தீராதது காதல் தீர்வானது – 8

அத்தியாயம் 8 :

பிடிவாதம் பிடிக்கும்
என் செல்லக் காதலியே!
என் நேசமதை நீ அறிவாய்
ஆழ்ந்து நேசத்தைச் சுவாசித்துப் பார்…
உன் காதலையும் நீ உணர்வாய்
இமைகளை மூடி யோசித்துப் பார்…
உன் கைகளில் நம் காதல் குழந்தை
மனதோடு நீயும் உணர்ந்து பார்…
அழைக்கிறேன் அழகியே.. நெருங்கி வா…
என்னோடு வாழ்ந்து பார்
பிறகு உன் காதலைச் சொல்வாயாம்…

காதல் சொல்லும் முதல் நொடி மறுக்க முடியாததாக இருக்க வேண்டும் என்பது காதலில் வீழ்ந்த ஒவ்வொரு காதலன் அல்லது காதலியின் ஆசையாக இருக்கும். தொழிலில் வெற்றியாளனாக இருப்பினும் ஆரியனுக்கும் இந்த மாதிரி ஆசைகள் இருக்கத்தான் செய்தன.

அதுவும் காதல் என்று ஒன்று வந்ததும் அவன் எதிர்பார்ப்புகள், ஆர்வங்கள், ஆசைகள் அதிகமாகி விட்டன எனச் சொல்லலாம்.

தான் காதல் சொல்லும் அந்த நொடியில்.. தனக்கானவள் அதை நாணத்துடன் எதிர்கொள்ளும் காட்சி பற்றிக் கற்பனைகள் உண்டு.
தன் தேவதையின் நிலையைத் துல்லியமாகத் தெரிந்து வைத்திருந்த போதும், ஓர் ஆண்மகனாகத் தான் நிராகரிக்கப்பட்டு விடக்கூடாது என்ற பிடிவாதமும், தன் காதல் தன்னவளிடம் வெளிப்படுத்தப்படும் முதல் தருணம் வெற்றியில் முடிய வேண்டும் என்ற உறுதியும் ஆரியனுக்கு நிரம்ப இருந்தது.

இன்னும் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த முதல் தருணம் இன்னும் முடிந்து விடவில்லையே…

அவளுடைய தேடல்… தன்னைக் காணத் துடிக்கும் படபடக்கும் அவளின் இமைகள்… ஆவல் நிறைந்த பார்வைகள்… அத்தனை அழகையும் மொத்தமாக மறைந்து இருந்து ரசிப்பவன் ஆரியன்.

தன்னைக் கண்டதும் அகத்தின் மகிழ்வை மறைக்கவும், யாரோ போல் அறிமுகமற்ற பார்வையுடன் நோக்குவதும், தன்னைவிட்டுத் தூரமாய்ச் செல்ல விழைந்து ஒதுங்கிப் போக முயலும் அவள் திறமை என டானியாவின் அனைத்து செயல்களையும் அறிந்திருந்தான் அவன்.

டானியாவின் பிடிவாதத்தை எதிர்பார்த்து தான் வந்திருந்தான் ஆரியன். அவளின் மறுப்பு அவனின் மனதின் ஓரம் ஒரு சின்ன ஏமாற்றத்தைத் தருவித்ததென்னவோ உண்மை. அவளின் தற்போதைய நிலை அவனைக் கவலை கொள்ள வைத்தாலும், இந்த மறுப்பு ஒரு சிறு தடங்கல். தோல்வியல்ல எனத் தேற்றிக் கொண்டான்.

எப்படியும் இம்முறை இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டும் என்ற வேகம் அவனைச் செலுத்திக் கொண்டிருந்தது.

அவளும் தன் பிடியில் நிற்கிறாள். ஆரியனும் தான் விரும்புகிறவளை அப்படி எளிதாக விட்டுவிடும் மனநிலையில் இல்லை.

ஏதோ ஒரு வகையில் டானியா அவனை ஈர்த்துக் காதலை அறிமுகப்படுத்தி விட்டிருந்தாள். அவனும் காதல் எனும் பரந்து விரிந்த வானில் தனியாகச் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறான்.

