தீராதது காதல் தீர்வானது – 2

அத்தியாயம் 2 :

நட்பு சுதந்திரமானது
நட்பின் வேர்கள்
பலப்பட்டுக் கிளை பரப்பி
நிலைத்து நிற்க வேண்டுமாயின்
அதனை அலசி ஆராயாதே
அப்படியே ஏற்றுக்கொள்!

இரவு நேரம் கழித்து உறங்கியதால் காலையில் அசந்து வெகு நேரம் தூங்கி விட்டிருந்தாள் டானியா. காலைக்கடன்களை முடித்துவிட்டு ஒரு குளியலையும் போட்டு வெளியே வந்த போது பசி வயிற்றைக் கிள்ளியது.

சாப்பிடும் முன் தேவையான துணிமணிகளை எடுத்து வைத்துப் பாக்கிங்கை முடிக்க வேண்டும் என நினைத்து மடமடவென வேலையில் இறங்கினாள். இங்கு முன்பிருந்தே வாங்கி வைத்திருந்த பரிசுப் பொருட்கள், அவளது உடைமைகள் என இரு பெட்டிகள் நிறைந்து விட்டன. அறையை ஒழுங்கு படுத்திய பின்னர் அஸ்வின் வர, இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. ஆசுவாசமாகச் சிறிது நேரம் அமரலாம்.

ஒரு சிறு பீங்கான் கிண்ணத்தில் பச்சைத் திராட்சைகளையும் ப்ளூ பெரியையும் போட்டுக் கொண்டு, ஆரஞ்சு மார்மலேட் தடவிய பிரட் டோஸ்ட்டுடன் ஒரு கப் காபியையும் தயாரித்து எடுத்து வந்தாள். டைனிங் டேபிளில் அமர்ந்ததும் கைகள் வழமை போல் தொலைக்காட்சியை இயக்கின.

திரையில் ஒளிர்ந்த அந்த நியூஸ் சேனல் அவளைக் கவர்ந்தது. 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலைப் பற்றிய கருத்தரங்கு.

ஒரு பிரபலத்துடன் சில ஜனநாயகக் கட்சியினர் மற்றும் சில குடியரசுக் கட்சியினர் என இருசாரியினரும் பங்கு பெற, துல்லியமான கருத்துக்களை முன் வைத்து விவாதம் தொடர்ந்தது.

சுவாரசியமிக்க நிகழ்ச்சியாக அதனை மாற்றிக் கொண்டிருந்தார் அந்த டிவி சேனலின் தொகுப்பாளர். நிகழ்ச்சியில் ஆழ்ந்து போனாள். பார்த்துக்கொண்டே சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் அஸ்வின் வந்துவிட்டான்.

டார்க் ப்ளூ டெனிம் ஜீன்ஸூம் இளம் மஞ்சள் டி-சர்ட்டும் அணிந்து அரை மணி முன்னதாகவே புன்முறுவலுடன் வந்தவனைக் கண்டதும் வியப்பால் டானியாவின் விழிகள் விரிந்தன.

“ஹாய் டானியா! குட் மார்னிங்! எதுக்கு இவ்வளவு ஆச்சரியம்?” முறுவல் மாறாமல் கேட்டான்.

“ஹாய்! சீக்கிரம் வந்துட்ட. அதான்..” தன்னையே ஒரு முறை மேலும் கீழும் பார்த்துக் கொண்டாள். அவள் இன்னும் தயாராகியிருக்கவில்லை.

“ஹாஹா.. பார்த்து. உன் கண்களை இப்படி அடிக்கடி அகல விரித்து வைக்காதே. பிறகு ரொம்பக் கஷ்டமாகப் போகுது. ஒருத்தவங்க படுற பாடு போதும்” எனக் குறும்பாக அவன் சொன்னது அவளுக்குப் புரியவில்லை.

“ஹோ.. ஏன்? யாருக்குக் கஷ்டம்.. என்ன சொல்ற நீ?”

“அதை விடு.. டிராபிக்கில் மாட்டக் கூடாதென்று சீக்கிரம் வந்தேன். ஏதாவது முடிக்க வேண்டிய வேலை இருக்கா. நான் உதவலாமா?” கவனமாகப் பேச்சை மாற்றி விட்டான்.

