தீராதது காதல் தீர்வானது – 17

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் 17 :

நெஞ்சின் உள்ளே புது மாற்றமோ?
உன் நீல நயனங்களின் காதல் தீ
மாற்றம் தந்ததா..
உடல்மொழி காட்டிடும் இலக்கணம்
மயக்கி சரித்ததா?
கூச்சமே இல்லாமல்
உனது உதடுகளின் மொழி
நிகழ்த்திடும் மாயா ஜாலங்கள்..
எதுவோ… எதுவோ…
இந்த மாற்றத்தை
நெஞ்சில் சொருகியது?

ஆரியன் நேத்தன் ஒரு செலிப்பிரடி. அவனின் தொழில்களின் விஸ்தாரம் மற்றும் வளர்ச்சி, சொத்துக்களின் மதிப்பு அந்தச் செலிப்பிரடி அடையாளத்தை ஈட்டித் தந்திருந்தது.

முன்னணி தொலைகாட்சி நிறுவனங்கள், செய்தித்தாள்கள், வார இதழ்கள் எனப் பல ஊடகங்களின் கண்களுக்கு அவனின் திருமணம் தப்பவில்லை. செய்தியாகவும், லைவ் கவரேஜ் க்ளிப்ஸ், கவர் ஸ்டோரி என ஆரியன் ~ டானியா திருமணத்தின் பிரமாண்டம் பேசப்பட்டுக் கொண்டிருந்தது.

அஸ்வினுக்கு அதுவே மிகுந்த டென்ஷனைக் கொடுத்தது. இரவு அனைவரும் டிராவல் அலுப்பினால் உறங்கச் செல்ல, இவன் ரிசப்ஷன் ஸ்பாட்டுக்குப் போயிருந்தான். நான்கு நாட்களில் என்ன செய்திருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு.

அங்கே..

அனைத்து ஏற்பாடுகளையும் பார்வையிட்டான். கெஸ்ட் ரிசப்ஷன் டீமை முதலில் சந்தித்தான். சில அப்டேட்களைப் பெற்றுக் கொண்டான்.

ஈவென்ட் மானேஜ்மெண்ட் டீமுடன் மீண்டும் ஒரு முறை நாளைய நிகழ்வுகளைப் பற்றிக் கலந்துரையாடினான். சில மாறுதல்களைச் சொன்னான். விருந்தினர்களின் table seating பற்றியும் கேட்டுக் கொண்டான்.

ரிசப்ஷன் தங்கள் ஹோட்டலிலே நடைபெற இருந்ததால், கேட்டரிங் டீமையும் அந்த நேரத்தில் சந்திக்க முடிந்தது. மெனுவின் தரம், அளவு எனச் சரியாக வர வேண்டும் என வலியுறுத்தினான். பன்னாட்டு மெனு. சிறப்பாக இருக்கணும். நட்ஸ் அலர்ஜி பற்றியும், காரம் பற்றியும் விருந்தினர்களுக்கு அறியத்தர மெனு ஐட்டங்கள் அருகே சற்று பெரிய அறிவிப்பு அட்டைகளைக் கவனமுடன் வைக்கச் சொன்னான்.

எப்போதும் அப்படி வைப்பதை வழமையாகக் கொண்டிருந்தாலும், ஏனோ அஸ்வின் அதில் கூடுதல் கவனம் செலுத்தச் சொன்னான். இந்த முறை வரவிருக்கும் கூட்டம் அப்படி.

வெடிங் கேக் ரெடியானவுடன் தன்னை அழைக்கச் சொல்லி அவர்களிடமிருந்து விடைபெற்று அவன் வீட்டிற்கு வர காலை நான்கு மணி. கௌதமின் எண்ணிற்கு அனைத்தையும் அப்டேட்டாகக் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தான் படுக்கையில் விழுந்தான்.

காலையில், கௌதம் ஒரு மெச்சுதலுடன் அஸ்வினின் ஏற்பாடுகளையும் பொறுப்புணர்ச்சியையும் ஆதிராவுடன் பகிர்ந்துகொண்டான். அவனும் சில வேலைகள் இருக்க, எழும்பியதும் வெளியே கிளம்பினான்.

