தீராதது காதல் தீர்வானது – 15
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் 15 :
ரோஜாக்களும் உலர்ந்து போகுமாம்
நீ புன்னகைக்க மறந்தால்..
அட்லாண்டா, ஜார்ஜியா. அந்தப் பெரிய எஸ்டேட் வீடு மிக அழகாக அமைந்திருந்தாலும் முழு அமைதியை உள் வாங்கியிருந்தது.
ஷாம், டிவிங்கிள் தங்கள் தனி அறைகளில் ஆழ்ந்த உறக்கம் கொண்டிருக்க, மகனையும் மகளையும் நிறைவாகத் தரிசித்துக் கண்களில் நிரப்பிக் கொண்டார் சைதன்யா.
சப்தம் எழுப்பாமல் தனது அறைக்கு வந்தவர் மருத்துவமனைக்குச் செல்ல ஆயத்தமானார். டானியா ஆரியனின் திருமணத்திற்குச் சென்று வந்ததால் நான்கு நாட்கள் போய் விட்டிருந்தன. இன்று ஒரு நாள் கண்டிப்பாக மருத்துவமனைகளுக்குச் சென்றாக வேண்டும்.
நாளை எப்படியோ? டானியா – ஆரியன் வரவேற்பை முன்னிட்டுச் சைதன்யா குடும்பத்திற்குச் சான் ஃப்ரான்சிஸ்கோ செல்ல நள்ளிரவு விமானத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் போவதா வேண்டாமா என்கிற மனநிலை.
மூன்று பக்கம் கண்ணாடி சுவர்களைக் கொண்டு அமைந்திருந்த சன் ரூமினுள் மிதமான வெப்பம் நிலவியது. இரு பக்க கண்ணாடி சுவர்களை மூங்கில் திரைச்சீலைகள் மறைத்திருக்க, ஒரு பக்கமே அறையின் உள்ளே ஊடுருவிய கதிரவன் பிரகாசமாகத் தெரிந்தான்.
அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளில் மலர்கள் மலர்ந்து சிரிக்க, நீள்சதுர மரத்தொட்டிகளில் வீற்றிருந்த கொத்தமல்லி, புதினா, ரோஸ்மேரி, பேசில், தைம் செடிகள் நறுமணத்தைக் காற்றில் கலந்தன.
அலங்கார குரோடன்ஸ் வகைகள் அகங்காரத்தை ஏந்தி கதிரவனையே முறைத்து நிற்க, என் கதிர்களால் பசுமையைப் பெற்று முறைப்பும் எனக்கேவா என நினைத்துத் தன் தகிப்பை மேலும் கூட்டினான்.
கோடை காலத்தில் இதெல்லாம் மிகவும் சகஜம் என்பது போல வீட்டின் வெளியே கம்மென்று நின்றிருந்தன பல்வகை மரம் செடி கொடிகள்.
தேஜூ என்றழைக்கப்படும் தேஜஸ்வினியின் நிலை கதிரவனுக்கு நேர்மாறாக இருந்தது. புத்தம் புதுக் காலையிலேயே தன் பிரகாசத்தைத் தொலைத்து, தலையைக் கைகளில் தாங்கி அமர்ந்திருக்கும் அவரின் தோற்றம் அப்போது உள்ளே நுழைந்த சைதன்யாவின் கண்ணில் பட்டுவிட்டது.
மனைவியின் மனநிலை என்ன என்பது சைதன்யாவுக்கு நன்றாகத் தெரியும். அதைப் பற்றிய ஓர் உரையாடலை இப்போது ஆரம்பிக்க வேண்டுமா? வேண்டாம் எனத் தோன்றியது.
டானியாவின் போக்கை நன்றாக அறிந்தவர் சைதன்யா. ஏன் தேஜூ அவளை இத்தனை வருசங்களில் புரிந்து கொள்ளவில்லை? மனைவி சில விசயத்தைப் பிடித்து வைத்துக் கொண்டிருப்பது வீண் என நினைத்தார். தன் மனதில் நினைத்ததை மனைவிடம் சொல்லவில்லை.
ஒரு தாயாகத் தேஜூ கொண்டிருந்த சில உணர்வுகள் என்றும் மாறாது.
