பனியில் உறைந்த சூரியனே – 21

அத்தியாயம் – 21

வாயிலில் கோபத்துடன் நின்றிருந்த மகனைப் பார்த்த சந்திரா “வா‌ ஷர்வா! என்ன இந்த நேரத்தில் வீட்டுக்கு வந்திருக்க? எதுவும் எடுத்துட்டு போக வந்தியா?” என நிதானமாக விசாரித்தார்.

வாசலில் நின்றிருந்த காரை பார்த்தே கோபத்துடன் வீட்டிற்குள் வந்தவன், அவர்கள் பேசிக்கொண்டிருந்த கல்யாணம் என்ற வார்த்தையில் கோபம் அதிக உச்சத்திற்கு ஏற, இருவரையும் ஒருசேர முறைத்துக்கொண்டு நின்றிருந்தவன், தன் அம்மாவின் நிதானமான விசாரிப்பில் இப்பொழுது அவரை மட்டும் முறைத்துப் பார்த்தான்.

அவனின் முறைப்பைக் கண்டு கொள்ளாமல் “என்ன ஷர்வா கேட்டேனே? பதில் சொல்லாம நிக்கிற. பதில் சொல்ல பிடிக்கலைனா விடு! என் மருமக வந்திருக்கா பார்! அவ கூடப் பேசிக்கிட்டு இரு! நான் போய் உனக்குக் காப்பிப் போட்டு எடுத்துட்டு வர்றேன்…” என்று சொன்னவர் சமையலறையை நோக்கி நடக்க ஆரம்பிக்க,

“அம்மா…!” எனப் பல்லை கடித்து அழைத்தவன், “நான் ஏற்கனவே சொல்லிட்டேன். என் மூலமா உங்களுக்கு மருமகள்னு ஒருத்தி கிடைக்கவே மாட்டானு. அப்படியிருக்கும் போது யாரோ ஒருத்தியை வீட்டில் உட்கார வச்சு மருமகள்னு சொல்லிட்டு இருக்கீங்க? மரியாதையா நீங்களே அவளை வெளியே அனுப்புங்க! இல்லைனா நானே அனுப்ப வேண்டியிருக்கும்…” என்றான்.

சில நாட்களுக்குப் பின் தன் ஜித்தாவை பார்த்ததில் அவனின் கோபத்தைக் கண்டும் அதைக் கணக்கில் எடுக்காமல் அவனை விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த விதர்ஷணா அவன் சொன்ன வார்த்தைகளில் விதிர்த்துப் போனாள்.

அவனிடம் இவ்வளவு கோபத்தை எதிர்பார்க்காதவள் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள். தான் காதல் சொன்ன போது கூடப் பொறுமையாக எடுத்துச் சொல்ல முயன்றவனா இவன்? என்ற கேள்வி அவளின் மனதில் கொக்கி போட்டு வந்து போனது.

அவனும் நானே! இவனும் நானே! என்பது போல் ரௌத்திரமாக நின்றுக் கொண்டிருந்தவனுக்கு அவளின் அதிர்ச்சி அவனின் கண்ணிலும் படவில்லை. கருத்திலும் படவில்லை.

“ஷர்வா! என்ன பேச்சு இது? விரோதியா இருந்தாலும் வீட்டுக்கு வந்தவங்களை வெளியே போகச் சொல்றது அநாகரீகம்னு தெரியாது உனக்கு? உன்கிட்ட இந்த மாதிரியான நடத்தையை நான் எதிர்பார்க்கலை. அதுவும் விதர்ஷணா நான் வரச் சொல்லி வீட்டுக்கு வந்தவ. அவளை அவமதிக்கிறது என்னையும் அவமதிக்கிறதுக்குச் சமம்…” எனத் தானும் கோபத்துடன் இரைந்தார்.

“நாகரீகம், அநாகரீகம் பார்க்கிற நிலையில் நான் இல்லைமா. நான் அவ்வளவு மறுப்பு சொன்ன பிறகும் இவளை வீட்டுக்குக் கூப்பிட்டது உங்க தப்பு. எப்பவும் நான் உங்க பேச்சை சரின்னு கேட்டுட்டு போறவன் தானே? அப்படி இருந்தும் இந்த விஷயத்தில் நான் ஏன் இவ்வளவு மறுப்பு சொல்றேன்னு கொஞ்சம் கூட யோசிக்காம இவளை வீட்டுக்கு வர வச்சதும் இல்லாமல், மருமக உறவு கொண்டாடிக்கிட்டு இருந்தா என்னைக் கண்டுக்காம போகச் சொல்றீங்களா? இந்த ஒரு விஷயத்தில் மட்டுமாவது என் பேச்சை நீங்க கேளுங்கமா…!” என்றான்.