ஷார்லின், ஜேகப் இருவரும் பரபரப்பாக இருந்தனர். ஜேகப் சமையலில் கலக்கிக் கொண்டிருந்தார். கௌதம் கிளம்பிச் செல்லும் முன்பே காலை உணவு வகைகள் டைனிங் டேபிளை அலங்கரித்திருந்தன.

ஷார்லின் ஆவலுடன் மாடிப்படிகளில் ஒரு கண்ணும் தன் வேலைகளில் ஒரு கண்ணும் எனத் திரிந்து கொண்டிருந்தாள். புதுமணத் தம்பதியரைக் காணும் ஆவல். டானியாவை இன்னும் அவள் சந்திருக்கவில்லை. எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள்.

முதலில் ஆதிரா குழந்தைகளுடன் இறங்கி வந்ததும் ஷார்லின் பிஸியாகி விட்டாள். பிறகு அவளுக்கு அங்கே நிற்க நேரமில்லை.

வீடே கலகலப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. கூடுதல் வேலைகளுக்கு எப்போதும் இவர்கள் உபயோகிக்கும் ஏஜென்சியிலிருந்து இருவர் வரவழைக்கப் பட்டிருந்தனர்.

நேரம் கழித்துத் தான் மாடியிலிருந்து ஆரியன் டானியாவுடன் இறங்கி வந்தான். அவர்களைத் தூரத்திலிருந்து ஆதிரா பார்த்துவிட்டாள். இருவரிடம் காணப்பட்ட முகப் பொலிவும் இதழ் புன்னகையும் அவளுக்குக் கதைகளைச் சொல்ல, மனம் நிறைவாக உணர்ந்தாள்.

காலை உணவுக்கிடையில் ஷார்லின் மற்றும் ஜேகப் பற்றி டானியா அறிந்து கொண்டாள். அவளே சென்று அவர்களிடம் அறிமுகமாகி சிறிது நேரம் பேசினாள். அச்செயலில் ஷார்லின் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே போய்விட்டாள். புதுப் பாஸை ரொம்பவே பிடித்துப் போனது அவளுக்கு. இனி அந்த வீட்டில் அவளுக்குப் போரடிக்காது எனப் பரவசப்பட்டுப் போனாள்.

பாவம் அவளுக்கு எங்கே தெரிந்திருந்தது அந்தச் சிட்டு ஒரே வாரத்தில் நியூயார்க் பக்கம் பறக்கப் போவதை? தன் பாஸ் எனும் காதல் இளவரசனும் இனி அடிக்கடி இங்குத் தரிசனம் தர போவதில்லை. அவன் இளவரசியின் பின்னால் தான் சுற்றலில் இருக்கப் போகிறான். இதுவும் அவளுக்கு எப்படித் தெரிந்திருக்கும்?

மூத்தவரான ஜேகப்பிற்குக் கண்கள் பனித்தன. குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களுடன் பயணித்திருந்தவருக்கு, அவர்களின் வாரிசுகளின் மேல் பாசம் அதிகம். புது மருமகள் தன் எஜமானரின் அம்மாவை நினைவுபடுத்துவதாக இருக்கவும் தான் இந்தக் கண்ணீர்.

அவரின் மனம் புரிந்தவனாக அவரைத் தோளோடு அணைத்துக் கொண்டான் ஆரியன். டானியாவும் அத்தருணத்தில் மிகவும் நெகிழ்வாக உணர்ந்தாள்.

இவரின் இத்தகைய அன்பு எந்தச் சொந்தத்தால் வந்தது? உறவுகளைக் கடந்து வரும் உணர்வுகளின் வெளியிடல்! அந்நொடியில் பெட்ரோவின் சிரித்த முகம் அவளின் நினைவிலாடியது.

ஆரியன் லேப்டாப்புடன் அமர்ந்துவிட, பிரணவ், பிரதம் டானியாவை சுற்றி வந்தனர். இல்லையில்லை, அத்தையைத் தங்கள் பின் சுற்ற வைத்தனர் என்பது தான் பொருந்தும்.

அந்த லிவிங் ரூம் பெரிய ஹால் போன்ற அமைப்பில் அழகிய பெரிய மரத்தூண்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு இருந்தது. தன் வயதை மறந்து பிரணவ், பிரதம் இருவருடன் தூண்களைச் சுற்றி சுற்றி ஓடிக் கொண்டிருந்தாள் டானியா.

