சுயம்-வரம் 22

அத்தியாயம்-22

தோழிகள் நால்வரும் போவதையே ஒருவன் ஹோட்டலில் வாயிலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான்.

“டேய் மச்சா கௌதம்..” என்று அவன் தோளில்  இன்னொருவன் கை வைத்தான்.

“ம்ம்ம்…” என்றபடியே திரும்பினான்.

“டே நீ டெய்லியும் இந்த ஐஞ்சு பேரில் யாரை பார்க்கறீனு தெரியலை. இதில் ஒரு பொண்ணுக்கு கல்யாணம் வேற ஆகிடுச்சு. யாரடா பார்க்கிற? இப்படியே விட்டால் இந்த குரூப்பில் இருக்கற எல்லாப் பொண்ணுங்களுக்கும் கல்யாணம் ஆகிடும்.”

அவனை அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தான் கௌதம்.

“ஷாக்கைக் குறை.. ஷாக்கை குறை. உண்மையை சொன்னேன். சோ எடுக்க வேண்டிய ஸ்டெப் எடு. அப்புறம் இப்படி பார்க்க வேண்டியது இல்லை. அந்தப் பையன் மாதிரி நீயும் உன்னோட ஆளைக் கூட்டிட்டுப் போலாம்.”

“அப்படிங்கற?”

“ம்ம்ம்ம்… ஆனால் அந்தப் பொண்ணும் பையனும் செம பேர். ஏதோ சண்டை போல. கண்ணுலயே ஃபைட் பன்னிகிட்டாங்க. ஆனால் அந்தப் பையன் அலட்டிக்கவே இல்லை. அந்தப் பொண்ண மட்டும் பார்த்துகிட்டே இருந்தான். கண்ணை எடுக்கவே இல்லை. நான் கூட என்னோட பொண்டாட்டியை இப்படி பார்த்தது இல்லை.”

“சரிடா… நீயும் அப்படியே பாரு.”

“எதுக்கு.. அப்புறம் மை டியர் வொய்ஃப் அதுக்கு எதாவது புது காரணத்தை உண்டாக்குவா.. அதை விடு. நம்ம வேலையைப் பார்ப்போம் வா..” என நண்பன் அழைக்க கௌதம் அவனுடன் சென்றான்.

***

“டேய் சிரிக்காதடா…”

“நான் சிரிக்கலை. உதடு தானா அசையுது. அவ்வளவுதான்.”

“இது என்ன நான் அழலை. கண் வேர்க்குதுங்க மாதிரியா?”

“சரண்யா…”

“என்ன?” சரண்யாவின் குரலில் லேசாக எரிச்சல் இருந்தது.

“பச்சைக் கிளி புடிச்சுட்டு தரட்டா?”

“டேய் சும்மா இரு.” எச்சரிக்கை விடுத்தாள்.

“நான் சும்மாதான் இருக்கேன். அதான் கேட்டேன்.”

“சந்திரா… பிச்சுருவேன். பேசாமல் வண்டியை எடு. வீட்டுக்குப் போலாம்.”

“இல்லை உனக்கு பச்சைக்கிளி…”

“இப்ப நீ வண்டியை எடுக்கப் போறியா இல்லையா?”

சிரிப்பைக் கட்டுப்படுத்தியவாறு பைக்கை எடுத்தான். சரண்யாவும் பின்னால் அமர்ந்தாள். ஆனாலும் பைக் ஓட்டும் போது ஜெயச்சந்திரன் சிரிப்பைக் கட்டுப்படுத்துவது அவன் உடல் மொழியிலே தெரிந்தது.

பைக்கை வீட்டின் முன் நிறுத்தி கேட்டைத் திறந்து கொண்டு மீண்டும் பைக்குடன் வீட்டில் நுழைந்தான் சந்திரன். அவனுக்கு முன் கதவைத் திறந்த சரண்யா புசு புசுவென கோபத்துடன் நின்று கொண்டிருந்தாள்.

முகத்தில் புன்னகையுடன் நுழைந்தவன் அவளை ஏறிட்டான்.

“ஏன்டா.. நான் சிரிக்க வேண்டாம்னு சொல்றேன். ஆனால் நீ சிரிச்சுட்டே இருக்க.. என்னடா மனசில் நினைச்சுட்டு இருக்க?”

