பனியில் உறைந்த சூரியனே – 2

அத்தியாயம் – 2

காக்கி உடையில் கம்பீரமாக நடந்து வந்த மகனைப் பார்த்தது பார்த்தபடி இருந்த சந்திராவின் கண்ணில் மகனை அந்த உடையில் பார்த்த பெருமிதம் இருந்தாலும், அவன் அந்த உடை அணிந்தற்கான காரணமும் மனதில் வந்து அவரின் கண்களைக் கலங்க வைத்தது.

அவரின் அருகில் வந்த ஷர்வஜித்தின் கண்களில், தன் அன்னையின் பெருமையும் பட்டது. அதோடு அவர் கண் கலங்குவதற்கான காரணமும் புரிந்தது.

அவரின் காரணமும், இன்றைய சம்பவமும் அவனின் மூளையைத் தாக்க, இன்னும் கோபம் கூடித் தான் போனது. அதே கோபத்துடன் அன்னையின் அருகில் வந்தவன் “இப்ப எதுக்குச் சும்மா நின்னுட்டே இருக்கீங்க? எனக்குச் சாப்பாடு எடுத்து வைக்கிறீங்களா… இல்ல நான் சாப்பிடாமயே கிளம்பட்டுமா?” என்றான்.

அவனின் கோபத்தைப் பார்த்துச் சற்றும் அசராத சந்திரா “சரிதான்…! ரொம்ப மிரட்டாதே! சாப்பிட உட்காருடா…!” என்றார்.

“ஆமா… என் கோபம் உங்களை மட்டும் எதுவும் செய்யாதே…!” என்று அலுத்தபடி சொல்லிவிட்டுச் சாப்பிட அமர்ந்தான்.

“உன் கோபம் என்னை என்ன செய்யும்? ஏதோ வீட்டுக்குள் வந்ததும் கேள்வி கேட்டு உன் கோபத்தை அதிகமாக்க வேண்டாமேன்னு அமைதியா இருந்தா… என்னையவே மிரட்டுறான்!” என்றவர் மேலும் “சொல்லு ஷர்வா! எதுக்கு உனக்கு இன்னைக்கு இத்தனை கோபம்? வெளியே போன இடத்தில் என்ன நடந்தது?” என்று விசாரித்தார்.

தன் அன்னைச் பேச ஆரம்பித்ததும் கொஞ்சம் கோபம் தணிந்தவன் முகம் அவர் கடைசியாகக் கேட்ட கேள்வியில் அனலாக மாறியது.

“ஹ்ம்ம்…!” என்று தன் அம்மாவை தீர்க்கமாக ஒரு பார்வைப் பார்த்தவன் சற்று முன் நடந்ததைச் சொன்னான்.

மகன் சொன்ன விஷயத்தில் தானும் இறுகி போன சந்திரா “இப்ப அந்தப் பையன் வீட்டுக்குத் தான் போறீயா?” என்று அமைதியாகக் கேட்டார் மகனைப் பற்றி நன்கு அறிந்தவராக.

“ம்ம்…!” என்று அவன் தலையசைக்க,

“ஓ…! சரி செய்…!” என்றவர் குரல் இறுகி இருக்க, அதற்கு மேல் எதுவும் கேட்காமல் “சாப்பிடு…!” எனச் சொல்லி பரிமாற ஆரம்பித்தார். அவன் அங்கே போய் என்ன செய்வான் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் அவரின் அந்த இறுகல்.

சிறிது நேரம் அங்கே அமைதி குடிக்கொண்டது.

கீழே இரண்டு படுக்கை அறையும், ஹாலும், சமயலறையும், மாடியில் ஒரே ஒரு படுக்கை அறையும் என இருக்கும் அந்த வீட்டில் ஷர்வஜித், சந்திரா இருவர் மட்டுமே இருக்கின்றார்கள்.

