பனியில் உறைந்த சூரியனே – 1

அத்தியாயம் – 1

“பளார்…!” என அறையும் சத்தம் கேட்டு அந்த வழியில் சென்று கொண்டிருந்த சிலர் நின்று பார்த்தார்கள்.

அங்கே தனக்கு விழுந்த அறையில் அதிர்ந்து கன்னத்தில் கை வைத்தபடி நின்று கொண்டிருந்தான் இளைஞன் ஒருவன்.

அவனின் எதிரே பார்த்தாலே பயந்து நடுங்க வைக்கும் கடுமையான முகத்துடன் அந்த இளைஞனை முறைத்துக் கொண்டிருந்தான் வாட்டசாட்டமாய் இருந்த இன்னொருவன். அவனின் விழிகள் கோபத்தில் கொழுந்துவிட்டு எரிவது போல் அக்கினியாய் சிவந்திருந்தன.

அவனின் கோபத்தைக் கண்டவர்கள் நின்று வேடிக்கை பார்த்தால் ‘எங்கே தங்களுக்குத் திட்டு விழுமோ?’ என அஞ்சி அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்கள். அவனைப் பற்றி அறிந்த ஆட்கள்.

அவனை அறியாதவர்கள் ‘எதற்கு அடித்தான்?’ என்று நின்று பார்க்க நினைக்க, அவர்களைத் திரும்பி ஒரு பார்வைப் பார்த்தவனின் விழிகளில் தெரிந்த கடுமையில் ‘நமக்கு எதுக்கு வம்பு?’ என்று அவர்களும் அந்த இடத்தை விட்டு நகர்த்தார்கள்.

அறை வாங்கியதிலேயே சர்வமும் ஆட நடுங்கி கொண்டு நின்றிருந்த இளைஞன், இப்போது எதிரே இருந்தவனின் பார்வையைப் பார்த்து ஒருவர் கூட என்னவென்று கேட்காமல் செல்வதில் இன்னும் நடுங்கினான்.

அவன் நடுங்குவதை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் ‘இன்னும் ஒரு அடி போடலாமா?’ என்ற எண்ணத்துடன் அவனையே உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனின் எண்ணத்தைப் புரிந்து கொண்டவன் போல், அவனிடம் அடி வாங்குவதற்குப் பதில் பணிந்து விடுவதே மேல் என நினைத்து “சார்… சார்… என்னை விட்டுருங்க சார். இனி நான் இந்தத் தப்பை செய்ய மாட்டேன். மன்னிச்சுருங்க சார்…” என்று கெஞ்ச ஆரம்பித்தான். அவன் அடித்த அடி, இளைஞனை அப்படிக் கெஞ்ச தூண்டியது. அப்படி ஒரு அடி வாங்கியிருந்தான்.

அவனின் கெஞ்சலைக் கண்டு கொள்ளாமல் இளைஞன் அங்கிருந்து செல்ல முடியாமல் அவனின் கையை இறுக பற்றி இருந்த அடிக் கொடுத்தவன் “நீ செய்த காரியத்துக்கு அப்படியே உன்னைக் கட்டிப் போட்டு உதைக்கணும்னு எனக்குத் தோணுதே? இப்ப என்ன செய்யலாம்? நீயே சொல்லு…!” என்று கடுமையுடன் கேட்டவன் விழிகள் நான் உன்னை ஏதாவது செய்தே தீருவேன் என்பது போல உறுத்து விழித்தன.

அந்த விழிகளின் தீட்சண்யத்தைத் தாங்க முடியாமல் திண்டாடிப் போனான் இளைஞன். பெரியவன் பிடித்த பிடி வேறு கையே கழன்று விழுவது போல வலியை கொடுத்தது.

வலியில் துடித்தவன் “ஐயோ…! விட்டுருங்க சார். இனி அந்தப் பொண்ணைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேன். விட்டுருங்க… நான் போய்டுறேன்…” என்று மீண்டும் கண்ணீருடன் கெஞ்ச ஆரம்பித்தான்.

ஆனால் உன் கெஞ்சல் என்னைச் சிறிதும் அசைக்காது என்பது போல அவனின் கையை இன்னும் முறுக்கத் தான் செய்தான்.

அந்த இளைஞன் ‘ஏன் தான் நான் இந்தப் பக்கம் வந்தேனோ?’ என்று நினைத்து வருந்தும் அளவிற்கு வலி வேலையைக் காட்டியது.

அது ஒரு மாலை நேரம்.

