தீராதது காதல் தீர்வானது – 24

அத்தியாயம் 24 :

துயரத் தொடர்கள்..
கண்மணியின் குழப்பம் தான் தீராதோ?
ஒருதலைக் காதல், அது
ஒரு தலையுடன் புதைந்திடுமோ?
நண்பனின் நிலை
இவள் செவிகளைச் சென்றடைந்தால்..
நிம்மதியை தொலைத்து
நடைபிணமாகிப் போவாளோ?
கண்ணின் மணியே!
காதல் கரை சேரா ஓடமொன்று
சுனாமிச் சுழலில் சிக்கிப் போனதே..
துயர்தனை எப்படிச் சொல்வேன்?
மழை மேகமெனக் கடந்திடாமல்
மரித்துப் போவது தீர்வாகுமா சகோதரா?

அஸ்வினை இரத்தம் பீறீட்ட தன்னிலை மறந்த தோற்றத்தில் கண்டது சைலேஷ் தான். ஒரு நிமிடம் திகைத்து நின்றவன், உடனே தன்னால் செய்ய முடிந்த முதலுதவியைச் செய்துவிட்டே டானியாவை அழைத்தான்.

டானியா சைலேஷின் உதவியுடன் அஸ்வினை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு கணவனுக்குத் தகவல் தர முயல, அவன் அச்சமயத்தில் டொராண்டோ, கனடா நாட்டிலிருந்து பார்சிலோனா, ஸ்பெயின் நாட்டிற்குப் பயணித்துக் கொண்டிருந்தான்.

பயண நேரம் கடந்து, நேர வித்தியாசத்தைக் கருத்தில் கொண்டு ஆரியன் மனைவியை அழைத்துப் பேசும் பொழுது அஸ்வினுக்கு நெற்றியில் தையல் போடப்பட்டுக் காயத்திற்குச் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அஸ்வின் இன்னும் மருத்துவமனையில் தான் இருந்தான். காரணம் காய்ச்சலும், வந்து வந்து போகும் மயக்கமும் தான். விழுந்ததில் வேறு எங்கேனும் அடிபட்டிருக்கிறதா, வேறு ஏதேனும் காரணமா என ஆராய அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தான்.

அஸ்வினுக்கு ஒரு புறம் ரோகனின் மரணம் பேரதிர்ச்சி தந்திருந்தது. தான் அண்ணனிடம் ரோகனின் காதலை பற்றிச் சொல்லியிருந்தால் இந்நேரம் ரோகன் உயிருடன் இருந்திருப்பான் என்ற குற்றக் குறுகுறுப்பு மறுபுறம் துன்புறுத்தியது.

இப்படி இருபுறமும் அவனை வாட்டியெடுத்து மனவுளைச்சலையும் வேதனையையும் தர, அதனை மெல்லவும் முடியாமல் யாரிடமும் வெளியே சொல்லவும் முடியாமல் தவித்தான். அதான் விடாமல் காய்ச்சல், மயக்கம் எனத் துயரம் அவனைப் படுத்தி எடுத்தது.

டானியா நன்றாகச் சமாளித்தாள் என்றாலும் அஸ்வின் அவளிடம் சரியாகப் பேசாமல் சிந்தனையால் ஆட்பட்டுக் கிடப்பது கவலை அளித்தது. அஸ்வின் மீது எப்போதும் பாசத்தை அதிகமாகச் செழுத்துபவளுக்கு அவனின் பரிதாபமான நிலையைக் காண சகிக்கவில்லை.

சைலேஷ், தன் பாஸின் மனைவி என்ற மரியாதை மட்டுமல்லாமல் தன் சகோதரிகளைப் பிரிந்து நாடு விட்டு நாடு வந்திருப்பதால், அந்த ஏக்கத்தை டானியாவை கவனித்து, அன்புடன் பேசி எனப் போக்கிக் கொள்வான். இப்போது இன்னும் பார்த்து பார்த்துச் செய்தான்.

டானியாவின் உடல்நிலையில் அக்கறை செலுத்தி நேரத்திற்கு உண்ண வைப்பது, ஓய்வு தேவை என வலியுறுத்தித் தூங்க சொல்வது இப்படி.

