பனியில் உறைந்த சூரியனே – 12

அத்தியாயம் – 12

வேலவன் ஐம்பது வயதை நெருங்கியவர். தனக்கு மேல் இருக்கும் அதிகாரி சொல்லும் வேலையைக் கச்சிதமாகச் செய்து முடிப்பவர். அதனாலேயே சில அதிகாரிகள் எப்பொழுதும் அவரிடம் சாதாரணமாகப் பழகும் அளவிற்கு ஒரு நல்ல பெயர் அவருக்கு உண்டு. ஆனால் மற்ற அதிகாரிகள் போல் இல்லாது ஷர்வா எப்பொழுதும் வேலையைத் தவிர வேறு தன் சொந்த எண்ணங்களைக் காட்டி கொள்ளாது இருப்பவன்.

அப்படிப்பட்டவனே இன்று ‘இந்தக் கேஸ் நம்மைச் சுழட்டி அடிக்கப் போகுது’ என்று சொன்ன ஷர்வஜித்தை ஆச்சரியமாகத் தான் பார்த்தார் வேலவன். அவர் ஷர்வாவின் கீழ் வேலை பார்க்க ஆரம்பித்த இந்த நான்கு வருடங்களில் அவன் அது போல் சொல்லியதே இல்லை.

எதுவும் வழக்கு பற்றி விசாரணை செய்தாலும் இந்த இடத்தில் நீங்கள் இந்த வேலையைச் செய்யுங்கள் என்பது போலத் தான் உத்தரவிடுவான். அவன் சொன்னது போல மேலும் ஒரு ஆளை விசாரிப்பதோ, மேற்கொண்டு ஒரு ஆளின் விவரங்களை விசாரித்துச் சொல்லச் சொல்வது என அவரிடம் அவனின் பேச்சு இருக்குமே தவிர என்றுமே இன்று போல வழக்கு எப்படிப் பட்டது என்று அவன் சொல்லியதில்லை. அதனாலேயே அவனை ஆச்சரியமாகப் பார்த்தார்.

அவரின் பார்வையைக் கவனிக்காமல் இன்னும் ஏதோ பலமான யோசனையில் இருந்த ஷர்வா தன் நெற்றியை அழுத்தி பிடித்து விட்டுக்கொண்டான். அவனின் மூளையில் காப்பகத்தில் நடத்திய விசாரணை அனைத்தும் வந்து போனது.

அங்கே உள்ள அனைவரும் சொன்ன பதில் எப்படிப் பிள்ளைகள் தங்கள் கண்காணிப்பில் இருந்து தவறி போனார்கள் என்று தெரியவில்லை. நான் என் வேலையில் கவனமாகத் தான் இருந்தேன் என அவர்கள் செய்த வேலையைச் சரியாக எந்தப் பிசக்கும் இல்லாமல் செய்தேன். என் மேல் தவறு இல்லை என்று அனைவருமே ஒன்று போலச் சொன்னார்கள்.

அவர்களிடம் ஷர்வா கவனித்த ஒரு விஷயம் அவர்கள் யாரிடமும் தான் தவறு செய்து விட்ட பதட்டமோ, தன் குற்றத்தை கண்டு பிடித்து விடுவார்களோ என்ற எந்தக் கயமையும் அவர்களிடம் தெரியவில்லை. ஷர்வாவின் கணிப்பு! அத்தனை பாதுகாப்பு உள்ள காப்பகத்தில் பிள்ளைகள் காணாமல் போயிருக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக அங்கே வேலை பார்ப்பவர்கள் யாராவது தான் காரணமாக இருக்கும் என்று எண்ணினான்.

அதனாலயே ஒவ்வொருவரையும் விசாரிக்கும் போது யாரிடமும் பதட்டம் தெரிகின்றதா என்று கவனித்தான். ஆனால் எல்லோரிடமும் தெரிந்த தெளிவு அவனைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. அவனின் அந்தக் குழப்பமே அன்று முழுவதும் அவனைத் தொடர்ந்தது.

அவனே சொன்னது போல அந்த நிமிடத்தில் இருந்து அவ்வழக்கு அவனைச் சுழற்றி அடிக்க அவன் மனதில் அடியெடுத்து வைத்திருந்தது.

