நேசித்த நினைவுகள் – 2

ஆர்ப்பரித்து வரும் கடல் அலைகளை வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான் ஜெயராமன்.

அவனறியாது அவனையும் மீறி கண்களை நிறைத்து விழியைத் தாண்டி கன்னத்தில் இறங்கி கொண்டிருந்தது விழிநீர்.

“எதுக்கும் லாயக்கில்லாம எதுக்குத் தான் நீ பிறந்தியோ!” கோபமாய் ஒரு குரல் அவனின் செவியில் விடாது ஒலித்து அவனது மனதை கிழித்து ரணமாக்கி கொண்டிருந்தது.

கால்களை மடக்கியவாறு அமர்ந்திருந்தவனின் பாதங்களைத் தீண்டிய கடல் அலை அவனைச் சுயநினைவுக்குக் கொண்டு வந்தாலும் தனது சுயத்தை அவமதிக்கும் விதமாய் நாள்தோறும் தான் கேட்கும் இவ்விதமான பேச்சிற்கான முற்றுப்புள்ளி என்று கிட்டுமென மௌனமாய் மனதினுள் கலங்கி கொண்டிருந்தான் அவன்.

அச்சமயம் அந்தக் கடற்கரையில் அவனைக் கடந்து நடந்து சென்றவளின் பார்வைக்கு அவனது வேதனை முகமும் கண்ணீர் விழிகளும் காணக்கிடைக்க, அவனருகில் சென்று அமர்ந்தாள் அவள்.

கடலை பார்த்தவாறு அமர்ந்தவளின் பார்வை கடலை நோக்கினாலும், கைகள் அவனின் புறம் நீண்டது. “இந்தாங்க கண்ணைத் துடைச்சிக்கோங்க” கைக்குட்டையை அவன் புறம் நீட்டினாள்.

திடீரெனக் கேட்ட பெண்ணின் குரலில் அவள் புறம் திரும்பியவன், அனிச்சையாய் அவள் அளித்த கைக்குட்டையை வாங்கிக் கண்களைத் துடைத்துக் கொண்டான்.

திரும்பி அவள் முகத்தைப் பார்த்தான். அமைதியான புன்னகையுடன் அவனைப் பார்த்திருந்தவள், அவனின் கண்ணினை நோக்கியவாறு, “இதுவும் கடந்து போகும்” என்றுரைத்துக் கண் சிமிட்டினாள்.

தனக்காக ஆறுதல் கூறவும் ஒருவர் உண்டா இவ்வுலகில் என்று தான் தோன்றியது அவனுக்கு. விரக்தி புன்னகை அவனிதழில்.

“நம்மளால எதிர் கொள்ளவே முடியாத கஷ்டம்னு ஒன்னு இல்லவே இல்லங்க. சில வருடங்கள் கழிச்சு திரும்பி பார்க்கும் போது இவ்ளோ துன்பத்தையும் எவ்ளோ ஈசியா கடந்து வந்திருக்கோம்னு நமக்கே ஆச்சரியமா இருக்கும். அதுவே எதையும் வாழ்க்கைல சமாளிக்கலாம்ன்ற உத்வேகத்தை நமக்குக் கொடுக்கும். அதனால ஆல் இஸ் வெல்” சிரித்த முகமாய் உரைத்தாள்.

இதழ் சிரிக்கும் போது சேர்ந்து மின்னும் அவளின் கண்களைப் பார்த்தான். மீண்டுமாய்த் தனது பார்வையைக் கடலை நோக்கி திருப்பியவன், “ம்ப்ச் தினம் தினம் மனசை வதைக்கிற மாதிரி பேசுறவங்களை எப்படிங்க கடந்து போக முடியும். அதுவும் அவங்க என் அப்பாவா இருக்கும் போது” கமறிய குரலை சரி செய்தவாறு வேதனையை விழுங்கி அவன் உரைக்க, அவனின் சொல்லில் அதிர்ந்து விட்டாள் அவள்.

அவனின் குரலும் உடல் மொழியும், மெல்லிய ஆண் மகனாய் தான் அவனை அவளுக்கு உணர்த்தி இருந்தது. அவனின் முகத்தை நோக்கினாள். அமைதியான அப்பாவியான முகம் அவனுடையது. அதிர்ந்து பேசவும் கூட மாட்டானென ஊர்ஜிதம் செய்யும் குரல். இவனையா சொற்களால் வதைக்கிறார் இவனது தந்தை என்று தான் தோன்றியது அவளுக்கு.