அவளைப் பார்க்க டானியா போலவே இல்லை. இத்தனை குதூகலத்தை எங்கே பொத்தி வைத்திருந்தாள் இவள்? தானே தொலைந்து போய் வெறுமையை மட்டும் தத்தெடுத்து?

தன் முடிவு சரி தான். அப்படியே விட்டிருந்தால் குழப்பத்தில் சுழன்று கொண்டே தான் இருந்திருப்பாள். தன்னுடனான திருமணம் மிகச் சரியான முடிவு என ஆரியன் நினைத்தான்.
தான் நினைத்தது போல் தங்கள் வீட்டு சூழல் மனைவிக்குத் துணை புரிவதாய்த் தெரிந்தது.

அந்த அழகிய தருணத்தைச் சில நொடிகள் தன் மொபைலில் பதிந்து கொண்டான். டானியாவின் மாற்றம் பெட்ரோவிற்கும் மகிழ்ச்சி தரும் என அவனுக்கும் வீடியோவை அனுப்பி வைத்தான்.

விழி அகலாமல் ஆரியன் மனைவியைத் தொடர்ந்து கொண்டிருந்தான். அவன் அகத்தில் கொள்ளை சந்தோஷம். கண்களில் ரசனை வழிந்து கொண்டிருந்தது. உதடுகளில் வசீகரப் புன்னகை. யாவும் நேசத்தின் விளைவு.

கணவனின் பார்வைகள் தன்னைத் தொடர்ந்ததை உணர்ந்தவள் முகத்திலோ வெட்க மலர்வு. அகத்தில் புதுப் பரவசம். சில மணித்துளிகளுக்கு முன் நடந்தேறி இருந்த நிகழ்வுகள் அப்படி.

இருவரின் விழிகளும் சந்தித்துக் கொள்ள, அங்கே மௌன பரிபாஷைகள் நடந்தன. அதில் பரிவர்த்தனைகள் பற்றிய குறிப்புகள். நடந்து முடிந்திருந்த கொடுக்கல் வாங்கலின் அலசல்.

அவர்களிடையே இருந்து வந்த வெறும் காதல் பார்வைகள் தற்போது மோகப் பார்வைகளின் ஆக்கிரமப்புடன்!

“காலையில் விட்டுப் போன தேடலைத் தொடரலாமா?” என்ற கேள்வியுடன் அவனும்,

“ச்சீய்! நடுக் கூடத்தில் வைத்து என்ன பார்வை பார்க்கிறாயடா.. கள்ளா!” என்ற கண்டிப்புடன் அவளும் சத்தமில்லாமல் பேசிக் கொண்டனர்.

அவளின் குழப்பம் நீங்கி விடவில்லை. ஆண்டுகளாக இருந்து வந்திருந்தது மேஜிக் போல ஓரிரவில் ஓடி விடுமா என்ன? அது பாட்டுக்கு இருந்தது தான். கொஞ்சம் அமிழ்ந்திருந்தது என வைத்துக் கொள்ளுங்களேன். ஆரியன் சரி செய்துட மாட்டானா?

ஒரு நிம்மதியுடன் நன்றாக உறங்கி எழும்பியவர்களுக்கு, இன்றைய நாள் அவர்களின் வாழ்வில் ஓர் அழகிய தருணத்தை உருவாக்கி கொடுத்திருந்தது. இருவரும் அதைப் புரிந்து சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

முளைத்து விட்டிருந்த மோகப் பார்வைகள் மின்னல் தொடர் அம்புகளாகப் பயணித்துக் கொண்டிருக்கக் காரணம் அதுவே.

குளியலறையிலிருந்து வெறும் துவாலையைச் சுற்றிக் கொண்டு வெளியே வந்தவளுக்கு மாற்றுத் துணிகள் கையில் இல்லை. அவளின் பெட்டிகளும் அறையில் எங்கும் காணவில்லை.

அவை முன்னறையில் இருக்கலாம். அட் லீஸ்ட் கேபின் பேக் அங்குத் தானே இருக்கு. அதில் ஒரு செட் டிரஸ் இருக்கே.

