சுயம்-வரம் 26

அத்தியாயம்-26

மாலை கவியும் போது

தனிமைக் காற்று

ஊளையிட்டுச் சீறும் போது

ஒவ்வொரு வீட்டின்

அடுப்படியிலும்

ஒரு பெண் எரிகிறாள்!…..

இறந்தகாலம்

நிகழ்காலம்

வருங்காலம் என்று

மூன்று நதிகளின் சங்கமத்தில்

ஏவாளின் மகள்

நிரந்தரமாக அழுகிறாள்.

-கண்ணீர் மீன், கவிக்கோ அப்துல் ரகுமான்.

தோழிகள் அனைவரும் காயத்ரியின் வீட்டில் கூடி இருந்தனர். அவள் வீட்டுக்கு வெளியில் உள்ள வேப்ப மரத்தில் கயிற்றுக் கட்டிலைப் போட்டுப் பேசிக் கொண்டிருந்தனர்.

கூடவே வடை, பஜ்ஜி போன்ற பதார்த்தங்களும் காலியாகிக் கொண்டிருந்தன. காயத்ரிக்கு விடிந்தால் நிச்சயதார்த்தம். மாப்பிள்ளைப் பார்த்து பேசி முடித்து இரண்டு நாட்களாகி இருந்தது. நல்ல மூகூர்த்த நாள் வரவும் இரண்டு வாரத்தில் நிச்சயத்தை வைக்க தோழிகள் அதற்குத் தயாராகி வந்தனர்.

அனைத்தும் கனவு போல் இருந்தது. காயத்ரிக்கு தீடிரென்று இப்படி அனைத்தும் ஒத்துப் போய் சம்பந்தம் அமையும் என்று தோன்றவேவில்லை. குருபலன் வரும் போது கூரையைப் பிச்சுட்டு தூக்கிட்டுப் போகும்னு சொல்வார்கள். அதுமாதிரிதான் காயத்ரி உணர்ந்தாள். அனைத்தும் வேகமாக நடந்து கொண்டிருந்தது.

ஞாயிற்றுக் கிழமை முடிவு செய்தபடி அந்த மாப்பிள்ளையைச் சந்திக்க தன் அப்பாவுடன் சென்றிருந்தாள். கோவிலில் தான் சந்தித்தனர். அந்தப் பக்கமும் ஒருவர் தான் வந்திருந்தார். அதனால் தான் காயத்ரி நிம்மதியாக உணர்ந்தாள்.

முதலில் கடவுளை தரிசனம் செய்த பிறகு தனியாகப் பேசச் சென்றனர்.

“ஹாய்..” என்று முதலிலே அவன் பேச ஆரம்பித்தான்.

“ஹாய்…”

“உண்மையை சொல்லனும்னா.. எனக்கு உங்க கேரக்டர் ரொம்ப பிடிச்சுருக்கு. அதான் இந்த சம்பந்தம் பேசச் சொல்லி ஜாதகம் கொடுத்துவிட்டேன்.”

“ஒ… அதுக்குள்ள எப்படி? சரி சொல்லுங்க என்ன கேரக்டர்?”

“ஷார்ட் டெம்பர், கோபம் நிறைய வரும். அப்புறம் தப்புனா உடனே கேட்டுருவீங்க. நெக்ஸ்ட்… ரொம்பவே லாயல். கன்சர்வேட்டிவ் லுக்கில் இருக்க மார்டன் திங்கிங்க் உள்ள பொண்ணு. எதுக்கும் யாருக்கும் கீழ இல்லைனு திங்க் பன்னற டைப். போதுமா?”

“ம்ம்ம்… யார்கிட்ட விசாரிச்சீங்க?”

“விசாரிக்கலை. பார்த்துருக்கேன்.”

“வாட்?”

“யெஸ்.. தெரியும். உங்களைப் பத்தி நல்லாத் தெரியும்.”

“தெரிஞ்சுமா? பார்க்க வந்தீங்க?”

“யெஸ்…”

“ஆனால் ஒரு சின்ன விஷயம். நான் ஒன்றரை வருஷம் யங்கர்.”

தன்னை விட ஒரு ஒன்றரை வயது சிறியவன் என்றதும் காயத்ரி வாயடைத்துப் போய்விட்டாள்.

“இந்தப் பாயிண்டை வச்சு ரிஜெக்ட் செய்ய வேண்டாம். அந்தக் காலத்துலேயே நிறைய பேர் பொண்ணு கிடைக்கலைனு வயசில் மூத்த பொண்ணுங்களை கல்யாணம் பன்னி இருக்காங்க. இப்பவும் அது ரொம்ப காமன். நல்லா யோசிச்சுட்டு சொல்லுங்க. ஆனால் என்னை ரிஜெக்ட் செய்ய இதைக் காரணமாக காட்ட வேண்டாம். நான் ஒரு நல்ல லைஃப் பார்ட்னரா இருப்பேன்.”

