தீராதது காதல் தீர்வானது – 6

அத்தியாயம் 6 :

காதல் சந்தேகங்களுக்கும்
சஞ்சலங்களுக்கும் அப்பாற்பட்டது..
கணவன் மனைவி இருவரும்
கை கோர்த்து நடந்து
செல்லும் வாழ்க்கைப் பாதை..
மலர்களைப் போன்று
மெத்தெனவும் இருக்கலாம்
கற்களைப் போன்று
கரடுமுரடெனவும் இருக்கலாம்..
ஆனால்,
நேசிக்கும் இதயங்களிரண்டிலும்
சந்தேகங்களும் சஞ்சலங்களும்
ஒருபோதும் தேங்கி நிற்கக்கூடாது…

அஸ்வின் தயாராகிக் கீழே வந்து ஜேகப் கொடுத்த காலை உணவை ருசித்துக் கொண்டிருந்த சமயம் ஆதிராவும் அங்கே வந்தாள்.

தன் ஃபோர்க்கினால் லாவகமாக ‘ஹாட் டாகை’ வாயிலிட்டவன் அப்போது தான் அக்கா ஆதிராவை கண்டான். அருகில் வந்தவளை தோளோடு அணைத்து விலகியவன் நலம் விசாரிப்போடு நக்கலில் இறங்கினான்.

“அக்கா! எப்போ வந்தாய்? குட்டீஸ் எழுந்திரிக்கலையா… மாமா உங்களை இங்கே பாக் பண்ணிட்டு அங்க ஹாயா ரிலாக்ஸ் பண்றாராமே?”

“ஏதோ ஒரு நேரம் ரிலாக்ஸ்டா உட்கார்ந்திருப்பார். ஹாயா இருக்க எங்கேடா நேரம் அவருக்கு?” கணவன் கௌதமின் வேலைப்பழு பற்றி அறிந்த ஆதிரா விட்டுக் கொடுக்காமல் பேசினாள்.

“என்கிட்ட ஃபோன்ல என் வைஃப் ஊருக்குப் போய்ட்டா.. ஜாலின்னு செம என்ஜாய்மெண்ட் மூட்ல பேசிட்டு இருக்கார். நான் நம்பலைன்னு சொன்னதும், நேத்து நைட் அவர் ஹூலா டான்ஸ்ல கலந்துகிட்ட வீடியோவ வாட்ஸ் அப்ல அனுப்பி வைச்சிருக்கார். இந்தா நீயே பாரு.”

மிகவும் சீரியஸான குரலில் மொபைலில் வாட்ஸ் அப்பைத் திறந்தான் அஸ்வின். யூடியூப் லிங்கை க்ளிக்கி அக்கா கையில் மொபைலை வைக்க, ஆதிரா புன்சிரிப்புடன் ஹூலா டான்ஸைப் பார்க்க ஆரம்பித்தாள்.

ஆதிராவிடம் துளி சந்தேகம் இல்லை. அவளின் பொலிவான முக வடிவு புன்முறுவலினால் மேலும் பிரகாசித்தது.

“எப்படிக்கா உன்னால் முடியுது? அந்த வீடியோ ஏதோ ஒரு ஹூலா டான்ஸ். வாட்ஸ் அப்பில் வந்தது. உன்னைக் கலாய்க்க நினைச்சேன். அப்படியும் கொஞ்சம் கூட அசராமல் பொறுமையா பார்க்கிறாய்.

சரி இதுவே உண்மையில் நடந்து மாமா தான் கலந்து கிட்ட டான்ஸ் வீடியோவை அனுப்பி வச்சா எப்படி ரியாக்ட் பண்ணுவ?”

