தீராதது காதல் தீர்வானது – 12

அத்தியாயம் 12 :

இதயமது ஒன்று தான்
உன்னைச் சுமப்பதும் அவ்விதயமே..
காதல் தோல்வியால் துடிப்பதும் அதுவே
வேதனையால் வலி கண்டு
கண்ணீர்விட்டு கதறி அழுவதும் அதுவே..
அங்கு வாசம் செய்வதால்
நீயும் என் வலி காண்கிறாயோ?

ரோகன் தன் காதலில் ஏற்பட்ட ஏமாற்றத்தின் மிகுதியால் மனதால் நொந்து போயிருந்தான். எதையும் தன் விருப்பம் போல் செய்து வந்தவனுக்கு இப்போது அவ்வாறு இயங்க இயலவில்லை. காரணம் ஆரியன். அஸ்வினின் அண்ணனாகப் போய்விட்ட ஆரியன், ரோகனின் செயலாக்கத்தைத் தடை செய்தான்.

எப்போதும் சுற்றுப்புறத்தில் யார் இருக்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்றெல்லாம் யோசியாமல், கேர்-ஃப்ரீ அட்டிட்யூடுடன் திரியும் ரோகனுக்கு நண்பர்கள் மிகமிகக் குறைவு.
அதிலும் உயிர் நண்பர்கள்? ம்கூம்… அஸ்வினை சந்திக்கும் வரை எவருமில்லை எனலாம். அப்படிப்பட்டவன் அஸ்வினின் நட்பை மிகவும் மதித்தான். அபூர்வமாகக் கிடைத்த உயிரான நட்பல்லவா?

கடந்த இரண்டு வருடங்களில் ஆரியனையும் அவனின் திறமையையும் கண்டு பிரமிப்பில் ஆழ்ந்தவன், அண்ணன் தம்பி இருவரும் தன்னிடம் காட்டும் அன்பில் கரைந்து போனான். அதுவே அவனின் இயல்புநிலையைச் சற்று மாற்றியிருந்தது எனலாம். ஆரியனைத் தன் அண்ணனாகவே நினைத்து மிகவும் மதிக்கிறவன் ரோகன்.

வேறு யாரையாவது மணம் முடிக்கப் போகிறாள் என்று கேள்விப்பட்டிருந்தால் இந்நேரம் தன் காதலியைக் காண பறந்து சென்றிருப்பான். அவள் முன் மண்டியிட்டுத் தன் காதலை உணர்த்தி அவளினது இதயத்தின் நேசத்தை யாசித்து விட்டிருப்பானே?

ரோகன் இப்படி வேறு எதையும் யோசித்துக் கொண்டிருக்க மாட்டான். ஆனால், சில மணித்துளிகள் முன் அஸ்வினிடம் பேசும் போது அவன் சொன்ன செய்தி ஆரியனுக்கும் டானியாவுக்கும் திருமணம் என்றல்லவா?
இனி அப்படியே அவளிடம் நேரிடையாக எப்படிக் காதலை வெளியிட முடியும்? இருந்தும் தாள முடியாமல் ஃபோனில் அழைத்து அவன் கேட்டுத் தான் விட்டான்.
நேரிடையாகத் தன் காதலை வெளியிடாமல் பதிலைப் பெற்று விட்டான். தன் நேசக் கவிதைகளின் பொருளாய் திகழ்பவளின் செம்பவள இதழ்கள் உரைத்தன அவளின் காதலை.

ஆனால், அக்காதல் இவனுக்காக அல்லவே? இப்படி மனம் இன்னும் கனம் தாளாமல் துடிக்கவா அழைத்தான்? இல்லையே… தனக்குத் தன் காதல் கூடி வரும் வாய்ப்பு வாய்க்கும் என்று நம்பிக்கை வைத்தல்லவா அழைத்தான்?

இவனின் அந்நம்பிக்கை நிமிடங்களில் பொய்த்துப் போனதே!

ரோகன் டானியா மீதான தன் காதலை உணர்ந்தது சில வாரங்கள் முன்பு தான். ஆனாலும் இப்போது அக்காதல் கானல் நீராகப் போகிறது என அறிந்ததும் அவனிதயம் துடித்து மருகியது. வேதனை தருவித்த வலியால் தாள மாட்டாமல் அவனின் காதல் நெஞ்சம் வாசம் செய்யும் அவனது சிறு இதயம் கண்ணீர் வடித்து அழுதது.