அவன் பேசுவதைக் கேட்க வாயடைத்துப் போய்விட்டாள் காயத்ரி. பேசும் போதே அவன் முகத்தை ஆராய்ந்தவளுக்கு அவன் கூறுவது முற்றிலும் உண்மை என்று தோன்றியது.

“யோசிச்சுட்டு சொல்றேன்.” என்று கூறிவிட்டு வந்துவிட்டாள். அன்று முழுவதும் யோசித்தவள் சம்மதம் தெரிவித்துவிட்டாள். பெண் பார்த்தல், சாப்பிட வருதல் என அனைத்தும் வேகமாக முடிய இப்போது நிச்சயத்தில் வந்து நிற்கிறது.

அவர்களின் செட்டில் இயல்பாக நடக்கும் திருமணம் என்பதால் அனைவருக்கும் ஆர்வம் கூடி இருந்தது. நிச்சயத்திற்கு உடை எடுத்தல், தைத்தல், ஆபரணங்கள் தேடுதல் என்று திருப்பூரை தோழிகள் அனைவரும் சல்லடை போட்டு சலித்திருந்தனர்.

இனி அடுத்ததாக கைகளுக்கு அனைவரும் மெகந்தி வைக்கப் போகின்றனர். சரண்யாவும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். எவ்வளவு சிரித்தாலும் சிரித்து முடிக்கும் போது அவளது கண்களில் ஒரு மெல்லிய சோகம்.. அது சோகம் என்பதை விட ஏதோ ஒரு வெறுமை எட்டிப் பார்த்தது.

அது மட்டுமில்லாமல் அனைவரும் சூழ, அங்கும் இங்கும் ஓடி ஓடி வேலைகள் செய்து, வம்பு பேச்சு பேசி, தூக்கமற்று மகளைப் பிரியப் போகிறோம் என்ற கவலையில் குடும்பத்தினர் ஒரு பக்கம் வருத்தப்பட, இதுவரை சண்டை போட்டிருந்த சொந்தங்களை எல்லாம் திருமணம் காரணமாக இணைய வழி வகுக்கின்றன திருமணம். இப்படி திருமணம் காரணம் காட்டி கூடிய சொந்தங்களும் அதிகம்.

பல வழிகளில் திருமணம் இணைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. சில பிரிவுகளும் அதன் இயல்பே. எவ்வளவு சிரமப்பட்டாலும் பெண் நன்றாக வாழ்வதில் நிம்மதி அடையும் பெற்றோர்.

இப்படி அனைத்து வாய்ப்புகளையும் எந்தத் தவறும் செய்யாத சரண்யா இழந்திருந்தாள். வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் கேவலப்படுத்தி, அடித்து வீட்டில் பூட்டி வைத்து உடனடி திருமணம் நடக்கும் பெண்களும் பலர் உள்ளனர்.

ஆனால் சரண்யாவுக்கு நடந்த திருமணம் அனைவராலும் கூடி அன்புடன் நடத்தப்பட்டது அல்ல அவமானத்துடன், பெற்றோரின் கை விடுதலால் நடத்தப்பட்டது. அது அவள் மனதில் என்றும் ஆறாத வடுதான். அதனால் அவளுடைய அன்பான காயத்ரி அக்காவின் திருமணத்தில் அனைத்தையும் இரசித்து, மகிழ முடிவு செய்திருந்தாள்.

தோழிகள் ஒருவரை ஒருவர் சீண்டியபடி பேச ஆரம்பித்தனர். இவர்கள் ஐந்து பேருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது. பேச ஆரம்பித்தால் நிறுத்த மாட்டார்கள். அதுவும் இரண்டு நாட்கள் விடுமுறை எடுக்கவும் பேசாமல் இருப்பார்களா… பாதாளத்திலிருந்து ஆரம்பித்து சொர்க்க லோகம் வரை சென்று விடுவார்கள். அள்ள அள்ளக் குறையாத மணற்கேணி போல் இவர்கள் வாயிலிருந்து வார்த்தைகள் கொட்டிக் கொண்டே இருக்கும்.

