பனியில் உறைந்த சூரியனே – 16

அத்தியாயம் – 16

அந்தப் பெரிய வீட்டின் வரவேற்பறையில் கோபத்துடன் மகளை முறைத்துக் கொண்டு கருணாகரன் அமர்ந்திருக்க, அவரின் எதிரே தேவா அமைதியாகத் தங்கையைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான்.

விதர்ஷணா ஒரு ஒற்றைச் சோபாவில் காலை தூக்கி வைத்துக் கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

“நீயே கேளு தேவா. உன் தங்கச்சிக்கு இப்பயே காதல் கேட்குது. சரி தான் அப்படிக் காதலிக்க ஆசைப்பட்டவளுக்கு நம்மளை போல உயர்ந்த இடத்தில் வேறு ஆளு கிடைக்கலையா என்ன? அப்படி ஏதாவதுனா நல்லா விசாரிச்சுட்டுப் போனா போகுதுன்னு கல்யாணம் பண்ணி வச்சுருப்பேன்.

ஆனா போயும் போயும் அந்தப் போலீஸ்காரன் மேல ஆசை வச்சுருக்கா. அவனே சரியான தலைக்கனம் பிடிச்ச பய. அவனெல்லாம் என் மருமகனா வர கொஞ்சமும் தகுதியில்லாதவன்…” என்றவரின் குரலில் கோபம் அதிகம் இருக்க, அவளின் ஜித்தாவை பற்றிப் பேசியதை தாங்க முடியாமல் இறுகி போய் அமர்ந்திருந்தாள் விதர்ஷணா.

அவளின் கண்கள் கலங்கி இருந்தது. ‘என் ஜித்தாவை இப்படிக் குறைவாகப் பேசாதீர்கள்!’ என்று சொல்ல அவளின் நாவு துடித்தது. ஆனால் தான் பேச, பேச தந்தை இன்னும் ஜித்தாவை மட்டம் தட்டி பேசுவார் என்று இந்த இரண்டு நாட்களில் நன்றாகவே அறிந்திருந்தாள்.

அன்று ‘அவனைப் போயா பார்க்க போகிறாய்?’ என்று கோபத்துடன் கத்தியவர், மகளைத் தொடர்ந்து திட்ட ஆரம்பித்தார்.

“என் பொண்ணு நீ! உனக்குக் கொஞ்சமாவது நம்ம குடும்ப மரியாதை பற்றி அக்கறை இருக்கா? நம்ம மரியாதையைக் குழி தோண்டி புதைக்கிறது போல, ஒரு பொண்ணா இருந்துக்கிட்டு ஒரு ஆம்பிளையைத் தேடி போய்ப் பார்த்துட்டு வர்றேன்னு சொல்ற. காசு, பணம் சம்பாதிக்க ஓட்டமா ஓடினாலும் அப்பா வளர்த்த பிள்ளை அப்படித் தான் இருக்கும்னு தப்பான பேச்சு வந்திற கூடாதுனு உன்னைக் கவனமா தானே வளர்த்தேன்? உன் சித்தியும், உனக்கு எவ்வளவு எடுத்து சொல்லி வளர்த்தா. ஆனா நீ இப்போ என்ன காரியம் செய்துகிட்டு இருக்கிற?” என்றவரின் பேச்சை அமைதியாக நின்று கேட்டுக் கொண்டாள் விதர்ஷணா.

அவளின் அமைதியை கண்டு “பதில் சொல்லு விதர்ஷணா…!” என அதட்டினார்.

“நம்ம குடும்பக் கௌரவம் குறையுற அளவுக்கு நான் எந்தத் தப்பும் செய்யலைப்பா…” என்றாள் அமைதியாக.

“என்ன சொன்ன? எந்தத் தப்பும் செய்யலையா? அப்போ இப்போ நீயா அவனைப் போய்ப் பார்த்துட்டு வந்ததுக்கு என்ன அர்த்தம்னு நீ நினைக்கிற?”

“என் மனசுக்குப் பிடிச்சவரை பார்க்க போனதில் எனக்கு எந்தக் கௌரவக் குறைச்சலாகவும் தெரியலைப்பா…” என்றவளின் குரலில் நிதானம் அதிகமாக இருக்க, அவளின் நிதானமும், அமைதியான பேச்சும் கருணாகரனை கொதிநிலைக்குத் தள்ளியது.

