தீராதது காதல் தீர்வானது – 5
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் 5 :
காதலும் நட்பும்
கை குலுக்கிக் கொண்டன
கண் மறைவாக..
ஆதிரா பிரபாகர்! நிமிர்ந்த நடை, மிடுக்கான தோற்றம். பயமற்று அலட்சியமாக எதையும் எதிர்கொள்ளும் தன்மை உள்ளவளுள் கண்ணியம் போற்றப்பட்டது.
உலகின் மிக அழகான இளம்பெண்கள். அவர்கள் அதிநவீன யுவதிகளாக இருந்தாலும் சரி, இல்லை, பாரம்பரியத்தை உள் வாங்கிய அழகிகளாக இருந்தாலும் சரி, அனைவரின் கர்வத்தைத் தன் முப்பதுகளிலும் எளிதாகத் தகர்ந்தெறிந்து அவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்பவள்.
அழகாகவும் மிக அதீதச் செல்வம் பெற்றவளாக இருந்தாலும் எளிமையாகவே தன்னைக் காட்டிக் கொள்வாள். என்ன தான் சிம்பிளாக உடுத்தினாலும் அதில் தெரியும் நேர்த்தியும், உடைகளின் தரமும், மெல்லிய அணிகலன்களாகவே இருப்பினும் அவை பறைசாற்றும் விலையும் சொல்லியது ஆதிராவின் செல்வச் செழிப்பு என்னவென்று.
தன் முன்னே இரு கைகளைக் கொண்டு தலையைப் பிடித்தவாறு அமர்ந்திருந்த ஆதிராவைப் பார்த்து இரக்கம் சுரந்தது அந்தப் பிரமாண்டமான வீட்டின் கேர் டேக்கரான ஷார்லின் வொங்கிற்கு. இருக்காதா பின்னே? இன்று காலையிலிருந்து அவள் படும்பாடு அப்படி.
நேற்று இரவு தான் சான் ஃப்ரான்சிஸ்கோ வந்திருந்தார்கள்.
தங்கள் கம்பெனிகளின் விவரங்களை விரல் நுனியில் வைத்துக் கொண்டு தனக்குக் கீழே வேலையிலிருக்கும் முதல்நிலை ஊழியர்கள் தொட்டுக் கடைநிலை ஊழியர்கள் வரை சிம்மச் சொப்பனமாக இருப்பவள். தான் பெற்றெடுத்த இந்த நான்கு வயது இரட்டை இளஞ்சிங்கங்களைத் தனியாகச் சமாளிக்க முடியாமல் தவிக்கிறாள்.
அதைக் கண்கொண்டு பார்க்க இயலவில்லை ஷார்லினுக்கு. அவளுக்கும் இந்தப் பெரிய வீட்டைப் பராமரிக்கும் அளவு இருந்த திறமை, குழந்தை பராமரிப்பில் இருக்கவில்லை. என்ன செய்ய? வெறுமனே கையைப் பிசைந்து கொண்டு நின்றாள்.
ஆதிராவை ஷார்லினுக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால், எப்போதும் ஆள் அரவமற்று வெறிச்சோடிப்போய் இருக்கும் வீட்டில் கலகலப்புத் திரும்புவது முக்கால்வாசி நேரம் ஆதிராவின் வரவினால் மட்டும் தான்.
தன் எஜமானர் உலகம் சுற்றும் வாலிபராகப் போய்விட்டார். உள்ளூரில் இருந்தாலும் அவரைக் காண்பது ஷார்லினிற்கு மிக அரிதான விசயம். இவளின் வேலை நேரம் காலை எட்டு மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை.
அவனோ மாலை மங்கிய வேலையில் வீடு திரும்புவது மிகவும் அபூர்வம். சில காலை வேளைகளில் எப்போதேனும் கண்ணில் படுவான்.
