தீராதது காதல் தீர்வானது – 26 (Final)

அத்தியாயம் 27 :

இதழ் உதிர்க்காத மொழியையும்
விழி கொண்டே படித்திடும்
காதல் வல்லவனே!
உன்னால்
தீராதது ஏதுமில்லை என்னவனே,
என்னுள் நீ எழுதிவிட்ட
காதலின் முகவரியே தீர்வானது.

“ம்ம்ம்.. ம்மா.. ஆ…”

தன் செப்பு இதழ்களைப் பூ போல் மலர்த்தினாள் பேபி தாமிரா. வெள்ளை ரோஜா மொட்டு தான் அவள். அப்படியே டானியாவின் வார்ப்பு. கேசச் சுருள்கள் சருண்டு நெற்றியில் புரண்டு கொண்டிருந்தன. அழகிய சிறு விழி மலர்கள் மொட்டு மொட்டென விழித்திருக்க..

ரோஸ் நிறம் சிவப்பை கண்டிருந்த பிஞ்சு விரல்களை வாயில் நுழைத்து, “ம்ம்.. ம்ச்..”, என ருசித்துக் கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்துவிட்ட இரு நீல விழிகளில் கொஞ்சம் பிடித்தமின்மை.

அவள் முக மலர்வு அவனின் அகத்தைக் கவர்ந்த போதும் அவள் விரல் சப்புவது தவறு எனப் படுகிறது அவனுக்கு. தன் நீல விழிகளை உருட்டி மூக்கை சுருக்குகிறான். பளப்பளவென்ற தோற்றம் கொண்டவனின் கை அவளைத் தடுத்து விரல்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறது.

அவன் தான் ஆதவன் நேத்தன். ஆம், ஆரியனின் ஜூனியர். தாமிராவின் நான்கு வயது அண்ணன்.

காலமும் காதலும் கனிந்திட்ட போது
காதலின் முகவரியை தன்னுள் எழுதியவனுக்கு
முத்துக்கள் இரண்டை பரிசாகக் கொடுத்திருந்தாள்
அவன் மாலையிட்ட மங்கை.

“நோ ப்ரின்சஸ்! விரல்களை வாயில் வைச்சு டர்டி பண்ணாதே. இங்கே பார். கையெல்லாம் எப்படி எச்சில் பண்ணி வச்சிருக்கே. பேட் கேர்ள்.”

தன் மக்களின் சேட்டைகளை ஒரு பக்கம் ரசித்தவாறு மடிக் கணினியில் புதைந்திருந்தான் ஆரியன். தாமிராவிற்கு விரல்களில் தித்திப்புச் சுரந்தது போல். மீண்டும் மீண்டும் விரல்களை அழகு செப்பு வாயில் வைத்தாள், இல்லை, வைக்க முயன்றாள் தான்.

ஆதவன் அவளை வைக்க விடாமல் கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள, செல்லக்குட்டி சிணுங்கி கால்களை உதைத்து அண்ணனை எதிர்த்தாள்.

“ஹே ப்ரின்சஸ்! வாயில் கை வைக்கக் கூடாது. அழுக்கு பேபி. அண்ணா சொன்னா கேட்கணும் என் ஸ்வீட் ப்ரின்சஸ். அமைதியா இரு!”

அவன் தங்கையை ஓர் அதட்டல் போட, அவள் சிணுங்கல் அழுகையாக மாறியது. மகன் பெரிய மனித தோரணையுடன் மகளைக் கண்டிப்பதைப் பார்த்து ஓர் அழகிய மென்னகை வந்தமருகிறது ஆரியனின் உதடுகளில்.

“ஆதவ்! குட்டி ப்ரின்சஸை என்ன சொன்னே? இப்போ அழறா பாரு. சின்னப் பேபீஸ் டூத் வர்றப் போ அப்படித் தான் செய்வாங்க ஆதவ். இதுக்காக ப்ரின்சஸை சத்தம் போட்டு அதட்டுவியா?” என்றான் மகனிடம் திரும்பி.

கணினியை ஒதுக்கி வைத்து எழுந்து வந்தவன் மகளைக் கையில் அள்ளிக் கொண்டான். செல்லக் குட்டி தாமிராவின் விழிகளிலிருந்து கன்னம் தாண்டி ஓடியிருந்தது கண்ணீர். அதனைக் கண்டு ஆரியனுக்குக் கஷ்டமாகப் போய்விட்டது. மக்கள் அழுதால் தந்தைக்குத் துடிப்புத் தான் இல்லையா?