“மனசுக்கு பிடிச்சவனா? அவனெல்லாம் ஒரு ஆளுன்னு அவனைப் போய் மனசுக்குப் பிடிச்சவன்னு சொல்லுற. அவனைப் பற்றி என்ன தெரியும் உனக்கு? அவன் குடும்பம் எப்படிப்பட்டது? அவன் குணம் எப்படிப்பட்டதுன்னு ஏதாவது தெரியுமா உனக்கு?

சரி! அது எல்லாத்தையும் விடு! அவனைக் கண்டாலே எனக்கு ஆகாது. என் கௌரவத்தையே குழி தோண்டி புதைக்க இருந்தவன் அவன். அவனோட சூழ்ச்சியில் இருந்து நான் என் கௌரவத்தைக் காப்பாத்திக்கவே என்னைத் தலையால் தண்ணி குடிக்க வச்சவன். அவனைப் போய்ப் பிடிச்சுருக்குன்னு சொல்ற?” என்று நிலையில்லாமல் மகளின் பேச்சை தாங்க முடியாமல் அங்கும், இங்கும் நடந்துக்கொண்டே பதற்றத்துடன் பேசினார்.

அவள் நிறைய நாட்களாகத் தெரிந்து கொள்ளத் துடித்த விஷயத்தைத் தந்தையே ஆரம்பிக்கவும், “அப்படி என்னப்பா செய்தார்? என்னன்னு எனக்கும் சொல்லுங்களேன். நானும் தெரிஞ்சுக்கிறேன்…” என்று ஆர்வமாகக் கேட்டவளை பார்த்து,

“அதை உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை…” என்று கடுப்பாக உரைத்தார்.

“என்னப்பா இது? என்கிட்ட மறைக்கிற அளவுக்கு அப்படி என்ன இருக்கு உங்க இரண்டு பேருக்குள்ள? நீங்கள் எப்படி எனக்கு நியாயமான ஆளோ, அதே போலத் தான் ஜித்தாவும் நியாயமா நடக்கிறவர்னு நினைக்கிறேன். அப்படி இருக்கும் போது உங்க இரண்டு பேருக்கிடையில் அப்படி என்ன மனஸ்தாபம் வந்திருக்க முடியும்?” என்று புரியாமல் கேட்டாள்.

“அதைப் பற்றிக் கேட்காதேனு சொன்னேன். வர, வர உனக்குத் தைரியம் அதிகமாகிருச்சு. நான் அவனை நீ பார்க்க போனது தப்புன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன். நீ நியாயஸ்தர், அது, இதுன்னு பேசிட்டு இருக்கிற…” என்று மகளுக்குப் பதில் சொல்ல பிடிக்காமல் திட்டினார்.

“நீங்க சொல்லி கொடுத்த தைரியம் தானேப்பா?” என்று விதர்ஷணா தன் நிதானத்தைக் கைவிடாமல் சொல்ல,

“என்னைக்கு இருந்தாலும் நீ நம்ம நிர்வாகம் பார்க்கணும்னு சொல்லிக் கொடுத்த தைரியத்தை நீ எதுக்கு எல்லாம் யூஸ் பண்ற?” என்று கருணாகரனும் விடாமல் குதிக்க,

“நிர்வாகத்துக்கே தைரியம் தேவைப்படும் போது, இது என் வாழ்க்கைப்பா. என்னோட வாழ்க்கைக்கு இந்தத் தைரியம் தேவைதானேபா? அதுவும் நாளைக்குப் போலீஸ்காரன் மனைவியாகப் போறேன். அப்போ எனக்குத் தைரியம் ரொம்பவே முக்கியம் தானேப்பா?” என்று பொறுமையாகப் பேசியவளின் வார்த்தைகளில் போலீஸ்காரன் மனைவி என்றதில் வெகுண்டு “விதர்ஷணா…!” என்று அதட்டிய படி சட்டென அவளை அடிக்கக் கையை ஓங்கி இருந்தார் கருணாகரன்.

இதுவரை அடித்திராத தந்தை இன்றும் அவ்வாறு செய்ய மாட்டார் என்ற எண்ணத்தில் பதிலுக்குப் பதில் பேசிக்கொண்டிருந்த விதர்ஷணா தந்தை அடிக்கக் கை ஓங்கவும், அதிர்ந்து இரண்டு அடிகள் பின்னால் நகர்ந்து நின்றாள்.