அமைதியாக இருக்கும் அந்தப் பிரமாண்டமான பழமைப் பொதிந்துள்ள மூன்றடுக்கு வீட்டில் இவளும் பட்லர் ஜேகப் மட்டுமே பகல் வேளைகளில் பெரும்பாலும் இருப்பது. தோட்ட வேலைக்கென வரும் மரியோஸிற்கு வீட்டிற்குள் வர அனுமதி இல்லை.
இதில் ஜேகப் கொஞ்சம் வயதானவர். அவருடன் இவளுக்கு எப்படிப் பொழுது போகும்? என்ன தான் தினமும் ரொடீனாகச் செய்யும் வேலைகள் இருந்தாலும், ஊடே கொஞ்சம் பேசப் பிடிக்கக் கலகலப்பிற்கு ஆள் தேடினாள்.
அவ்வீட்டிற்கு அப்படிக் கலகலப்பையும் மகிழ்வையும் கொண்டு வருவது ஆதிராவின் வருகை தான்.
“மேம், இந்தாங்க இந்தப் பைனாபில் ஜூஸை குடிங்க. எனர்ஜி வரும்.”
நிமிர்ந்துப் பார்த்த ஆதிரா, “ஷார்லின், நீயுமா? ப்ளீஸ் பைனாபில் வேண்டாம். நம்ம ஜேகப் ஸ்பெஷல் ஆரஞ்சு-லைம் ஜூஸ், பீச்-பெரீஸ் ஸ்மூதி இப்படி ஏதாவது கொடேன். எங்க ஊர்ல இந்தப் பைனாபிள்ல பார்த்துப் பார்த்து ஒரே போர்.”
ஹவாயின் மௌவித் தீவில் வசிப்பவளுக்கு அன்னாசி, கொய்யா, மாம்பழங்களும் தேங்காய்களும் அரிதானவைகளா? ம்கூம்.. இப்போது கலிபோர்னியாவிற்கு வந்திருக்கும் போது நாவிற்கு வேறு சுவை தேவையானதாய்!
முகத்தைச் சுருக்கிச் சலிப்புடன் ஆதிரா சொல்ல, பெரிய தவறு செய்தது போல, “சாரி மேம். வெரி சாரி! இதோ ஒன்லி எ மினிட்” என்றபடிக் கிட்சனை நோக்கி விரைந்தாள் ஷார்லின்.
“அப்படியே பிரதமிற்கும் பிரணவிற்கும் சேர்த்துக் கொண்டு வா ஷார்லின்.”
“ஓகே மேம்.”
ஷார்லின் கொண்டு வந்த ஸ்மூதியை உறிஞ்சிச் சுவைத்துக் கொண்டிருந்தாள் ஆதிரா.
“நான் தான் ஃபர்ஸ்ட் அம்மாகிட்ட காண்பிக்கணும்.”
“நோ மீ தான் ஃபர்ஸ்ட் காண்பிப்பேன்…”
“நோ பிரணவ்.. மீ…” இரு கைகளில் தாங்கள் செய்த மினி ப்ளாக் மாடல்களை ஏந்திக் கொண்டு குட்டீஸ் ஓடி வந்தனர்.
வந்த வேகத்தில் அவர்களை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஷார்லின் சுதாரிக்கும் முன், அவள் மீது மோதிவிட, கையிலிருந்த ட்ரேயுடன் ஸ்மூதி நிரப்பி இருந்த இரண்டு டம்ளர்களும் தட்டிக் கீழே விழுந்தன.
பிறகென்ன.. பிரதம், பிரணவ் மற்றும் ஷார்லின் மூவருக்கும் பெரீஸ் ஸ்மூதி அபிஷேகம் தான்.
