பனியில் உறைந்த சூரியனே – 14

அத்தியாயம் – 14

வீட்டு வரவேற்பறையில் அமர்ந்திருந்த சந்திரா தொலைப்பேசியின் அழைப்பு மணி கேட்டு அதை எடுத்துப் பேசினார்.

“சொல்லுங்க விஜயன்! என்ன போன்?” என்று வெளியே இருந்து அழைத்த காவலாளியிடம் கேட்டார்.

“மேடம், உங்களைப் பார்க்க ஒரு பொண்ணு வந்திருக்கு. சார் யாரும் புதுசா வந்தா நல்லா விசாரிக்கச் சொன்னார். விசாரித்தா அவங்க உங்களை அத்தைனு சொல்றாங்க. நான் அவங்க மருமக. அத்தையைப் பார்த்தே ஆகணும்னு சொல்றாங்க. என்ன பண்ணட்டும் மேடம்? நான் உள்ளே அனுப்பட்டுமா?”

“மருமகள்னா அந்தப் பொண்ணு சொல்லுது?” என்று தன் வியப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கேட்டார் சந்திரா.

“ஆமா மேடம்! நான் அனுப்பட்டுமா?”

“ஒரு ஐந்து நிமிஷத்துக்குப் பிறகு நான் கால் பண்றேன் விஜயன். அந்தப் பொண்ணை வெயிட் பண்ண சொல்லுங்க…” என்ற சந்திரா தொலைப்பேசியை வைத்து விட்டு, அருகில் இருந்த ஒரு அறைக்குள் சென்றார்.

ஷர்வாவின் அறையில் இருந்தது போல அங்கேயும் இருந்த ஒரு கணினியில் பாதுகாப்பு கேமிராவின் காட்சிகள் பதிவாகி கொண்டிருந்தது. அதைத் திறந்து வெளியே வந்திருக்கும் பெண் யாரெனப் பார்த்தார்.

அவள் அவர் பார்ப்பதற்கு வசதியாகக் கேமிராவை தான் பார்த்துக் கொண்டு நின்றுக்கொண்டிருந்தாள். வெறும் பார்வை மட்டும் இல்லாமல் அதைப் பார்த்து லேசாகச் சிரித்தவளை பார்த்து, “யாரு இந்தப் பொண்ணு? நம்ம சொந்தகாரங்களில் இப்படி யாரும் பொண்ணு நமக்குத் தெரிந்து இல்லையே? அதுவும் நான் கேமிராவை செக் பண்ணுவேன்னு தெரிஞ்சே பார்க்கிறதை போலக் கேமிராவை பார்த்துச் சிரிக்குது?” என்று கணினியை பார்த்துப் பேசியவர் குழப்பத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

யோசனையுடனே அவளைச் சில நிமிடங்கள் பார்த்தவர் தன் தொலைப்பேசியை எடுத்து “விஜயன், அந்தப் பொண்ணை வர சொல்லுங்க…” என்றார்.

வந்தவளுக்குக் கதவை திறக்க வாசலை நோக்கி வந்தார். கதவை திறந்ததும் எதிரே முகம் முழுவதும் புன்னகையில் நிறைந்து நின்றிருந்தவளை பார்த்து, “யாருமா நீ? உன்னை என் மருமகள்னு சொன்னியாம். ஆனா உன்னை நான் இதுக்கு முன் பார்த்தது இல்லையே?” என்று கூர்மையுடன் அவளைப் பார்த்தவாறே கேட்டார்.

“வணக்கம் ஆன்ட்டி! என் பெயர் விதர்ஷணா. ஆமா ஆன்ட்டி. நான் உங்க மருமகள்னு சொன்னேன். நானும் உங்களை இப்போதான் முதல் முதலாகப் பார்க்கிறேன் ஆன்ட்டி…” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தவளை இன்னும் கூர்மையாகப் பார்த்து,

“இப்போ தான் பார்க்கிறேன்னு சொல்ற. அப்படி இருக்கும் போது எந்தத் தைரியத்தில் உன்னை என் மருமகள்னு சொல்ற? எந்த வழியில் நீ என் மருமகள்?” என்று கண்டிப்புடன் கேட்டார்.