ஆரியன் படுக்கையில் இருக்க, அவனைக் கடந்து தான் தங்கள் தனிச் சூட்டின் முன்னறைக்குச் செல்ல வேண்டும். இப்படியே செல்வதா என்ற தயக்கம்.

அவளின் சங்கடம் தேவையற்றது. ஏனென்றால், அவளுக்கான அனைத்தையும் ஆரியனும் ஆதிராவும் வாங்கிக் குவித்திருந்தனர். குளியலறையின் இடது புறம் டானியா திரும்பியிருக்க வேண்டும். சில அடி தூரத்திலிருந்த அந்த அறை அவள் கண்களில் பட்டிருக்கும்.
பெரிய க்ளாசெட்டுடன் கூடிய டிரஸ்ஸிங் ரூம் அவளின் வருகைக்குத் தயாராக இருக்க, இவளோ அதை அறிந்திருக்கவில்லை. வலது புறம் சென்றாள்.

எப்படியும் கணவனின் துணிகள் இங்கு இருக்கும் அல்லவா? அதில் ஒன்றை உபயோகித்துக் கொள்வோம் என்ற எண்ணம். சரியாக அவனின் டிரஸ்ஸிங் ரூமில் நுழைந்தவள் ஆசுவாசமாக மூச்சு விட.. வான் தேவதைகள் தங்களுக்குள் நகைத்துக் கொண்டன.

‘எது நடக்க வேண்டுமோ அது நடக்கும் டானியா. நீயாகவே விரும்பி ஏற்பாய்!’ எனும் அர்த்தம் அச்சிரிப்பில்.
காலம் நேரம் பார்த்துக் கொண்டா
பூவும் வண்டும் காதல் செய்யும்?

ஆரியனுக்கு எப்போதோ விழிப்புத் தட்டிவிட்டது. மனைவி குளிக்கச் சென்று கதவை தாளிடவும், அந்தச் சத்தத்தில் விழித்திருந்தான். சும்மா தான் படுத்துக் கிடந்தான்.

நாளைய ரிசப்ஷன் பற்றிய எண்ணங்கள். கௌதமின் குறுஞ்செய்தி தகவல்கள், மனைவியின் தாத்தா, பாட்டி, பெட்ரோ, தன் மாமனார் லுகாஸ், எலைன் எப்போது வருகிறார்கள் என்று அனைத்தையும் மொபைலில் பார்த்தபடி இருந்தான்.

தேஜூ தன் குடும்பத்துடன் வருகிறார் என்ற உறுதியான செய்தியில் யோசனையானான். கண்டிப்பாக மனைவியிடம் சில விசயங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். அதுவும் ரிசப்ஷனுக்கு முன் என அவன் மனதில் பதித்துக் கொண்டான்.

ஆரியன் தானாக டானியாவிடம் அவர்களின் பேச்சை எடுப்பதில்லை. காரணம் ரொம்பச் சிம்பிள். டானியா தான் தனக்கு முக்கியம். அதற்கடுத்து தான் அவளின் வழி வந்த சொந்தங்கள். அவளைப் புண்படுத்துவது போல் எதுவும் நிகழ்ந்து விடக் கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருந்தான்.

ஆனால், அவளின் குழப்பங்கள் சீக்கிரம் தீர்ந்து விடாதா என்றிருந்தது.

தீராதது என நம்மிடம் சில விசயங்கள் இருக்கும். மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகள் கூடப் பிரச்சனைகளைச் சந்திக்கின்றன. அப்பிரச்சனைகளை எதிர்க்கொள்வது ஒரு புறம். அதற்குத் தீர்வு காண்பது இன்னொரு புறம்.

ஐந்தறிவை வைத்துக் கொண்டு விலங்குகளே சில சமயம் நல்ல அறிவுத்தனமான தீர்வுகளைத் தங்களுக்குச் செய்து கொள்ளும் போது நம்மால் முடியாதா என்ன?

முடியும்.. டானியாவினால் முடியும். தீராத அவளது குழப்பங்களுக்கான தீர்வு இருக்கிறது. அவள் புரிந்து கொள்ள வேண்டும். தன் காதல் அந்தத் தீர்வினைக் கொடுக்கும்.

‘தீராதது என் காதலினால் தீர்வாகும்.. ஆகணும்! அந்த நம்பிக்கையை என் ப்ரின்சஸ்க்கு நான் தரணும்.’