அஸ்வின் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் விளங்காமல் உள்ளே சிறு யோசனை ஓடினாலும், இல்லையென்பதாகத் தலையசைத்தாள் டானியா.

“அப்படியென்றால் சரி. ரெடியாகி வா. அவசரமில்லை” என்று சொன்னவன் தன் ஃபோனில் கவனத்துடன் சோபாவில் அமர்ந்து கொண்டான்.

அஸ்வினை எப்போது பார்த்தாலும் சுறுசுறுப்பாகவும் புன்னகைப் பூசிய முகத்துடனும் வளைய வருவான். அவனது அந்தப் புத்துணர்ச்சி இப்போது டானியாவையும் தொற்றிக் கொண்டது.

விரைவாகத் தயாராகிச் சீத்தலிடம் சொல்லிக் கொண்டு இரு பெட்டிகளும் கைப்பையுமாக வெளியே வந்தாள். அவள் மறுத்தும் பெட்டிகளை அஸ்வினே தூக்கிக் கொண்டு முன் நடக்க, டானியா கதவைச் சாத்திவிட்டு அவனுடன் லிப்டுக்குள் நுழைந்தாள்.

கார்ப் பார்க்கிங்கிற்கு வந்ததும் அங்கே அஸ்வின் எப்போதும் ஓட்டி வரும் காருக்குப் பதில் புது ரகத்தில் மிக அரிய வகைக் கார் ஒன்று சாதுவாக நின்றிருந்தது. அதைப் பார்த்ததும் டானியாவுக்கு முதலில் தோன்றிய உணர்வு அதிர்ச்சி தான். எதிர்பாராததைக் கண்டால் நமக்கு அதிர்ச்சி தோன்றுவது இயற்கையல்லவா? சுதாரித்த போது கேள்விகள் சேர்ந்து கொள்ளக் காரை வெறித்தபடி நின்றிருந்தாள்.