“ஆன்ட்டி, உள்ளே வந்து எல்லா விவரமும் சொல்லட்டுமா? கொஞ்சம் முக்கியமான விஷயம் பேசணும். வெளியே நின்னு பேச வேண்டாமே?”

“நீ யாருனே தெரியாதப்போ உன்னை எப்படி உள்ளே விட முடியும்? நீ யாரு என்னனு முதலில் சொல்லு…!”

“நான் விதர்ஷணா. என் அப்பா பெயர் கருணாகரன். காலேஜ், ஸ்கூல் எல்லாம் நடத்திட்டு வர்றார். நான் எங்கள் காலேஜில் தான் MA பைனல் இயர் பண்ணிட்டு இருக்கேன். எனக்கு ஒரு கசின் பிரதர் இருக்கார். ஐ.டி. கம்பெனி நடத்துறார். என் அம்மா, என் அண்ணாவோட அப்பா, அம்மா இரண்டு பேரும் இல்லை. இதான் ஆன்ட்டி என் விவரம்…” என்றாள் ஷர்வாவின் அன்னையைச் சந்திப்பது தான் தனது அடுத்தத் திட்டம் என்று சொல்லி பூர்வாவை அதிர வைத்துவிட்டு வந்திருந்த விதர்ஷணா.

“எல்லாம் சரி. நீ இப்ப சொன்ன விவரத்தை எல்லாம் எதை வச்சு நம்புறது?” என்று திருப்பிக் கேட்டார் சந்திரா.

‘ஹப்பா! மகனை விட அம்மா ரொம்ப ஷார்ப்பா இருப்பார் போலயே? அச்சோ! வீராப்பா வந்து நல்ல சிக்கிட்டேனோ?’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட விதர்ஷணா, ‘உன் ஜித்தாவிற்காக நீ எல்லாம் தாங்கி தான் ஆகணும் விதர்ஷணா. உன் தைரியத்தை மட்டும் விட்டுறாதே!’ என்று தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொண்டு தன் கைப்பையில் இருந்து இரண்டு முகவரி அட்டையை எடுத்து அவரிடம் கொடுத்தாள்.

“ஒன்னு அப்பாவோட விசிட்டிங் கார்ட் ஆன்ட்டி. இன்னொன்னு அண்ணாவோடது. உங்களுக்குச் சந்தேகம் இருந்தா அவங்ககிட்டயே என்னைப் பற்றிக் கேட்கலாம்…” என்றாள்.

இரண்டையும் வாங்கிப் பார்த்த சந்திரா “இந்தக் கார்டை கூட நம்ப முடியாது தான். அவசியம் வரும்போது கட்டாயம் இந்த முகவரியை விசாரிப்பேன். ஒருவேளை நீ தவறானவளா இருந்தா கூட ஷர்வா உன்னைக் கண்டுபிடிக்காம விடமாட்டான். அதையும் ஞாபகம் வச்சுக்கோ…” என்று மிரட்டல் போலச் சொன்னவர் “சரி, உள்ளே வந்து சொல்லு. எதுக்கு மருமகள்னு சொன்ன?” என்று கேட்டார்.

அவரின் பின் சென்றவள் அவர் காட்டிய இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

“ஜித்தா, அதான் உங்க ஷர்வா என்னைக் கண்டுபிடிக்கவே வேண்டாம் ஆன்ட்டி. அவருக்கே என்னை நல்லா தெரியும். நான் பேச வந்ததும் அவர் விஷயமா தான்…” என்றவளை யோசனையுடன் அளவெடுப்பது போலப் பார்த்தார்.

‘அம்மாடியோ! அப்படியே ஜித்தாவோட ஆராய்ச்சி பார்வைதான்’ என்று உள்ளுக்குள் உதறினாலும், வெளியே கவனத்துடன் முகத்தை வைத்துக் கொண்டாள்.

“ஜித்தாவா? என் மகன் பற்றி என்ன பேசப் போற?