இப்பொழுது இப்படிக் கெஞ்சிக் கொண்டிருப்பவன் சற்று நேரத்திற்கு முன்…

இப்பொழுது அவர்கள் இருவரும் நின்று கொண்டிருந்த சாலைக்கு வரும் முன்…

ஆட்கள் நடமாட்டம் சரியாக இல்லாத பக்கத்தில் இருந்த மற்றொரு தெருவில், அந்த இளைஞன் ஒரு பள்ளி மாணவியைப் பின் தொடர்ந்து வந்தான்.

அந்தப் பெண்ணும் பயந்து போய் வேகமாக நடந்து கொண்டிருந்தாள்.

ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணின் அருகில் வந்து அவள் செல்ல முடியாத வண்ணம் வழி மறைத்தவன் “ஹேய்… என்ன? நான் உன் பின்னாடி தான் வர்றேன்னு உனக்குத் தெரியுதுல? அப்புறம் ஏன் கண்டுக்காம போற? நின்னு பேசலாம்ல?” எனத் திமிராகக் கேட்டான்.

அந்த மாணவி தன் பார்வையைச் சூழல விட்டாள். அந்தத் தெருவில் அவர்களைத் தவிர ஆள் நடமாட்டம் இல்லாமல் அமைதியாக இருந்தது.

அதுவும் அவன் பேச்சில் இருந்த நிதானமற்ற தன்மை, அவன் குடித்திருப்பதாகக் காட்டிக் கொடுத்தது.

அதனைக் கண்டு கொண்டவள் ‘அய்யோ…! இவனிடம் போய் மாட்டிக் கொண்டோமே?’ எனப் பயந்து போனாள். ஆனாலும் ஏதோ ஒரு தைரியத்தில் வார்த்தைகளை வம்படியாக வரவழைத்து “நீங்க யாருனே எனக்குத் தெரியாது. நான் ஏன் உங்ககிட்ட பேசணும்?” என்று உள்ளுக்குள் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தாலும் தைரியமாகக் கேட்டாள்.

ஆனால் அவள் மறைத்த பயம் அவளின் சிறு தடுமாற்றத்தில் வெளிப்பட்டதை உணர்ந்துக் கொண்டவனுக்கு இன்னும் மிரட்டிப் பார்க்கும் ஆவல் தலை தூக்க “யாருன்னு தெரியுதோ இல்லையோ ஒருத்தன் பேச வந்தா பேசிதான் ஆகணும்…!” எனத் தெனாவட்டாகப் பேசினான்.

அவனின் தெனாவட்டுப் பேச்சு அவளின் தைரியத்தைக் குறைத்தாலும் ‘இவன் என்ன லூஸா? இப்படிப் பேசிக்கிட்டு இருக்குறான்?’ என நினைத்தவள் அவனிடம் பேசுவதே வேஸ்ட் என நினைத்து விலகி நடக்க ஆரம்பித்தாள்.

அவள் பதில் பேசாமல் போகவும் வேகமாகக் கையைப் பிடித்துத் தடுத்தான்.

அவனின் செயலில் பதறியவள் “ஏய்…! என் கையை விடு. விடுடா…!” என்று கத்தினாள்.

“ஹேய்… என்ன ‘டா’ போடுற?” என்று மிரட்டிய படி கையைப் பிடித்து அருகே இழுத்து அவளின் முகத்திற்கு நேராகக் குனிந்தான்.

அவன் செய்யப் போவதை நினைத்துப் பதறியவள் தன் தைரியத்தை எல்லாம் திரட்டி அவளைப் பிடித்திருந்த அவன் கையை நறுக்கென்று கடித்து வைத்து விட்டு ஓட ஆரம்பித்தாள்.

அதை எதிர்ப்பார்க்காதவன் “ஏய்…!” எனக் கையை உதறிக் கொண்டு அவளைத் துரத்திக் கொண்டு இவனும் ஓட ஆரம்பித்தான்.

அப்போது அவனின் முன் வந்து வழி மறைத்து நின்றது ஒரு இரு சக்கர வாகனம்.

நிதானத்தில் இல்லாமல் அந்தப் பெண்ணை மட்டும் குறிவைத்து அந்த வாகனத்தைச் சுற்றிக் கொண்டு ஓட முயன்றவனைப் பைக்காரன் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தி இன்னொரு கையால் விட்டான் ஒரு அறை!

அந்த அறையில் நிற்கமுடியாமல் தடுமாறி விழுந்தான் இளைஞன்.

விழுந்தவன் பேண்ட் பையில் இருந்து ஒரு பாட்டிலும், சிகரெட் பாக்கெட் ஒன்றும் வெளியே வந்து விழுந்தது.

