தீராதது காதல் தீர்வானது – 7

அத்தியாயம் 7 :


காதலித்துத் தான் பாரேன் என்கிறாய்
காதலிக்கவே தெரியாது என்கிறேன்
விட்டு விடேன்.. தயவு செய்து!
என் சாபம்
என்னோடு போகட்டும்
உன் பின்னால்
என்றும் தொடர வேண்டாம்..

விடுவிடுவென நடக்க ஆரம்பித்தாள் டானியா. மனதில் புது விதமான உணர்வுகள். அவள் எதிர்பாராமல் நடந்த நிகழ்வுகள். இனி வரப் போவதை ஊகிக்க முடியாத தவிப்பு, குழப்பம். தலையை உலுக்கி நிதானத்துடன் நடந்தாள். மனம் சற்று சமன்பட்டது.
‘யோசிக்கணும். நான் இன்று நடந்து கொண்ட முறை சரியா? அவனருகில் இப்படி இளகி நின்றால்.. விபரீதம் அல்லவா? அவனை… அவன் என்னை நேசிப்பதை தெரியாத மாதிரி எத்தனை காலம் நடிப்பது?

முதல் சந்திப்பிலேயே என்னை வசீகரித்தவன்.. அவனுக்கும் அப்படித்தான் போல். வான்கூவர் கோல்ஃப் கோர்ஸில் முதன் முதலில் அவனைச் சந்தித்த போதே, அவனின் கூர்மையான நீலநிற நயனங்கள் அவன் ரசனையை எனக்கு உணர்த்தினவே!

எத்தனை முறை இங்கு வந்திருக்கிறான். ஒவ்வொரு முறையும் காதலை உணர்த்திச் செல்கிறானே? அவனிடம் போய் நான் இப்படி உருகி நின்றால்… போச்சு! இனி நேரிடையாக வந்து பேசுவான். அவனை எப்படித் தவிர்ப்பேன்?

எனக்குள் காதல் இல்லை! இனியும் காதல் வரக்கூடாது! இந்த உறுதியில் இருந்து எப்படி மாறிப் போனேன்? இந்த ஒரு வாரமாய் நான் நானாக இல்லையே.

பெட்ரோ செய்த வேலை. அம்மாவை அழைத்து வந்து என்னையும் அவர்களுடன் பேச வைத்து என் நிம்மதியைக் கெடுத்துவிட்டான். அம்மாவைப் பற்றிய எண்ணங்கள் மட்டுமின்றி எதனாலோ ஆரியனின் நினைவுகளும் அடிக்கடி வர வைத்ததும் அந்தச் சந்திப்பு தான்.’

யோசனையில் இருந்தாள் டானியா.

கொஞ்ச நேரத்தில் ஆரியனின் கார் அவள் அருகில் வந்தது. மறுபுறம் வந்து ஏறச் சொன்னான்.

“ம்ஹூம்” எனத் தலையசைத்து மறுத்தாள்.

வலது கரத்தால் மற்ற கதவைத் திறந்து வைத்தவன், “ப்ளீஸ் டானியா” எனவும், விழிகளை அவன் மேல் படரவிட்டாள்.

கம்பீரமானவனின் தோற்றப் பொலிவு அவளுக்கு சொன்ன சேதி?!
நிறையப் பெண்கள் அவனின் ஒற்றைப் பார்வைக்காக அவனின் பின்னால் சென்று அவனை ப்ளீஸ் பண்ணிக் கொண்டிருக்க.. ஆரியனோ அசைந்து கொடுக்காமல் அவளிடம் ப்ளீஸ் போட்டுக் கொண்டிருக்கிறான்.
டானியாவிற்கோ அவனின் காதல் தீவிரம் அச்சுறுத்தியது.

மனம் உணராது போனாலும் உடலைத் தாக்கியது வெம்மை. அடித்துக் கொண்டிருந்த கடுமையான வெயிலின் பரிசு. வேர்வையால் குளித்துத் தொப்பலாக நனைந்து கொண்டிருக்கும் அவளை அவனும் விட்டானில்லை.