தன் பிள்ளைகளுக்கான தாயின் உணர்வுகள் சில, தனி வகை எனச் சொல்லலாம். கண்டிப்பாகத் தந்தைக்கும் பிள்ளைகளின் மேல் பாசம், பரிவு, கண்டிப்பு, நட்பு, பொறுப்பு எனப் பல வகையான உணர்வுகள் இருக்கும்.
ஆனால் தாயினது வித்தியாசம் தான். சில நுண்ணுணர்வுகள்… நிறைய ஆண்கள் அதனைச் சரியாகப் புரிந்து கொள்ளத் தவறி விடுகிறார்கள்.
எங்களுக்கும் பிள்ளைகள் முக்கியம் தான். ஆனால், அதையே நினைத்துக் கொண்டிருந்தால் வேறு கடமைகளை என்ன செய்ய? Let go என எளிதாகச் சொல்லி விடுவார்கள். பல பெண்களுக்கு அப்படி விட முடிவதில்லை.
இங்கு டானியா சைதன்யா பெற்ற மகள் கிடையாது. இவர்களிடையே சராசரி தந்தை மகளின் உறவு நிலை ஏற்படுவது என்பது கேள்விக்குறியே! அது காலத்தின் கையில் என்றும் சொல்லலாம். சம்பந்தப்பட்டவர்களின் மனநிலையைப் பொறுத்தது எனவும் சொல்லலாம்.
சைதன்யாவிற்குத் தன் மனைவியின் மனதை புண்படுத்தி விடக் கூடாது என்பதில் ஒரு கவனம் எப்போதும் உண்டு. அதனாலேயே இப்போ வரை டானியா சம்பந்தப்பட்ட யாவும் மென்மையாகத் தான் கையாளப்படுவது.
மனைவி தேஜூவின் டானியாவிற்கான ஏக்கமும் அவருக்குத் தெரியும். டானியாவின் விலகல், உதாசீனம், ஒட்டாத தன்மை. அதனால் மனைவி படும் அவஸ்தை தெரிந்தது தான். ஆனால் தற்போது ஷாம், டிவிங்கிள் வரை வந்துவிட்டது. தேஜூ தான் காரணம் என்பதால் சைதன்யாவிற்கு ஒரு வகையில் கோபம் அவர் மேல்.
பின்னே, தன் மகளின் குணம் தெரிந்தும் அவளின் புராணத்தை இங்குப் பாட வேண்டியது அவசியமா? உங்க அக்கா எனச் சொல்லிச் சொல்லி வளர்த்ததால், அதுவே ஷாம், டிவிங்கிளிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டிருந்தது. அக்கா அக்கா என இவர்கள் உருக, டானியா அதை அங்கீகரிக்கவில்லை.
மறுமணத்தில் எப்போதும் தொடரும் சங்கடங்கள். சிலவற்றிற்குக் காலப் போக்கில் தீர்வு ஏற்படலாம். சில சங்கடங்கள் அப்படியே தொடரும். தர்மசங்கடங்களாக.
மறுமணம் புரிவது ஆணோ பெண்ணோ.. சில சிக்கல்களைக் கடந்திடத் தான் வேணும். இங்குத் தேஜஸ்வினிக்குத் தான் மறுமணம். சைதன்யாவிற்கு அப்படியில்லை. இது முதல் திருமணம்.
அதிலும் தேஜஸ்வினியை மிகவும் விரும்பிக் கை பிடித்தவர். அப்படி ஆவலாக மணம் புரிந்தவருக்கு டானியாவைச் சார்ந்த விசயங்கள் யாவும் முதலிருந்து சவால்கள் தாம். என்ன தான் மனைவியின் மகளைத் தனதாக ஏற்றுப் பழக முயன்றாலும் டானியா முதல் நாளிலிருந்து அதற்கு இடம் கொடுக்கவும் இல்லை. சைதன்யாவை ஓர் உறவாக என்ன, ஆளாகக் கூட நினைத்து பேசியதில்லை.
போகப் போகச் சரியாகி விடும் எனக் கணவன் மனைவி இருவரும் நினைத்திருக்க, நடந்தது வேறு. டானியா சைதன்யாவிடம் ஒட்டவேயில்லை. தன்னைப் பெற்றவளிடமிருந்தும் விலகிப் போக ஆரம்பித்தாள். சின்னச் சின்ன விசயத்திற்கும் எதிர்ப்பைக் காண்பித்தாள்.
