

மேலும் சிறிது நேரம் பேசியிருந்து விட்டுத் தோழிகள் இருவரும் வீட்டிற்குச் சென்றனர்.

தன் வீட்டிற்குச் சென்ற விதர்ஷணா இன்னும் பூர்வா சொன்ன விஷயத்தையே யோசித்துக்கொண்டிருந்தாள். பெண்கள் மீது அவருக்கு வெறுப்பு இருக்குமோ? கல்யாணம் வேணாம்னு சொல்றார். அதேநேரம் பெண்களுக்கு எதுவும் ஆபத்து வந்தால் காப்பாற்றுகிறார். ஆனால் இன்னொரு பக்கம் அந்தப் பையன் தவறு செய்தால் வீட்டில் உள்ள பெண்களின் தலையை உருட்டுகிறார். ஜித்தாவின் குணம் தான் என்ன? பெண்களை அவருக்குப் பிடிக்குமா? பிடிக்காதா? எனக் குழம்பி போனாள்.

வெகு நேரம் அவனைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்க, இரண்டு மணி நேரம் கடந்த நிலையில் பூர்வாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

அதை எடுத்து “என்னடி, இப்பதான் போன. அதுக்குள்ள பேசுற?” என்று கேட்டாள்.

ஆனால் அப்பக்கம் இருந்து பூர்வாவின் பதில் வராமல் அவளிடமிருந்து அழுகைச் சத்தம் மட்டுமே கேட்டது.

பின்பு அவள் சொன்ன விஷயத்தைக் கேட்டு “என்ன பூரி சொல்ற?” என்று கத்தினாள் விதர்ஷணா.

அந்தப்பக்கம் பூர்வா “அகிலன் சூசைட் அட்டெம்ட் பண்ணிட்டான் தர்ஷி. மூச்சு, பேச்சு எதுவும் இல்லை. அவனைக் கூட்டிகிட்டு ஆஸ்பத்திரிக்குப் போய்கிட்டு இருக்கோம். எனக்கு ரொம்பப் பயமா இருக்கு…” என்று அழுதவள் தொடர்ந்து “நீ சொன்னது சரிதான் டி! அன்னைக்கு அவனைக் காப்பாத்தினப்ப கடைசி வரைக்கும் கொண்டு வராம, அவனை முன்கூட்டியே காப்பாற்றாம விட்டதுதான் இந்த நிலைமை வரக் காரணம் போல…” என்று அழுது கொண்டே சொல்ல,

விதர்ஷணாவின் மனது வேதனையைச் சுமந்தது. “ஏன் ஜித்தா இப்படிப் பண்ணுனீங்க? இப்போ பாருங்க உங்களால் ஒரு உயிர் போயிடும் போலிருக்கே?” என்று நினைத்து அழுதாள்.

கூடவே ஷர்வாவின் மீது அவளுக்குக் கோபமும் வந்தது.

ஊரார் உன்னை ஒரு சொல் சொன்னால்,
என் உள்ளம் தான் தாங்குமோ என்னவனே!
உன்னை அடிக்கும் ஒரு சொல்லும் என்னையும் தாக்குதே!
உன் ஒரு தலைக் காதலில் இது தகுமோ என்பாய்!
நான் தகும் என்பேன்!
நீயும், நானும் ஒன்று சேராமலே
ஒன்றாகி போனோம்.
உன் மனதில் நான் நுழைய வில்லை என்றாலும்
நீ என் மனதில் நுழைந்து விட்டதால் நாம் இப்பொழுது ஒருவரே!
ஆம்! இது என் காதல் அல்ல.
என்னுள்ளே நீயும் இருப்பதால்
இது நம் காதல்!!

பூர்வா மூலமாகக் கேள்விப்பட்ட விஷயமே அவள் மனதை குழப்பிக் கொண்டிருந்த வேளையில், அகிலன் தற்கொலைக்கு முயன்றது வேறு விதர்ஷணாவை நிலை குலைய வைத்தது.

