தீராதது காதல் தீர்வானது – 13

அத்தியாயம் 13 :


பெண்ணே பெண்ணே தொலைகிறேன்..
என் நாளின் பல மணிதுளிகள்
உனது நினைவின் பிடியில்…
என் வானும் மண்ணும்
உனது காலடியே..
பெண்ணே பெண்ணே…
பெண்ணே பெண்ணே கடந்து வா..
உன் மனதின் கிலேசங்கள்
நமது நேசத்தின் இடையில்…
உன் மகிழ்ச்சியும் மலர்ச்சியும்
நமது காதலிலே..
பெண்ணே பெண்ணே…

தன் அருகில் படுத்திருந்தவளை இமைக்காமல் பார்த்திருந்தான் ஆரியன். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் டானியா. அவளருகில் உருண்டு நெருங்கிப் படுத்தவனுக்கு இது கனவே என்று தோன்றிக் கொண்டே இருந்தது.

அவளின் சீரான சுவாசம் சூடாக அவனைத் தீண்டி, ‘இது கனவல்ல மடையா.. நிஜமே!’ என உறுதிப்படுத்தியது.

அசைவில்லா அசந்த தூக்கத்திலும், பால் வண்ண லில்லி மலராய் மலர்ந்திருந்த முகத்தில் தெரிந்தது மகிழ்ச்சிக்கு அத்தாட்சியாய் இதழோரப் புன்னகை. அதில் ஈர்ப்புக் கொண்டவனானான் ஆரியன்.

மெலிதான உரசல்களும் தயக்கமுமாய் அவனின் சுட்டு விரல், அவளின் சிவப்புப் பட்டு ரோஜா நிற உதடுகளின் பிளவை ஆராய்ந்தது. ரோஜாவின் நிறத்தை மட்டுமல்ல அதன் மென்மையையும் தத்தெடுத்திருத்த அவளின் அதரங்களின் மென்மையில் ஆரியன் சிலிர்த்துப் போனான்.

ஒரு கையூன்றி தலையைத் தாங்கி ஒருக்களித்துப் படுத்திருந்தவன் இமை சிமிட்டாமல் காதலியின் முகத்தையே பார்த்திருந்தான்.

வெண் நெற்றியில் புரண்டு சுகம் கண்டு கொண்டிருந்த கூந்தல் சுருள்களைக் கண்டு பொறாமை கொண்டவன், தன் விரல்களை அவற்றுள் நுழைத்து மென்மையாகக் கவ்விக் கொண்டான்.

ஆரியனின் ஸ்பரிசம் உணர்ந்தது போல் காதலர்களாகப் பிணைந்திருந்த அவளின் இமைகள் மேலும் அழுந்திக் கொண்டன.

உறக்கத்திலிருந்தவளின் அச்சிறு அசைவும் ஆரியனின் கண்களுக்குத் தப்பவில்லை.

இவனைப் பித்தனாக்கவென்றே டானியாவை அழகு சித்திரப் பாவையாக்கி உருக் கொடுத்திருந்தான் போலும் பிரம்மதேவன். ரசனையுடன் அவளின் மேனியில் படர்ந்தது அவனின் விழிப்பார்வை.

அவனின் காதல் மயக்கம் மெது மெதுவே அதிகரித்துக் கொண்டே போனது. இது தான் காதல் போதை என்பதோ? புரியவேயில்லை ஆரியனுக்கு. ஒன்றுமே செய்யாமல் தன்னை எப்படி மயக்கி வைத்திருக்கிறாள்? கள்ளி! செல்லமாகக் கொஞ்சிக் கொண்டான்.

அந்நொடி அவன் கண்ணில் பட்டது அவளின் வெண் கழுத்தை அலங்கரித்திருந்த புத்தம் புதுப் பொன் தாலி!

‘நீ கட்டியது.. உன் சரி பாதி அவள்.’ அது சொல்லிய இனிய சேதியில் முறுவலித்தான். இரண்டு நீண்ட வருடங்களுக்குப் பிறகு என்னவளாகி இருக்கிறாள். ஆரியனின் இதயத்தில் தித்திப்புக் கூடியது!