இரவு உணவு வேளையில் தன் எதிரே அமர்ந்து யோசித்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்த மகனை பார்த்த சந்திராவின் பொறுமை பறந்து கொண்டிருந்தது. அவரும் அவன் வந்ததில் இருந்து பார்த்துக் கொண்டு தான் இருந்தார்.

வேலையை விட்டு வந்து ஏதாவது அவரிடம் சில வார்த்தைகள் எப்பொழுதும் பேசுபவன் இன்று எதுவும் பேசாமல் யோசனையைக் குத்தகைக்கு எடுத்தவன் போல இருந்தது அவருக்கு வித்தியாசமாகத் தெரிந்தது.

அவனாகப் பேச காத்திருந்தால் அது இன்றுக்குள் கண்டிப்பாக நடக்காது போல என்று நினைத்தவர் “ஷர்வா…” என்று அழுத்தி அழைக்க, கனவில் இருந்து கலைந்தவன் போல “ஹா…! ம்மா…” என்றான்.

“என்ன பண்ணிட்டு இருக்க ஷர்வா? நீ வீட்டில் இருக்குறதே கொஞ்ச நேரம் தான். அந்த நேரத்தையும் இப்படி யோசனையிலேயே கழிச்சா எப்படி?” என்று கேட்டார்.

“அது ஒரு கேஸ் மா. கொஞ்சம் சிக்கலா இருக்கு. அதான் எப்படினு யோசனையா இருக்கேன்…” என்றான்.

“சிக்கலான கேஸ்ஸாவே இருக்கட்டுமே ஷர்வா. அதை இப்படிச் சாப்பிடும் போதும் யோசிச்சா எப்படி? உனக்குச் சாப்பாட்டை ரசிச்சு தான் சாப்பிட நேரம் இல்லாம போய்ருச்சு. முன்னாடி எல்லாம் எப்படி ஒரு வாய் சாப்பாடுனாலும் ரசனையா, திருப்தியா சாப்பிடுவ. ஆனா இப்போ அப்படி இல்லனாலும் வேற எந்தச் சிந்தனையும் இல்லாம தான் சாப்பிடேன்…” என்றவர் குரலில் மகனின் இந்த மாற்றம் குறித்த வருத்தம் இருந்தது.

அதைக் கவனித்தவன் “பச்ச்…!” என்று சலிப்படைந்து கொண்டே “அந்த நாள் திரும்ப வராதுமா. அதை எல்லாம் இப்ப ஏன் நினைக்கிறீங்க? இந்த வேலையில் தூக்கத்தில் கூட யோசனையா தான் இருக்க வேண்டியிருக்கும். அதைத் தவிர்க்க முடியாது…” என்றவனின் குரலில் அவனின் யோசனையைக் கலைத்த மெல்லிய கோபம் தெரிந்தது.

“அந்த நாள் வராதுன்னு எனக்கும் தெரியும். அதுக்காக இனி ‘இருக்குற எல்லா நாளையும் வலியோட போக்கணும்னு என்ன இருக்கு?’ இது நீ ஒரு முறை எனக்குச் சொன்னது தான். அட்வைஸ் எல்லாம் அடுத்தவங்களுக்குத் தானா? நீயும் அதைக் கடை பிடிக்கலாம். அந்த நாள் வராதுகிற காரணத்துக்காக இருக்குற நாளை எல்லாம் வேஸ்ட் பண்ணாதே. முதலில் ஆ… உ…னா கோபப்படுற பழக்கத்தை முதலில் விடப் பாரு…” என்று சிறிது கண்டிப்புடன் சொல்லி கொண்டே அவனின் தட்டில் சிறிது உணவை அள்ளி வைத்தார்.

“ஆமா…! அப்படியே என் கோபத்துக்கு எல்லாம் நீங்க பயந்து நடுங்குறது போலத் தான்…” எனக் கேலி போலச் சொல்லிய மகனை முறைத்த சந்திரா “உன்னைப் பார்த்து நான் ஏன் பயப்படணும் ஷர்வா? நீ கிழவனா ஆனாலும் நீ எனக்கு மகன் தான். மகனை பார்த்து அம்மா பயப்படணும்னு என்ன இருக்கு? எந்தப் பதவியில் இருந்தாலும், எத்தனை வயசாலும் மகனை கண்டிக்கும் பொறுப்பு அம்மாவுக்கு இருக்கு.