தன் சின்னப் பாஸ் அஸ்வினையும் கண் முழித்துக் கவனமாகப் பார்த்துக் கொண்டான். இப்படி அவன் எவ்வளவு உதவியாக இருந்த போதும், டானியாவின் மனது அதிகமாகக் கணவனைத் தேடியது.

வயிற்றில் இருந்த சிசு வேறு தொந்தரவு கொடுக்க, கொஞ்சம் திணறித்தான் போனாள். கணவனின் தோள் சாய ஏக்கம் கொண்டது பாவை நெஞ்சம். அதனால் அவனை விரைவாக வரச் சொல்லிவிட்டாள்.

தம்பியின் உடல்நிலை பெரிதாகப் பயப்படும்படி இல்லையென்றாலும் ஏதோ நடந்திருக்கிறது என்ற மன சஞ்சலம் ஆரியனுக்கு வந்திருந்தது.

அஸ்வின் எதற்கும் பெரிதாக அலட்டிக் கொள்ளாதவன். திடகாத்திரமான ஆண்மகன் என்பதுடன் தைரியத்தைக் கடைப்பிடிப்பவன். அது தான் ஆரியனை யோசனையில் தள்ளி கவலையும் கொள்ள வைத்திருந்தது.

மனைவி கர்ப்ப காலத்தில் எந்தச் சிரமமும் படக் கூடாது என்ற கவனமும் வந்திருந்தது. முக்கியமான வேலைகள் சிலதை, உடனே பார்க்க வேண்டியவைகள் எனப் பரபரவென முடித்துப் பார்சிலோனாவிலிருந்து கிளம்பி விட்டான்.

எவ்வளவு விரைவாக ஆரியன் வந்த போதும் அஸ்வின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஈரிரவுகள் கடந்திருந்தன. அவன் உடல்நிலையும் சற்றுத் தேறி இருந்தது.

அண்ணனைக் கண்டதும் அஸ்வினிற்கு நெஞ்சுக்குள்ளே இரண்டு நாட்களாகப் பதுக்கி வைத்திருந்த துக்கம் வெளி வரத் துடித்தது. அண்ணி அங்கே உடன் இருந்ததால் அமைதி காத்தான். அவனின் இயலாமை மற்ற இருவரின் விழிகளுக்குத் தப்பவில்லை.

மனைவிக்குச் சிறு அணைப்புடன் ஆறுதல் தந்த ஆரியன் சில நிமிடங்களே அவளுடன் செலவழித்தான். அவளின் நலனைத் தெரிந்து கொண்ட பின் சைலேஷூடன் வீட்டிற்குப் போகச் சொல்ல,

டானியாவிற்குமே மருத்துவமனை சூழ்நிலை போதும் என்ற நிலை தான். மேலும், அஸ்வின் அண்ணனை கண்டதும் ஏதோ பேச விழைவதும், தன்னைக் கண்டு தயங்குவதும் புரிந்தும் இருந்தது தானே?

அதனால் அவர்களுக்குத் தனிமை தந்து, இனி, கணவன் பார்த்துக் கொள்வான் என்ற நிம்மதியுடன் அங்கிருந்து அகன்றாள்.

“என்னடா அஸ்வின், எப்படி இப்படி ஆச்சு?”

ஆரியன் கேட்டதும், அதற்காகவே காத்திருந்தது போல் அஸ்வின் வெடித்தழுதான். வளர்ந்து கம்பீரமாக இருக்கும் அந்த ஆண்மகனின் கண்ணீர் பெரும் துயரை எடுத்துரைத்தது. ஒரு நாளும் இப்படி உடைந்து அழுபவனல்ல அஸ்வின்.

எதுவோ பெரிதாக நடந்து விட்டதென ஆரியனுக்குப் புரிந்து, அவனின் வலிமையில் ஒரு துடிப்பை தருகிறது. தம்பிக்கு ஆதரவாக அவனின் இறுகிய அணைப்பும் இதயத் துடிப்பும்.

“எதுவாக இருந்தாலும் சமாளிக்கலாம் அஸ்வின். இங்க பாருடா, அண்ணனைப் பாரு. அழாதே! இப்படி நீ உடைஞ்சு போறளவுக்கு எதுவும் இல்லைடா. என்ன விசயம்ன்னு என்கிட்ட சொல்லு. நான் பார்த்துக்கிறேன்.”

