சுயம்-வரம் 27

அத்தியாயம் 27

காமம் சான்ற கடைக்கோள் காலை

ஏமம் சான்ற மக்களோடு துவன்றி

அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்

சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே.

          -தொல்காப்பியம்.

மனை வாழ்க்கையில் தலைவனும் தலைவியும் இனிமையை இனிது நுகர்ந்து பின்னர் வரும் காலத்தில் இனிமை சான்ற மக்களோடு கூடி இருந்தும் அறன் புரியும் சுற்றத்தினரோடும் சிறந்த முறையில் தவ நெறியில் பயிலுதல் இவ்வளவு காலம் கடந்து பெறும்  பேரின்பப் பயனாம்.

இல்லற வாழ்க்கையில் அறம் புரிந்த வாழ்ந்த பின்பு பேரின்பமான இறைவனை அடைய வேண்டும்.

சந்திரனுக்கு வந்த அஞ்சல் சரண்யாவின் மனதை நெருடியது. ஏனோ அதில் ஏதோ சரியாக இருக்கும் என்று தோணவில்லை. அது எந்தக் கம்பனியில் இருந்து வந்த அஞ்சல் போலும் தோன்றவில்லை.

அதைப் பிரிக்கச் சொல்லி கைகள் பரபரத்தன சரண்யாவுக்கு. ஏனென்றால் அதில் பெங்களூரு செசன்ஸ் கோர்ட்டிலிருந்து வந்திருந்தது.

“கோர்ட் நோட்டீஸ் வர்ர அளவுக்கு என்ன விஷயமா இருக்கும்?”

பொறுத்துப் பார்த்தவள் அதைப் பிரித்தாள். அவள் கண் முன் கோர்ட் சம்மன் இருந்தது.

சுபோனியா அட் டெஸ்ட்டிஃபிகேண்டம் என்ற வகை அது. கோர்ட்டின் முன்பு ஜெயச்சந்திரன் வாக்குமூலம் அளித்தே தீர வேண்டும். இல்லை என்றால் தண்டனைக்கு உள்ளாக நேரிடும்.

செஷன்ஸ் கோர்ட் என்றால் குற்றவியல் நீதிமன்றம் என்று தெரியும். ஆனால் என்ன கிரிமினல் வழக்கிற்கு சந்திரன் சாட்சியாக இருக்க முடியும் என்று தோன்றியது. கூகுளில் சுபோனியாவைப் பற்றிப் படித்துப் பார்த்தாள்.  இப்போதுதான் சரண்யாவின் மூளை வேகமாக வேலை செய்தது.

சந்திரன் பெங்களூரில் இருந்த வந்த தேதியைக் கணக்கிட்டாள். பெங்களூரு நீதி மன்றம் என்றால் அது தொடர்பான பகுதிகளில் நடந்த குற்றம் தொடர்பான வழக்கு.

தன் கைப்பேசியை எடுத்து பெங்களூரில் சில மாதங்களுக்கு முன் நடந்த குற்றங்களை ஆராய ஆரம்பித்தாள்.

சோபாவில் சாய்ந்து கொண்டே மும்முரமாகத் தேடினாள். பல குற்றங்கள் வந்து போனது. அதில் ஐடி துறை தொடர்பாக தேட ஆரம்பித்தாள். முதலில் எதுவும் கிடைக்கவில்லை.

***

சந்திரன் தன்னுடைய திருப்பூரில் ஒரு பேக்கரியில் அமர்ந்து கொண்டிருந்தான். அவன் எதிரில் சமோசா தக்காளி சாசில் குளித்துக் கொண்டிருந்தது. எதிரில் இருந்த நாற்காலியில் ஒருவன் ஃபைலுடன் அமர்ந்திருந்தான்.

“அவ்வளவுதான்.. இந்த வேலை எல்லாம் முடிச்சுட்டா தீபாவளி அப்ப ஓப்பன் செஞ்சிடலாம்.”

“ம்ம்ம்.. ஓகே…”

“ஏய்  ஜெயச்சந்திரா?  என்னடா உன்னோட ஒரு டீரிம் நடக்கப் போகுது. நீ என்னடான்னா? இப்படி இருக்க?”

“ஒன்னுமில்லை.. சரண்யாவைப் பார்க்கனும் போல இருக்கு. அவ கூட சரியாக கூட பேசறது இல்லை.”

