தீராதது காதல் தீர்வானது – 4

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் 4 :

எதிர்பாராமல் நிகழும் சந்திப்பு
மனதிற்கு மகிழ்வையும் தரலாம்
எதிர்மறையானது ஆயாசம் தருவித்து
எதிரும் புதிருமாக நிற்கவும் சொல்லும்
சஞ்சலமான சந்திப்புகள் சமயத்தில்
சந்தோஷமான வாழ்விற்குச் சுழியிடலாம்
சந்திப்பு அது நிகழும் வரை
எவ்வகை என யாரறிவர்?

“அம்மா!” முணுமுணுத்தது இதயம். ஆனால் இதழ்களிரண்டும் ஒட்டிக் கொண்டு ஒலியை தடை செய்தன.

டானியாவின் முன்னால் வந்து நின்றது அவளின் அம்மா தேஜூ. இப்போது தான் காணும் அவளின் உருவத்தில் லேசான மாற்றங்கள் இருந்தன. அலட்சியம் சற்று மட்டுப்பட்டு இருந்ததோ? ஆனால், அதே நிமிர்வு! அந்த நிமிர்வு எப்பவும் போல் இப்போதும் டானியாவைத் தாக்கியது.

குற்றம் சாட்டும் விழிகளோடு ஏறிட்டவளை டானியாவுக்கு அலட்சியப்படுத்தவே தோன்றியது. கட்டுப்படுத்திக் கொண்டு அசையாமல் நின்றாள் டானியா. எத்தனை முறை தவிர்ப்பது?

கடந்த மூன்று வருடங்களாக இவள் வரும் போது டானியா தாத்தா வீட்டில் இருப்பதில்லை. இல்லை, பாட்டி தான் அப்படிப் பார்த்துக் கொள்கிறார்களோ?

அவள் இங்கு வரும் விடுமுறைகளில், பாட்டி தான் தன் பெண்ணையும், அவளின் புது உறவுகளையும் தவிர்ப்பது எனப் பெட்ரோ சொல்லி ஊர்ஜிதப்படுத்தினான்.

டானியாவின் நொந்து போன மனதுக்குச் சற்று ஆறுதலாய்!!

“டானி, ஏன் என் ஃபோன் கால்களை எடுப்பதில்லை? நான் உன்னைப் பார்க்க வேண்டும்னு சொன்னாலும் மறுத்து விடுறே. பார்க்கவே கூடாது, பேசவும் கூடாது என்ற உன் பிடிவாதம்… அப்படி என்னை ஏன் அவாய்ட் பண்ணுற? எத்தனை வருஷத்துக்கு இப்படித் தள்ளி வைக்கிறதாய் உத்தேசம்?” படபடவெனப் பொறிந்தாள் அன்னை.

இப்போது அவள் முகம் சற்று கனிந்து கண்களில் ஓர் ஏக்கம் இழையோடியது.

“ஹ்ம்ம்..” கசந்த முறுவலுடன் டானியாவின் உதடுகள் வளைய, பதில் சொல்லாமல் கைகட்டிக் கொண்டு அருகில் இருந்த ‘மேக்னோலியா’ மரத்தில் சாய்ந்து அவளையே பார்த்தாள்.

தன் பார்வையில் உணர்ச்சிகளைக் காட்டாமல் தவிர்த்துச் சலனமில்லாமல் டானியா நிற்க, அவளின் அன்னை தேஜூவே பேசினாள்.

“உன் அப்பாவை எப்பவும் போல் பார்க்கத் தானே செய்யுற. தினமும் இல்லை என்றாலும் அடிக்கடி பேசுற. அது மட்டுமல்ல, இப்போ புதுசா சில ஹாலிடேஸ்க்குப் பெல்ஜியம் எல்லாம் போகிறாயாமே?

முன்னர், உன் சின்ன வயசுல நான் உன் அப்பாவின் ஊருக்கு போக ஆசைப்பட்ட போது, அங்கு யார் இருக்காங்க பார்க்க எனக் கேட்டவர், இப்போது மட்டும் உன்னைச் சந்தோஷமாக அங்கே வரவழைத்துக் கொள்வதற்கு என்ன காரணம் சொல்கிறாரோ?”