“இருக்கு ப்ரோ. இனி எதைப் பார்ப்ப? நடந்து முடிஞ்சு போனதை நம்மால் பார்க்க கூட முடியாதே. பிறகு எப்படிச் சமாளிக்க முடியும்? ஹய்யோ உன்ட்ட எப்படிச் சொல்வேன்?”

“உஷ்ஷ் அஸ்வின்! இப்படி அழுதா சரியாகிவிடுமா? கண்ட்ரோல் யுவர்செல்ஃப். என்ன நடந்துச்சுன்னு என்கிட்ட சொல்லு. நீ சொன்னா தானே அடுத்து என்னன்னு பார்க்க முடியும்?”

“ரோ.. ரோகன் இஸ் நோ மோர். அஹ் அ.. அவன் செத்துட்டான் ப்ரோ!”

கஷ்டப்பட்டு முயன்று அச்செய்தியை அண்ணனிடம் சொன்ன அஸ்வினின் குரலில் வேதனை முட்களின் கீறல்கள்! அவனின் உள்ளத்தில் தன் தோழனுக்கான ஏக்கங்களின் கொப்பளிப்பு! விழிகளில் மழை ஓடையெனக் கண்ணீர்!

“ஹேய்!! என்ன.. என்ன சொல்ற அஸ்வின்! ரோகன்.. ரோகனா?” ஆரியன் அதிர்ந்து தம்பியைப் பார்க்க,

“என் ஃப்ரண்ட் ரோகன் இப்போ உயிருடன் இல்லை. நம்மளை விட்டுப் போய்ட்டான் ப்ரோ” என்றான் அஸ்வின்.

“எப்போ, என்ன நடந்தது? உனக்கெப்படித் தெரிய வந்தது? இந்த விசயம் உங்க அண்ணிக்குத் தெரியாதா? ப்ரின்சஸ் எதுவும் என்கிட்ட சொல்லலையே.”

“ம்கூம்.. அண்ணிக்குத் தெரியாது. நான் இன்னும் அவங்கட்ட சொல்லலை. த்ரீ டேஸ் ஆகிடுச்சு. நியூஸ்ல பார்த்தேன் ப்ரோ…”

“நியூஸ்லயா? என்ன சொல்ற அஸ்வின்? சிகாகோவில் தானே ரோகன் இருப்பது. பிறகு இங்கு லோக்கல் நியூஸ்ல எப்படி? அந்தளவுக்கு என்ன தான் நடந்திருக்கு?”

“Rohan committed suicide at Lake Michigan. அதுவும் தன்னைத் தானே கொழுத்திட்டு. அடுத்த நாள் தான் அப்படி ஒரு இன்சிடெண்ட் நடந்ததைக் கண்டு பிடிச்சிருக்காங்க. அதான் பெரிய அளவில் வெளியே தெரிஞ்சிடுச்சு.”

“என்ன! தற்கொலையா? அதுவும், he burnt himself? Oh god! கொடூரமான முடிவெடுத்திருக்கான். ஏன்.. இவ்வளவு கொடுமையா ஒரு சாவு? எதுக்குடா ரோகன் இப்படிப் பண்ணிக்கணும்?”

ஆரியனின் உள்ள அதிர்வு அவன் குரலில் எதிரொலித்தது. உடலில் பெருமளவு உணர்ச்சி கொந்தளிப்பு.

அஸ்வின் தன் அண்ணனிடம் அனைத்தையும் சொல்லத் தயாரானான். எப்படிச் சொல்வது என்ற தயக்கம் அக்கணத்தில் உடைந்தது.

ரோகனின் விசயத்தில் ஆதி முதல் அந்தம் வரை தான் அறிந்தது என்னவோ அப்படியே சகோதரனிடம் பகிர்ந்தான். அதி வேதனையுடன்.. ஒருவித இயலாத வேகம் விரவி இருந்தது.

தன் காதல் இளவரசியை வேறொருவன் விரும்பினானா? அதுவும் யார்? ரோகன், தன் தம்பி போன்றவன். பெரிய ஷாக் தான்!