அவள் தானாகத் தன் காதலை உணர்ந்து போட்டிருந்த திரையிலிருந்து வெளி வருவாள்.. அவனுடைய காதலை ஏற்பாள்.. அவனுடன் கைகோர்ப்பாள் எனத் தன் இணைப்பறவையை எதிர்பார்த்துக் காத்திருந்த காலம் ஒரு முடிவிற்கு வரத்தானே வேண்டும்?

ஒரு முறை ஆழமாகச் சுவாசித்தான். முன்னுச்சி முடியை அவன் மேனரிசம் போல் இடது கை விரல்களைக் கொண்டு மேலும் சற்றுக் கலைத்தான். இந்த சில நிமிடங்களுக்குள் அவன் தன்னைத் தானே சற்று நிதானத்திற்குக் கொண்டு வந்திருந்தான்.

ஆனாலும், அவள் முன் கடின முகமூடி சூட்டிக் கொண்டு மிக அழுத்தமாகப் பார்த்தான்.

“ஓ… ரியலி? நீயும் என்னை லவ் பண்றன்னு ஷ்யூரா தெரியும் எனக்கு. உன் மனசுக்கும் அது தெரியும். அப்படித் தெரிந்தும்… அதனை உணர்ந்தும் பிடிவாதம்… வீம்பு! காதலே இல்லைன்னு சொல்றே. ஹ்ம்ம்.. உன் மனசுக்குள்ள பல காரணங்கள்.. அப்படித் தானே டி..யர்?”

அந்த டியரில் கூடுதல் அழுத்தம்.. உரிமை தொனித்தது.
திக்கென்றது அவளுக்கு. கண்டு கொண்டானே! உணர்ச்சிவசப்பட்டுச் சற்றுத் தடுமாறினாள்.

“ஹாங்.. கா… காரணமா… அப்படியெல்லாம் இல்லை. நான் சொல்வது.. சொல்ல வருவது உங்கள்..”

“ஷ்ஷ்.. எனக்காக நீ எதையும் மெனக்கெட்டு பார்க்க வேண்டியதில்லை. எனக்கு, என்னை மட்டுமல்ல உன்னையும், நம் இருவரின் நலனையும் ஹேண்டில் பண்ணும் திறமை இருக்கு. புரிஞ்சுதா?”

அவளையறியாமலேயே அவன் பேச்சுக்கு மேலும் கீழும் வேகமாகத் தலையாட்டினாள். அவன் தொடர்ந்தான்.

“எது எப்படியோ, போனது போகட்டும். எதையும் யோசிக்காமல் அனைத்தையும் விட்டுவிடு. என் காதலை உனக்கு உணர்த்தியிருக்கிறேன். இப்போ, உன் ரியாக்‌ஷனை பாஸிட்டிவா எனக்குக் காட்டு.

ஐ நீட் யுவர் லவ் பேப்! நீ என்னைக் காதலி. காதலித்துத் தான் பாரேன். ஃபர்ஸ்ட் ரெண்டு பேரும் சேருவோம். பிறகு நமக்கு வரும் சவால்களை எதுவானாலும் சேர்ந்து சந்திப்போம். சமாளிப்போம்!”

இமைக்காமல் தன்னையே பார்த்துக் கொண்டு கலக்கமாக அமர்ந்திருந்தவளின் விழிகளை இதயம் வலிக்கத் தன் துடிப்பான பார்வையால் தழுவினான்.

“லுக் டானியா, லைஃப் ஹேஸ் மெனி சேலஞ்ஜஸ். நம்ம லைஃப்லயும் வரும். அதற்காகப் பயந்து ஒளிவதா? எதையும் போல்டா எதிர் கொள்ளணும். காதலில் மகிழ்ச்சி தரும் விசயங்கள் எத்தனை இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டுக் கஷ்டங்கள் தான் வரும் எனப் பிடிவாதமாகப் பேசினால் உன்னை என்ன செய்வது?”

இயலாமையால் அவன் கடினக் குரலும் கரைந்து கரகரத்து ஒலித்தது.

‘எவ்வளவு பிடிவாதம்? வாயைத் திறக்கிறாளா பார். ரொம்பக் கஷ்டம் இவளை வைத்துக் கொண்டு. ஒரேப் போல் இன்னொரு காதல் இருக்குமா? முட்டாள் தனமான எண்ணம்.

