தீராதது காதல் தீர்வானது – 18
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் 18 :
சோதித்துப் பாரக்கிறாயாடி
செல்லக்கிளியே..
போதும்…
நீயாகவே நிறுத்திவிடு
நான் நிறுத்த முயன்றால்
சேதாரத்திற்கு யார் பொறுப்பு?
அஸ்வின் கொஞ்சம் முன்பு தான் எழுந்து வந்திருந்தான். அங்கு வரும் போதே அண்ணா, அண்ணியை நோட்டம் விட்டிருந்தான். அவர்களின் விழி மொழிகளும் அக மகிழ்வும் அவன் கண்களுக்குத் தப்பவில்லை.
“ஹாய் டானியா! குட் மார்னிங் ண்ணா…”
“குட் மார்னிங் அஸ்வின்” எனச் சுதாரிப்புடன் ஆரியன் புன்னகைத்தான்.
“அஹ்க்..” டானியா மொழி மறந்திருக்க, தோழியைக் கலாய்த்தான் அஸ்வின்.
அப்படியே அண்ணனையும் வாரினான். ஆரியன் சிரித்துக் கொள்ள, டானியா அஸ்வினிடமிருந்து தப்பிக்க நினைத்துக் குட்டீஸிடம் சிக்கிக் கொண்டாள்.
இன்னும் அஸ்வினின் கண்களில் அலுப்பு மிச்சமிருந்தது. சோம்பலாக உட்கார்ந்திருந்தான். இல்லை அப்படிக் காட்டிக் கொண்டான். இரட்டை வாலுங்களுக்குப் பயந்து. அவர்களுடன் எப்போதும் கும்மாளமடிப்பான் தான். இன்று அவன் பார்க்க வேண்டிய கடமைகள் அணிவகுத்திருந்தன.
டானியாவிற்கும் களைத்து போக, அவர்களை ஓர் இடத்தில் அமருமாறு board games விளையாட வைக்க முயற்சி செய்தாள்.
“அஸ்வின், நீயும் வா விளையாடலாம்” என அவள் நயமாக நண்பனை அழைக்க, அவனோ தன் தோழி @ அண்ணியைப் பரிதாபமாகப் பார்த்தான்.
“நானா! இவனுங்ககிட்ட மாட்டுனா, இன்னக்கி எந்த வேலையும் செய்ய முடியாது. நா வரல. நீங்க கண்டினியூ செய்ங்க அண்ணி” எனவும், கீழே அமர்ந்திருந்த டானியா சட்டென எழுந்து வந்து, அவன் தோளில் பட்டென்று ஒன்று வைத்தாள்.
“உன்ட்ட முன்னமே சொல்லியிருக்கேன். பிறகும் இப்படி அண்ணின்னு மரியாதையா கூப்பிட்டு என் வயச அதிகமா காட்டுற ப்ளானா அஸ்வின்?”
இடுப்பில் கை வைத்து முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.
ஆரியனுக்கும் அஸ்வினுக்கும் இருந்த வயது வித்தியாசம், அண்ணனின்
தொழில் திறன்.. சிறு வயதில் பெற்றோரை இழந்ததால் அண்ணனையும் அக்காவையும் அவர்கள் இடத்தில் பொருத்தியது என வந்த மரியாதை.
தன்னைவிடச் சிறியவளாக இருப்பினும், அண்ணன் மனைவியையும் அந்த மரியாதையுடன் அஸ்வின் நோக்க, டானியா முன்னர் விடுத்த எச்சரிக்கையை மீறி ஒரு ப்ளோவில் அந்த ‘அண்ணி’ வந்திருந்தது.
அவனையும் மீறிய உற்சாகம் பிறக்க, தோழியிடம் சரிக்கு சரி நின்றான்.
“பார்றா! அண்ணா வைஃபை பின்ன எப்படிக் கூப்பிடுவதாம்?”
“உன்னை!!”
பல்லைக் கடித்தாள். அவன் அப்படிக் கூப்பிட்டால் அவளுக்கு ஏனோ பிடிக்கவேயில்லை. வித்தியாசமாக உணர்ந்தாள். தன்னிடமிருந்து அவன் மிகவும் தள்ளிப் போவது போல. அஸ்வின் தனக்கு உறவு என்பதை விட, மிக நெருங்கிய நண்பன் என்ற எண்ணத்தை முன்நிறுத்தி வலியுறுத்த முயன்றாள்.