“சாரி ஆன்ட்டி! நான் அவரை அப்படித்தான் கூப்பிடுவேனா… அதான் அப்படியே சொல்லிட்டேன். இந்த விஷயம் உங்ககிட்ட பேச எனக்குத் தயக்கமா தான் இருக்கு ஆன்ட்டி. ஆனா இதை விட்டா எனக்கு வேற வழியும் தெரியலை…” என்றவள் சில நொடிகள் தன் கை விரல்களைப் பார்த்தாள்.

பின்பு மெல்ல நிமிர்ந்தவள், “எனக்கு உங்கள் பையன் மேல விருப்பம் ஆன்ட்டி. அவரிடமும் என் விருப்பத்தைச் சொன்னேன். ஆனா அவர் அது எல்லாம் ஒத்துவராதுனு சொல்லிட்டார். ஆனா விடுனு சொன்னதும் விட இது சாதாரண விஷயம் இல்லையே ஆன்ட்டி? நான் இந்தக் கால மார்டன் பொண்ணா இருக்கலாம்.

ஆனா நம்ம ஊர் பொண்ணுங்க மனசு இன்னும் அந்தக் காலம் போல ஒருவனுக்கு ஒருத்தினு நினைக்கிற மனசு தானே ஆன்ட்டி? அதை விடப் பொண்ணுங்க யார் எப்படி இருந்தாலும் நான் இப்படித் தான் ஆன்ட்டி. காதலிச்சோம், ஒத்துவரலை பிரிஞ்சிட்டோம்னு சொல்றது எல்லாம் எனக்குச் சரிவராது ஆன்ட்டி. ஒருத்தரை மனதில் நினைச்சுட்டா அவர் மட்டும் தான் என் காலம் முழுமைக்கும்னு நினைக்கிறவ நான்.

இப்போ என் காதலை காப்பாத்திக்க வேண்டிய நிலையில் நான் இருக்கேன் ஆன்ட்டி. ஜித்தா பின்னாடி சுத்தி இன்னும் என் மனசை அவருக்குத் தெரிய படுத்த முடியும். ஆனா அவர் பார்க்கிற வேலைக்கு எப்பவும் நான் அவர் பின்னாடி போக முடியாதே?

ஒருவேளை நீங்க அவருக்கு வேற பொண்ணு பார்த்து முடிவு பண்ணிட்டா என்ன பண்ண முடியும்? அந்தப் பயத்தில் தான் இப்படி வீடு தேடி வருவதை நீங்க தப்பா நினைக்கச் சான்ஸ் இருக்குனு தெரிஞ்சும் தைரியமா கிளம்பி வந்துட்டேன்…” என்று தான் வந்த காரணத்தைச் சொல்லி முடித்தாள் விதர்ஷணா.

அவள் சொல்ல, சொல்ல அவளையே விடாமல் பார்த்தார் சந்திரா. அவரின் முகத்தில் கோபமோ, வியப்போ, எரிச்சலோ, இறுக்கமோ எதுவும் தென்பட வில்லை. உணர்வுகளைத் துடைத்தது போல நிர்மலமாக இருந்தது.

விதர்ஷணா சொல்லிவிட்டு அவரின் முகத்தைத் தான் ‘என்ன சொல்வாரோ?’ என்பது போலப் பார்த்தாள்.

அதைக் கண்டவர் “இப்போ நான் என்ன சொல்லணும்னு நீ எதிர்பார்க்கிற?” என்று கேட்டார்.

“ஆன்ட்டி…?” அவர் கேள்விக்குப் பதில் சொல்ல தெரியாமல் இழுத்தாள்.

“சொல்லு என்ன சொல்லணும்? உன்னையே எனக்கு முழுதாக எதுவும் தெரியாது. நீ இந்த வீட்டுக்கு மருமகளா வர ஆசை படுற. ஆனா அது உடனே நடக்கும் காரியம் இல்ல. முதலில் உன்னைப் பற்றித் தெரிஞ்சுக்கணும். அடுத்து ஷர்வா சம்மதம் இல்லாமல் எதுவும் நடக்காது. அவன் சரி வராதுனு சொல்லியிருக்கான். அப்படி இருக்கும் போது நான் என்ன முடிவு எடுக்க முடியும்னு நீ எதிர்பார்க்கிற?” என்று கேட்டார்.

