சுயம்-வரம் 25

அத்தியாயம்-25

இந்திய பொருளாதரத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களின் பங்களிப்பைப் பற்றி நடத்திய ஒரு ஆய்வின் படி அது திருமணத்தை எவ்வாறு பாதிக்கிறது என்று சோதித்தனர். அந்த ஆய்வின் படி வேலைக்குச் செல்லாத பெண்கள் அதிகம் திருமணம் செய்ய ஆண்களால் விருப்பம் தெரிவிக்கப்பட்டனர். அதற்கடுத்து வேலைக்குச் சென்றாலும் திருமணத்திற்குப் பிறகு விட்டு விடுவேன் என்பவர்களுக்கு அடுத்த இடம். ஆனால் திருமணத்திற்குப் பிறகு வேலைக்குச் செல்ல விரும்பிய பெண்களுக்கு அவ்வளவாக குறைந்தது. இதில் முரண் என்னவென்றால் அதிக அளவு சம்பாதிக்கும் பெண்களுக்கு விரும்பப்பட்டனர். அவர்களுடைய அதிக வருமானம் ஊக்கியாக இருக்கிறது என்று திவா தார் தான் நடத்திய ஒரு சோதனையில் கண்டறிந்துள்ளார்.

மேட்ரி மோனியில் புரைபல்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள் காயத்ரி. அதிலிருந்து ஈமெயில்களும், விருப்பம் தெரிவிப்பவர்களும் குவிந்து கொண்டே இருந்தது.

அதைப் பார்க்கவே தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதாக இருந்தது.

‘எனக்கே தெரியுது.. நம்ம நாட்டில் ஜாதிதான் கல்யாணத்தை முடிவு செய்யுது. ஆனால் அதில் இருந்து தப்பிக்க முடியல. கல்யாணம் அப்படிங்கறது ஒரு சோஷியல் அப்ரூவலுக்காக செஞ்சுக்க வேண்டியதாக இருக்கு. பலருக்கு அப்படித்தான். இல்லைனா.. கே வா இருந்துட்டு கூட ஒரு பொண்ணை கல்யாணம் பன்னி குழந்தையும் பெத்து யாருக்கும் உண்மை இல்லாமல் இருக்க முடியுமா? இதை வெளியில் கூட சொல்ல முடியாது. ஏதோ ஒரு சில பேப்பரில் இந்த மாதிரி நியூஸ் வருது. நம்ம அப்பா அம்மா ஜெனரேஷன் எல்லாம் நினைச்சுப் பார்க்கவே முடியலை. எப்படி அவங்களால் இதை எல்லாம் ஏத்துக்க முடிஞ்சுது? கலாச்சாரம் கட்டுப்பாடு எல்லாம் கட்டாயப்படுத்தி வரக் கூடாது. அதை நாமே மனசார ஏத்துக்கனும். எந்த இடத்தில் ஒரு சாதாரண விருப்பத்தைக் கூட வெளிப்படுத்த முடியலையோ அந்த இடம் ஆரோக்கியமான இடம் கிடையாது.. ச்சே.. நீ ரொம்ப யோசிக்காத காயு.. ஆல்ரெடி நீ ஆட் ஒன் அவுட். இதை எல்லாம் நீ வெளியில் சொன்னால் அரை வேக்காடு கலாச்சார காவலர்களின் கற்கள் போன்ற சொற்கள் உன் மீது பாயும். அப்புறம் நம்மளை பெமினிஸ்ட்டு முத்திரை குத்துவாங்க. அடிப்படை உரிமையை கூட கேட்டா கூட குத்தம். நம்ம உரிமையை கூட ஒரு ஆண் வாங்கித் தந்தால் தான் கரக்ட்.’

மேட்ரிமோனி புரபைலை ஸ்க்ரோல் செய்து கொண்டே இப்படி சிந்தனையில் மூழ்கி விட்டாள். அப்போது அவளது வாட்ஸப்பில் ஒரு மெசேஜ் வந்தது.

“ஹாய்..” என்று வந்த புது எண்ணில் இருந்து வந்த குறுஞ்செய்தியை உற்று நோக்கினாள் காயத்ரி.

“ஹலோ.. வூ ஆர் யூ?”

சுற்றி எல்லாம் வளைக்கவில்லை காயத்ரி.

“உங்க பேரு சொல்லுங்க?” தங்கிலிஷில் வந்த செய்தியைப் படித்தாள்.

“பேர் சொல்ல முடியாது. வேணும்னா நீ உன்னோட பேர் சொல்லு. நீ எனக்கு தெரிஞ்ச ஆள இருந்தால் ஓகே. இல்லை இப்பவே பிளாக் பன்னறேன்.”

செய்தியை அனுப்பி விட்டு அடுத்த பதிலுக்காகக் காத்திருந்தாள். பதில் வரவில்லை. பிளாக் ஆப்சனை அழுத்திவிட்டு அந்த எண்ணை பிளாக் செய்துவிட்டாள். காயத்ரி மட்டுமில்லை தோழிகள் நால்வரும் கடைபிடிக்கும் ஒரு விஷயம் இது. இப்படி தேவை இல்லாத ஆட்களிடம் இருந்து வாட்ஸ்ப்பில் செய்தி வந்தால் பிளாக் செய்து விடுவார்கள்.