இதுவரை அமைதியாக நின்ற டானியாவுக்கு இதற்கு மேல் பேசாமல் இருக்க முடியவில்லை.

“எலைன்.. எலைன் லாம்பெர்ட் (Elaine Lambert)! அவள் தான் காரணம்” என்றாள், அந்த லாம்பெர்ட் எனும் சர்நேமில் அழுத்தம் கூட்டி.

டானியாவின் சர்நேமும் அது தான். ‘லாம்பெர்ட்’ அவளது தந்தையின் குடும்பப் பெயர்.

“அப்போ எலைன் அவரை..” கொஞ்சம் அதிர்ச்சியானவளாகத் தெரிந்த அன்னை, கேட்க வந்ததைக் கேட்காமல் தயங்கினாள்.

அவளது கேள்விக்கான பதிலை டானியா ஊர்ஜிதப்படுத்தினாள்.

“எஸ்! ஐந்து வருஷமாகக் காதலித்துக் கொண்டு அவருக்காகக் காத்திருந்தவள். ஒரு வருஷம் முன்பு தான் அப்பாவை திருமணம் முடித்திருக்கிறாள் எலைன்.”

“ஓ..”

அவளின் இந்த ஒற்றை எழுத்து வார்த்தை வந்து விழுந்த விதத்தில் மேற்கொண்டு என்ன பேச எனத் தயங்கி அமைதியாகி நின்றாள் டானியா.

அவர்களது நிலையைப் பொருட்படுத்தாது சில நிமிடங்கள் விரைந்து கரைய, ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளியிட்டதும், அன்னையே பேசினாள்.

“அது போகட்டும். இதுவரை தான் நான் சைதன்யாவை மறுமணம் செய்து கொண்டேன்னு என் மேல் கோபமாகி ஒதுக்கி வச்சு வெறுப்பைக் காட்டினே.

இனி அந்தக் காரணத்தைப் பிடித்துக் கொண்டு இருக்காதே. உன் அப்பாவும் தான் எலைனை மறுமணம் செய்துவிட்டாரே. இதுவரை அவரிடம் பாசம் காட்டியது போல் என்னிடம் காட்ட இப்போதும் உனக்கு என்ன தடை?”

அவளது அன்னை அன்பைக் கூட உரிமைக்குரல் எழுப்பி யாசிப்பது போல் டானியாவுக்குப் பட, அவளுக்குள் ஒரு குரல், ‘இவள் எப்போதும் அதே அம்மா தான். மாறவே இல்லை’ என்றது.

பத்து வருஷங்களுக்கு மேலாகிறது தந்தையைப் பிரிந்து. இன்னும் இவள் அப்படித் தான் இருக்கிறாள். தந்தையைத் தான், காதலித்த காலங்களிலேயே புரிந்து கொள்ளவில்லையே.

‘ம்கூம்.. அப்பா மேல் இவளுக்குக் காதல் எப்போது இருந்திருக்கும்? இருந்திருக்க முடியாது. இளம் வயதில் அப்பா காதல் சொன்னதும் தனக்குள்ளே அவர் மேல் இருந்த இனக்கவர்ச்சியைக் காதலாக எண்ணி, கைப்பிடித்துவிட்டாள் போல்.’

தன்னைப் பெற்றவர்களின் அன்பை இப்படி ஆராய வைத்த விதியை வெறுத்தாள் டானியா. எந்த நிலமையில் இப்படி நிற்கிறாள்? இந்த நிலை தொடரக் கூடாது என்ற உறுதி அவளுள் பெருகியது.

அந்நேரம் டானியாவின் மொபைல் ஒலித்தது. ஏதோ அன்நோன் நம்பர்.

‘ஒரு வேளை அவனோ?’ என்ற ஒரு நப்பாசை.. இன்னும் அவன் வரலை எனப் பெட்ரோ சொன்னானே. அதான் ஃபோனில் அழைக்கிறானோ?

இயலாமையால் டானியாவின் நெஞ்சம் விம்மி புடைத்து வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. இரண்டு எட்டில் அருகே அமைந்திருந்த அந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

ஈர பதத்துடன் முன் மாலையில் வீசிக் கொண்டிருந்த உப்புக் கலந்த நெய்தல் காற்றை அவசரமாகச் சுவாசப்பைகளில் இட்டு நிரப்பிக் கொண்டாள்.

