சுயம்-வரம் 9

அத்தியாயம்-9

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்

அல்லல் உழப்பதாம் நட்பு.

           -குறள் 787

அழிவு தரும் வழிகளில் நண்பன் சென்றால் தடுத்து, நல்ல வழியில் அவனைச் செலுத்தி அவனுக்குக் கேடு வரும் என்றால் அதை அவனுடன் பகிர்வது நட்பு.  (சாலமன் பாப்பையா விளக்கம்)

சரண்யா அன்று மிகவும் சோர்வுடன் காணப்பட்டாள். திருப்பூருக்கு ஒரு வேலையாக சந்திரன் சென்றவன் மார்க்கெட் சென்று வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிக் கொண்டு வந்தான். காய்கறிகள் நிரம்பிய பையோடு பேருந்தில் அமர்ந்திருந்தான் .சரண்யா இன்று பேருந்தில் இடம் கிடைக்காததால் சற்று பின்னால் அமர்ந்திருந்தாள். வழக்கைத்தை விட இன்று அவள் முகம் வாடி இருந்தது. சந்திரனும் பேருந்தின் நடுப்பகுதியில் அமர்ந்திருந்ததால் கவனித்து விட்டான். பேருந்தில் ஏறிய சரண்யா அவனைப் பார்க்கவில்லை. பேருந்திலும் அதற்கு ஏற்ப ஏதோ சோகப் பாடல்கள் ஓடிக் கொண்டிருந்தது. சந்திரனின் கவனம் எல்லாம் சரண்யாவின் மீதும் மற்றும் கைப்பேசியில் வரும் செய்திகளின் மீதும் மட்டும் குவிந்திருந்தது.

அப்போது பலரும் விரும்பும் ‘ஈரமான ரோஜாவே.. என்னைப் பார்த்து மூடாதே.. கண்ணில் என்ன சோகம்?’ என்ற பாடல் இசைத்தது. அந்தப் பாடலைக் கேட்டதும் அருகில் இருந்த ஒரு பெரியவர் அதை முனுமுனுத்தார்.

அருகில் இருந்த பெரியவரின் பாடலைக் கேட்ட சந்திரன் சட்டென சரண்யாவைத் திரும்பிப் பார்த்தான். ஏனோ அந்தப் பாடல் வரிகள் அவளுக்கு அப்படியே பொருந்துவதாகத் தோன்றியது. அவள் முகத்தில் பிரதிபலித்த சோகம் அந்த அளவு இருந்தது.

அவர்கள் ஊர் வந்ததும் இறங்கினர். இன்று அவர்களுடன் சிலர் இறங்கியதால் சந்திரன் சரண்யாவுடன் எதுவும் பேசவில்லை. ஊருக்குள் இறங்கி நடந்து செல்ல வேண்டும். சரண்யாவின் ஊருக்குள் பேருந்து செல்லாது. இறங்கி அரை கிலோ தூரத்திற்கு உள்ளே நடக்க வேண்டும்.

அங்காங்கே தோப்பில் வீடுகளும் இருக்கும். சரண்யாவுடன் இறங்கிய சிலரும் அவர்கள் இடம் வந்ததும் சென்றுவிட சரண்யாவும், ஜெயச்சந்திரன் மட்டும் நடந்து கொண்டிருந்தனர். சரண்யா இன்னும் ஜெயச்சந்திரனிடம் கூட பேசவில்லை.

“சரண்யா.. ஏய் சரண்யா?” என்று இரண்டு முறை அழைத்ததும் திரும்பினாள்.

“என்ன சந்திரா கூப்பிட்டியா?”

“மண்ணாங்கட்டி.. ஏன் பச்சைக் கிளி? எதுக்கு இப்படி முகத்தை டைட்டானிக் கப்பல் கவிழ்ந்த மாதிரி வச்சுகிட்டு வர?”

“ஒன்னுமில்லைடா..” சரண்யாவின் குரல் சோர்வாக ஒலித்தது.

“என்ன ஒன்னுமில்லை? சொல்றதை தெளிவாச் சொல்லு.”

பெருமூச்சு ஒன்றை விட்டவள், “உமாக்காவும் காயுக்காவுக்கும் பிரச்சினை. உமாக்கா மேரேஜ் நின்னு போச்சு.” என்றாள்.

“ஏன் எப்படி?”

நடந்தவற்றை அவனுக்குச் சுருக்கமாக விளக்கினாள்.