ஆரியனின் முகம் அப்பட்டமாக அதிர்ச்சியைக் காட்டியது. அவனின் காதல் இதயம் தடதடத்துப் போனது. ஓரிரு நொடிகள் தான் என்றாலும் அந்தக் காதல் மனம் தன் இணையினை நாடிச் சென்று தவிப்புடன் வருடி வந்தது.

எத்தனை உறுதியாக இருந்த போதும் அவனின் காதல் நெஞ்சத்தில் ஓர் இனம் புரியாத உணர்வு.

தனக்கும் தன் மனைவிக்கும் இந்த விசயத்தில் எந்தவொரு சம்மந்தம் இல்லை தான். எனினும் ரோகன் தன்னை மாய்த்துக் கொண்டது காதலால். டானியா மீது அவனுக்கு வந்திருந்து தன் ஆயுசை இழந்து பரிதவித்த காதலால்.

இங்கே இப்படி யோசனை ஓடியதும் ஆரியனின் இதயம், அவனின்.. தம்பியாகப்பட்டவனின் வலியை உணர்ந்து துடித்தது. ஒரு காதலுக்குத் தெரியும் மற்ற காதலின் தவிப்பு. காதல் தவறிப் போனதன் ஏக்கம்.. காதல் தோல்வியின் வலி.

ஆரியனின் விழிகளில் நீர் படலம். மங்கலாக ரோகனின் உருவம் வந்து போக, திரும்பி அறையின் சன்னலின் ஊடே வெளி உலக இயக்கத்தை வெறித்து நின்றான்.

தன்னையும் தன் மனைவியையும் மதித்து ரோகன் விலகிப் போனது அவனின் உயரிய பண்பினை உரத்துக் கூறியது. அதுவும் கடைசி வரை டானியாவிற்கு அந்தக் காதலை தெரிய வைக்காமல்.
அதில் சுருங்கி விரிந்த அவனின் இதயம் ரணத்தால் தொய்ந்தது.

“ப்ரோ..”

அஸ்வினின் அழைப்பு தயங்கி ஒலிக்க, அவ்வளவு தான். தம்பியிடம் பாய்ந்தான்.

“ஏன்டா என்கிட்ட ரோகன் காதலிச்சதை முன்பே சொல்லலை? நீ சொல்லியிருக்கணும். தப்பு பண்ணிட்ட. நான் அவன்ட்ட பேசியிருப்பேனேடா. டானியாவே இந்த விசயத்தை நல்ல விதமா ஹேண்டில் பண்ணியிருப்பா. I know her well Ashwin.

எங்க வெடிங் நடக்கும் முன்பே உனக்கு ரோகன் பேசியிருக்கான். அவன் டைரக்டா டானியாட்ட பேசலைன்னும் உனக்குப் புரிஞ்சிருக்கு. அப்போவே என்கிட்ட இந்த மேட்டரை சொல்லியிருக்கணும்.

அப்ப சொல்லலைன்னாலும் இத்தனை மாசத்தில் ஒரு தடவையாவது உனக்கு இவ்வளவு பெரிய விசயத்தை ஷேர் பண்ணனும் தோணலையா? ஏன்டா ஏன்?

ஹய்யோ, எல்லாமும் என்கிட்ட பேசுவ தானே. அப்புறம் இப்படி ஒரு பெரிய விசயத்தை ஏன் விட்டுட்ட? அதுவும் ரோகன் யாரோ ஒருத்தனாக நமக்கு இருக்கலை. இந்த முடிவு அநியாயம்டா.”

“ரோகன் கொஞ்ச நாள்ல சரியாயிட்டான். அப்புறம் சாதாரணமாகத் தான் இருந்தான் ப்ரோ. நாங்க மீட் செய்தோமே. இப்படிப் பண்ணிக்குவான்னு நான் நினைக்கலை. இல்லைன்னா உங்கட்ட சொல்லியிருப்பேன்.”

அற்புதமொன்று நிகழ்ந்திடாதா.. ரோகன் கண் முன் வந்து விட மாட்டானா? நண்பனை அணைத்துக் கொள்ளப் பரபரத்தது அஸ்வினின் மனது. எதை அணைப்பது? அவன் உடல் கூட இப்போ முழுதாக மிஞ்சியிருக்கவில்லையே?