தொலைவில் தெரிந்த பெருங்கடலை வெறித்தபடி டானியா இருக்க, அன்னை அருகில் வந்து அமரும் அரவம் கேட்டது.

டானியாவின் எண்ண அலைகள், தொலைவில் தெரிந்த கடல் அலைகளை விட அதிகமாகக் கொந்தளித்தன. இவள் அன்னை தன் வாழ்க்கையை உடனே சீரமைத்துக் கொண்டாள். பெற்ற மகளைப் பற்றி யோசித்தாளா? அவள் மனதின் பயங்களை.. தனிமை.. அது தந்த வெறுமை.. இப்படி எதையாவது புரிந்து கொண்டாளா? இல்லை, புரிய முயற்சி செய்தாளா?

‘ம்கூம்.. அவளை என் கோபத்தால் தள்ளி வைத்திருக்கிறேன் என்கிறாள். என் ஒதுக்கம் இவளுக்குக் கோபமாக மட்டுமே தெரிகிறது. என்ன சொல்ல இவளை?’

வருத்தம், வேதனை, ஏக்கம்! அனைத்தும் கோபமாக வெளிப்பட்டு இருக்கிறது போலும். அன்னையாக அவள் இதைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

தாய் எனும் அங்கீகாரத்தை முதன்முதலில் கொடுத்த தன் உதிரத்தில் உருவான முதல் குழந்தை. பதினொரு வருஷங்கள் அவள் மட்டும் தான் இவளுக்கு முதன்மையாக இருந்தாள்.

அந்தப் பெற்ற பெண்ணின் நிலையறிந்து காரணங்களை அலசி கண்டு பிடிக்க முடியவில்லையாம் அன்னையால்.

இதில் மறுமணத்தில் ஆணொன்றும் பெண்ணொன்றுமாக இரு குழந்தைகளை உடனே பெற்றுக் கொண்டாகி விட்டது.

அவர்களையாவது புரிந்து நடத்துகிறாளா? இல்லை, அவர்களின் தந்தை.. அதான் அந்த டாக்டர் சைதன்யா, அவர் மனைவியான அவளது அன்னைக்குப் புரிய வைத்துவிடுகிறாரோ?

அது தான் அவர்களின் அன்னியோநியத்தை மறுமணம் புரிந்த சில மாதங்களில் கண்டு கொண்டாளே டானியா. அது குறையாமல் தொடர்ந்து கொண்டு தானே இருக்கிறது?

‘ம்ஹூம்… இவள் தன் அப்பாவை இப்படிக் காதலித்து இருக்கக் கூடாதா?’ என்றொரு பெருமூச்சுப் பிறந்தது டானியாவுக்கு.

இனி ஏங்கி என்ன செய்ய? இவள் வயிற்றில் பிறந்த அவளுக்கு எப்படிக் காதல் வரும்? ஆனால் ஆரியன் வந்து சலனப்படுத்துறானே? என்ன செய்வது?

சில்லிட்ட ஒரு கை மிருதுவாக டானியாவின் கன்னத்தை வருடிக் கொடுத்தது. ஏக்கத்துடன் தன்னைப் பார்த்து நிற்கும் அன்னையைக் கண்டு டானியாவுக்குள் ஓர் அதிர்வலை!

அந்த ஸ்பரிசம் அவளது உணர்வுகளைச் சவாலாகச் சந்திக்க, அதே நேரம் டானியாவைக் கட்டிக் கொண்டு அவளது அன்னை ஓவென அழுதாள்.

இதோ, இந்த நிமிடங்களுக்குப் பயந்து தான் அவள் ஒதுங்கித் தள்ளி நின்றதே!

அவள் அன்னையும் முயற்சி செய்தாள். டானியாவை அவளுடன் வைத்துப் பார்த்துக்கொண்டாள் தான். அந்த ஆள், அதான் டாக்டர் சைதன்யா கூட அன்பு காட்ட முயன்றார்.

ஆனால், டானியாவுக்கு ஏனோ அங்கு ஒட்டவில்லை! ஒவ்வொரு நிமிடமும் அவள், தந்தை, அன்னை என அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையே அவளது நினைவிற்கு வந்துவிட, அதுவே அடிக்கடி அவளை ஏக்கத்தில் தள்ளி அழ வைத்தது.