அதிலும் மகள் என்றால் இந்த அப்பாக்களுக்குச் சற்று தூக்கல் பரிவு வந்து விடுகிறது. ஆரியனும் அதற்கு விதிவிலக்கல்ல.

மகன் ஆதவன் மேல் ஆரியன் அத்தனை பாசத்தைக் கொட்டினான் தான். இருந்தும் தன் காதலின் அச்சாகப் பிறந்திருந்த மகளை மிக அதிகமாகவே தாங்கி நிற்கிறான் என நமக்குப் புரிகிறது.

செல்ல மகளின் சிவந்து விட்ட பிஞ்சு முகத்தைத் துடைத்துவிட்டு தன் தோளில் சாய்த்துக் கொண்டான் ஆரியன். தங்கையின் முதுகில் தட்டிக் கொடுத்துச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்த அப்பாவை முறைத்துப் பார்த்தான் ஆதவன்.

“என் ஸ்வீட்டி ஏன் அழறா? இந்த அழகு ரோஸ் ப்ரின்சஸை யாரு என்ன சொன்னாங்க. அண்ணனா சொன்னது? உன்னை பார்த்துக்கோ சொன்னா அதட்டுறாங்களா?”

“ப்பா! நான் உங்க ப்ரின்சஸையா சத்தம் போட்டேன்? என் ப்ரின்சஸை தான் வாயில் விரல் வைக்கக் கூடாது சொல்றேன்.”

கால்களை அகட்டி, கைகளைக் குறுக்கே கட்டி தோரணையாக நின்றபடி தன்னைக் கேள்வி கேட்கும் மகனை முகம் கொள்ளா பெருமையுடன் பார்த்திருந்தான் ஆரியன்.

“ஹஹா..” எனப் பெரிதாகச் சிரித்தவன் மகனுக்குப் பதில் சொல்லும் முன், இன்னொரு குரல் இடையிட்டது.

“அப்படிக் கேளுடா என் தங்க குட்டி.”

“சித்தா…”

தன் அருகில் ஓடி வந்த ஆதவனுக்கு ஹை-ஃபை கொடுத்தான் அஸ்வின்.

“பேபி தாமிரா எங்க ப்ரின்சஸ் ப்ரோ. நாட் யுவர்ஸ்! ஓடிப் போங்க உங்க டானியா பேப்ஸ் கிட்ட.”

“எஸ் ப்பா. எங்க ப்ரின்சஸ் தான் தாமிரா. இங்க தாங்க அவளை. நீங்க அம்மாட்ட போங்க..”

“சூப்பர் டா ஆதவ்!” அண்ணன் மகனைக் கட்டிக் கொண்டான் அஸ்வின்.

“பிள்ளையைக் கெடுத்து வச்சிருக்கடா அஸ்வின் நீ. பயமே இல்லாம போச்சுடா ஆதவ் உனக்கு. சித்தப்பா செல்லமா போயிட்டே. ஹ்ம்ம்…”

ஆதவனுக்கும் அஸ்வினுக்கும் சிரிப்புப் பொங்கியது. அஸ்வின் அப்படியே ஆதவனைத் தூக்கியவன், இருவருக்கும் பிடித்தமானதை செய்தான்.

சித்தப்பா தன்னை உயரத் தூக்கி போட்டு பிடித்து விளையாடுவது ஆதவனுக்கு மிகவும் பிடிக்கும். பேபி ஆதவனாக இருந்த போது ஏற்பட்ட பழக்கம். இப்பவும் தொடருகிறது. அம்மாவை அடுத்து மற்ற அனைவரையும் விட ஆதவனுக்குத் தன் சித்தப்பா மேல் பிடித்தம் அதிகம். அதே போல் அஸ்வினுக்கு ஆதவன் என்றால் உயிர். ஆரியனை விட அஸ்வின் தான் ஆதவனை அதிகம் சீராட்டியது.