அவரின் கேள்வியில் தயங்கி கொண்டே “எனக்கு உங்க சப்போர்ட் வேணும்னு நினைச்சு தான் நான் வந்தேன் ஆன்ட்டி. நான் செய்தது அதிகபிரசங்கி தனம்னு எனக்குத் தெரியும். ஆனா வேற வழி எதுவும் தோணலை ஆன்ட்டி. என் காதலுக்கு நான் காதலிப்பவரே மறுப்பு சொல்லும் போது, உங்க விருப்பத்தின் பேரில் மருமகளா வரலாமேன்னு தோணுச்சு. எனக்கு இதுக்கு மேல என்ன பண்றதுன்னு தெரியலை ஆன்ட்டி. நீங்களே யோசிச்சு சொல்லுங்க…” என்றாள்.

“சரி, இப்போ தானே சொல்லியிருக்க? யோசிக்கிறேன். என்கிட்ட உங்க அப்பா, அண்ணா கார்ட் கொடுத்தியே அவங்களுக்கு உன் விருப்பம் தெரியுமா?” என்று கேட்டார்

“இன்னும் தெரியாது ஆன்ட்டி…” என்றவளை வியந்து பார்த்தார் சந்திரா.

“தெரியாதா? தெரியாமல் எந்தத் தைரியத்தில் கார்ட் கொடுத்தே? ஒருவேளை நான் அவங்ககிட்ட விசாரிச்சா என்ன ஆகும்னு யோசிச்சியா?”

“என்னைக்கு இருந்தாலும் அவங்களுக்கும் தெரிஞ்சு தானே ஆகணும் ஆன்ட்டி? நான் ஒளிச்சு மறைச்சு எதுவும் செய்ய நினைக்கலை. அப்பாகிட்ட நானே சீக்கிரம் சொல்லத்தான் போறேன் ஆன்ட்டி…” என்றாள்.

அவள் எல்லாவற்றையும் யோசித்து விட்டு தான் வந்திருக்கின்றாள் என்று நினைத்தவர் “சரிமா, காபி தர்றேன். குடிச்சுட்டு நீ கிளம்பு! நீ மருமகளா வர்றியோ, இல்லையோ வீடு தேடி வந்ததுக்கு விருந்தோம்பல் செய்றது தான் முறை. இதை வச்சு நான் சம்மதம் சொல்லிட்டேன்னு கற்பனை பண்ணிக்காதே! நான் யோசிச்சு சொல்றேன். ஆனா என் பதிலும் பாஸிட்டிவா மட்டும் இருக்கும்னு நினைக்காதே…!” என்று அவளிடம் கண்டிப்பு போலச் சொல்லி விட்டு காபி போட எழுந்து சென்றார்.

சிறிது நேரத்தில் காபி கொடுத்து, அவளின் தொலைப்பேசி எண்ணை வாங்கி வைத்துக் கொண்டு அனுப்பி வைத்தார்.

அவரிடம் பேசிவிட்டு வெளியே வந்து தன் காரில் ஏறிய விதர்ஷணாவின் உடம்பு ஒரு முறை சிலிர்த்து அடங்கியது. ‘ஹப்பா! அந்த ஆன்ட்டிகிட்ட அடிவாங்காம தப்பிச்சு வந்துட்டேன். என்ன பதில் சொல்ல போறாரோ தெரியலை?’ என்று பயத்துடன் மனதில் நினைத்துக் கொண்டாள்.

★★★

“நான் கேட்ட விவரம் கிடைச்சுதா கவி?” என்று தன் எதிரே அமர்ந்திருந்த கவியுகனை பார்த்துக் கேட்டான் ஷர்வஜித்.