மகன் தோளுக்கு மேல வளர்ந்துட்டான். கௌரமான வேலையில் இருக்கான். எதுக்கு எடுத்தாலும் கோபப்படுவான் அப்படின்னு நினைச்சு விலகி போக நான் யாரோ இல்லையே? உன் அம்மா! நீ இரண்டு நாள் சாப்பிடாம இருந்தாலும், வேற யாருக்கும் ஒன்னும் இல்லை. ஆனா நீ ஒரு வேளை சாப்பிடலைனாலும் எனக்கு ஒரு வாய் சாப்பாடு உள்ள இறங்காது.

அப்படிபட்ட என்னைப் போல அம்மாக்கள் மகனுக்குப் பயந்து நடுங்கும், ஒரு சூழ்நிலையை மகன்கள் ஈசியா உருவாக்குவது தப்புனு உங்களுக்கு எல்லாம் புரியலை. நீயும் அந்தத் தப்பை செய்ய நினைத்தாலும், கண்டிப்பா நான் அந்தத் தப்பை ஆதரிக்க மாட்டேன். அதனால உன் கோபத்தைப் பார்த்து நான் பயப்படணும்னு ஆசை இருந்தால் அதை விட்டுடு…” என்று கண்டிப்புடன் சொன்ன அன்னையைப் பார்த்து அதரங்கள் நன்றாக விரிய சிரித்தான் ஷர்வா.

அன்னையின் கண்டிப்பில் அவனின் குழப்பங்கள் எல்லாம் அப்போதைக்கு அவனை விட்டு ஓடிச் சென்றன.

அவனின் அன்னை எப்போதும் அப்படித்தான் தனக்குச் சரி என்று பட்டதைப் பட்டெனச் சொல்லி விடுவார். அவரின் அந்தக் குணத்தால் சில வலிகள் அனுபவிக்க நேர்ந்தும் கூடச் சில விஷயங்களில் அவரின் கருத்தை சொல்ல தயங்குவதில்லை. என்ன ஒன்று அந்த வலிகளுக்குப் பிறகு நிறைய விஷயங்களில் தன் தவறை உணர்ந்து மாறிக் கொண்டார். அதுவும் அன்னையிடம் ஷர்வாவிற்குப் பிடித்த ஒன்றாகப் போனது.

இப்பொழுது தன்னைக் கண்டித்தது அவனுக்குக் கஷ்டமாகவே தெரியவில்லை. அன்னை தன் நல்லதிற்குத் தான் சொல்வார் என்பதால் புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டான்.

கண்டிப்பையும் புன்னகையுடன் ஏற்கும் தன் பழைய மகனை இப்பொழுதும் கண்டு சந்திராவின் மனம் நிறைந்து போனது.

“சரிமா… நானே உங்களைப் பார்த்துப் பயந்துகிறேன். நீங்க என்னைப் பார்த்துப் பயப்படத் தேவையில்லை சரியா? ஓகே சொல்லுங்க! இன்னைக்கு உங்க பொழுது எப்படிப் போச்சு? யாரும் வீட்டுக்கு வந்தாங்களா?” அவனைப் பார்க்க வீட்டிற்கும் யாராவது வருவது உண்டு என்பதால் அதை விசாரித்தான்.

“எனக்கு எப்பயும் போலத் தான் போச்சு. இன்னைக்கு யாரும் வரலை ஷர்வா. ஒரு லெட்டர் தான் வந்தது. வாட்ச்மேன் வந்து கொடுத்தார். அங்கே டேபிளில் வச்சுருக்கேன் பார்…” என்றார்.

“சரிமா, பார்க்கிறேன்…” என்றவன் மேலும் அவரிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டு எழுந்து மேஜை மீது இருந்த கடிதத்தை எடுத்துப் பார்த்தான்.

அந்தக் கடிதத்தைப் பார்த்ததுமே அவனின் புருவங்கள் உயர்ந்தன. அனுப்புனர் முகவரி இல்லாமல் பெறுனர் முகவரி மட்டும் இருந்தது.