‘இரட்டை வாலுங்க. கொஞ்ச நேரம் நிம்மதியா விடுறாங்களா? நான் தனியாவே வந்திருக்கலாம். எல்லாம் அவனால் வந்தது. நீ மட்டும் வராதே. பிள்ளைகளை மனசு தேடுது. மூன்று நாள் தானே. ப்ளீஸ் கூடக் கூப்பிட்டு வான்னு சொன்னவன் இன்னும் வீட்டுக்கு வந்து சேரலை. எந்த ஊர்ல சுத்திக்கிட்டு இருக்கானோ?’ மனதில் முணுமுணுத்தவள்,
“ஹே பிரதம்!! அங்கேயே இரு. பிரணவ்!! ஓடாதே.. வழுக்கிக் கீழே விழுந்திருவே” எனத் தன மகன்களைப் பார்த்துக் குரல் கொடுத்தாள்.
தடால்!!
“ஐயோ ஷார்லீன்!”
சிங்கக்குட்டிகளின் வீரதீரச் செயல்களால் ஷார்லின் தரையில் தடாலென விழுந்திருந்தாள். மரத்தரையாக இருந்ததால் பெரிய சத்தத்துடன் விழுந்தது மட்டுமல்ல, அவள் பின் உணர்ந்த வலியும் பெரிதாகிப் போனது.
“ஹா ஹா ஹா…” என ஹைபை கொடுத்துக் கொண்டு சிரித்தபடி நின்றிருந்த பிரதம் மற்றும் பிரணவைக் கண்ட ஆதிரா, கொலைவெறியானாள்!
அவளின் இன்றைய நிலைக்குக் காரணமாகி இருந்த ஆண்மகன்கள் இருவர் மட்டும் இப்போது அவள் கண் முன்னால் வந்தால், அந்தோ பரிதாபம்!
அதில் ஒருவன் ஹவாய்த் தீவிலிருந்தான். அவன் தான் கௌதம் பிரபாகர். ஆதிராவின் கணவன். இந்த நிமிடம் தன் பீச் ரிசார்டில் அப்பாடான்னு காலாட்டியபடி இறா வறுவலை தொண்டைக்குள்ளே தள்ளிக் கொண்டிருந்தான்.
எப்போதும் ஓடிக் கொண்டே இருப்பவனுக்குச் சிறிது ஓய்வு கிடைக்க வேண்டி, மனைவி சொல்லக் கேளாமல் அவளைக் கொஞ்சி மிஞ்சி சமானப்படுத்தி மக்கள் இருவரையும் அவளுடனேயே பாக் பண்ணி விமானமேத்தி அனுப்பி வைத்துவிட்டுத் தற்போது சற்று ஓய்வாகவே இருந்தான்.
மற்றொருவன் ஆதிராவின் உடன் பிறப்புகளில் ஒருவன்… ஆரியன். இந்த நிமிடம் அவனின் வரவை எதிர்பார்த்து தான் ஆதிரா தன் பிறந்த வீட்டில் காத்திருக்கிறாள். ஆனால், வான்கூவருக்குப் போனவன் இன்னும் வீடு வந்து சேரவில்லை.
நாளை பதினொரு மணியளவில் ஆரியனுக்கும் ஆதிராவிற்கும் ஒரு முக்கியத் தொழில் சந்திப்பு இருந்தது. தொடர்ந்து சில சொத்துக்களைத் தன் அக்கா ஆதிராவின் பெயரில் மாற்ற இருந்தான் ஆரியன். அதற்காகத்தான் ஆதிராவை வரச் சொல்லியிருந்தான்.
மறுநாள்! விடியலில் நியூயார்கிலிருந்து அஸ்வின் வந்து சேர்ந்திருந்தான். ஒரு குட்டித் தூக்கம் போட்டவன் எழுந்து குளிக்கச் சென்ற அதே வேளையில், சான் ஃப்ரான்சிஸ்கோ ஏர்போர்டிலிருந்து வெளி வந்தான் ஆரியன்.
அதிகாலையில் விழித்துக் கிளம்பி பயணம் செய்து வந்த களைப்பு துளி கூடத் தென்படவில்லை அவனிடதில். சுறுசுறுப்பாக முன்னேறியவன், அவனுக்காக ஏர்போர்ட் பார்க்கிங் கராஜில் நிறுத்தப்பட்டிருக்கும் தன் ‘டெஸ்லா’ காரை இயக்கினான்.