ரோகனின் அழுகை டானியாவை எட்டுமா? அவனின் இதயத்தின் ஓலம், அதன் துடிப்பு, வலி என அவள் உணர்வாளா?

ஒரு நாள் காதலித்தாலும் ஒரு யுகம் காதலித்தாலும் காதல் தோல்வியது வலி தரத்தானே செய்யும்? அதுவும் தோல்வியை அறிந்திராதவன் ரோகன். முதன் முதலில் காதலிலா தோல்வியைச் சந்திக்க வேண்டும்? என்ன கொடுமை!

இரவெல்லாம் தனிமையில் பலவாறாக யோசித்த ரோகன், விடியலில் ஒரு முடிவிற்கு வந்தான். நிச்சயித்த இந்தத் திருமணம் நடந்து முடியும் என்று என்ன உறுதி? கடைசி நொடி வரை எதுவும் நிச்சயமில்லை. அதனால் அந்நொடி வரை தனக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது எனக் கருதினான்.

அதற்காக ரோகனுக்கு அத்திருமணத்தைத் தடுத்து நிறுத்தும் எண்ணம் ஏதுமில்லை. ஆரியனிடம் பொறாமையோ காழ்ப்புணர்ச்சியோ அவனுக்கு எழவில்லை. எந்தச் சதியும் அவன் மனதில் இல்லை.

இத்தனை ஏன், அவன் காதலை கூட யாரிடமும் தற்போது சொல்லப் போவதில்லை. இவன் ரியாக்‌ஷன் கொடுத்த விதத்தில் அஸ்வினுக்குச் சந்தேகம் முளை விட்டிருக்கலாம். இனி, கவனம் கொள்ள வேண்டும் என முடிவு செய்து கொண்டான்.

அந்த நிர்மலமான மனதில் விண்ணை முட்டுமளவு காதல். தன் தூய நேசத்தின் மீது வைத்த நம்பிக்கை மட்டுமே!
ரோகன் தன் மனதை யாரிடமாவது திறந்து காட்டியிருக்கலாம். நல்ல எண்ணம் கொண்டு தான் மறைத்தான். ஆனால், அவனின் இந்த முடிவு சரியா, தவறா?
டானியாவின் திருமணம் நல்லமுறையில் நடக்குமா? ஆரியன் அவளின் கை பிடிப்பானா, இல்லை, ரோகனின் காத்திருப்பு வெற்றி காணுமா?
அப்படி ரோகன் தோல்வியுற்றான் என்றால்…

நிஜமதில் மனமொடிய ஒரு நொடி போதும்
நிஜமதை கடந்திடவே திடமான நெஞ்சம் வேண்டும்!

மனமொடிந்து போவானோ இல்லை நிஜமதை ஏற்று கடந்திடுவானோ?


சுவிஷ்ஷ்… மிக மெல்லிய ஒலி எழுப்பியது அந்தச் சிறிய மணிக்கூடு. மெது மெதுவே அதன் டெசிபெல் கூடக் கூடப் பெட் சைட் டேபிலில் இருந்த மணிக்கூடு உயரே எழும்பியது.
சுவிஷ் ஒலி மாறி ஜாஸ் மியூசிக்குடன் அக்கட்டிலின் மீது அது வட்டமடிக்கத் தொடங்கிய நேரம், அந்த நீளக் கரம் உயர்ந்து அதனை எட்டிப் பிடிக்க முயன்றது.

அவன் விரல்கள் மட்டும் அதனை உரசி தோல்வியைத் தழுவிய நேரம், “சை.. ஜஸ்ட் மிஸ்ட் டா” எனப் பிரிந்தும் பிரியாமலும் அழுத்துக் கொண்டன அவனின் உதடுகள். அந்த அழுப்பும் மிக மிருதுவாகச் செல்லக் குரலில் தான் வெளிப்பட்டது.

இத்தனைக்கும் பிரியாமல், காலை நேரம் மோகிக்கத் துடிக்கும் காதலர்களைப் போல் தன் இணையுடன் கூடி இருந்த அவனின் இமைகள் மேலும் அழுந்த கூடிக் கொண்டன. அழகான அதிகாலை நேரத்தில் வண்ணங்கள் சிந்தி கிறங்க வைத்துக் கொண்டிருக்கும் கனவை கலைக்கப் பிரியமில்லாது.

அதிலும் இன்று கனவில் வந்தவள் அவனை… மீண்டும் இதழில் ஓடிய புன்னகையுடன் சுகமான அக்கனவில் அவன் தொலைந்து போக விளைந்த நொடியில் ஜாஸ் மியூசிக் மாறியது.