அவர்கள் இருவருக்கும் இருக்கும் பாண்டிங் டானியாவிற்கும் மட்டற்ற மகிழ்ச்சியைத் தருவிப்பதாய்! அவள் நண்பன் மேல் கொண்டிருக்கும் பாசம் அப்படி. தன் அப்பா லுகாஸ் பற்றி எந்தளவு நினைத்துக் கொள்கிறாளோ அந்த மாதிரி அஸ்வினும் அவளுக்கு இன்றியமையாதவன் ஆகியிருந்தான்.

ஆதவன் பிறந்து ஒரு வருடத்திற்குப் பிறகு டானியா வணிகவியலில் முதுகலை பயின்ற போது அஸ்வின் தான் பெரும் உதவியாக இருந்தது. அந்தச் சமயம் ஆரியனுக்கு வேலைப்பழு சூழ்ந்து கொள்ள, ஆதவனைச் சமாளிக்க அஸ்வினால் மட்டுமே முடிந்தது.

கணவனை அப்படியே உரித்து வைத்துப் பிறந்திருந்த மகனை வெகுவாக ரசித்து வளர்த்தவளை தன் இஷ்டத்திற்கு ஆட்டி வைப்பான் அந்த ஜூனியர் நேத்தன். அஸ்வினின் உதவி இல்லாவிடின் டானியா ஒரு வழியாகி இருப்பாள்.

இப்போது சிறுவனாக வளர்ந்து நிற்கும் ஆதவனின் டிசிப்ளின் யாவும் அவனின் சித்தா கற்றுக் கொடுத்தது. சில குறும்புகள் இருந்தாலும் ஸ்மார்ட் கிட் கேட்டகரி தான் அவன்.

“என்ன ப்ரோ உங்க ப்ரின்சஸ் எங்கே காணோம்? நீங்க வீட்டில் இப்படி ரிலாக்ஸ்டா இருப்பதே அவங்களுக்காகத் தானே?”

ஆரியனை வம்புக்கிழுத்தான் அஸ்வின். விசமமாகக் கண் சிமிட்டி புன்னகைத்த தம்பியை எட்டி, செல்லமாக ஒன்று போட்டான்.

“ஏன் என் மகனையும் மகளையும் பார்த்துக்க வீட்டில் இருக்க மாட்டேனா? போடா போ, உன் ஃப்ரண்ட்டை வம்புக்கிழுக்காமல் உன்னால் சும்மா இருக்க முடியாது போல்.”

“ஹஹா.. ப்ரோ, உங்க பேபீஸை கொஞ்சுறதை விட நீங்க உங்க ப்ரின்சஸ் பேப்ஸை தான் அதிகமாகக் கொஞ்சுவீங்கன்னு எங்களுக்குத் தான் தெரியுமே. அப்படித் தானே ஆதவ்?”

“எஸ் சித்தா” என வேகமாக ஆதவன் தலையாட்டும் போது டானியா அங்கு வந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டாள்.

“என்ன எஸ் சித்தா, எதைப் பற்றிப் பேசுறீங்க ஆதவ்?”

“நத்திங் நியூ டானியா. எல்லாம் உன்னைப் பற்றிய பேச்சு தான். உன் ஃப்ரண்ட்டை கேளேன் என்ன விசயம் பேசினான்னு. சொல்லுடா அஸ்வின்.”

ஆரியன் தம்பியை தன் மனைவியிடம் சிக்க வைக்கும் முயற்சியில் இறங்க, அப்படி எளிதில் மாட்டுபவனா அஸ்வின்?

“எங்களுக்கு எல்லாம் உன்னை எவ்வளவு பிடிக்கும்ங்கிறதை பற்றி டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கிறோம் டானியா.” இப்படிச் சொன்ன அஸ்வினை,

“டேய்!” என விளித்த கணவனின் முகத்தில் டானியா என்ன கண்டாளோ…

“அப்படியாடா.. யாருக்கு என்னை ரொம்பப் பிடிக்குதாம்?” என்றதும், ஆதவன் தன் அம்மாவை கட்டிப்பிடித்து முத்தங்கள் தந்தான்.

“எனக்குத் தான் ம்மா. I love you mom as big as sky!”

“நீ பார்க்க மட்டுமில்லை, இதிலும் அப்படியே உங்க அப்பா மாதிரி இருக்கே ஆதவ்” என்று மகனை அணைத்து நின்ற டானியாவின் முகத்தில் பாசக்கலவை.