தேஜஸ்வினிக்கு இருதலைக்கொள்ளி நிலை. டானியா இந்தளவு பிடிவாதம் பிடித்துத் தன் விருப்பமின்மையைக் காண்பிப்பாள் என நினைக்கவில்லை. மகள் ஒரு பக்கம். புதுக் கணவன் மறுபக்கம். மகளின் செய்கையைச் சைதன்யா எப்படி எடுத்துக் கொள்வாரோ என்ற பதைப்பு, கவலை.
அப்போதும் லுகாஸ் உடனான விவாகரத்தைத் தவறு எனும் நோக்கில் தேஜூ சிந்தித்திருக்கவில்லை. லூகாஸை பிரிந்தது காதலின் இழப்பாக அவருக்குத் தெரியவில்லை. அந்த மாதிரியான நிலையையெல்லாம் கடந்து விட்டிருந்தார்.
அவரளவில் உடன்பாடில்லா நிலை, சில கம்ப்ளெயின்ஸ். சரி செய்ய முயன்றும் ஒத்து வரவில்லை. காதல், நேசம், ஈர்ப்பு, புரிந்துணர்வு என்பதெல்லாம் தொலைந்தே விட்டிருந்தது. பிரிவே சரி எனத் தோன்ற, பிரிந்து விட்டிருந்தனர். அதுவே ஒரு வகையில் நிம்மதியைக் கொடுத்தது.
டானியா எந்த நேரமும் சோகத்தை ஏந்தி நடமாட, சைதன்யாவிற்கு அவள் மனம் புரிந்தது. தன் கூடு கலைந்ததை ஜீரணிக்க முடியாத தவிப்பு. தாய் தந்தையின் பிரிவு பெரிய இழப்பு அவளுக்கு. குழந்தையுமல்ல குமரியுமல்ல.. இரண்டிற்கும் நடுவில் டீன் ஏஜிற்கு முன் நிற்கிறாள்.
குழந்தையாக இருந்தால் அன்பினால் கடக்க வைக்கலாம். இவ்வளவு போராட்டமும் சஞ்சலமும் எழாது. குமரியாக இருப்பின் சில புரிதல் இருக்கும். அப்படி இல்லையென்றாலும் அது வேறு விதமான பிரச்சனைகளைத் தந்திருக்கும்.
டானியா நிற்பது இரண்டும்கெட்டான் பருவத்தில். அடம் வேறு அதிகம். இவளை எப்படிச் சரி செய்வது? சைதன்யாவிற்குள் இதே தான் ஓடிக் கொண்டிருந்தது அந்த நிலமையில்.
லுகாஸ் மேல் தவறா, தேஜூ மேல் தவறா, இல்லை, வேற காரணத்தால் அவர்களுக்குள் ஒத்துப் போகவில்லையா? ஏதோ ஒன்று. பிரிவு வந்து உறவு முறிந்தது.
டானியாவின் இழப்பில் உறவாக முளைத்த சைதன்யாவை எப்படி அவளால் சகிக்க முடிந்திருக்கும்?
தந்தை மேல் கொள்ளைப் பிரியம். அந்த இடத்தில் யாரையும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. தந்தையிடம் பேசி தன் தாத்தா பாட்டியிடம் சென்று விட்டாள். முற்றிலும் விலகி. இவர்களைத் தன் வாழ்விலிருந்து விலக்கி வைத்து.
தேஜூ இதை எதிர்பார்த்திருக்கவில்லை. பெரிய அதிர்ச்சியைக் கொடுத்து டானியா பிரிந்து சென்று விட, மனவுளைச்சலுக்கு ஆளானார். இதில் சைதன்யா மேல் என்ன தவறு? டானியாவிடம் நல்ல முறையில் தான் நடந்து வந்தார். உடனே அவள் மேல் பொங்கும் அன்பும் பாசமும் அவருக்கு வந்திருக்கவில்லை. ஆனால் பரிவு இருந்தது.