“கிடைச்சது ஷர்வா. எல்லாமே கலெக்ட் பண்ணிட்டேன். நீ சொன்ன மாதிரி இது வரை ஐந்து காப்பகத்தில் இருந்தும் இரண்டு, இரண்டு பிள்ளைகளா காணாம போயிருக்காங்க. ஆனா எப்படிக் காணாம போனாங்கனு இன்னும் எந்தப் போலீஸ்காரங்களாலயும் கண்டு பிடிக்க முடியலை. அதுவும் இவங்க எல்லாம் கடந்த ஒரு மாதமா காணாம போனவங்க…” என்றான் கவியுகன்.

“ஹ்ம்ம்…! ஓகே கவி. போலீஸ் விசாரணை செய்த டீடைல்ஸ்?”

“இந்தப் பைலில் இருக்கு ஷர்வா…” என்று தன் கையில் இருந்த கோப்பை கொடுத்தான்.

அதை வாங்கி வைத்துக் கொண்ட ஷர்வா “இன்னும் கூடப் பிள்ளைகள் காணாமல் போக வாய்ப்பிருக்குக் கவி. சோ… அதற்குள் நாம இந்தக் கும்பலை கண்டு பிடிக்கணும்…” என்றான்.

“ஏன் ஷர்வா, ஐந்து காப்பகத்திலும் குழந்தைகள் காணாம போனதுக்குக் காரணம் ஒரே கும்பலா இருக்கும்னு நீ நினைக்கிறீயா?”

“இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனா எத்தனை கும்பலா இருந்தாலும் அவங்களைப் பிடிக்காம விடப் போறது இல்லை…” என்றான்.

“இந்தக் கேஸ் உனக்கு எப்படி வந்துச்சு ஷர்வா? ஐந்து இடத்தில் இருந்தும் உனக்குக் கம்ளைண்ட் வந்துச்சா?”

“இல்ல கவி. எனக்குக் கம்ளைண்ட் வந்தது ஒரு இடத்தில் இருந்து தான். ஆனா அந்தக் கம்ளைண்ட் வர்றதுக்கு முன்னாடியே இந்தக் கேஸை நான் கையில் எடுக்கணும்னு முடிவு எடுத்திருந்தேன்…”

“என்ன ஷர்வா சொல்ற? கம்ளைன்ட் வர்றதுக்கு முன்பேவா?” என்று கவியுகன் குழப்பத்துடன் கேட்டான்.

“கவி, இந்தக் கேஸ் ஒரு சீக்ரெட் கேஸ்ஸா தான் முதலில் நான் ஆரம்பிச்சேன். கமிஷ்னருக்கும், எனக்கும் மட்டும் தான் தெரியும். இது பெரிய கேஸ்ஸா இருந்தாலும், டிப்பார்மெண்ட் ஆளுங்க யாரையும் சேர்க்காம செய்றதா முடிவு பண்ணியிருந்தோம். இந்தக் கேஸ்ல உதவ எங்களுக்கு யாராவது வேணும். அதுக்குத் தான் கமிஷ்னர் அனுமதியோட உன்னை இந்தக் கேஸ்ல சேர்த்தேன்.

நீ மட்டும் இல்லாமல் உன் டிடெக்டிவ் ஆபிஸ் ஆளுங்க உதவியும் தேவைப்படும். ஆனா உன்னைத் தவிர அவங்க யாருக்கும் இந்தக் கேஸ்ஸின் ரிஷிமூலம் தெரியாம பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு. இந்தத் தகவல் கூட நீயா விசாரிச்சுட்டு வரணும்னு தான் முதலிலேயே காரணம் சொல்லாம உன்னை விசாரிச்சுட்டு வர சொன்னேன்.

ஐந்து காப்பகத்தைப் பற்றியும் அந்தந்த ஏரியா ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கிட்டயும் என்னாலேயே இந்த டீடைல்ஸ் எல்லாம் கேட்டு வாங்க ரைட்ஸ் இருந்தும், உன்கிட்ட முழுவிவரமும் சொல்லாமல் உன்னை அனுப்பியதுக்குக் காரணம் எந்த நியூஸும் வெளியே போய்ற கூடாதுனு தான்.

