நிறம் மாறும் வானம் -1

நிறம் 1

வாழ்வென்ற புரியாத ஏட்டில்
புதிரான பக்கமாய்
வந்த நீ யாரடி!
உயிரைத் தீண்டும்
உன் குரலில் இதயம் நழுவுதடி!


“கேட் நீ என்னைவிட்டு போய் பத்து வருஷம் ஆகிடுச்சு. உன்னை என்னால மறக்க முடியவில்லை. ஒரு டாக்டரா இருந்தும் என்னால எதுவும் செய்ய முடியவில்லை.” விம்மிக்கொண்டே கல்லறையின் அருகில் மண்டியிட்டு அதன் மீது தலையை வைத்து அழத் தொடங்கினான்.

கோடைக்கால துவக்கம். சூரியன் தன் கதிர்களை ஊற்றி பூமியை கொதிக்கும் பாய்லராக மாற்றிக் கொண்டிருந்தான். சிலிகான் பள்ளத்தாக்கான பெங்களூரிலும் அதன் தாக்கம் இல்லாமல் இல்லை. பெங்களூரின் இந்திரா நகர் கல்லறை. ஒரு கல்லறையின் எதிரே ஆறடியில் ஒருவன் நின்றிருந்தான்.


அவன் கண்களில் சோகம் தேங்கியிருந்தது. சோகத்தை உடைத்து வெளியே வந்த கண்ணீர் முகத்தில் பூத்திருந்த வியர்வையுடன் கலந்ததிருந்தது. கல்லறையில் செதுக்கியிருந்த பெயரை வருடினான்.
கேத்தீரின் ஜோசப்
தோற்றம் : 03.05.1990 மறைவு : 05.04.2011


“டேய் மச்சி , எழுந்திருடா. ஏண்டா அதுக்குள்ள இங்க வந்துட்டியா? பிரஷண்டேஷனுக்கு எவ்வளவு பாராட்டு தெரியுமா? எவ்ளோ பெரிய டாக்டர் நீ..எவ்ளோ பேர காப்பாத்தியிருக்க. இப்படி நீ அழலாமா டா. எழுந்திருடா மது.”
இர்சாத் அவன் தோளைப் பற்றி எழுப்பி காருக்கு அருகில் கூட்டிச் சென்றான்.

“டேய் காருக்குள்ள உட்காரு. ஹோட்டல் போய் நம்ம திங்க்ஸ் எடுத்துட்டு தமிழ்நாட்டுக்கு போலாம் வாடா.”


காரில் ஏறிய இருவரும் அமைதியாக இருந்தனர். எதுவும் பேசவில்லை. ஹோட்டலில் தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு மீண்டும் காரில் ஏறினர். இர்சாத் காரை முடுக்கிவிட்டு மீயுசிக் ஃப்ளேயரை ஒலிக்கவிட்டான்.

ருவரும் நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்தனர். எவனோ ஒருவன் வாசிக்கிறான்..இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்…என்ற பாடலைக் கேட்ட மதுபாலன் “டேய் பாட்டு கூட நம்ம சூழ்நிலைக்கு ஏத்த மாதிரிதான் ஓடுது. இந்த பாட்டு வரிகள் எவ்வளவு உண்மைடா. இதுல வர்ற மீயுசிக் தான் மருந்துடா.’’


“அப்பாடா, பேசிட்ட. கேளு நல்லா கேளு. உனக்கு பிடிச்ச ஏ. ஆர் பாட்டுதான். அதான் போட்டுவிட்டேன்.அப்படியே கேட்டுட்டு வாடா மது.”


“ம்ம்ம்..சரி.” கூறிவிட்டு கண்களை மூடினான். நேரம் போய்க்கொண்டே இருக்க அவன் இமைகளை உறக்கம் தழுவியது. கார் இப்பொழுது பெங்களூரைத்தாண்டி தமிழ்நாட்டில் நுழைந்திருந்தது. சுற்றிலும் மரங்கள் சாலையின் ஓரத்தில் வளர்ந்திருந்தன. திடீரென்று சாலையின் குறுக்கே எதுவோ வந்தது போல் இருக்க சடன் பிரேக் போட்டு நிறுத்தினான்.

ஆனால் அந்த உருவம் காரில் மோதி கீழே விழுந்துவிட்டது. பிரேக் போட்டதால் பாலனும் விழித்துக்கொண்டான்.

“என்னடா மச்சி? என்னாச்சு?”
“தெரியலடா ஏதோ மோதுன மாதிரி இருக்கு. வா பார்க்கலாம்.”


இருவரும் கீழே இறங்கினர். காரின் முன்புறம் சென்ற போது ஒரு பெண் கீழே விழுந்துகிடந்தாள். தலையின் பின்புறம் அடிபட்டிருந்தது. பாதத்திலும் காயங்கள் இருந்தது. டெனிம் ஜீன்ஸ்ம், செக்டு சர்ட்டும் அணிந்திருந்தாள். கீழே விழுந்து எழுந்து ஓடியிருப்பாள் போல, அதனால் ஆங்காங்கே மண் ஓட்டியிருந்தது. அவளிடம் அசைவு தெரிந்தது.


.”ஹலோ..கேன் யூ ஹியர் மீ.” மதுபாலன் அவளைக் கேட்க , அந்தப்பெண் கைகளை நீட்டியபடி “சேவ் மீ..டோண்ட் டேக் மீ டு தி ஹாஸ்பிட்டல்.” சிரமப்பட்டு கூறிவிட்டு மயங்கிவிட்டாள்.


“ஹலோ…ஹாலோ.” மதுபாலனின் குரல் காற்றில் வீணாகக் கலந்தது.

….மாறும்..