சுயம்-வரம் 8

அத்தியாயம்-8

பால்கெழு கிளவி நால்வருக்கும் உரித்தே

நட்பின் நடக்கை யாங்கலங் கடையே.

 தம்முள் ஒருவருக்கு ஒருவர் அன்புடையவராகப் பழகும் இயல்புடையவர்கள் தலைவி, தோழி, செவிலி, நற்றாய் ஆகிய நால்வர் ஆவர். அவர்கள் இன்பம் அற்று துன்பமடையும் காலத்தில் அறிவும் புலனும் வேறுபடக்கூறும் சொல் உரித்தாம்.

பால்கெழுகிளவி- பெண்பாலரிடையே பேசப்படும் சொல். பக்கச்சொல் எனவும் கூறப்படும். கெழு-சிறப்பு.

“காயத்ரி எதுக்கு நீ போய் அவரைப் பார்த்தனு சொல்லு?”

இந்த நிலையில் மற்ற தோழிகள் மூவருக்கும் பிரச்சினை மிகத் தீவிரம் என்று புரிந்து விட்டது. ஆனால் இப்படி பொது இடத்தில் சண்டை போடுவதில் விருப்பமில்லை.

“அக்கா…” சரண்யா கெஞ்சும் குரலில் அழைத்தாள். திவ்யா பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்தாள். ராகினி அமைதியாக இருந்தாள்.

“நான் சொல்றேன். முதலில் மாப்பிள்ளை சார் என்ன சொன்னாருனு சொல்லு?”

உமாவின் முகத்தில் அருவருப்பான முகபாவனை வந்து போனது.

“நீ இந்தக் கல்யாணத்தை நிறுத்த சொன்னியாம். ஏனால் உனக்கு அவரைப் பிடிச்சுருக்காம். தன்னோட பிரண்டோட நிச்சயம் செஞ்சுருக்கவரை எல்லாரும் அண்ணனாப் பார்ப்பாங்க. இந்தப் பொண்ணு என்ன இப்படி இருக்கு. ச்சீ.. இந்த மாதிரி பொண்ணுங்க கூட எல்லாம் சவகாசம் வச்சுக்காத. இதுக்கு முன்னாடி உனக்கு கல்யாணம் நின்னு போனதுக்கு நீதான் காரணமாக இருக்கும். போதுமா? இதைத்தான் சொன்னாரு.”

மற்ற மூவரும் கண்களை  ஓவர் சைஸில் விரித்து உமா கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.  மூவருக்கும்  அடுத்தது என்ன பேசுவது என்று தெரியவில்லை. உறைந்து போய் அமர்ந்திருந்தனர். அதில் கோபப்பட்டு எழுந்தவள் காயத்ரிதான்.

எழுந்தவள் டேபிளில் வைத்திருந்த தண்ணீரை எடுத்துக் மடக் மடக்கென்று குடித்தவள் நிதானமாக எதிரில் இருப்பவளைப் பார்த்தாள்.

தன் கைப்பேசியை எடுத்தவள் பிராட் என்று பதிவு செய்திருந்த எண்ணை எடுத்தாள். உடனே அவனுக்கு அழைத்தாள்.

“ஹலோ..” என்றான் அவன்.

“ஸார் உமாகிட்ட என்ன சொன்னீங்க?”

காயத்ரி ஆத்திரத்துடன் கேட்டாள்.

“ஓ உமா உங்கிட்ட கேட்டுட்டுளா? நல்லது. அவ சொன்னதை அப்படியே சொன்னேன். நான் இந்தக் கல்யாணத்தை நிறுத்தனுமா? எதுக்காக? எத்தனை இடத்தில் பொண்ணுப் பார்த்திருப்போம். இதுதான் ஒன்னும் தெரியாத இளிச்சவாயக் குடும்பம். இத்தனை வருசமா கூட இருக்க உன்னை நம்பலைப் பார்த்தியா? இந்தக் கல்யாணத்தை நீ நிறுத்த முயற்சி செய்யறதுக்கு முன்னாடியே எப்படி நான் உன்னை உமாகிட்ட இருந்து பிரிச்சேன் பார்த்தியா? ஆனாலும் சொல்லக் கூடாது. உமாவுக்கு உன் மேல் பயங்கர நம்பிக்கை. அப்புறம் நாம பேசுன ஆடியோ கிளிப்பை எடிட் செஞ்சு அனுப்பினேன். பாவம் உமா ஆடிப் போயிட்டாள். யாருக்கு அதிர்ச்சியா இருக்காது? தன்னோட கூட இருக்கர பிரண்டே இப்படி தன்னோட வாழ்க்கைக்கு உலை வைக்க நினைச்சா?”