ஆனா இப்போ நிலைமை அப்படியில்லை. இப்போ நேரடியா ஒரு காப்பகத்தில் இருந்து குழந்தைகளைக் காணோம்னு என்கிட்டயே வந்து சொல்லி என் உதவி வேணும்னு கேட்டுகிட்டாங்க. சோ… கேஸ்ல நான் வெளிப்படையாகவே தலையைக் காட்ட ஆரம்பித்திருக்கேன். ஆனா அது இந்த ஒரு காப்பகத்தில் மட்டும் தான்.

மற்ற நாலு காப்பகத்திலும் முன்பு நானும், கமிஷ்னரும் முடிவு செய்தது போலச் சீக்ரெட்டா தான் விசாரிக்கப் போறோம். அதுக்கு உன் உதவி தான் தேவைப்படும். இந்தக் கேஸ்ல நிறைய ரிஸ்க் இருக்கு. உனக்கு மேற்கொண்டு இந்தக் கேஸ்ல இன்வால்ட் ஆக ஓகேனா சொல்லு. மேலும் விவரம் எல்லாம் சொல்றேன்…” என்றான்.

“ரிஸ்க் எல்லா இடத்துலயும் இருக்கத் தான் செய்யும் ஷர்வா. அதுக்கு எல்லாம் பயந்தா முடியுமா? உனக்கும், கமிஷ்னருக்கும் மட்டுமே தெரிந்த ஒரு கேஸ்ல என்னையும் நீ சேர்த்ததில் எனக்குப் பெருமை தான். விவரம் சொல்லு ஷர்வா. இந்த நிமிஷத்திலிருந்து இனி இது நம்ம கேஸ்…” என்றான் கவியுகன்.

“தட்ஸ் குட் கவி! கடந்த ஒரு மாதமாகப் பேப்பர் படிக்கும் போது அப்பப்போ கண்ணில் பட்ட செய்தி தான் இந்தக் குழந்தை கடத்தல் கேஸ். அதுவும் ஒரு மூலையில் சின்னச் சின்னப் பெட்டி செய்தியா தான் இந்தக் கேஸ் எல்லாம் என் கண்ணில் பட்டது. அந்தச் செய்தி எல்லாம் ஒரு உறுத்தலை என் மனசில் உண்டாக்கியது.

அதைப் பற்றிக் கமிஷ்னர்கிட்ட சொன்னேன். இந்த மாதிரி பல கேஸ் வருது. இதை ஏன் பெரிசா எடுத்துக்கிறீங்கன்னு சொன்னார். ஆனா என்னால இந்தக் கேஸை ஏனோ சாதாரணமா விட முடியலை. நீங்க பர்மிஷன் கொடுக்கலைனாலும் தனிப்பட்ட முறையில் நான் பார்க்க போறேன் சார்னு சொல்லவும், சரி உங்க இஷ்டம் போல இந்தக் கேஸ் பாருங்கனு சொல்லிட்டார்.

அப்புறம் தான் உன்கிட்ட ரொம்ப விவரம் சொல்லாம, விசாரிச்சுட்டு வர சொன்னேன். இப்போ பைல் கையில் கிடைச்சது மட்டும் இல்லாம, தெரசமா காப்பகத்தில் இருந்து வந்து இந்தக் கேஸை என் பார்வைக்கு கொண்டு வந்திருக்காங்க. தெரசமா காப்பகத்தில் இருந்து என்கிட்ட வர்றதுக்கு முன்னாடி இந்தக் கேஸ் நான் கையில் எடுப்பது வெளியே அதிகம் தெரியாமல் இருந்தது.

இப்போ தெரசமா காப்பகத்தில் கால் வச்ச அடுத்தச் செகண்ட் குற்றவாளிக்கு நியூஸ் போய், அவன் மிரட்டல் கடிதம் அனுப்பியிருக்கான்…” என்று சொல்லவும்,

“என்ன ஷர்வா சொல்ற? அடுத்தச் செகண்ட் மிரட்டல் கடிதமா?” என்று கேட்டான் கவியுகன்.