அதற்கு மேலும் தன் ஜித்தாவின் மறுப்பைத் திரும்ப, திரும்பக் கேட்க முடியாமல் தன் சக்தியை இழக்க ஆரம்பித்த விதர்ஷணா “நான் கிளம்புறேன் அத்தை. எனக்காக உங்களுக்குள் சண்டை வேண்டாம்…” என்று சந்திராவிடம் சொல்லிவிட்டுத் தன்னைத் தாண்டி போக ஆரம்பித்தவளை தடுத்த ஷர்வா “இந்த அத்தை உறவு என்னைக்கும் நிறைவேறாது மிஸ்.விதர்ஷணா. சோ, அந்த அழைப்பு இனி வேண்டாம். கிளம்புங்க…!” என்றான்.

தன் ஜித்தாவின் முகத்தில் அடித்தது மாதிரியான பேச்சில் விளையாட்டு போல் சட்டெனக் காதல் சொல்லி கரம் பிடிக்கக் காத்திருந்த அந்தக் கன்னிகையின் மனது பலமாக அடி வாங்கியது போல் வலிக்க ஆரம்பித்தது.

அவனின் பேச்சுக்குப் பதிலுக்குப் பதில் பேசும் தைரியம் இருந்தும், ஏனோ அவளின் மனது அன்று சோர்வை தத்தெடுத்திருக்க, அவனின் பேச்சுக்குப் பதில் சொல்லாமலேயே அங்கிருந்து கிளம்பினாள்.

சோர்வு தாங்கிய முகத்துடன் கிளம்பி போன விதர்ஷணாவை‌ பார்த்து “என்ன ஷர்வா இது? ஏன் இப்படி நடந்துக்கிற? ஏன் இப்படி உன் வாழ்க்கையைத் தனிமரமா ஆக்கிக்கணும்னு நினைக்கிற? உன்னை விதர்ஷணா எவ்வளவு விரும்பியிருந்தா இப்படி நீ போற இடம், வர்ற இடமெல்லாம் உன்னைத் தேடி வந்து பார்ப்பா? அவ்வளவு வசதியான வீட்டுப் பெண்ணுக்கு இப்படி நடந்துக்கணும்னு வேண்டுதலா? உன்மேல விருப்பம் இருக்கிற ஒரே காரணத்திற்காக மட்டும் தானே இப்படி நடந்துக்கிறா. அவளைப் போய்த் துரத்தி அடிக்கிற?” என்று பேசிக்கொண்டே போன சந்திராவின் பேச்சை நிறுத்த கைகாட்டிய ஷர்வா,

“போதும்மா, நிறுத்துங்க! உங்களுக்கு இதுவரை யாருனே இன்னும் சரியாகத் தெரியாத ஒரு பொண்ணோட தைரியத்திற்கும், அவளின் செயலுக்கும் இப்போ இவ்வளவு சப்போர்ட் பண்ணும் நீங்க, சில வருஷத்துக்கு முன்னாடியும் கொஞ்சமாவது சப்போர்ட்டா இருந்திருக்கலாம். வேதி உயிரும் போயிருக்காது. ஆனா இப்போ உங்களின் இந்தச் சப்போர்ட் அனாவசியமானது…” என்று ஆத்திரத்துடன் சொன்னவன், அவன் சொன்ன வார்த்தையின் வீரியத்தில் திகைத்து நின்ற சந்திராவை கூடக் கவனிக்காமல், அந்நேரம் வீட்டிற்கு வந்த காரணத்தைக் கூட மறந்து அப்படியே வெளியேறிச் சென்றான்.

இருசக்கர வாகனத்தில் விரைந்தவனுக்கு ஏற்பட்ட அதீத கோபத்தில் உடல் விறைத்து, நரம்புகள் துடிக்க, கண்ணில் ரத்தம் நிறம் ஏற என ஆளே ருத்திர உருவமாக இருந்தான்.

தன் காரை கடந்து சென்ற அவனின் அந்த நிலையைக் கண்ட விதர்ஷணா மனவருத்தத்தில் ஏற்கனவே உருட்டும் நிலையில் காரை செலுத்திக் கொண்டிருந்தவள் வண்டியை ஓரமாக நிறுத்தியே விட்டாள். அவன் தன்னைத் திட்டினது பின்னுக்குச் செல்ல அவனின் வேகம் கண்டு “அச்சோ…! ஜித்தா இவ்வளவு வேகமா போறாரே! என்னவும் ஆனா என்ன செய்யறது? என்மேல் இருக்குற கோவத்தை இப்படியா காட்டணும்? இதுக்குத்தான் அண்ணா என்னைப் பொறுமையா இருக்கச் சொன்னான். நான் பொறுமையா இருந்திருந்தால் ஜித்தாவே ஒருநாள் மனது மாறி இருக்கலாம். அண்ணா பேச்சை கேட்காமல் மட்டி போல் அவனைப் பார்க்கும் ஆசையில் வந்து, இப்பொழுது என் காதலுக்கு நானே உலை வைத்துக் கொண்டேனோ?” என்று தன்னையே வருந்தி திட்டிக் கொண்டாள்.