ராக் அண்ட் ரோல் மியூசிக் ஒலிக்கத் தொடங்கவும், அவசரமாகத் தன் கம்ப்பெர்டரை இழுத்துப் போர்த்திக் கொண்டு தலையணையில் அழுந்த புதைந்தான். ஹைய் டெசிபெல் ஒலி செவிகளை எட்டும் முன்.

ஓரளவு வெற்றி கண்டு கனவு நிலைக்கு எட்டியவன், தன் நாயகியின் உதடுகளின் அருகே தன் உதடுகளை ஒட்ட வைக்க அவசரம் காட்டிய வேளை, விடாது கருப்பு போல் இப்போது அவனின் மொபைல் துடித்தது.

பட்பட்பட் எனத் துடித்த மொபைல், நொடிகளுக்கு முன் லப்டப் லப்டப் லப்டப் எனத் துடித்துக் கொண்டிருந்த அவனின் இதயத்துடிப்பை மாற்றியது. அவனின் மாற்றம் கண்டவளுக்கு எரிச்சல் பொங்க, அக்கனவு நாயகி கோபித்துக் கொண்டு விடை பெற்றாள்.

தூக்கம் அவனுக்குப் பை பை சொல்லாதே ஓடிப் போக, வேகமாக எழுந்தவன் மெத்தையில் முட்டி போட்டு லாவகமாகப் பறக்கும் மணிக்கூடை எட்டிப் பிடித்தான்.

மொபைலை கைப்பற்றியவன் தொடுதிரையில் தன் ஆள் காட்டி விரலை பதித்ததும் யாரெனப் பாராமலே, “யாரு இந்த நேரத்தில கூப்பிட்டு என் டார்லிங்க விரட்டி கனவை கலைச்சது?” எனக் கோபமே இல்லாமல் வைதான்.

“டேய்! சொல்லவே இல்ல படுவா பயலே.. யாருடா உன் டார்லிங்?”

மறுபக்கம் கண் சிமிட்டியபடி வம்பிழுத்தது சாட்சாத் நம் கௌதமே தான்.

“மாமோய்ய்! ஹிஹி… அதாங்.. நம்ம..”

அதற்குள் இடையில் புகுந்து, “வெட்டிப்பேச்சு பேசும் நேரமா இது? இவங்களை ஷ்ஷ்.. கௌதம்!” என வெளிப்படையாகப் பல்லைக் கடித்தவள் மானசீகமாய்த் தன் கணவனின் தலையில் நச்சு நச்சுவெனக் கொட்டினாள் ஆதிரா.
வேற என்ன செய்வாள் பாவம் பாவையவள்? அவர்கள் நின்று இருந்ததோ பீனிக்ஸ் விமான நிலையம்.

டானியாவை பார்த்துவிட்டு அவளின் குடும்பத்தாருடன் திருமணம் பற்றிய சம்பிரதாயப் பேச்சுக்களைப் பேசி வர கிளம்பியிருந்தனர் கௌதமும் ஆதிராவும் தங்கள் இரட்டைச் செல்லங்களுடன்.

மௌவி தீவிலிருந்து டாம்பா செல்லும் வழியில் பீனிக்ஸில் லே ஓவர். கிடைத்த அந்தக் கேப்பில் தான், அஸ்வினும் கிளம்பி விட்டானா என அறிய அழைத்திருந்தனர்.

ஆம், இவ்வளவு நேரம் படுக்கையில் தன் டார்லிங் ஷ்ரதா கபூருடன் கனவில் மிதந்து கொண்டு லிப் டு லிப் அடிக்கும் வாய்ப்பைக் கடைசி நொடியில் இழந்தது அஸ்வின். ஆரியனின் தம்பியாகப் பிறந்து விட்ட அஸ்வின் தான்.

‘ஓகே ஜானு’ எனும் ஹிந்தி படம் பார்த்துவிட்டு தூங்கியதன் விளைவு. ஏதாவது ஒரு சினிமாவைப் பார்த்துவிட்டு தூங்கினானென்றால் அன்று இரவு வரும் கனவில் ஒரு டார்லிங் வந்து விடுவாள். அப்படித் தான் ஷ்ரதாவை கனவில் அவன் கட்டிப் பிடித்ததும் முத்திரை பதிக்க முயன்றதும்.