‘யாரது? மொட்டை கடிதம் போட்டிருப்பது? அதுவும் போஸ்ட் ஆபிஸின் சீல் இல்லை. அப்போ யாரோ வந்து தான் போஸ்ட் பாக்ஸில் போட்டிருக்க வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டவன் அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு சந்திராவிடம் வந்தான்.

“அம்மா, இந்த லெட்டர் எப்போ வந்து வாட்ச்மேன் கொடுத்தார்? எப்பயும் வழக்கமா போஸ்ட் வரும் நேரத்திலா? இல்ல வேற டைம்லயா?” எனக் கேட்டான்.

அவன் காட்டிய கடிதத்தைப் பார்த்த சந்திரா “வழக்கமான டைம்ல இல்லை ஷர்வா. இப்போ நீ வீட்டுக்கு வர்றதுக்குக் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் கொடுத்தார். நானும் கேட்டேன் இப்போ எப்படி லெட்டர் வந்துச்சுனு. ஆனா அவருக்கே தெரியலைனு சொன்னார். சரி, நீ வந்து விசாரிக்கட்டும்னு வாங்கி வச்சேன்…” என்றார்.

“சரிமா… நான் போய் விசாரிக்கிறேன். நீங்க நேரத்தோட போய்ப் படுங்க…” என்றவன் கதவை திறந்து வெளியே சென்று காவலாளியிடம் போய் நின்றான்.

அவனைப் பார்த்ததும் கேட்டின் முன் அமர்ந்திருந்த, காவலாளி எழுந்து நின்று வேகமாகச் சல்யூட் வைத்தார். தலையசைத்த ஷர்வா “விஜயன், இந்த லெட்டர் எப்போ வந்தது? இது வரும் போது இதை யார் பாக்ஸ்ல போட்டதுன்னு பார்த்தீங்களா?” என விசாரித்தான்.

“சார், அதான் தெரியலை சார். நான் ஈவ்னிங் பார்த்தப்ப எல்லாம் பாக்ஸ் எம்டியா தான் இருந்தது சார். ஒரு எட்டரை மணி போல நான் பாத்ரூம் போய்ட்டு கொஞ்ச நேரம் கேட்கிட்டையே நடந்துட்டு இருக்கும் போது தான் பாக்ஸ்ல வெள்ளையா கவர் தெரியவும் செக் செய்தேன் சார். அப்போ தான் இந்தக் கவர் இருந்தது. இப்ப எப்படி லெட்டர் வந்ததுனு நானும் சந்தேகப்பட்டு, கேட்டுக்கு வெளியே போய்ச் செக் பண்ணினேன் சார். சந்தேகப்படும் படியா யாரும் என் கண்ணில் படலை. ஒருவேளை நம்ம கேட்கிட்ட இருக்குற கேமராவில் பதிவாகியிருக்கலாம் சார்…” என்றார் காவலாளி.

“ஓ…! ஓகே விஜயன். நான் செக்யூரிட்டி வீடியோவை செக் பண்றேன். இனி நீங்க எப்பவும் கொஞ்சம் அலார்ட்டாவே இருங்க. புது ஆளுங்க யாரும் வந்தா நல்லா விசாரிச்சுட்டு உள்ளே விடுங்க…” என்று கட்டளைகள் இட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றான்.

உள்ளே சென்று சந்திரா எங்கே என்று பார்க்க, அவர் உறங்க சென்றிருந்தார். கதவை எல்லாம் பூட்டிவிட்டு மேலே இருக்கும் தன் அறைக்குச் சென்றவன், கையில் இருந்த கடிதத்தை மேஜையின் மீது வைத்து விட்டு தன் கணினியில் அன்றைக்குப் பாதுகாப்புக் கேமிராவில் பதிவாகியிருந்த காணொளியை ஓட விட்டுக் கொண்டே, கடிதத்தைப் பிரித்துப் பார்த்தவன் புருவங்கள் சிறிது உயர்ந்து பின்பு தாழ்ந்தன.

அந்தக் கடிதத்தில் “காப்பகம் காவு வாங்கும்” எனக் கடிதம் முழுவதும் பெரிய எழுத்தில் எழுதி இருந்தது.