அண்ணனை கட்டிக் கொண்டு அழுதான். தம்பியைச் சற்று அதிகமாகவே கடிந்திருந்தது புரிகிறது ஆரியனுக்கு. தசைத் துடிப்பின் தூண்டுதலால் தானாகத் தன் இளவலை தழுவி ஆறுதல் அளித்தான்.

ஆரியனின் கரங்கள் அஸ்வினை அமைதிப்படுத்தியது. ஆனால், அவனுள்ளம் அமைதியை இழந்திருந்தது. ரோகனுக்கு இப்படி ஒரு காதல் இருந்திருக்கிறது எனத் தனக்கு முன்பே தெரிந்து இருக்குமாயின் இவ்வுயிரிழப்பு நிகழாமல் தடுத்திருக்கலாம்.

உயிர் என்பது ஒரு பிறவியின் துடிப்பல்லவா? அதைத் தானாகத் துறக்க முடிவெடுப்பது என்றால் எத்தனை துயரம்?

‘அண்ணா’ ரோகனின் ஆசை விளிப்பு அவன் செவிகளை இன்னும் வருடுவதாய்! எளிதில் யாரிடம் ஒட்டாமல் ஒரு வட்டத்துக்குள் தன்னை இருத்திக் கொள்பவன் இவர்களிடம் மட்டும் தானே நெருங்கி வந்திருந்தான்.

அவனின் மெல்லிய புன்னகை முகம் தூக்கலாய் நெஞ்சை பதம் பார்த்தது. கேள்வியும் கேட்பதாக ஆரியனுக்குத் தோன்றுகிறது.

‘எப்படி மறந்து போனாய் அண்ணா? உன் திருமண வைபவத்திற்குப் பிறகு நான் உங்களைக் காணாமல் போனது ஏனோ? இப்படி ஒரு சந்தேகம் உன்னில் வராமல் போனது எனக்கு ஆறுதலா, துயரமா.. கடைசி வரை எனக்கும் தெரியலை…’

அந்தப் புள்ளியில் வட்டமிட்ட அவன் எண்ணம் ரோகனின் குடும்பத்தின் துயரம் எந்தளவிற்கு இருக்கும் எனத் துடித்துப் போகிறது.

தம்பியை சமாதானப்படுத்தித் தேற்றி வைத்து, தானும் மன பலத்தைக் கொண்டு வந்தான். நடந்து முடிந்த நிகழ்வை இனி இல்லாமல் செய்யும் வல்லமை யாருக்கும் கிடையாது.

ஆனால், அப்பெற்றோருக்கு இச்சமயத்தில் அரவணைப்பை நல்க முடியும். உடன் நின்று காரியங்களைக் கவனித்துத் தர இயலும். ஒரு மகனை இழந்து துடிப்பவர்களுக்கு எக்காலத்திற்கும் மகன்களாகத் தாங்கள் திகழ வேண்டும்.

நேரிடையாகவோ, இல்லை, மறைமுகமாகவோ தங்கள் அன்பும் சொந்தமும் ரோகனின் அம்மா, அப்பாவிற்கு எப்போதும் இருக்கும் என்ற உறுதி ஆரியனுக்குள் எழுந்தது. அதையே தம்பியிடமும் சொல்ல, அவனுக்குள்ளும் அந்த எண்ணம் வலுப் பெற்றது.

அஸ்வின் அன்றே வீட்டிற்குப் போகலாம். அவனின் உடல்நிலை தேறிவிட்டது என்று மருத்துவர் சொல்லவும், தாமதிக்காமல் சில மணித்துளிகளில் அவனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான் ஆரியன்.

ஏற்கெனவே ஆரியன் தம்பியிடம் கூறியிருந்தான். இப்போது எந்த விசயமும் டானியாவின் செவிகளுக்குப் போக வேண்டாம் என. ரோகனின் மரணம் உட்பட.