மகளின் அதிர்ச்சியைப் பார்த்துப் பட்டெனத் தன் கைகளை இறக்கிய கருணாகரன் “போ இங்கிருந்து! போயிரு! இனி ஒரு முறை அந்தப் போலீஸ்காரன் பற்றி என்கிட்ட பேசினா ஓங்கின என்னோட கை உன் கன்னத்தில் இறங்கிரும்…” என்ற தந்தையை இன்னும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு நின்றாள்.

“போன்னு சொன்னேன்…” என்று கத்தியவரை கண்டு வேகமாகத் தன் அறைக்குள் சென்று அடைந்தாள் விதர்ஷணா.

உள்ளே சென்று கட்டிலில் அமர்ந்தவளுக்குச் சர்வமும் ஆடியது போல உடல் நடுங்கியது. என்றும் தந்தையிடம் பதிலுக்குப் பதில் பேசியிறாதவள், இன்று பேச நேர்ந்தது மட்டும் இல்லாமல், அடியும் வாங்க இருந்தாள் என்பதில் அவளின் உடலும், மனமும் ஆட்டம் கண்டது போல இருந்தது.

அதன் பின்பு வந்த இரண்டு நாட்களும் மகளின் பேச்சை நினைத்து, நினைத்து ஷர்வஜித்தின் மீதான வெறுப்பான வார்த்தைகளை உமிழ்ந்தார் கருணாகரன். தன்னை அவனைப் பற்றிப் பேச கூடாது என்று சொன்ன தந்தை, திரும்பத் திரும்ப அவனைத் திட்டுவது போலப் பேசுவதைக் கேட்டு பொறுக்க முடியாமல், அவரை ‘அப்படிப் பேசாதீங்கபா’ என்று சொல்ல, அதற்கும் சேர்த்து திட்டினார் அவர்.

இன்றும் தேவாவிடம் சொல்வது போலத் திட்டும் தந்தையின் பேச்சை கேட்க முடியாமல் திருப்பிப் பேச துடித்த நாவை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள் விதர்ஷணா.

ஒரு வாரமாக வெளியூர் சென்றிருந்த தேவா முதல் நாள் இரவு தான் ஊர் திரும்பியிருந்தான். அவன் வந்ததும், வீட்டின் மூத்த மகனுக்கு விஷயம் தெரிய வேண்டும் என்பதால், அவனை இங்கே அழைத்திருந்தார் கருணாகரன்.

“உன் தங்கச்சிக்கு புத்திமதி சொல்லு தேவா! எனக்கு அவன் பெயரைக் கேட்டாலே அலர்ஜியா இருக்கு. அவன்தான் இந்த வீட்டு மாப்பிள்ளைன்னு என்னால கொஞ்சம் கூடக் கற்பனை பண்ணிப் பார்க்க முடியாது…” என்ற கருணாகரனை பார்த்து “நீங்க டென்சன் ஆகாதீங்க பெரியப்பா. நான் தர்ஷிகிட்ட பேசுறேன்…” என்றான்.

“முதலில் அதைச் செய்! இன்னைக்குக் காலைல காலேஜில் ஒரு முக்கியமான மீட்டிங் அரேஞ்ச் பண்ணி இருக்கேன். அதுக்கு நான் போயாகணும். நீ பேசு! அப்புறமும் இவள் சொன்னதையே திருப்பிச் சொன்னா இனி என்னால் பொறுக்க முடியாது. இவளோட காலேஜ் படிப்பை நிறுத்திட்டு பேசாம நல்ல இடமா பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சுடுவோம்…” என்றார்.

அவர் சொன்னதைக் கேட்டு தந்தையை விதர்ஷணா திகைத்துப் பார்க்க, “அதெல்லாம் வேணாம் பெரியப்பா. தர்ஷி நம்ம பேச்சைக் கேட்பா. சொந்த காலேஜ் வச்சிக்கிட்டு நம்ம பெண்ணைக் காலேஜ் விட்டு நிறுத்தினால் தேவையில்லாத பேச்சு தான் வரும். பொறுமையா இருங்க. பார்த்துக்கலாம்…” என்று அவரைச் சமாதானம் செய்தான்.

“ஆமாம்! நீ சொல்றது சரிதான். அப்படியும் பேச்சு வரும். பார்! உன் தங்கச்சி எப்படியெல்லாம் நமக்கு டென்ஷன் தருகிறாள்…” என்று புலம்பியவரை தேற்றி கல்லூரிக்கு அவரைக் கிளம்ப வைத்தான் தேவா.