சாலையோரம் வண்டியை நிறுத்திவிட்டு சில நிமிடங்கள் அப்படியே இருந்தவள் கைபேசியின் ஒலி கேட்டு தான் கவனம் கலைந்தாள். அழைத்தது யார் எனப் பார்க்க, அவளின் தந்தையின் பெயர் தெரிய, வேகமாகக் கைபேசியில் தெரிந்த பச்சை நிற பட்டனை அழுத்திவிட்டுக் காதில் வைத்தாள்.

“எங்கே இருக்க விதர்ஷணா?”

“இதோ வீட்டுக்கு வந்துட்டு இருக்கேன் ப்பா…”

“சீக்கிரம் வந்து சேர்! நீ வந்ததும் தான் நான் வெளியே போகணும்…” என்றார்.

“இதோ இப்ப வந்து விடுவேன் ப்பா…” எனச் சொல்லிவிட்டு கைபேசியை அணைத்தவள் வேகத்துடன் தன் வண்டியை செலுத்தலானாள்.

பத்து நிமிடங்களில் அவள் வீடு போய்ச் சேர, கல்லூரி விட்டு ஒரு மணி நேரம் கழித்து வீடு வந்து சேர்ந்த மகளைப் பார்த்தவர் கண்ணில் கோபம் தெரிந்தது.

“சாரிப்பா! கொஞ்சம் லேட் ஆகிருச்சு…” என்ற விதர்ஷணா தந்தையிடமும் திட்டு வாங்க மனம் இல்லாமல் வேகமாகத் தன் அறைக்குள் சென்றாள்.

மகள் செல்வதையே பார்த்த கருணாகர விக்ரமன் ‘இந்தப் பொண்ணு செய்வது ஒன்றும் சரியில்லை. தேவாவும் என் கையைக் கட்டி போடுறான். இந்த விஷயத்துக்குச் சீக்கிரம் ஒரு முடிவு கட்டியே ஆகணும். இல்லைனா ஒரு நாள் இல்லை ஒரு நாள் அந்தப் போலீஸ்காரன் கூட ஜோடியா வந்து நின்னாலும் நிப்பா. அப்படி எதுவும் நடக்கும் முன் நான் முந்திக்கணும்…’ என்று எண்ணியவர் “விதர்ஷணா…” என்று அழைத்தார்.

“சொல்லுங்கப்பா…” என்றபடி வெளியே வந்த மகளிடம் “நான் ஒரு பங்ஷனுக்குப் போறேன். வீட்டில் ஒழுங்கா படிச்சுகிட்டு இரு! நான் கிளம்புறேன்…” என்றவர் மகளின் தலையாட்டலை பதிலாகப் பெற்றுக்கொண்டு வெளியே கிளம்பிச் சென்றார்.

“அப்பாவுக்கு இப்பயும் நான் ஸ்கூல் படிக்கிற பொண்ணுனே நினைப்பு. எப்ப பார்! படி படினு ஸ்கூல், காலேஜ் சேர்மன்னு நிரூபிச்சுட்டே இருக்கணும்…” எனத் தன் போக்கில் புலம்பிக் கொண்டே அறைக்குள் சென்று மறைந்தாள்.

கோபம் கட்டுக்கடங்காமல் இருந்தாலும் தான் செல்லவிருந்த இடத்திற்குச் சரியாகச் சென்று சேர்ந்தான் ஷர்வஜித்.

தெரசமா காப்பகத்திற்குச் சரியாக வந்து சேர்ந்தவனை எதிர்கொண்டு வரவேற்றார் பீட்டர். “வாங்க சார்! என்ன சார் பைக்கிலேயே வந்துட்டீங்களா? கார்ல வருவீங்கன்னு எதிர்பார்த்தேன். அம்மாவையும் அழைச்சுட்டு வர்றதா மதியம் பேசினப்ப சொன்னீங்க. அம்மா வரலைங்களா?” எனக் கேட்டார்.