“யெஸ் கவி! நான் காப்பகத்தில் விசாரணை முடிச்சுட்டு வீட்டுக்கு வர்றப்ப கடிதம் வந்திருந்தது…” என்றவன் அதரங்கள் லேசாகச் சுளித்து இகழ்வான சிரிப்பை காட்டியது.

“என்ன ஷர்வா, ஆளுங்க ரொம்ப ஷார்பா இருக்காங்க. உடனே வாட்ச் பண்ண ஆளு அனுப்பியாச்சு போல?” என்று கவியுகன் கேட்க,

“ஹ்ம்ம்… யெஸ் கவி! கேஸ்ஸை ரொம்ப வளர விடாமல் ஆரம்பித்திலேயே கிள்ளியெரியவும், அவங்க நம்மளை வாட்ச் பண்ணிக்கிட்டு தான் இருக்காங்கன்னு காட்டவும் தான் இந்த மிரட்டல். ஆனா இப்போ தான் எனக்கு இந்தக் கேஸ்ல ஆர்வம் கூடி இருக்கு. இனிதான் ஆட்டமே இருக்கு.

ஓகே கவி, அவங்க நம்மைக் கேஸ்ல இருந்து விலக்க வைக்க என்னவெல்லாம் பண்ண நினைக்கிறாங்களோ அதை எல்லாம் செய்யட்டும். நாம அடுத்த ஸ்டெப் என்னனு பார்ப்போம்.

மத்த காப்பகம் பற்றி இன்னும் வேற எதுவும் டீடைல்ஸ் கிடைக்குதானு விசாரிச்சு பாரு. இதைப் பற்றி என் கூடவே இருக்குற வேலவனுக்குக் கூடத் தெரியாது. அவர் நம்பிக்கையானவர் தான். ஆனா அவர் மட்டும் என்கூட இல்லை. நான் அவரையும் அழைச்சுட்டுப் போலீஸ் காரில் போகும் போது டிரைவரும் வருவான். அவன் மூலமா கூட விஷயம் வெளியே போயிரும்னு தான் அவர்கிட்ட தெரசமா காப்பகம் கேஸ் எனக்கு ரிஸ்க்கான கேஸ் போலக் காட்டிக்கிட்டேன்.

இது மாதிரி நாம சின்ன விஷயத்தில் கூடக் கவனமா இருக்கணும் கவி. நீயும் கேஸ் விஷயமா செய்ற ஒவ்வொரு விஷயத்திலும் கவனமா இரு…” என்றான்.

“புரியுது ஷர்வா. நான் கவனமாகவே இருக்கேன்…”

“ஓகே கவி…” என்றவன் மேலும் சிறிது நேரம் வழக்கை எப்படி விசாரிக்கலாம் என்பதைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்தான்.

◆◆◆

அன்று வழக்கு விஷயமாகச் சில இடங்களுக்கு அலைந்து விட்டு அலுப்பாக வீட்டிற்கு வந்தவன் குளித்து இரவு உணவை முடித்துவிட்டு, சந்திராவிடம் இரண்டொரு வார்த்தை பேசி விட்டு மீண்டும் தன் அறைக்கு வந்தவன், வீட்டின் கண்காணிப்பு காணொளியை ஓட விட்டு பார்க்க ஆரம்பித்தான்.

வழக்கமாக இரவு நேரம் அதைப் பார்ப்பவன் என்பதால் அதை ஓட விட்டு இன்று யாரும் புதிய நபர் வீட்டின் பக்கம் வந்து சென்றிருந்தார்களா என்று உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தான்.

மாலை வரை யாரும் வராததைப் பார்த்து விட்டு, அடுத்தும் தொடர்ச்சியாகப் பார்க்க ஆரம்பித்தவன், மாலை ஐந்து மணி அளவில் தன் வீட்டின் முன் வந்து நின்ற காரை பார்த்து விறைப்பாக நிமிர்ந்து அமர்ந்தான்.

‘இந்தப் பொண்ணு எங்கே இங்கே? எப்படி வீட்டை கண்டுபிடித்தாள்?’ என்று நினைத்துக் கொண்டே அவளைப் பார்க்க, காரை விட்டு இறங்கி நேராகக் காவலாளியிடம் வந்து பேசுவது தெரிந்தது.