அதைப் பார்த்து இன்னும் கோபமான பைக்காரன் தன் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி வந்து எழுந்து நின்றிருந்த அந்த இளைஞன் கன்னத்தில் மீண்டும் விட்டான் ஒரு அறை.

இப்பொழுது இளைஞன் ஓடி வந்துவிட்ட இடம் ஆள் நடமாட்டம் இருந்த சாலை. அங்கே வந்ததைக் கூடக் கவனிக்காமல் அந்தப் பெண்ணைத் துரத்துவதிலேயே கவனத்தை வைத்திருந்தவன், ஒரு பைக் தன்னை வேகமாகப் பின் தொடர்ந்ததை உணர வில்லை.

பைக்காரன் வழி மறைத்து நின்ற நேரத்தில் அந்தப் பெண் சிட்டாகப் பறந்திருந்தாள்.

இளைஞன் வாங்கிய அறையில் உறைந்து கன்னத்தில் கைவைத்த படி நிற்க… பைக்காரன் நிதானமாகத் தன் பைக்கில் ஸ்டைலாகச் சாய்ந்து நின்றுகொண்டு தன் எதிரே இருந்தவனை முழுமையாக அளவிட்டான். கல்லூரி மாணவன் போல் இருந்தான். அவனின் கண்களில் குடியின் அடையாளம் தெரிந்தது. அந்த இளைஞனின் கை ஒன்று இப்போது பைக்காரன் கையில் அகப்பட்டிருந்தது.

அவனை அளவிட்டு முடித்து விட்டு “ஹ்ம்ம்… சொல்லுங்க…! சார் இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்ன என்ன வேலை செய்தீங்க?” எனக் கேட்டவனின் கண்களில் கனல் தெறித்தது. ஆனால் பேச்சில் புயலை உள்ளடக்கிய அமைதி தெரிந்தது.

அவன் கேட்ட கேள்வியைக் கூட உணரமுடியாமல் கன்னத்தில் கை வைத்து அதிர்ந்து நின்றவனை உலுக்கி “சொல்லுங்க சார்? என்ன பதிலைக் காணோம்?” என்று சற்று குரலை உயர்த்திக் கேட்டான்.

“அது… அது…” என இழுத்தான் இளைஞன்.

ஒரு பெண்ணைத் தைரியமாகக் கையைப் பிடித்து இழுத்தவன் வாயில் இருந்து அதைச் சொல்ல கூடத் தைரியம் வராமல் வார்த்தை அவனுக்குத் திக்கியது.

“ஹா.. என்ன? அது… அது…? அதுக்கு மேல சொல்லு. என்ன செய்த நீ?” என்று விடாமல் திருப்பிக் கேட்டான். இன்று நீ சொல்லாமல் உன்னை விடப் போவது இல்லை என்பது போல இருந்தது அவன் கேள்வி கேட்ட விதம்.

இவன் சொல்லாமல் நம்மை விட மாட்டான் போலவே என நினைத்து “அது…! அந்தப் பொண்ணு கையைப் பிடிச்சு இழுத்தேன்…” என்று குரலில் அதிகமான தயக்கம் தெரிய சொன்னான்.

அவன் பதில் சொன்னதும் கடும் கோபம் கொண்டு, பற்றி இருந்த அவனின் கையை இறுகி பிடித்தவன் “என்ன? என்ன சொன்ன? என் காதில் சரியா விழலை…” எனச் சொல்லிக் கொண்டே கையின் இறுகலை கூட்டினான்.

அதில் கை வலி தாங்க முடியாமல் அந்த இளைஞன் “ஐயோ…! அம்மா…!” எனக் கத்தினான்.

“உஸ்…” என வாயில் விரல் வைத்துக் காட்டியவன் “சத்தம் கூடுச்சு இன்னும் வலி கூடும் பரவாயில்லையா?” எனக் கையைக் காட்டிச் சொன்னான்.

இளைஞன் தன் கத்தலைச் சட்டென நிறுத்தினான்.

அவன் நிறுத்தியதும் “சார் வயசென்ன?” என்று கேட்டான்.

“பத்தொன்பது வயது. காலேஜ் ப்ரஸ்ட் இயர் படிக்கிறேன் சார்…” வலியை பொறுத்துக் கொண்டு கண்ணில் கண்ணீர் கோர்க்க திக்கிக் கொண்டே பதில் சொன்னான்.

அவன் சொன்னதைக் கேட்டதும் முகம் ரௌத்திரத்தில் சிவக்க “ம்ம்… பத்தொன்பது வயது…! இந்த வயசுலேயே நீ இப்படி இருந்தா இன்னும் வருங்காலத்துல என்ன என்னவெல்லாம் செய்வ? உன்னைச் சும்மா விடக் கூடாதே…!” என நாடியில் கைவைத்துத் தடவி கொண்டே பேசியவன்,

“உன் போன் நம்பர், வீட்டு அட்ரஸ் சொல்லு?” எனக் கேட்டான்.