அவர் செல்லும் வரை அவரையே வெறித்துப் பார்த்த விதர்ஷணா அவர் சென்ற பின்னும் அந்தத் திசையையே விடாமல் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவளை பார்த்த தேவா “என்ன தர்ஷி இதெல்லாம்?” என்று கேட்டான்.

மெதுவாகத் தேவாவின் புறம் திரும்பிய விதர்ஷணா “அவர் தான் என் வாழ்க்கை ண்ணா…” என்று நிறுத்தி நிதானமாக அழுத்தி சொன்னாள்.

“தர்ஷி…” என்று அழைத்த தேவா மேலும் பேசும்முன் இடையிட்ட விதர்ஷணா “நீயும் அப்பாவைப் போல என்ன பேசினாலும், எப்படிப் பேசினாலும் என் பதில் ஒன்று தான் அண்ணா. அவர்தான்! அவர் மட்டும் தான் என் வாழ்க்கை! இந்த முடிவிலிருந்து நான் என் காலம் முழுவதும் மாற மாட்டேன். அதை ஞாபகம் வைத்துக் கொண்டு என்னிடம் எதுவா இருந்தாலும் பேசு…” என்றாள்.

தங்கையின் பேச்சில் தேவா அவளை வியந்து பார்த்தான். அவள் மிகவும் உறுதியாக இருப்பதாகத் தோன்றியது. ஆனாலும் கருணாகரனையும் அவன் பார்க்க வேண்டியது இருந்ததால் அவளிடம் பேச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டான்.

“உன் மனசு எனக்குப் புரியுது தர்ஷி. ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். அது மட்டும் கிளியர் பண்ணு…” என்றான்.

“என்ன அண்ணா? என்ன சந்தேகம்? கேளு சொல்றேன்…”

“அந்தப் போலீஸ்காரர் உன்னைக் காப்பாத்தி வீட்டில் கொண்டு வந்து விட்டாரே! அதனால தான் உனக்கு அவர் மேல் ஹீரோ வொர்க் ஷிப் வந்து, பிடிச்சிருக்குன்னு சொல்றியா?”

“இதே கேள்வியைத்தான் ஜித்தாவும் கேட்டார் ண்ணா. அவருக்குச் சொன்ன பதில் தான் உனக்கும் சொல்றேன். அவர் செய்தது கடமை. கடமைக்கும், காதலுக்கும் முடிச்சு போடுற அளவுக்கு உன் தங்கச்சி ஒன்னும் விவரம் தெரியாதவள் இல்லை. அவர் செய்தது கடமை என்று எனக்கு நல்லாவே தெரியும்…” என்றாள்.

“அவரும் இதையே தான் சொன்னார்னா, அப்போ அவர் கிட்ட நீ உன் மனசை சொல்லிட்டியா?” என்று கேட்டான்.

“ஹம்ம்…! ஆமாண்ணா சொல்லிட்டேன்…”

“அவர் என்ன சொன்னார்?” என்று தேவா கேட்டதும் சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.

“என்ன தர்ஷி? என்னாச்சு? அமைதியாகிட்ட?”

“அவருக்கு நான் சொன்னதில் விருப்பம் இல்லைண்ணா. இதெல்லாம் சரி வராது விட்டுவிடுன்னு சொன்னார். அவரிடமும் நான் இனி மாற மாட்டேன்னு சொல்லிவிட்டு வந்து விட்டேன்…” என்றாள்.

“என்ன சொல்ற தர்ஷி? அவரும் சரி வராதுன்னு சொல்லிட்டார்னு சொல்ற. அப்படி இருக்கும்போது நீ எந்த நம்பிக்கையில் அவர் தான் என் வாழ்க்கைன்னு சொல்ற?”என்று கேட்டான்.

“எனக்கு நம்பிக்கை இருக்கு அண்ணா. இன்னைக்கு இல்லனாலும் என்னைக்காவது என் மனசை புரிஞ்சிக்குவார். அதுவரை நான் அவருக்காக வெயிட் பண்ணுவேன். நாங்க ஒரு நாள் கணவன், மனைவியாகவும் ஆவோம் அண்ணா. நீயும் பார்க்கத்தான் போற…” என்று உறுதியாகச் சொன்னாள்.