“ஹஹா.. எனக்கு இப்படித் தான் கூப்பிடத் தோணுதுங்க அண்ணீ” என வேண்டும் என்றே வம்பு வளர்த்தான். அவளுக்குப் பிடிக்காது எனத் தெரிந்தும் ஏனோ தோழியைச் சீண்டிக் கொண்டிருந்தான் அஸ்வின்.
பிரதமும் பிரணவும் சிரிப்புடன் இவர்களை வேடிக்கை பார்க்க, ஆதிரா ஃபோனில் பேசிய படி தள்ளி நின்றிருந்தவளுக்கு இவர்களின் சண்டை காதில் விழுந்து சிரிப்பை தருவித்தது.
இதுவரை வேலை இருப்பது போலப் பாவ்லா காட்டி அமர்ந்திருந்த ஆரியன், இப்போது தோழனிடம் சண்டைக்கு நின்ற மனைவியைச் சுவாரசியமாகப் பார்த்தான். ஒரே நாளில் மனைவி காட்டிக் கொண்டிருக்கும் வெவ்வேறு பரிமாணங்கள் அவனை அசத்தியது.
அவனிடமே இப்போ பஞ்சாயத்துச் செய்யச் சொல்லி வந்து நின்றாள். தன்னவளின் வாய் இவ்வளவு பேசுமா? திகைத்து விட்டான் ஆரியன்.
என் மௌனக் கவிதையே கதை பேசுகிறதா… ஆச்சரியக்குறி!
தன்னைத் தொட்டுத், தொட்டுக் கொஞ்சலுடன் வழக்குத் தொடுத்தவளை சமாளிக்கப் பார்த்தான். முடியவில்லை.. அவள் பேச்சையும் நிறுத்த முடியவில்லை..
தன்னுள் சிறிது நேரம் அமைதிக் கடலில் அமிழ்ந்து விட்ட அவளுக்கான உணர்வுகள் இப்போது அவளின் செய்கைகளால் மேலே எழும்புவதையும் நிறுத்த முடியவில்லை. அவளின் பஞ்சாயத்தை முடிக்கத் தனக்குத் தெரிந்த ஈஸியான டெக்னிக்கை கையில் எடுத்தான் அக்கள்வன். தம்பியை அர்த்தத்துடன் பார்த்து மனைவியறியாமல் கண் சிமிட்டினான் ஆரியன்.
பின்பு அவளின் கை பிடித்துச் சுண்டி இழுக்க, சரிந்து அவன் மேலே வந்து விழுந்தாள். சுதாரித்து அவள் விலக எத்தனிக்க, அவள் இடுப்பைச் சுற்றி தன் கரங்களைப் போட்டுக் கொண்டான்.
“இவ்வளவு பேசுவியா? உம்ம்..”
ஆழ்ந்த குரலில் கேட்ட கணவனை டானியா ஏறிட, இருவரின் விழிகளும் மோதி நின்றன. சும்மா தூரத்தில் இருந்து பார்க்கும் போதே அவனின் நீல நயனங்கள் அவளை என்னமோ செய்யும். இப்போ இவ்வளவு கிட்டத்தில் பார்த்தால்?
அவள் இதயம் நழுவி நழுவி அவனைச் சரணடைந்தது. அவளின் உயிர் உருகிக் கரையத் தயாரானது. சுற்றுப்புறம் மறந்து கணவன் மீது ஒன்றியிருந்தாள்.
ஆரியன் ரசனையாக மனைவியைப் பார்த்துக் கொண்டிருக்க, “ப்ரோ! என்னதிது? எங்க வழக்கை முடிச்சி வைக்காம, புது வழக்குக்குத் தாவிட்டீங்க? இது சரியா, நியாயமா? டூ பேட்” என அஸ்வின் இடை புகுந்தான்.
“டேய்! இன்னும் இங்க தான் நிக்கிறயா? போயிருப்பன்னு நினைச்சுட்டேன்.”
டானியாவை லாவகமாக நகர்த்தித் தன் அருகில் இருக்கையில் இருத்திக்கொண்டே ஆரியன் தம்பிக்குப் பதில் கொடுத்தான்.
“நீங்க இப்படித் திடீர்னு டிராக் மாறி தொபுக்கடீர்னு லவ் டிராக்குக்கு ஜம்ப் ஆவீங்கன்னு நான் என்னத்தைக் கண்டேன்?”