“அப்பவும் கூலாக இருப்பேன்டா அஸ்வின். லைப்ல என்ஜாய்மெண்ட் என்பது ஒரு பார்ட். ஒவ்வொருவருக்கும் அவசியம் தேவையான ஒன்று. நமக்குன்னு ஒரு பொழுதுபோக்கு கண்டிப்பாக இருக்கணும். இல்லையென்றால் குடும்பம், வேலை என்று மட்டும் இருந்தால் அலுப்பு தட்டிவிடும். அப்படி ஒரு கட்டத்தில் மனிதருக்கு மூச்சு முட்டும்.

லவ் லைஃப் ஸ்மூத்தாகப் போக வேண்டும் என்றால் கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது ஒரு சின்னப் பிரேக் இருக்கணும். அவருக்குப் பிடித்ததைச் செய்ய அவருக்குச் சுதந்திரம் இருக்க வேண்டும். அது போல் என் சுதந்திரத்திலும் கௌதம் தலையிட்டது இல்லை.

ஆனால், வி ஸ்டே வித்தின் லிமிட்ஸ். குடும்ப வாழ்க்கையும் எங்கள் காதலும் பாதிக்காத வண்ணம் நடந்து கொள்வதால் ரிலேஷன்ஷிப்ல பாண்டிங் அதிகமாகி இருக்கு.”

அழகான பல்வரிசை தெரிய சிரித்த அக்காவுக்குக் கன்னத்தில் முத்தம் வைத்தான் அஸ்வின். கௌதமுடனான ஆதிராவின் வாழ்வில் இருந்த பிணைப்பும் நேசமும் அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் அஸ்வின் சில சமயம் இப்படி ஏதாவது செய்வான்.

ஆதிரா அச்சமயம் பேசுவது அவனுக்குப் பிரமிப்பை கொடுக்கும்.

“இது தான் என் அக்கா” என்றவனோடு மற்றுமொரு குரல் இணைந்தது.

“நம் அக்கா என்று சொல் அஸ்வின்” என்று கண் சிமிட்டிய ஆரியன் இருவரையும் தோளோடு அணைத்துக் கொண்டான்.

மூவரும் சில மாதங்கள் கழித்துச் சந்திக்கிறார்கள். அவர்களுக்குப் பேச நிறைய விசயங்கள் இருந்தாலும் உணர்ச்சிவசத்தால் மௌனமாய்ச் சில நொடிகள் கரைந்தன.

திடீரென அஸ்வின் பொறுக்க மாட்டாமல், “உன்னைப் போய் வேண்டாமென்று சொல்ல அவனுக்கு எப்படி மனசு வந்தது?” என்றான் பழைய நினைவில் கண் கலங்கியவாறு.

ஆதிராவின் முகம் ஒரு நிமிடம் கசங்கி கண்களும் சுருங்கின. அதைப் பார்த்த ஆரியனின் உடலில் ஒரு விறைப்பு வந்து போனது. கைகளின் முஷ்டி இறுக நின்றவன் அஸ்வினிடம் உறுமினான்.

“டேய், முடிந்து போய்த் தலை முழுகின விசயத்தைப் பற்றி இப்போது ஏன் பேசுறே?”

“வாய் தவறி வந்துவிட்டது. ஸாரிண்ணா! இனி மேல் கவனமாக இருப்பேன்.”

“ஷ்.. விடு ஆரியா…” சுதாரித்துக் கொண்ட ஆதிரா, தலைகுனிந்து நின்றிருந்த அஸ்வினை அணைத்துக் கொண்டாள்.

“ஸாரிக்கா…”

“அக்காவிடம் ஸாரி எதற்கு அஸ்வின்? அவன் செய்த செயலை நாம் யாரும் மறக்கலை. பட், அவன் செயலால் தான் என் கௌதம் எனக்குக் கிடைச்சு இருக்கார்.

மாமாவைப் பற்றி நமக்கு எல்லாம் நன்றாகத் தெரியும். என்னை உயிராகக் காதலிப்பவர். எங்கள் இரு பிள்ளைகளே அதற்குச் சாட்சி.

ஒரு வகையில் அவன், அந்த நவீன் மித்ரா எனக்குப் பெரிய நன்மை செய்திருக்கான். அப்படித் தான் நினைக்கிறேன்.”