ஒவ்வொருவருக்குள்ளும் தோன்றும் பிரத்தியேகமான உணர்வு காதல். புரிந்து கொள் ப்ரின்சஸ்!

அம்மாவை நினைத்துப் பயப்படுகிறாள். அவள் எண்ணமெல்லாம், தான், தன் அம்மாவைப் போல் இருந்து விடுவோமோ என்பது தானே? ஏன் அவளின் அப்பாவைப் போலக் காதலில் உறுதியுடன் இருக்க மாட்டாளாமா? அதை எப்படிக் கேட்பது?

எனக்கு அவள் அம்மா-அப்பா பற்றிய விசயங்கள் அனைத்தும் தெரியும் என இப்போது இவளிடம் சொன்னால் எந்த மாதிரி ரியாக்ட் பண்ணுவாளோ? ஸ்ஸ்.. இப்பவே கண்ணைக் கட்டுதே!’

இரு கைகளின் விரல்களைக் கோர்ப்பதும் பிரிப்பதுமாக இருந்தாள் டானியா. ஆரியனின் இயலாமை வெளிப்படையாகத் தெரிந்தது. மனதிற்குள் இவளை வசைபாடிக் கொண்டிருக்கிறான் என அறிந்து கொண்டாள்.

“ஆரியன்..” குரலில் தயக்கம் காட்டினாள். அருகில் இருந்த ஜன்னல் வழியாக வெறித்தாள்.

“ம்ம்…” மேலே சொல் என்பது போல் பார்த்துவிட்டு அமைதி காத்தான்.

“நீங்கள் எப்படிச் சொன்னாலும் என் பதில் ஒன்று தான். ஐ காண்ட் லவ் யூ!”

“வொய்? அது தான் ஏன்னு சொல்லு… நீ வேற யாரையாவது விருப்புகிறாயா?” பட்டென்று கேட்டான்.

“நோ நோ! அப்படியெல்லாம் இல்லை. எனக்கு லவ்ல இன்ட்ரெஸ்ட் இல்லை.”

“சரி போகட்டும் விடு. உனக்கு லவ்ல இன்ட்ரெஸ்ட் இல்லை. இருக்கணும்னு நானும் சொல்லலை. காதல் வராது… வர வேண்டாம்… வராததைப்பற்றி நாம் எதுக்குப் பேசணும்? பேசவும் வேண்டாம். பட், வந்து விட்டதைப் பற்றிப் பேசலாமே? எனக்கு உன் மேல் காதல் வந்திருச்சு. அது இப்ப வந்ததில்லைன்னு உனக்கே தெரியும்.”

உணராமலேயே தலையசைத்து ஆமோதித்தாள். அதைப் பார்த்ததும் அவன் கண்களில் பளிச்சென்று ஒரு மின்னல் தோன்றி மறைந்தது.
அழுத்தமான குரலில் மேலே பேசினான்.

“நான் உன்னைக் காதலிப்பதாகக் கூறியது இன்றும் என்றும் மாறாது. ஒரு தலையாக நான் மட்டுமே உன்னைக் காதலித்துவிட்டுப் போகிறேன். அதனால் என்னோடு வந்து விடு. நாம் சேர்ந்து வாழ்வோம்..”

இன்னும் என்ன சொல்லி இருப்பானோ. அவனின் கடைசி இரு வாக்கியங்களைக் கேட்டதும் படபடவென்று வந்தது அவளுக்கு. அதிர்ச்சியில் உறைந்தது நொடிகளே!

“வாட்!! என்ன சொன்னீங்க?”

“என்னோடு வந்துவிடு. நாம் இருவரும் சேர்ந்து வாழலாம் என்றேன்.”

அகல விரித்த அவளின் விழிகளுக்குள் ஊன்றிப் பார்த்துக் கொண்டு சொன்னவன் மேல் அவளுக்குக் கொலை வெறியே வந்தது.

என்ன தான் மென்மையானவளாக இருந்த போதிலும், வேறு யாரும் இப்படிக் கேட்டிருந்தால் இந்நேரம் என்ன நடந்திருக்கும் என்று சொல்வதற்கில்லை. இவன் என்பதால் இன்னும் அங்கிருந்து அகலாமல் பதிலுரைத்துக் கொண்டிருக்கிறாள்.