எதிரில் இருந்த சந்திரனின் நண்பன் பெருமூச்சு விட்டான்.

“நீங்க இரண்டு பேரும் சரியான பூல்ஸ். உன்னோட மைண்ட் உனக்கே தெரியலையா? உனக்கு சரண்யாவைப் பிடிச்சுருந்தால் போய் ஓப்பனா சொல்லு. நீ எப்ப சரண்யாவைப் பத்தி பேசும் போதும் உன்னோட கண்ணு அப்படி பிரகாசிக்கும். இங்கேயும் சரி பெங்களூரிலும் சரி. உன்னோட பாஸ்டை விட்ரு. சரண்யா கூட பேசி லைஃபை ஸ்டார்ட் பன்னுடா..இடியட்..”

“ப்ச்ச்.. இல்லைடா.. சரண்யாவைப் பொறுத்த வரை எல்லா உறவை விட  பிரன்ட்ஷிப்பை ரொம்ப மதிக்கற ஆளு. இந்த பிரண்ட்ஷிப்பில் இருந்து லவ் இதில் எல்லாம் அவளுக்கு உடன்பாடு கிடையாது. அவளை மேரேஜ் செஞ்சதுக்குப் பின்னாடி என்னை அவாய்ட் பன்னதுக்கு ஒரு காரணம் அதுதான்.”

“அப்படினு உங்கிட்ட சரண்யா சொன்னாங்களா? அது சின்ன வயசில் இருந்த ஐடியாலஜியா இருக்கும். இப்ப எவ்வளவோ சேஞ்சஸ் இருக்கும். ஓப்பனா கேளு.  ஒரு சொல்யூசன் கிடைக்கும். அப்புறம் அதுக்கேத்த மாதிரி ஒரு முடிவு.”

தன் நண்பன் கூறியதைக் கேட்ட அவன் அதற்கு மேல் பேச விருப்பமில்லாமல் சமோசவை எடுத்துக் கடித்தான்.  பிறகு இருவரும் விடை பெற்றுச் சென்றனர். தன் பைக்கை எடுத்த சந்திரனுக்கு அன்று வேலை எதுவும் இல்லாததால் வீட்டுக்குக் கிளம்ப முடிவு செய்தான்.

சரண்யா எப்படியும் காயத்ரியின் வீட்டில் இருந்து வந்திருக்க மாட்டாள் என்று தெரியும். அதனால் வீட்டில் ஓய்வெடுக்க முயன்றான். அவனுக்குமே புரியவில்லை. முதலில் சரண்யாவைப் பார்த்த போது அவனுக்கு நெடுநாள் கழித்து தன் தோழியைச் சந்தித்த மகிழ்ச்சி. அவள் சோகத்திற்கு காரணத்தை அறிய முயன்றான். ஆனால் எதிர்பாராத விதமாக திருமணம். சரண்யாவை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான். முன்பை விட அவள் மனம் ரணப்பட்டு இருப்பதை அறிந்திருந்தான். அவள் மீண்டும் பேசத் தொடங்கிய போதுதான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது. ஆனால் அன்று மாடிப்படியில் தான் நடந்து கொண்ட விதத்தை உணர்ந்த போதுதான் அவனுக்குமே புரிந்தது. சரண்யாவின் மீது கொண்ட அன்பு வேறு விதமாக பரிணாமித்திருந்தது.

அதை உணர்ந்த போது அவனாலும் அதை உடனடியாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதன்  விளைவாக சரண்யாவை கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்க ஆரம்பித்தான். உடனடியாக அந்த விலகல் தெரியவில்லை என்றாலும் சரண்யா உணர்ந்திருந்தாள்.

மாலை நேரமாகி இருந்தது. சோபாவில் கைப்பேசியை வெறித்தபடி அமர்ந்து கொண்டிருந்தாள் சரண்யா. ஜெயச் சந்திரன் பைக்கை நிறுத்தியபடி உள்ளே நுழைந்தான்.

அவன் உள்ளே வந்ததும் சோபாவில் தன்னை மறந்து அமர்ந்திருக்கும் சரண்யாதான் கண்களில் பட்டாள். அருகில் இருந்த டிபாயில் ஒரு கடிதம் கிடந்தது. அதன் கடித உறையைக் கண்டதும் ஜெயச்சந்திரன் முகத்தில் அதிர்ச்சி மற்றும் தடுமாற்றம் உண்டாகியது.

வரம் தரும்..