தான் மட்டுமே சிகாகோ செல்வதாக முடிவும் செய்து விமானப் பயணச் சீட்டையும் முன் பதிவு செய்திருந்தான். உடன் வருவதாகக் கெஞ்சிய அஸ்வினை மறுத்து விட்டான். அஸ்வினிடம் அவன் அறையில் நின்று பேசிக் கொண்டு இருந்தாள் டானியா. பொதுவாகத் தான் இருந்தது அந்த உரையாடல்.

டானியா எப்போதும் எதையும் தோண்டித் துருவி கேள்வி கேட்பதில்லை. தனக்குத் தெரிய வேண்டிய விசயங்கள் எப்படியும் வந்து சேரும். அப்படிச் சொல்லப்படாத விசயங்கள் தனக்கானதாக இருக்காது. ஏன் வீணாகக் கவலைப்பட வேண்டும். அவளின் எண்ணப்பாடு இப்படித் தான்.

இந்த நிமிடத்தில் அவளின் மனதில் அஸ்வினின் நலன் மட்டுமே. அவனுக்கு இப்போ என்ன தேவை என்று பார்த்துக் கொண்டாள்.
ஆரியன் இடைச் செய்தித் தொடர்பில் அஸ்வினின் அறைக்கு அழைத்தான்.

“ப்ரின்சஸ் நம்ம ரூமுக்கு வா.”

கேள்வியாகக் கணவனைக் காண அங்குச் சென்றவள் ஒரு சில நொடிகள் திகைத்து நின்று இருந்தாள். அவன் அடுத்த புறப்பாடுக்குத் தயாராகிக் கொண்டிருந்தான்.

“காலைல தானே வந்தீங்க? மறுபடியும் டிராவலா? அதுவும் இப்போ நைட்டே போகணுமா?”

மனைவியின் அருகே சென்றவன் அவளைத் தன்னுடன் அணைத்து நின்றான். எதுவும் பேசவில்லை. பேச வந்தவளின் உதட்டில் தன் விரல் பதித்துத் தடுத்துவிட்டான்.

மனைவியின் அருகாமை தன் வேதனையைச் சற்றே மட்டுப்படுத்துமா? மௌனமாக அதை உணர முற்பட்டான். கொஞ்சமாகத் தனக்கான ஆறுதலை பெற்றுக் கொண்டான். சட்டென அவள் முன் மண்டியிட்டான்.

‘என் ப்ரின்சஸிடம் என்ன சொல்வேன்? ரோகனின் தற்கொலை எனக்கே பேரதிர்ச்சி எனும் போது, இவளுக்கு? அஸ்வின், பிரகதி, ரோகன், சீத்தல் என இவளின் நெருக்கத்தில் வரிசைப்படுத்தப்பட்ட நட்பு வட்டம். துயரச்செய்தியை சொன்னால் தாங்குவாளா?

இப்போது உள்ள நிலையில் எப்படி எடுத்துக் கொள்வாளோ? ஹார்மோனல் சேன்ஞ்சஸ் வேறு இந்தச் சமயத்தில் அதிகம். உடனே சொல்லாவிட்டாலும் சிகாகோ போய் வந்ததும் சொல்லித்தானே ஆகணும்? அவளின் நண்பனின் மரணத்தை மறைக்க முடியாதே’

வயிற்றில் வந்து விழுந்த முத்த எண்ணிக்கையில் டானியா சற்றே தடுமாறி போனாள். ஆரியன் அவளை இடையோடு அணைத்து அப்படியே அமர, கணவனின் சொல்லாத வேதனை அவளையும் தொட்டதோ? அவன் முன்னுச்சி முடியை மெல்ல கலைத்து விட்டாள். அவன் மேனரிசம் போல்.

குனிந்து அவன் நெற்றியில் முத்தமிட,

“பேப்ஸ், ஒரு அவசர வேலை. சிகாகோ போறேன். அங்க இருந்து வந்ததும் உன் கூடத் தான் டூ வீக்ஸ் இருக்கப் போறேன். ஓக்கேவா?” என்றான்.

“சரி எதையும் யோசிக்காம கிளம்புங்க. உங்க ரெண்டு குழந்தைகளையும் நான் பத்திரமாகப் பார்த்துக்கறேன். நீங்க நிம்மதியா போயிட்டு வாங்க.”

“என்ன சொல்ற டானியா.. ரெண்டு பேபீஸ்?”