அனல் சிந்த அவனைப் பார்த்தாள். “என்னை என்னவென்று நினைச்சீங்க?”

“நீ ஒரு ப்யூட்டிபுல் லேடி! என் காதலை வென்ற பிடிவாதக்காரி. என்னை மயக்கி பைத்தியமாக்கி உனக்குள் வச்சிருக்கும் ராட்சஷி. நோ நோ ப்ரின்சஸ்.. அப்படின்னு நினைக்கிறேன்” என்றான் ஆரியன் நக்கலாக.

தன் தாடையில் விரல்களைத் தேய்த்தபடி அவளை ஒரு விதமாகப் பார்த்து வேறு வைத்தான்.

அவன் தன்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்டதும் இல்லாமல் என்ன அசால்டாகப் பேசுகிறான். ராட்சஷியாமே? டானியாவிற்குள் கோபம் வந்த போதிலும், அவனின் காதலை வென்றவள் அவள் தான் என அவளின் இதயம் தொட்டவன் சொல்வதைக் கேட்டவளின் இதயத்தில், இதம் பரவியதென்னவோ உண்மை.

ஆனால், தன்னை எப்படி இவன் சேர்ந்து வாழ வா என்று அழைக்கலாம்?

“லுக் ஹியர் ஆரியன். நாம் அமெரிக்காவில் இருக்கிறோம். இக்கலாச்சாரத்தில் யாரும் யாருடனும் போகலாம்… வரலாம்… சேர்ந்தும் இருக்கலாம். திருமணம் ஆகாமல் சேர்ந்து வசிப்பதோ வாழ்வதோ சகஜமாக இருக்கலாம். பட், ஐ’ம் நாட் தேட் டைப். எனக்குன்னு சில லிமிட்ஸ் இருக்கு. ஐ கோ பை மை பிரின்சிபில்ஸ்.

என் அப்பா ஐரோப்பியராக இருந்தாலும் சில விசயங்கள் எனக்குப் பழக்கமில்லை. தமிழ் கலாச்சாரத்தைப் பற்றி முழுக்கத் தெரியாவிட்டாலும் ஓரளவு தெரியும். முன்பு அம்மா, அப்புறம் தாத்தா பாட்டி.. இவங்க வளர்ப்பினால் நான் தமிழையும் தமிழர் பண்பாடுகளையும் மதிக்கும் பெண்ணாகத்தான் இருக்கேன். ஐ காண்ட் ஜஸ்ட் லைக் தட் கம் வித் யூ!”

ஆரியனுக்குத் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தாள். யாரிடமும் அப்படி எளிதாகப் பேசாதவள், அதுவும் தன் உணர்வுகளைப் பெட்ரோவிடம் கூடப் பகிர யோசிப்பவள், இன்று இவனிடம் சரளமாகப் பேசுவது என்றால்? ஒரே வரியில் பதில் சொல்லிவிட்டு விலகிச் செல்லாமல் விளக்கம் கொடுத்துக் கொண்டு இருக்கிறாள்.

அவன் அவளுக்குப் பரிச்சயமானவன் தான். அவனைக் கடந்த இரண்டு ஆண்டுகளில் பார்த்தது மட்டுமே அந்தப் பரிச்சயத்தின் அளவு. பேசினதில்லை. அவன் சென்றமுறை தன் காதலை வேறு வகையில் தெரிவித்தும் மறுநாள் அவனிடம் எந்த ஒரு பிரதிபலிப்பையும் காட்டாதவள். அது போல இன்றும் சென்றிருக்கலாம் தான்.

ஏன் இன்னும் நின்று பேசுகிறாள்? அந்நேரம் டானியா அதை யோசிக்கவில்லை. ஆனால், ஆரியன் அவளை அறிந்து கொண்டான். அவள் மனது தன் பால் நன்றாகவே சரிந்திருக்கிறது. கொஞ்சமே கொஞ்சம் நெருங்கி வருகிறாள்.

“இப்போ நீ என்ன சொல்ல வர்ற டானியா?” மிக நிதானமாகத் தன்னவளின் அருகே சென்று நின்றவன் அவளின் விழிகளைச் சோம்பலான பார்வையால் தழுவினான்.

“உன்னுடன் சேர்ந்து வாழ முடியாது! லீவ் மீ ப்ளீஸ்!”