அவர் அப்படிக் கேட்டதும் தான், தாயை அழைக்கத்தான் அந்த நேரத்தில் வீட்டிற்குச் சென்றோம் என்பதையும், அங்கே எதிர்பாராமல் விதர்ஷணாவை கண்டு, மற்றதை மறந்து, அதில் கோபம் கொண்டு வந்து விட்டோம் என்பதையும் ஞாபகத்திற்குக் கொண்டு வந்தவன், மேற்கொண்டு அப்பிரச்சனையைப் பற்றி இந்நேரத்தில் நினைக்கும் எண்ணமில்லாமல் அதைப் புறம்தள்ளிவிட்டு, “இல்லை பீட்டர். அம்மாவால வர முடியல. அதான் நான் மட்டும் பைக்கிலேயே வந்துட்டேன்…” என்று மட்டும் சொன்னான்.

“சரிங்க சார். வாங்க…! உள்ளே வாங்க…!” என்று அவனை விழா நடக்கும் இடத்திற்கு அழைத்துக் கொண்டு போக, அங்கே விழா ஆரம்பிக்கும் இடத்தில் பத்து வயதிற்கு மேலான சில குழந்தைகள் வரிசையாக நின்று, மலர் தூவி வரவேற்றனர்.

தன் அருகில் வந்த பீட்டரிடம் “ஏற்பாடெல்லாம் பெருசா செய்திருக்கீங்க போல?” என்று விசாரித்தான்.

“இது ஷீப் கெஸ்டுக்கு நம்ம தகுந்த மரியாதை கொடுக்கணும் என்ற எண்ணத்திலும், அவர்களை வரவேற்பதிலிருந்து, அவர்கள் விழா முடிந்து செல்லும் வரையிலும் பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொள்வது எங்கள் கடமை என்பதால் எப்பவும் செய்றதுதான் சார்…” என்று சொல்லிக்கொண்டே ஷர்வாவை அழைத்துப்போய் அவனுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர வைத்தார்.

அவனைப் போல் இன்னும் நான்கு பேர் சிறப்பு விருந்தினராக வந்திருக்க, அவர்களிடம் சின்ன அறிமுகம் நடத்தப்பட்டது. அறிமுகம் முடிந்ததும் “இன்னும் ஒரு ஷீப் கெஸ்ட் மட்டும் வரணும். அவர் வந்ததும் விழாவை ஆரம்பிச்சிடலாம் சார்…” என்று அங்கிருந்த சிறப்பு விருந்தினர்களிடம் பொதுவாகச் சொன்ன பீட்டர், அந்த இன்னொரு சிறப்பு விருந்தினரை அழைக்க வாயிலுக்கு விரைந்தார்.

பதினைந்து நிமிடங்கள் கடந்த நிலையில் மற்றொரு சிறப்பு விருந்தினரான கருணாகர விக்ரமன் வருவதைக் கண்ட ஷர்வா எந்தச் சலனமும் இல்லாமல் அவரைப் பார்த்தான். அவன் மதியம் பீட்டரிடம் பேசிய போதே ‘வேறு யார், யார் வருவார்கள்?’ என்று விசாரித்திருந்தான்.

ஆனால் அவன் வரவை எதிர்பார்க்காத கருணாகரன் ஒரு நொடி திகைத்து, பின்பு சட்டெனத் தன் முகபாவனையை மாற்றிக்கொண்டவர், சிறப்பு விருந்தினர் பகுதிக்கு வந்தார்.

ஷர்வாவிற்கு அறிமுகப்படுத்தியது போல் மற்ற சிறப்பு விருந்தினர்களைக் கருணாகரனுக்கும் பீட்டர் அறிமுகப்படுத்த, மற்றவர்களிடம் கலகலப்பாகப் பேசி அறிமுகமாகி கொண்டவர் முகம் ஷர்வாவிடம் வரும்பொழுது அவரை அறியாமலேயே இறுகிப் போனது.

ஆனாலும் சபை நாகரீகம் கருதி தன்னை இயல்பாகக் காட்டிக்கொண்டு கைகுலுக்கினார். மற்றவர்களைப் போல் நீங்களும் ஒருவரே என்பது போல ஷர்வாவும் எதையும் காட்டிக் கொள்ளாமல் கைகுலுக்கிவிட்டு அமர்ந்தான்.

அவனின் அருகிலேயே அவருக்கும் இருக்கை போடப்பட்டிருக்கக் கருணாகரனுக்கு உள்ளுக்குள் கொதித்துக்கொண்டு வந்தது.

இருக்கையில் அமர்ந்தவர் தன் அருகில் நின்றிருந்த பீட்டரை பார்த்து “என்ன பீட்டர் இந்த வருஷம் புது ஷீப் கெஸ்ட் தான் நிறைய வந்திருக்காங்க போல…” எனக் கேட்டார்.