காரில் ஏறியதும் ஏசியின் குளிர்ந்த காற்று தேகத்தை வருடிச் செல்ல, ஆரியனின் அருகாமை கன்னியவளின் மனதை வருடுவதாய்!
‘நான் ஏன் இப்படி மாறிப் போனேன்?’
அவனின் பார்வை அவளை ஊடுறுவியது. பிங்க் நிற மெல்லிய காட்டன் டாப்ஸ் தொப்பலாக நனைந்து உடலோடு ஒட்டிக் கொண்டு இருக்க, அவன் பார்வை அவளுக்கு சங்கடத்தைக் கொடுத்தது. அதையறிந்தவன் நாசூக்காகத் தன் பார்வையை விலக்கிக் கொண்டான்.

“ஃபீல் ஃப்ரீ ப்ரின்சஸ். உன் இடம், உனக்குச் சொந்தமான நான். ஏன் தடுமாறுகிறாய்? நீ அமர்ந்திருக்கும் இருக்கையில் மட்டுமல்ல என் காரிலும் வேற்றுப் பெண்களை நான் அனுமதித்தது இல்லை. இனியும் அனுமதிக்க மாட்டேன்.”

ஏனோ அவன் சொன்னதைக் கேட்டு டானியாவின் மனது லேசானது. அந்நொடியில் மிகவும் ஸ்பெஷலாக உணர்ந்தாள்.

ஆண்டுகளாக யாருடனும் ஒட்டாமல் தனிமையில் உழன்றவளுக்கு அவனின் ப்ரின்சஸ் என்ற அழைப்பும், விடாமல் தொடர்ந்து வந்து தன் காதலை உணர்த்தும் பொறுமையும் ரொம்பவும் பிடித்துப் போனது.

அவனை விட்டு தள்ளிப் போய் விடு என அறிவு சொன்னாலும் இதயம் அவனைச் சுற்றிப் படரத் துடித்தது.
‘என் மனதிலா காதல் இல்லை? என்னை இத்தனை மாதங்களாக நானே ஏமாற்றிக் கொண்டிருந்தேனா, இல்லை, இப்போது தான் உணர்கிறேனா?’

“எங்கே போகலாம்? முதன்முதலில் ஒன்றாக இணைந்திருக்கிறோம். என்றும் நினைவில் இருக்கப் போகும் இந்நாளின் பொன்சுவடு.. உன் சாய்ஸ்.”

‘என்னை வலுவிழக்கச் செய்கிறாயடா.. ப்ளீஸ்…’ கெஞ்சலாகப் பார்த்தாள்.

கேள்வியாய்ப் புருவங்களை உயர்த்திய ஆரியனின் உதடுகளில் விரிந்த புன்னகை.

“சொல் டானியா. எங்கே போகலாம்? உன்னிடம் தனியாகப் பேசணும். ஏனென்று உனக்கும் தெரியும். இனியும் என்னை ஏமாற்றுவது போல் உன்னை ஏமாற்றிக் கொண்டிருப்பது சரியா? நீயே யோசித்துப் பார்.”

ஆரியன் சொல்வதில் உண்மை இருந்த போதும், பெண் மனம் முரண்டியது.

“ஹே ப்ரின்சஸ்.. பேச மாட்டாயா?”

“ஹ்ம்ம்.. உங்களிஷ்டம். எங்கேயாவது போகலாம்.”

‘இனிமேல் வேறு என்ன சொல்ல முடியும்? இன்று என் தடுமாற்றம் காட்டிக் கொடுத்து விட்டது.’ தன் உடையை ஒரு முறை மேலும் கீழும் பார்த்தவளை தலை சாய்த்து இடுங்கிய விழிகளால் அளவெடுத்தான்.

சில நிமிடங்களில், ‘டாரியன் வெக்கேஷன் வில்லாஸ்’ என்று பெயர் தாங்கி நின்ற புதிய கட்டிடங்கள் எழும்பிக் கொண்டிருந்த வளாகத்திற்குள் நுழைந்தது கார்.