அவன் கனவில் வரும் டார்லிங்ஸ்க்கு மொழி பேதமில்லை. ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, ஸ்பானிஷ் என நீளும் அப்பட்டியல் வண்ண வெரைட்டியாக.

அதை அறிந்திருந்த கௌதம், “இன்னைக்கு வந்த கிளாமர் ப்யூட்டி யாருடா சின்ன மச்சான்?” சிரிப்புடன் சுவாரசியமாகக் கதை கேட்க,

“ஷ்ரதா பேப்ஸ் மாம்ஸ்.” ஜொள்ளினான் அஸ்வின்.

“அஸ்வின்… இன்னும் கிளம்பலையாடா நீ!” கணவனிடமிருந்து படக்கென்று பறித்து மொபைலை தன் வசமாக்கியிருந்த ஆதிராவிற்குப் பிபி எகிறியது.

“அக்காஆ…”

நிமிடங்களில் இளங்காளை சிறு பிள்ளையாய் மாறி காலைத் தரையில் உதைத்துக்கொள்ள…

“அஸ்வின், டேய்! டைம் ஆகுதுடா உன் ஃப்ளைட்டுக்கு.”

“ஃப்ளைட்டாஆ.. எங்க போகணும் நானு?”

அறியாப்பிள்ளையாய் வினா எழுப்பிய தம்பி, தன் கண்ணெதிரே நேரில் நின்றிருந்தால் ஓங்கி ஒரு போடு போட்டிருப்பாள். தற்போதைய நிலையில் அப்படி ஒன்றும் செய்ய முடியாமல் வெறும் கோபம் கொண்டு வெகுண்டாள் ஆதிரா.

“விளையாடாதே அஸ்வின். டானியாவை பார்க்க போறோம்ங்கிறது நிஜமாவே மறந்து போச்சாடா உனக்கு?”

அக்காவின் தொணியில் கொஞ்சமே கொஞ்சம் வாலைச் சுருட்டிக் கொண்ட அஸ்வின், “எஸ்கா எஸ். ஐ ரிமெம்பர்…” என்றான்.

“அப்போ ரெடியாகாம என்னடா செய்ற இன்னும்? நாங்க பீனிக்ஸ் வந்தாச்சு.”

“போக்கா நான் வரலை…”

“என்னடா சொல்ற, ஏன் வரலை?”

“ஃபோன்ல அவகிட்ட வாங்குன ஆப்பு பத்தாதா? இனி ஃப்ளைட் ஏறி, வலியப் போய் நேர்ல வேற ஆப்பு வாங்கிக் கோர்த்து வைக்கவா? இஷ்ஷ்… முடிலக்கா முடில. பிட்டி மீ… அவளைச் சமாளிக்க அவன் ஒருத்தன் தான் வரணும்.”

“டானியா உனக்கு அண்ணிடா. அவ இவன்னு சொல்லாதேயேன்…”

“அவங்க இவங்கன்னு கூப்பிட்டா அவளுக்குப் பிடிக்காதுக்கா. பிச்சி மேஞ்சிருவா.”

“உனக்கு இப்போ என்ன தான் பிரச்சனை அஸ்வின்? ஆப்புங்கிற.. மேஞ்சிருவாங்கிற. டானியாவுக்குக் கோபம் வர்ற மாதிரி என்ன தான் செஞ்சு வைச்சே? எனக்கு ஒன்னுமே புரியலை போ. நீ இப்போ கிளம்பி வர்றியா இல்லையா?”

“ஹஹா.. உனக்குப் புரியவே வேண்டாம் விடுக்கா. வர்றேன் வர்றேன்…”

“சரி சரி, நீ ஏர்போட்டுக்கு கிளம்பும் வழியைப் பார் முதலில். ஃப்ளைட்ட மிஸ் பண்ணிறாதே.”

“வொன்லி டென் மினிட்ஸ். கிளம்பிடுறேன். டேம்பா வந்ததும் பேசறேன். பைக்கா.”

குளித்து முடித்து ரெடியானவன் நேற்றே தயார் செய்து வைத்திருந்த டிராவல் கேஸுடன் அரக்கப்பறக்க விமான நிலையத்தை அடைந்தான்.

இவ்வளவு நேரம் அக்கா மாமாவுடன் சும்மாவேனும் வம்பு வளர்த்து விளையாடிய அஸ்வின் தற்போது வேறு மனநிலைக்குத் தாவியிருந்தான்.