பின் முப்பதுகளில் நின்றவர். ஒரு மருத்துவர். அப்போதே ஒரு பெரிய மருத்துவமனை, மூன்று க்ளினிக்ஸ் அவரிடம். அவர் வயதின் பக்குவம், படிப்பு, அநுபவம் எல்லாமும் கை கொடுத்தது. அந்தக் கால கட்டத்தை மிக அழகாகக் கையாள, தேஜூவின் மறுமணம் பிழைத்து நிலைத்தது. இப்போ வரை நன்றாகச் செல்கிறது.
ஒரு வகையில் லுகாஸ் மற்றும் சைதன்யா பார்வையில், டானியா தன் தாத்தா பாட்டியின் அரவணைப்பிற்குள் தஞ்சமடைந்தது சரியாகப்பட்டது. தேஜூ இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார். இப்போது இவர்களிடம் இரண்டு புகழ் பெற்று நிற்கும் பெரிய மருத்துவமனைகள். நான்கு க்ளினிக்ஸ். மருத்துவ ஆய்வகங்கள்.
சைதன்யாவின் குடும்பம் பெரியது. செல்வந்தர்கள். அந்தப் பின்புலம் கை கொடுத்து இருந்தாலும் சைதன்யாவின் உழைப்பும் புத்தி கூர்மையும் மெச்சுதலுக்குரியது. தேஜூவையும் நிர்வாகத்தில் இழுத்து விட்டு, யோசனைச் சுழலிலிருந்து தப்பிக்க வைத்திருந்தார். விரும்பி மணம் புரிந்தவரல்லவா? எப்போதும் ஒரு படி மேலே சென்று மனைவிக்காகவே அவர் யோசிப்பது.
“குட் மார்னிங் தேஜஸ்! பலமான யோசனையாடா?”
மனைவியின் தலையில் கை பதித்து மெலிதாகத் தடவி விட்டு, மற்றொரு இருக்கையில் அமர்ந்தார். எதிரே இருந்த மேசையின் மீது வீற்றிருந்த அன்றைய நாளிதழை எடுத்தவர் தேஜூவை விழியோரப் பார்வையால் பார்த்தார்.
சைதன்யாவின் வரவையோ குரலையோ தேஜூ உணரவில்லை. அப்படி அவர் இருப்பது மிக அபூர்வம். இன்று இப்படித் தேஜூ இருந்தது சைதன்யாவிற்கு ஏனோ பிடிக்கவில்லை.
“சுஷ்ஷ்.. என்னதிது?” என மனைவியை நோக்கி அவர் குரல் உயர்த்த,
“ஹாங்! என்ன.. என்ன கேட்டீங்க?” என புரியாமல் கேட்டார் தேஜு.
“ம்ம் என் மனைவிக்குக் குட் மார்னிங் சொன்னேன். வேற ஒன்னுமில்லை.”
சைதன்யா அழுத்தமான குரலில் ஒரு தோரணையுடன் சொல்ல, அப்போது தான் தேஜூ அவரை உணர்ந்து தன் நினைவைக் களைந்தார்.
“குட் மார்னிங் டியர்!” அவசரமான புன்னகையுடன் காலை வணக்கத்தைச் சொன்ன தேஜூவின் டியர் இதமளித்தது சைதன்யாவுக்கு. தாங்களிருவர் மட்டும் இருக்கும் போது தேஜூ சொல்வது.
ஆனால், அந்தப் புன்னகை உதடுகளுக்கு எட்டவில்லையே!
“தேஜூ, அங்க பாரு…” ரோஜாத் தொட்டிகளைக் காண்பிக்க, டிவிங்கிள் புதிதாக வைத்திருந்த வெள்ளை ரோஜாச் செடி பூத்துக் குலுங்கி மலர்ந்து சிரித்தது.
“மார்னிங்கே டல்லடிக்கிறடா. அந்த ரோசஸ் மாதிரி சந்தோஷமா சிரியேன். ப்ளோரிடாவிலிருந்து ரெண்டு வாரத்துக்குப் பிறகு வந்திருக்க. நம்ம வீட்டுக்கு வந்த நிம்மதியும் சந்தோஷமும் இருக்க வேண்டாமா?