“நீங்க ஏன் சார் அதை எல்லாம் கேட்குறீங்க?அதெல்லாம் கொடுக்க முடியாது…” எனத் தயங்கிய படியே என்றாலும் எதிர்த்துக் கேள்வி கேட்டான் இன்னும் அடங்காமல்.

அவன் பேச்சில் கடுப்படைந்தவன் “ஓஹோ…! சாருக்குக் கோவம் வேற வருமா?” எனக் கேட்டவாறே அவனின் கையை லேசாக முறுக்கினான்.

அப்படி முறுக்கியதில் ‘ஐயோ…’ எனக் கத்த போனவன். ‘எங்கே கத்தினால் இன்னும் கையை உடைத்தே விடுவானோ?’ என்று பயந்து வேக வேகமாகப் பதிலை ஒப்பித்தான்.

அவன் சொன்ன முகவரியை குறித்துக் கொண்டவன், அவன் கொடுத்த அலைபேசி எண்ணிற்கு அழைத்தான். இளைஞனின் கால் சட்டை பையில் இருந்த கைபேசி ஒலி எழுப்பவும் தன் கைபேசியை அணைத்து வைத்து விட்டு “ஓகே… சரியான நம்பர் தான் குடுத்துருக்க. இப்ப நீ போ. இனி ஒரு தரம் எந்தப் பொண்ணு பின்னாடியாவது பார்த்தேன் தொலைச்சுடுவேன்..‌.!” என்று மிரட்டி அவனைப் போக விட்டான்.

அவன் அங்கு இருந்து ஓடவும், அவனைப் பார்த்துக் கொண்டே தன் போனில் இருந்து ஒரு போன் கால் பேசிவிட்டு வைத்தவன், தன் வாகனத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான்.

இரு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்று தன் வீட்டு வாசலில் நிறுத்தியவனின் முகத்தில் கோபம் இன்னும் மீதி இருந்தது.

அந்தக் கோபத்துடனே அழைப்பு மணியை அழுத்தினான்.

கதவு திறக்கப்படவும் வேகமாக உள்ளே நுழைந்து கதவை திறந்து விட்ட தன் அன்னையின் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்காமல் படபடவெனப் படிகளில் தாவி ஏறி தன் அறைக்குச் சென்றான்.

அவனின் நடையில் இருந்த கோபத்தைப் பார்த்த அவனின் அம்மா ‘சரிதான்… இன்னைக்கு என்னத்தைக் கண்டானோ?’ என்று எண்ணினார்.

‘இனி வெளியே போறதுக்குத் தான் வருவான். கோபத்தில் சாப்பிடாம போய்ட போறான்’ என்று நினைத்துச் சாப்பாட்டைத் தயாராக எடுத்து வைக்க விரைந்தார்.

சிறிது நேரம் கழித்துப் போன அதே கோபத்துடன் திரும்பி கீழே இறங்கி வந்து கொண்டிருந்தவனைச் சாப்பாட்டு அறையில் இருந்தபடி பார்த்தார்.

தன் மகனின் உடையில் தெரிந்த கம்பீரத்தை எப்போதும் போல இப்போதும் ரசித்துக் கொண்டே அவனையே பார்த்துக் கொண்டிருந்தார் சந்திரா.

அத்தனை நேரமும் கோபத்தில் எதையும் கவனிக்காமல் இருந்தவன், தாயின் பார்வையைப் பார்த்து குனிந்து தன் உடையைப் பார்த்துவிட்டு ‘இந்த அம்மாவிற்கு இதே வேலையாப் போயிருச்சு!’ என்று நினைத்தபடி அவர் அருகில் வந்து நின்றான்.

அவர் இன்னும் அப்படியே நிற்க, “அம்மா நான் கிளம்புறேன்…” என்றான்.

அதில் கவனம் கலைந்தவர், முகத்தில் கடுமையுடன் கூடிய ஒரு கம்பீரத்துடன் இருந்த தன் மகனைப் பெருமையுடன் பார்த்தார்.

ஆம்! பெருமைதான். ஏனெனில் அவன் செய்யும் வேலை அப்படிப் பட்டது.

அவனின் உடையை மீண்டும் பார்த்தார். போர் வீரன் போலக் கம்பீரமாக நின்று கொண்டிருந்தான், காக்கி உடையில் இருந்த ஷர்வஜித் அசிஸ்டண்ட் கமிஷனர் ஆப் போலீஸ்!