தன் இருக்கையில் கண் மூடி சாய்ந்திருந்தவன் மனதை ரோகனே ஆக்கிரமித்து இருந்தான். இருவருக்கும் இடையில் நடந்த தொலைபேசி உரையாடலே மீண்டும் மீண்டும் அவன் எண்ண அலைகளில் விரிந்து செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.

தன் அண்ணன் டானியாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற மகிழ்ச்சியை நண்பனுடன் பகிர்ந்ததும்,
“ஹே, சூப்பர்டா! அண்ணனுக்கு என் வாழ்த்துக்கள். நான் பேசறேன் ரெண்டு பேரிடமும். பட், டானியா லவ் பண்றதை நம்மளிடம் சொல்லவேயில்லை பார்த்தியா?” என இப்படித் தானே ரோகன் பேசியிருக்க வேண்டும்.

ஆனால் நடந்தது வேறல்லவா? தன் அதிர்ச்சியையல்லவா பிரதிபலித்தது ரோகனின் குரல்.

அதுவரை இருந்த சிரிப்பும் குதூகலமான நிலையும் நொடியில் மறைந்து காணாமல் போயிருக்க, “ஏன்டா முன்னமே அவங்க ரெண்டு பேரும் விரும்பறாங்கன்னு சொல்லலை?” எனப் படபடவெனக் கோபத்தில் பொரிந்தவன்,

“இப்படின்னு தெரியாம போச்சு எனக்கு. நீ சொல்லி இருக்கணும்டா. ஏன்டா சொல்லாம விட்ட?” என வருத்தத்துடன் கேட்டான். ரோகனின் குரலை புரியாமல் தான் எதிர்கொண்டு இருந்தான் அஸ்வின் அப்போது. யோசிக்க யோசிக்கச் சில நிமிடங்களில் புரிந்தது. ரோகனுக்கு டானியாவின் மேல் ஈடுபாடு இருக்கும் எனச் சுத்தமாக எதிர்பார்த்து இருக்கவில்லை அஸ்வின்.

ரோகன் டானியாவிடம் பேசுவான் என்று கணித்துத் தான் அஸ்வினும் உடனே அவளுக்கு அழைத்துப் பேசியது. ஆனால், டானியாவிடம் ரோகன் காதல் சொன்ன பிரதிபலிப்பை காணவில்லை. இவன் ஆரியனின் தம்பி என்று சொல்லவில்லை என்பதில் நின்று தானே சண்டை பிடித்தாள்?

ஆக, ரோகன் வெளிப்படையாக டானியாவிடம் தன் காதலைப் பற்றிச் சொல்லவில்லை. இனி சொல்லவும் மாட்டான் என முடிவிற்கு வந்திருந்தான் அஸ்வின், நண்பனை அறிந்தவனாக.

அதே போல் ரோகனின் குணமறிந்தவனாதலால் கவலை கொண்டான். சாதாரணமான விசயத்திலேயே ஏமாற்றத்தை அறியாதவன் ரோகன். தோல்வியை எதிலும் சந்தித்ததில்லை எனலாம். காதலில் ஏமாற்றம் தோல்வி என்றால் தாங்கிவிடுவானா?

அவனுக்கு டானியா மேல் இருக்கும் உணர்வு வெறும் ஈர்ப்பாக மட்டுமே இருக்க வேண்டும். அப்போது தான் பெரிய பாதிப்பு ஏதுமில்லாமல் கடந்திடுவான்.

தன் அண்ணனும் டானியாவின் மனமறிந்து தான் திருமணம் வரை வந்திருப்பது. அவர்களின் காதலின் உறுதியில் ஐயம் ஏதுமில்லை என்பதால் ரோகனின் விசயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என முடிவெடுத்தான் அஸ்வின். டானியாவிற்குத் தெரியாமல் இருப்பதும் நல்லது. வீணாக அவளைக் குழப்ப வேண்டாம் என எண்ணினான்.

ஆனால், ரோகனைப் பற்றி ஆரியனிடம் அவன் சொல்லியிருக்க வேண்டுமோ? நடந்ததும் இனி நடக்கப் போவதும் நன்மையாக இருக்க வேண்டும் என வேண்டிய அஸ்வின் எதிர்காலத்தில் நிகழப் போவதை அறியவில்லை.

அவன் மட்டுமல்ல, யாருமே அறியாமல் நடக்கப் போகும் நிகழ்வு ஒன்று வரும். அப்போது அஸ்வின் தன் அண்ணனின் கோபத்தில் சிக்கித் தவிக்கப் போகிறான்.