“ஹாஹ் ஹாஹ் ஹா.. இப்ப கண்டுகிட்ட தானே? விடு ஜூட்.. போ போ.”
“போறேன் போறேன் போயிட்டே இருக்கேன். ஹோல்ட் ஆன். வாங்கடா குட்டி மச்சான்ஸ் நம்ம ஐஸ் கிரீம் சாப்பிட போவோம். உங்க big mama சென்சார் போர்ட் கட்டிங்கை ஸ்கிரீன் போடாம காட்றதுக்குள்ள நம்ம ஓடிடலாம்.”
நமட்டு சிரிப்புடன் கண் சிமிட்டி குட்டீஸை நகர்த்திக் கொண்டு போயிட்டிருந்த அஸ்வினை நாலே எட்டில் எட்டிப் பிடித்தான் ஆரியன்.
தம்பியின் முதுகில் ஒரு அடி வைக்கப் போக, அவன் நகர்ந்து போக்கு காட்ட, பிரணவ் பிரதம் இருவரும் மாமாக்களின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தனர்.
பார்த்திருந்த டானியாவிற்கு அனைத்தும் புதுமையாய்! பூப்பூவாய் மலர்ந்திருந்த அவள் முகத்தில் விரிந்த புன்னகை, அவளின் அழகை மேலும் கூட்டியது.
‘என்ன இவன் இப்படிச் சின்னப் பையன் போல் விளையாடுகிறான்? இவனா இத்தனை தொழிலையும் திறம்பட நடத்திக் கொண்டிருப்பவன்? அஸ்வினும் இவ்வளவு வம்பு பண்றான்?’
அந்த இனிய சூழ்நிலை டானியாவின் மனதுக்குள் அழகிய படச் சுருளாகக் குடியேறியது. அக்குடும்பத்தில் தானும் ஓர் அங்கம் என்ற பெருமை அவளறியாமலே வந்தது.
அதனால் ஏற்பட்ட மிளிர்வு அவளைச் சுற்றி ஒரு சுடர் விட்டுக் கொண்டிருந்தது. அது தப்பாமல் அக்காதல் கணவனிடம் சென்றடைந்து சேதி சொன்னது.
இவளும் அஸ்வினைத் துரத்தக் கிளம்ப, அண்ணன் தம்பி இருவரும் அர்த்தம் பொதிந்த புன்னகையைப் பறிமாறிக் கொண்டனர்.
அஸ்வினுடன் நியூயார்கில் அவர்களின் நேத்தன் குழுமத்தில் முக்கியப் பொறுப்பை எடுக்க இருந்தான் ரோகன். ஆனால், அந்த வேலையில் சேர விரும்பாமல் தன் முடிவை மாற்றிக் கொண்டான். இடைப்பட்ட நாட்களில் சிகாகோவில் வேறு வேலையைத் தேடிக் கொண்டான்.
இதனை அறிந்த அவனின் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி கரை புரண்டது. இனி மகன் தங்கள் அருகிலேயே இருப்பானே?
தங்களைப் போல் மகனும் மருத்துவராக வேண்டும் என்ற விருப்பத்தை விட்டுக் கொடுத்திருந்தனர் அவனின் பெற்றோர். ரோகனின் விருப்பம் வேறாக இருந்ததே?
அப்படித் தான் அவன் வேலை விசயத்திலும் அவர்கள் மகனின் விருப்பத்தை மதித்துச் சம்மதித்திருந்தனர். நியூயார்க் தானே? எங்கிருந்தாலும் ரோகனின் மகிழ்ச்சியே அவர்களுக்குப் பிரதானம்.
அஸ்வின் குடும்பத்தைப் பற்றிய நல்லெண்ணம் வேறு. ரோகனுக்கு நேத்தன் குழுமம் அளித்த வேலையும் சம்பளமும் அவர்களுக்குத் திருப்தி தர சம்மதம் சொல்லியிருந்தனர்.
இப்போது அவனே அந்த முடிவை மாற்றிக் கொண்டு சிகாகோ நகரத்தில் நல்ல வேலையில் சேர இருந்தான். அதில் அவர்களுக்கு இரட்டிப்புச் சந்தோசம். ஏன், என்ன என்று கேள்விகளை அடுக்கவில்லை.
