நேசித்த நினைவுகள் – 1

நேரம் இரவு பன்னிரண்டை நெருங்கி கொண்டிருந்த சமயம் தன்னருகில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கணவனை ஆர்வமாய் பார்த்து கொண்டிருந்தாள் இளமதி.

சரியாய் பன்னிரண்டை எட்டியதும், “ராசுக்குட்டி!” என அவனைச் சுரண்டினாள். அவ்வாறு அவனை அழைக்கும் பொழுதெல்லாம் இதழில் தவழும் வெட்க முறுவல் இப்பொழுதும் அவளிதழில் முற்றுகையிட்டது.

அவனிடம் சிறிதும் அசைவு தென்படாதிருக்க, “ராஜுப்பா” என நன்றாக உலுக்கினாள் அவனை.

“ஹ்ம்ம் ஹ்ம்ம்” என முனகினானே தவிர விழிக்கவில்லை.

சற்று கடுப்பானவளாய், “என்னங்க! என்னங்க” என அவனின் தோளில் நாலு தட்டு தட்டினாள்.

“ம்ப்ச் என்னடி!” சற்றாய் உறக்கம் கலைந்தவன் தூக்கத்திலேயே கேட்டவாறு மீண்டுமாய் உறக்கத்திற்குள் சென்றான்.

“ஹான் உங்க மேனேஜர் போன் செஞ்சாரு! உங்க பிராஜக்ட் ரிலீஸ்ல இஷ்யூ ஒன்னு வந்துடுச்சாம்” என்று அவள் உரைத்த மறுநொடி, அடித்துப் புரண்டு எழுந்தவன்,

“என்னது போன் வந்துச்சா! என் போன் எங்கே? லாப்டாப் எங்கே?” எனக் கட்டிலை விட்டு எழுந்து லுங்கியை இறுக்கி கட்டி கொண்டவாறு கேட்டான்.

படபடவென அங்கிருந்த மின்விளக்குகளை ஒளிரவிட்டவாறு மணியினைப் பார்த்தான் விஷ்ணுராஜ்.

அது நள்ளிரவு பன்னிரெண்டை காண்பிக்கவும் தான் அவனின் மனைவியின் கிண்டல் பார்வையைக் கண்டான்.

அதில் கடுப்பானவனாய், “அடியேய் கொஞ்சமாவது மனசாட்சி இருக்காடி உனக்கு! இப்ப ஒரு மணி நேரம் முன்னாடி தானடி வேலையை முடிச்சிட்டு வந்து படுத்தேன்” என அவளை முறைத்தவாறு கத்தியவனை நோக்கி கோபப்பார்வை வீசியவள், “ஹேப்பி பர்த்டே” என்றாள்.

“என்னது இன்னிக்கு எனக்குப் பிறந்தநாளா?” யோசனையுடன் கேட்டவாறே தனது கைபேசியில் தேதியை அவன் பார்க்க,

அதில் மேலும் கோமுற்றவளாய், “பர்த் டே எனக்கு” கடிப்பட்ட பற்களுக்கிடையே வந்து விழுந்தது அவளின் வார்த்தைகள்.

ஸ்ஸ்ஸ் என நெற்றியை சுருக்கி கண்களை மூடியவனாய், “ஆபிஸ் வேலைல மறந்துட்டேன்டி மதிக்குட்டி” என உரைத்தவாறு அவளை நெருங்கி அணைக்கப் போக, அவனைத் தள்ளி விட்டாள்.

“நேத்து நாள் பூரா இருந்த ஆபிஸ் வேலைல மறந்துருப்பீங்கனு தான் நைட் நானே எழுப்பி விட்டேன். நீங்க என்னடானா இந்த மாசத்துல என் பிறந்தநாள் வரும்ங்கிறதே மறந்து இருக்கீங்கனு இப்ப தானே தெரியுது” எனக் கோபமாய் அவள் உரைக்க,

“ம்ப்ச் இப்ப அதுக்கு என்ன செய்ய மது? இந்த மாசம் முழுக்கவே நான் ஆபிஸ் வேலைல பிசினு உனக்குத் தெரியும் தானே! நாளைக்குக் கண்டிப்பா வெளில போய்ப் பெரிசா செலிபிரேட் செஞ்சிடலாம் சரியா” என மீண்டுமாய் அவளை நோக்கி அவன் போக,

“ஒன்னும் தேவையில்ல! போய் தூங்குங்க போங்க” என அவள் படுத்துக் கொண்டாள்.