ஏனோ தன்னுடன் அவனை ஒப்பிட தோன்றியது அவளுக்கு. வதைக்கும் சொற்கள் செவியைத் தீண்டி சொல்லும் ஒவ்வொரு நேரமும் இப்படி ஒரு வாழ்வு தேவையா எனக் குமைந்து வெந்து நொந்திருக்கிறாளே இவளும்! அதனுள் வாழ்ந்தும் இருக்கிறாளே! அவன் வேதனையை அவள் மனதால் உணர்ந்தாள் அந்நிமிடம்.

அவனின் பிரச்சனை என்னவென்று தெரியாத நிலையில், என்ன சொல்லி ஆறுதல் உரைப்பது எனத் தெரியவில்லை அவளுக்கு.

“உங்க பிரச்சனை என்னனு என்கிட்ட பகிர்ந்துக்கலாம்னு நினைச்சீங்கனா சொல்லுங்க. சில நேரம் வாழ்க்கைல நமக்குத் தேவைப்படுறது ஆறுதலோ உதவியோ கிடையாது. நம்ம மனசு விட்டு பேசுறதை புலம்புறதை கேட்க ஒரு காது தான் தேவையா இருக்கும்” அவனுக்குத் தனது இருப்பின் மூலம் ஆறுதல் வழங்க முனைந்தாள்.

அவளின் இந்தப் பேச்சில் சற்றாய் மனம் சமன்பட்டது அவனுக்கு. தனக்காகப் பேசும் அவளின் பேச்சை தொடர்ந்து கேட்க வேண்டுமென்ற ஆவல் எழுந்தது அவனுக்கு.

முழுதாய் ஒரு நிமிடம் அவள் முகத்தைப் பார்த்தவன், “எனக்கு ஒரு வேலை வாங்கித் தர முடியுமாங்க! இப்ப என் தேவை அது தான்” என்றான்.

திகைத்து தான் போனாள் அவள். இப்படி ஒரு உதவியைக் கேட்பான் என்று எண்ணியிருக்கவும் இல்லையே! அவனுக்கு என்ன பதில் கூறுவது என்றும் தெரியவில்லை அவளுக்கு.

ஏற்கனவே வேதனையில் இருப்பவன், தான் எதிர்மறையாய் உரைக்கும் சொல்லில் மேலும் காயம் பட்டு போவானோ? இந்த வாழ்வை முடித்துக் கொள்ளும் முடிவு ஏதேனும் எடுத்து விடுவானோ? என்று பயம் கொண்டது அவளின் மனது. அத்தகைய விரக்தி நிலையில் அவன் இருப்பதாய் தான் அவனின் வேதனை படர்ந்த முகமும் இறுக்கமான உடல் மொழியும் உணர்த்தியது அவளுக்கு.

ஆயினும் யாரென்று தெரியாத ஒருவனுக்கு எதை நம்பி வேலை வாங்கித் தருவதாய் உத்திரவாதம் அளிப்பது. ஆக அந்நேரத்திற்கு அவனின் மனநிலை மாற்றுவதற்கென, “கண்டிப்பா வாங்கித் தரேன்! இப்ப கொஞ்ச நேரம் அப்படியே நடந்துட்டே பேசலாமா? எனக்கு மணல்ல உட்கார்ந்து காலுலாம் ரொம்ப வலிக்குது!” போலியாய் முகத்தில் வலியை தேக்கி கால்களை இழுத்து விட்டுக் கொண்டு அவள் கூற, உண்மை என நம்பிய அவனும்,

“அச்சோ வலிக்காதீங்க! எனக்காகத் தானே வந்து உட்கார்ந்தீங்க! சாரி! சாரிங்க! நீங்க போங்க! நான் கொஞ்சம் நேரம் கழிச்சு வரேன்! நீங்க என் கஷ்டத்தைப் பத்தி கேட்கவும் ஏதோ ஒரு யோசனைல வேலை வாங்கித் தர கேட்டுட்டேன்! நீங்க அதெல்லாம் செய்ய வேண்டாம். யாருனே தெரியாத எனக்காக நீங்க ஆறுதலா பேசினதே போதும். நீங்க கிளம்புங்க” என்றான் அவன்.

