தீராதது காதல் தீர்வானது – 20
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் 20 :
உனக்காக ஒரு வரியேனும்
கவியேற்றிடத் தான் துடிக்கிறேன் நிலவே…
உன்னில் கட்டுண்டு கிடக்கும் நான்
மயக்கத்தின் பிடியில்..
பிறகு எழுத்தாணி பிடிப்பது எப்படி வெண்ணிலவே?
ரிசப்ஷன் முடிந்து ஒவ்வொருவராகக் கிளம்ப, “நான் உங்கட்ட டச்ல இருக்கலாமா?” என ஷாம் டானியாவிடம் பெர்மிசன் கேட்டான்.
அவனின் அக்கா என்ற அழைப்புத் தொலைந்திருந்தது. இப்போது மட்டுமல்ல, அவர்கள் ரிசப்ஷனுக்கு வந்ததில் இருந்தே.
டானியா அதைக் கவனித்திருந்தாள் தான். பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், அவன் இப்படிக் கேட்டதும் என்னமோ போலிருந்தது.
“ஷ்யூர், வொய் நாட் ஷாம். உனக்குப் பேசணும்னு தோனிச்சுனா கால் பண்ணு. பார்க்கணும்னு தோனிச்சுனா எங்களை விசிட் செய்யலாம். என் ஃபோன் நம்பர் தர்றேன்.”
அவன் தலையில் கை வைத்து மெதுவாகக் கேசத்தை வருடினாள். ஏனோ அந்த நிமிடம் இருவருக்கும் மிக நெகிழ்வாய்!
அத்தருணம் தான் அவர்களின் சகோதரத்தின் தொடக்கமாக இருக்கப் போகிறது.
சில உணர்வுகள் தானாக வருவது. அதற்குத் தடா சட்டம் கிடையாது. அணை போடவும் முடியாது. அன்பு அப்படிப்பட்ட உணர்வு தான். அதிலும், ‘my blood same blood’ என்னும் உணர்வு ரொம்பவே unpredictable.
நம்மால் இரத்த உறவுகளின் உணர்வுகளை, இப்படித் தான் என்று உறுதியாகக் கணிக்க முடிவதில்லை. எப்போது வேணும் என்றாலும் மேலே எழும்பும். பொங்கிப் பெருகும். சுழற்றி அடிக்கும். மனதை, பல்டி அடிக்க வைத்து டுவிஸ்ட் கொடுத்துவிடும்.
அப்படித் தான் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது. ஆரியன் அவர்களைப் பார்த்திருந்தான். அந்த நேரம் மனைவியைப் பெருமிதத்துடன் அவன் பார்வை தழுவியது. மனதில் இதம் பரப்பிய செயல்.
டிவிங்கிள், ஷாம் போலல்லாது அக்காவை அக்காவென்றே அழைத்தாள். அவளுக்கு எதையும் பிரிந்துணரக் கூடிய பக்குவம் வந்திருக்கவில்லை. ஒரு வகையில் அது நன்மைக்கே.
இதோ இப்போ விடைபெறும் போது டானியாவைக் கட்டிப் பிடித்து முத்தம் வைத்து விட்டே சென்றாள்.
டிவிங்கிள் பார்ப்பதற்குச் சற்று டானியாவை போல இருப்பாள். அதனாலோ என்னவோ ஆரியனை மட்டுமில்லை மொத்த குடும்பத்தையும் கொஞ்சம் கவர்ந்திருந்தாள்.
அவர்களுடன் சைதன்யா மற்றும் தேஜூ விடைபெறும் போது, டானியா நிர்மலமான முகத்துடன் இருந்தாள்.
அவளுக்குச் சைதன்யா மேல் வெறுப்போ விருப்போ கிடையாது. பாசம், பந்தம் அப்படி எதுவுமில்லை. அவள் அறிந்த வரை அவர் நல்லவர். ஒரு மனிதராக, மருத்துவராக, ஏன் ஒரு நல்ல குடும்பத் தலைவராகவும்.
அவர் தனக்கு முதலில் அறிமுகமான சூழல், அம்மாவின் கணவர் என்ற உறவுமுறை. அதனைச் சகியாமல், தான் அவரைப்படுத்தியது என எதுவும் மறக்கவில்லை. இன்னும் அதையே பிடித்து வைக்காமலிருக்கக் கற்றுக் கொண்டாள்.