“சரி தூங்கு! இங்க மனுஷன் ஆயிரத்தெட்டு வேலைல மண்டையைப் பிச்சிக்கிட்டு இருக்கும் போது நடுராத்திரி விஷ் செய்யாதது பெரிய குத்தம் மாதிரி மூஞ்சை தூக்கி வச்சிக்கிட்டா நான் என்ன செய்ய முடியும்! விஷ் பண்ண வந்தவனை விரட்டி விட்டது நீதான்! அப்புறம் நாளைக்கு என் மேல பழியைத் தூக்கி போட கூடாது சொல்லிட்டேன்”

அவளின் முகத்திருப்பலில் உண்டான கோபத்தில் வாய்க்கு வந்ததை அவள் கேட்குமாறே சத்தமாய் கத்தியவன் அவளுக்கு முதுகு காண்பித்தவாறு படுத்துக் கொண்டான். படுத்ததும் அலுப்பில் உறங்கியும் போனான்.

‘இப்ப நான் என்ன செஞ்சிட்டேன்னு இவர் இப்படிக் கத்திட்டு இருக்காரு! ஆக்சுவலி நான் தானே கோபப்படனும்! கல்யாணமான இந்த நாலு வருஷத்துல ஒரு தடவையாவது அவரே வந்து விஷ் பண்ணிருப்பாரா? நான் தானே மொத விஷ் இவர்கிட்ட இருந்து தான் வரனும்னு நானே ஞாபகமும் படுத்தி வாழ்த்தும் வாங்கிப்பேன். இதுல கோபம் வருதா இவருக்கு! இந்தத் தடவை நான் மலையிறங்குறதா இல்ல’ தனக்குள்ளேயே பேசிக் கொண்டவாறு உறங்கி போனாள் இளமதி.

மறுநாள் காலை சமையலறையில் சமையல் வேலையைத் துரிதமாய் செய்து கொண்டிருந்தாள் இளமதி.

படுக்கையறையில் விஷ்ணு எழுந்துவிட்ட அரவம் கேட்டு, அவனுக்கான தேநீரை தயாரிக்கத் தொடங்கினாள்.

ரெஸ்ட் ரூமில் இருந்து முகத்தைத் துடைத்துவாறு வெளி வந்தவனின் கையில் தேநீர் கோப்பையைத் திணித்தவள், “ஏங்க இந்த மிக்சி ஃபிரிட்ஜ்லாம் ஒரு நாள் கிளீன் பண்ணி தாங்க. ரொம்ப அழுக்கா இருக்கு” என்றவாறு அகன்ற சமயம் தான் அவன் மீது தான் இரவு கோபம் கொண்டது நினைவுக்கு வந்தது அவளுக்கு.

மேலும் அவன் இன்னும் தன்னிடம் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பதும் நினைவில் வர, கண்ணைச் சுருக்கி தன்னைத் தானே திட்டி கொண்டவளாய் அவனருகில் சென்றவள், “டீ குடுத்தனால எனக்கு உங்க மேல கோபம் இல்லனு அர்த்தம் இல்ல! நான் இன்னும் உங்க மேல கோபமா தான் இருக்கேன்” என்று முறைத்தவாறு உரைத்து அவசரமாய் அடுப்பில் இருந்த பொரியலை கிண்ட சென்றாள்.

இத்தனை நேரமாய் அவளின் செயலை ரசனையாய் பார்த்து கொண்டிருந்தவன் சரியென மௌனமாய் தலையசைத்தான்.

பொரியலை கிண்டியவாறே அவனைத் திரும்பி பார்த்தவளின் கண்களுக்கு அவனின் தலையசைத்தல் தெரிய, ‘மனசுல பெரிய கண்கள் இரண்டால் ஜெய்னு நினைப்பு’ என மனதுக்குள்ளேயே நொடித்துக் கொண்டாள்.

குளித்துவிட்டு வந்து மெத்தையில் அமர்ந்தவனின் கையில் தோசை தட்டை நீட்டியவளின் கையைப் பிடித்து இழுத்து தன் மடியில் அமர செய்தவன், “ஹேப்பி பர்த்டேடி பொண்டாட்டி” என அவள் கன்னத்தில் இதழ் பதித்தான்.

“நான் சொல்லி யாரும் எனக்கு பர்த்டே விஷ் பண்ண தேவையில்லை” என அவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள, திருப்பிய முகத்தினருகே தன் கையைக் கொண்டு சென்றவன் அவள் வாயில் தன் கையிலிருந்த தோசையை ஊட்டி விட்டான்.

ஊட்டிய வேகத்தில் அவளின் முகத்தைத் தன்னை நோக்கி திருப்பியவன் அவள் முக உணர்வுகளைப் படிக்க முயன்றான்.