‘என்னடா இது! அவரோட மூடை மாத்துறதுக்காக நாம ஒரு நாடகம் போட்டா இவர் நான் கடல்ல குதிக்காம விட மாட்டேன்ங்கிறது போல இருக்காரே’ என மனதினுள் எண்ணி கொண்டவளாய்,

“இப்ப நீங்க என் கூட நடக்க வந்தீங்கனா நான் உங்களுக்கு வேலை வாங்கித் தருவேன்! அப்புறம் உங்க விருப்பம்” எனக் கூறிவிட்டு அலட்சியமாய் அவள் நகர்ந்து போக,

“என்னங்க! என்ன சொன்னீங்க? வேலை வாங்கித் தருவீங்களா? நிஜமாவா?” அத்தனை ஆர்வமாய்க் கண்கள் மின்ன கேட்டான் அவன்.

‘ஓ அப்ப வேலை கிடைக்காதது தான் இவரோட பிரச்சனையா? அதுக்குத் தான் அவங்க அப்பா திட்டியிருப்பாரு போல’ மனதினுள் எண்ணி கொண்டவளாய்,

“ஆமா! நான் ஒரு இடத்துல வேலை பார்க்கிறேன். அங்க என் முதலாளிக்கிட்ட சொல்லி உங்களுக்கு வேலை வாங்கித் தரேன்” பேசிக் கொண்டே அவள் நடக்க, அவளுடன் சேர்ந்து அவனும் நடையைத் தொடர்ந்தான்.

“நிஜமா நீங்க கேட்டவுடனே உங்க முதலாளி எனக்கு வேலை கொடுத்துடுவாராங்க?” ஆவலுடன் அவன் கேட்க,

“கண்டிப்பா! என்னை என்ன நினைச்சீங்க? அங்க நான் சொல்றது தான் சட்டம். என் பேச்சை மீறி யாரும் நடக்க மாட்டாங்க. நீங்க வந்தா உங்களுக்கே புரியும்” கெத்தாய் உரைத்தவாறு தனது கைப்பையில் இருந்து ஒரு தாளை எடுத்து அதில் தனது பெயரையும் ஒரு முகவரியையும் எழுதியவள்,

“உங்க வேலைக்கு நான் கேரண்டி” என்றவாறு அவனிடம் அந்தத் தாளை வழங்கினாள்.

அதிர்ச்சியும் ஆச்சரியமுமாய் அந்தத் தாளை வாங்கிக் கொண்டவன், “சீதாலட்சுமி” என்று அதில் எழுதியிருந்த அவளின் பெயரை பார்த்து மென்னகை புரிந்தான்.

“நான் யாரு எவரு? என்ன படிச்சிருக்கேன்? என்ன ஏதுனு எதுவுமே கேட்காம, என் கவலையைப் போக்க வேலை வாங்கித் தரேன்னு சொல்றீங்களே! உங்களுக்கு ரொம்ப நல்ல மனசுங்க! தேங்க்ஸ் எ லாட்” என நெகிழ்ச்சியாய் கூறினான்.

“உங்க நன்றியை நாளைக்கு நான் வேலை வாங்கிக் கொடுத்த பிறகு சொல்லுங்க” என்றாள் அவள்.

“உங்க போன் நம்பர் தாங்க! நாளைக்கு நான் அங்க வந்ததும் போன் செய்றேன்” அவளை தொடர்பு கொள்ளக் கேட்டான்.

“ஹான் நீங்க யாருன்னே தெரியாம எப்படிங்க போன் நம்பர் கொடுப்பேன்! அதான் பேப்பர்ல அட்ரஸ் எழுதி கொடுத்தேன்” என்றவள் கூறியதும்,

முகம் சுருங்கி போனவனாய், “ஏங்க என்னைப் பார்த்தா நல்லவனாய் தெரியலையாங்க? சரி பெத்தவங்களுக்கே நான் பொறுக்கியா தானே தெரியுறேன்! உங்களுக்கு அப்படித் தோணுறதுல என்ன தப்பிருக்கு” வேதனை குரலில் கூறினான்.