அவருக்குத் தன் இதழில் படர விட்ட மெல்லிய புன்னகை, சின்னத் தலையசைப்புடன் விடை கொடுத்தாள். அம்மாவிற்கு விடைக் கொடுக்கும் போது சிறு அணைப்பை தந்தாள். ரொம்பப் பேசவுமில்லை. அழுது கரையவுமில்லை. தேஜூ கண்ணீரோடு தான் சென்றார்.
டானியா வெளிப்படையாக எதையும் காட்டவில்லை என்றாலும் உள்ளுக்குள் உணர்வுகளின் தாக்கம் இருக்கத் தான் செய்தது.
மனைவியைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டிருந்த ஆரியன், அந்த நொடி அவள் உணர்வுகளைத் தனதாக உணர்ந்தான். தன் தோளோடு அவளை அணைத்துக் கொண்டான். நான் இருக்கிறேன் உனக்கு என்பதாக.
லுகாஸ் மற்றும் எலைன் கிளம்பிப் போக ரொம்பவே அழுது விட்டாள் ஆரியனின் ப்ரின்சஸ். அப்பாவுடன் அதிகப் பிணைப்பு. எலைனுடன் சிற்றன்னை என்ற உறவைவிட நல்ல தோழியைத் தான் கண்டிருந்தாள் டானியா. அவர்கள் தொலைவில் இருந்த போதும் இருவரின் பாசம் அந்த மாதிரி.
இன்னும் கௌதம் குடும்பத்துடன் கிளம்பவும், டானியாவை சமாளிக்க நம்ம பயபுள்ள ஆரியன் கஷ்டப்பட்டுவிட்டான். அஸ்வினுக்கு அதைக் கண்டு சிரிப்புப் பொங்கியது.
வாய்விட்டுச் சிரித்து முதுகில் இரண்டு அடியும் வாங்கிக் கொண்டான். அவனை அடித்தது யாராம்? அவன் தோழி டானியா என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. சாட்சாத் நம்ம ஹீரோ தான் தம்பி முதுகில் டின் கட்டியது. அதை ஆச்சரியமாக மொத்த குடும்பமும் பார்த்து ரசித்தது.
வந்திருந்த விருந்தினர்கள் மற்றும் உறவினர்கள் விடைபெற்றுச் சென்ற ஓரிரு நாட்களில்,
“அச்சோ! என்னதிது? இப்படி நெருக்கமாகவா நிற்பீங்க? கொஞ்சம் தள்ளிப் போங்க. இது ஏர்போர்ட்” எனத் தன்னுடன் ஒட்டியே நின்றிருந்த கணவனை விட்டு விலக எத்தனித்தாள்.
தங்கள் உடைமைகளுக்காக வான்கூவர் விமான நிலையத்தில் காத்திருந்தனர் ஆரியனும் டானியாவும். சில நிமிடங்கள் முன்பு வான்கூவர் மாநகரத்தில் தரையிறங்கிய விமானத்திலிருந்து உதிர்ந்திருந்தனர்.
தன் ப்ரின்சஸை விலக விடாமல் சிக்கென்று இருக்கும் அவளின் சிற்றிடையில் கை கொடுத்து இன்னும் இறுக்கமாகப் பிடித்தான். அந்த டியரில் ஈர்க்கப்பட்டவனாக, “இது ஏர் போர்ட் தான். யாரு இல்லைன்னு சொல்றது. இருந்துட்டுப் போகுது. என் கேர்ள் ப்ரண்ட். என் லவ். நான் இப்படித் தான் நிற்பேன். நிக்க வச்சுக்குவேன்.”
அழகிய மென்னகையுடன் அவள் காதோரம் முணுமுணுத்தான் வெளியே ஏதும் தெரியாதது போலப் படு கேசுவலாகத் தன்னோடு மேலும் ஒட்ட வைத்துக்கொண்டான்.
“ஹய்ய, வைஃப்பை கேர்ள் ஃப்ரண்ட்னு சொல்ற ஆள் நீங்களாத் தான் இருப்பீங்க போங்க…”
“உன்னைக் கேர்ள் ஃப்ரெண்டா வச்சு எங்க என்ஜாய் பண்ணினேன் பேப்ஸ்? நீ வைஃபா வந்த பிறகு தான் நமக்கே இப்படிச் சான்ஸ் கிடைச்சிருக்கு. உன்னை என் கேர்ள் ஃப்ரெண்ட்னு சொல்றதுல தான் செம கிக் தெரியுமா பேப்ஸ்?” சொக்கிப் போனவனாக அந்தக் கிக்கை அனுபவித்துச் சொன்னான்.