“உன்னை நான் பேசத்தான் அழைத்து வந்திருக்கிறேன். பிடித்தா வைத்திருக்கிறேன், லீவ் மீ என்கிறாய்?” வேண்டும் என்றே அழுத்தமான குரலில் ஆரியன் கேட்க,

“ஹக்.. இல்லை…” தயக்கத்துடன் ஏறிட்டவளின் பார்வையைச் சந்தித்தவன் கண் சிமிட்டினான்.
அவசரமாகப் பார்வையை விலக்கிக் கொண்டவளை கைப்பிடித்து இருக்கையில் அமர வைத்தவன், தானும் எதிர் இருக்கையை அவளருகே இழுத்து வசதியாக அமர்ந்து கொண்டான்.

“நான் சொல்ல வந்ததை முழுதாகச் சொல்லும் முன் என்னவொரு ரியாக்‌ஷன்… ம்ம்?”

‘அங்…’ புரியாமல் விழித்தாள் டானியா.

“என்னுடன் வாழ வா திருமணம் செய்துகொண்டு எனக் கேட்பதற்குள் இடையில் வந்து படபடவெனப் பொரிந்துவிட்டாயே…”

“மேரேஜ்?”

“எஸ்… நாம் கல்யாணம் செய்து கொள்வோமா?”

மிக மென்மையாக அவனின் குரல் ஒலிக்க, பார்வையோ அதிக ரசனையுடன் அவள் வதனத்தில் நிலைத்திருந்தது.

ஆரியன் திருமணம் என்று சொன்னதும் அதிர்ச்சியாகித் தான் போனாள் டானியா. அவன் மீண்டும், நாம் கல்யாணம் செய்து கொள்வோமா எனக் கேட்டதும், அகல விரித்த இமைகளைச் சிமிட்டாமல்.. பிளந்து நின்றுவிட்ட உதடுகளை மூடாமல் உலர்ந்து போகத் தொடங்கிய நாவுடன் அதிர்வால் உறைந்து போனாள்.

எதிர் இருக்கையின் கைப்பிடியில் முழங்கையூன்றி கன்னத்தைத் தாங்கியிருந்தவனுள் அவளின் உறைந்த நிலை ஏதேதோ எண்ணங்களைத் தூண்டியது. ஹார்மோன்களின் எக்குத்தப்பான பாய்ச்சலில் டானியாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த ஆரியனின் இதயம் தடக்தடக் என அடித்துக் கொண்டு ஜதிபோட்டது.

அவள் சொல்லப் போகும் பதிலைப் பற்றிய கவலையின்றி அவளின் விழிகளில் தொலைந்து கொண்டிருந்தவனின் இதயமோ நொடிகளில் தடம் புரண்டு அவளின் இதழ்களில் முத்தமிட மூளைக்குக் கட்டளையிட்டுக் கொண்டிருந்தது.

சற்று சரிந்து அவள் முன் குனிந்தவனின் முகம் அவளின் முகத்துடன் நேர்க்கோட்டில்.. மிக நெருக்கமாய்.. இரு நாசிகளும் உரசிக்கொள்ளும் தூரத்தில்!

சூடான அவனின் சுவாசக்காற்றில் தன்நிலை உணர்ந்தவளாக டானியா பின்னால் நகர, ஆரியனின் மனமோ ஏமாற்றத்தில் சுணங்கியது. ஆனாலும் வெறும் உதடுகளின் உரசலோடு அம்முத்தம் முற்றுப் பெற்றிருக்க வழியில்லை என்றுணர்ந்ததால், அவனுமே விலகினான்.

மனம் தடம் புரண்ட நொடிகளை எண்ணியவனுள் அதற்கான நேரமும் இதுவல்ல எனத் தாமதமாக உணர்ந்து கொண்ட வெட்கம்… இருக்கையில் இருந்து எழுந்தவன் விலகி நடந்தான்.

சில்லிட்ட தண்ணீர் பாட்டிலைத் திறந்தவன் மடமடவென்று குடித்து முடித்து அவளுக்கும் ஒரு பாட்டிலை எடுத்துக் கொண்டு வந்து தந்தான்.