இருட்ட ஆரம்பித்ததும் ஐவரும் வீட்டுக்குள் சென்று ஒரு பாயை விரிந்து அமர்ந்தனர். அடுத்து மெகந்தி வைக்கப் போகிறார்கள். காயத்ரியின் வீட்டுக்கு குறைந்தபட்சம் எழுபது வருடங்களாவது வயது இருக்கும். வீட்டில் நடுவில் மழை கொட்டும் படி செவ்வக வடிவில் திறப்பு விடப்பட்டு அதைச் சுற்றி திண்ணை, மூன்று அறைகள், ஒரு ஹால் போன்ற பகுதி அதில் ஒரு கதவு, பிறகு சமையலறைக்குப் பக்கத்தில் இரு கதவு என இரண்டு வெளியேறும் வழிகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் வீடு ஆகும். பழைய கால வீடு என்றால் தோழிகள் நால்வருக்கும் மிகவும் பிடிக்கும்.

மிகவும் பெரிய வீடு என்பதால் அந்த வீட்டில் திருமணங்கள் நிறைய நடந்துள்ளது. காயத்ரியின் முன்னோர்கள் அனைவருக்கும் இங்குதான் திருமணம் நடக்குமாம்.

பேசிக் கொண்டே மெகந்தியை போடும் வேலையைப் பார்க்க ஆரம்பித்தனர்.

சரண்யா காயத்ரியின் கைகளுக்குப் போட்டுக் கொண்டிருந்தாள்.

“சரண்யா சந்திரன் நாளைக்கு வருவானா?”

“தெரியலைக்கா.. ஏதோ முக்கியமான வேலை இருக்குனு சொல்லிட்டு இருந்தான். மேரேஜூக்கு நிச்சயம் வந்துருவானு சொன்னான்.”

என இயல்பாக பதில் கொடுத்தாள் சரண்யா. தோழிகள் மற்ற ராகினியும், திவ்யாவும் தண்ணீர் குடிக்க எழுந்து சென்றிருந்தாள். உமா தன் வீட்டினரிடம் பேச வெளியில் சென்றிருந்தாள்.

அதனால் காயத்ரியின் அருகில் அந்த சமயத்தில் மிசஸ்.சந்திரன் மட்டும் இருந்தாள்.

“ஏண்டி குரல் ஒரு மாதிரி இருக்கு?”

“அக்கா.. எனக்கு ரொம்ப குழப்பமாக இருக்கு..”

“விஷயத்தைத் தெளிவாச் சொல்லு.. அப்பதான் எனக்கும் புரியும்.”

சரண்யா நடந்ததைத் தெரிவித்தாள்.

“அந்த நாளுக்குப் பிறகு சந்திரன் எங்கிட்ட ரொம்ப பட்டும் படாமதான் பேசுறான். கேட்டா பதில். நான் இருந்தால் அந்தப் பக்கமே வரதே இல்லை. எனக்கு என்ன நடந்துச்சுனே புரியலை. ஒரே ஒரு கிஸ். அதுவும் நெத்தியில்.. அவ்வளவுதான். எனக்கே ஆக்வார்டா பீல் ஆகலை. ஆனால் சந்திரனுக்கு என்ன ஆச்சுனு தெரியலை. எப்ப என்ன கேட்டாலும் வொர்க்க்னு எஸ்கேப் ஆகிறான். எனக்கு என்னவோ நான் சந்திரனை மிஸ் பன்னற மாதிரி இருக்கு. அவன் என்னை வேணும்னே அவாய்ட் பன்றான். அவனா பேசு பேசுனு சொல்லிட்டு இப்ப பேச மாட்டிங்கிறான்.” சரண்யாவின் குரலில் வருத்தம் அப்பட்டமாகத் தெரிந்தது. இருவரும் மற்றவர்களுக்குக் கேட்காதபடி மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தனர்.

காயத்ரிக்கு விஷயம் புரிந்து விட்டது. இருவருக்கும் இதுவரை இருந்த நட்பு அடுத்த கட்டத்திற்கு பயணித்து விட்டது என்று தோன்றியது.

“சரண்யா… நீ எப்பவும் என்ன செய்வ? எதா இருந்தாலும் நேரடியாகக் கேட்பதானே.. அப்ப அதே மாதிரி சந்திரனை ஒரு நாள் புடிச்சு வச்சுக் கேட்ரு. எப்படியும் இனி தீபாவளி வரும் போது சந்திரன் வீட்டில்தானே இருப்பான். அந்த டைமை யூஸ் பன்னிக்கோ..”

“ம்ம்ம்… ஓகே.. அக்கா..”

“என்ன இரண்டு பேரும் பேசிட்டு இருக்கீங்க?” என்றபடியே உமா வந்தமர்ந்தாள்.

“ஒன்னு இல்லைடி. சந்திரன் வருவானா இல்லையானு கேட்டேன். அதான் சரண்யா அவனுக்கு ஏதோ வேலை இருக்குனு சொல்லிட்டு இருந்தாள். அவ்வளவுதான்.”