லாவகமாக அங்கிருந்து வெளியேறி ஃப்ரீவேக்கு வந்தவன் சாரை சாரையாக இயங்கி, இல்லையில்லை, ஊர்ந்து கொண்டிருந்த வாகனக் கூட்டத்துடன் கைக் குலுக்கி தனது காருடன் சேர்ந்து கொண்டான்.
காரில் துல்லியமான ஸ்பீக்கர்களில் ஜெட் மெடெல்லாவின் பாடல் ஒலிக்க, ஆரியனும் உடன் ஹம் செய்தான்.
I need you, is all that I can say
But deep inside of me you know
I want you more each day
But time won’t let me have the chance
So, I’ve got to see you even at a glance
I know it’s hard for you to see
Exactly how much you mean to me
Since it’s just a one way street
And I’m the only one who’s on it
No one knows the way but me
I love you, can’t you hear me?
Oh, can’t you please see through me
Oh, babe I need your love so badly
It’s no lie so please believe me
In my heart you’ll see the real me …
அந்நேரம் அவனின் எண்ணத்தில் டானியா மட்டுமே தோன்றினாள்.
சூப்பர் அழகி எனச் சொல்ல முடியாது. ஆனால், ஆரியனை ஈர்த்தவள் அவள் மட்டும் தான். எத்தனையோ பெண்களைத் தினமும் காண நேரிட்டாலும் அவர்களிடம் ஏற்படாத உறவு டானியாவைக் கண்டதும் தோன்றியது.
இரு வருடங்களுக்கு முன் வான்கூவரில் முதன்முறையாக அவளைப் பார்த்தான் ஆரியன். பார்த்ததும் பிடித்துப் போனது. லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் என்பதில் நம்பிக்கையில்லாதவனை முதல் பார்வையில் வீழ்த்திவிட்ட பெண்ணழகி டானியா.
இந்தியர் போன்று தோன்றினாலும உறுதியாக அடித்துச் சொல்ல முடியாத ஒரு கலவையான தோற்றம் அவளினது.
தன்னவளின் நினைவில் லயித்தான் ஆரியன். நெடுநெடுவென வளர்ந்திருந்தவளின் உயரம் அவனின் தோள் தொட்டு உரசிப் போவதாய்!
மெலிதாக நகைத்தான்.
“வி ஆர் மேட் ஃபார் ஈச் அதர் ப்ரின்சஸ்..” ரசனையுடன் உதட்டைக் குவித்தவனின் மனக்கண்ணில் அந்தக் காட்சி விரிந்தது.
இருவரும் உரசிக் கொண்டு கடலோரம் நடக்கிறார்கள். பாதங்கள் வெளிர் மணலில் புதைய, கடல் அன்னையின் செல்லப் பிள்ளைகள் மாறி, மாறி நெருங்கி வந்து அவர்களின் கால்களை முத்தமிடுவதும் விலகுவதுமாக இருந்தன.
அத்தனை நேரம் அலைகள் நுரைப்பூக்களாய் கால்களைத் தொட்டு முத்தமிட்டு நனைத்துத் தந்திராத சிலிர்ப்பை, கரையோரம் அமர்ந்ததும் அவள் இடுப்பில் படர்ந்திருந்த இவன் கரம் தந்தது போலும். லேசான நடுக்கம் அவள் உடம்பில் தெரிய, இவனின் கரம் இன்னும் அழுத்தமாகப் பதிந்தது.
டானியாவின் முகம் செம்மையுற, ரசனையுடன் அவள் முகம் நோக்கி குனிந்தான்…
‘ப்ளேர்…’ ஹாரன் ஒலி! அருகில் ஒரு பெரிய வாகனம் இவனைக் கடந்து சென்றது.
ஆரியன் இதுவரை கற்பனையிலிருந்த தன் நினைவை மீட்டு வந்து பாதையில் கவனம் செலுத்தினான்.