அவ்வீடு ஷர்வஜித்தின் தந்தை சுகுமாரன் இருக்கும் போது கட்டியது. செய்து கொண்டிருந்த தொழிலில் ஓரளவு வளர்ச்சி அடைந்து வந்த காலத்தில் ஆசை ஆசையாய் கட்டிய வீட்டில் சில ஆண்டுகள் மட்டுமே அவரால் வசிக்க முடிந்தது.

இன்னும் முன்னேறிக் காட்டவேண்டும் என்ற உத்வேகத்துடன் சுகுமாரன் இருந்த போது, உன் ஆயுட்காலம் அவ்வளவு தான் என்பது போல, ஷர்வஜித் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, அவர்கள் குடும்பத்தில் விழுந்த ஒரு பெரிய இடியால் அக்குடும்பமே நிலைகுலைய… அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி தாங்காமல் மரணத்தைத் தழுவி இருந்தார்.

தங்களுக்கு ஏற்பட்ட அப்பெரிய இழப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு, மிகவும் துவண்டு போன தாயையும் தேற்றி, தன் படிப்பையும் வைராக்கியமாக விடாமல் படித்து, ஐபிஸ் முதல் முறையிலேயே வெற்றிப் பெற்றான் ஷர்வஜித்.

அவன் தந்தை சுகுமாரன் சிறிய அளவில் சொந்தமாகக் கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருந்தார். நன்றாக ஓடிக் கொண்டிருந்த தொழில். எதிர்பாராத அவரின் மறைவிற்குப் பின்னான நாட்களில், போலீஸ் ஆக வேண்டும் என்ற எண்ணத்தினால் மேற்கொண்டு அத்தொழிலை நடத்தாமல் அதை விற்றப் பணத்திலும், ஏற்கனவே தந்தை கணிசமாகச் சேமித்து வைத்திருந்த பணம், என்று எல்லாம் சேர்த்து வங்கியில் போட்டு தேவைக்குப் பயன்படுத்திக் கொண்டு தன் படிப்பை முடித்தான்.

வேலையில் சேர்ந்த இந்த நான்கு வருடமாகத் தன் வேலையில் ஒரு நல்ல பெயரை எடுத்திருந்தான். கேஸ் அவன் கையில் கிடைத்துவிட்டால் அதை வெற்றிகரமாக முடித்துவிடும் வல்லமைப் பெற்றவன். எதிரிகளின் பார்வைக்கு எதிரி அவன்.

அவன் தயவு தாட்சிண்யம் அற்றவனோ என்று நினைக்க வைப்பதாகத் தான் அவனின் சில செயல்கள் இருக்கும். சிலர் அவன் கையில் மாட்டிவிட்டால் திரும்ப அவனிடம் மாட்டக் கூடாது என்றே நினைக்கும் அளவிற்கு அவனின் நடவடிக்கை இருக்கும்.

இப்பொழுது உணவு உண்டுவிட்டு கிளம்பியவன், நேராக அந்த இளைஞன் வீட்டிற்குத் தான் சென்றான். இந்த இடைப்பட்ட நேரத்திற்குள் அவனின் வீட்டிற்கு ஏற்கனவே ஒரு கான்ஸ்டபிளை அனுப்பி வைத்திருந்தான்.

கான்ஸ்டபிள் வீட்டிற்கு வந்ததிலேயே பயந்திருந்த அந்த இளைஞனின் பெற்றோர் ஒரு பெரிய அதிகாரியும் வரவும் “வாங்க சார்… உட்காருங்க…!” எனப் பயத்துடனே வரவேற்றனர்.

ஷர்வஜித் அந்த வீட்டிற்குள் நுழையும் போதே தன் பார்வையால் வீட்டையும், அங்கே இருந்தவர்களையும் அளவெடுத்தான்.

அது ஒரு நடுத்தரமான குடும்பம் தான். ‘அந்த இளைஞனின் பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்பவர்கள்’ என்ற தகவல் அதற்குள் அவனின் காதிற்கு வந்திருந்தது.

வீட்டைச் சுற்றி பார்த்தவனின் பார்வையில் அந்த இளைஞன் படுக்கையறை வாசல் மறைவில் நின்று கொண்டிருந்தது தெரிந்தது.