விநோதமான பெயர் என்று நினைக்கும் போது மூளைக்குள் மணியடிக்க… டானியா ஆரியன் என்பதை இணைத்து இருக்கிறான். அவனின் வேகம் அவளுக்கு மிரட்சியூட்டுவதாய்!

மிக அழகான வளாகம். ஒரு பக்கம் வேலைகள் முடிந்து தயார் நிலையில் இருந்தன வில்லாஸ் என அழைக்கப்படும் தனி வீடுகள். மற்றொரு பக்கம் வேலைகள் இன்னும் முடிவடையாத நிலையில் வளர்ந்து வரும் கட்டிடங்கள்.

வெவ்வேறு ரகங்களில் அமைந்திருந்தன அவ்வீடுகள். வெளித் தோற்ற அமைப்புகளின் நேர்த்தி அசர வைத்தது. கண்களுக்குக் குளிர்ச்சியூட்டும் வகையில் ஆங்காங்கே நீரூற்றுகள். ஃப்ளோரிடா மாகாணத்திற்கேற்ற மரங்களும் செடிகளும் நேர்த்தியாக நட்டு வைக்கப்பட்டிருந்தன.

ஏற்கெனவே இருந்த பனை மரங்களின் அணிவகுப்பு ஆங்காங்கே வசீகரிக்கும் வகையில் சீராக்கப்பட்டிருந்தது.

ஜே. பி. நேத்தன் குரூப்ஸின் தனித்துவம் ஒவ்வொரு இடத்திலுள்ள கட்டுமானப் பணிகளில் மிளிர்ந்ததைக் கண்டு மனதிற்குள் பெரும் பிரமிப்பாய்!

ஆரியனைத் தெரியும் தனி ஆளாக. அவன் பின்னணியைப் பற்றி அவள் ஆராய்ந்ததில்லை. ஏனோ அதில் அக்கறை கொண்டிருக்கவில்லை. ஆரியன் ஜே. பி. குரூப்ஸின் முடி சூடா மன்னன்! இப்போது தான் புரிந்து கொண்டாள். புரிந்ததும் அவளுக்குள் சில்லிட்டது.. இவனைத் தவிர்க்க வேண்டும் என்ற உறுதி மேலோங்கியது!

பணத்தினால் வரவில்லை அந்த மிரட்சியும் உறுதியும். அவன் மேலும் அவனின் காதல் மேலும் இருந்த மரியாதையால் வந்தது. ‘எத்தனை வேலைகளை விட்டுவிட்டு, தொடர்ந்திருக்கிறான்.’

இன்று ஆரியனைப் பற்றி ஓரளவு புரிந்ததும், அவளின் அப்பாவுடன் அவனை ஒப்பிடத் தோன்றியது. அவரும் இவனைப் போல் வெவ்வேறு தொழில்களில் காலூன்றி இருப்பவர். ஒரு இடத்தில் நில்லாமல் பறந்து கொண்டிருப்பவர். காதலில் உறுதியானவர். இப்படி, இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்ததாகவே அவளுக்கு உறுதிப்பட்டது.

“பிடிச்சிருக்கா ப்ரின்சஸ்?” மந்தகாசப் புன்னகையைத் தேக்கி விழிகளில் ஆர்வம் பொங்க வினவினான்.

இவன் எதைப் பற்றிக் கேட்கிறான்? விழித்தாள்.

அந்தத் தனி வில்லாவின் முன் கார் நின்றிருந்தது.

“வா உள்ளே போகலாம்.”

அவளின் புறம் வந்தவன் தன் வலிய கரத்தை நீட்டி காத்திருக்க, சிறு புறாவாக மென்கரம் அவனின் உறுதியான கையில் அடங்கியது.
அவனின் ஸ்பரிசம் கூச்சத்தைத் தந்தாலும் அழுத்தமாகப் பிடித்திருந்த வலிய கரத்தை விலக்கி விட மனமில்லாது போனது.
டாரியன் ப்ராஜக்ட் பற்றி விளக்கிக் கொண்டே வீட்டை சுற்றிக் காட்டினான்.

“டாரியன் மிக வித்தியாசமான பெயர்.”