அவனின் பார்வையின் அர்த்தம் புரியாது அவள் புருவத்தை உயர்த்தி என்னவென வினவ, “இல்ல புதுசா வித்தியாசமான கலர்ல சட்னி இருந்துச்சா அதான் சட்னி சாப்பிட்ட உன் ரியாக்ஷன் எப்படி இருக்குனு பார்க்கலாம்னு திருப்பினேன்” என அவன் கூறிய நொடி, கையிலிருந்த தட்டை எதிரில் இருந்த மேஜையில் வைத்தவள், படபடவென அவள் கைகளுக்கு ஏதுவாய் அவன் உடலில் கிடைத்த இடத்தில் எல்லாம் அடித்து வைத்தாள்.

“அடியேய் வலிக்குதுடி!” என அவளை அணைத்தவாறு அவளின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டான்.

“ம்ப்ச் விடுங்கப்பா!” என அவள் எழ முயல, “சாரிடி!” என மீண்டுமாய் அவளை இழுத்து மடியில் அமர்த்திக் கொள்ள, “சரி சரி சாரி அக்சப்டட்! விடுங்க” என எழுந்து கொண்டாள்.

“உனக்கும் தோசை எடுத்துட்டு வா! சேர்ந்தே சாப்பிடலாம்” எனக் கூறியவன் அவள் வருகைக்காக காத்திருந்தான்.

அவள் வந்து அமரவும், “ஏன்டி கல்யாணமான முதல் வருஷம் உன் பர்த்டேவை மறந்துட்டேன்னு எவ்ளோ ஆர்ப்பாட்டம் பண்ண! உன்னை மலையிறக்க ஒரு வாரமாச்சே! இப்ப என்னடானா சாரினு சொன்னதும் அக்சப்டட்னுட்ட! நான் கிப்ட் கூட கொடுக்கலையே” என ஆச்சரியமாய் வினவினான்.

“ஆமா நமக்கு வாய்ச்சது எப்பவுமே இப்படித் தான் இருக்கும்னு தெரிஞ்ச பிறகு கோபப்பட்டு நான் ஏன் என் உடம்பை கெடுத்துக்கனுமாம்! யூ நோ அடிக்கடி கோபப்பட்டா முகம் சீக்கிரம் வயசான மாதிரி ஆகிடுமாம்” எனத் தோசையை உண்டவாறே தீவிரமாய்க் கூறியவள் மேலும் தொடர்ந்து,

“ஆனாலும் நம்ம பையன் கூட இல்லாத இந்த நேரத்தை யூஸ் செஞ்சிப்பீங்கனு நினைச்சேன்! உங்களுக்கு விவரம் போதலை” எனக் கண் சிமிட்டிவாறு கேலியாய் சிரித்துவிட்டு நகர,

“அடிங்க! உனக்குக் கொழுப்பு அதிகமாகிடுச்சுடி!” அவனின் சிரிப்பு குரல் அவளைப் பின் தொடர்ந்தது.

வீட்டிலிருந்தே செய்து கொண்டிருக்கும் தனது அலுவல் வேலையில் அவன் மூழ்கி போக, குளித்து முடித்துத் துணியை வாஷிங் மெஷினில் போட்டு விட்டு வந்தவள் தனது ஃப்ரீலேன்ஸ் வெப் டிசைனிங் பணிக்கு வந்திருக்கும் வேலையைக் கவனிக்கலானாள்.

இடையில் வீட்டு வேலையாள் வந்து வீட்டை பெருக்கி துடைத்து விட்டுப் பாத்திரங்களைத் தேய்த்துவிட்டுச் சென்றிருந்தார்.

மதியம் இரண்டு மணியளவில் எண்ணெயை சூடேற்றி அப்பளத்தை பொறிக்க அவள் தயாராகிக் கொண்டிருந்த சமயம் வீட்டின் அழைப்புமணி ஒலி எழுப்பியது.

அடுப்பை சிறு தீயில் வைத்துவிட்டு கதவை திறந்தவள் கண்டது அஞ்சல் பணியாளரை தான்.

அவரைக் கண்டதும், ‘பிறந்தநாள் ஞாபகமில்லனு சொல்லிட்டு நமக்குத் தெரியாம எதுவும் கிப்ட் சர்ப்ரைஸ்ஸா ஆர்டர் செய்துட்டாரா இவரு’ என எண்ணிக் கொண்டே அவரளித்த கவரை வாங்கிக் கொண்டாள் இளமதி.