அவள் அன்னை தான் அவர்கள் பிரிவிற்கும், விவாகரத்துச் செய்து கொண்டதற்கும் காரணம் என டானியாவின் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. அது தான் உண்மையில் நடந்ததும்!

அன்னை மறுமணம் செய்து கொண்ட சில மாதங்களில் அங்கிருந்து வெளியேறினாள் டானியா. மிகவும் நன்றாகப் படிக்கும் மாணவி தான். அந்த நேரம் படிப்பை கூடப் பொருட்படுத்தவில்லை.

டாம்பா, ப்ளோரிடாவிற்குத் தாத்தா பாட்டியிடம் வந்து தஞ்சமடைந்தாள். அந்த வருடம் வீணாகாமல் இடையிலும் அங்கிருந்த பள்ளிக்குப் போயிருக்க முடியும் என்றாலும் டானியா அங்குச் சேரவில்லை. அந்த வருடம் வீணானது.

ஏற்கெனவே பள்ளியில் சேரும் ‘கட் ஆப்’ தாண்டி சில தினங்களில் பிறந்த நாளை கொண்டவளாதலால் கிட்டத்தட்ட ஒரு வருடம் வீண். இப்போது அன்னையின் பிடிவாதத்தால் மேலும் ஒரு வருடம் வீண்.

இதோ, இருபத்திரண்டு வயதாகியும் இளங்கலை படிப்பு முடியவில்லை. இன்னும் ஒரு வருடம் இருக்கிறதே. அதைப்பற்றி எப்போதாவது டானியா கவலைப்பட்டிருப்பாளா? ம்ஹூம்..

தாத்தா பாட்டி இருவரும் தங்கள் மகள் மீது கோபமாக இருந்தாலும், அவள் பெற்ற மகளான டானியா மீது கொள்ளைப் பாசம் காட்டி வளர்த்தனர்.

டானியாவின் தந்தை தான் அவளைத் தாத்தா பாட்டியிடம் ஒப்படைத்தது. எப்போதும் தன் தொழில்களைக் கவனிக்கும் பொருட்டுப் பறந்து கொண்டிருந்தவரால் ஓர் இடத்தில் இருந்து டானியாவைக் கவனித்துக்கொள்ள இயலவில்லை.

பல காலமாகப் பெருக்கிய தொழில். அப்படி எளிதாக உதறிவிட முடியாதநிலை. இதனைச் சொல்லித் தான் அவளது அன்னையை அவர் திருமணத்திற்குச் சம்மதம் கேட்டுக் கைப்பிடித்தது.

அப்போது தலையாட்டி சம்மதம் சொன்ன அன்னைக்குப் பிந்நாளின் பிரிவிற்கும் இதுவே காரணமாகி போனது. அவர் கூடவே இருக்க வேண்டும் என அடம்பிடித்தாள். தந்தை உடனே தொழில்களை விட முடியாமலும், குடும்பத்தில் உருவான சிக்கல்களாலும் தவித்தார்.

ஆனாலும் சில பயணங்களைத் தவிர்த்து குடும்பத்துடன் மாதத்தில் சற்று அதிகமான நாட்களைச் செலவளித்தார் டானியாவின் தந்தை. பிரச்சனைகள் பெரிதானதே தவிரக் குறையவில்லை. டானியாவின் அன்னை எந்நேரமும் சிடுசிடுத்தாள். வீட்டின் அமைதி கெட்டது. விரிசல் பெரிதாகி அவர்கள் திசைக்கொருவராய் சிதறினார்கள்!

தந்தை முயற்சி செய்தும் திருமணப் பந்தம் நிலைக்கவில்லை. அந்த வயதில் புரிந்து கொள்ள முடியாத காரணங்கள் போகப் போக டானியாவுக்குப் புரிவதாய்… இப்போது மிகத் தெள்ளத் தெளிவாய்!

அன்னையின் மனம் ஏற்கெனவே சைதன்யாவின் பால் சரிந்திருக்க, அப்பாவின் முயற்சிகளெல்லாம் கால்வாயிலிட்ட தேனாகக் கரைந்து, தேய்ந்து பயனற்றதாகவும், எள்ளலுக்கு ஆளாதனாகவும் டானியாவுக்குப் பட்டபோது அவள் அடைந்த வேதனை?