“ஏய் சரண் சந்திரன் பாவம் டி. ஒரு சில்லியை எடுத்து சாப்பிட்டதுக்கு நீ முறைச்ச முறைப்பு இருக்கே. எங்களுக்கு அந்த டைமில் சிரிப்பை கண்ட்ரோல் செய்யவே முடியலை. நீ அவனை எவ்வளவு மிரட்டிட்டு இருக்கனு தெரியலை.” என்று கேலி செய்ய சரண்யா விழித்தாள்.

‘என்ன நான் மிரட்டிட்டு இருக்கேனா? இப்ப எல்லாம் ஸ்கூல் படிக்கறப்ப எனக்குப் பயப்பட்ட மாதிரி எனக்கு பயப்படறது இல்லை. சந்திரன் ரொம்ப போல்ட் ஆகிட்டான். நீ வேறக்கா..’ என்று மனதில் எண்ணிக் கொண்டாள்.

“சும்மா இருக்கா.. நீ வேற..” என்று பதில் கொடுத்து விட்டு மெகந்தியில் மூழ்கினாள். உமாவும் அவள் கவனத்தைத் திசை திருப்ப வேண்டாம் என்று தானும் மெகந்தி டிசைன்களைத் தேட ஆரம்பித்தாள்.

இரவு பதினொரு மணி வரை பேசிவிட்டு அடுத்த நாளுக்குத் தேவையான உடைகளை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு கலகலப்பாக படுத்து உறங்கினர். காலை நான்கு மணிக்கு மீண்டும் எழுந்தவர்கள் அனைவரும் புடவையில் தயாராகி சென்றனர். நிச்சயம் காயத்ரியின் குல தெய்வக் கோயிலில் நடக்கிறது. அங்கே மண்டபம் உள்ளது. சாப்பாடுக்கும் சொல்லி ஆயிற்று.

நிச்சயம் எளிமையாக நெருங்கிய உறவுகளுக்கு மட்டும் கூறி நடக்கப் போகிறது.மண்டப அலங்காரங்கள் எல்லாம் முன்பே ஏற்பாடு செய்துவிட்டதால் அனைத்தும் சுலபமாக இருந்தது. வீட்டில் இருந்து ஆறு மணிக்குக் கிளம்பியவர்கள் ஆறே முக்காலுக்குள் கோயிலை அடைய அங்கும் ஒவ்வொருவராக வரத் தயாராகி மண்டபம் களைகட்டிக் கொண்டிருந்தது.

காயத்ரி மற்றப் பெண்களைப் போல் நடுங்காமல் தைரியமாக நடந்தாள். அவளைப் பார்த்த மாப்பிள்ளையின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது.

“அக்கா.. உங்க பியான்சியைப் பாருங்க.. விட்டா இப்பவே கல்யாணம் பன்னி கூட்டிட்டுப் போயிருவாரு போல..” என்று திவ்யா மெல்லிய குரலில் கூற தோழிகள் அனைவருக்கும் சிரிப்பு வந்தது.

சரண்யாவும் அந்தப் பையன் பார்ப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தாள். அவனுடைய கண்ணில் எதிரில் வருபவள் தான் எல்லாம் என்ற பார்வை இருந்தது.

நிச்சயம் கலகலப்புடன் முடிய காயத்ரியின் வீட்டில் இருக்கும் தன்னுடைய வண்டியில் வீட்டுக்குச் சென்றாள். வீட்டைத் திறந்து சோபாவில் சோம்பலாகச் சாய்ந்தாள். வீடே அமைதியாக இருந்தது. நிச்சயத்தில் சாப்பாடு வேறு அதிகமாக இருக்க தூக்கம் கண்களைச் சுழற்ற உறங்க ஆரம்பித்தாள் சரண்யா.

இரண்டு மணி நேரம் கழிந்திருக்கும். காலிங்க் பெல் அடிக்கவும் தூக்கத்தில் இருந்து கண் விழித்தாள் சரண்யா.

“இந்த நேரத்தில் யாரு?” என்று முனகிக் கொண்டே கதவைத் திறந்தாள்.

வெளியில் காக்கி உடையில் அஞ்சல்காரர் நின்று கொண்டிருந்தார்.

“அண்ணா நீங்களா?”

“ஆமா. சரண்யா. சந்திரனுக்கு ஒரு போஸ்ட் வந்திருக்கு. கை எழுத்து போட்டு வாங்கனும். அதான் வந்தேன். சந்திரனுக்குப் போன் பன்னலானு நினைச்சேன். ஆனால் நீ வீட்டுக்குப் போறதைப் பார்த்து உங்கிட்ட கொடுத்தரலாம்னு வந்தேன்.”

யோசனையுடன் அஞ்சலை வாங்கிக் கொண்டு அவரை அனுப்பி வைத்தாள் சரண்யா.

வரம்..தரும்….