“எனக்கு உன் பேச்சே புரியலை தர்ஷி. அவர் காப்பாத்தினதால் காதல் வரலைன்னு சொல்ற. அவர் இந்தக் காதல் சரிவராதுன்னு சொன்ன பிறகும் அவருக்காக வெயிட் பண்ணுவேன்னு சொல்ற. இதை எல்லாம் எந்த நம்பிக்கையில் நீ பேசுற? முதலில் அந்தப் போலீஸ்காரர் மேல உனக்கு விருப்பம் வர காரணம் என்னனு உனக்கே தெரியுமான்னு தெரியலை…” என்று தங்கையின் மனம் புரியாமல் யோசனையுடன் கேட்டான்.

“உனக்கு எத்தனை பிரண்ட்ஸ் இருக்காங்கணா?” என்று சம்பந்தம் இல்லாமல் கேள்வி கேட்டவளைப் பார்த்து, “இப்போ எதுக்கு இந்தக் கேள்வி தர்ஷி?” குழப்பத்துடன் கேட்டான்.

“சொல்லுண்ணா…” என்று திருப்பிக் கேட்டாள்.

“உனக்குத் தான் ஏற்கனவே தெரியுமே? ரொம்பக் குளோஸ் பிரண்ட்ஸ் ஒரு ஐந்து பேர் இருக்காங்க…”

“அவங்க எல்லாம் எப்படி, எங்க உனக்குப் பிரண்ட்ஸ் ஆனாங்க ண்ணா?”

“தர்ஷி, நாம என்ன பேசிட்டு இருக்கோம். நீ இப்போ சம்பந்தமே இல்லாம என்ன கேள்வி கேட்குற?”

“காரணமா தான் கேட்குறேன் அண்ணா. சொல்லு! அதில் இருந்தே உனக்கான பதிலையும் நான் சொல்றேன்…” என்றாள்.

“இரண்டு பேர் ஸ்கூல் பிரண்ட்ஸ். வேலைன்னு தனித் தனியா போயிட்டாலும் இன்னும் டச்ல தான் இருக்கோம். மூணு பேரு காலேஜ்ல இருந்து பிரண்ட்ஸ். அவங்க தானே இப்போ என் கம்பெனில எனக்கு அடுத்தப் பொறுப்பில் இருக்காங்க…” என்றான்.

“உன் ஸ்கூல்லயும் காலேஜ்லயும் இவங்க ஐந்து பேர் மட்டும் தான் உன் கூடப் படிச்சாங்களா ண்ணா?”

அவளின் விடாத கேள்வியில் “தர்ஷி…” என்று அழுத்தி அழைத்துத் தன் கோபத்தைக் காட்டினான்.

“கோபப்படாம சொல்லுண்ணா…” எனத் தன் பேச்சிலேயே கண்ணாக இருந்தாள் விதர்ஷணா.

“அது நிறையப் பேர் தான் இருந்தாங்க…”

“நிறையப் பேர்னா ஒரு வகுப்புக்கு கிட்டதட்ட நாற்பது பேர்னாலும் ஒரே கிளாஸ்ல தான் அந்த நாற்பது பேரும் படிச்சிருப்பீங்க. அத்தனை பேர் இருக்குற கிளாஸ்ல வெறும் இரண்டு பேரும், மூணு பேரும் மட்டும் உனக்கு ஏன்ணா பிரண்ட்ஸா ஆனாங்க?”

“என்ன தர்ஷி இது? அதுக்காகக் கிளாஸ்ல இருக்கிற எல்லார்கிட்டயுமா குளோசா பழக முடியும்? எனக்கு இவங்களோட தான் ஒத்து போச்சு. என் வேவ்லென்த்க்கு எனக்குச் செட்டாகிட்டாங்க…” என்றான்.

“அந்த வேவ்லென்த் எப்படி வருதுண்ணா? உன் கிளாஸ்ல அத்தனை பேர் இருந்தும் இவங்ககிட்ட மட்டும் ஏன் வந்துச்சுன்னு நினைக்கிறண்ணா?”

அதற்குத் தேவா பதில் சொல்லும் முன் “நானே சொல்றேன் அண்ணா இரு. அவங்க உன் பிரண்டாக எத்தனை விதமான காரணங்கள் நீ சொன்னாலும் அது நீயா உருவாக்கிய காரணங்கள் தான் அண்ணா…” என்றாள்.

தங்கையை யோசனையுடன் பார்த்த தேவா “நீ என்ன சொல்ல வர்ற தர்ஷி? எனக்கு அவங்களைப் பிடிச்சது. அவங்க பழகும் விதம், என்னோட மன உணர்வுகளோட ஒத்துப் போறது எல்லாம் சேர்ந்து தான் அவங்க என் பிரண்ட்ஸ் ஆனது. அதை எல்லாம் நானா உருவாக்கிய காரணம்னு நீ சொல்றியா?” என்று கேட்டான்.