“வைஃப்னா சில ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் வச்சுக்கணும். Especially in public. கேர்ள் ஃப்ரண்ட்னா நோ ரெஸ்ட்ரிக்ஷன்ஸ். பப்ளிக்கோ, ப்ரைவேட்டோ கவலையே பட வேண்டாம். I can flirt with you freely!”
மனைவியின் கண்களைச் சோம்பலாகத் தழுவின அவனின் நீல நயனங்கள். அவளோ அவன் பேசிய மொழியின் அர்த்தத்திலும் அதற்கு மேல் மயக்கிய அவனின் விழிகளாலும் கவரப்பட்டாள்.
மெல்ல மெல்ல அந்த நீல நயனங்கள் அவளை ஈர்த்து அமிழ்த்துக் கொள்ளும் அந்நொடியில் அவன் சரியாக உதட்டைக் குவித்து முத்தத்தைப் பறக்க விட்டான். அதில் சுதாரிப்பு வந்தது அவளுக்கு.
“ஹய்யோ! இப்படியா பேசுவீங்க.. Dangerous fellow! ரொம்பவே மோசம்.. கெட்ட பையா! இப்ப என்ன செய்யலாம் என் பேட் பாயை?”
சிரிப்புடன் டானியா கேட்க,
“ஏய்! நான் உனக்கு bad boy.. ஹ்ம்ம்.. bad boy அப்படித் தானே? அப்போ நான் உன்னை என்னென்னமோ செய்யலாம். என் பேப்ஸ்க்கு என்ன ரைட்ஸ் இருக்குன்னு சொல்லித் தரவா?” எனக் கண்சிமிட்டி உல்லாசமாகச் சிரித்தான் அவளின் கள்வன்.
“சஷ்ஷ்!” செல்லமாகக் கடிய முயன்றாள். முடியவில்லை அவளால்.
மனைவியின் அவஸ்தையை ரசித்தவன், “ஹஹ்ஹா.. பட் இது பப்ளிக் ப்ளேஸ். இங்க எதுவும் முடியாது. நம்ம ப்ரைவேட் லெசன்ஸ்ஸ தனியா வச்சுக்கலாம்” எனக் கண் சிமிட்டினான்.
இப்படியெல்லாம் பேசினால் அவள் தான் என்ன செய்வாள்? குப்பெனப் பொங்கிய வெட்கத்தால் சிவந்து போனது டியூலிப் மலர்.
பால் வண்ணத்தில் முட்டியை தொட்டு நிற்கும் உடை. அதில் வெகு சில ஊதாப்பூக்கள் மட்டும் மலர்ந்திருந்தன. அவ்வுடைக்கு ஏற்ப இடுப்பிற்கு மேலே இறுக்கமாக நின்றிருந்த ஊதா நிற காட்டன் ஷார்ட் ப்ளேசரில் வெட்க சிரிப்புடன் அவளும்.
அவனின் கம்பீரத்தை மேலும் எடுத்துக்காட்டும் விதமாக இருந்தது ஆரியன் அணிந்திருந்த semi formal உடை. வெளிர் நிற டெனிம் கேசுவல் பேண்ட். அடர் வண்ண நீலத்தில் டைட் ஃபிட்டட் ஷர்ட். மிகவும் வசீகரமாகத் தெரிந்தான். ஆட்களைத் தன் புறம் ஈர்க்கும் விதமான மாயப் புன்னகையுடன் அவனும்.
இளம் காதலர்களான இருவரும் பூரிப்புடன் பேசி சிரித்துக் கரைத்துக் கொண்டிருந்த சில நிமிடங்களில்..
Flash! Flash! Flash!
ஊடகங்களின் கேமிராக்கள் இருவரின் அழகிய தருணத்தைப் பதித்துக் கொண்டன. உலக ரியல் எஸ்டேட் மார்கெட்டை தங்கள் பக்கம் பிடித்து வைத்துக்கொண்டிருந்த அந்நகரத்தில், ஜே. பி. நேத்தன் ரியல் எஸ்டேட் குரூப்பின் முக்கியப் பங்களிப்பும் இருந்தது.