“ம்ம்.. அழகானதும். மிகவும் பொருத்தமான பெயர்.. சரியா ப்ரின்சஸ்?” கண் சிமிட்டியவனின் பார்வையைத் தாங்கி நிற்க இயலவில்லை.

“கிவ் மீ பைவ் மினிட்ஸ். இதோ வருகிறேன். நீயும் ரெஃப்ரெஷ் செய்து விட்டு வருகிறாயா?”

அவன் விலகியதும் அப்பாடா என ஆழமான மூச்செடுத்து அந்த ரெஸ்ட் ரூமிற்குள் நுழைந்தாள். வேகமாக வழிந்த குளிர்ந்த நீரை முகத்திலடித்துத் துடைத்துக் கொண்டாள். கசகசப்புக் குறையவில்லை. நீண்ட நேரம் வெயிலில் நடந்ததால் வந்தது. குளித்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது.
மாற்று உடைகளைத் தவிர சோப்பு, ஷாம்பு என அனைத்துப் பொருட்களும் அங்கு அழகிய சிறு அலங்காரக் கூடையில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.
ஷவரைத் திருகினாள். மிதமான சூட்டில் உடலில் பட்ட நீர் மனதிற்கும் இதமளித்தது. குளியலினூடே நினைவலைகள் தடுமாறின. படகின் இரு துடுப்பைப் போன்ற நிலையின் தவிப்பு!

‘ஹூம்.. எப்படியும் அவனிடம் என் நிலையைத் தெளிவாக விளக்கிவிட வேண்டும். என்னால் காதலிக்க முடியாது. அப்பாவைப் போல் இவன் தவிக்க வேண்டாமே!’

சில மணித்துளிகள் தடம் புரண்ட இதயத்தை இழுத்துப் பிடிக்கத் தனிமையான சில நிமிடங்கள் உதவின.

கதவுத் தட்டப்பட்டது. கதவைத் திறந்தால் யாருமில்லை. ஆனால், வெளியே ஒரு சிறு பரிசுக்கூடை வீற்றிருந்தது. சில ரோஜா மலர்களின் நடுவேப் புத்தாடை ஒன்று தன்னைத் தழுவி இருந்த ரோஜாக்களின் அழகைத் தோற்கடிப்பதாய்..

நாசூக்கான அவன் விலகலும், தன் மனமறிந்து செயல்படும் விதமும் மேலும் அவனின் அக்கறையையும் காதலையும் எடுத்துக்காட்ட, இன்னும் சில நிமிடங்களில் அவனை மறுக்கப் போகிறாள் என்ற எண்ணம் தன்னையே வெறுக்கச் செய்தது.

பிஸ்தா நிறத்தில் கச்சிதமாகப் பொருந்தி முட்டியைத் தொட்டது அந்த ஸ்லீவ்லெஸ் டிரஸ். மேல்புறத்தில் மார்பு பகுதியை நிறைத்தன வெள்ளி மற்றும் செவ்வரளி நிறப்பூக்கள். இடுப்பை இறுக்கிப் பிடித்துக் கொடியெனக் காட்டிய லேசினாலான வேலைப்பாடு. டானியா வரவேற்பறையில் பிரவேசித்ததும் விழியகலப் பார்த்தவனின் பிரமிப்பு வெளிப்படையாக வந்தது.

“வாவ்! ப்ரின்சஸ் யூ ஃப்ளாட்டன் மீ. இந்த டிரஸ் உன் அழகுக்கு மிகவும் பொருத்தமா இருக்கு. உன்னைப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும் எனை வீழ்த்திப் போகிறாய்!”

வெளிப்படையான அவன் பேச்சுக் கூச்சத்தைத் தர, தலையை வேறுபுறம் திருப்பி பார்வையை தரையில் வீற்றிருந்த கார்பெட்டில் பதித்தாள்.

அருகில் வந்தவன் வலது கரத்தைப் பிடித்துக் கொண்டு சில நொடிகள் விரல்களை வருடினான். ஒற்றை விரலால் தன்னவளின் முகம் நிமிர்த்தி ஆழ்ந்த பார்வையைச் செலுத்தினான்.