“கண்டிப்பா நீயா உருவாக்கிய காரணங்கள் தான் அண்ணா. நம்ம குடும்ப ஆட்களைத் தாண்டி வெளியே நாம பல விதமான ஆட்களைப் பார்க்கிறோம். ஆனா அவங்க எல்லாருமே நமக்கு வேண்டியவங்க, பிரண்ட்ஸ்னு ஆகிடுறாங்களா என்ன? கண்டிப்பா இல்லை. சிலர் மட்டும், ரொம்பச் சிலர் மட்டும் நம்ம வாழ்க்கையில் ஒரு அங்கம் போல ஆகிடுறாங்க. அவங்க மட்டும் எப்படி அப்படி நமக்கு ஸ்பெஷல் ஆகுறாங்க?

அதுக்குக் காரணம் ‘ஒவ்வொரு மனிதனுக்கும் கடவுள் கொடுத்த உள் உணர்வு’ அந்த உள் உணர்வு தான் வேற்று மனிதர்களை நம்ம பிரண்டா, வாழ்க்கை துணையா நினைக்க வைக்குது. அந்த உள் உணர்வுக்கு ஏற்றது போல ஒருத்தரை பிடிக்க நாமா சொல்லிக்கிற காரணங்கள் தான் என் கருத்தோட ஒத்துப் போறான். எனக்கு அவனைப் பிடிச்சிருக்கு, அப்படிங்கிறது.

பிடிக்கிறதுக்கும், பிடிக்காததுக்கும் காரணம் எப்படி அண்ணா கிடைக்குது? நாமளா தேடி கண்டு பிடிக்கிறதால் தானே? கண்ணுக்கு, அறிவுக்குப் புலப்படாத நம்ம உள் உணர்வு தான் நம்மை வழி நடத்துது. அதன்படி நாமளா காரணங்கள் கற்பிச்சுக்கிறோமே தவிர அது தானா உண்டானது இல்லை.

அதே போலத் தான் என் உள் உணர்வு எனக்கு உணர்த்தியது ஜித்தா தான் என் வாழ்க்கைனு. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? முதல் முதலில் ஜித்தாவை என் பிரண்ட்ஸோட பார்த்த அன்னைக்கு எல்லாரும் விளையாட்டா அந்த ஆளு அழகா இருக்கான்னு சொல்லும் போது நான் மட்டும் என்ன சொன்னேன் தெரியுமா?” என்று கேட்டுப் பேச்சை நிறுத்த, அவளின் பேச்சையே ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்த தேவா ‘என்ன’ என்பது போலப் பார்த்தான்.

அண்ணாவிடம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வில் சில நொடி மௌனமாக இருந்தவள் பின்பு மெல்ல “என் ஆளுன்னு சொன்னேன். அது கண்டிப்பா நானா உணர்ந்து சொல்லலை. என் வாயில் இருந்து அந்த வார்த்தை தன்னால் வந்தது. சொன்ன பின்னால் தான் நான் என்ன சொன்னேன் என்றே எனக்கு உரைச்சது.

அதுக்கு முன்னாடி நான் அவரைப் பார்த்தது இல்லை, பேசியது இல்லை. ஆனா அந்த வார்த்தையை நான் எப்படி என்னை அறியாமல் சொன்னேன்னு எனக்கே தெரியல. அதுக்குப் பிறகு அவரை ஒவ்வொரு முறை பார்த்த போதும் நான் நானாக இல்லை. நானா யாரையும் தேடி போய்ப் பேசியிராதவள் அவரிடம் நானா போய்ப் பேசினேன்.

ஒவ்வொரு முறை பேசும் போதும் யாரோ ஒரு அந்நிய நபரிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு எனக்கு வரலை. எனக்கு உரிமையானவர்கிட்ட பேசுற உணர்வு தான் எனக்கு வந்துச்சு. என்னோட உள் உணர்வு தான் என்னை வழி நடத்துச்சு.

இப்போ நீ கேட்டியே எந்த நம்பிக்கையில் அவர் சரி வராதுன்னு சொன்ன பிறகும் காத்திருக்கப் போறேன்னு, அந்த நம்பிக்கைக்குக் காரணமும் என் உள் உணர்வு தான் அண்ணா. என் உணர்வு சொல்லுது நாங்க வாழ்க்கையில் ஒன்னு சேருவோம்னு. அதுக்குப் பல தடைகள் இருக்குனு எனக்கும் தெரியும். ஆனா எத்தனை தடைகள் வந்தாலும் அதையும் தாண்டி வருவேன்னு நம்பிக்கை இருக்கு…” என்றாள்.