டானியா அவள் தந்தையை மிகவும் நேசிக்கிறாள். பிரிவிற்குப் பிறகு அடிக்கடி டாம்பாவிற்கு வந்து சில தினங்கள் உடன் இருந்துவிட்டு செல்வார். அவள் பன்னிரெண்டாவது வகுப்பு முடிக்கும் வரையிலுமே இது தொடர்ந்தது.

அப்போது அவர்கள் இருவரும் நிறைய ஊர் சுற்றுவார்கள். பல விடயங்களைப் பற்றிப் பேசி அலசி ஆராய்வார்கள்.

அதில் அவரின் இதயம் தொட்டு அங்கனவே தங்கி விலக மறுத்த காதலியான தன் அன்னையைப் பற்றிய பகிர்தலும் நிறைய உண்டு. அவரின் காதலுக்கு டானியா மரியாதை செலுத்த கடமைப்பட்டு இருக்கிறாள்.

இதோ அக்கடமையும், பாலூட்டி வளர்த்த அன்னை என்ற உயிரினம் மீது தன் பிறப்பால் விளைந்திருந்த பிணைப்பும் முந்திக் கொண்டு வெளி வருகிறது..

“ம்ம்மா.. த்ச்சு அம்மா, என்ன இது? ஏன் இத்தனை அழுகை? ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர் டியர்ஸ்…”

டானியாவும் இப்போது அவளை அணைத்து ஆறுதல் சொல்ல, அன்னை இன்னும் இன்னும் அழுதாள். ஒரு வழியாக அவளைச் சமாதானப்படுத்தியதும் டானியாவின் முகத்தை ஆதுரமாக வருடிவிட்டு முத்தங்களைப் பதித்தாள் அன்னை.

டானியாவும் அவள் இரு கன்னம் பற்றி முத்தங்களைத் தர.. வருடங்கள் கடந்து அன்னைக்கும் மகளுக்குமான அன்பு வெளிப்பட்டு நின்றது.

அதன்பிறகு அன்னை நிறையப் பேசினாள். டானியா இடையிடாமல் கேட்டுக் கொண்டாள். அவளையும் பேச வைக்க முயன்றாள் அன்னை. ஆனால், அப்படி எளிதாக டானியாவின் மனம் சமாதானம் அடைந்துவிடவில்லை. கொஞ்சமே கொஞ்சம் பேசினாள்.

சில மணித்துளிகளுக்குப் பிறகு பெட்ரோ வந்தான். டானியாவின் அன்னையின் முகம் மலர்ந்திருந்ததைக் கண்டு அவனும் முகமலர்ச்சியுடன் புன்னகைத்தான்.

டானியாவை அணைத்தவாறு நின்று பேசிக் கொண்டிருந்த அவளது அன்னையைப் பார்த்து அவன் கண்களும் கலங்கின. மகிழ்ச்சியாய்!

வருடத்திற்கு இரு முறையேனும் தன்னுடன் சில நாட்களைச் செலவிட வேண்டும் எனச் சொல்லிவிட்டு விடைபெற்ற அன்னையுடன் தூரத்தில் நின்றிருந்த அவள் குடும்பம் இணைந்து கொண்டது.

“அம்மா சொன்னதைக் கேட்டியா பெட்ரோ?”

“ம்ம்.. எஸ் சிஸ்டா, கேட்டேன். ஆன்ட்டி வர சொன்னா போயேன். ஒரு வாரம் அட் லீஸ்ட் அவங்க கூட இருந்துவிட்டு வா.”

“ரொம்ப ஈஸியா சொல்றடா. நான்.. நான் எப்படி அந்த வீட்டுக்குப் போக முடியும்?”

“ஏன் போக முடியாது? உங்க அம்மா மட்டுமல்ல, பேபி டால் டிவிங்கிள் அண்ட் ஷாம் ரொம்பவே ஆவலா இருக்காங்க. உன்னை எதிர்பார்த்து காத்திருக்காங்க.”

“ஷாம், டிவிங்கிள்? ஓ.. அவங்க சில்ரன்..”