கஷ்டப்பட்டு நினைவை பாதையில் செலுத்தினாலும், ஆரியனின் இதயமோ டானியாவின் தோற்றப் பொலிவில் சுகம் காண விழைந்தது. அவளின் எழிலோவியம் நினைவிலாட, சுகமாக சிக்கிக் கொண்டான்.
எந்நேரமும் பளிச்சென்றிருக்கும் நீள் வட்ட வடிவமான முகம். அடர்ந்த வடிவான புருவம். எடுப்பான மூக்கின் ஒரு புறம் நுனியில் சிறு மச்சம்.
“அட்ராக்டிவ்!” ஆரியனின் உதடுகள் முணுமுணுத்தன.
வலது பக்கம் மட்டும் காதோரம் முடிக்கற்றைகளை ஒதுக்கி அழகான மிகச்சிறிய சைட் க்ளிப்பினால் அடக்கி இருப்பாள். கருகருவென அடர்ந்த சுருள் கேசம் முதுகு வரை படர்ந்திருக்கும் அழகு..
“லவ்லி!!” மனக்கண்ணால் ரசித்தான்.
இந்நேரம் அருகிலிருந்தால், கைவிரல்களை அவளின் கூந்தலினுள் சற்று நேரம் விளையாட விடலாம். அப்படியே அவள் முகத்தை அருகில் இழுத்தால், அவ்விரு பெரிய கருமணி திராட்சைகளைப் படபடவென இமைக்கதவுகள் கொண்டு அடைப்பாளோ?
சிறிய ஸ்ட்ராபெர்ரியை பாதி வெட்டி வைத்தது போல இருக்கும் அவள் உதடுகள்.. ஹூம்! இடமும் வலமுமாகத் தலையசைத்தவனுக்கு அவளைப் பார்க்க வேண்டும் எனத் தோன்றியது.
அச்செயல் அவனின் முயற்சியை முறியடித்துவிட்டால்? ‘என் ப்யூட்டி கொஞ்சம் யோசிக்கட்டும்.’ நிதானித்தான்.
பெட்ரோவை அழைத்தான்.
“ஹலோ பெட்ரோ!”
“ஹாய் மிஸ்டர் நேத்தன்.”
“ஹே ஆரியன் என்று கூப்பிடு மேன்” என்று சொன்னவனுக்கு, ‘இவன் எத்தனை முறை சொன்னாலும் திருத்திக் கொள்ள மாட்டான்’ என்ற எண்ணமே மனதில் எழுந்தது.
“ஓகே மிஸ்டர் நேத்தன்” எனச் சிரிப்புடன் சொன்னவனை என்ன செய்ய முடியும்?
“நீ எப்படிச் சொன்னாலும் கேட்க மாட்டாயடா. சரி விடு. நேற்று எப்படிப் போச்சு? டானியா அம்மாவைப் பார்த்து பேசினாளா? எப்படி ரியாக்ட் பண்ணினாள்?”
“எஸ்.. நீங்க சொன்ன மாதிரி ஆன்ட்டியுடன் சிஸ்டாவைத் தனியாக மீட் பண்ண வைத்தேன். அவளும் பார்த்து பேசினாள். சிஸ்டா மிகச் சகஜமாகப் பேசினது போலத் தெரியல. ஆனால், ஆன்ட்டி சந்தோஷமாக இருக்கிறாங்க. இவள் தான் கொஞ்சம் என்னிடம் கடுப்படித்தாள். இன்னும் சிஸ்டாவின் வருத்தம் தீரவில்லை.”
“இத்தனை வருஷம் சேர்த்து வைத்திருந்த உணர்வுகள் எல்லாம் ஒரு சந்திப்பில் மாறி விடுமா பெட்ரோ? இது நான் எதிர்பார்த்தது தான். ஆன்ட்டியுடன் உடனே இணைந்து விட மாட்டாள். பட், இப்போது கொஞ்சமாக யோசிக்கத் தொடங்கி இருப்பாள்.