ரோகன் தன் பெற்றோரைத் தவிர வேலை விசயத்தைப் பற்றி யாரிடமும் சொல்லியிருக்கவில்லை. அஸ்வின், பிரகதி உள்பட யாருக்கும் அவன் சிகாகோவில் புதிய வேலையில் சேர இருப்பது தெரிந்திருக்கவில்லை.
பிரகதி, தோழியின் ரிசப்ஷனுக்கும் இந்தியாவிலிருந்து கிளம்பி வர இயலவில்லை. அம்மாவிற்கு இன்னும் உடல் நலம் சரியில்லை. விடுமுறை முடிந்து கல்லூரிக்கு திரும்பும் போது சந்திக்கலாம் என டானியாவிற்குக் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்.
இப்போது பெட்ரோவிடம் பேசி முடிக்கும் போது தான் டானியா பிரகதியின் குறுஞ்செய்தியை பார்த்தாள். அதை அஸ்வினிடம் தெரிவிக்க, ரோகன் எப்ப வருவதாகச் சொன்னான் என்ற கேள்வி முளைத்தது.
அவனுடன் தானும் பேசவேயில்லை. அவனும் அழைத்திருக்கவில்லை என உணர, உடனே அஸ்வின் ரோகனுக்குத் தொலைபேசியில் அழைத்தான்.
ரோகன் டிவியின் முன்பு அமர்ந்திருந்தான். ரிங் டோன் அஸ்வினின் அழைப்பு எனக் காட்டிக் கொடுத்தது. இருந்தாலும் எடுக்கவில்லை. சில நாட்களுக்கு முன்பென்றால் முதல் ஒலியிலேயே பாய்ந்து எடுத்திருப்பான்.
அந்நிலை தான் மாறிவிட்டதே! வந்த வேகத்தில் சரிந்து போன காதல் கோட்டை.. காதல் எனும் மாய வார்த்தை ரோகனை மாற்றிக் கொண்டு இருக்கிறதே.
அஸ்வின் இப்போது எதற்கு அழைக்கிறான் என நிச்சயமாகத் தெரியும். ரோகனுக்கு அழைப்பை எடுத்து என்ன பேசுவது என்ற குழப்பம். மொபைலை எடுக்காமல் திரையைப் பார்த்தபடி இருந்தான்.
‘ச்சே! என்ன விதமான நிலையில் நிற்கிறேன். ஒரு சில வாரங்களில் எத்தனை மாற்றங்கள்? எல்லாம் பாழாப் போன இந்த மனசால வந்தது. ஏன் காதல் வந்தது, அதிலும் அவள் மேல்? அய்யோ, நினைத்தும் பார்க்கலையே இப்படித் தோத்துப் போவேன்னு..’
அஸ்வின் மீண்டும் மீண்டும் அழைக்க, அப்போது அங்கே வந்த ரோகனின் அம்மா எடுத்துப் பேசினார். சில நிமிடங்கள் நலம் விசாரிப்பு, திருமணம், மாப்பிள்ளை பொண்ணு, நாளைய ரிசப்ஷன் என அந்த உரையாடல் நீண்டது.
முடிவில் ரோகனின் தோளைத் தட்டி மொபைலை அவனிடம் தந்தேவிட்டார். மகனின் நிலையை, அவனின் உணர்வுகள் அந்தத் தாய்க்குத் தெரியாதே! அசட்டையாக டிவி பார்க்கிறான் என நினைத்து விட்டார்.
“ரோகன், டேய்! என்னாச்சு, உன்ட்ட இருந்து போன் கால் எதுவும் வரல. எப்ப வர்ற? இந்த நேரம் நீ இங்க வந்திருக்கணும். அட் லீஸ்ட் இப்போ ஃப்ளைட்ல வந்திட்டு இருக்கணும். வீட்ல உட்கார்ந்துட்டு என்ன பண்ற?”
“…”
ரோகன் அமைதியாக இருந்தான். அஸ்வினை அவனின் அமைதி தாக்கியது. நண்பனின் மனதை அந்த நொடிகள் துல்லியமாகக் காட்டி கொடுத்தன.
எதிரே அமர்ந்திருந்த டானியா கேள்வியாக இவன் முகத்தைப் பார்க்க, என்னடா இது கஷ்ட காலம் என்றானது அஸ்வினுக்கு. என்ன சொல்லுவான்? இழுத்து வைத்த புன்னகையுடன் ஒன்னுமில்லை எனத் தலையசைத்தான்.