“வாவ்.. காயுக்கா செம.” என்றான்.

“அது உண்மைதான். காயுக்கா ரொம்ப நேரடியாகப் பேசக் கூடிய ஆளு. தப்புனா தப்புதான். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் உமாக்கா உண்மை தெரிஞ்சு ஹர்ட் ஆகக் கூடாதுனு மாப்பிள்ளை மூலமா கல்யாணம் தான நின்ன மாதிரி செய்ய முயற்சி செஞ்சுருக்காங்க. ஆனால் அது நடக்கலை. கடைசியில் எல்லா உண்மையும் தெரிஞ்சுருச்சு.”

“எப்படி? உண்மை தெரியறது நல்லதுதானே..”

“அப்படி இல்லைடா. உமாவுக்கு நிறைய தடவை திருமணத் தடங்கல் ஆகிருக்கு. கல்யாணம் தானா நின்னால் இதுவும் பத்தோடு பதினொன்னு. ஆனால் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஏமாத்தி கல்யாணம் பன்ன நினைச்சது தெரிஞ்சால் அது… உமாக்காவுக்கு கல்யாணம் தடங்கலாகிப் போன சூழ்நிலையை யூஸ் செஞ்சுருக்கப் பார்த்திருக்காங்க. அது துரோகம்.”

“ம்ம்ம்…”

“இதில் காயுக்கா கோவிச்சுக்கிட்டு போயிட்டாங்க. உமாக்காதான் அழுதுகிட்டே இருந்தாங்க.”

சரண்யா வருத்தம் படிந்த குரலில் கூறி முடித்தாள். மெலிதாக நகைத்தான் ஜெயச்சந்திரன்.

“ஏண்டா நானே எவ்வளவு வருத்ததில் இருக்கிறேன். நீ என்ன லூசு சிரிக்கற?” சரண்யாவின் குரலில் எரிச்சல் எட்டிப் பார்த்தது.

“ஏன் பச்சைக் கிளி. உனக்கு பேர்ட் பிரைன் இருக்குனு அடிக்கடி புரூஃப் பன்னற. காயத்ரிக்கா, உமாக்காவோட பிரண்ட்ஷிப் இதோடவா முடிஞ்சரப் போகுது. இவ்வளவு பார்த்து செஞ்ச காயத்ரி அக்காகிட்ட உமாக்காவே போய் பேசுவாங்க பாரு. அவ்வளவு லேசில் முறியற பிரன்ட்ஷிப் இல்லை இது. இப்ப நடந்த சம்பவத்துக்குப் அப்புறம் இந்த நட்பு இன்னும் ஸ்டாராங்க் ஆகும்.”

உறுதியான குரலில் கூறினான் ஜெயச்சந்திரன். அவன் கூறியது சரண்யாவுக்கு சற்று நிம்மதி அளித்தது. அரை மனதுடன் தலை ஆட்டினாள்.

“சரி எனக்கு வீட்டில் கொஞ்சம் வேலை இருக்கு. கொஞ்சம் வேகமாக நட பச்சைக்கிளி.”

“ம்ம்ம்..” என்றாள்.

“சரி பௌணர்மி பூசைக்கு வருவியா?”

அவர்களுடைய ஊரில் மிகவும் பழமை வாய்ந்த ஒரு ஈஸ்வரன் பார்வதி கோயில் உண்டு. ஆயிரம் வருடங்கள் பழமை என்று சில கல்வெட்டுகள் கூறுகிறது. அதில் நடக்கும் பூசைகளுக்கு பக்கத்து ஊரிலும் இருந்தும் மக்கள் கலந்து கொள்வர். சரண்யாவும், ஜெயச்சந்திரனும் பள்ளியில் படிக்கும் போது பக்தியில் பூசைகளில் கலந்து கொள்கின்றனரோ இல்லையோ ஆனால் பூசை முடிந்து கொடுக்கப்படும் பொங்கலுக்கு, தயிர்சாதத்திற்கும் இருவரும் அடிமை. எங்கிருந்தாலும் இருவரும் பூசைக்கு வந்து விடுவர்.

இருவருக்கும் மேகம் மறைத்திருந்த நிலவு வெளிப்படுவதைப் போல் போல் பழைய நினைவுகள் வெளிப்பட்டு முகத்தில் ஒரு புன்னகையை முகிழ்க்க வைத்தது.

வரம் தரும்..