முழுதாக அவளின் எண்ண அலைகள் மாறாவிட்டாலும், சிறிதேனும் அவளில் இளக்கம் வரக் கூடும். பார்ப்போம்.. டானியாவின் வேதனையில் அவள் பக்கம் ஒரு நியாயம் இருக்கு.
பெற்றோர்களின் முடிவுகள் அவங்களோட பார்வையில் சரியானதாக இருக்கலாம். ஆனால், பிள்ளைகளை வேறு விதமாகத் தாக்கி விடுகிறது. இதில் யாரைக் குறை சொல்வது?
வாழ்க்கைச் சக்கரத்தில் நாம் சந்திக்கப் போவது என்ன என்பது நமக்கு முன் கூட்டியே தெரிய வாய்ப்பில்லை. அதே போலச் சிலரின் செயல்களுக்கு என்ன காரணம் என்பதையும் நாம் அறிய வாய்ப்பில்லை. எது எப்படியோ காலப்போக்கில் வாழக் கற்றுக்கொள்ளணும்.
என் ப்ரின்சஸ் அவள் அம்மா மேல உள்ள வருத்தத்தை நீண்ட காலமாகப் பிடித்து வைத்திருக்கிறாள். அதை மறந்து விடு என்றோ, மன்னித்து விடு என்றோ, நாம் சொல்வது சரியல்ல. உணர்வுகள் தனிப்பட்ட விசயம். அவரவருக்குச் சொந்தமானது.
பட், அந்த வருத்தத்தையோ வெறுப்பையோ பிடித்து வைத்துக் கொண்டு அவள் வாழ்வை பாழடித்துக் கொள்வது சரியல்ல. அதை நாம் மாற்றினால் தப்பில்லை. நிச்சயமாக அவளை நான் சந்தோஷமாக வைத்திருக்க முடியும். எங்கள் வீட்டு சூழ்நிலைகளும் அவளுக்குத் துணை புரியும்.”
நீளமாகப் பேசிய ஆரியனின் பேச்சிலிருந்த விளக்கங்களையும் அவனின் உணர்வுகளையும் புரிந்து கொண்டான் பெட்ரோ. அவன் பேச்சின் முடிவில் பெட்ரோவிற்குக் கண்கள் கலங்கின.
“மிஸ்டர் நேத்தன், என் சிஸ்டா வெரி லக்கி. காதலிக்கப்படுவது ரொம்ப அதிர்ஷ்டம். அதிலும் உங்களைப் போல் ஒருவர் அவளை விரும்புவது எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு.”
உருக்கமாய்ப் பேசிய பெட்ரோவின் டானியா மீதிருந்த அன்பை அறிந்து இருந்ததால் ஆரியன் அவன் எதிரில் இல்லாவிடினும் அவனின் நிலையைப் புரிந்து கொண்டான்.
“நானும் வெரி வெரி லக்கி மேன். உன் சிஸ்டாவின் காதலைப் பெற்று அவள் கணவனாகி விட்டால் என்னை விட யார் அதிர்ஷ்டசாலியாய் இருக்க முடியும்? பி கூல் பெட்ரோ…”
“ஆம். நீங்கள் சொல்வதும் சரி தான். சிஸ்டா ரொம்பவும் நல்லவள். அன்பானவள். ஹ்ம்ம்.. நேற்று ஆன்ட்டியை சந்தித்ததிலிருந்து யோசிப்பது போலத் தான் தெரிகிறாள். ஒரே அமைதி. பாதி நேரம் ஸ்விம்மிங் பூலே கதியெனத் தனியாக நீச்சலிடித்துக் கொண்டிருக்கிறாள்.
பாட்டி கூட என்னானதோ எனக் கவலையாகிப் போக, தாத்தா தான் யோசிக்கட்டும் விடு எனக் கூலாகச் சொல்கிறார். எனக்குக் கூட வருத்தமாகிப் போச்சு. என்னிடம் கொஞ்சம் சண்டை பிடித்தாள்.”