அதுவும் ஷர்வாவை அவள் குறிப்பிட்டது வேறு மனதை வலிக்க வைத்தது. ஈஸியாக முடித்திருக்க வேண்டிய விஷயத்தை அவன் ஏன் இப்படியான இக்கட்டு வருமளவு கொண்டு வந்து விட்டான்? அகிலனுக்கு எதுவும் ஆனால் அது அவனின் மீதெல்லவா தீராத பழியைக் கொண்டு வரும் என்ற எண்ணமே அவனின் மீது கோபத்தையும் தர, அன்று கருணாகரன் வெளியூர் சென்றிருந்ததால் அந்த இரவு எட்டு மணி தாண்டிய நேரத்தில் சட்டென முடிவெடுத்து கிளம்பி விட்டாள்.

வீட்டில் இருக்கும் வேலையாளுக்கு விவரம் சொல்லி விட்டு செல்ல வேண்டும் என்பதால், தோழிக்கு உடல்நிலை சரியில்லை. தான் மருத்துவமனை செல்வதாகச் சொல்லி விட்டு கிளம்பினாள்.

அவள் நேராகச் சென்று நின்றது ஷர்வஜித்தின் வீட்டில் தான்.

அவளை அந்த நேரம் கண்டதும் கேள்வியுடன் பார்த்தாலும் ஏற்கெனவே தெரிந்தவள் என்பதால் விஜயன் எதுவும் கேட்காமல் கதவை திறந்து விட்டார்.

வேகமாக உள்ளே சென்றவள் வீட்டின் கதவை தட்டும் முன்பே திறக்க பட்டது. வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் வெளியே செல்ல தயாராக இருந்த ஷர்வாதான் கதவை திறந்தவன். அவளை அந்நேரத்தில் அங்கே எதிர்பாராமல் மலைத்து நின்றான்.

ஆனால் நொடியில் சுதாரித்து “ஹேய்…! இந்த நேரத்தில் நீ இங்க என்ன பண்ற? அறிவில்லை உனக்கு?” எனக் கோபத்தில் கத்த ஆரம்பித்தான்.

அவனின் கத்தலில் பயந்தாலும் தானும் கோபத்தில் இருந்ததால், “அறிவு எல்லாம் கிலோ கணக்கில் இருக்கு. உங்களுக்கும் வேணும்னாலும் கடன் தர்றேன். இப்போ நான் முக்கியமா பேசியே ஆகணும்…” என்றாள்.

அவளின் பேச்சுச் சத்தம் கேட்டு சந்திராவும் அங்கே வந்தார் “என்ன விதர்ஷணா இந்த நேரம் வந்திருக்க? இதெல்லாம் தப்பும்மா. உன் வீட்டுக்கு கிளம்பு…!” என்றார் அமைதியாக.

அன்றைக்குப் பிறகு தன் பேச்சை குறைத்துக் கொண்டதால் இன்றும் குரல் மெலிந்து ஒலித்தது. மகனிடம் பேசுவதையே நிறுத்தி இருந்தார். அவனாக வழிய வந்து பேசும் போதும் அவரின் அமைதி தொடர்ந்தது.

அவரின் குரல் மாற்றத்தை கூடக் கவனிக்கும் நிலையில் அவள் இல்லை. அகிலனின் நிலையும், அவளின் கோபமும் மட்டுமே முன்னிலையில் இருக்க, “இந்த நேரம் வந்ததற்குச் சாரி அத்தை. உங்க பிள்ளை கிட்ட நான் கொஞ்சம் பேசணும். பேசிட்டு போயிடுறேன்…” என்று அவரிடம் சொன்னவள், “ஒரு உயிரோட மதிப்பு என்னனு உங்களுக்குத் தெரியுமா ACP சார்?” எனக் கோபத்துடன் கேட்டாள்.

“ஹேய்…! நீ என்ன லூஸா? நேரம் கெட்ட நேரத்தில் வீட்டுக்கு வந்ததும் இல்லாமல் சம்பந்தம், சம்பந்தம் இல்லாம கேள்வி கேட்டுட்டு இருக்க. ஒழுங்கா உன் வீட்டுக்கு போ…!” என்றான் தானும் கோபம் கொண்டவனாக.