“ஆமா சார், உங்களைப் போல நம்ம காப்பகத்திற்கு உதவும் நல்ல உள்ளங்கள் சிலர் இந்த வருஷம் கிடைச்சுருக்காங்க. அவங்களுக்கும் நாம தகுந்த மரியாதை செய்யணுமே? அதான் அவர்களைக் கௌரவிக்க அழைத்திருக்கிறோம் சார்…” என்றார்.

“அதெல்லாம் சரிதான் பீட்டர். மாத சம்பளம் வாங்குகிறவர்களும் இப்பொழுதெல்லாம் நிறைய உதவி செய்கிறார்கள் போல?” என்று கருணாகரன் சாதாரணம் போல் கேட்க, அதுபோல் உதவும் சிலரை அழைத்து, அவர்களும் வந்து, அடுத்த இரண்டு வரிசைகளில் அமர்ந்திருந்தால் “ஆமா சார். மாத சம்பளம் வாங்கும் சிலரும் நம்ம இல்லத்துக்கு உதவி செய்துட்டு தான் இருக்காங்க…” என்றார்.

கருணாகரன் யாரை மாதச்சம்பளம் எனக் குறிப்பிடுகிறார் என்று பீட்டருக்கு புரியவில்லை என்றாலும் கருணாகரன் அருகில் அமர்ந்திருந்த ஷர்வாவிற்கு அவர் தன்னைத்தான் மாதச்சம்பளம் என்று குறிப்பிடுகிறார் என்று நன்றாகவே புரிந்தது. அங்கே வந்து முன்னால் அமர்ந்திருக்கும் மற்ற சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் சுய தொழில் செய்பவர்களாக இருக்க, தான் மட்டுமே சிறப்பு விருந்தினராக முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் மாதச் சம்பளக்காரன். அப்படி இருக்க இதைக் கூட அறிந்துகொள்ள முடியாத குழந்தை இல்லையே அவன்? அதுவும் தன்னை எப்பொழுது எங்கே பார்த்தாலும் இதே கோபத்தைத் தன்னிடம் வெளி காட்டுபவர் இப்பொழுது மட்டும் சும்மாவா இருப்பார்?

அவர் சொன்னது புரிந்தும் விழா மேடையை மட்டும் பார்த்த வண்ணம் அமைதியாக இருந்தானே தவிர, சின்னச் சலனம் கூடத் தன்னிடமிருந்து வெளிப்படுத்த அவன் விரும்பவில்லை. பீட்டர் விருந்தினர்களைக் கவனித்துவிட்டு விழா நடக்கும் மேடைக்குச் சென்று ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பிக்க, “எவன் எவனை ஷீப் கெஸ்டா கூப்பிடணும்னு ஒரு விவஸ்தை கூட இல்லை. பெரிய பதவியில் இருந்தா பெரிய கொம்புனு நினைப்பு…” என ஷர்வாவின் காதில் விழும் படி நன்றாகவே முனங்க ஆரம்பித்தார்.

“பதவி இருந்தா போதும், யாரையும் காதலிக்கலாம், யாரையும் கல்யாணம் முடிக்கலாம், எங்கேயும் பெரிய ஆளாக வந்து நிற்கலாம் என்ற நினைப்பு சிலருக்கு ரொம்பவே இருக்கு. இவனுங்க கொட்டத்தை அடக்க ஆள் இல்லையே?” எனப் பேசிக்கொண்டே போக, ஏதோ பழைய கோபத்தில் தன்னைக் கீழாகப் பேச நினைக்கிறார் என்று அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ஷர்வா, காதல், கல்யாணம் என்ற வார்த்தையில் சட்டென அவரைத் திரும்பிப் பார்த்தான்.

அவரும் அப்பொழுது அவன் பக்கம் திரும்பி இருக்க, அவர் கண்ணில் தெரிந்த கனலில் கேள்வியுடன் சில நொடிகள் பார்த்தான்.

பின்பு தன் பார்வையை நேராகத் திருப்பிக் கொண்ட ஷர்வா, விதர்ஷணாவை மனதிற்குள் எரிச்சலுடன் நினைத்துக்கொண்டான்.

‘இவ மனசில் என்ன நினைத்துக் கொண்டு இருக்கா? நான் ஒத்துவராதுனு சொல்லியும் என் அம்மாகிட்ட போய்ப் பேசியது மட்டுமில்லாமல், அவள் வீட்டிலும் போய்க் காதல் என்று உளறி வைத்திருக்கிறாள். கொஞ்சம் கூட வளர்ந்த புத்தியில்லை, அறிவில்லை. சரியான அவசரக்குடுக்கை! இருபத்தி ரெண்டு வயசு முடிஞ்சிருக்கும். ஆனால் செய்கை எல்லாம் சிறுபிள்ளைத்தனம்.