பேசி முடித்தவள் தன் அண்ணனை பார்த்தாள். அவனோ விடாமல் தங்கையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். “என்ன அண்ணா? என்னை எதுக்கு இப்படிப் பார்க்கிற?” என்ற விதர்ஷணாவை பார்த்து,

“உன்னை இன்னும் குட்டி பொண்ணுனே நினைச்சுட்டு இருந்தேன். பெரியப்பா போன் பண்ணி நீ ஒருத்தரை விரும்புறதை பற்றிச் சொல்லவும், விவரம் புரியாம யாரோ ஒரு பையனை பார்த்து பிடிக்குது சொல்ற போல. எடுத்துச் சொன்னா புரிஞ்சுக்குவனு நினைச்சு தான் நான் வந்தேன். ஆனா நிஜமா உன்கிட்ட இவ்வளவு தெளிவை நான் எதிர் பார்க்கலை தர்ஷி. எனக்கே நீ உணர்வை பற்றிப் பாடம் எடுக்குற. என் குட்டி தங்கை இவ்வளவு பெரிய பொண்ணா ஆகிட்டாளானு ஆச்சரியமா இருக்கு…” என்றான்.

“அச்சோ…! போண்ணா! ஏதோ எனக்குத் தோணியதை சொன்னேன்…”

“இல்ல தர்ஷி. உன் இந்தத் தெளிவு எனக்குப் பிடிச்சிருக்கு. சரி அடுத்து என்ன பண்ண போற? ஷர்வஜித்தும் வேண்டாம்னு சொல்லியாச்சு. பெரியப்பாவுக்கு அவரைக் கண்டாலே ஆகலை. அப்படி இருக்கும் போது எப்படி இந்த விஷயத்தை எல்லாம் சமாளிக்கப் போற?” என்று கேட்டான்.

“நீ ஒன்னும் சொல்லையே ண்ணா?”

“நான் என்ன சொல்லணும்?”

“என்னண்ணா கேள்வி இது? நீ என்ன நினைக்கிறன்னு என்கிட்ட சொல்லவே இல்லையே? அதைச் சொல்லாம என்ன சொல்லணும்னு கேட்கிற?”

அவள் அப்படிக் கேட்டதும் தங்கையை அழுத்தமாகப் பார்த்தவன், “உன் காதலும், நீ காதலிக்கிறவரும் எனக்குப் பிடிக்கலைன்னு சொன்னா விட்டுருவியா?” என்று கேட்டான்.

அவன் கேள்வியில் திகைத்து பார்த்த விதர்ஷணா வேகமாகத் தலையை இல்லை என்பது போல ஆட்டி, “கண்டிப்பா விட மாட்டேன்ணா. அப்பாவோட சேர்த்து உனக்கும் புரிய வைக்கப் போராடுவேன்….” என்றாள்.

“இதோ நான் மறுப்பு சொன்னாலும் என்னைச் சம்மதிக்க வைக்கப் போராட போற. இதுக்கு எதுக்கு நான் முதலில் வேண்டாம்னு சொல்லிட்டு அப்புறம் சம்மதிக்கணும். நான் இப்பயே சம்மதிக்கிறேன்…” என்று தேவா சொல்லி முடிக்கும் முன் அவனின் எதிரே அமர்ந்திருந்த விதர்ஷணா வேகமாக அவன் அருகில் வந்து அவனின் கையைப் பிடித்துக் குலுக்கினாள்.

“ரொம்பத் தேங்க்ஸ் ணா. ரொம்ப ரொம்பத் தேங்க்ஸ். உன்னைச் சம்மதிக்க வைக்கவும் நான் போராடணுமோனு ரொம்பப் பயமா இருந்தது. ஏற்கனவே நான் மூணு பேரை சமாளிக்கணும். நீ வேற அப்ப அப்போ விடைச்சுகிட்டு திரிவ. உன்னை என்னனு சம்மதிக்க வைக்கன்னு உள்ளே நடுக்கமா தான் இருந்துச்சு. ஆனா நீ இவ்வளவு ஈஸியா சம்மதம் சொல்லுவன்னு நினைக்கவே இல்லை…” என்று அதிகச் சந்தோஷத்துடன் லேசாகக் கண் கலங்க சொன்னாள்.