டானியா ஏதோ அவசரகதியில் தன் காதலை ஏற்றுக்கொண்டதும், உடனேயே திருமணத்திற்குச் சம்மதம் சொன்னதும் ஆரியனை இன்பமாக அதிர வைத்துப் பேருவகைக் கொள்ளச் செய்திருந்தாலும், அவன் மனதில் ஓர் உறுத்தல் எழுந்திருந்தது.
தான் அவளுக்கு நிரம்பவும் அழுத்தத்தைக் கொடுக்கிறோம் எனக் கவலை கொண்டிருந்தான். அவளின் திருமண ஒப்புதலின் உறுதி எந்தளவு எனப் புரியாமல் ஆரியன் குழம்பியிருந்தான்.

திருமண ஏற்பாடுகள் துரிதமாக ஒரு பக்கம் நடைபெற்றாலும், அவன் மனதில் சஞ்சலம் புறுபுறுத்துக் கொண்டிருந்தது உண்மை. அதனால், திருமணத்திற்கு மூன்று நாள் முன் வரை எந்த வகையிலும் அவளைத் தொடர்பு கொள்ளாமல் துன்புற்றான். அவளும் துன்புற்றிருக்கிறாள் என்பதை அறியாமல்.

அவள் சிந்திக்க வேண்டும் என்பதை விடத் தன்னை நிந்தித்து இருக்கட்டும் என நினைத்தானோ? இல்லை…

இவன் அழைத்துப் பேசப் போக, அந்த உரையாடல்கள் ஏக்கம், எதிர்பார்ப்பு, கொஞ்சல், சிணுங்கல் என நேசமும் காதலுமாய்க் கரைந்து நன்றாகப் போனால் மனதிற்குச் சந்தோஷம்.
எதிர்மறையாக அவளின் சிந்தனை வேலை செய்து, ஒப்புக் கொண்ட திருமண நிச்சயத்திலிருந்த உறுதி ஆட்டம் கண்டு விட்டால்?

நீயாகவே உன் மனக் கிலேசங்களைக் கடந்து வா பெண்ணே.. அதுவரை உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன். காத்திருப்பேன் பெண்ணே!

இப்படித் தான் நினைத்துக் கொண்டு தன் வேலையில் மூழ்கி இருந்தான். ஆனால், இலண்டன், ஐரோப்பா என அவன் தொழில் நிமித்தம் வேலைகளை முடித்து விமானம் ஏறிய நொடியிலிருந்து அவனை அலைக்கழித்தவளை என்ன செய்வதாம்?

ஆர்வத்தை அடக்கவே முடியாமல் விமானம் தரையை முத்தமிட்ட நொடியே டானியாவின் எண்களை அழுத்தி விட்டிருந்தான் ஆரியன்.

அன்று நடந்தது இன்னும் பசுமையாய் நினைவிலாட, அழகானதொரு புன்னகை விரிந்தது ஆரியனிடம். ‘அப்பப்பா! அந்த ரியாக்‌ஷனை நான் எதிர்பார்க்கவே இல்லையடி.. இது என் டார்லிங்கான்னு சந்தேகம் வந்து என்னையே கிள்ளிப் பார்த்துக்கிட்டேன் தெரியுமா?’
அருகில் உறங்குபவளுடன் தன் மென்குரலில் செல்லமாய் உரையாடிக் கொண்டிருந்தான்.
டானியாவின் முக வடிவை தன் கூரிய விழிகளால் அளந்தவனுக்கு, தங்கள் திருமணம் நடந்து முடிந்து விட்டதா என்ற வியப்பே!

யாரோடு யாரோ
யாரிங்கறிவர்…
வினையின்றி விண்மீனை
இதயத்தில் சிறை பிடித்திட
தவமின்றித் தவித்துக் கிடந்தான் ஒருவன்…
கனிந்திட்ட இரண்டு இதயங்களில்
விண் முட்டிடும் காதல்…
அந்நேசம் தருவித்த சுக களிப்பில்
மோகிக்கக் காத்துக் கிடந்தான் மற்றொருவன்…
யாரோடு யாரோ
விதி சொல்லும் தீர்வு!

நேற்று முன் தினம் காலையில் டாம்பாவில் வைத்து டானியா ஆரியன் இருவருக்கும் திருமணம் முடிந்திருந்தது. உறவும் நட்பும் சூழ இனிதே நடந்திருந்த திருமண விழாவில் அனைவருக்குமிடையே சந்தோஷமான மனநிலையே நிலவியிருந்தது.