நிமிர்வுடன் பேசிய அக்காவைப் பார்த்த தம்பிகள் இருவருக்கும் கண்கள் கலங்கினாலும், மனதில் பெருமிதம் பொங்கி வழிந்தது.
~
ஒரு வாரத்திற்குப் பிறகு… மனதின் குழப்பம் கொஞ்சம் குறைந்தது போல் இருக்க வீட்டிலிருந்து வெளியே வந்திருந்தாள் டானியா.

ஈஸ்ட் வெஸ்ட் ஃப்யூஷன் டைனர், டாம்பா. மதிய நேரம். சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது. தாத்தா இன்று ரெஸ்டாரண்ட்டுக்கு இன்னும் ஏனோ வந்திருக்கவில்லை. வெயிட்டெரஸ் மெலினா இன்று விடுமுறை எடுத்திருந்தாள்.

“சிஸ்டா, கொஞ்சம் கவனித்துக் கொள். வெளியே சென்று வருகிறேன்.”

டானியாவிடம் சொல்லிவிட்டு பெட்ரோ சென்றுவிட்டான். டானியா ஒரு பகுதியில் அமர்ந்திருந்த கஸ்டமர்களைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு, ஆர்டர்கள் சிலவற்றை முடித்து வந்தாள்.

வலது ஓரமாய் அமைந்திருந்தது அந்த இருவர் அமரக் கூடிய மேசை. அதன் முன்பு தனியாக அமர்ந்து செய்தித்தாளில் மூழ்கி இருந்தான் ஒருவன்.

“குட் ஆப்டர்நூன்! மே ஐ டேக் யுவர் ஆர்டர்?”

புன்னகையுடன் ஆர்டர் எடுக்க அவன் எதிரே டானியா.

கால் மேல் கால் போட்டபடி செய்தித்தாளை முகத்திற்கு நேரே பிடித்திருந்தவன் அதை விலக்காமலே, “மஷ்ரூம் சூப்.. ஒரு ஸ்க்விட் டுவிஸ்டர் ப்ளாட்டர்” என்றான்.

பெரிய இவன்! முகத்தைக் காட்டாமல் பேசுகிறான். ஒரு நொடி எரிச்சல் பரவியது டானியாவின் முகத்தில். கஸ்டமர் சர்வீஸூக்கு இப்படி எரிச்சல் வருவது அழகல்லவே?
முயன்று புன்னகை பூசிய உதடுகளுடன், “குடிப்பதற்கு.. சோடா, பியர், எனி காக்டெயில்ஸ்?” எனக் கேட்க, “சில்ட் பியர்…” எனச் சற்று சத்தமாகவும் அழுத்தமாகவும் சொன்னான்.
சில்லென டானியாவின் செவிகளை வருடியது அவனின் குரல்.
ஹே இக்குரல்!! துள்ளிக் குதித்தது இதயம். ஒரே சமயம் வயிற்றில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்க, விழி இமைகள் படபடத்தன.

அவனின் குரலல்லவா? ஹோ.. வந்துவிட்டான்.

“ஆரியன்!!”

எம்பிக் குதித்துத் தொண்டைக்குழியில் நின்ற இதயத்தின் படபடப்பையும் மீறி இதழ்கள் பிரிந்திருந்தன.

அவன் பெயரை சத்தமாக உச்சரித்தும் அவன் நிமிரவேயில்லை. அவனின் அலட்சியத்தால் கண்களில் கண்ணீர் சரம் கோர்த்துப் போக, எதிர் இருக்கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நின்றாள்.

நொடிகள் கரைய, செய்தித்தாளில் மூழ்கி இருந்தவனுக்கு தன் எதிரே நின்றவளைப் பற்றிய அக்கறை ஒரு துளியேனும் இருக்கவில்லை. அவன் கண்களுக்கு இவள் பொருட்டாகத் தெரியவும் இல்லை. டானியாவிற்கு கண்ணீர் அடங்கவில்லை. சரமாகக் கோர்த்துப் போய் கன்னங்களில் வழிந்து நெஞ்சில் இறங்கியது.