எல்லார்கிட்டயும் சொல்லி வச்சுட்டா நான் சம்மதிச்சுருவேன்னு கனவு கண்டுகிட்டு இருக்காளோ? திமிரு புடிச்ச கழுதை! நீ யார்கிட்ட வேணாலும் சொல்லு! எங்க வேணாலும் சொல்லு! இந்த ஷர்வா என்னைக்கும் உன் ஆட்டத்திற்குப் பொம்மையாக மாட்டான்’ என்று சூளுரைத்துக் கொண்டான்.

அவன் அமைதியாகத் திரும்பியதை பார்த்த கருணாகரன் “சம்பளக்காரனுக்குச் சொரணையே இருக்காது போல…” என்று மீண்டும் வார்த்தையை விட, பட்டென அவரின் புறம் திரும்பியவன், அத்தனை நேரமாகப் பார்த்துக் கொண்டிருந்த தன் சாதாரணப் பார்வையை மாற்றி உஷ்ணமாகப் பார்த்தான்.

“இந்தச் சம்பளக்காரன் இப்போ அடங்கிப் போறதுக்குக் காரணம் சொரணை கெட்ட தனம் இல்லை. ஒரு ஆளை எப்போ, எங்கே, எந்தநேரத்தில், எங்க அடிச்சா அவனுக்கு வலிக்குமோ? அங்கே சரியா குறி பார்த்து அடிக்கத் தெரிந்த தில்லும், திறமையும் இந்தச் சம்பளக்காரன்கிட்ட இருக்கிற திமிரில் அடக்கமா காட்டிக்கிட்டு இருக்கேன். நான் நினைச்சா இந்தச் செகண்ட் உங்களோட செல்வ திமிரையும், நீங்க தலை மேல் தூக்கி வச்சு கொண்டாடும் கௌரவத்தையும் இதோ இங்கே கொண்டு வந்து நிறுத்த முடியும். மைன்ட் டிட்…!” என்று தன் காலடியை காட்டி சொன்ன ஷர்வாவின் வார்த்தையில் பறந்த அனலில் கருணாகரனின் முகம் நொடியில் வெளுத்துப் போனது.

அந்நேரம் சிறப்பு விருந்தினரை கௌரவிக்க மேடைக்கு அழைக்க வந்த பீட்டர் இருவரிடமும் தெரிந்த முகப்பாவனையைப் பார்த்து வேகமாக அருகில் வந்தார்.

அவரின் வருகையைக் கண்டு தன் முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொண்ட ஷர்வா “என்ன பீட்டர்?” என்று குரல் கொடுக்க, தானும் அந்த ஒலியில் தன்னைச் சுதாரித்துக் கொண்டார் கருணாகரன். அவரும் பீட்டரை கேள்வியுடன் பார்த்தார்.

சில நொடிகளுக்கு முன்னர் இந்த இருவரின் முகமுமா அப்படி இருந்தது? என நினைக்கும் வண்ணம் மாறியிருந்த பாவனையைப் பார்த்து தான் கண்டது கனவோ எனும் வகையில் குழம்பிப் போனார் பீட்டர்.

ஆனாலும் அவர்களிடம் என்னவென்று கேட்க முடியாத தயக்கம் அவரைத் தடை செய்ய, தான் வந்த வேலையை மட்டும் பார்க்க முடிவு செய்தார்.

“மேடைக்கு உங்களை அழைக்க வந்தேன் சார். மதர் உங்களுக்கான வரவேற்பு மேடையில் கொடுப்பாங்க. பிளீஸ் கம் சார்…” எனக் கருணாகரனை முதலில் அழைக்க, அவர் எழுந்து சென்றார்.

அவருக்கான மரியாதையைச் செலுத்திய போது கீழே அமர்ந்தவர்களைத் திரும்பி பார்த்தார்.

அப்பொழுது ஷர்வாவின் பார்வையைச் சந்தித்தார். அவரின் பார்வை தன் மேல் பட்டதும் அவரைப் பார்த்து உதட்டை பிரிக்காமல் இகழ்வான புன்னகை ஒன்று புரிய, அவனைக் கடுப்புடன் பார்த்தவர், பட்டெனத் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டார்.

அதில் இன்னும் இகழ்ச்சி புன்னகையைத் தவழ விட்டவன், ‘உங்களுக்குக் கீழே இருக்குற ஆளுங்க எதிர்த்து நிற்காத வரை தான் உங்களுக்கு மரியாதை. எதிர்த்து நின்னா இப்படித் தான் அடங்கிப் போகணும்’ எனத் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

அவருக்கான மரியாதை முடிந்து, பிறகு மற்றவர்களும் அழைக்கப்பட்டுக் கௌரவிக்கப் பட்டதும் விழா ஆரம்பமானது.