“பிச்சிடுவேன்! என்ன பேச்சு அவங்க பிள்ளைங்கன்னு? உன் தம்பி, தங்கையும் தான். அம்மா மேல இருக்கும் கோபத்தை அவங்க கிட்ட திருப்பாதே. ஏன் உன்னைப் பார்க்க கூடாது.. நீ ஏன் பேசுவதில்லைன்னு புரியாத வயசு. உன்னைப் போல் அவங்களுக்கும் சில பாதிப்பு இருக்கு.

ஏன் இவ்வளவு யோசனை? உன் அம்மாவுடன் போய் இருக்கப் போறே. அதுவும் ஒரு வாரம் மட்டும். அதற்குப் போய் இப்படி அலட்டிக்கிறே. ரொம்ப யோசிச்சு குழப்பிக்காதே சிஸ்டா.”

“என் அம்மா.. எஸ், மை மாம்! ஷி வாஸ்! ஒன்ஸ் அப் ஆன் எ டைம்.. நாட் எனி மோர்” வேதனையைப் பிரதிபலித்தது டானியாவின் முகம்.

பெட்ரோவோ அவளது பேச்சில் கடுப்பாகிக் காரின் வேகத்தைக் கூட்டினான்.

“அவங்க உன் அம்மா இல்லைனா அப்போ இப்போது உன் அம்மா யாரோ?” நக்கலாக வினவினான்.

‘அம்மா’ என்ற வார்த்தையே அவனுக்கு ஒரு சாப்ட் கார்னரை உருவாக்கிவிடும். இளகி விடுவான். அவன் அம்மாவை விட்டு பிரிந்திருப்பதால் இப்படிப் பேசுறான். ஃபூல்!!

எரிச்சலானாள் டானியா. ஒரு வேகத்துடன் அவனைக் காட்டமுடன் பார்த்துக்கொண்டே, “என்னை மட்டும் கேள்வி கேட்கிற. எனக்குப் பிரியமில்லாதது எனத் தெரிந்தும் செய்யச் சொல்ற. முதல்ல நீ உன் அப்பா வீட்டில் ஒரு வாரம் போய்த் தங்கிவிட்டு வந்து என்னைக் கேள்வி கேளு. அப்புறம் நான் என் அம்மா வீட்டுக்கு போறேன்” என்றாள்.

கார் ஒரு குலுங்களுடன் நின்றது.

“ஏய்.. எங்க நிறுத்தி இருக்கிற?”

நல்லவேளை. ஃப்ரீவே தாண்டி இருந்தார்கள். அவனைக் கொலைவெறியோடு டானியா பார்த்தாள்.

‘இவன் ஏன் இப்படி இருக்கான்?’

விழிகளில் வழியும் வலியுடன் முகத்தில் சொட்டும் துயரமும் வெறுப்பும்…

‘ஐயோ, நான் என்ன பேசினேன்? ரீப்ளே மோடுக்கு போவோமா?’ என டானியா நினைக்க, அதற்கு அவசியமின்றிப் பெட்ரோ பேசத் தொடங்கினான்.

“இனி ஒரு தரம் இப்படிப் பேசி வைக்காதே சிஸ்டா. என் அப்பா.. ம்ஹூம்.. எனக்கு மட்டுமில்லை, எந்தப் பிள்ளைக்கும் அவன் அப்பாவாக இருக்கத் தகுதி இல்லாதவன்.

மெக்சிகோவில் அம்மா, நான்கு சகோதரிகள். இங்கே யாருமே இல்லாமல் அநாதையா நான். எங்களைப் பத்தி கொஞ்சம் கூட யோசிக்காமல், தன் சுகம் தான் பெரிதுன்னு போனவன். யாருடனோ.. தரம் கெட்டவள் அவள். இந்தக் கேவலமானவன் அங்கே போய்.. என்ன மாதிரியான ஒரு வாழ்க்கை? அசிங்கம்!

ஆன்ட்டியைப் போய் அந்த அயோக்கியனுடன் கம்பேர் பண்ணிட்டு. ச்சே..”

“வெரி சாரி பெட்ரோ! ஐ டிண்ட் மீன் இட். ஒரு கோபத்துல அப்படிச் சொல்லிட்டேன்.”

“ஹ்ம்ம், போகட்டும் விடு. நீ என்ன நினைச்சிட்டு இருக்கன்னு தெரியலை. உன் அம்மா கிரேட்னு சொல்ல வரல. ஆனால், அவங்க தப்பானவங்க கிடையாது.