‘அட இது வேறயா’ என அலுத்துக் கொள்ளத் தான் தோன்றியது அவளுக்கு.

எத்தகைய துன்பம் சூழ்ந்திருந்த பொழுதிலும் நேர்மறை சிந்தனையுடன் இன்பமாய் வளைய வருபவளுக்கு இவனின் இந்தச் சோக முகமும் புலம்பலும் சோர்வையும் கடுப்பையும் ஒரு சேர அளித்தது.

“சரிங்க நாளைக்குப் பார்ப்போம்” என்றவள் கிளம்ப எத்தனிக்க,

“பாருங்க அப்ப நீங்களும் அப்படித் தானே என்னை நினைக்கிறீங்க! அதனால தானே இப்படி வெட்டி விட்ட மாதிரி போறீங்க!” தொடர்ந்து விடாது அவளுடன் நடந்தவாறு அவன் பேச,

‘என்னது வெட்டி விடுறேனா! இவன் என்ன என் மாமனா மச்சானா? உதவி செய்ய வந்தது ஒரு குத்தமா கடவுளே’ மனதினுள் புலம்பிக் கொண்டவளாய்,

“ஏங்க கொஞ்சமாவது அறிவு இருக்கா உங்களுக்கு! புதுசா பார்க்கிறவனை உடனே எப்படிங்க நம்ப முடியும்! உங்க அப்பா அம்மா உங்களை நம்பலைனா ஏன் நம்பலைனு அவங்களைப் போய்க் கேளுங்க. உதவி செய்றேனு வந்தவளை கடுப்பேத்திட்டு இருக்கீங்க நீங்க” எனக் கடுப்பாய் உரைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் அவள்.

அவள் பேச்சில் இருந்த உண்மை புரிய, தான் பேசியது தவறெனப் புரிந்தது அவனுக்கு.

“ஏங்க இந்தக் கோபத்துல எனக்கு வேலை வாங்கிக் கொடுக்காம இருந்துடாதீங்க! நாளைக்கு நான் கண்டிப்பா நீங்க சொன்ன இடத்துக்கு வருவேன்” செல்லும் அவளின் காதில் விழுமாறு சத்தமாய் கத்தினான்.

திரும்பி அவனை ஒரு பார்வை பார்ததவள், தன் பாதையை நோக்கி நடை போட்டாள்.

அவள் பேருந்து நிலையத்தில் நிற்க, இவனும் அங்குப் போய் நின்றான்.

நேரம் மாலை ஆறு மணியைத் தொட்டிருக்க, அவனைக் கவனியாது போல் நின்று கொண்டாள் இவள்.

இவள் ஏறிய பேருந்திலேயே அவனும் ஏறினான். இவள் இறங்கிய நிறுத்தத்திலேயே அவனும் இறங்க,

‘நம்மளை தான் ஃபாலோ பண்ணிட்டு வர்றாரோ?’ பயந்து போனாள் அவள்.

ஆயினும் மனதை திடப்படுத்திக் கொண்டவளாய், அவனை எதிர் கொண்டவள், “ஹலோ மிஸ்டர்! என்ன ஃபாலோ பண்றீங்களா?” எனக் கடுமையான முகத்துடன் கேட்க,

“அய்யோ இல்லீங்க! என் வீடும் இந்தப் பக்கம் தான்ங்க இருக்கு” பவ்யமாய் உரைத்தான் அவன்.

புருவம் நெறித்தவளாய், “எந்தப் பக்கம்? எங்க இருக்கு வீடு?” சந்தேகத்துடன் வினவ,

அவன் தனது முகவரியை உரைத்தான். அவளின் வீட்டினருகில் இரண்டு மூன்று தெருக்கள் தள்ளி, முக்கியக் கடைத்தெருவில் அவனின் இல்லம் இருப்பதாய் இருந்த அந்த முகவரியில் இன்னுமே சந்தேகமாய் பார்த்தாள் அவள்.

“இன்னும் நீங்க என்னை நம்பலையா? நான் முன்னாடி நடக்குறேன்! என் பின்னாடி வாங்க” என்றவன் அவள் பதிலுக்குக் கூடக் காத்திருக்காது விடுவிடுவென முன்னே நடக்க, அவன் செல்வது அவளின் வீட்டை நோக்கிய பாதையாக வேறு இருக்க, அவன் பின்னேயே சென்றாள் அவள்.

மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்த அந்தக் கடை தெருவில் அவன் ஒரு சந்தினுள் நுழைய, அவனின் இல்லத்தைப் பார்த்து விடும் முனைப்பில் அவன் பின்னேயே சென்றாள் அவள். சிறிய சிறிய சந்துக்களாய் சென்ற அந்த இடத்தில் ஒரு இல்லத்தினுள் அவன் நுழைந்த மறுநொடி,

“இதோ வந்துட்டான்டி உன் மவன்! தண்ட சோறு திங்குறதுக்கு நேரத்தோட வந்துட்டான் பாரு. என்னமோ நான் திட்டினதுக்கு ரோசம் வந்து கடல்ல குதிச்சு செத்துடுவான்னு அழுதுட்டு கெடந்தியே! அவ்ளோ ரோசம் இருந்திருந்தா ஒரு வேலைல போய் சேர்ந்திருக்க மாட்டானா! படிக்க வேண்டிய நேரத்துல உருப்படியா படிச்சிருந்தா வேலை கிடைக்காம இருக்குமா! இன்னும் அப்பன் காசுல தின்னுட்டு எப்படித் தெனாவட்டா சுத்திட்டு இருக்கான் பாரு” மேலும் தொடர்ந்து அவர் வசைமாறி மொழிய, கண்களில் நீர் வழிய மொட்டை மாடிக்கு சென்றவனின் பின்னே சென்றார் அவனின் அன்னை கௌசல்யா.

வெளியே நின்று கேட்டுக் கொண்டிருந்த சீதாலட்சுமிக்கு உள்ளம் நடுங்கி போயிற்று.

‘அய்யோ திரும்பவும் பீச்சுக்குப் போய் விபரீதமா எதுவும் செஞ்சிட போறாரு’ என்று அவள் மனம் பதற, கண்கள் அந்த வீட்டினை சுற்றி அலைபாய்ந்த நொடி, மொட்டை மாடியின் கைப்பிடியினருகில் நின்றிருந்தவனை, அவனின் அன்னை சமாதானம் செய்யும் காட்சி கண்களில் பட, சற்று ஆசுவாசமானவளாய் அங்கிருந்து நகர்ந்தாள் சீதாலட்சுமி.


கால்கள் மரத்துப் போனது போன்ற உணர்வு எழ, கையில் இருந்த நேசித்த நினைவுகள் புத்தகத்தை விட்டு பார்வையை விலக்கியவனாய், தனது மடியில் உறங்கி கொண்டிருந்த மனைவியைப் பார்த்தான்.

‘இன்னிக்கே இந்தப் புக்கை படிச்சி முடிச்சிடுவேன்னு சவால் விட்டுட்டு தூங்குறதை பாரு’ எனச் சிரித்தவனின் மனசாட்சியோ, ‘அவளாகவா தூங்கினா? நீ தானடா அவளை டயர்ட் ஆக்கி தூங்க வச்ச?’ என உண்மையை விளம்ப, மனசாட்சியின் கூற்றில் வெட்க சிரிப்பை உதிர்த்தவனாய், படித்து முடித்த பக்கத்தின் மேலே சிறியதாய் தாளை மடித்து விட்டு கட்டிலின் அருகிலிருந்த மேஜை மீது வைத்தான்.

அதன் பின் தனது மடியில் உறங்கியிருந்த மனைவியின் தலையை அருகில் இருந்த தலையணைக்கு இடம் மாற்றினான்.

விளக்கை அணைத்து விட்டு படுத்தவனை, அரை உறக்கத்தில் கைகளால் துழாவி தேடி, அவன் மீது கைகளைப் போட்டவாறு மீண்டுமாய் உறக்கத்தினுள் ஆழ்ந்தாள் இளமதி.

அவளின் தலையைக் கோதியவனாய் விட்டத்தைப் பார்த்து படுத்திருந்தவனுக்கு வாசித்த கதையே மனதினுள் ஊர்வலம் போக, “இப்படித் தெரியாத பையன் அழுறானேனு ஒரு பொண்ணு வந்து சமாதானம் செய்றதுலாம் கதைல தான் நடக்கும். ரியாலிட்டில பையன் தான் அழுற பொண்ணை சமாதானம் செஞ்சிட்டு இருப்பான்! அப்புறம் என்னாகியிருக்கும்? அவன் கடல்ல குதிச்சிருப்பானா இல்ல இந்தக் சீதாலட்சுமியை பார்த்து வேலை வாங்கிருப்பானா?” எனச் சிந்தித்தவாறே உறங்கி போனான் விஷ்ணுராஜ்.