காவலாளி ஏதோ மறுப்பு சொல்ல, அவள் விஜயனுக்கு ஏதோ விளக்கம் சொல்ல, அதில் அவன் அவளை ஆச்சரியமாகப் பார்க்க என்று காட்சிகள் ஓடியது.

பின்பு விஜயன் தன் தொலைப்பேசியில் பேசுவதும், மீண்டும் அவளிடம் பேசுவதும் தெரிந்தது.

அதைத் தொடர்ந்து அவள் சில நிமிடங்கள் கேமிராவையே கண்கள் எடுக்காமல் பார்த்தவள் அதைப் பார்த்தும் சிரிக்க, ஷர்வாவிற்கு அவள் தன்னையே பார்த்துச் சிரிப்பது போலத் தெரிந்தது.

அவளின் புன்னகையைப் பார்த்துக் கொண்டே “உனக்குத் தில் அதிகம் தான்…” என்றான்.

பின்பு விஜயன் கதவை திறந்து விடுவதும், அவள் உள்ளே வந்துவிட்டு அரைமணி நேரம் கடந்த நிலையில் வெளியே வருவதும், காருக்குச் செல்வதற்கு முன் மீண்டும் கேமிராவை பார்த்து புன்னகைத்ததையும் கண்டவன் அயர்ந்து தான் போனான்.

அதோடு ‘அம்மா அவள் வந்து சென்றது பற்றியே பேசவில்லையே, ஏன்?’ என்ற கேள்வியும் அவனுக்குள் எழ, காணொளி காட்சியை அப்படியே நிறுத்தி வைத்தவன், வேகமாகக் கீழே இறங்கி வந்து சந்திராவின் அறையை நோக்கி சென்றான்.

லேசாகச் சாற்றி மட்டும் வைத்திருந்த சந்திராவின் அறையின் முன் நின்று “அம்மா…” என்று குரல் கொடுத்தான்.

“என்ன ஷர்வா? உள்ளே வா…!” என்றார்.

அவன் வரவை எதிர்பார்த்தது போல வாசலை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்த சந்திரா, உள்ளே வந்த ஷர்வாவை ஆழ்ந்து பார்த்தார்.

“அம்மா, இன்னைக்குச் சாயந்திரம் வந்த பொண்ணு யாரு? அந்தப் பொண்ணு எதுக்கு வந்தா? அதைப் பற்றி நீங்க என்கிட்ட எதுவும் சொல்லலையே?” என்று கேட்டவனின் குரலின் பாவத்தையே கவனித்துப் பார்த்த சந்திரா,

“அந்தப் பொண்ணு பார்க்க வந்தது என்னை. அதை ஏன் நான் உன்கிட்ட சொல்லணும் ஷர்வா?” என்று திருப்பிக் கேட்டார்.

சந்திராவின் கேள்வியில் இலகுவாக நின்றிருந்த ஷர்வஜித் விறைத்து நின்றான்.

“அம்மா…” என அழுத்தி அழைத்தான்.

“இங்கே தானே இருக்கேன். சொல்லு ஷர்வா…!” நிதானமாகக் கேட்டார் சந்திரா.

“அந்தப் பொண்ணு யாரு என்னனு ஏதாவது உங்களுக்குத் தெரியுமா? உங்களைப் பார்க்க வந்ததாகவே இருக்கட்டும்மா. ஆனா அவளைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அதை மட்டும் முதலில் சொல்லுங்க…!” என்றவன் முகத்தில் கோபம் அதிகமாகவே தெரிந்தது.

அவனின் கோபத்தைக் கவனித்தும் அதைக் கண்டுகொள்ளாமல் “அந்தப் பொண்ணு என் மருமகள். அவளைப் போய் எனக்குத் தெரியாம இருக்குமா?” என்று கேட்டார்.

“என்னது? மருமகளா…?” என்று அதிர்ந்து கேட்டான் ஷர்வஜித்.