“ஆமா, நான் உங்களைப் பொறுத்த வரை லூசு தானே? இப்போ நான் லூசா, லூசு இல்லையாகிறது இல்ல இப்போ பேச்சு. என் இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க. நான் போய்டுறேன். நீங்க செய்த ஒரு காரியத்தால் இப்போ ஒரு உயிர் ஊசலாடிகிட்டு இருக்கு. ஏன் இப்படிச் செய்தீங்க? அந்த உயிர் போனா உங்களால திருப்பித் தர முடியுமா? போலீஸா இருந்தா நீங்க என்ன வேணும்னாலும் செய்வீங்களா?” என ஆத்திரத்துடன் கேட்டாள்.

“என்ன உளர்ற? யார் உயிருக்கு என்ன ஆபத்து?” எனப் புரியாமல் கேட்டான் ஷர்வா.

“என்னமா விதர்ஷணா, யாருக்கு என்னாச்சு? நீ என்ன பேசுற?” என்று சந்திராவும் கேட்க, அவரின் புறம் திரும்பியவள், “உங்க பிள்ளையை நீங்க தட்டி கேட்க மாட்டீங்களா அத்தை? பசங்க தப்பு செய்தா அந்த வீட்டு பொண்ணு தலையைப் போட்டு உருட்டுவாராமே? நீங்களும் ஒரு பொண்ணு தானே அத்தை. அதை எல்லாம் ஏன் நீங்க கேள்வி கேட்கலை?” என்று அவரையும் கேள்வி கேட்க, ஷர்வாவின் பொறுமை பறந்து கொண்டிருந்தது.

இரவு நேரம் வீட்டிற்கு வந்ததும் இல்லாமல், நியாயம் கேட்க வந்தவளை போலக் கத்தி கொண்டு இருந்தவளை இரண்டு அடி வைத்தால் தான் என்ன என்று தோன்றியது.

“ஏய்…! கிளம்புடி நீ! எங்க வந்து யாரை கேள்வி கேட்குற? எங்க அம்மா என்கிட்ட என்ன கேள்வி கேட்கணும்னு அவங்க தான் முடிவு பண்ணனும். நீ ஒன்னும் சொல்ல தேவை இல்லை. தேவையில்லாமல் உளறாமல் போ இங்கிருந்து…!”

“நான் போக முடியாது. நான் அப்படித் தான் கேள்வி கேட்பேன். உங்க மேல ஒரு பழி சொல் வந்தால் அது எனக்கும் தான். பூர்வீ இன்னும் கதறலா சொன்னது என் காதில் கேட்டுட்டே இருக்கு. அகிலனுக்கு ஒன்னும் ஆகக் கூடாதுன்னு பயமா இருக்கு…” என்றவள் குரல் கலங்க ஆரம்பித்தது.

“நீ என்ன சொல்ற? அகிலன்னு என்னாச்சு?” என இப்பொழுது ஷர்வாவும் அதிர்ந்து கேட்டான்.

“அகிலன் சூசைட் அப்டெம்ட் பண்ணிட்டானாம். நீங்க அன்னைக்கு அவனைக் கத்திவை வச்சு குத்த விடப் போனதுனால் தான் இப்படி ஆச்சுன்னு சொல்றா. என்னால தாங்கவே முடியலை. நீங்க ஏன் அப்படிப் பண்ணினீங்க? அன்னைக்கும் சரி, இன்னைக்கும் சரி ஒரு உயிரோட மதிப்பு உங்களுக்குத் தெரியலை. தெரிஞ்சியிருந்தா இப்படிப் பண்ணுவீங்களா? உங்களை எல்லாம் தட்டி கேட்க ஆள் இல்லாத திமிரு. இப்போ நான் கேள்வி கேட்பேன்…” என்று பேசிக் கொண்டே போனாள்.

அகிலன் தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சியில் இருந்த ஷர்வா, அவளின் தொடர்ந்த பேச்சை கேட்டு “ஆமாடி, எனக்கு ஒரு உயிரின் மதிப்புத் தெரியாது. நான் இப்படித் தான் செய்வேன். உன் வேலையைப் பார்த்துட்டு போ…!” என்றான் கடுமையாக.

“விதர்ஷணா நீ பேசுறது சரியில்லை. என் பிள்ளையைக் குறை சொல்லத்தான் கிளம்பி வந்தியா? அவன் என்ன செய்திருந்தாலும் அது அந்தப் பசங்களோட நல்லதுக்காகத் தான் இருக்கும். அதை முதலில் புரிஞ்சுக்கோ…!” என்றார் சந்திரா.