அதான் ஆரியன் டானியாவிற்கு இந்த வரவேற்பு. திருமணமாகி முதல் முறை வருவதால். டானியாவின் கல்லூரி ஆரம்பிக்க ஒரு வாரம் கூட இல்லாத நேர நெருக்கடியிலும் வான்கூவருக்கு வந்திருந்தனர். முதல் முதலாக இருவரும் சந்தித்துக் கொண்டது அங்கே தானல்லவா?
இருவருக்குமே ஸ்பெஷலான இடம். ஆரியன் அந்த ஸ்பெஷலை இன்னும் கிராண்ட் ஆக மாற்றி வைத்திருந்தானே. மனைவியிடம் காட்டிடும் ஆவல். தனிமையில் ஆதர்ஷிக்கும் நினைவுகளைப் பெருக்கிக் கொள்ளும் ஆசை அவனுக்கு.
ஹவாய் செல்ல அவள் காட்டிய ஆர்வத்தைக் கண்டு பயந்து போய் அவசரமாக இங்கே தள்ளிட்டு வந்திருந்தான். பின்னே, ஹனிமூனை யாராவது அக்கா வீட்டில் கொண்டாடுவாங்களா?
அப்படித் தானே டானியா நின்றிருந்தாள்.
விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தவர்களை அங்கே காத்திருந்த லிமௌசின் உள்ளமர்த்திக் கொண்டது. அவர்களின் ஹோட்டலை நோக்கி வேகமெடுத்தது வாகனம்.
மௌனமாகச் சென்று கொண்டிருந்தன நிமிடங்கள். உள்ளிருக்கும் இருவரும் அலுங்காமல் குலுங்காமல் ஸ்மூத்தாக ஓடிய லிமோவில் ஓய்வாகச் சாய்ந்திருக்க, இதயங்கள் இரண்டும் ஏழு ஸ்வரங்களின் லயத்தோடு இசைத்துக் கொண்டிருந்தன.
டானியா வெளியே பார்வையைப் பதித்து வர, ஆரியன் அவளை உச்சி முதல் பாதம் வரை ரசித்துப் பார்த்துக் கொண்டு வந்தான். ஊசி போல் தன்னில் பாய்ந்து சிலிர்க்க வைத்துக் கொண்டு வந்த கணவனின் நீல நயனங்களின் பார்வையை உணர்ந்து தான் இருந்தாள்.
நெஞ்சில் கரையுடைத்து தளும்பிய காதல்.. இருவருக்கும் கிடைத்த தனிமை.. அவனும் அவளும் எதிர்பார்ப்புகளுடன். மனைவியின் மேல் கண்களைப் பதித்திருந்தவன், அவளின் விழிகள் ஆச்சரியத்தைக் காட்டி முகம் பிரகாசமாக, புரிந்தது ஆரியனுக்கு. இவனும் வெளியில் விழிகளைத் திருப்பினான்.
பசுமையாக விரிந்து பரந்திருக்கும் குழிப்பந்தாட்ட மைதானம் (golf course). இருவரின் விழிகளில் மின்னல்கள். ஒரே சமயம் பார்வைகள் தழுவி கலந்து நின்றன. இருவரும் முதலில் சந்தித்துக் கொண்டது அங்குத் தானே?
அந்த முதல் சந்திப்பில்…
லுகாஸ் மகளுடன் வான்கூவர் வந்திருந்தார். மகளுடன் விடுமுறையில் வந்திருந்தாலும் தவிர்க்க முடியாத சில தொழில் சந்திப்புகள். அன்று டானியா தந்தையுடன் குழிப்பந்தாட்டம் விளையாட வந்திருந்தாள். சில மணித்துளிகளில் அவர் மொபைலில் ஓர் அழைப்பு வர, லுகாஸ் போக வேண்டிய சூழ்நிலை.
டானியாவிற்கு அறைக்குள் தனியாக இருக்க மிகவும் போர் அடித்தது. அதனால் மீதி குழிகளில் பந்தாட்டம் முடித்து வருவதாகக் கூறி அப்பாவிற்குப் பை பை சொன்னவள் ஆட்டத்தைத் தொடர முன்னேறினாள்.
ஓரிடத்தில் சரிவாக இருந்தது. டானியாவின் கவனம் பந்தில் இருக்க, அந்த நேரம் ஆரியன் அவள் இருந்த பக்கம் வந்து கொண்டு இருந்தான்.