“ஐ லவ் யூ ஃப்ரம் தி பாட்டம் ஆப் மை ஹார்ட் ப்ரின்சஸ்!”

அவனின் தொடுகையும் உருகிப் போய்க் காதல் சொன்ன மென்மையான குரலும் சிலிர்க்கச் செய்தன. உணர்ச்சிகளின் பிடியில் நின்றவனின் அழுத்தமான உதடுகளிலும் துடிப்பு. துடிப்பின் காந்தசக்தி அவள் இதழ்கள். மென்மையாக இதழ்களைத் தீண்டிச் சென்ற அவனின் முத்தம் இதயம் வரை இனிக்கச் செய்வதாய்!

மனதிற்கினியவன் காதல் சொன்ன நிமிடங்களைப் பொக்கிஷமாக இதய அறையில் பூட்டி வைத்தாள் டானியா. மீண்டும் கிட்டாத நிமிடங்கள்.. அவனை விழிகளால் வருடி தன்னுள் படம் பிடித்து சேகரித்தாள்.

அவன் கண்களில் கோடி மின்னல்கள். ஆவலும் ஆர்வமுமாக அவள் சொல்லும் பதிலை எதிர்பார்த்து நிற்கிறான்.

‘இப்போது என் பதிலைச் சொல்ல வேண்டும். இந்த நிமிடங்கள் வராமலேயே போய் இருக்கலாம். என்னால் இவனுக்கும் இம்சை. எப்படிச் சொல்வது? என்னவென்று சொல்வேன்?’
டானியாவிற்கு அவனைப் பிடித்தும் மறுப்பது வேதனையைத் தந்தது.

ஒற்றை இருக்கையில் அவன் எதிரே அமர்ந்திருந்தவளை இமைக்காமல் பார்த்திருந்தவனுக்கு அவளின் நிலை தெள்ளத் தெளிவாய்!

அருகில் வந்து மண்டியிட்டவன் அவள் கரங்களைத் தன் கைகளுள் அடக்கி மென்னகை சிந்தினான்.

“உன் முகம் உணர்ச்சிகளைக் காட்டும் கண்ணாடி போல். நீ என்ன நினைக்கிறேன்னு உன் கண்களே சொல்லுது.”

“இல்லை.. நான்.. காதலைப் பற்றி எனக்கு எண்ணம் இல்லை.”

“உஷ்ஷ்.. எதுவும் நெகடிவ்வா சொல்லாதே. யோசித்து விட்டு வா. பிறகு பேசுவோம். உன் பதில் தெரியும் வரை நான் இங்கே தான் இருக்கப் போறேன்.”

“இதில் யோசிப்பது என்ன. எனக்கும்.. என் மனதிற்குத் தெரியும்”

“உன் மனதிற்கு என்ன தெரியும்? ஊம்ம்.. எதுவும் சொல்வதற்கு முன் ஒன்றை மட்டும் நீ புரிஞ்சுக்கணும். நான் உன்னைக் காதலிப்பது என்றும் மாறாது. இது வரை உன் எண்ணம் எதுவாகவேனும் இருந்திருக்கட்டும். இனி, ப்ளீஸ் நீயும் என்னைக் காதலித்துப் பாரேன் ப்ரின்சஸ்..”

“ஆரியன் ப்ளீஸ்.. லீவ் மீ. இந்த மாதிரி பேசி என்னை குழப்பாதீங்க. உங்கள் மேல் எனக்கு எந்த விதமான எண்ணமும் இல்லை.”

“ஓ.. நீ சொல்வதை நான் அப்படியே கேட்டுக் கொள்ளணுமா? என் மேல் எண்ணம் இல்லாதவள், இன்று என் குரலைக் கேட்டதும் ஏன் உணர்ச்சிகளைக் காட்டினாய்?

நான் உன் முகம் பார்த்துப் பேசினாலும் பேசா விட்டாலும் உனக்கு என்ன வந்தது? ஏன் அழுது கரைந்தாய்? சிறு தொடுகை தான் என்றாலும் எப்படி அனுமதித்தாய்?