அதே போன்று முகநூல் என்றால் செய்திகளை படிக்க மாட்டார்கள். அப்படியே ஒதுக்கித் தள்ளிவிடுவார்கள். செய்தி அனுப்பியவர்கள் கை நோக அனுப்ப வேண்டியதுதான்.

அதே நேரம் காயத்ரிக்கு செய்தி அனுப்பிய ஆள் சிரித்துக் கொண்டே, “பிளாக் பன்னிட்டா.. அப்படியே நான் எதிர்பார்த்த மாதிரி..” என்று கைப்பேசியில் அவள் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது.

அடுத்த நாள் வழக்கம் போல் காயத்ரி வேலைக்குச் சென்று விட்டாள். அவள் வீட்டுக்கு இருவர் ஜாதகம் கொடுத்துவிட்டுச் செல்ல வந்தனர். இவை எவற்றையும் அறியாமல் காயத்ரி தன் வேலையில் மூழ்கி இருந்தாள். மாலை வீடு வந்து சேர்ந்தாள். அவள் வந்ததும் காயத்ரியின் அம்மா ஆரம்பித்தார்.

“ஒரு ஜாதகம் வந்திருக்கு காயு. பொருத்தம் எல்லாம் இருக்கு. ஆனால் கொஞ்சம் வசதியான இடம். அதான் யோசனையாக இருக்கு.”

‘ஆரம்பிச்சுட்டாங்களா.. செண்டர்ல் கவர்மெண்ட்டில் கூட இவ்வளவு பாலிடிக்ஸ் நடக்காது. இப்ப எல்லாருக்குமே பையன் வீடு வசதி கமியா இருந்தால் கன்ட்ரோல் நம்ம பக்கம் வந்துரும். பொண்ணு சந்தோஷமா வாழலாம்னு ஒரு ஐடியாலஜி. அப்பதான் எதுனாலும் நாம கேட்கலானும் நினைக்கிறாங்க. பெண்ணைப் பெற்று விட்டு அவங்க இப்படி நினைக்கற தப்புனு சொல்ல முடியாது. இரண்டு பேர் ஒன்னா சேர்ந்து வாழறதுங்கறத விட யார்கிட்ட கன்ட்ரோல் இருக்கறதுதான் முக்கியமாக இருக்கு. வெரி காம்பிளிகேட்டடு. இந்த எண்ட்லெஸ் வாருக்கு ஒரு முடிவே இல்லையா?…’ மனதில் நினைத்துக் கொண்டவள் அமைதியாக அன்னை கூறுவதைக் கேட்டாள்.

“என்ன செய்யறது? ரொம்ப வசதினா நம்மளை மதிக்க மாட்டாங்க. நீ நிம்மதியாக வந்து கூட போக முடியாது?.. பார்ப்போம்.. இரண்டர்த்தமா இருக்கு.”

‘இனிமேல் அரசியலில் குதிப்பேன் அப்படிங்கறதுக்குப் பதிலா திருமணத்தில் குதித்தனர் அப்படினு சொல்லனும் போல இருக்கே..’ என்று மீண்டும் நினைத்தவள், “பேசிப் பார்க்கலாங்கம்மா.. ஒத்து வந்தாப் பார்ப்போம்…” பதில் கொடுத்தாள்.

“என்னடி ஒத்து வந்தாப் பார்க்கறது? ஏற்கனவே உனக்கு வயசாயிட்டு இருக்கு. உனக்கு கான புறந்தது எல்லாம் புள்ளைங்களை பள்ளிக் கூடம் சேர்க்குது.. ஆனால் உனக்கும் ஒன்னும் அமைய மாட்டிங்குது..” என்று அவர் மனக்கஷ்டத்தை பாதி காயத்ரியைத் திட்டியும், பாதி புலம்பலாகவும் வெளிப்படுத்த ஆரம்பித்தனர்.

‘மேரேஜ் அப்படிங்கறது கல்யாணம் பன்னிக்கப் போறவங்க மட்டுமில்லாமல் பெத்தவங்களுக்கும் பைத்தியம் புடிக்க வைக்கும் போல.. அனுமார் வாலு மாதிரி நீண்டுட்டே போகுது.’  எண்ணிவிட்டு உடை மாற்றச் சென்றாள் காயத்ரி.

***

கடல் கரையில் மோதித் சிதறும் அலைகளில் உருவாக்கும் நுரைகள் போன்று சரண்யாவின் மனதில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் சந்திரனின் மார்பில் கண்ணீராகக் கரைத்துக் கொண்டிருந்தாள். இதுவரை அவள் மனதில் தேக்கி வைத்திருந்த அனைத்தும் வார்த்தைகளற்று கண்ணீராக வெளிவந்து கொண்டிருந்தது. இத்தனை நாள் அழ முயன்றாலும் கண்ணீர் சரண்யாவுக்கு வரவே இல்லை. அப்படியே வந்தாலும் அவை இமைகளை விட்டு கீழிறியங்கியது இல்லை. கட்டுப்படுத்திவிடுவாள். ஆனால் இன்று அவளை மீறி கண்ணீர் வழிந்து கொண்டிருக்கிறது.