ஆரியனிடம் சிறு அதிர்ச்சியும் ஆவலும் தெரிந்தது. “ஹஹா.. நீங்க டிவின்ஸ் ன்னு நினைச்சீங்களா? அம்மாடி! அண்ணி படுற திண்டாட்டத்தைப் பார்த்துமா கேட்கறீங்க? நோ நோ! நான் அஸ்வினையும் நம்ம பேபியையும் சொன்னேன்.”

கண் சிமிட்டி சிரித்தவளை பார்த்திருந்தவனுக்கு அந்த நேரத்திலும் ஒரு புன்னகை மலர்வு.

“ஓஹோ.. அப்படி இல்லையா? சரி பேப்ஸ். பார்த்துக்கோ. நான் கௌதம் மாமா ஃப்ரீயா இருந்தா வர சொல்றேன். அவர் இங்க வந்தால் நீ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிக்கலாம். ஆதிரா போன வாரமே நெக்ஸ்ட் டூ வீக்ஸ் ரொம்பவே பிஸியான நேரம்ன்னு சொல்லியிருந்தாள். அவள் வர்றது சிரமம்.”

கணவனுக்கு மறைமுகமாக ஆறுதல் அளித்து விடைகொடுத்த டானியாவிற்குள் இப்போது சின்னதாக ஒரு கவலை வந்தமருகிறது.

கௌதமை விமான நிலையம் போகும் போது அழைத்துப் பேசினான் ஆரியன். முதலில் ரோகனின் மரணச் செய்தியை மட்டும் பகிர்ந்தவனுக்கு வேதனை பொங்கி வர, காரை ஓரமாக நிறுத்தினான்.

அதற்கு மேல் தாங்க இயலவில்லை ஆரியனால். உறவை விட நண்பனாக நெருங்கி தோள் கொடுக்கும் கௌதமிடம் அவனுக்கு எப்போதும் ஓர் ஆறுதல். இப்போது அந்த ஆறுதலுக்கான ஏக்கம் பிறக்க, அனைத்தையும் சொன்னான். கேட்டிருந்த கௌதமிற்கு அதிர்ச்சி, வேதனை, கவலை வந்த போதும் உணர்ச்சி வசப்படவில்லை.

“ஓஹ், வெரி சாரி டு ஹியர் அபௌட் ரோகன். எ டெரிபிள் என்ட்.”

“ம்ம்.. நீங்க உடனே கிளம்பி நியூயார்க் வர்றீங்களா மாமா?”

“சரிடா வர்றேன். நீ கவலைப்படாம பத்திரமா போய்ட்டு வா. வந்து பேசிக்கலாம்.”

“அப்புறம் மாமா.. அக்காகிட்ட ரோகன் லவ் மேட்டர் பற்றி எதுவும் சொல்ல வேண்டாம். நீங்க மட்டும் இப்போ நியூயார்க் வந்தா போதும். தேவையில்லாமல் இதைச் சொல்லி, விசயத்தை மேலும் கிளறி. வேண்டாம். எனக்கு இஷ்டமில்லை. அதான்..”

தயக்கத்துடன் தான் சொன்னான் ஆரியன். இருந்தும் அவன் சொன்ன விதம், கண்டிப்பாக நீ சொல்லக் கூடாது என்ற எண்ணத்தை வலியுறுத்தியது.

“ஹ்ம்ம்.. புரியுதுடா. ஆதிராவுக்கு லவ் மேட்டர் பற்றி எதுவும் சொல்ல மாட்டேன். நான் எல்லாம் பார்த்துக்கிறேன். நீ ரொம்ப யோசிக்காதே.
ரோகன் லைஃப் முடிஞ்சிருச்சு. இனி அவன் பேரண்ட்ஸ் பற்றித் தான் நாம் நினைக்கணும். நீ போய் அவங்களுக்கு ஆறுதலா இருந்துட்டு வா.

இப்போ பார்த்து டிரைவ் பண்ணிட்டு போ. டிஸ்டர்ப்டா தெரியுற. நிம்மதியா போய் ஃப்ளைட் ஏறு. டேக் கேர் ஆரியா!”

“ஹ்ம்ம்.. ஓகே மாமா. பை…”