“வேறன்ன பச்சைக்கிளியை எப்படி புடிக்கறதுனுதான்!!” நக்கலாகப் பதில் அளித்தான் சந்திரன். அவ்வளவுதான் சோபாவில் இருந்த தலையணை ஒன்று நேராக சந்திரன் முகத்திற்கு பறந்து வந்து முத்தம் கொடுத்தது.

அவன் அதிலிருந்து அவன் மீளுவதற்குள் சரண்யாவே அவன் அருகில் வந்தாள். அவன் தலை முடியைப் பிடித்தவள், “இனிமேல் பச்சைக்கிளி பேரு உன் வாயிலிருந்து வரக் கூடாது. சொல்லிட்டேன்.”

“ஏய் ராட்சசி முடியை விடு வலிக்குது…” இடையில் ஆ.. வென்று கத்தியவாறு தன் தலை முடியை விடுவிக்க முயற்சித்துக் கொண்டிருந்தான் சந்திரன்.

பச்சைக்கிளி என்பது உப்பு பெறாத விஷயம். அதற்கு இப்படி இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர். பள்ளி படிக்கும் போது கிளி ஒன்று சரண்யாவின் வீட்டில் அடிபட்டு விழுந்து விட்டது. அதற்கு சரண்யாவின் அம்மா வைத்தியம் பார்த்து வைத்துக் கொண்டார். சரண்யாவுக்கு அந்தக் கிளியை மிகவும் பிடித்து விட்டது. அதன் மீது பைத்தியமாக இருந்தாள்.

ஆனால் காயம் சரியானதும் கிளி பறந்து விட்டது. அதைத் தேடி பைத்தியம் போல் சரண்யா அலைந்தாள். அதனால் சரண்யாவுக்கு பச்சைக் கிளி என்று பெயர் வைத்து அழைப்பான் ஜெயச்சந்திரன். அந்தக் கிளியைத் தேட சந்திரனையும் இழுத்துச் சென்றுவிடுவாள்.

‘இது சரிப்பட்டு வராது.. இவ இன்னிக்கு என்னோட தலையில் இருக்கற முடி அத்தைனையும் கொத்தா புடுங்கப் போறா.. எதாவது செய் சந்திரா..”

சட்டென ஒரு யோசனை தோன்ற அவளை அப்படியே இடையை வளைத்துத் தூக்கினான். சரண்யா இந்த திடீர் தாக்குதலில் அதிர்ந்தாலும் அவன் தலைமுடியை இன்னும் விட்ட பாடில்லை. ஹாலின் பக்கவாட்டில் இருந்த பாத்ரூமிற்கு அவளைத் தூக்கிச் செல்லவும் சரண்யா நெளிய ஆரம்பித்தாள். இப்போது அவனிடம் இருந்து எப்படி தப்பிக்க வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தது மூளை. இது மாதிரி சிறு வயதிலும் அவளிமிருந்து தப்பிக்க தண்ணீர் வாய்க்காலில் சந்திரன் தள்ளி விட்டிருக்கிறான்.

ஆனால் சந்திரன் பிடியில் இருந்து தப்பிக்க முடியவில்லை. செல்லும் வழியில் பாத்ரூமில் ஷவரைத் திறந்து விட்டான். தண்ணீர் திடீரென்று தலை மீது கொட்டியதும் சரண்யா ஆ… என்று வாயினுள் காற்றை இழுத்தப்படியே அவன் தலை முடியை விட்டாள். சந்திரனும் அவளுடன் சேர்ந்து நனைந்து கொண்டிருந்தான். ஷவரில் இருக்கும் நீர் முழு வேகத்தில் இருந்ததால் தண்ணீர் தலை மீது பயங்கரமாக விழுந்தது.

சரண்யா அவனிடம் இருந்து விலக முற்பட அவன் விடுவதாக இல்லை. நன்றாக நேராக ஷவருக்கு முன் நிற்க வைத்தான். முகம், உடை என முழுதாக நனைய ஆரம்பித்தாள் சரண்யா.

“சந்..திரா.. விடு..” சந்திரனின் தலையில் இருந்து முடியைப் பிடித்திருந்த கைகள் இப்போது அவன் கைகளுடன் தன்னை விடுவிக்கப் போராடிக் கொண்டிருந்தது.

“சந்திரா.. பிளீஸ்..” சரண்யாவின் குரல் குளிரில் நடுங்கியது. தண்ணீர் சூடாக இல்லாமல் ஜில்லென்று இருந்தது. நீர் முகமெங்கும் வழிய உதடுகளும் கண்களும் படபடத்தன.