ஏளனத்துடன் கூறி முடித்தான்.

“அப்ப உனக்கு இருக்கற இதய வியாதியை நினைச்சுப் பார்த்தியா? யோசிக்காமல் ஒரு பொண்ணோட வாழ்க்கையை வீணாக்க நினைக்கிற?”

“கல்யாணம் செஞ்சுக்கற எல்லா ஜோடிகளும் பல வருசம் வாழறது இல்லையே. ஆக்சிடெண்ட். தற்கொலை. இப்படி இறக்கறது இல்லையா? அது போலதான் இதுவும். ரொம்ப பெரிசா வந்துட்டா.. பிரண்டு வாழ்க்கையைக் காப்பாத்த.”

“டேய் பச்சை சுயநலவாதி. நீ இன்னும் ஐஞ்சு வருஷமோ இல்லை பத்து வருஷமோ வாழப் போற? அதுக்குப் அப்புறம் உமா நிலையை நினைச்சுப் பார்த்தியா? என்னோட பிரண்டு அப்பாவிடா.”

“ஸாரி. அதுக்கு நான் ஒன்னும் செய்ய முடியாது. அதுக்குத்தான் இத்தனை சொத்து நான் சம்பாரிச்சது இருக்குல்ல. அது உமாவுக்கு குழந்தைக்கும் தானே. எங்க குடும்பத்துக்கு ஒரு வாரிசு வேணும். அதுக்காதத்தான் இந்தக் கல்யாணத்தைப் பன்னிக்குறேன். நீ இதில் தலையிடாமல் இருக்கறது நல்லது. இல்லைனா உன்னோட பேர் இன்னும் நாறும். அப்புறம் இதை நீ ரெக்கார்ட் செஞ்சு காட்டுனாலும் காயத்ரி தொல்லை இல்லாமல் இருக்க நான் அப்படி சும்மா பேசினேன். அப்பதான் நான் நிம்மதியா வாழ முடியும்னு சொல்வேன். எப்படி காயத்ரி என்னோட பிளான்? நம்ம சொசைட்டியில் எந்த தப்பும் நடந்தாலும் பொண்ணுங்களைத்தான் காரணமா சொல்வாங்க.”

“பார்த்துக்கலாம் டா. அதையும்.”

அழைப்பைத் துண்டித்தாள் காயத்ரி. எதிரில் இருந்த நால்வருக்கும் பேச நா எழவில்லை.

காயத்ரி தன் தோழிகள் நால்வருக்கும் கான்பிரன்ஸ் காலில் இணைத்த பின்னர்தான் அவனுக்கு அழைப்பு விட்டிருந்தாள். அழைப்பும் ரெக்கார்ட் ஆகி விட்டிருந்தது.

“நிச்சயத்து அன்னிக்கு நான் சாப்பிட்டுக் கை கழுவ பின்னாடி போன போது இவன் கையில் இருந்து ஒரு மாத்திரை விழுந்தது. அதில் இன்னும் நாலு மாத்திரை பேலன்ஸ் இருந்துச்சு. அது டிகாக்சின் டேப்லெட். டி .சி. எம் அப்படிங்கற இதய வியாதி இருக்கறவங்க போடறது. ஆனால் அல்சர் மாத்திரைனு சொல்லி சாமாளிச்சான். எனக்கு அப்பவே சந்தேகம். எனக்கு மாத்திரைகளைப் பத்தி தெரியும்னு உனக்கே தெரியும். ஆனால் நீ என்னை சந்தேகப்பட்டுட்ட.”

உமாவின் முகத்தில் நிம்மதி படர்ந்தது. ஆனால் தன் பேக்கைத் தூக்கிக் கொண்டு வேகமாக வெளியேறினாள் காயத்ரி.

“அக்கா நான் போய் பார்க்கிறேன்.” சரண்யாவும் பேக்கைத் தூக்கிக் கொண்டு காயத்ரியின் பின்னே ஓடினாள்.

இவ்வளவு செய்த காயத்ரிக்கு மிகவும் பிடித்தது பயாலஜி, கெமிஸ்ட்ரி. அதனால்  பிபார்ம் முடித்து விட்டு திருப்பூரில் உள்ள பிரபல மெடிக்கலில் வேலை பார்க்கிறாள்.

வரம் தரும்…