ஐ கேன் ஃபீல் யுவர் லவ் டானியா! இல்லையென்றால் இப்படித் தொடர்ந்து வந்து கொண்டிருக்க மாட்டேன். இன்று நடந்தது போல் ஒரு நிகழ்வு என்னை விரும்பும் பெண்ணிடம் மட்டுமே சாத்தியம்.”

“நோ!! எனக்குள் காதல் இல்லை.. இனியும் வர வாய்ப்பேயில்லை. ஐ காண்ட் லவ் யூ!”

“வொய்?” ஒற்றை வார்த்தைக் கடினமாக வந்து விழுந்த விதம், அவள் இதயத்தில் வாள் கொண்டு கீறிய வலியை ஏற்படுத்தியது.

“உங்களை மட்டுமல்ல. நான் யாரையும் காதலிக்க முடியாது.”

“அது தான் ஏன் என்று கேட்கிறேன் டானியா?”

“எனக்குள் காதல் வராது. ப்ளீஸ் விட்டு விடுங்கள். ஐ’ம் எ லூசர். வாழ்வில் நிறைய இழந்தவள். தோற்றுப் போனவள். என்னோடு சேர்ந்தால் உங்களுக்கும் தலைவலி. இழப்பு, தோல்வி என வரலாம். வேண்டாம். என்னால் உங்களுக்கு எந்தக் கஷ்டங்களும் வேண்டவே வேண்டாம். என் வேதனைகள் என்னோடு போகட்டும்.”

“எத்தனை வருசம் வாழ்ந்து விட்டாயென இப்படிப் பேசுறே? எப்போ, எங்கே, எதிலே தோற்றுப் போனாய்? எனக்கும் இழப்பு, தோல்வி வருமா? எதில் வரும்? என்ன உளறல். காதல் உனக்கு வராதா? ஹஹா.. குட் ஜோக். இதை நான் நம்பணுமா.. ஹ்ம்ம்… சொல் டானியா?”

உள்ளுக்குள் நொறுங்கிக் கொண்டிருக்கிறாள்.

‘முதல்முறையாக இருவரும் மனம்விட்டுத் தனியாகப் பேசுகிறோம்.. எனக்கு எப்படியோ, ஆனால் ஆரியன் என்னை மனதார விரும்புகிறான்.

அழகான சந்திப்பு! உணர்வுப்பூர்வமான காதலைச் சொல்லும் சர்க்கரை நிமிடங்கள்! போற்றி ஆதர்ஷிக்க வேண்டிய விசயம். இனிமை கெட்டுக் கோபமாகப் போகணுமா?’
அவனுக்காக அவளின் மனதில் வேதனைப் பந்து எழும்பியது.

தான் வேதனையால் கசங்கிச் சிவந்த முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொள்ள, இரண்டு எட்டில் அருகில் வந்தான். அவ்விழிகளில் கோப மின்னலின் சாயல்..

“என்ன தடுமாறுகிறாய்? பதில் சொல்ல முடியவில்லையா? பொய் சொல்வது கஷ்டமாத் தான் இருக்கும்.”

ஊசியாகத் தைத்தன அவனின் வார்த்தைகள். இருந்தாலும் அவள் சிறு வயதிலிருந்து அனுபவித்த வேதனைகள் காதலை ஒப்புக்கொள்ள விடாமல் தடுத்தன.

‘அம்மாவைப் போல் நானும் இருந்துவிட்டால்? அவன் பால் சுரக்கும் இந்த உணர்வுகள் காதலினாலா, இல்லை, வெறும் ஈர்ப்பா? அம்மாவைப் போல் பிள்ளை என்ற கூற்று உண்மையானால்?

அவனின் காதல் உறுதியானதாக இருந்தாலும், என்னால் அவனும் தோற்றுப்போய் விட்டால் என்ற பயமே அச்சுறுத்தியது. ஏனோ அப்பாவின் பிம்பமாக அவனின் காதல் நெஞ்சம்!’

“எஸ்.. என்னிடம் காதல் இல்லை. ஐ’ம் வெரி ஷ்யூர்…”

மிகவும் பிடிவாதத்துடன் சொன்னாள் டானியா. .