உங்க அப்பாவோடு அவங்களுக்கு ஒத்து வரல. பிரிஞ்சுட்டாங்க. அதுவும் தனியா முடிவெடுக்காம இரண்டு பேரும் பேசி மியூச்சுவலா சம்மதிச்சதும் டைவோர்ஸ் வாங்கி இருக்காங்க.

உன்னைப் பத்தி நினைக்காம அவங்க இருக்கலை. யோசிச்சுச் சைதன்யாவிடம் பேசித்தான் முறைப்படி மறுமணம் செய்திருக்காங்க.

உன்னைத் தனியா தவிக்கவிடலை. அவங்க கூடத் தான் வச்சிருந்தாங்க. உனக்குப் பிடிக்கலை. விலகி வந்துட்ட. உன் மேல் ஒரு தப்பும் இல்லை. அது போல ஆன்ட்டி உங்க அப்பாவை பிரிந்ததும் ஒரு வகையில் ஓகேன்னு சொல்லணும்.”

“யா.. பெட்ரோ, உன் அப்பாவைப் போல என்னைத் தனியா தவிக்கவிடலை. ஆனாலும் தனிமையை எனக்குப் பரிசாகத் தந்தவங்க. தப்பானவங்க இல்ல தான். பட் தப்பு செய்திருக்காங்க.

எப்படி முதலில் இருந்த லவ் பின்னால் இல்லாமல் போகும். ஷி டிட் நாட் டு ஜஸ்டிஸ் ஃபார் அப்பாஸ் லவ்.”

“சிஸ்டா, லவ் ஒரு மிகப் பெரிய கடல். அங்கே தூரத்தில் தெரியும் அட்லாண்டிக் பெருங்கடல் போல் பலவற்றை உள்ளடக்கியது காதல். விடை காணா வினாக்கள். வியப்புகள். எதிர்பாராத திருப்பங்கள். இப்படிப் பல விசயங்கள் காதலுள் அடக்கம்.

ஆன்ட்டி மனசில் உங்க அப்பா மேல் காதல் இருந்ததான்னு நம்ம இனி மேல் ரிசர்ச் பண்ணி என்ன யூஸ்?

ஆனால் ஒரு விசயம் உறுதி. பிடிக்காமல் போன பிறகு சேர்ந்து இருந்து அடிக்கடி சண்டை சத்தம் கோபம் வருத்தம் என மன உளைச்சலோட வாழ்வதைக் காட்டிலும் பிரிவதே மேல். அது தான் பிள்ளைகளுக்கும் நல்லது. அந்த வகையில் உங்க அம்மா டிட் ஜஸ்டிஸ் ஃபார் யூ…”

“ஊஃப். பெரிய லெக்சர் அபௌட் லவ். உனக்கெப்படி பெட்ரோ காதலைப் பற்றி இவ்வளவு தெரியும்.. காதலிப்பதாலா?”

புருவங்களை உயர்த்தி நக்கலாக வினவினாள். அவனோ மிகவும் கூலாக,

“காதலி இருந்தாத் தான் தெரியுமா? எல்லாம் கேள்வி ஞானம்.”

“என்னமோ போ. காதல் செய்தால் எவ்வளவு கஷ்டங்கள்! இதுக்குத்தான் லவ்வே வேண்டாம்னு நான் அமைதியா ஒதுங்கிப் போறேன். அது புரியவில்லையே அவருக்கு.”

அலுப்புடன் பேசினாள் டானியா. பெட்ரோ மெல்லிய புன்னகையுடன் அவளையே பார்த்திருந்தான். தன்னை அறியாமலே மனதைத் திறந்திருந்தாள் டானியா.

இனி வருவது எல்லாம் வெறும் அவள், அவளது எண்ணம், அவளது உணர்வுகள் என மட்டுமின்றி, மாறிப் போகப் போவதை இப்போது டானியா அறிந்திருக்கவில்லை.

பெட்ரோவிடம் சிந்திக்காமல் சிந்திய அவளின் மனதின் வெளிப்பாடு.. அதுவே தொடக்கமாகப் போயிற்று.. எல்லாவற்றிற்கும்!