ஒருவனைத் தவிர. ரோகன்! ரோகனின் மனம் ஏமாற்றத்தில் கசங்கி துடித்திருந்ததை ஆரியன் டானியா உட்பட எவரும் அறிந்திருக்கவில்லை. அவனின் வெளிப் புன்னகைத் தோற்றம் அஸ்வினின் சந்தேகத்தையும் மங்கச் செய்திருந்தது.

ஒருவேளை பிரகதி உடன் இருந்திருந்தால் தன் அண்ணனின் நிலை அவள் கண்களில் பட்டு இருக்குமோ? தன் அன்னையின் உடல் நலம் முன்னிட்டு பிரகதி இந்தியாவிலிருந்து வர இயலவில்லை. திருமணத்திற்கு அவள் அனுப்பிய வாழ்த்தும் பூச்செண்டும் மட்டுமே வந்து சேர்ந்திருந்தது.

சீத்தல் இரு தினங்கள் முன்பே வந்து உடனிருந்தது டானியாவிற்கு மிகவும் உதவியாக இருந்தது. திருமணம் முடிந்ததும் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு அப்படியே அவள் கிளம்பி விட்டிருந்தாள்.

ஆரியன், அஸ்வின், டானியா மூவரும் ரோகனை வற்புறுத்தியும் நில்லாமல் திருமண வரவேற்பிற்கு வந்து விடுவதாகக் கூறிவிட்டு அவனுமே டாம்பாவிலிருந்து சிகாகோவிற்குச் சென்று விட்டிருந்தான்.
அதற்கு மேல் தன் வேதனையை மறைத்து வேடமிட அவனுக்குத் திராணியிருந்திருக்கவில்லை.

டானியாவின் அப்பா லுகாஸ், அவர் மனைவி எலைன், டானியாவின் அம்மா தேஜூ, அவர் கணவர் சைதன்யா, அவர்களின் பிள்ளைகள் டிவிங்கிள், மற்றும் ஷாம், தாத்தா, பாட்டி, பெட்ரோ என அனைவருடனும் உறவாடி ஓரிரு நாட்களைச் செலவளித்துவிட்டு ஆரியன் டானியா மற்றும் ஆதிரா குடும்பமும், அஸ்வினும் மட்டுமே சான் ஃப்ரான்சிஸ்கோவிற்குத் திரும்பியிருந்தனர்.

தங்கள் வீட்டில் தனிமையில்..

ஆரியன் காதலும் ஏக்கமுமாய் எதிர்பார்த்திருந்த இரவும் வந்தது. பயண அலுப்பும் நேர வித்தியாசமும் டானியாவை உறக்கத்தின் பிடியில் தள்ள, வேறு வழியில்லாமல் ஆரியனும் சில மணித்தியாலங்கள் உறங்கி விட்டிருந்தான்.

விடியலுக்கு முன் விழிப்பு தட்டிவிட, மனைவியின் சுகந்தம் கலந்த அறையில் நிலவிய புதிய சுவாசம் ஆரியனைத் தூண்டியது.

மனைவியின் மனதை நெருங்கியிருந்தவன் உடலால் நெருங்கிக் கலந்திட மிகவும் யோசித்தான். டாம்பாவில் கிட்டிய தனிமையின் போது டானியா நெகிழ்ந்திருந்தாலும் ஆரியன் தயக்கம் காட்டினான்.
சில காரணங்களை எண்ணி தயங்கியவன் தன் சபலங்களை அடக்கி, காதல் மனதால் மோகிக்கத் துடித்த புலன்களையும் விலங்கிட்டு வைத்திருந்தான்.

ஆனால், தற்போது இருவரும் இருந்தது அவனின் அறை. எத்தனை இரவுகள் தன் தேவதையின் நினைவுகள் தந்த ஏக்கங்களைச் சுமந்து தனிமையில் தவித்து வாடி இருக்கிறான்.
இன்று? அந்த ஏக்கங்களைத் துடைத்து தன்னவனுள் ஒரு மன நிறைவைத் தந்து கொண்டிருக்கிறாள். ஆரியனின் நெஞ்சத்தில் காதல் சந்தோச ஊற்றாய் தழும்பிற்று…
அவளின் வெண்சங்குக் கழுத்தில் இவன் கையால் அணிவித்திருந்த பொன் தாலி, இவனை உசுப்பேத்தி விடவெனவே இரவு விளக்கின் மங்கிய வெளிச்சத்திலும் பளிச் பளிச்சென்று மின்னிக் கொண்டிருந்தது.