“நான் தான் சொன்னேன். நீ கேட்கலை.” என்றபடியே ஷவரை நிறுத்தியவன் அங்கு போடப்பட்டிருந்த துண்டை எடுத்து அவள் மீது முக்காடு போல் போட்டான். அதனை முகம் தெரியுமாறு விலக்கியவள் முறைத்தாள்.

“முறைக்காத பச்சைக்கிளி. மறுபடியும் ஷவரை ஆன் பன்னிருவேன்.” இன்னும் ஒரு கை அவளுடைய இடையில்தான் இருந்தது. அதனுடைய வெம்மையை உணர ஆரம்பித்தாள் சரண்யா. ஏதோ ஒரு ரசாயன மாற்றம் நீர் வினையால் தொடங்கியது.

சட்டென அவளை விட்டு விலகினான் ஜெயச்சந்திரன்.

“போ சரண்யா டிரஸ் சேஞ்ச். பன்னு. இனிமேல் வழக்கம் போல் எங்கிட்ட நீ பேசற.” என்று நீரால் வழிந்த தலை முடியை கோதியபடி நகர்ந்தான் ஜெயச்சந்திரன்.

***

திவ்யா பேருந்தில் இருந்து இறங்கி ஊருக்குள் வந்து கொண்டிருந்தாள்.

“ஏய் திவ்யா..”

தன்னை அழைப்பது யாரென்று திரும்பிப் பார்த்தாள். அங்கு நின்று கொண்டிருந்தான் அவளது அத்தை மகன் சதிஷ்.

“என்ன? … ஏன் உன்னால் பேரை சொல்லிக் கூப்பிட முடியாதா? ஏயாம்.. அதிகாரத்தைப் பாரு.”

“அத்தைப் பொண்ணை எல்லாம் அப்படித்தான் கூப்பிட முடியும். எனக்கு உரிமை இருக்கு. உங்க அப்பாதான் ஒத்துக்க மாட்டிங்கறாரு..”

இதற்குப் பதிலாக மெலிதாகச் சிரித்த திவ்யா, “ஒன்னைத் தெரிஞ்சுக்க.. உரிமை இருக்கு அப்படினு பழகுறது வேற. மரியாதையா நடத்துறது வேற. அந்த உரிமையும் நான் கொடுத்தால் மட்டும்தான். இப்ப நீ பேசறது வெறும் அதிகாரம் தான். இனிமேல் இப்படி பேசற வேலை மட்டும் வச்சுக்காத..”

கூறிவிட்டு அவள் நடக்க ஆரம்பித்தாள். அவளை முறைத்துப் பார்த்தப்படி நின்றிருந்தான் அவன். தனக்குப் பின்னால் வெறித்துப் பார்ப்பவனைப் பற்றிக் கவலை இன்றி முன்னே நடந்தாள் திவ்யா. இவனைப் பற்றி அவள் அறியாததா?… அதுவும் இவனைப் போன்ற துரோகியை அவள் என்றும் மன்னிக்க மாட்டாள்.

திவ்யாவின் அப்பா, அம்மாவுடன் சண்டை என்றாலும் திவ்யா அவள் அத்தை மாமா குடும்பத்துடன் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தாள். இப்படி இருக்கும் போது  சதிஷூக்கு பிறந்த நாள் வர அவளும் எதார்த்தமாக வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் வைத்தாள்.

இந்த எதார்த்தம் தான் பதார்த்தமாக வெடித்தது. சதிஷ் குடும்பம் திவ்யாவின் குடும்பத்தை விட்ட சற்று வசதி மிக்கவர்கள். அந்த ஸ்டேட்டஸைப் பார்த்த உறவினர் ஒருவர், “என்னடா அந்தப் பொண்ணு உனக்கு பர்த்டே ஸ்டேட்ஸ் போட்டுருக்கு?” என்று கேட்க இவனும் எதார்த்தமாக “எல்லாரு மாதிரியும் போட்டுருக்கா..” என்று கூறிவிட்டுப் போயிருக்கலாம்.

ஆனால் இவன் அளித்த பதிலே வேறு.

“அந்தப் பொண்ணுதான் அப்படி பன்னிட்டு இருக்கு. எனக்குத் தெரியாது.” என்று பதில் கொடுத்துவிட அது வேறு விதமாகத் திரிக்கப்பட்டது.