காற்றுடன் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறிய அந்தக் காரின் வேகம் ‘நான் சாதுவா?’ எனக் கிண்டலாகச் சிரித்து வைத்து, அஸ்வின் அவள் கை பிடித்து அவளை அதனுள் அமர வைத்ததை உணர்த்தியது.

~~~
விமானத்தின் ஆரஞ்சும் கருநீலமும் கலந்து கோலமிட்ட இறக்கைகள் நீலவானைக் கிழித்துக் கொண்டு பறக்க, விமானியின் லாவகத்தால் எந்தவித அதிர்வும் குலுங்கலுமின்றி மிகவும் சீராக உயரே உயரே பயணித்துக் கொண்டிருந்தது. வான் மேகங்கள், தங்களை முத்தமிட்ட விமானத்தை வெண்பஞ்சுப் பந்துகளாக மிதந்து விடாமல் தொடர்ந்தன.

டானியாவின் நினைவுகள் கொஞ்சம் நேரம் அஸ்வினையும், அவன் காரையுமே சுற்றி வந்தன. அந்தக் கார் அவனின் செல்வநிலையின் உச்சத்தைப் பறை சாற்றுவதாக இருந்தது. இத்தனை நாளை போலில்லாமல் இன்று மட்டும் இந்தக் காரில் ஏன் வந்தானாம்?

ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா என இன்னும் பிற தேசங்களில் அவளது தந்தையின் தொழில்கள் விரவி இருந்தன. இருப்பினும், அவளது நண்பர்கள் அனைவரிலும் அஸ்வினின் செல்வநிலை ஒரு படி மேலே இருக்குமோ எனச் சந்தேகம் கொண்டாள்.

‘அவன் யாராக வேணும் என்றாலும் இருக்கட்டும். நாங்கள் என்றுமே வசதியைப் பற்றிப் பேசியதில்லையே…’

அவள் அறிந்தவரை அஸ்வின் அலட்டல் இல்லாதவன். அதனாலேயே ரோகனைவிட அவளுக்கு அஸ்வினை மிகவும் பிடித்தம். அவர்களுக்குள் நட்பு மலரக் காரணம் அஸ்வினின் மிக இயல்பான குணநலன்கள் தாம். ஆண்டுக்கணக்காய் தனிமையில் உழன்று கொண்டு இருந்த டானியாவுக்கு, அஸ்வின், பிரகதி, ரோகனின் நட்பு இதமளிக்கிறது.

அமெரிக்காவில் வாழும் இரண்டாம் தலைமுறை ஆசியர்கள் நிறையப் பேர் வசதி படைத்தவர்களாகத் தான் வாழ்கிறார்கள். அப்படி இருக்க, அஸ்வின் வீட்டினர் சில தலைமுறைகளாக இங்கு வசித்து வருபவர்கள். அதிவசதி படைத்தவர்களாக இருப்பின் ஆச்சரியம் இல்லை தான்.

‘ஹம்ம். அஸ்வின் என் நண்பன். அஸ்வினுக்கும் எனக்கும் ஒத்த சிந்தனைகள். எங்களுக்கு இடையில் இருக்கும் புரிந்துணர்வு மற்றவர்களிடம் வருவதில்லையே..

அவனுக்கும் எனக்கும் ஏதோ ஒரு பந்தம் இருப்பது போல் ஓர் உணர்வு இப்போதும் தோன்றுகிறதே?’ டானியாவின் மனம் காரணங்களைத் தேடி அஸ்வினையும், அவன் காரையும் பற்றிய ஆராய்தலை வசதியாகப் பின்னால் தள்ள விளைந்தது. மேலும் யோசிக்கவில்லை. அத்துடன் அஸ்வினின் நினைவைக் களைந்தாள்.

டானியாவுக்கு அயர்வாக இருக்கவே, தன் இருக்கையை வசதியாகப் பின்னால் சாய்த்துக் கண் மூடினாள்.

குளிர்பானங்களைத் தள்ளிக் கொண்டு விமானப் பணியாட்கள் இருவர் வர, அதனால் எழுந்த அரவத்தில் இமைகளைத் திறந்தாள் டானியா. அவள் கண்களுக்குப் பட்டது இளநீல நிற விழிகள் இரண்டு!

திகைப்பில் அவள் பார்வை உறைந்துவிட, மனமோ பந்தயக்குதிரை போல் வேகமெடுத்து ஓடத் தயாரானது!