வா, ப்ரேக்ஃபாஸ்ட் சேர்ந்து சாப்பிடலாம். எத்தனை நாளாச்சு நமக்கு இப்படி ப்ரைவசி கிடைச்சு. மார்னிங்ஸ் ஆர் ஆல்வேஸ் கிரேசிலி பிஸி. வொன் ஹவர்ல நான் ஹாஸ்பிடல் போகணும்.”
“ஹாஸ்பிடலுக்குக் கிளம்பிட்டீங்களா? சாரி கவனிக்கல டியர். டென் மினிட்ஸ் வெயிட் பண்ண முடியுமாப்பா, சப்பாத்தி போட்டுடறேன். மாவு பிசைந்து வச்சிருக்கேன்.”
“ஓகே வெயிட் பண்றேன் போடுடா. நானும் ஹெல்ப் பண்ணவா?”
“இப்படி ஸ்மார்ட்டா போர்மல் டிரஸ்லயா? வேண்டாம். நான் பார்த்துக்கிறேன். நீங்க டேபிள்ல இருங்க. வரேன்” என டைனிங் டேபிள் நோக்கி சைதன்யாவை திருப்பி விட்டு சமையலறைக்குள் நுழைந்தார் தேஜூ.
ஏற்கெனவே பால், சீரியல் வகைகள், ஓட்ஸ், ஜூஸ் வகைகள் என டைனிங் டேபிளில் வைக்கப்பட்டிருந்தன. அதைக் கண்டதும் மனைவியின் கடமையுணர்ச்சியை எண்ணி சைதன்யாவுக்குப் புன்னகை அரும்பியது.
பத்தே நிமிசத்தில் சுடச்சுட சப்பாத்தி, முட்டைப் பிரட்டல், தேநீர் சகிதம் தேஜூ வர, இருவரும் சேர்ந்தே உண்டனர். உணவின் ருசியைச் சிலாகித்துப் பேசியபடி சைதன்யா சாப்பிட, தேஜூவிற்கு மனமும் வயிறும் நிறைந்தது.
உணவு உண்டு முடித்ததும் சைதன்யா டானியாவின் ரிசப்ஷன் பற்றி பேச்சை தொடங்கினார்.
“தேஜஸ், என்ன ஐடியாவோட இருக்க? நாளைக்கு ஈவ்னிங் டானியா- ஆரியன் வெடிங் ரிசப்ஷன். நாம என்ன செய்றோம்? போறோமா இல்ல..”
சைதன்யா முடிக்காமல் தேஜூவின் முகத்தில் பார்வையை நிலைக்க விட்டார். அதுவரை இருந்த இனிமை கலைந்து, தேஜூவின் முகம் வாடியது. அதில் யோசனை, குழப்பம், கவலை என மாறி மாறி வந்து போனது.
“தெரியல… மிஸ் பண்ணக் கூடாதுன்னு மனசு சொல்லுது. ஆனா ரொம்ப யோசனையா இருக்கு. ஷாம், டிவிங்கிள் மனசுல என்ன இருக்கோ… பயமா இருக்கு…” தேஜூவின் குரலிலும் முகத்திலும் கவலை அப்பிக் கொண்டது.
அவரின் கவலை கண்டு சைதன்யாவிற்குக் கஷ்டமாக இருந்தது. இதுவரை சொல்ல வேண்டாம் என நினைத்து விட்டு விட்டது தான். ஆனால், இன்று தான் நினைப்பதை, தன் மனதை மறைக்காமல் வெளியிட்டார்.
“ஏன் அப்படி.. அந்த யோசனை, பயம் எதுக்குத் தேஜூ?”
“ஹ்ம்ம்.. டானி. அவளைப் பத்தித் தான். என்ன சொல்ல? ரொம்ப ஃபீல் பண்றேன்பா இப்போ. ரொம்பவே மனசு கஷ்டமா இருக்கு.”
“…”
சைதன்யா அமைதி காக்க, தேஜூ, “கல்யாணத்துக்கு ரெண்டு வாரம் முன்னாடி நானும் பிள்ளைகளும் எவ்வளவு ஆவலா புறப்பட்டு அம்மா வீட்டுக்கு போனோம்? டானியா பெருசா எந்த ஒரு ரியாக்ஷனையும் காட்டிக்கொள்ளல.