அண்ணியைக் கருத்தில் கொண்டு அங்கிருந்து விலகிச் சென்று தனியாகப் பேசினான் அஸ்வின்.
“டேய்!! என்னடா, ஏன்டா இப்படிப் படுத்துற?”
ரோகன் வரவில்லை என்றால் இங்க வீட்டில் இஷ்யூ ஆகும். அவன் கவலை பெருங்கவலையாக மாறிக் கொண்டிருந்தது.
“ஹ்ம்ம்.. எ.. என்ன?”
“ரோகன், என்ட்ட உனக்கு என்ன ப்ராப்லம்? சும்மா கண்டதை யோசிச்சுக் குழப்பிக்காத.”
“ப்ராப்லமா? அதுவும் என் பெஸ்ட் ப்ரண்ட்டயா.. ம்கூம்.. அப்படி எதுவுமில்லடா…”
“ஓஹ்! அப்ப சரி.. நீ அண்ணிட்ட எதையும் இதுவரை சொல்லலை போலிருக்கு.” தயங்கித் தயங்கிக் கேட்டான் அஸ்வின்.
“ம்ம்.. இல்ல நான் எதையும் சொல்லலடா.. அவங்களுக்குத் தெரியாது. காதல் சொல்ல காலம் கடந்து போச்சு. வந்த வேகத்தில தொலைஞ்சும் போச்சு. தொலைச்சுட்டேன்.”
“ரோகன்.. நீ.. உன் மனசு எனக்குப் புரியுது. பட்.. ம்ஹ்ம்.. இப்போ போய் என்ன சொல்ல? நடக்கும் சில விசயங்கள் நம் கையில் இல்லையே!”
“நீ ஏன் ஃபீல் பண்றடா. லூஸ்ல விடு. What happened is destiny!”
“எஸ்.. ரொம்பச் சரி. It’s destiny. அப்படியே நினைச்சு அதிலிருந்து நீயும் வெளிய வாடா. வரணும். நான் தான் பிஸியா இருந்துட்டேன். நீயும் ஃபோன் பண்ணி பேசவேயில்ல. ஃபீல் பண்ணாம இருப்பனா?
ரிசப்ஷனுக்கு வர்ற ஐடியால நீ இல்லன்னு புரியாத அளவுல நம்ம ஃப்ரண்ட்ஷிப் இருக்காடா? நீ இங்க கிளம்பி வா. என்னைச் சங்கடப்பட வைக்காத. டேய், வேற என்ன சொல்றதுன்னு சத்தியமா இப்ப எனக்குப் புரியல.”
“த்சு.. அஸ்வின். ஏன்டா நீ வேற ரொம்பப் பேசற… நம்ம ஃப்ரண்ட்ஷிப்ப ஏன் இப்ப இழுக்கிற? டிராவல் பண்ற சிடுவேஷன்ல நான் இல்லங்கிறது தான் ரீசன். அதான் கிளம்பல.”
“ஹேய் என்னடா சொல்ற, என்னாச்சு உனக்கு?” பதறிய நண்பனின் குரல் ரோகனை சற்று அசைத்துப் பார்த்தது. சமாளித்துக் கொண்டான்.
“அஸ்வின் நத்திங் டு வொரிடா. நாளைக்கு ஜாப்ல சேரப் போறேன்”
“என்னது!! த்சு.. சும்மா விளையாடத. நம்ம ஆஃபீஸ் தானடா. ஏற்கெனவே நம்ம பேசுனது போல இன்னும் பத்து நாள் கழிச்சுப் போனாப் போதும். நாளைக்கே உன்னை யாரு வரச் சொல்றது?”
“அஸ்வின், நான் நியூயார்க் வரல. இங்க வேற ஜாப் எடுத்துட்டேன். சிகாகோ டௌன் டவுன்லயே கிடைச்சிருக்கு.”
இதைக் கேட்டதும் ஸ்தம்பித்தது ஒரு சில நொடிகளே. பிறகு நண்பனிடம் பொரிந்தான்.
“வாட்!! விளையாடறியா.. ரோகன், ஏன்டா?”
“No, I’m serious. I need to be away. புரிஞ்சுக்கோடா ப்ளீஸ்.. I’m not used to handling a disappointment. எதையாவது பேசி என் மனசை மாத்த ட்ரை பண்ணாத. அம்மா அப்பா பக்கத்தில கொஞ்சம் இருக்கறேன். விட்ரு ப்ளீஸ்.”