மிக அதிக உரிமையுடன் தன் மனையாளின் மார்பில் ஊர்ந்த தாலியைப் பெருமூச்சுடன் பார்த்தவன் அதனை லேசாகச் சுண்டி விட்டான்.

‘சிலிங்ங்…’ அந்தச் சிறு ஒலியில் டானியாவின் முகத்தில் சின்னதொரு சிணுங்கல்! அச்சிணுங்கலால் லேசாகச் சுருங்கியது அவளின் நாசி. அதில் கவரப்பட்டவனாக எடுப்பாக வடித்து வைக்கப்பட்டிருந்த நாசியில் ஒரு பக்கமிருந்த சிறு மச்சத்தை அரை இருளில் தேடினான்.

தேடலில் வெற்றி கண்டவன் பரிசை பெறுவதற்குப் பதில் பரிசைக் கொடுத்தான். முத்தப் பரிசு!

அதுவரை டானியாவின் துயில் கலையாமல் காதலில் கசிந்துருகியவன், அம்மச்சத்தைப் பார்த்ததும் பரவசமானான். தன்னை மறந்து மச்சத்தில் பச்சென்று இச்சொன்று வைத்தான்.
அந்த ஒரேவொரு இச்சோடு நில்லாமல் மேலும் இரண்டு முத்தங்களை அவளின் இமைகளில் பதித்தும் விட்டான். அப்போது தான் அவளின் அசைவை உணர்ந்தான்.

என்ன தான் திருமண அலைச்சலும் அலுப்பும் தந்த அசதியில் உறங்கிக் கொண்டிருந்தாலும், பெண்ணவளின் நுண்ணுணர்வுகள் தன்னவனின் தொடுகையை உணர்ந்து கொண்டன. அவனின் இதழ்களின் ஈரத்தில் சிலிர்த்துப் போய் இமைகளை மலர்த்தினாள் டானியா.

அவ்வளவு அருகில் ஆரியனைக் கண்டதும் ஒரு நொடி பயந்து பின் புரியாமல் விழித்தாள். விடியலைத் தொட சோம்பிக் கொண்டிருக்கும் இரவின் கடைசி மணித்துளிகள். தூக்கம் இன்னும் முழுமையாக அகலாமல் மலங்க மலங்க விழித்தவளைப் பார்த்து புன்னகைத்தவன்,

“ஹாய்… என்ன அப்படிப் பார்க்கிறாய்? யாருடா இதுன்னா?” எனக் கேலியாக வினவினான்

“ஹாங்ங்!! ம்ம்.. ம்குகூம்..”

மேலும் கீழும் இடமும் வலமுமாய்க் குழப்பமாகத் தலையாட்டி வைத்தவளை நேசம் சொட்டப் பார்த்தான். அவளின் செய்கை சிரிப்பைத் தந்தாலும், அதனை இதழ்க்கடையில் மறைத்துச் செல்லமாக அவள் கேசத்தைக் கலைத்தான்.

“ஹே பேப்ஸ்! என்னடா இது இப்படி முழிக்கிறே? உனக்குத் தாலி கட்டினவன்மா. உன் வொன் அண்ட் வொன்லி ஹஸ்பண்ட் ஆரியன் நேத்தன்.”

அதற்குள் தூக்கத்தை முற்றிலும் விரட்டி விட்டிருந்தாள் டானியா. அவளின் நெஞ்சத்தில் உதித்தன பல கேள்விகள்.

‘இப்போ என்ன தெரியணும்டா உனக்கு? நான் உன்னை முழுமனதாக ஏற்றுக் கொண்டதும் உன் காதலை அர்ச்சிப்பதும் உனக்குப் புரியவில்லையா?

அது புரியாமல் தான் என்னைத் தவிர்த்தாயோ? அன்று என் சம்மதம் கேட்டுப் போனவன் பிறகு பார்க்க வராமல், பேசாமல் எத்தனை நாட்கள் என்னைத் தவிக்க விட்டாய்… ஏனாம்?