அவன் முன்னால் அழுது கரைவதா… என்ன முட்டாள்தனம்? அங்கிருந்து விடுவிடுவென அகன்று ரிசப்ஷனுக்குச் சென்றாள். வெயிட்டெரஸ் சான்டிராவிடம் அவன் ஆர்டரைத் தந்துவிட்டு ஓய்வறையினுள் நுழைந்து கொண்டாள்.

ஓவென்று அழ வேண்டும் போலத் தோன்றுகிறதே, ஏன்? அவன் வந்ததும் இது என்ன விநோத உணர்வு? ஒரு வாரமாகக் கண்ணில் படாமல் இப்போது ஏன் வந்தானாம்? சரி அப்படி வந்தும் முகம் பாராமல் ஏன் இப்படித் தவிக்க விடுகிறானாம்?

அவன் பார்வைக்காக நான் ஏன் ஏங்குகிறேன்? முட்டாள்தனமாகப் பட்டது. ஆனாலும் எதிலோ தோற்றுப் போன உணர்வு எழுந்தது.

மனதின் ஏக்கம், குழப்பம், தவிப்பு என கலந்தடித்த உணர்வுகள் நிற்காமல் கண்ணீராக வழிந்தோட, அந்த நீளமான இருக்கையில் தொப்பென விழுந்தாள். ‘ஏன் அழுகிறேன்? தெரியலையே! யாரவன்? எனக்கு என்ன உறவு? யாரோ ஒருவன் முகம் பாராமல் போனால் நான் ஏன் அழ வேண்டும்?’

“ஏன் வந்தாயடா? இப்படி முகத்தைக் கூடக் காண்பிக்காமல் இருப்பதற்கு நீ வராமலேயே இருந்திருக்கலாம். போடா போ.. என்னைப் பார்க்க வேண்டாம்.. பார்க்காமலேயே போய்விடு!”

“போய் விடவா ப்ரின்சஸ்?”

ஆரியனின் கம்பீரக்குரல் கரகரப்பாக ஒலித்தது. உடனே, இவள் விதிர்த்துப் போய் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவனின் நெடிய வலிய உருவம் காதலில் கரைந்து கொண்டிருப்பதாய்!

அவனின் நீலநிற விழிகளில் எதிர்பார்ப்பின் சாயல். அழுத்தமான உதடுகளின் ஓரம் ஒரு துடிப்பு. உணர்ச்சி வசப்பட்டிருக்கிறான்!

மிருதுவாக டானியாவின் தலை கேசத்தை வருடியவன் அவள் அருகிலேயே உரசியபடி அமர்ந்தான்.

‘எப்போது உள்ளே வந்தான்.. எப்படி? கதவை சாத்தி இருந்தேனே.. தடதடக்கும் இதயத்தில் ஜதிஸ்வரங்களின் லயம்!’

“உன் பின் தொடர்ந்து வந்தேன் ப்யூட்டி. கதவை சாத்தினாய்… லாக் செய்தாயா?” கண் சிமிட்டி பளிச்சென்று சிரித்தான் ஆரியன்.

‘ஹ ஹக் ஹக்…’ அழுகை அடங்கி இருக்கவில்லை அவனின் உயிராயிருப்பவளுக்கு. தோளோடு அணைத்து அவன் மார்பில் சாய்த்துக் கொண்டு முதுகில் தட்டி ஆறுதல் படுத்தினான்.

அவனின் முதல் தொடுகை அவளின் இதயத்தை அசைத்து அவன் புறம் தடம் புரளச் செய்வதாய்… முன்னுச்சியைத் தீண்டிச் செல்லும் அவனின் சுவாசத்தின் வெப்பம் உடலை ஊடுருவி மனதிற்குக் கதகதப்பளித்துக் கொண்டிருந்தது.