அவள் அழுவது புரிந்தது. ஆனால் எதற்காக அழுகிறாள் என்று காரணம் சரியாக ஜெயச்சந்திரனுக்குத் தெரியவில்லை. ஆனால் அமைதியாக அவளது தலையை வருடிக் கொடுத்தப்படி இருந்தான். அரை மணி நேரம் கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டிருந்தது. நேரத்தை எல்லாம் சந்திரன் பார்க்கவில்லை. அவள் எவ்வளவு நேரம் அழுதிருந்தாலும் சந்திரன் அவளை விலக்கவில்லை.

அவளுடைய கோபம், சோகம், வருத்தம், அன்பு … இப்படி எந்த உணர்வாக இருந்தாலும் வெளிப்படட்டும் என்று விட்டுவிட்டான். நீர் வீழ்ச்சி எப்படி  புதிய நதியாகிறதோ அப்படியே அவளுடைய கண்ணீர் அவளை புதுப்பித்துக் கொண்டிருந்தது.

கண்கள் சிவந்து வீங்கியது. ஒரு கட்டத்தில் தானாக அழுவதை நிறுத்தியவள் நீர்ப்படலம் நிரம்பிய கண்களுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவள் நிமிர்ந்ததும் சந்திரனும் அவன் பார்வையைத் தளர்த்திப் பார்த்தான். சில விநாடிகள் ஓடின. குனிந்து அவள் நெற்றியில் தன் இதழ்களைப் பதித்தான். ஒரு கை அவளது தலையின் பின் பக்கத்திலும் மற்றொரு கை முதுகையும் ஆதரவாகப் பிடித்திருந்தது.

சந்திரனும் இப்படி செய்வான் என்று எதிர்ப்பார்க்கவில்லை. அந்த முத்தத்தில் அவனுமே உறைந்து நின்றான். சரண்யாவின் மூச்சுக் காற்று அழுது அழுது வெப்பமேறி இருந்தது.

சட்டென சரண்யா தன் சுய நினைவுக்கு வந்தாள். சந்திரனை விட்டு விலக முயன்றாள். அவளின் முயற்சியைப் பார்த்ததும் சந்திரனும் அவனை விடுவித்தாள்.

உடனே திரும்பி படியில் இருந்து இறங்கியவள் அவள் அறைக்குள் புகுந்து கொண்டாள். சில நொடிகள் அங்கேயே நின்ற சந்திரன் திரும்ப பால்கனிக்கு நடக்க ஆரம்பித்தான். டீசர்ட் முழுக்க அவள் கண்ணீரின் தடங்கள். மனம் முழுக்க அவள் நினைவின் தடங்கள். அந்த இரவு அவர்கள் இருவருக்குள் இதுவரை இருந்த அனைத்தையும் மாற்றி இருந்தது. சரண்யா அவனுக்கு திடீர் திருமணத்தால் விளைந்த ஒரு பொறுப்பு அல்ல என்று அவனுக்கும் புரிந்திருந்தது. அவளுடைய கண்ணீர் அவனையும் புதுப்பித்திருந்தது. ஜெயச்சந்திரனாலும் இதைச் சட்டென்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பால்கனியில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து மெதுவாக ஆட ஆரம்பித்தான். அவனும் அலைபாயும் மனமும் தான்.

****

இரண்டு நாட்கள் கழித்து காயத்ரிக்கு புதிதாக வந்த மாப்பிள்ளையின் எண் தரப்பட்டது. காயத்ரிக்கு அழைத்துப் பேச நேரம் இல்லை. அதனால் தான் இந்த நாள் ஃபிரி என வாட்ஸப்பில் தகவல் மட்டும் அனுப்பினாள். ஞாயிறு மட்டும்தான் அவள் வீட்டில் இருப்பாள்.

பெற்றோர்களே இந்த இடத்தில் சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டதால் அந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை சந்திக்க முடிவு செய்யப்பட்டது.

காயத்ரி பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டாள். பொதுவாக ஞாயிற்றுக் கிழமை பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் சந்தித்துக் கொள்ளமாட்டார்கள். ஞாயிற்றுக் கிழமை சரி இல்லாத நாள் என்ற கருத்து உள்ளது. அதுதான் காரணம்.

காயத்ரிக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. எல்லா நாட்களும் நல்ல நாட்கள்தான். அதிகம் சாங்கியம், சடங்கு, ஜோசியம் அவளுக்கு அதிக உடன்பாடில்லை. அதனால் ஞாயிற்றுக் கிழமை இவர்கள் பார்க்க சம்மதித்ததும் அவளுக்கு ஆச்சரியம்.  தோழிகளிடம் விஷயத்தைத் தெரிவித்தாள்.

வரம்..தரும்…