மறுநாள் காலை பத்து மணியளவில், “ராஆஆஜ்” என அழைத்தவாறு அவன் அலுவல் வேலை செய்யும் அறையின் கதவை அவள் திறக்க, “ஷ்ஷ்ஷ்! கால்ல இருக்கேன்” என வழமை போல் உதட்டின் மீது விரல் வைத்து அவன் சைகையில் சொல்ல, ஹ்ம்ம்ம்ம் எனப் பெருமூச்சு விட்டவளாய் கதவை அடைத்துவிட்டு சென்றாள் இளமதி.

“என்னிக்கு தான் இவருக்குக் கால் இல்லாம இருக்குமோ! எப்ப அந்த ரூம் பக்கம் போனாலும் உஸ் உஸ்னு பாம்பு மாதிரி சவுண்டு விடுறாரு. அவர் மீட்டிங் முடிஞ்சி வரதுக்குள்ள எதுக்காக அவரைத் தேடி போனேனே மறந்துடுது. இனி அவர்கிட்ட பேச வேண்டியதெல்லாம் கூட நோட்ஸ் எடுத்து வச்சிக்கனும் போல” என வாய்விட்டு புலம்பியவாறு மது பாத்திரங்களைத் துலக்கி கொண்டிருக்க,

“எதைப் பத்தி நோட்ஸ் எடுக்கப் போறாளாம் என் பொண்டாட்டி” எனக் கேட்டவாறு பின்னிருந்து அவளை அணைத்திருந்தான் விஷ்ணுராஜ்.

“வந்துட்டீங்களா! வாங்க வாங்க! சின்னப் பாத்திரமெல்லாம் நான் தேய்ச்சிட்டேன். பெரிசுலாம் நீங்க தேய்ச்சிடுங்க. வசந்தா அக்கா இன்னிக்கு லீவ்னு சொன்னாங்க” என்றவள் பேசி கொண்டே போக,

‘அடடா ராங் டைமிங்ல என்ட்ரி கொடுத்துட்டியேடா விஷ்ணு!’ அவளின் இடையினில் இருந்து மெல்ல கைகளை எடுத்தவன், மனதோடு பேசி கொண்டவனாய் நகர முற்பட,

“எஸ்கேப் ஆகலாம்னு பார்க்காதீங்க! நைட் எவ்ளோ நேரம் ஆனாலும் இன்னிக்கு இந்தப் பெரிய பாத்திரத்தைலாம் நீங்க தான் கழுவி வைக்கிறீங்க” சத்தமாய் உரைக்க,

“என் பொண்டாட்டிக்கு ஹெல் பண்ணாம யாருக்குடா பண்ண போறேன். உன் புருஷன் ஆபிஸ் வேலையை முடிச்சிட்டு வந்து உனக்கு ஹெல்ப் செய்வேனாம்” அவளின் கன்னத்தைக் கிள்ளி கொஞ்சியவனாய் தனது அலுவல் பணியைத் தொடர சென்றான்.

மதிய உணவை இருவருமாய் சேர்ந்து உண்ட பிறகு, விஷ்ணுராஜ் பாத்திரங்களைத் துலக்க, படுக்கையறையின் பின்னே இருந்த பால்கனியில் துவைத்த துணிகளை உலர்த்திவிட்டு, “ராஜூப்பா பாத்திரத்தைலாம் கழுவிட்டீங்களா” எனக் கேட்டவாறே முகப்பறைக்கு வந்த மதி,

அங்குச் சமையலறையில் பாத்திரங்களைக் கழுவி கொண்டிருக்கும் தன் மகனை பார்த்தவாறு நின்றிருந்த தனது மாமியார் ஜானகியை கண்டு,

“அய்யய்யோ இவங்க எப்ப வந்தாங்க?” என மனதோடு அலறியவாறு அதிர்ந்து நின்றாள்.

— தொடரும்