அதைப் படித்து விட்டு நிதானமாகக் காகிதத்தை மடித்து மேஜையின் வைத்தவன், காணொளியை பார்க்க ஆரம்பித்தான்.

அந்தக் கடிதத்தைப் படித்து ஷர்வஜித் பதட்டமே படவில்லை. நிதானமாக இருந்து காணொளி காட்சியில் மட்டும் கவனத்தை வைத்தான். எட்டு மணிவரையான பதிவு காட்சிகளை மேலோட்டமாகப் பார்த்துக் கொண்டு வந்தவன், அதன் பிறகு ஊன்றி பார்க்க ஆரம்பித்தான்.

சரியாக எட்டு பதினைந்து மணி அளவில் ஒரு இருசக்கர வாகனம் வீட்டு வாசலில் வந்ததும் தெரியாமல், சென்றதும் தெரியாமல் அதிவேகத்தில் கடிதத்தைப் போட்டு செல்வதைக் கண்டவன் அதை உடனே நிறுத்தி திரும்ப மெதுவாக ஓட விட்டுப் பார்த்தான்.

இருசக்கர வாகனத்தின் அடையாள நம்பர் மறைக்கப்பட்டிருந்தது. வண்டியில் சென்றவன் தலையை, தலைகவசத்தால் மறைத்திருந்தான். அவனின் உடலை ஆராய்ந்தான். ஒல்லியாக வளர்ந்து இருந்தவன் கருப்பு கால் சட்டையும், சந்தன நிறத்தில் கருப்புக் கோடுகள் வரைந்த சட்டையும் அணிந்திருந்தான்.

வண்டியின் கம்பெனி மாடல் ஆராயத் தான் எமகா மாடல் என்று தன்னைக் காட்டி கொடுத்தது. ஆனால் இதை மட்டும் வைத்து அந்த வண்டியை கண்டு பிடிப்பது சிரமம் தான் என்று எண்ணிக் கொண்டவன், இன்று நடந்ததை எல்லாம் மனதில் ஓட்டி பார்த்தான்.

பீட்டர் அவனைச் சந்தித்த போது மணி மூன்று. தான் காப்பகம் சென்று சேர்ந்த நேரம் ஐந்து நாற்பது மணி அளவில், அங்கே விசாரணையை முடித்து விட்டு, அந்த ஏரியா காவல் நிலையம் சென்று அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம் அந்த வழக்கை பற்றி விசாரித்துவிட்டு கிளம்பும் போது மணி ஏழு ஐம்பது, அங்கிருந்து டிராபிக் எல்லாம் சமாளித்து வீடு வந்து சேர்ந்த போது மணி ஒன்பது முப்பது ஆகியிருந்தது.

தான் காப்பகம் சென்ற மணித்துளிகளில் இருந்து, காவல் நிலையம் சென்று திரும்பிய மணிக்குள் தான், இந்த வழக்கில் சம்பந்தபட்ட குற்றவாளிக்கு தகவல் சென்றிருக்க வேண்டும் என்று எண்ணமிட்டவன், குற்றவாளிக்கு எந்த இடத்திலிருந்து தகவல் சென்றிருக்கும்? என்று யோசித்தான்.

காப்பகத்தில் சந்தித்த ஆட்களும், காவல் நிலையத்தில் சந்தித்த ஆட்களும் ஒவ்வொருவராக மனதில் வந்து போனார்கள். அவர்களில் ஒருவர் தான் கருப்பு ஆடு. சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டவன், இன்ஸ்பெக்டர் பேசியதை எல்லாம் நினைத்துப் பார்த்தான்.

தான் சென்றதும் மரியாதையுடன் வரவேற்றவர், வழக்கு பற்றி மேலும் விசாரிக்க வழியில்லாமல், தன்னை இந்த வழக்குக் குழப்புவதாக அவர் சொன்னது சரியாகத் தான் ஷர்வாவிற்கும் தோன்றியது. குழந்தைகள் தன்னால் அங்கிருந்து செல்ல முடியாது. பள்ளி, காப்பகம் இரண்டும் கலந்து இருப்பதால் படிக்க வெளியே செல்லவும் வழி இல்லை. கடத்தல் தான் என்றால் வெளியே இருந்து ஆட்கள் வந்து கடத்துவதும் கஷ்டமான காரியமே.