“ராஜ் எனக்குத் தெரியாம கிப்ட் எதுவும் ஆர்டர் செஞ்சீங்களா?” எனச் சத்தமாய் கேட்டவாறே அவனறை பக்கம் செல்ல, அவன் அலுவல் பணி நிமித்தமாய் ஏதோ மீட்டிங்கில் பேசி கொண்டிருக்க, தனது வாய் மீது ஒற்றை விரலை வைத்து ஷ்ஷ் என்றவன் அவளை அமைதியாக இருக்கும்படி பணித்தான்.

“ஓ கால்ல இருக்கீங்களா” என்றவளுக்கு அப்பொழுது தான் அடுப்பில் வைத்திருந்த எண்ணெய் நினைவுக்கு வர, கையிலிருந்த அஞ்சல் கவரை அங்கிருந்த மேஜையில் வைத்து விட்டு அவசரமாய் சமையலறை நோக்கி சென்றாள்.

மதிய உணவுக்காக விஷ்ணுவை அழைத்தவளுக்கு வெளிநாட்டிலிருக்கும் அவளின் தங்கையிடம் இருந்து அழைப்பு வர, விஷ்ணுவை உண்ண கூறிவிட்டு அவளிடம் பேச சென்று விட்டாள்.

விஷ்ணு உண்டுவிட்டு தனது அலுவல் வேலையைத் தொடர சென்று விட்டான். உணவு உண்டவாறே தங்கையிடம் இரண்டு மணி நேரமாய் பேசி முடித்தவள், காயப்போட்டிருந்த துணிகளை மடித்து வைத்துவிட்டு தனது வெப் டிசைனிங் வேலையைச் செய்தவள், மாலை நேரம் தேநீர் போட்டு அவனுக்கு அளித்து விட்டு தனது வேலையில் மூழ்கினாள்.

அன்று யாரெல்லாம் அவளுக்கு அழைத்து வாழ்த்து தெரிவித்தார்கள் என இரவுணவு உண்டவாறே அவள் அவனிடம் உரைத்த நேரம் தான் அவளுக்கு அந்த அஞ்சல் நினைவே வந்தது.

உடனே சென்று அதை எடுத்து வந்தவள், “ராஜூப்பா எனக்கு சர்ப்ரைஸ்ஸா கிப்ட் எதுவும் ஆர்டர் செஞ்சீங்களா என்ன?” எனக் கேட்டவாறே அந்தக் கவரை அவன் கையில் கொடுத்தாள். உண்டு முடித்தவன் கைகளைக் கழுவி விட்டு அந்தக் கவரை பிரித்தான்.

“ஆனா ஏன் உங்க பேருல கொரியர் அட்ரஸ் கொடுத்திருக்கீங்க! என் பேருல தானே எனக்குக் கிப்ட் வரனும்” எனப் பூரிப்பான முகத்துடன் அவள் கேட்க,

“அது உனக்கு வந்திருந்தா தானே உன் பேருல வரும் மதிக்குட்டி” என்றவனைக் குத்தவா கடிக்கவா என்ற வெறியில் பார்த்திருந்தாள் இளமதி.

“அப்ப எனக்காக ஒரு குட்டி கிப்ட் கூட வாங்கனும்னு உங்களுக்குத் தோணலைல” என ஆரம்பிக்கவும்,

“இன்னிக்கு தான் என்னமோ அதிசயமா என் பொண்டாட்டி என்கிட்ட சண்டை போடாம இருக்கானு இப்ப தான் பரத்கிட்ட சொல்லிட்டு இருந்தேன்! அதைப் பொய்யாக்கிடாதேடி பொண்டாட்டி” பயக்குரலில் கூறினான்.

“ஆஹா சார் அப்படியே நான் சண்டை போடுறதை பார்த்துப் பயந்துட்டாலும். நான் தான் இங்க தொண்டை தண்ணீர் வத்த கத்திட்டு இருக்கனும். நீங்க காதுல பஞ்சு வச்ச மாதிரி தானே சுத்திட்டு இருப்பீங்க” என நொடித்துக் கொண்டாள்.

விஷ்ணு அளந்து பேசும் ரகம் என்றால் இளமதி மனதிலுள்ளதை மறைக்காது நீண்ட வரலாறாய் பேசிவிடும் ரகம். திருமணமான புதிதில் ஏன்டா திருமணம் செய்தோம் என்று எண்ணுமளவிற்கு சண்டையிட்டுக் கொண்டவர்கள் தான் இருவரும். இளமதியின் எதிர்பார்ப்பு அவனிடத்தில் தோற்றுப் போகும் ஒவ்வொரு முறையும் அழுது புலம்பி கோபமாகவே அவனிடத்தில் கொட்டி விடுவாள். முதலில் ஏட்டிக்கு போட்டியாய் அவளிடத்தில் சண்டையிட்டவன் தான் அவனும். நான்கு வருட வாழ்வில் கிடைக்கப்பெற்ற தங்களது இணைப் பற்றிய புரிதலில் எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொண்டு விட்டு கொடுத்து வாழ பழகியிருந்தனர் இருவரும்.