அதைப் பார்த்த தேவா “ஹேய் வாலு…! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போராடுவேன்னு அவ்வளவு தைரியமா சொன்ன. இப்போ போய்க் கண் கலங்கிட்டு இருக்க? நான் உனக்காக மட்டும் சம்மதிக்கலை. அதையும் ஞாபகம் வச்சுக்கிட்டு சந்தோஷப்படு…” என்றான்.

தேவாவை விட்டு தள்ளி நின்று அவனின் முகத்தைப் பார்த்து “என்னண்ணா சொல்ற? வேற யாருக்காகச் சம்மதிச்ச?” என்று கேட்டாள்.

“எல்லாம் உன் ஜித்தாக்காகவும் தான். பார்க்கவும் நல்லா இருக்கார். பெண்கள் மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கார். போலீஸ்காரருக்கு இருக்கவேண்டிய மிடுக்கு இருந்தாலும், பழகும் விதமும் நல்லாத்தான் இருக்கு. அதோட ஆளும் நல்லா சுத்தம். லஞ்சம் அது, இதுன்னு கரை படாத ஆளுன்னு கேள்விப்பட்டேன். இந்தக் காலத்தில் எல்லாம் யாரு அப்படி இருக்கா? இந்த மாதிரி நல்ல மாப்பிள்ளை கிடைக்கிறது நல்ல விஷயம் தானே? அதுக்காகத்தான் சம்மதிக்கிறேன்…” என்றான்.

“ஐயோ…! சூப்பர்ணா உனக்கும் என் ஜித்தாவை பிடிச்சிருச்சா? என் ஜித்தாகிட்ட ஏதோ பவர் இருக்குண்ணா. அவரைப் பார்த்ததும் நமக்குப் பிடிச்சிருச்சே…” என்று துள்ளி குதிக்காத குறையாக மகிழ்ந்தாள்.

“ஆமா பவர் இருக்கு. பவர் ஸ்டார் பவர்…” என்று தேவா கிண்டலாகச் சொல்ல, “அண்ணா…!” என்று சிணுங்கினாள்.

அவளின் உச்சந்தலையில் கையை வைத்து தலையை ஆட்டியவன், “ஒரு நேரம் பெரிய மனுஷி மாதிரி விவரமா பேசுற. ஒரு நேரம் சின்னப் பிள்ளை போல விளையாடுற…” என்று செல்லமாக அவளைக் கடிந்தான்.

“வாழ்க்கையை எப்பவும் சீரியஸாவே கொண்டு போகக் கூடாதுண்ணா. கொஞ்சம் குறும்பாவும், ரிலாக்ஸாகவும் கொண்டு போகணும். அப்பத்தான் வாழ்க்கை சுவாரசியமா இருக்கும். எந்த நேரமும் கடுகடுன்னு இருந்தா வாழ்க்கை வறண்டு தான் இருக்கும்…” என்று தீவிரமாக விளக்கம் சொன்னவளை, “அவ்வையார் பாட்டி! போதும் நிறுத்துங்க. வியாக்கியானம் விதர்ஷணாவா மாறிராதீங்க…” என்று கேலி செய்தவன் தொடர்ந்து,

“ஆமா, ஏற்கனவே மூணு பேரை சமாளிக்கணும்னு சொன்ன. ஒருத்தர் ஷர்வஜித், இன்னொருத்தர் பெரியப்பா, இன்னும் ஒருத்தர் யாரு?” எனக் கேட்டான்.

“வேற யாரு? என் மாமியார் தான்…” என்றாள்.

“மாமியாரா…?” என்று தேவா ஆச்சரியமாகக் கேட்க,

“ஹ்ம்ம்… ஆமா, ஜித்தா அம்மா தான். அவங்ககிட்ட என் காதலை சொல்லிட்டேன். யோசிச்சு சொல்றேன்னு சொன்னாங்க. இன்னும் பதில் வரலை. அவங்க என்ன சொல்ல போறாங்களோனு பயமா இருக்கு…” என்றாள் சோகமாக.

அண்ணன் சம்மதம் சொன்ன சந்தோஷத்தில் இருந்தவள், அவனிடம் உரிமையாகச் சந்திராவிடம் இருந்து பதில் வரவில்லை என்ற வருத்தத்துடன் விதர்ஷணா சொல்ல, “என்ன காரியம் பண்ணியிருக்கத் தர்ஷி?” என்று கோபத்துடன் திட்டினான் தேவா.