அப்படியிருக்கக் கடத்தல் நடந்திருக்கிறது என்றால், நிச்சயம் அங்கே வேலை பார்ப்பவர் யாராவது தான் கண்டிப்பாகக் கடத்தியிருக்க வேண்டும். ஆனால் அனைவரும் அங்கே தங்களை நல்லவர்களாகக் காட்டி கொண்டார்கள். யார் அந்த நல்லவன் வேஷம் போடும் கெட்டவன்?

காப்பகத்தில் அதிகக் கவனம் வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டவன், திரும்பக் கடிதத்தை எடுத்துப் பார்த்தவன் ‘காவு யாரு யாரை யாரு வாங்க போறானு பார்த்துருவோம்டா’ என்று வாய்விட்டே சொன்னவன் இகழ்ச்சி சிரிப்பொன்றையும் உதிர்த்தான்.

பின்பு அந்தக் கடிதத்தை எடுத்து பத்திர படுத்தியவன், அன்று நடந்ததை எல்லாம் ஒரு குறிப்பு எடுத்துக் கொண்டவன் மிரட்டலை அதற்கு மேல் பொருட்படுத்தாமல் அமைதியான உறக்கத்திற்குச் செல்ல தயாரானான் ஷர்வஜித்.

★★★

மறுநாள் மாலை ஐந்து மணியளவில் தன் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த ஷர்வஜித் வழக்கு விஷயமாக வெளியே செல்ல காவல் வாகனத்தில் ஏறி சாலைக்கு வந்தவன் காவல் நிலையத்திற்கு எதிரில் இருந்த சாலையைப் பார்த்தான்.

அங்கே காவல்நிலைய அலுவலகத்தையே பார்த்தபடி நின்று கொண்டிருந்த பெண்ணைக் கண்டு முதலில் பெரிதாக எதுவும் நினைக்காமல் சாலையின் புறம் கண்ணைத் திருப்பியவன், பின்பு ஏதோ தோன்ற பின்னால் திரும்பி பார்த்தவன் நெற்றி சட்டெனச் சுருங்கி யோசனையைக் காட்டியது.

அவன் பார்த்த நேரம், அந்தப் பெண்ணும் அவனின் வண்டியை தான் திரும்பி பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளின் முகத்தில் லேசான பதட்டம் ஒட்டிக்கொண்டிருந்தது. பின்பு திரும்பி கைக்கடிகாரத்தைப் பார்த்தவள் அங்கிருந்து மெல்ல நடந்து வேறு புறம் சென்றாள்.

அவள் போவதை பார்த்த ஷர்வா, அதற்கு மேல் அவளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் திரும்பி சாலையைப் பார்த்தபடி அமர்ந்து சென்று வழக்கை பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.

அதற்கு மறுநாள் அலுவலகத்தில் அமர்ந்து வழக்கை பற்றிய குறிப்பை பார்த்து விட்டு, அதை மூடி வைத்த ஷர்வா அந்தக் கோப்பினை பத்திர படுத்த எழுந்து, அங்கே இருந்த பீரோவில் வைத்துவிட்டு இன்னொரு கோப்பினை எடுத்துக் கொண்டு வந்தவன் தற்செயலாக அங்கிருந்த சாலையில் புறம் பார்வையைத் திருப்பினான்.

அங்கிருந்து பார்த்தால் சாலையின் எதிர்புறம் தெரியும். அந்தச் சாலையைப் பார்த்ததும், நேற்று அவள் நின்று கொண்டிருந்த நினைவு வர, இன்றும் அந்த இடத்தைக் கவனித்துப் பார்வையை ஓட்டினான்.

அவனின் பார்வையை ஏமாற்றாமல் சில நொடிகளில் கண்ணில் சிக்கினாள் அவள். இன்றும் அவள் அங்கே நிற்பது அவனுக்கு வித்தியாசமாகப்பட்டது.

ஏதோ ஒரு உந்துதலில் தான் பார்வையை ஓட்டினான். ஆனால் இன்றும் அவள் அந்த இடத்தில் நிற்பாள் எனச் சற்றும் எதிர்பாராதவன், அவளைக் கவனித்துப் பார்த்தான்.