“எக்ஸ்க்யூஸ் மீ மேம், குளிர்பானம் ஏதேனும் தரவா?” என்று கம்பீரமாக ஒலித்தது நீலநிற நயனங்கள் கொண்டு எதிரில் நின்றிருந்த ஸ்டூவர்ட்டின் குரல்.

“ஆரஞ்சு ஜூஸ் ப்ளீஸ்..”

ஒரு கப்பில் ஐஸ் துண்டுகளைப் போட்டு ஆரஞ்சு பழச்சாற்றை நிரப்பி, கூடவே ஒரு சிறு பாக்கெட் வறுத்த கடலையுடன் ஒரு பேப்பர் நாப்கினையும் அவள் முன்னால் விரித்து வைத்திருந்த ட்ரேயில் வைத்துவிட்டு புன்னகையுடன் நகர்ந்தான் அந்த ஸ்டூவர்ட்.

அந்த விழிகளை, அதன் பிறகு விமானம் விட்டுக் கீழே இறங்கும் வரை டானியா சந்திக்கவே முற்படவில்லை. ஏன், எதேச்சையாக அவளது பார்வை வட்டத்தில் வந்து விழுந்தவனைக் கூட முகம் திருப்பித் தவிர்த்தாள்.

எல்லோரையும் இன்முகமாக எதிர்கொள்பவள், இப்படி அறிமுகமே இல்லாத ஒரு விமானப் பணியாளனை முகம் திருப்பித் தவிர்க்க நினைப்பது அபத்தமாகப்பட்டது. அதுவும் பயணிகளை இன்முகம் கொண்டு உபசரிக்கும் பணியிலிருப்பவனை!

“ஓ.. காட்!” தலையில் கை வைத்து, ‘இதற்கெல்லாம் காரணம் அவனல்லவோ? அவன்!! அவனை நான் மறந்திருந்தேனே? இல்லை மனதில் புதைத்திருந்தேனோ?’ எனத் தனியாகப் புலம்பினாள்.

எல்லாம் இந்த ஸ்டூவர்டால் வந்தது. இவனின் நீலநிற விழிகள் செய்த மாயம்!

டானியாவை அந்த ‘அவன்’ புறம் திருப்பிவிட்ட புண்ணியத்தைப் பெற்றுக்கொண்ட அந்த ஸ்டூவர்ட் இதை எதனையும் அறியாமல் பணியில் கவனமாக இருந்தான். ம்ம்.. அவ்வளவு பாதித்து இருக்கிறானா அவளது மனதை? தன் உயிரான தாத்தா பாட்டியைக் காணப் போகும் ஆவலையும் தாண்டி ‘அவன்’ வந்தான்!

மனத்திரையில் அவனின் நெடிய வலிய உருவம்.. கம்பீரமான தோற்றத்தில் அடர்ந்த கரிய புருவத்தின் கீழ் நீலநிற விழிகள் பளபளத்தன.

செதுக்கி வைத்தது போன்று இருந்த நாசியின் அடியில் தொடங்கிக் கொஞ்சம் கன்னம் தொட்டுத் தாடை வரை லேசாகப் பசுமை படர்ந்திருந்தது.

வடிவாகக் கவனத்துடன் சீர் செய்யப்பட்ட அந்த இரண்டு நாள் மீசையும் தாடியும் அவனின் ஆண்மையை மட்டும் எடுத்துக்காட்டவில்லை. பொறுமையும் கவனமும் நிறைந்தவன் என்பதைப் பறைசாற்றியது.

அவனின் பழுப்பில் தோய்ந்த பால் வண்ண நிறத்தில் மிகவும் வசீகரமாகத் தோன்றிய உதடுகளில் சிறு புன்னகை. அலட்சியமாக முன் நெற்றியில் விழுந்த முடியை ஒதுக்கினான்.

‘இது என்ன மாயம்! இறைவா.. இம்மண்ணில் கால் பதிக்கும் போதே அவனின் நினைவும் வருதே?’

இன்னும் கண்ணுக்குள்ளேயே நின்றிருந்தான். அந்த மாயத் தோற்றக்காரன். சற்றே விரிந்து புன்னகைத்த உதடுகள் இப்போது மெதுவாகச் சுருங்கி அழகாகக் குவிந்தன. முத்தம்?!!

அவசரமாக அவன் விழிகளைச் சந்திக்க, கண் சிமிட்டினான்!

ஹாவென விழி விரித்துப் பார்த்துக்கொண்டிருந்த போதே மறைந்து போனான். கண்களைக் கசக்கியபடி நின்றுவிட்டிருந்தாள் டானியா.

கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் ப்ளோரிடாவின் டாம்பா (Tampa, Florida) விமானநிலையம் பரபரப்பாக இயங்க, டானியாவை இடித்துக் கொண்டு சென்ற சிறார்கள் தங்கள் சிரிப்பால் அவளை நிஜ உலகத்தில் இழுத்து வந்து விட்டனர்.

தலையை உலுக்கியபடி லக்கேஜை எடுக்க நகர்ந்தாள். அவனும், ‘உன்னை விடுவேனா?’ என்றபடி, நினைவாக உடன் தொடர்ந்தான்.

விழிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் எங்கேயேனும் அவன் வந்து நின்று கொண்டு இருக்கிறானா எனத் தேடினாள் டானியா.

இரண்டு வருடம் முன் ஓர் அழகிய சந்திப்பு! இன்றும் அந்நாளின் நினைவுகள் புன்முறுவலை தருவிப்பதாய்!

பிறகு, ஹூம்ம்.. அதன் தொடர் யோசனையைத் தொடர பயமாக இருந்தது. கூடவே ஏனோ கோபம் ,கோபமாக வந்தது.

“இடியட்!” என்று வாய் முணங்க, ‘யாரை திட்டுகிறாய்?’ என, மனசாட்சி அவளைக் கேள்வி கேட்டது.

‘அந்த நீலக்கண் ஏர்லைன் ஸ்டூவர்ட் ஏன் இன்று வந்தான்?’ என்று அவளது ஒரு பக்க மனம் கேள்வியை எழுப்ப, ‘அவன் வேலையைச் செய்ய அவன் வந்தான். உனக்கு என்ன அதனால்?’ என, மனசாட்சி பதிலுக்குக் கேள்வியை எழுப்பியது. ‘எனக்கு என்ன? ஒன்றுமில்லையே…’ என்றாள் மனசாட்சியிடம் கூட மாட்டிக் கொண்டு விடக் கூடாது என்ற கெத்தில்.

‘ஏர்லைன் ஸ்டூவர்ட்டையா இடியட் என்றாய் நீ?’ என்ற மனசாட்சியின் கேள்விக்கு, ‘ம்கூம்.. இல்லை’ எனத் தலையை உலுக்கிக் கொண்டாள் டானியா.

‘வேறு யார் உனக்கு இடியட்?’ கேலியாய் வினவிய மனசாட்சியை, ‘உஷ்ஷ்.. சும்மா இரேன்’ என அடக்கினாள்.

‘அப்போ அந்த இடியட்?’ விடாமல் கேட்ட மனதுடன் போராட முடியாமல் கடைசில் ஒப்புக்கொண்டாள்.

‘அவன் தான்…’

‘அவன் தானென்றால் யார்?’

‘அவன்.. ஆரியன்!’

‘ஓ.. ஆரியனா! அப்போ இன்னும் அந்த ஆரியனின் நினைவு உனக்கு இருக்கா?’

இந்தக் கேள்விக்கு என்னவென்று அவள் பதில் சொல்ல?

மனசாட்சியை லூசில் விட்டு, ‘ம்ம்..’ என ஒரு பெருமூச்சோடு பெட்டிகளை எடுத்துக் கொண்டு அவள் வர, பெட்ரோ விரிந்த சிரிப்புடன் வரவேற்றான். பெட்ரோ தான் டானியாவின் தாத்தாவிற்கு இப்போது மிக்க உதவியாக இருக்கிறான்.

விடைபெற்ற அவளது மனசாட்சியுடன் ஆரியனும் தற்காலிகமாக விடை பெற்றான்.

“ஹே, பெட்ரோ…”

“சிஸ்டா (சகோதரி), நலமா?” எனக் கை குலுக்கியபடி, அவளைச் சிரிப்புடன் பார்த்தான்.

அவனைத் தோளோடு லேசாக அணைத்து விலக்கியவள், “என்னடா.. கள்ளச்சிரிப்பு இது?” என அவள் கேட்க,

“உங்கள் ஹீரோ எங்கே?” எனக் கண் சிமிட்டிய பெட்ரோ தொடர்ந்து பேசினான்.

“இந்தத் தடவை ஆள் இன்னும் வரக் காணோம். உன்னுடன் வருகிறானோ என ஆசையாய் வந்தால்.. ஏமாற்றிவிட்டாய்.”

“உன்னை..” எனச் செல்ல அடி ஒன்றை அவன் முதுகில் வைத்தாள்.

“போன ரெண்டு வருசமும் நீ வரும் போது சொல்லி வைத்தது போல் வந்து நின்றவர்…”

“ப்ளீஸ் பெட்ரோ.. அவன் பேச்சை விடேன்.”

பெட்ரோ அவள் சொல்வதைக் கண்டு கொண்டால் தானே? தொடர்ந்து ஆரியனைப் பற்றியே பேசிக் கொண்டு வந்தான்.