“பார்றா, இந்தப் பயபுள்ளைங்களை! புல்லரிக்குதே. எம்புட்டு லவ்வு?”

“சும்மா சும்மா அவங்க லவ் பற்றிக் கிண்டல் பண்ணாம உன்னால் இருக்க முடியாதுடா அஸ்வின். இப்போ நான் வர்றதுக்கு முன்னால் இங்க நடந்தது அது தானேடா…”

“அச்சோ! எப்படி இப்படி?”
“எப்படி இப்படின்னா?”

“ப்ரோவும் நீயும் இப்போ எதுவும் பேசலை. ஆனாலும் நடந்தது என்னன்னு அப்படியே சொல்கிறாய்.”

“ஹஹ்ஹா.. அதெல்லாம் அப்படித் தான் அஸ்வின். சொல்லாமலே தெரிஞ்சுக்கிறது.. face reading, mind reading எல்லாம் காதல் செய்யும். உன் அண்ணி அதில் எக்ஸ்பெர்ட்.”

தம்பியிடம் பேசி முடித்து மனைவியைப் பார்த்துக் கண் சிமிட்டினான் ஆரியன். கணவனின் அச்செயலால் டானியாவிடம் சிறு வெட்கம் வந்து போனது.

“நீயும் இதையெல்லாம் உணரனும்னா கல்யாணம் பண்ணிக்கோடா அஸ்வின்.”

தோழனிடம் அக்கறை கொண்டவளாகத் திருமணம் பற்றிப் பேசினாள் டானியா. ‘இதுவரை லவ், வெடிங் இப்படி என் மைண்ட்ல வரலை டானியா. பட் இப்போ கொஞ்ச நாளா ஒரு ஃபீல் வந்திருக்கு. பார்ப்போம்.. இது லவ் தானா? அவள் தான் எனக்கானவளான்னு தெரிஞ்சுக்கிறேன்.’ கண் மூடி நின்ற அஸ்வினுள் ஒரு முகம் மின்னி மறைந்தது.

ரசனையுடன் நின்றிருந்த தம்பியை தோளோடு அணைத்துக் கொண்டான் ஆரியன். சந்தோஷமான இதத்தை அக்குடும்பம் உணர்ந்தது. அஸ்வினின் இதய அறையைத் தட்டிப் பார்ப்பது யாராம்?

அவள் யாரென்று தன் அண்ணா அண்ணிடம் சொல்லவில்லை. அந்தப் பெண்ணின் மனமறியக் காத்திருக்கிறான். அஸ்வினை தொந்தரவு செய்யாமல் அவன் லவ்வுக்கு ஒரு குட் லக் சொல்லி விலகிப் போவோம்.

மகனை அவனின் அறையில் கதை சொல்லி தூங்க வைத்து விட்டு மகளின் அறைக்கு வந்திருந்தான் ஆரியன். டானியா அங்குத் தான் இருந்தாள். பேபி தாமிரா அம்மாவை பிடித்து வைத்திருந்தாள்.

ஆரியன் பேபி மானிடரை உயிர்ப்பித்தான். பிறகு மகளுக்கு மென்மையான முத்தம் வைத்து, சற்றுத் தள்ளி அவர்களை நோக்கி அமர்ந்து கொண்டான். இருவரையும் பார்த்திருந்தவனின் மனதில் எல்லையில்லா நிம்மதி.

வாழ்வில் எத்தனை வெற்றிப்படிகளை எட்டி சாதித்திருந்தாலும், ஆரியனுக்கு முழு நிறைவைத் தருவது குடும்பம் மட்டுமே.
பெரும்பாலான ஆண்களுக்கு மட்டுமில்லை பெண்களுக்கும் தங்கள் அனைத்து சாதனைகளையும் தூக்கிச் சாப்பிட்டு விடுவது நிறைவான குடும்பம் தானில்லையா?

ஆதவனின் சுட்டித்தனமும், தாமிராவின் மழலை மொழியும் செய்யும் மாயங்களை எண்ணிப் பார்த்தவனுக்குள் உவகை அலைகளின் ஆர்ப்பரிப்பு.