விஷ்ணு பிரித்த அந்தக் கவரில் ஒரு புத்தகம் இருந்தது. புத்தகத்தை முன்னும் பின்னுமாய் திருப்பிப் பார்த்தவனுக்கு அதனுள் ஒரு தாள் இருப்பது தெரிந்தது. அதை எடுத்து பார்த்தவனின் அருகில் வந்து அவன் கையில் இருந்த புத்தகத்தை வாங்கிய இளமதியின் கண்கள் பரவசத்தில் மின்னியது.

“ஏங்க எனக்குப் புக் படிக்கிற ஹேபிட் இருக்குன்றதையே கல்யாணமான பிறகு நான் மறந்துட்டேன்ங்க! படிக்கிறோமோ இல்லையோ இப்படிப் புக்கை பார்க்கிறதே அவ்ளோ ஹேப்பியா இருக்கும் தெரியுமா! ம்ப்ச் இந்தக் கல்யாணம் எவ்ளோ விஷயங்களை நம்மளை மறக்க வச்சிடுது” என்றவாறு அந்தப் புத்தகத்தைப் பிரிக்கப் போனவளிடம் அந்தத் தாளை நீட்டினான் விஷ்ணு.

‘இந்தக் கதையில் வரும் ஒரு முக்கியக் கதாபாத்திரம் தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர். தங்களின் வாழ்விலும் முக்கியப் பங்கு வகிப்பவர். அது யாரெனத் தாங்கள் கண்டுபிடிக்கவே இப்புத்தகத்தைத் தங்களுக்குப் பரிசாக அனுப்பி இருக்கிறேன். கண்டுபிடிக்க முயலுவீர்கள் என நம்புகிறேன். கண்டுபிடித்த பிறகு தங்களுக்கே இதைக் கண்டுபிடிக்க கூறியதற்கான காரணக் காரியங்கள் புரிய வரும்’

அந்தத் தாளில் இருந்ததை வாய்விட்டு படித்தவள், “எந்தக் கூமுட்டைங்க உங்களுக்கு இப்படி ஒரு புக்கையும் கொடுத்து க்விஸ்ஸும் வச்சிருக்கிறது! உங்களுக்குத் தான் தமிழ் படிக்கவே வராதே” என அவனைக் கேலி செய்தாள்.

“ஏன்டி யார் சொன்னா எனக்குப் படிக்க வராதுனு? அதெல்லாம் வரும். ஆனா பொறுமையா படிப்பேன்” என்றான் அவன்.

“எவ்ளோ பொறுமையா ராசுக்குட்டி? ஒரு வரி படிக்க ஒரு மணி நேரம் ஆக்குவீங்களே அந்தப் பொறுமையை சொல்றீங்களா?” என வாய்விட்டு சிரித்தாள்.

அவளின் காதை திருகி அலரவிட்டவன், “இதுக்காகவே இந்தப் புக்கை நான் சீக்கிரம் படிச்சு முடிக்கிறேன்டி” எனச் சபதமிட்டான்.

“நீங்க எப்ப வேணாலும் படிங்க! ஆனா இன்னிக்கு நைட் நான் இதைப் படிச்சு முடிச்சிடுவேன்” அந்தப் புக்கை பிரித்துப் பார்த்தவாறு அவள் உரைக்க,

“அதுக்கு நான் விட்டா தானே மேடம்!” என்றான் சிரித்தவாறு.

அவனின் முகத்தில் விரவியிருந்த ரசனை பாவனையைக் கண்டவள், “ஓ சார் ரொமேன்ஸ் மூடுல இருக்கீங்களோ” என்றாள்.

“பின்ன அப்புறம் பையன் இல்லாத நேரத்தை யூஸ் பண்ண தெரியாத கேனயன்னு என்னைய நீ கேவலமா திட்டுறதுக்கு முன்னாடி நானே முந்திக்க வேண்டாமா” என்றவனுக்குக் கைபேசி அழைப்பு வர, பேச சென்று விட்டான்.

அந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்தவள், அதன் அட்டை படத்தில் இருந்த இதய வடிவ சின்னத்தையும் கடலலையையும் பார்வையிட்டவாறு, “நேசித்த நினைவுகள்” என அட்டையில் எழுதியிருந்த பெயரை படித்தாள்.

— தொடரும்