“யோசித்தாயா ப்ரின்சஸ்? உனக்குக் காதல் வராது. காதலிக்கப் பிடிக்கவும் இல்லை. சோ.. வேற என்ன வழி? மேரேஜ் இஸ் அவர் ஆப்ஷன்.. நோ… நோ… அவர் சொல்யூசன். சரி தானே?”

நீரைப் பருகிக் கொண்டிருந்தவளின் காதில் விழுந்தது அவன் பேச்சு. கடந்து போன சில நிமிடங்களில் சற்றுத் தெளிவு வந்திருந்தது.

அவன் மேல் தனக்குள்ள காதலை உணர்ந்தும் அதை மறைக்க வேண்டிய கட்டாயம் எதனால்? காதலுக்குப் பிறகு திருமணம், குடும்பம் என்ற நிலையில் தன் உறுதி எவ்வளவு? தன் மனது இவனில் நிலைத்து நிற்குமா என்ற கேள்விக்கு விடை தெரியாத தவிப்பும் பயமும் மலை போல் உயர்ந்து நிற்கையில்..

எதனால் அவன் காதலை மறுக்கிறாள் என்று வெளிப்படையாகச் சொல்லவும் முடியாத நிலை. தன் அம்மாவைப் பற்றிச் சொல்வதா.. தான் கடந்து வந்த தனிமையும் ஏக்கங்களும் கொடுமையே!

அதனால் அவன் சொன்னதைக் கிரகித்தவள் தயக்கமில்லாமல் அவனுடன் உரையாடினாள்.

“ஐ காண்ட் லவ் யூன்னு சொல்றேன். மேரி மீ என்றால் என்ன அர்த்தம்? கல்யாணம் தான் சொல்யூஷனா.. வொய் காண்ட் வி ஜஸ்ட் ஸ்டாப் திஸ்? லவ், மேரேஜ் இரண்டையும் இப்படியே விட்டு விடலாமே.”

உறுதியான குரலில் சொல்லி முடித்து அவனைப் பார்க்க, அவன் இதழ்களில் குறும்புப்புன்னகை நிறைந்திருந்தது. அடுத்து ஏதோ வில்லங்கமாகச் சொல்லப் போகிறான்.

“ஐ காண்ட் லவ் யூ என்றாய், ஓகே நான் ஃபோர்ஸ் பண்ணலை. பட் ஏன் கல்யாணத்தையும் வேணாம் என்கிறாய்? தமிழ்க் கலாச்சாரத்தில் வளர்ந்தவள் என்று சொன்னாயே?

தமிழ்த் திருமணங்கள் நிறையக் காதல் இல்லாமல் தானே நடக்குது. கல்யாணமான பிறகே தங்கள் துணையைக் காதலிக்கத் தொடங்குறாங்க. விதிவிலக்கா சிலர் பிரிஞ்சாலும், பெரும்பாலானோர் இப்படித்தான்.

சிலர் காதல் வருதோ இல்லையோ திருமணத்தையும் அதன் மூலம் வரும் பந்தத்தையும் மதிச்சு வாழறாங்க. மஞ்சள் கயிறு மாஜிக் பற்றிக் கேள்விப்பட்டு இருப்பியே…” கண் சிமிட்டி குறும்பு தாண்டவமாடும் முகத்துடன் மொழிந்தான்.

பிறகு சீரியஸான குரலுக்குத் தாவியவன் மிகவும் உணர்வுப்பூர்வமான நிலையில் நின்று, “நீ உன் மேல் வச்சிருக்கிற நம்பிக்கையைவிட நான் உன்னை நம்புறேன். உன் காதலை உணர்ந்து மனம் திறப்பாய்” என்றான்.

‘என்ன தெளிவா பேசுறான். நான் சொன்னதை வச்சு மடக்கிட்டானே.. இப்படி ஒருவனையா மறுக்கறேன்… ஹ்ம்ம். என்ன செய்ய என் நிலை அப்படி.’

அவளின் எண்ணங்களுக்கு ப்ரேக்கிட்டான்.

“இன்னும் என்ன யோசனை டானியா.. உன் படிப்புப் பற்றிய யோசனையா?”

‘ச்சே.. இதை எப்படி மறந்து போனேன்? இன்னும் ஒரு வருசம் படிக்கணும் பேச்சுலர்ஸ் டிகிரிக்கு. பிறகு மாஸ்டர்ஸ்.. இவனால் எல்லாம் மறந்துரும் போல.’