வீட்டிற்குள் நுழைந்ததில் இருந்து எதுவும் பேசாமல் அமர்த்தலாகக் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான் ஷர்வஜித்.

அமர்ந்தவன் எதுவும் பேசாமல் இருக்க, அந்த இளைஞனின் அப்பாவே பேச்சை ஆரம்பித்தார். “சார், கான்ஸ்டபிள் சார் எங்க பையன் செய்த காரியத்தைச் சொன்னார். இவன் இப்படியெல்லாம் செய்வான்னு எங்களுக்குத் தெரியாது சார்…” மகனை திரும்பி பார்த்து முறைத்துக் கொண்டே சொன்னவர்,

“நாங்க இரண்டு பேருமே வேலைக்குப் போறதுல இவனை சரியா கவனிக்காம விட்டுட்டோம் போல. இனிமே நாங்க அவனைக் கண்டிச்சு வைக்கிறோம் சார். இனி நான் அடிக்கிற அடில தன்னால சரி ஆகிருவான் சார். ஸ்டேசன் அது, இது வேணாம் விட்டுருங்க சார்…” எனக் கெஞ்சலாகக் கேட்டார்.

அவர் பேசியதை எல்லாம் அமைதியாகக் கேட்டவன் அவர் பேசியதற்கு முகத்தில் எந்தப் பிரதிபலிப்பும் காட்டாமல் அமைதியான குரலில் “கான்ஸ்டபிள்…!” எனக் குரல் கொடுத்து அழைத்தான். ஷர்வா வீட்டிற்குள் வந்ததும் வாசலில் போய் நின்றிருந்த கான்ஸ்டபிள் வேகமாக அவனின் அருகில் வந்து நின்றார்.

அவரிடம் கண்களாலேயே ஏதோ அவன் சொல்ல அவர் சென்று அந்தப் பையனின் அம்மாவின் அருகில் சென்று “கிளம்பும்மா ஸ்டேஷனுக்கு…!” என அதட்டலாக அழைத்தார்.

அவர் அப்படிச் சொன்னதும் அந்த அம்மாள் மிரண்டு ஒரு அடி பின்னால் நகர, அந்த வீட்டுத் தலைவர் அதிர்ந்து தன் மனைவியை மறைத்து நின்றபடி “என்ன சார்? என்ன சொல்றீங்க? இவளை எதுக்கு ஸ்டேஷன் கூப்பிடுறீங்க?” என அதிர்ந்து போய்க் கேட்டவர், ஷர்வஜித்தின் புறம் திரும்பி “என்ன சார் இதெல்லாம்?” என்று கேட்டார்.

ஷர்வஜித் இவர்கள் புறம் திரும்பவே இல்லை. அவனின் பார்வையெல்லாம் அறையில் ஒளிந்திருந்த அந்த இளைஞன் மீதே இருந்தது.

உள்ளே பதுங்கி இருந்தவன் தன் அம்மாவை அழைத்ததில் அரண்டு தான் போனான்.

அந்த இளைஞன் முதலில் எல்லாம் தவறான வழியில் சென்றவன் இல்லை. கல்லூரியில் ஏற்பட்ட சில துடுக்குத்தனமான நண்பர்களின் வழிகாட்டுதலில் ஒரு சில மாதங்களாக இப்படி மாறிப் போனவன்.

அன்று கூட அந்த நண்பர்களுடன் சுற்றிக் கொண்டிருந்த பொழுது, ஒரு நண்பன் உசுப்பேற்றி அந்தப் பெண்ணிடம் வம்பிழுக்கச் சொன்னான். அவன் தயங்கிய போது “இவன் சரியான பயந்தாங்கொள்ளி…” என இன்னொரு நண்பனிடம் சொல்லி சிரிக்கவும் வீராப்பாகப் பெண்ணிடம் வம்பிழுக்க வந்து விட்டான்.