கொஞ்சம் பின்னால் நகர்ந்தவள் கால் சரிவில் பதிய, தடுமாறி விழலானாள். சரியாக அதே நொடியில் ஆரியன் அவளைக் கவனிக்க, உதவும் பொருட்டு ஈரெட்டில் அருகில் வந்தான்.
பூக்குவியல் தரையைத் தொடும் முன் பிடித்துத் தன் மேல் தாங்கி நின்றான். தரையில் விழுந்து வாராமல் தன்னைக் காப்பாற்றியது யார்? நன்றி பார்வையுடன் நிமிர்ந்தாள்.
பூங்கொத்தின் மென்மையை உள்வாங்கி நின்றவன் சற்று தடுமாறித் தான் நின்றிருந்தான். தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன், குனிந்து அவளை நோக்கினான். அவளும் அந்நொடியில் நிமிர்ந்து அவனை நோக்கினாள்.
முதன் முதலாக ஒரு பெண்ணிடம் ஆரியனுக்கு ஈர்ப்பு தோன்றியது அந்த மணித்துளியில் தான். தன்னை மறந்து சுவாரசியமாக அவளைப் பார்த்து வைக்க, அவளும் அவனைப் பார்த்தாள். முக்கியமாக அவனின் நீலக்கண்கள்! அந்தக் கண்களை அவளுக்குப் பிடித்தது. அந்நேரம் அவன் பார்வையில் தோன்றிய உணர்வுகளால் கவரப்பட்டு அப்படியே நின்றாள்.
நொடிகள் கடந்து சென்று நிமிடங்களைத் தொட, அந்த முதல் பார்வை, முதல் சந்திப்பு ஆரியனை டானியாவின் மேல் காதல் கொள்ளச் செய்திருந்தது. ஆரியனும் அதை உடனே உணர்ந்திருந்தான்.
டானியா அச்சந்திப்பில் ஆரியன் பால் கவரப்பட்டிருந்தாள். அந்தப் பயணத்தில், தற்செயலாகவோ, இல்லை, வேண்டும் என்றோ இருவரும் சில முறை சந்தித்திருந்தனர். லுகாஸையும் அப்போது தெரிந்து வைத்துக் கொண்டான் ஆரியன்.
அங்கிருந்து கிளம்பிய அந்நாளில் அவனின் நீல நயனங்களைப் பிரியவே மனமில்லை அவளுக்கு. அந்த உணர்வுக்குப் பெயர் தான் காதலா? அப்போது அவள் அதைப் பற்றி யோசிக்கவே இல்லை.
அதன் பிறகு எத்தனை சந்திப்புகள்? முதல் சந்திப்பிலிருந்து அவளுள் அவன் மாயாஜாலங்களை நிகழ்த்தி கொண்டு தான் இருந்திருக்கான். அவளும் காதலில் உருகி இருந்தாலும், உணர்ந்ததென்னவோ தாமதமாகத் தான். அதையும் சாமானியமாக ஒப்புக் கொள்ளவில்லையே?
இப்போது அந்த நினைவுகள் வர, ஒரு மாதிரி உணர்ந்தாள் டானியா. அவன் தன் காதலின் பரிமாணங்களை அவளுக்கு உணர்த்தி இருக்க, தான் என்ன செய்தோம் என்றிருந்தது. அதை நினைத்துப் பார்த்த இந்த நிமிடம் ஒரு பெரிய உணர்வலைத் தாக்குதலில் சிக்கினாள்.
ஆரியனுக்கு மனைவியின் எண்ணங்கள் யாவும் தெரியவில்லை. அவனுக்கு அவளோடான அனைத்தும் இனிமையே! ஆனாலும் இப்போது உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறாள் என்பதைப் படித்தான். அவனும் அப்படித் தானே உணர்கிறான்.
அதுவரை நிறைய இடைவெளிவிட்டு தள்ளி அமர்ந்திருந்தவர்கள் ஒரே சமயத்தில் இருவரும் நெருங்கி வந்தனர்.
மிக அவசரமாக ஆரியனின் கன்னத்தில் முத்தம் வைத்தாள் டானியா. அவன் உணரும் முன் இறுக்கமான அணைப்பை கொடுத்தும் விலகினாள். அவள் மேனியில் ஒரு நடுக்கம் ஓடியது. விழிகள் கலங்கின.
அவன், தன்னைவிட்டு விலகியவளை விடவில்லை. கை நீட்டி தன்னுடன் இழுத்துக்கொண்டான். இருவரும் பேசவில்லை. அமைதியாக அந்நொடிகளை அனுபவித்தனர்.