“உன் ஹீரோ, வர மாட்டாரா? ஏன்? சிஸ்டா, நீ இன்னும் அப்படியே தான் இருக்கே. காதல் வந்துவிட்டது. ஏன் தயங்குறே? அவனிடம் சொல்லிவிடு. ஏன் சொல்லாமல் தயங்கி அவனை வெறுப்பேற்றி அலையவிட்டு வேடிக்கை பார்க்கிறே?”

காதல் வந்துவிட்டதா? பெட்ரோ சொல்வது உண்மையா? உண்மை இல்லாமலா இங்கே வந்ததும் வராததுமாக அவன் நினைப்பு வருகிறது?

இதோ, சில நிமிடங்களுக்கு முன் கண்களுக்கு முன்பாக நிஜம் போல் கண்ணாமூச்சி ஆடிவிட்டு மறைந்து போனானே.

‘ஆரியா, ஏன்.. ஏன் என்னை இம்சிக்கிறாய்?’ கீழுதட்டை மடக்கிக் கடித்துப் பெருமூச்சுடன் உணர்வுகளை அடக்கினாள்.

அவளுக்குள் காதலா? நெவர்!!! ஒரு வேகத்துடன் பெட்ரோவிடம் பொரிந்தாள்.

“உஷ்ஷ்.. பெட்ரோ! இது என்ன பேச்சு? இனி இது போல் அவனைப் பற்றிப் பேசாதே. முக்கியமாகத் தாத்தாவின் முன்பு இப்படி ஏதும் உளறி வைக்காதே. சரியா?”

பெட்ரோவின் முகம் வாடி விட்டது. அவன் மேலும் ஏதும் பேசவில்லை.

இருவரும் உடைமைகளுடன் கார் நிறுத்துமிடத்திற்கு வர, ஏர்போர்ட்டிலிருந்து வெளி வந்ததுமே ப்ளோரிடாவின் வெப்பம் டானியாவைத் தாக்கியது.

உடம்பு வெப்பத்தால் கசகசத்து போனாலும் இம்மண்ணுக்கு கசகசத்து இருக்கும் மனதை குளிர்விக்கும் தன்மையும் இருக்கிறது. அதை அவள் மறுப்பதற்கில்லை.

கார் சீரான வேகத்துடன் முன்னேறி சென்று கொண்டு இருக்க..

பெட்ரோ அமைதி காத்தான். டானியாவுக்கும் இப்போதைக்கு அவனிடம் பேச்சு வளர்க்கப் பிடிக்கவில்லை.

பேசப் பிடிக்கவில்லை என்றில்லை. பேசினால் வரக் கூடிய விளைவுகளை எதிர்க்கொள்ளப் பயம்! சக்தி இல்லை! மனதின் உறுதி வேறு ஆட்டம் கண்டது!

சில நிமிடங்கள் கார் கண்ணாடி வழியாக வெளியே வெறித்துக் கொண்டு இருந்தாள். பிறகு பெட்ரோவை திரும்பிப் பார்க்க, ஸ்டீயரிங் வீலில் கை பதித்து இருந்தவனின் நெற்றிச் சுருக்கங்கள் அவன் ஏதோ யோசனையில் இருப்பதைச் சொல்லியது.

பெட்ரோ மிகவும் நல்லவன். அன்பும் பண்பும் மிக்கவன். டானியாவைத் தன் அக்காவாகச் சுவீகரித்துக் கொண்டவன் பெட்ரோ!

டானியாவிற்கு அந்த நாட்களின் நினைவு மனக்கண்ணில் வந்தது.

பெட்ரோ.. மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்தவன். அம்மா, அக்கா, தங்கைகள் எல்லாம் மெக்ஸிகோவில் இருக்க, தன் தந்தையுடன் பிழைப்பிற்காக அமெரிக்கா வர நேரிட்டுள்ளது.

சிறுவனாக, விசா இல்லாமல் பல இன்னல்களைச் சந்தித்து ஒரு வழியாக அமெரிக்க எல்லையைக் கடந்து ப்ளோரிடாவிற்கு வந்தவர்களுக்கும் அப்படி ஒன்றும் வாழ்வு எளிதாகப் பசுமையைக் கொட்டி இருக்கவில்லை.

அவனின் தந்தை, டானியாவின் தாத்தாவின் உணவகத்தில் பணி புரிய வந்த பிறகு தான் ஓரளவு வருவாயை ஈட்ட, அவர்களால் ஸ்திரமாக ஓரிடத்தில் இருக்க முடிந்தது.