அதோடு போதையும் அவனுக்குத் தவறான வழி காட்ட, முட்டாள் தனமான செயலைச் செய்து விட்டான். அப்பொழுது தன்னை அறைந்தவன் போலீஸ்காரன் என்று தெரியாததால் சிறிது அசால்ட்டாகவே இருந்தான். ஆனால் தான் வீடு வந்து சேர்ந்த சிறிது நேரத்தில் கான்ஸ்டபிளும் வரவும் தான், தான் விபரீதத்தில் சிக்கி கொண்டது புரிந்தது.

காலையில் தன்னைத் தூண்டி விட்ட நண்பர்கள் தான் அடி வாங்கியதை ஒளிந்திருந்து பார்த்து ஓடிப்போனதையும் கண்டவன் புத்தியில் தான் செய்தது தவறான செயல் என இப்போது நன்கு உரைத்தது.

அதுவும் தான் செய்த தப்பிற்குத் தன் அன்னையைக் காவல் நிலையத்துக்கு அழைக்கவும், அரண்டவன் கால்கள் தன்னாலேயே வரவேற்பறையை நோக்கி நகர ஆரம்பித்தது.

தன் அம்மாவின் அருகில் வந்தவன் “சார் நான் தானே தப்புச் செய்தேன்? என்னை ஸ்டேஷன் கூட்டிட்டுப் போங்க. என் அம்மாவை ஏன் கூப்பிடுறீங்க?” எனக் குரல் நடுங்க கேட்டான்.

அவன் பேசியதை ஷர்வஜித் கண்டு கொள்ளவே இல்லை. இப்போது தன் பார்வையைக் கான்ஸ்டபிள் மேல் வைத்தான்.

அவர் அதனைப் புரிந்து கொண்டு “அதெல்லாம் ஸ்டேஷன் வந்து பேசிக்கோங்க. நீ கிளம்பும்மா…!” என்றார் மீண்டும்.

அவரின் அதிகார குரலில் அந்தக் குடும்பமே மிரண்டது. அசையாமல் அமர்ந்திருந்த ஷர்வஜித்தின் அருகில் ஓடி வந்த அந்த இளைஞன், “சார்… சார் பிளீஸ் சார்… எங்க அம்மாவை விட்டுருங்க சார். இனி எந்தப் பொண்ணுக்கிட்டேயும் தப்பா நடந்துக்க மாட்டேன். எங்க அம்மா பாவம் சார். நான் தான் சார் கெட்ட உபதேசம் செய்த நண்பர்கள் கூடச் சேர்ந்து அப்படிச் செய்துட்டேன். அவனுங்க என்னைக் கேலி பண்ணவும் ஏதோ வேகத்தில் அந்தப் பொண்ணுக்கிட்ட அப்படி நடந்துக்கிட்டேன். தப்பு தான் சார். எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்க. எங்க அம்மாவை இதில் இழுக்காதீங்க சார்…” என்று தொடர்ந்து கெஞ்சினான்.

அவன் கெஞ்சியதை எல்லாம் அமர்த்தலாகக் காதில் வாங்கிய ஷர்வஜித் “உன் பெயர் என்ன?” என்று நிதானமாகக் கேட்டான்.

“அரவிந்த் சார்…”

“ஓகே… சொல்லு அரவிந்த். இப்ப உன் பிரண்ட் தூண்டி விட்டான்னு ஒரு பொண்ணு கையைப் பிடிச்சு தகராறு செய்த சரியா?” என அவனைப் பார்த்துக் கேட்டு விட்டு நிறுத்த, அவன் தலை குனிந்து நின்றான்.

“சரி… ஒரு வேளை உனக்குச் சாகுற அளவுக்குத் துணிச்சல் இல்ல. இவன் அதுக்கு எல்லாம் லாயக்கு இல்லை. உன்னைப் பயந்தாங்கொள்ளின்னு சொல்லிருந்தா என்ன செய்துருப்ப? இந்நேரம் செத்துருப்பியா? எனக் குரலில் கடினம் மிகக் கேட்டான்.

அவன் அப்படிக் கேட்டதும் ‘இதற்கு என்ன பதில் சொல்வது?’ எனத் தெரியாமல் திருத் திருவென முழித்தான்.