அவனிடமிருந்து விலகத் தோன்றவில்லையே? மாறாக அவனில் உறைந்துவிடத் துடிக்கிறதே நெஞ்சம்!

‘இந்த நிமிடம் இந்த நிமிடம்
இப்படியே உறையாதா?
இந்த நெருக்கம் இந்த நெருக்கம்
இப்படியே தொடராதா?
இந்த மௌனம் இந்த மௌனம்
இப்படியே உடையாதா?’

வருடங்களாக அவனைவிட்டுப் பிரிந்தது போன்ற தவிப்பு.. இப்படியே இருந்துவிடக் கூடாதா என்ற கட்டுங்கடங்காத ஆவல்.. ‘இது நான் தானா? என்ன விதமான உணர்ச்சியால் தவிக்கிறேன்?’

“என்னைத் தேடினாயோ… ஒரு வாரமாய் நான் வராது போனதால் கோபமா ப்ரின்சஸ்? ம்ம்..” பொம்மையாக மாறிப் போய் மேலும் கீழும் தலையாட்டினாள்.

“என் உயிரின் கோபத்தை எப்படிக் குறைக்கலாம்?” அவன் குறும்புடன் யோசிப்பது போலப் பாவனை செய்ய,

அவனைப் பார்த்தால் ஏடாகூடமாக ஏதாவது செய்து விடுவானோ எனத் தோன்ற, அவசரமாகக் ‘கோபமில்லை’ என இடமும் வலமுமாகத் தலையசைத்தாள்.

அவளின் முகம் நிமிர்த்தி விழிகளை ஊடுருவும் பார்வையால் கவ்வி நின்றான். பல உணர்வுகளை தன்னவளை நோக்கி தொடுத்துக் கொண்டிருந்த அவனின் பார்வையைத் தாங்கும் சக்தி அவளிடம் இருக்கவில்லை. விழி இமைகளை மூடிக் கொண்டாள்.

அருகில் இருந்தவன் இன்னும் நெருங்கி வந்தான். அவன் சுவாசம் அவள் சுவாசத்தைச் சவாலாகச் சந்திக்க, மெத்தென்றிருந்த அவன் உதடுகள் அழுத்தமாக அவளின் பூவிதழ்களில் பதிந்தன.

அவளுக்கு அவனை விலக்கத் தோன்றவில்லை. மின் அணுக்கள் தாக்கியது போல் உணர்வலைகள் அதிர்ந்தன. இரு ஜோடி உதடுகளும் மென் தீண்டலை தயக்கமின்றிச் சில நொடிகள் ரசித்துத் தேங்கின.

முதல் முத்தம் நெற்றிப் பரப்பு, படபடத்த இமைகள், நாசியின் சிறு மச்சம் என அதி விரைவாகப் பயணித்துக் கொண்டிருக்க, விழியோரம் சிறு துளி!

தென்றலின் உரசலை உணர்ந்து கொண்டிருக்கும் அந்த அழகிய காதலியின் முகம் செம்மையுற்றது. பவள நிறம் கொண்டிருந்த கன்னத்தில் அவனின் பெரு விரல்களைக் கொண்டு விளையாடினான்.

தன்நிலை மறந்து ஆரியனோடு ஒன்றியது பெண்ணவளின் நெகிழ்ந்த மனது. நொடிகளா.. நிமிடங்களா? அறியாள்!

ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிந்து போனது. ஆரியன் நிச்சயமாக அவளுக்குள் இருக்கிறான். அப்படி இல்லையென்றால் அவன் விரல் நுனி கூட தன்னைத் தீண்டியிருக்க முடியாது.

இரு வேறு கலாச்சாரக் கலவையில் உருபெற்று, தனி மனித சுதந்திரத்தை போற்றும் நாட்டில் பிறந்து வாழ்ந்தாலும் தனக்குள் சில கட்டுபாடுகளை விதித்துக் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறாள்.