குழிப்பந்தாட்ட மைதானத்திற்கு வெகு அருகிலேயே தங்களின் ஹோட்டல் வளாகம் இருக்கக் கண்டாள் டானியா. புதிய கட்டிடங்கள். இன்னும் கட்டிட வேலைகள் அனைத்தும் முற்றுப் பெற்றிருக்கவில்லை.
அவளுக்கு எதுவோ புரிவதாய்! அதையே கணவனானவன் வாய்மொழியாக உரைத்தான்.
“நம்ம காதலின் தொடக்கப் புள்ளி தான் இந்த ஹோட்டல் வளாகத்திற்கு அடித்தளம். நமக்கான அந்த முதல் சந்திப்பு தற்செயலாக நிகழ்ந்ததா, இல்லை, தெய்வச்செயலா தெரியலை.
இந்தக் கோல்ஃப் கோர்ஸ் தானே நம் இருவரையும் சந்திக்க வைத்தது? A very special moment in our lives! அதான் இங்க ஒரு strong foundation போட்டாச்சு.”
அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டவனை மெய் சிலிர்த்துப் போய்ப் பார்த்தாள். இருவருக்கும் நுழைவு வாயிலிலேயே பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. கணவன் அறிமுகப்படுத்தியவர்களைப் புன்னகையுடன் எதிர்க் கொண்டு முகமன் கூறினாலும், உள்ளுக்குள் வேறு மனநிலையில் இருந்தாள் டானியா.
அவர்களின் பெண்ட் ஹவுஸ். உள்ளே நுழைந்ததும் ஆரியன் மனைவிக்கு ஆர்ப்பாட்டம் மிக்க வரவேற்பைத் தந்தான். அதுவரை தன்னை அடக்கிக் கொண்டிருந்தவள் அதற்கு மேல் முடியாமல் உடைந்தாள்.
திகைத்துப் போனான் ஆரியன்.
“என்னாச்சுடா, ஏன் அழறே?”
“ஹ ஹக்..” பேச முடியவில்லை அவளுக்கு. கண்ணீர் தான் அதிகமானது. நல்ல மனநிலையைக் கெடுப்பது போல வந்த அழுகை அவளுக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் அழுகை வந்துவிட்டது. என்ன செய்வாள்?
“உஷ்ஷ் பேப்ஸ். கண்ட்ரோல் யுவர்செல்ஃப். ரொம்ப எமோஷனல் ஆகிறாய்.”
மனைவியை அணைத்து நின்றிருந்தவன், அவளை முதுகில் தட்டிக் கொடுத்துச் சமாதானப்படுத்தினான். சிறிது நேரம் ஆனது அவளின் அழுகை நிற்க. அழுகை நின்றதும் அவள் கவனத்தைத் திசை திருப்ப, தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றான். பால்கனிக் கதவை திறந்து வெளியே சுட்டிக் காட்டினான்.
அழகான வியூ. தங்களை இணைத்த பாலமாக அமைந்துவிட்ட குழிப்பந்தாட்ட மைதானம் பசுமை படர்ந்து விரிந்திருந்தது.
உணர்ச்சி பிழம்பாகப் பேச்சற்று நின்றிருந்தவள் எதுவும் பேசும் முன் ஆழமான நெடிய முத்தத்தை அவளின் இதழில் தொடங்கி வைத்தான்.
சில நிமிடங்கள் இருவரும் முத்தங்களால் காதல் மொழியைப் பேசிக் கொண்டனர்.
டானியாவின் மனநிலை தெளிவு பெற்றது போல இருக்க, ஆரியன் அவளின் அழுகைக்கான காரணத்தைக் கேட்டான். அவள் சொன்ன பதிலில் உள்ளுக்குள் இருந்த அவன் பதட்டம் விலகியது. விரிந்த புன்னகை அவன் இதழ்களில் வந்தமர்ந்தது.
அதன் பிறகு அங்குத் தேனிலவு நாட்களில் இருவரின் சிந்தனையும் செயலும் காதலிப்பதும் மோகிப்பதும் மட்டுமே. எந்தத் தொந்தரவுமின்றித் தனிமையான உலகம். தெவிட்டாத தித்திப்பான நினைவுகளைச் சுமந்து கொண்டு வீடு திரும்பினர்.