நம் திருமணத்திற்குப் பிறகு, இப்போ உனக்கு எப்படித் தோன்றுகிறது? என் நிலையை உன்னிடம் வந்து எப்படிச் சொல்வதாம்?

அது எப்படி.. எப்படி, ‘என் வொன் அண்ட் வொன்லி ஹஸ்பண்ட் ஆரியன் நேத்தனா?’ என டானியாவின் உள்ளம் படபடத்தது. இதழ்கள் பிரிந்து பரபரவென வந்துவிட்டிருந்தன வார்த்தைகள்.

“தெரியும்!! இப்பவும் எப்பவும்.. ஃபார் திஸ் லைஃப் டைம் அண்ட் பியாண்ட், யூ.. வொன்லி யூ!”

தனது சுட்டு விரலை அவன் புறம் நீட்டியவள், புன்னகையுடன் அவனின் முகத்தில் தனது விழிப்பார்வையைப் பதித்தாள். அவளின் விழிகளில் நேசம் சொட்டியது. இதயம் காதலை உணர்ந்து கொண்டதால் முகம் மகிழ்ச்சிப் பொலிவைக் காட்டியது.

காதலியின் ‘தெரியும்’ என்ற ஒற்றை வார்த்தை காட்டிய உரிமையான அழுத்தத்தில் சிலிர்த்தவன், அடுத்தடுத்து அவள் உதிர்த்த வார்த்தைகளால் உறைந்து அவளின் உயிரில் கரைந்து போனான். இதைவிட அவனுக்கு என்ன வேண்டும்?

தன் காதலுக்குக் கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி! ஆம், வெற்றி தான்..
டானியாவிடம் பிரதிபலிக்கும் தன் நேசத்திற்கான எதிரொலி ஒவ்வொன்றையும் வெற்றி தோல்வி என இரு பிரிவாகச் சேகரிக்கும் பழக்கமுடையவன் ஆரியன். இதுவரை வெற்றி எப்போதும் அளவுகோலில் உயர்ந்தே இருந்தாலும், இன்று உச்சாணியைத் தொட்டு விட்டதே!

எந்தவித எதிர்பார்ப்புமின்றிச் சும்மாவேனும் வம்பு வளர்த்தான். ஆனால் டானியா என்ன மாதிரியான பதிலைச் சொல்லிவிட்டாள்? ஆரியனின் இதயத்தில் காதல் ஊற்று நிரம்பித் தளும்பிற்று.

இதழ்களில் ஓடிய பெரிய புன்னகையுடன், தன்னை நோக்கி நீண்டிருக்கும் அவளின் விரலுடன் தன் சுட்டு விரலை இறுக்கமாகப் பிணைத்துக் கொண்டான். ஆழ்ந்து அவளை நோக்கியவன் தன் விழிகளை அவளின் விழிகளுடன் கலந்தான்.

முதல் முறை சந்தித்த பொழுதே தன்னை அவனிடம் ஈர்த்து நேச விதையைத் தூவி விட்டிருந்த அவனின் நீலநிற நயனங்களில் லயித்தாள் டானியா. மிக ஆழமாக ஊடுருவி அதிலேயே உயிர் புதைந்து கட்டுண்டு நிமிடங்களைக் கரைத்தாள்.

அந்த நீலநிற விழிகள் அவளை என்னென்னமோ செய்ததில், சடசடவென வெட்கக் கோடுகள் படர்ந்தன அவளுள்.

தன் விழிகளை அவசரமாகத் திருப்பியவளின் முகம் மட்டுமல்லாமல் மேனியும் செம்மையைத் தத்தெடுத்துக் கொண்டது. செங்காந்தள் மலரவள், நடுங்கிய தன் மேனியை அவன் கண்டு கொண்டு விடாமலிருக்கும் பொருட்டு அவனருகாமையை விட்டு அதிவேகமாக விலகினாள்.

அவளின் முயற்சியை நொடியில் உணர்ந்து அவள் கையைப் பிடித்தவன், அவளைவிட அதிவேகமாகச் செயல்பட்டு, அவளைப் பற்றித் தன் அருகில் இழுத்தான். இழுத்த வேகத்தில் அவளைத் தன் மேல் போட்டுக் கொண்டு வெற்றிப் பார்வையை வீசினான்.