‘நாங்கள் இதுவரை பேசியதில்லை. இரண்டு வருடமாக வருகிறான். பார்த்துவிட்டுப் போய்விடுவான். அப்படி இங்கே இருந்தாலும் கண்ணில் படுவானே ஒழிய பேச முற்பட்டதில்லை.

போனமுறை மனதைத் திறந்தான். அதுவும் ஒரு கார்ட்டும் பூங்கொத்தும் தானே அவன் மனதை சொன்னது. இன்னும் நேரில் மனதை சொன்னானில்லை. அப்படிச் சொன்னால் நான் என்ன செய்வேன்? என் நிலை என்ன? காதலும் திருமணமும் என் வாழ்வில் சாத்தியமாகுமா?’

“யோசனை ரொம்பப் பலமானதா ப்ரின்சஸ்?” சுழித்திருந்த புருவங்களை நீவிவிட்டான். சட்டென விலகி அமர்ந்து கொண்டாள். ஆரியனின் முகம் ஒரே விநாடி சுருங்கி பின் சீரானது.

அந்நேரம், “டொக் டொக்..” கதவை யாரோ தட்ட,

“கம் இன்” என்றான். இவன் இடம் போல் என்ன அதிகாரக்குரல்.

அவளின் நினைப்பை கண்டு கொண்டான் கள்ளன். புன்னகையுடன் கண் சிமிட்டினான்.

“ஹே சிஸ்டா! இங்கேயா இருக்கிறாய். வெளியே காணாமல் தேடினேன். இனி நான் பார்த்துக் கொள்கிறேன். நீ போவதானால் போகலாம் எனச் சொல்லத்தான் வந்தேன்.”

ஆரியனைப் பார்த்துக் கொண்டே டானியாவிடம் பேசினான் உள்ளே நுழைந்த பெட்ரோ. ஏற்கெனவே உன் ஆள் எனக் கிண்டலாகப் பேசுபவன் இப்படி அருகருகே அவர்களைக் கண்டால்? சங்கடமாக உணர்ந்தாள்.

‘நான் இப்போது என்ன செய்ய வேண்டும்? ஆரியனைப் பெட்ரோவிற்கு என்ன சொல்லி அறிமுகப்படுத்துவது?’ குழப்பம் மோலோங்கியது அவளிடம்.

நல்லவேளை அவளுக்கு அந்தச் சிரமத்தைக் கொடுக்காமல் ஆரியன் தானே பெட்ரோவிடம் பேசினான்.

“ஹாய்! ஐ’ம் ஆரியன்.. ஆரியன் நேத்தன்.”

“ஹலோ மிஸ்டர் நேத்தன்! ஐ’ம் பெட்ரோ…”

ஆரியனும் பெட்ரோவும் ஏற்கெனவே அறிமுகமானவர்கள் போலக் காட்டிக் கொள்ளவில்லை. டானியா முன்னால் அப்போது தான் பார்ப்பது போலப் பேசிக் கொண்டனர்.

அவர்கள் இருவரும் உரையாட, எதிலோ இருந்து தப்பிப்பது போல், “இதோ வருகிறேன்” என அவள் அவ்விடத்தில் இருந்து அகன்று, வெளியே வந்து ஆழமான மூச்செடுத்து உணர்வுகளை அடக்க முயன்றாள்.

ம்ஹூம்.. முடிந்தால் அல்லவா? எதிரில் வந்த தாத்தாவிடம் கூடப் பேச முடியவில்லை.

ரெஸ்டாரண்ட்டை விட்டு வெளியேறினாள். ஃப்ளோரிடாவின் கடும் வெப்பம் கூட உறைக்கவில்லை.

அவனின் தீண்டலின் சுவடுகளாய்ப் புதிதாக லட்சம் மொட்டுகள் காதல் பூக்களாய்.. குளிர் தென்றலாகக் காதலின் முகவரியை அறிமுகப்படுத்தின.