இப்படி எண்ணங்கள் சுழன்று கொண்டிருக்க, குளியலறைக் கதவின் ‘க்ளக்’ சத்தம் ஆரியனின் கவனத்தைக் கலைத்தது. புன்னகை முகத்துடன் மனைவியை எதிர்நோக்கி கொண்டிருக்க, நொடிகள் கரைந்து சில நிமிடங்களும் கடந்து போனது.

‘என்ன செஞ்சிட்டிருக்கா? அவ டிரஸ்ஸிங் ரூம்ல இருப்பாளா இருக்கும்’ என நினைத்தவன் குளித்துவிட்டு வந்துவிடலாம் எனக் கிளம்பினான்.

இவன் டிரஸ்ஸிங் ரூம் திறந்திருக்கத் தயங்கி நின்றான். அங்கேயிருந்து அரவம் வர, டானியா தான் எனப் புரிந்து போனது.

‘அவ டிரஸ்ஸிங் ரூமுக்குப் போகாம இங்க என்னடா செய்றா?’ என்ற கேள்வியுடன் ஆரியன் சப்தமெழுப்பாமல் கதவருகே செல்ல, ஷாக் ஷாக் ஷாக்! தௌஸண்ட் வோல்ட்ஸ் ஷாக்!

ஆயிரம் வோல்ட்ஸ் மின்சாரம் மொத்தமாகத் தாக்கியதில் அவன் அங்கங்கள் அதிர, விழிகளின் நீலமணிகள் ஓர் இடத்தில் நிலைக்குத்தி நிற்க, இதயத்துடிப்பு நொடியில் ஜதி தப்பியது!
செம அதிர்ச்சியை இல்ல கொடுத்திருக்கா அவனின் அழகிய ராட்சஷி.

‘ஹய்யோ! இப்படியா ஷாக் கொடுப்பா? எதிர்பார்க்கல.. சத்தியமா இதை நான் எதிர்பார்க்கல மை டியர் ப்ரின்சஸ். வாவ்! ப்ரிட்டி வுமன்!’

நொடிகள் மறந்து ஆரியன் மௌனமாக மனையாளை பார்வையிட்டுக் கொண்டிருக்க, முதல் கட்ட அதிர்ச்சி மறைந்து இப்போ ரசனையைத் தழுவியிருந்தது அவனின் நயனங்கள்.

நீல வானின் மொத்த விண்மீன்களின் ஒளியை குத்தகைக்கு எடுத்தது போன்ற ஜொலிப்பு அவனிடம்.

பின்ன இப்படி ஒரு தேவி தரிசனம் எதிர்பாராத விதமாகக் கிடைத்தால்? வெறும் டவலை மட்டும் சுற்றிக் கொண்டு இவனின் closet-ஐ அளந்து கொண்டிருந்தாள் டானியா.

பனித்துளிகள் தளிர் மேனியில் பொன் துகள்களாக மின்னிக் கொண்டிருக்க.. டர்பன் போல் முடிந்திருந்த துவாலையில் அடங்க மறுத்து அசைந்தாடிய இரண்டு சுருள் கேசக் குழல்கள் டானியாவின் முகத்தில் உறவாடி, தூத்தலை தூவின.

அவள் மேனியின் நளினம், நடைபயின்று கொண்டிருந்த ஸ்டைல், ஆர்வமாக இவன் துணிகளை ஆராய்ந்த விதம்.. இவன் உடைமைகளின் தேர்வையும் நேர்த்தியையும் மெச்சுதலுடன் பார்த்த பார்வை..

இவையனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தவனின் உள்ளமும் உயிரும் உருகிக் கரையத் தயாரானது. டிரஸ்ஸிங் ரூம் கதவோரம் சாய்ந்து நின்றிருந்தவனால் அதற்கு மேல் சும்மா இருக்க முடியவில்லை.

“இந்த நல்லவனை நல்லவனாகவே இருக்க விட மாட்டாயா? இன்னைக்கே கெட்டவனாக்கி விடுவ போலவே…” திடீரென ஒலித்த கணவனின் குரலில் துள்ளித் திரும்பினாள் டானியா.

‘ஏதோ ஒரு டி-சர்டை எடுத்துப் போட்டிருக்கலாம். அதை விட்டுட்டு டைம் வேஸ்ட் பண்ணி இப்படி மாட்டிக்கிட்டேனே.’