அப்போது டானியா பெற்றோருடன் வாழ்ந்த காலம். விடுமுறையில் தாத்தாவின் வீட்டிற்கு வந்த போது சில முறைகள் பெட்ரோ மற்றும் அவன் அப்பாவை கண்டிருக்கிறாள்.

மற்றபடி டானியா பிறந்து வளர்ந்து வந்தது எல்லாம் ஜார்ஜியாவின் அட்லாண்டா சிட்டியில்.

பெட்ரோ விடுமுறை நாட்கள், மற்றும் சில நாட்கள் மாலை வேளையில், டாம்பா – கிளியர் வாட்டர் பீச்சில் இருக்கும் ‘ஈஸ்ட் வெஸ்ட் ஃப்யூஷன் டைனர்’ என அழைக்கப்படும் டானியாவின் ரெஸ்டாரண்ட்டுக்கு வருவது வழமை.

டானியாவுக்குத் தாத்தா-பாட்டி என்றால் உயிர்! அதனால், அவளும் விடுமுறைகளில் நிறைய நேரம் உணவகத்தில் தான் செலவழிப்பாள்.

அப்படித் தான் டானியாவுக்கும், பெட்ரோவுக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அவர்களது அறிமுகமானது, இரண்டு மூன்று விடுமுறைக்கு டானியா வந்து சென்றதுக்குள்ளாகவே தோழமை என்ற நிலையை அடைந்தது.

ஒருமுறை, விடுமுறை முடிந்து அவள் அட்லாண்டா திரும்பும் நாளும் வர, பிரிவை எண்ணி பெட்ரோ மிகவும் வருந்த, அவளும் சங்கடப்பட்டாள்.

அப்போது அவர்கள் அறிந்திருக்கவில்லை, விரைவிலேயே டானியா தாத்தா பாட்டியிடம் வந்து நிற்கப் போவதையும், அதன் பிறகு அவர்கள் இருவரும் ஒன்றாகவே பள்ளி சென்று வர வாய்க்கும் என்பதையும்!

டானியாவின் பெற்றோரின் பிரிவினால் அவள் தாத்தா பாட்டியிடம் அடைக்கலமாக வந்து சேர்ந்த அந்த நாளில் அவளது வேதனையைத் தன்னில் பிரதிபலித்தது பெட்ரோவின் முகம்!

அன்று டானியா அழுததைக் காட்டிலும் அவன் தான் ரொம்பவும் தவித்துப் போனான். ஏனென்றால், அவனும் குடும்பத்தைப் பிரிந்து வாழ்ந்து வந்தான் தானே?

அவன் தந்தை சில வருடங்களில் குடும்பத்தை மறந்து வேறு பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள, குடும்பப் பிரிவின் வலியை தெரிந்தவன்.

“சிஸ்டா” என முதன்முறையாக டானியாவை விளித்து, ஆதரவாகக் கை கோர்த்துக் கொண்டான். அதன் பிறகு நண்பன் என்பதைக் காட்டிலும், சகோதரனாகவே ஆகினான்!

சமீபத்தில் பெட்ரோ காதல் வயப்பட்டிருக்கிறான் எனக் கேள்வி. அவனிடம் அதைப்பற்றிக் கலாய்க்க வேண்டும் என எண்ணிக் கொண்டாள் டானியா. டானியா அவனிடம் பாசம் காட்டினாலும், தன்னைவிட அவன் தான் அவளிடம் அதிகமாக அன்பு வைத்திருக்கிறான் என்பது அவளது எண்ணம்.

அன்றும் சரி, இன்றும் சரி, ஒரே மாதிரி அன்பு. டானியாவிடம் அவன் எண்ணங்கள், சங்கடங்கள் என நினைப்பதைப் பகிர்ந்து கொள்வான். ஆனால் , டானியாவால் அப்படி அவனைப் போல் நினைப்பதை வெளியில் சொல்ல முடிவதில்லை. பெட்ரோவிடம் கூட அவளது பகிர்தல் குறைவு தான். அதற்கு அவனின் சூழல் கூடக் காரணமாக இருந்திருக்கலாம்.

பல வருடங்களாகச் சுற்றி ஒரு வட்டம் அமைத்துக் கொண்டு தனிமையில் சுழன்று, அப்படி மனதில் வைத்து புதைத்த உணர்வுகள் தான் இப்போது அவளுக்கு எதிராகச் சதி செய்கின்றன.

அவள் என்ன செய்ய? அப்படியே இருந்து பழகிவிட்டாள்.