குழந்தைகளின் பாட்டு, நடனம், சிறு நாடகம் எனத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க, கருணாகரன் அதில் மட்டுமே கண்ணை வைத்திருந்தார். அவரின் கருத்தில் மட்டும் ஷர்வாவை விடாமல் சாடிக் கொண்டிருந்தார். அவனின் பேச்சினால் உண்டான தகிப்பு சிறிதும் அவரை விட்டு அகலவில்லை. அவனின் மீதான வன்மம் கூடிக்கொண்டே போனது.

அவர் இப்படி இருக்க, ஷர்வாவோ முற்றிலும் அமைதியான சூழ்நிலையை உள்வாங்க ஆரம்பித்தான். வீட்டில் இருந்து கிளம்பும் போது இருந்த கோபம், பாதியாகக் குறைந்து, குழந்தைகளின் நிகழ்ச்சிகளில் தன்னை அமைதி படுத்திக் கொள்ள ஆரம்பித்திருந்தான்.

நேரம் விரைவில் கடந்து செல்ல, நிகழ்ச்சிகள் நல்லப்படியாக முடிந்து ஒவ்வொருவராகக் கிளம்ப ஆரம்பித்தனர். கருணாகரன் முதலில் கிளம்பி விட, மற்ற விருந்தினர்களும் கிளம்பும் வரை பொறுமையாகக் காத்திருந்த ஷர்வா, கடைசியாகத் தான் கிளம்பத் தயாரான். “அப்போ நான் கிளம்புறேன் பீட்டர். குழந்தைகள் நிகழ்ச்சி எல்லாமே நல்லா இருந்தது. சிறப்பா செய்திருந்தாங்க…” என்று பாராட்டினான்.

“உங்களின் வருகைக்கும், பாராட்டுக்கும் ரொம்ப நன்றி சார். நீங்க சொன்னதைக் குழந்தைகளிடம் சொல்லிடுறேன்…” என்றார் பீட்டர்.

“நல்லது பீட்டர். அப்புறம் நான் உங்களிடம் ஒரு விஷயம் கேட்கணுமே?” என்று மெல்ல பேச்சை ஆரம்பித்தான்.

“கேளுங்க சார்…”

“மிஸ்டர்.கருணாகர விக்ரமன் எத்தனை வருஷமா இந்தக் காப்பகத்திற்குப் பழக்கம்?”

“அது ஒரு ஐந்து வருஷம் இருக்கும் சார். அவரோட அறக்கட்டளை மூலமா பல உதவிகள் செய்து கொண்டு இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் எதுவும் காப்பகத்திற்கான அவசர தேவைனு வந்தா தயங்காமல் அவரிடம் கேட்கலாம். உடனே செய்து கொடுப்பார். நல்ல மனிதர்…!” என்றார்.

“ஓ…! அப்படியா? சந்தோஷம்…!” என்றவன், மேலும் “அவர் மூலமா இங்கே யாரும் வேலைக்குச் சேர்ந்தாங்களா பீட்டர்…” எனக் கேட்டான்.

இந்த விசாரணையெல்லாம் இப்போ எதுக்கு என்ற கேள்வி பீட்டருக்கு எழுந்தாலும் “ஆமா சார். ராஜ்னு ஒருத்தன் அவரின் சிபாரிசு கடிதம் மூலம் தான் வேலைக்கு வந்தான். நீங்க கூட அன்னைக்கு அவன்கிட்ட விசாரணை செய்துட்டு போனீங்க…”

“ஓ…! யெஸ்…! ஞாபகம் இருக்கு. ஆனா இன்னைக்கு எங்கே அவனை நான் பார்க்கவே இல்லையே?” அவன் தன்னிடம் தான் இருக்கிறான் என்பதைக் காட்டிக் கொள்ளாமல் அவனைப் பற்றி மேலும் விவரம் அறிய கேள்வியைப் போட்டான்.

“அவனைத் தான் சார் நாங்களும் தேடிட்டு இருக்கோம். நாலு நாளா லீவ் சொல்லாம கூட இந்த விழா நேரத்தில் வராம இருந்துகிட்டான். அவன் வீட்டில் விசாரிச்சப்போ எங்கயோ வெளியூர் அவசரமா போக வேண்டி வந்ததுன்னு போயிட்டான்னு சொன்னாங்க…” என்றார்.

“இந்த மாதிரி சிபாரிசு கடிதம் கொடுத்து வேலைக்குச் சேர்ந்த பிறகு, அவர்கள் கொடுத்த கடிதத்தை எல்லாம் பத்திரமாக வச்சிருக்கீங்களா?” என்று விசாரித்தான்.