“நீங்க.. எப்ப.. இங்க என்ன பண்றீங்க?” சங்கடத்துடன் நெளிந்தவள் திணறலாகப் பேச,
“ம்ம்ம்.. இது என் ரூம். நீ இடம் மாறி வந்து என்னைக் கேள்வி கேட்கிற. உன்னை என்ன செய்யலாம்?” என்றவாறே பட்டென்று நெருங்கி வந்து நின்றவனைத் தவிர்க்கச் சில அடிகள் பின் வைத்தாள்.

எட்டிப் பிடித்தவன் கையில் வசமாகச் சிக்கிக் கொண்டாள். இடுப்போடு அணைத்து பிடித்திருந்தவனின் நெருக்கமும் உரிமையும் அவளின் பெண்மையை விழிக்கச் செய்திருந்தது.

அவளிடம் பேசிக் கொண்டே படுக்கை அருகே நகர்த்திக் கொணர்ந்திருந்தான் ஆரியன். அவளும் விருப்பமாகவே வந்திருந்தாள். அந்த நிமிடம் இருவரின் மனதில் love love love and only love.

வேற எதுவும் வேணாமே.. நமக்கு இந்தக் காதல் போதுமே!

டானியாவின் மனக்குழப்பங்கள், ஆரியனை கணவனாக அடைந்த பின்பும் ஏற்க யோசிக்க வைத்த காரணம்.. ம்கூம்.. எதுவும் அப்போது முன் வரவில்லை.

ஆரியனின் காதல் சக்தி அது. மெல்ல மெல்ல அவள் குழப்பங்களைக் களைந்து கொண்டிருந்தது. எண்ணங்கள் யாவிலும் காதல் பட்டர்ஃபிளைகள் பறக்க.. அவற்றைச் சுற்றிச் சுற்றி மோக வண்டுகளின் படையெடுப்பு!

விழிகள் கலந்ததில், இருதயங்கள் இரண்டும் தாளம் தப்பின. அவனின் நீல நயனங்களில் ஜொலித்த காதல் தீ அவளையும் பற்றிக் கொண்டது. அவனின் உடல் மொழி காட்டிய இலக்கணத்தைச் சரியாகப் புரிந்து, இவளும் மயங்கிச் சரிந்தாளோ?!

அவனின் உடலோடு ஒட்டி நின்றவளின் மோகனம் கவர்ந்து இழுக்க, சரசமாக அவள் செவிகளில் பலமான பலதையும் பேசி வைத்தான் ஆரியன். கூச்சமேயில்லாமல் இவன் பேசி வைத்த மோகத்தின் அர்த்தங்களைக் கேட்டவளின் வெட்கச் சிலிர்ப்பு, இருவரின் இளமையைச் சோதித்துப் பார்த்தது.

அடைபட்டுக் கிடந்த நதியின் புது வெள்ளம் உடைபட்டதில், இடம் மாறிய இதயங்கள் இரண்டும் இன்பமாகவே இசைந்தன. இனி காத்திருப்பிற்கு அவசியமேயின்றிப் போக, உயிர்களிரண்டும் சங்கமித்தன.

டானியாவிற்குக் கணவன் மீது இத்தனை காதலா? அவளையும் மிஞ்சும் காதல் அவனிடமா எனப் பிரித்துணர முடியாத கணக்குப் போய்க் கொண்டிருந்தது. அதில் நிச்சயமாகக் கூட்டலும் பெருக்கலும் தான் மிகுந்திருந்தது.

“You’re making me go crazy babes!”

மென் குரலில் அவன் காதோரம் முணுமுணுத்ததில் சிலிர்த்து போனவளின் வெட்கம், காதல் கொண்டவனை மேலும் ஈர்த்தது. பிறகென்ன, அங்கு மறுபடியும் ஒரு தேடல் ஆரம்பமாயிற்று.

மன்மதக் கிறுக்கு இப்போ தானே தொடங்கியிருக்கு. அவனின் ப்ரின்சஸ் போட்டுக் கொண்டிருந்த மோகத் தாள்கள் இன்னும் இன்னும் அவனைக் காதல் கிறுக்கனாக்கப் போவது உறுதி.