அவனின் உறுதியான காதல் நிகழ்த்திய, நிகழ்த்திக் கொண்டிருக்கும் சாதனைகளைத் தாம் அக்காதலனுக்கு என்றும் சாதனைகளின் உச்சம். ஆழமான காதலுடன் ஓர் உரிமையான அழுத்தத்தையும் தன் இணையில் நிலை நாட்டி கொள்பவன் அக்காதல் கள்வன்.

மனைவியின் நேசத் தழும்பலில் முக்குளித்து, தன் காதல் சுக சூடலால் அவளை ஆராதித்து எனக் கடந்து போகும் காதல் வாழ்க்கையின் நிகழ் காட்சிகளின் அணிவகுப்பு ஆக்கிரமிப்பில் அவன்! உருகி உருகி காதலிப்பவனின் நீல நயனங்கள் இப்போது அவனின் ப்ரின்சஸை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தன.

இமைக்கிடை ஆழ்ப்பார்வைகளும்
இதழோர சரசரப்பும்
ஒலியின்றி மொழி பேசும்.

அந்த நயனங்களில் மோதி நின்றவளின் பார்வையில் வெட்கப் படர்வு மேகங்கள். மகளைத் தூங்கப் போட்டுக் கொண்டிருந்தவளுக்கு எப்போதையும் விட இன்று அவனில் கூடுதல் கவர்ச்சி தெரிவதாய்!

டானியாவின் வெட்கத்தின் ஊடே உதடுகளில் உதித்திருந்த புன்னகையைக் கண்டு ரசித்தான் ஆரியன். மகள் தாமிரா தூங்கியதும் தங்கள் அறைக்குள் நுழைந்த இருவரிடமும் அமைதியே நிலவியது.

தன்னுள் உயிர்க் காதலன் கொண்டு வந்த மாற்றங்களை நினைத்து கொண்டவளுக்கு, தீராதோ எனத் தான் தவித்தது இந்த ஜென்மம் தானா என்ற சந்தேகம் வந்து போனது.

அந்நொடியில் இருவரின் சிந்தனைகள் ஒன்றோடொன்று தொட்டு நிற்க, தங்கள் காதல் நினைவுகளில் மூழ்கிச் சில மணித்துளிகளைக் கரைத்தார்கள். மொழி பேசாமலேயே கணவனின் இதழ்களின் சரசரப்பு இவளை எட்டுகிறது. இவளும் பதில் கொடுத்தாள். இதழ்களைக் குவித்து, இணையுடன் ஜோடி சேர்த்து.

காதல் தீவிரவாதி
உன் இரு
விழிகள் என்ன
வாள்களோ?
கூரிய பார்வையால்
இதயம் நுழைந்து
பதம் பார்க்கிறாய்..
இதமாகவே தேங்கி நிற்கிறாய்..
ஏன், போரிட்ட களைப்போ?
உன் விழிகள்
இளைப்பாற வேறு
இடமா இல்லை?
என் இரு
உதடுகளைக் குத்தகைக்கு
எடுத்துக் கொள்கிறாய்..
முத்தம் கொடுக்காமல் வேர்வை
முத்துக்களைக் கோர்க்க செய்யும்
வித்தை உன்னால் மட்டும்
எப்படிச் சாத்தியம் ஆகிறது?
மாலை நேரத்தென்றலில்
பிழைத்து நிற்கும்
மயிர் கால்கள் உன்
பார்வையின் வேட்கையில்
சிலிர்த்துப் போகின்றன..
கை படாமலே
படபடத்துப் போகிறேன்..
மெய் தீண்டாமலே
காதல் தீவிரவாதம்
செய்கிறாயடா..
உன் காதல் தீவிரவாதம்

வரவர எல்லை மீறுகிறதே!
மொழியின்றிப் போரிடுகிறாய்..
விழியோடு மோதுகிறாய்..
மூச்சுக்காற்றைக் கொண்டு
மன உறுதியை
ஊஞ்சலாட வைக்கிறாய்..
நெஞ்சை பூப்போல
கொய்து
காதலில் எனை
வென்று விட்டாயடா
காதல் தீவிரவாதியே!

ஆரியன் ~ டானியா காதல் சங்கமம் என்றும் தொடர்கதை.
இருவருக்கும் தீர்வான காதலை வாழ்த்திவிட்டு நாம் விலகிச் செல்வோம். வாழ்க நலனுடன்!

                (காதல் தீர்வானது)