“அது பத்திரமா தான் சார் இருக்கும். எல்லாமே பைல் பண்ணி வச்சிருவோம்…” என்று பீட்டர் சொல்ல, “நல்லது பீட்டர். அந்தக் கடிதத்தை நான் பார்க்கணும். நாளைக்கு என் ஆபிசுக்குக் கொண்டு வந்துருங்க. ராஜ் மட்டுமில்லாமல் வேறு யாரும் சிபாரிசு மூலமாக வேலைக்குச் சேர்ந்திருந்தாலும், அவங்க கொடுத்த கடிதத்தையும் எடுத்துட்டு வாங்க…!” என்றான்.

“சரிங்க சார். கொண்டுவந்து கொடுக்கிறேன்…” என்று பீட்டர் சொல்லவும், அத்தோடு தன் பேச்சை முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

விழா முடிந்து அவன் வீடு சென்று சேர்ந்தபோது மணி இரவு ஒன்பதரை ஆகியிருந்தது.

அவனுக்குக் கேட்டை திறந்து விட்ட விஜயன் ஷர்வாவை பரபரப்பாகப் பார்த்தான். அதை உணர்ந்தவன் தன் வண்டியை நிறுத்தி “என்ன விஜயன்?” என்றான்.

“மேடமுக்கு உடம்பு முடியலை சார்…” என்று சொல்ல,

“வாட்…! என்ன விஜயன் சொல்றீங்க? அம்மாவுக்கு என்னாச்சு?”

“என்னனு தெரியலை சார். நீங்க சாயங்காலம் வந்துட்டு போன பிறகும் ரொம்ப நேரமா கதவு திறந்தே இருந்தது. நானும் மேடம் பூட்டிப்பாங்கனு பார்த்தேன். ஆனா நைட் ஏழரை ஆன பிறகும் பூட்டலை. என்னனு கேட்போம்னு சொல்லி எட்டி பார்த்தப்ப மேடம் வாசலையே பார்த்து அப்படியே பிரமை பிடிச்சது போல நின்னுட்டு இருந்தாங்க.

நான் மேடம், மேடம்னு கூப்பிட்டது கூட அவங்க காதில் விழலை. அப்புறம் கதவை பலமா தட்டி கூப்பிட்டதும் என்னை அப்படியே வெறிச்சு பார்த்தாங்க. நான் திரும்பக் கூப்பிடவும் கனவு கண்டு கலைஞ்சது போலத் திடுக்கிட்டு என்னைப் பார்த்து ‘என்ன’னு மட்டும் கேட்டாங்க. என்னாச்சு மேடம்னு கேட்டேன். ஒன்னும் இல்லைன்னு தலையசைச்சுட்டு அவங்க பாட்டுக்கு ரூமுக்குள்ள போக ஆரம்பிச்சிட்டாங்க.

நடக்கும் போது அவங்க கால் தள்ளாடுச்சு. நான் பயந்து போய் உடம்பு முடியலையா மேடம் சாரை வர சொல்லட்டானு கேட்டதுக்கு என்னைக் கோபமா திரும்பி பார்த்து ‘சொல்ல கூடாது’ன்னு சொல்லிட்டு திரும்பி நடக்க ஆரம்பிச்சிட்டாங்க. கதவை மூடிக்கோங்க மேடம்னு சொன்னதுக்கு ஒன்னும் சொல்லாமயே போய்ட்டாங்க. எனக்கு என்ன செய்றதுனு தெரியலை. நான் வெளியே இருந்து வெறுமனே சாற்றி மட்டும் வச்சுருக்கேன்…” என்று விஜயன் சொல்லி முடித்த அடுத்த நொடி தாயை தேடி வீட்டிற்குள் விரைந்திருந்தான் ஷர்வா.

தாயின் நிலையை அறிந்தவனுக்கு ‘என்னானது அவருக்கு?’ என்று சிந்தனை ஓடிய போதே, மாலை தான் பேசிய வார்த்தைகள் வந்து போக, தான் பேசிய வார்த்தைகளை நினைத்து “ஷிட்…!” எனச் சொல்லி தன்னையே திட்ட ஆரம்பித்தவன், வீட்டிற்குள் தாயை தேட, அவர் வரவேற்பறையில் இல்லாததைக் கண்டு அவரின் அறைக்குள் சென்றான்.

அறையில் விளக்கு கூடப் போடாமல் இருட்டில் இருக்க, வேகமாக அதைப் போட்டுவிட்டு அன்னையைத் தேட, அவர் முதுகு காட்டி படுக்கையில் படுத்திருப்பது தெரிய, அவரின் அருகில் “அம்மா…” என்று அழைத்துக் கொண்டே சென்றவனுக்கு உணர்வுகள் அற்று மயக்கத்தில் இருந்த சந்திரா தான் காண கிடைத்தார்.