“ம்ம்.. இன்னும் வொன் இயர் இருக்குப் பேச்சுலர்ஸ் முடிக்க. தென் மாஸ்டர்ஸ் படிக்கணும்.”

“படி.. கண்டிப்பாக மாஸ்டர்ஸும் படிக்கணும். கல்யாணமான பின்பும் படிக்கலாமில்ல.”

ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லித் தட்டிக் கழிக்கப் பார்த்தவளுக்கு இந்தப் படிப்பு விசயம் கிடைத்தது.

“பேச்சுலர்ஸ் முடிஞ்சதும் ஒரு வருசம் கழிச்சு நம்ம கல்யாணத்தைப் பற்றிப் பேசலாமா ஆரியன்?”

நம்ம கல்யாணம் என அவள் சொன்னதும் அவன் மனதில் சாரலடித்தது. முகத்தில் இதம் பரவியது. மலர்ந்த புன்னகையுடன்,

“வொன் இயர் கழிச்சா.. ஓ பேசலாமே! அப்போ அதுவரை நான் என்ன செய்வதாம்.. மீ வெரி பாவமில்ல? நீ சரி சொல்லு. என்ன முழிக்கிற.. நாம லவ் பண்ணுவோமா?”

“ஆங்.. நோ .. இல்ல…” அவசரமாக மறுத்தாள்.

அவனோ இரண்டில் ஒன்று என வலியுறுத்தினாலும், திருமணம் செய்யும் முடிவில் தான் இருந்தான்.

“நான் இவ்வளவு சொல்லியும் என் மனசை புரிஞ்சுக்கலையா நீ? திங் அபௌட் இட். நாளை சந்திப்போம். ஐ வாண்ட் ஒன்லி யூ அஸ் மை வைஃப். சரி, இப்போ கிளம்பு. என் கார்லயே போ. இந்தா கீ. எனக்கு இப்போ என்ஜினீயர்ஸ் மீட்டிங் இருக்கு.”

அவள் ஏதோ பேச வந்ததை அறிந்தாலும் அவன் மேலே பேச்சை வளர்க்க விரும்பவில்லை. வாசல் வரை வந்ததும் அவளைப் பிரிய மனமில்லாது தவித்தவன் அவளை இழுத்தணைத்தான். அவளுக்குமே தவிப்பாகத்தான் இருந்தது. ஆனால், வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. சில நொடிகள் இருவருக்கும் இதமளிப்பதாய்!

அவனிடம் விடைபெற்று குழப்பத்துடனே காரை இயக்கினாள். மனதினுள் பிரளயங்கள்.. இன்பமும் துன்பமுமாகப் போட்டி போட்டுக் கொண்டு கலங்கடித்தன. தன் வாழ்வில் இப்படிப்பட்டதொரு தருணத்திற்கு அவள் தயாராகி இருக்கவில்லை.

எந்த முடிவு எடுத்தாலும் அவளுக்குப் பாதிப்பு இருக்கப் போவது நிச்சயம். ஆரியனை வேண்டாம் என்று சொல்வது மிகவும் கொடுமையாகத் தோன்றியது. அதைப் பற்றி நினைத்ததும் விழிகள் கலங்கிச் சிவந்து அருவியெனப் பொழிந்தன.

அதற்காக அவனைத் திருமணம் செய்து பிள்ளைகள் பெற்று வாழ்வதும் எளிதல்லவே. தினம், தினம் தனக்கு ஒரு பதைபதைப்பு இருக்குமேயானால் அக்குடும்ப வாழ்வு தனக்கு மட்டுமன்றி அவனுக்கும் நரகமல்லவா? என்ன மாதிரியான நிலை தன்னது? அவனும் வந்து இந்தச் சுழலில் சிக்கிக் கொண்டானே. இன்னும் கண்ணீர் நிற்கவில்லை.

பாதையைப் பார்ப்பதே மிகவும் கடினமாக இருக்க, கண்களைப் புறங்கையால் துடைத்தபடி காரைச் செலுத்தினாள். அந்நேரம் வெளிப்புறமும் மறந்து போனது. எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்று கேட்டால் அவளுக்குத் தெரியாது.