தன்னிடம் பேச மாட்டேன் என்று அடம் பிடித்தாலும், தனக்காகப் பேசும் தாயை மனம் நெகிழ பார்த்த ஷர்வா “அவகிட்ட பேசி உங்க எனர்ஜியை வேஸ்ட் பண்ணிக்காதீங்கமா. அவள் என்னைப் புரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்க உள்ளே போய் ரெஸ்ட் எடுங்க…” என்றான்.

“உங்க நியாயம் நல்லா இருக்கு அத்தை. என்ன வேணும்னாலும் செய்துட்டு அது நல்லதுக்குன்னு சொன்னா ஆச்சா? உங்க மகனுக்கு மட்டும் தான் உயிரின் மதிப்பு தெரியலைன்னு நினைச்சேன். ஆனா இப்போ தானே தெரியுது உங்களுக்கும் கூட ஒரு உயிரோட மதிப்பு தெரியாதுன்னு…” என அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே “விதர்ஷணா.‌..” என அதட்டியவாறு அவளின் கன்னத்தில் அறைய கையை ஓங்கியவன், சட்டெனக் கீழே இறக்கி, கையை இறுக மூடி சமாளித்து,

“யாரை பார்த்து என்ன வார்த்தை பேசுற? யாருக்கு டி உயிரின் மதிப்புத் தெரியாது? எனக்கும், என் அம்மாவுக்குமா? எங்களை விட யாருக்கு டி தெரியும் ஒரு உயிரோட மதிப்பு? எங்களைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? ஒரே நேரத்தில் மூணு உயிரை பறி கொடுத்த எங்களோட வலி உனக்குத் தெரியுமா?

அகிலனை முன்கூட்டியே ஏன் காப்பாத்தலைன்னு கேள்வி கேட்டியே? அதுக்குக் காரணம் என்னனு உனக்குத் தெரியுமா? ஒருத்தன் ஒரு தப்பு செய்தா அது என்னனு அவனுக்கு நல்லா உறைக்கணும். அப்பதான் திரும்பத் தப்புச் செய்யத் தோணாதுன்னு தான் நான் அவனுக்கு அப்படிச் செய்தேன். ஒரு வீட்டில் ஒரு இளைஞன் தவறான வழிக்கு போனா அதோட பாதிப்பு அவனுக்கு மட்டும் இல்லை. அவனோட ஒரு செயல் குடும்பத்தையே குலைச்சு போட்டுரும்ன்னு அனுபவிச்சுட்டு இருக்கிறவங்க நாங்க. எங்ககிட்ட வந்து அசால்ட்டா கேள்வி கேட்குற?

இது போலத் தப்பு செய்யும் பையன்களைத் தட்டி கேட்கவே எனக்குப் பிடிச்ச படிப்பையும், வேலையையும் தூக்கி போட்டு இந்தக் காக்கி சட்டையை வெறியோட மாட்டிகிட்டவன் டி நான்…!

அதனால் இது மட்டும் இல்லை. நான் இன்னும் கூடச் செய்வேன். அந்தப் பசங்க வலிக்க, வலிக்க அவங்க செய்த தப்பை உணரும் வரை நான் இப்படித் தான் செய்வேன். ஏன்னா எங்க குடும்பத்துக்கு வந்த நிலை வேறு குடும்பத்துக்கு வரக் கூடாது பார்!

எப்படி இருந்த குடும்பம் தெரியுமா எங்க குடும்பம்? ஆனா இப்போ நானும் என் அம்மாவும் மட்டும் தான் எங்க குடும்பம்னு ஆகக் காரணம் யார் தெரியுமா? நல்லா கேட்டுட்டு என்னைக் குறை சொன்னாலும் பரவாயில்லை. என் அம்மாவை ஏதாவது சொன்ன தொலைச்சு புடுவேன்…” என்று கோபத்தில் கொந்தளித்த ஷர்வா அந்தக் கோபம் குறையாமல் தங்கள் வாழ்வில் நிகழ்ந்ததை அவளிடம் சொல்ல ஆரம்பித்தான்.


★★★