அம்மா வீட்ல இருக்கிற வரை அக்கா அக்கான்னு டிவிங்கிளும் ஷாமும் அவளை ஆசையா சுத்திச் சுத்தி வந்தாங்க. இது வரை ஒண்ணு ரெண்டு தடவை தான் இவங்க அவளைப் பார்த்திருக்காங்க இல்லையா? ஆனா ரொம்பவே அக்கா மேல பாசம் வச்சிருக்காங்க. அவளுக்கு அந்த மாதிரி எதுவும் இருக்கல” என்றார்.
“எப்படி இருக்கும் தேஜூ? நீ அப்படி எதிர்பார்க்கிறதே தப்பு. இத்தனை வருசத்துல, டானியா உன் மேல் பாசத்தைக் காண்பிச்சிருக்காளா? எனக்குத் தெரிஞ்சு இல்ல.
என்கிட்ட பேசுறது கூடக் கிடையாது. அப்போ நீ நம்ம பிள்ளைகளுக்கு அந்தப் பாசம் கிடைக்கும்னு எப்படி நினைச்ச? தப்பு உன் பேர்ல தான். டானியா மேல தப்பில்ல.
அவ அப்படின்னு தெரிஞ்சும் நீ ஷாம் டிவிங்கிள் மனசுல பாசத்த வளர்த்துட்ட. இப்போ டானியா இவங்க கூடச் சரியாப் பழகலன்னு வருதப்படுற. நம்மள மாதிரி நம்ம பிள்ளைகளுக்கும் சங்கடம். என்னத்தச் சொல்ல?”
“இப்படி ஆகும்னு நான் நினைக்கலப்பா. எப்படியும் என் மேல அவ பிடிச்சு வைச்சிருக்கக் கோபத்த விட்டுடுவா. அம்மாங்கிற பாசம் இல்லாமயே போய்டுமா? எப்படியும் வந்துருவா.
உடனே இல்லாட்டியும் ஒரு நாள் புரிஞ்சுக்குவா. அப்போ இங்க வந்து நம்ம கூட இருப்பா. இந்தப் பிள்ளைங்க அவகிட்ட சகஜமா இருக்கணும். வித்தியாசம் காட்டிட கூடாதுன்னு நினைச்சு தான் நான் அப்படிச் சொல்லிக் கொடுத்து வளர்த்தது.
ஆனால், டானி கோபத்தை விடவேயில்லை. நான் இப்போ சமீபத்துல போய்த் தனியா பார்த்து பேசிட்டு வந்தும், அம்மான்னு தேடி வரல. வளர்ந்து நல்ல விவரம் தெரிஞ்ச பொண்ணா இருந்தும் என்னைப் புரிஞ்சிக்கல. ஷாம், டிவிங்கிள் ரெண்டு பேரின் பாசமும் அவ கண்ல படல. பாசம் யாரை விட்டது?
டானி தான் வரல. கல்யாணமும் நிச்சயம் ஆகியிருக்கும் போது, நம்ம போய்க் கூட இருந்துட்டு வருவோம். கல்யாணம் முடிஞ்சதும் அடுத்து எப்ப சந்தர்ப்பம் கிடைக்குமோன்னு நினைச்சேன்.”
கண்கள் கலங்க பேசிய மனைவியின் கரத்தை பிடித்துத் தட்டிக் கொடுத்த சைதன்யா, “சரி விடுடா. நீ இப்படி வருத்தப்பட்டா எங்களுக்குக் கஷ்டமா இருக்கு. நடந்ததை மாத்த முடியாது. போன காலமும் திரும்ப வராது. நீ, இனி கொஞ்சம் மாறிக்கோ. டானியாகிட்ட எதிர்பார்ப்பை வச்சுக்காத. அவ நேச்சர் அப்படின்னு ஈசியா எடுத்துக்க. புரிஞ்சதா?” என சமாதானம் செய்தார்.
“ம்ம்.. புரியுது.”
மெல்லிய புன்னகையைத் தேக்கி கணவனைப் பார்த்த தேஜூ, “ரிசப்ஷனுக்குப் போவோமா, இல்ல, வேண்டாமா? நீங்க சொல்லுங்க” எனக் கேட்க,
“அஸ் யூ விஷ் தேஜஸ். இதுல நான் எதுவும் டெசிஷன் எடுக்கப் போறதில்ல. டானியாவின் ஸ்பெஷல் இவென்ட். மிஸ் பண்ணிட்டுப் பின்னால் நீ வருத்தப்படக் கூடாது.