என்ன சொல்லுவான் அஸ்வின்? இதற்குப் பிறகு அவனை வற்புறுத்துவது சரி வருமா? ரோகனுக்கு ஒரு மாறுதல் தேவை. அவன் பெற்றோர் அருகே இருப்பது மிகவும் நல்லது. தங்களை விட்டு தூர இருப்பது… முக்கியமாக டானியாவை இப்போதைக்குச் சந்திக்க வேணாம். அவன் மனசு சமன்படட்டும்.
இப்படி எண்ணங்கள் அஸ்வினுக்குள் ஓடியது.
“சரிடா, நான் உன்னை ஃபோர்ஸ் பண்ணல. நீ மனசு கஷ்டப்படாம இருக்கிறது தான் எனக்கு முக்கியம். இந்தச் சேன்ஞ் எனக்குப் பழைய ரோகனை திருப்பிக் கொடுக்கும்னா சந்தோஷம். அதவிட வேற என்ன எனக்கு வேணும். போதும், நீ இயல்புக்கு திரும்பினா அது போதும்.”
“நீ புரிஞ்சுக்குவன்னு எனக்குத் தெரியும். தாங்க்ஸ்டா…”
“தாங்க்ஸா? பக்கத்தில இருந்தா அப்படியே முதுகுல ஒன்னு போட்டிருப்பேன்.”
“விட்றா.. அதான் தள்ளி இருக்கேனே.. சரி அண்ணாட்ட எப்படி.. என்ன பேச?”
“ஹ்ம்ம்.. சொல்லணும். எப்படியோ சமாளிக்கிறேன். விடு பார்த்துக்கிறேன். Don’t worry! You take care. டச்ல இரு. நானும் பேசறேன். I’ll miss you. Bye da!”
“நானும் தான். பைடா…”
ஆரியனிடமும் டானியாவிடமும் எதையோ சொல்லி சமாளித்தான் அஸ்வின். அவர்கள் இருந்த மனநிலையில் எதையும் தோண்டித் துருவவில்லை. ரோகனின் மனதில் சிறிது நேரத்தில் பாரம் ஏறியது.
தன் காதல், தோல்வி எல்லையின் தனிமையில். இனி நடக்கவே முடியாத ஒன்றிற்குத் தான் ஏங்குவதா? ஆரியனை அண்ணனாகக் கொண்ட பிறகு, அவன் கையால் தாலி வாங்கிய டானியா தனக்கு அண்ணி!
இனி எப்படிக் காதலியாக, கடந்த காதலாக அவளை நினைக்க முடியும்? நினைக்கக் கூடாது! அவளை மறப்பது எப்படி? அது தான் புரியவில்லை.
ரோகனின் உள்மனம் எந்நேரமும் ஊமையாக அழுது கொண்டிருந்து. உள்ளே தன் மனதளவில் உயிரற்றவனாகிப் போனான். ஆனால், அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
யாராலும் அவனின் சோகத்தைக் கண்டுகொள்ள முடியாதவாறு ஜாக்கிரதையானான்.
ரோகனின் மனமே அவனை இரண்டாகப் பிரித்தது. உள்ளே ஒருவனும் வெளியே ஒருவனுமாக உருவெடுக்க ஆரம்பித்தான். அவனே இந்த மாற்றங்களை எல்லாம் அறியாமல் போகப் போவது தான் பரிதாபம்.
மகனின் நிலையை அவனின் பெற்றோரும் அறியவில்லை. இரண்டு பேரும் புகழ் பெற்ற மருத்துவர்கள். எப்போதும் பிஸியான வாழ்க்கை. அதிலும் மகனுக்காக அவர்கள் ஏற்படுத்திக் கொள்ளும் பொழுதுகள்.. அவ்வாறு முடியாத போது அவர்களுக்கு ஏற்படும் தவிப்பு..
எத்தனை உயரத்தில் இருந்தாலும் ரோகன் மட்டுமே அவர்களின் வாழ்வின் ஒளி. இருந்தும் என்ன பயன்?
அவர்களின் வாழ்க்கை மருத்துவம் என்ற சுழலில். ஆனால் எந்த மருத்துவமும் தங்களின் மகனின் விசயத்தில் கை கொடுக்கப் போவதில்லை. இதை அறியும் போது அவர்களின் நிலை?