பணத்துக்காக அவன் பின்னால் திவ்யா அலைவதாக கதை கட்டப்பட்டது. இந்தச் செய்தி திவ்யாவை அடைந்த போது திவ்யாவுக்கு அப்படியே மனம் எல்லாம் பற்றி எரிந்தது. கல்லூரியில் படிக்கும் அனைவரும் இப்படி ஸ்டேட்டஸ் போட்டு வாழ்த்துவது வழக்கம். திவ்யாவும் அதே வழக்கத்தில் செய்து விட அது அவளைக் கேவலப்படுத்திவிட்டது.

அன்றோடு அவனோடு பழகுவதை விட்டவள்தான். அது ஒரு இயல்பான விஷயமாக அவன் பதில் கூறி இருந்தால் எந்தப் பிரச்சினையும் இருந்திருக்காது. ஆனால் இவனுக்கு இருப்பது எஸ்கேப்பிசம். ஏனென்றால் திவ்யாவுக்கு காதல் தெரிவித்தது அவன். ஆனால் திவ்யா அதை கண்டு கொள்ளாதது போல் இருந்துவிட்டாள். அதனால் இப்படி மாற்றி சொல்லிவிட்டான்.ஆனால் தெரியாமல் இவனைப் போன்ற ஆளின் காதலில் விழுந்திருந்தால் தன்னுடைய நிலை என்னாயிருக்கும்? என்று யோசித்துப் பார்த்தாள்.

‘சாமி இருக்கு சரண்யா..’ என்று கடவுள் இருக்கான் குமாரு பாணியில் நினைத்துக் கொண்டாள். அவனை மாதிரி ஆட்களிடம் நட்புடன் பழகியதற்கு அவளுக்கு மிகவும் வெட்கமாக இருந்தது. அவளுடைய பெற்றோர்களுக்கும் நடந்தது தெரியும் என்பதால் அவன் வீட்டிலிருந்து எவ்வளவு தடவை பெண் கேட்டாலும் தன் வீட்டில் ஒப்புக் கொள்ளமாட்டார்கள் என்பதால் திவ்யா நிம்மதியாக இருந்தாள். அந்தக் கோபத்தால் அடிக்கடி திவ்யாவிடம் சீண்டி மூக்குடைப்பட்டுச் செல்வது இவனுக்கு வழக்கம். இதுவரை திவ்யாவுக்கு வந்த சில சம்பந்தங்களை இவர்கள் வீட்டினர் தட்டி விட்டதும் திவ்யாவுக்குத் தெரியும். கேட்பார் பேச்சைக் கேட்டு நடக்கும் குடும்பத்தினருடன் சம்பந்தம் செய்து கொள்ள திவ்யாவின் குடும்பத்தினருக்கும் விருப்பம் இல்லை.

இவனை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று நினைத்துக் கொண்டே திவ்யா தன் வீட்டுக்குச் சென்றாள்.

***

தலையைத் துவட்டியப்படி தன் அறையில் அமர்ந்திருந்தாள் சரண்யா. தலை முடிக்குள் நுழைந்தபடி அதில் உள்ள சிடுக்கை எடுக்க முயன்று கொண்டிருந்தாள். கைகள் முடியில் உள்ள சிடுக்கைக் களைய முயன்றது போல் மனமோ தன் வாழ்க்கையில் உள்ள சிடுக்கை ஆராய்ந்து கொண்டிருந்தது.

ஜெயச்சந்திரன் என்ற முடிச்சு அவள் வாழ்வில் இறுக்கமாகப் போடப்பட்டுள்ளது. அந்த முடிச்சுடன் கண்ணுக்குத் தெரியாமல் போடப்பட்டிருக்கும் பல முடிச்சுகளைப் பற்றியும் அவள் சிந்தனை ஓடியது. காலையில் இருந்து நடந்தவற்றைப் பற்றி தீவிரமாக யோசித்தாள். ஜெயச்சந்திரனை வேண்டும் என்று அவள் விலக்க நினைக்கவில்லை. அவனும் தன்னைப் போல் இதில் சூழ்நிலைக் கைதி என்று தெரியும். ஆனாலும் யாரிடமும் பேசப் பிடிக்கவில்லை. அவன் தனக்காக மறைமுகமாக செய்வது அனைத்தும் அவளும் கவனித்துக் கொண்டிருந்தாள். அவனுக்கும் குற்ற உணர்ச்சி இருப்பது தெரியும். இருந்தாலும்… மனம் அமைதி அடையவில்லை.

வரம்..தரும்…