எதிர்பாராமல் ஆரியன் இழுத்ததில், அவன் மேல் முழுமையாக விழுந்திருந்தவள் கொடியெனப் படர்ந்த தோற்றமளித்தாள். முதலில் அதிர்ந்து நிமிர்ந்தவள் காதலனின் முகம் காண, அங்குப் பிரதிபலித்த நேசச் சாரலில் சில மணித்துளிகள் சுகமாக நனைந்து உறைந்தாள்.

பின் தன்னிலை உணர்ந்து நாணத்துடன் அவனின் நெஞ்சில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள் டானியா.

காதல் ஊற்றுப் பெருக்கெடுத்து ஓடி மோகக் கரையில் நிற்க, தன் மேல் படர்ந்திருந்திருந்த மென் பட்டு ரோஜாவை ஆவலாக வளைத்தன ஆரியனின் உறுதியான கரங்கள். பெண்ணவளின் காதல் உணர்வுகளும் மெல்ல மெல்ல விழித்தெழுந்தன.

“ப்ரின்சஸ்.. ஹே”

“…”

“பேப்ஸ்.. இங்க பார்டா.”

“…”

முகம் நிமிர்த்தினாளில்லை. இன்னுமே அவன் நெஞ்சில் புதையுண்டாள் டானியா. பார்வையால் உரசிக் கொண்டிருந்த ஆரியனை வார்த்தைகளற்ற அவளின் மௌனம் ஈர்த்து மேலும் முன்னேற தூண்டியது.

தன் விரல்களால் அவள் முகம் நிமிர்த்தி விழிகளுடன் காதல் மொழி பேசியவன் இதழ் உரசல்களைத் துவங்கினான்.

என் உரசல்கள்
பார்வைகளில் இருந்து
இதழ்களுக்கு இடம் பெயர,
வார்த்தைகள் இன்றி
வெட்கத்தைக் கோர்த்து
பரிசளித்தாள் காதலி..

டானியாவும் தன் இதழ்களுடன் பொருந்தி அவனின் இதழ்கள் உரசல்களாய் துவங்கிய மென் முத்தங்களை விருப்பத்துடன் ஏற்றாள். சில நிமிடங்கள் மென் முத்தங்களுடன் கரைய, ஆரியன் தான் விலங்கிட்டு வைத்திருக்கும் மோக உணர்வுகளுக்கு மெது மெதுவாக விடுதலை அளித்தான்.

இதுவரை காதலில் உருகி கரைபுரண்ட உணர்வுகளின் பிடியிலிருந்த டானியாவினுள் ஓர் எச்சரிக்கை உணர்வு வர, மெதுவாகப் பின் வாங்கினாள். திண்ணெனத் திளைத்திருந்த அவன் தோள்களுள் புதைந்து மோகிக்கத் தான் டானியாவிற்குமே ஆசை. ஏனோ, இனம் புரியா பயம்..

காதலியின் மாற்றத்தை நிமிடத்தில் உணர்ந்த ஆரியனின் கண்கள் அவளது விழிகளை நோக்கின. அங்குப் புதிதாக முளை விட்டிருந்த பயம்.. அதனால் ஏற்பட்டிருந்த தயக்கம்.. அவள் உடல்மொழியில் பரவிய இறுக்கம்.. சட்டென வடிந்து விட்டிருந்தன அவனின் உணர்வுகள்.

நொடியில் டானியாவை விட்டு விலகினான் ஆரியன். திடீரெனத் தடைப்பட்ட உணர்வுகள், அங்கு கனமான கணங்களை இருவருக்குமிடையில் உருவாக்கி விட்டிருந்தன. இதற்குத் தான் என் உணர்வுகளை விலங்கிட்டு அடக்கி வைத்திருந்தேன். இன்னும் அவளுடைய அம்மாவின் தாக்கம் அவளிடமிருந்து அகலவில்லை. என் மீதும், அவள் மீதுமே டானியா நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போது தான் எங்கள் காதல் வெற்றி காணும்…

மனங்கள் இணைந்தும்
கணங்கள் கனமானது ஏனோ..
சுகிக்காது சுபம் காணுமோ நம் காதல்?