அவன் முழியில் அவனின் எண்ணத்தை அறிந்து கொண்ட ஷர்வா “சோ….! நீ செத்துருக்க மாட்ட… சரியா? எனக் கேட்டான்.

அவன் தயக்கத்துடன் ‘ஆமாம்’ என்பது போலத் தலையசைக்க…

“உன் உயிர்னா மட்டும் அடுத்தவன் பேச்சைக் கேட்டு நடக்க மாட்ட. அப்ப மட்டும் உனக்கு வீரம் வராது. ஆனா அடுத்த வீட்டு பொண்ணு மானத்தில் கை வைக்க மட்டும் உனக்குத் துள்ளிக்கிட்டு வருதோ வீரம்?” என்று கடித்த பற்களுக்கிட்டேயே வார்த்தைகளைத் துப்பினான்.

அவனின் கடுமையில் எதிரே இருந்தவனின் உடலில் ஒரு நடுக்கம் ஓடி மறைந்தது.

“இப்ப எதுக்கு உங்க அம்மாவை ஸ்டேஷனுக்குக் கூப்பிட்டதும் அப்படிப் பதறித் துடிச்சுக்கிட்டு என்கிட்ட கெஞ்சின?” என அரவிந்தைக் கூர்மையாகப் பார்த்துக் கேட்டான்.

அவன் அப்படிக் கேட்டதும் தன் மனதில் நினைத்ததை ‘இவனிடம் என்னவென்று சொல்வது?’ என நினைத்துத் தலையைக் குனிந்து கொண்டான்.

அவன் அப்படி நிற்பதைப் பார்த்த ஷர்வஜித் “சார் எங்களைப் பத்தி ரொம்ப உயர்வா நினைச்சீங்க போல?” என்று நக்கலாகச் சிரித்தபடி கேட்டான்.

அதில் மேலும் தலை குனிந்த அரவிந்த், “அது சார்…” என்று இழுத்தபடி ஏதோ பேசப் போனான்.

அவனைப் போதும் என்பது போலக் கை காட்டி நிறுத்திய ஷர்வா “மட்டமா மாறிக்கிட்டு இருக்குற உன் புத்தி மட்டமா தான் எதையும் நினைச்சிருக்கும். அதை நீ ஒன்னும் விளக்க வேண்டாம்” எனக் கடுமையாகச் சொன்னான்.

அவர்கள் இருவரும் பேசுவதையும், மகன் எண்ணம் போன போக்கையும் உணர்ந்த அவனின் பெற்றோர் வேதனையுடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர்.

“ஏன் அரவிந்த்? உங்க அம்மாவை நாங்க ஸ்டேஷன் கூட்டிட்டுப் போய் அவமானப் படுத்திருவோம்னு தானே அப்படித் துடிச்ச? உங்க அம்மாவும் ஒரு பொண்ணு தானே? அந்தப் பொண்ணைத் துரத்திட்டுப் போனீயே… இப்ப தான் சில தறுதலைங்க கிழவிங்களைக் கூட விட்டு வைக்கிறது இல்லையே.‌‌.. அது போல உன் அம்மாகிட்ட யாரும் அப்படிச் செய்திருந்தா என்னடா பண்ணிருப்ப?” என்று கடும் கோபத்துடன் கேட்டான்.

அவன் அப்படிக் கேட்டதும் அரவிந்த் தன் அம்மாவை திரும்பி பார்த்தான். அவர் கண்களில் கண்ணீர் வழிய தன் மகனின் நடத்தையில் குறுகி நின்றிருந்தவர், ஷர்வா கடைசியாகக் கேட்ட கேள்வியில் தன் மகனின் முகத்தைக் கூர்ந்துப் பார்த்தார்.

தன் அன்னையின் கண்களைச் சந்தித்தவன் “எங்க அம்மாகிட்ட அப்படி யாரும் நடந்துக்கிட்டா அடிச்சி கொன்னுருவேன் சார்…” என்றான் கோபமாக.