அதுவுமில்லாமல், வெடிங்ல நம்மகிட்ட எல்லோருமே நல்லா நடந்துகிட்டாங்க. ஆரியன் பேமிலி ரொம்ப நல்லா பழகுறாங்க. நல்லா கவனிச்சாங்க. டானியா பட்டும்படாமல் நடந்தாலும், ஆரியன் அதையும் அழகா ஹேண்டில் பண்ணான்” என்றார்.
“ஆமாம்பா, அவங்க அக்கா ஆதிரா, ஷாம் டிவிங்கிள் ரெண்டு பேரையும் தனியா விடவேயில்ல. ஃபங்ஷன் அப்போ அவங்க டுவின்ஸ் குட்டீஸ் கூட இருக்கிற மாதிரி, எல்லாத்துலயும் கலந்துக்க வச்சு.. எனக்கே பெரிய ஆச்சரியம் தான்…”
“ம்ம்.. நல்ல குடும்பம். டானியா இஸ் கிஃப்டட். சரி நான் கிளம்பறேன்.. டைம் ஆகுது. நீ யோசிச்சு என்ன முடிவு எடுத்திருக்கிறன்னு கால் பண்ணி சொல்லு தேஜஸ். நைட் ஃப்ளைட். நம்ம கிட்ட ரொம்ப நேரம் இல்லை. சீக்கிரம் கால் பண்ணிடு. பைடா!”
சரியாக அந்த நிமிடம், “குட்மார்னிங் ம்மா! குட் மார்னிங் ப்பா!” என ஷாம் வர, அவனை முந்திக் கொண்டு ஓடி வந்தாள் டிவிங்கிள்.
அம்மாவின் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு, அப்பாவின் இடுப்பைக் கட்டிக் கொண்டு காலை வணக்கத்தைச் சொன்னாள்.
பிறகு, “ப்பா நைட் எத்தனை மணிக்கு நமக்கு ஃப்ளைட்? எப்ப சான் ஃப்ரான்சிஸ்கோ போய் லேண்ட் ஆவோம்? நா த்ரீ லஹங்காஸ், டூ பார்ட்டி டிரஸ் எடுத்து வச்சிருக்கேன். அங்க போய் அக்கா டிரஸ்க்கு எது மேட்ச் வருதோ, அதைப் போட்டுப்பேன்” என ரிசப்ஷனுக்கு ஆயத்தம் ஆகும் குதூகலத்தில் டிவிங்கிள் இறங்க, தேஜஸ்வினியும் சைதன்யாவும் பார்வையால் சந்தித்துக் கொண்டனர்.
“அக்கா டிரஸ்க்கு எதுவும் மேட்ச் ஆகலன்னா என்ன ஸ்டார் பண்ணுவ?” என ஷாம் தங்கையை வம்பு இழுத்தான்.
“அக்கா ரிசப்ஷனுக்குப் போறோமாப்பா?” எனக் கேட்ட மகனின் முகத்தில் என்ன கண்டாரோ தேஜூ, “நீ சரி சொன்னால் போவோம். இல்லைனா போகலை” எனப் பரிவாக அவன் கன்னத்தில் தடவினார்.
அம்மாவின் கரத்தை இறுக்கமாக பற்றிக் கொண்ட ஷாம், “போகலாம் ம்மா. ஜஸ்ட் ஃபார் யூ!” எனக் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டு வந்தான்.
அக்கா தன்னை என்ன, தன் பெயரைக் கூடத் தெரிந்து வைத்திருக்கவில்லை என ஷாமிற்குக் கோபம். தங்களிடம் பழக ஆசை காட்டவில்லை என்ற வருத்தமும் இருக்க, முதல் நாள் தான் அம்மாவிடம் புலம்பித் தள்ளி வேதனையைக் கொட்டியிருந்தான்.
இங்கு டானியாவை பற்றிய எண்ணங்களுடன் இவர்களின் காலைப்பொழுது நகர்ந்து கொண்டிருக்க, அதே சமயம் இன்னும் இருவர் அவளால் சிந்தனை வயப்பட்டு இருந்தனர்.