இன்றும் அவள் பார்வை காவல் அலுவலகத்தைத் தான் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தது. அதைக் கண்டு புரியாமல் நோக்கியவன், அவளைச் சுற்றி பார்வையைச் சுழற்றினான்.

அவளின் கார் சற்று தள்ளி தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது தெரிந்தது. அதைப் பார்த்துவிட்டு மீண்டும் அவளைக் கண்டான். அவளின் பார்வை ஒருவித எதிர்பார்ப்புடன் காவல் நிலையத்தையே முற்றுகையிடுவதைக் கண்டு “இந்தப் பொண்ணு இங்கேயே என்னத்தைப் பார்க்குது? இங்கே யாரையும் பார்க்க வந்திருந்தா நேரா அவங்களைப் போய்ச் சந்திக்காம இங்கேயே ஏன் நிற்கணும்?” என்று மெல்லிய குரலில் வாய் விட்டு சொல்லி கொண்டவன் தன் இருக்கைக்குச் சென்று கோப்பினை திறந்து வைத்துக் கொண்டு அமர்ந்தான்.

அந்தப் பெண்ணை மறந்து வேலையில் ஈடுபட நினைத்தாலும், அவளின் கண்களில் தெரிந்த தேடல் ஷர்வாவை துரத்த, கோப்பினை மூடி வைத்து விட்டு எழுந்தவன், தன் இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

வெளியே வந்து “கார் எடுக்கவா?” என்று கேட்ட காவலரை தடுத்து விட்டு, தலைகவசத்தை மாட்டிக்கொண்டு தன் வாகனத்தைக் கிளப்பியவன், இன்னும் சாலையில் நின்று கொண்டிருந்த பெண்ணின் மீது ஒரு கண்ணை வைத்துக் கொண்டே, அவளைத் தாண்டி நிற்காமல் நிதானமான வேகத்திலேயே சென்று, சிறிது தூரம் கடந்ததும் வண்டியின் கண்ணாடி வழியாகப் பின்னால் பார்த்தவன் கையில் இருந்து வண்டி லேசாகத் தடுமாறியது.

அதைச் சமாளித்து விட்டு வண்டியை ஓரம் கட்டி வேகத்தைக் குறைத்து நிறுத்திவிட்டு, பின்னால் திரும்பி பார்த்தவன் கண்களில் கேள்வி தொக்கி நின்றது.

அவள் அவனைத்தான் ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று தெரிந்த பிறகு அவனால் அதற்கு மேல் அங்கிருந்து நகரக் கூட முடியவில்லை. அவள் அங்கே வேறு யாரையாவது பார்க்க வந்திருக்கலாம். ஒருவேளை அப்படி வந்திருந்தால் நேராகப் போய்ச் சந்தி. இப்படித் தேவையில்லாமல் சாலையில் நிற்காதே என்று சொல்லத்தான் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

ஆனால் கிளம்பிய பிறகு அதைச் செய்யத் தோன்றாமல் அவளைக் கடந்து சென்றுவிட்டான். ஆனாலும் அவளின் பார்வையைக் கவனித்தவனுக்கு, அவள் பார்வை முழுவதும் தன் மேல் திரும்பவும், அவள் தேடும் நபர் அப்போ நான் தானா என்ற எண்ணம் அந்தப் போலீஸ்காரனை திகைக்க வைத்தது.

ஆனாலும் சில நொடிகளில் அவனுக்குள் இருக்கும் ஷர்வஜித் முழித்துக் கொள்ள, வண்டியை திருப்பினான். அவளின் பக்கம் மீண்டும் வண்டி திரும்பி வருவதை அதீத ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவளின் அருகில் வந்து வண்டியை நிறுத்தினான்.

வண்டியில் இருந்து இறங்காமல் தலைகவசத்தின் கண்ணாடியை மட்டும் உயர்த்தி, கூர்மையாக அவளைப் பார்த்தான்.

நடுங்க தொடங்கிய கைகளை ஒன்றோடு ஒன்று பிணைத்து இறுக்கி கொண்டு தன் பயத்தை வெளியே காட்டாமல் அவனின் பார்வையைச் சலிக்காமல் எதிர்கொண்டாள் விதர்ஷணா.