‘ம்ம்..’ எனப் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட ஆரியன், “உன் மேல் அவளின் கோபம் நிற்குமா பெட்ரோ?” என மெலிதாகச் சிரிக்க,
“எஸ், சிஸ்டாவிற்குப் பிடித்த டபிள் சாக்லேட் ஐஸ்கிரீமை வாங்கித் தந்து கூலாக்கி விடுவேன்” என்று பெட்ரோவும் புன்னகைத்தான்.
“நல்ல விசுவாசி” ஆரியனின் மனதில் பெட்ரோவைப் பற்றிய நல்லெண்ணம் வலுப்பெற்றது.
தற்சமயம் தன்னால் டானியாவின் அம்மாவிடம் பேச முடியாது. பேச முடியாது என்பதை விட அத்தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள ஆரியன் விரும்பவில்லை. தன்னவளின் உணர்வுகளை எண்ணி அவர்களைத் தவிர்த்தான்.
அதனால் அவர்கள் தொடர்பில் இருந்த பெட்ரோவை நாடினான். பெட்ரோவும் இவன் சொன்னது போல் டானியாவின் அம்மாவை அழைத்துப் பேசி இருவரையும் சந்திக்க வைத்துவிட்டான்.
“மிஸ்டர் நேத்தன், இன்னொரு விசயம். என்னிடம் சண்டை போட்ட போது சிஸ்டா உங்களைப் பற்றிப் பேசினாள்.”
“ஓ?” இதற்காகத் தானே காத்திருந்தான். ஆவலாகிப் போன மனதுடன் பெட்ரோ மேலே சொல்லக் காத்திருந்தான் ஆரியன்.
“ஓபனாக உங்கள் பெயரைச் சொல்லவில்லை… ஆனால், ‘என்னமோ போ. காதல் செய்தால் எவ்வளவு கஷ்டங்கள்! இதுக்குத்தான் லவ்வே வேண்டாம்னு நான் அமைதியா ஒதுங்கிப் போறேன். அது புரியவில்லையே அவருக்கு’ என்று அலுத்துக் கொண்டாள்.
அதற்குப் பிறகு தான் என்னிடம் எதுவும் பேசாமல் அமைதியானாள். யோசனைக்குப் போய்விட்டாள். அவள் நடவடிக்கையைப் பார்த்தால் உங்களைப் பற்றிய யோசனை அதிகம் என்று தோன்றுகிறது.”
வாழ்வினில் பல விசயங்களைத் தனியாக எதிர்கொள்ளும் திறமை பெற்றவன். ஓயாமல் உழைத்து முன்னேறியவன். சவால்களைச் சந்தித்து வெற்றி பெற்றவன். அந்த வெற்றிகளைப் பெற்ற போது இருந்ததைவிடத் தன் காதலுக்கான ஒரு சிறு எதிரொலியைப் பற்றிக் கேட்டதும் பேருவகை கொண்டான்.
இதுவரை அமைதி காத்த காதலியின் மாற்றம் அவன் நினைத்த வகையில் வந்ததில் மனதினுள் சாரலடித்தது. இதயம் மிக இதமாகிப் போக, சந்தோஷமானக் குரலில் பெட்ரோவுடன் தொடர்ந்து உரையாடினான் ஆரியன்.
“எப்போது வருகிறீர்கள்?”
“ஹஹா.. இப்போது நேரில் வந்தால் என் ப்ளான் ஃப்ளாப் ஆனாலும் ஆகலாம். என் ப்ரின்ஸஸ் யோசிக்க டைம் கொடுத்து பிறகு வர்றேன்.”
பெட்ரோவிடம் பேச்சை முடித்து வைத்தவன் தன் வீட்டை நோக்கி விரைந்தான். எப்போது டானியாவை சந்திப்பது எனத் தனக்குள் திட்டமிட்டுக் கொண்டவன், பிறகு வந்த நாட்களில் அணி வகுத்திருந்த கடமைகளில் ஒன்றிப் போனான்.