“ஓ…!” என்று ஆச்சரியமாக விழி விரித்த ஷர்வா “அப்போ உன் அம்மாவோட மானம் அவ்வளவு முக்கியம் உனக்கு? ஹ்ம்ம்… சரிதான்…!” என இகழ்ச்சியாகச் சிரித்தவன்,

“அப்ப மத்த பொண்ணுங்க மானம்? எப்படிச் சார்?” என இமையை உயர்த்திக் கேட்டான்.

“தப்புத் தான் சார். என் பெரும் தப்புத் தான். கெட்ட நண்பர்கள் சகவாசம் என்னை இப்படி ஆக்கிருச்சு. இனி எந்தப் பெண்ணையும் தப்பான பார்வைக் கூடப் பார்க்க மாட்டேன். எங்க அம்மா பத்தி இனி பேசாதீங்க சார். ப்ளீஸ்…” என்று கெஞ்சிக் கேட்டான்.

அவனின் கெஞ்சலில் சிறிது தணிந்த ஷர்வா “அப்போ இனி நீ தப்புப் பண்ணமாட்டனு நம்பலாமா? என்று கேட்டான்.

“இனி பண்ணவே மாட்டேன் சார்” என்று உறுதியாக அரவிந்த் சொல்ல…

“ஓகே… நீ இவ்வளவு உறுதிக் கொடுக்கிறதால நம்பி இப்ப கிளம்புறேன். ஒரு வேளை நீ மாறலைன்னு எதுவும் தெரிஞ்சது… இப்படி வந்து இங்க பேசிட்டு இருக்க மாட்டேன். செயலில் காட்டுவேன். அப்ப கெஞ்சினாலும் என்கிட்ட வேலை நடக்காது…” என்று மிரட்டலாகச் சொன்னவன்,

“அப்புறம் அரவிந்த், நம்ம புத்தியை மழுங்கடிக்கிற எந்த ஒரு கெட்ட சவகாசமே இப்படித் தான் பெரிய சிக்கலில் கொண்டு வந்து மாட்டிவிடும். அதனால தேவையில்லாத உன் பழக்கத்தை விடப் பாரு…” என்றவன் “என்ன நான் சொன்னது புரியுதா?” எனக் கேட்டான்.

கெட்ட நண்பர்களோடு சேர்ந்து சிகரெட், மது பழக்கம் பற்றியும் தான் சொல்கிறான் எனப் புரிந்தவன் “இனி அந்த மாதிரி எந்தத் தப்பும் செய்ய மாட்டேன் சார்…” என்றான்.

‎ “நல்லது…!” என்ற ஷர்வா கான்ஸ்டபிளிடம் “இவன் மேல ஒரு கண்ணு வச்சுக்கோங்க வேலவன்…” என்று சொல்லி விட்டு அவர் ‘சரி’ என்று சொன்னதும், அரவிந்தின் பெற்றோரிடம் திரும்பி “இரண்டு பேரும் வேலைக்குப் போங்க தப்பில்லை. ஆனா மகன் சரியா தான் இருக்கானான்னும் கண்காணிங்க. அவன் கிட்ட சொன்னது தான் உங்கக்கிட்டேயும்… இனி அவன் எதுவும் தப்பு செய்தா, நான் பேசிக்கிட்டு மட்டும் இருக்க மாட்டேன்…” என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டு எழுந்தான்.

“இனி தப்பான வழிக்கு எங்க பிள்ளையைப் போக விட மாட்டோம் சார். கவனமா இருப்போம்…” என்று அவர்கள் சொல்ல…

“ஹ்ம்ம்…” என்று கேட்டுக் கொண்டவன், வெளியே செல்ல திரும்பினான்.வாசலில் கால் வைக்கப் போனவன் மறுபடியும் உள் பக்கம் திரும்பி அழுத கண்களைத் துடைத்துக் கொண்டிருந்த அரவிந்தின் அம்மாவை பார்த்து “ஸாரி மேடம்…” என்று நிதானமாகச் சொன்னவன் அந்த வீட்டில் இருந்து நிமிர்ந்த நடையுடன் வெளியேறினான் ஷர்வஜித்.