அவளின் அந்தப் பார்வையைக் கண்டு மனதில் மெச்சி கொண்டவன், வெளியே கடுமையான முகத்தைக் காட்டி, “இங்க என்ன பண்றீங்க மிஸ். விதர்ஷணா? கமிஷ்னர் ஆஃபிஸை ஏன் நோட்டம் விட்டுகிட்டு இருக்கீங்க?” என்று கேட்டான்.

அவனின் கடுமையில் தன்னிடம் இருந்து ஓட பார்த்த தைரியத்தை இழுத்து பிடித்து நிறுத்திய விதர்ஷணா, தொண்டையை மெல்ல செரும்பி கொண்டு “உங்களைப் பார்க்க தான் வந்தேன் ஜித்தா. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…” என்று லேசான தடுமாற்றத்துடனே சொன்னாள்.

“முதலில் ஜித்தானு கூப்பிடுறதை நிறுத்துங்க. என்னைப் பார்க்கணும்னா ஆஃபிஸ் உள்ளே வந்திருக்கணும். இங்கே ஏன் நிக்கிறீங்க?”

‘ஜித்தானு கூப்பிட கூடாதா? என்ன ஜித்தா நீ எப்பயும் அதுலயே நிக்கிற? நான் உனக்காக ஆசை ஆசையா உன் பேரையே பிச்சி ஆராய்ச்சி பண்ணி கண்டு பிடிச்ச பேரு அது. அதை எப்படி நான் விட முடியும் ஜித்தா?’ என்று மனதிற்குள் ஜித்தா என்றழைத்து சொல்லிக் கொண்டவள் வெளியே, “அபிஷியல் விஷயம்னா உள்ளே வந்திருப்பேன் சார். ஆனா நான் பேச வந்தது பர்ஷனல். அதான் இங்கேயே நிக்கிறேன் சார்…” என்று சாரில் அதிக அழுத்தம் கொடுத்துச் சொன்னவளை முறைத்துப் பார்த்தான்.

அவளின் தடுமாற்றம் இப்பொழுது காணாமல் போனதை உணர்ந்து “பர்ஷனலா…? என்கிட்ட பேசுற அளவுக்கு அப்படி என்ன ப்ரஷனல் இருக்கு?” என்று கடுமையுடனே கேட்டான்.

உள்ளுக்குள் தான் மேற்கொண்டு பேசப்போகும் விஷயத்தை நினைத்து உதறல் எடுத்தாலும் அதை வெளியே கடுகளவும் காட்டி கொள்ளாமல், “நம்ம விஷயம் கொஞ்சம் பேசணும். ஆனா இங்க ரோட்டுல எப்படிப் பேச? அதோ அங்க இருக்குற காப்பி ஷாப் வர்றீங்களா?” என்று சிறிது தொலைவில் இருந்த கடையைக் காட்டி அழைத்தவளை சுட்டெரிப்பது போல் பார்த்தான்.

“மிஸ்.விதர்ஷணா நீங்க யாரோ? நான் யாரோ? அப்படி இருக்கும் போது நம்ம விஷயம்னு ஒன்னு எங்க இருந்து வந்தது? நம்ம விஷயம்னு ஒன்னு இல்லாதப்போ மேற்கொண்டு பேசவும் அவசியம் இல்லை. அனாவசியமா இங்க நின்னு டயத்தை வேஸ்ட் பண்ணாம கிளம்புங்க. இனி நான் உங்களை இந்த இடத்தில் பார்க்க கூடாது…” என்று கோபத்துடன் சொன்னவன் அங்கிருந்து கிளம்ப வண்டியை இயக்க தொடங்கினான்.

அவன் கிளம்பப் போவதை கண்டு பதறியவள், “அச்சோ…! போய்றாதீங்க ஜித்தா. இனி நான் இங்க வரலை. ஆனா நான் சொல்ல வந்ததைச் சொல்லிட்டு போய்டுறேன். இனி நீங்க வேற நான் வேற இல்லை. நாம் தான்! யெஸ்…! ஐ லவ் யூ ஜித்தா…!” என்று அவனின் வண்டியை மறித்துக் கொண்டு வேகமாகப் பேசிய விதர்ஷணாவை,

“வாட்…!” என்று அதிர்ந்து பார்த்தான் ஷர்வஜித்.