சுயம்-வரம் 21

அத்தியாயம்-21

உடம்போடு உயிரிடை என்னமற் றன்ன

மடந்தையோடு எம்மிடை நட்பு.

      -திருக்குறள்.

இம் மடந்தைக்கும் எமக்கும் இடையில் உள்ள நட்பினது நெருக்கம் உடம்போடு உயிருக்கும் இடையில் உள்ள நட்பினது நெருக்கம் போன்றது ஆகும்.  இங்கு என்ன என்பது பன்மையைக் குறித்தது. இரண்டும் தொன்றுதொட்டு வேற்றுமை இன்றி கலந்து வருதல், இன்ப துன்பங்களை ஒன்றாக அனுபவித்தல் ஆகும்.

தலைவனுக்கும் தலைவிக்கு உள்ள அன்பின் ஆழம் இதில் கூறப்பட்டது. காதலின் சிறப்புரைத்தல் அதிகாரத்தில் இக்குறள் இடம் பெற்றுள்ளது.

அன்று ஞாயிற்றுக் கிழமை. தோழிகள் வழக்கமாக வீட்டில் இருப்பர். ஆனால் ஐவரும் ஒன்று கூடி திருப்பூரில் உள்ள பிரபல ஹோட்டலில் இருந்தனர்.

அதுமட்டுமின்றி சரண்யா திருமணத்திற்குப் பிறகு எங்கும் ஐவரும் செல்லவில்லை. அதனால் இன்று ராகினி டீரிட் கொடுப்பதாகக் கூறி மற்ற நால்வரையும் அழைத்து வந்திருந்தாள்.

காலிபிளவர் மஞ்சூரியன், பரோட்டோ, பிரியாணி, பிரைட் ரைஸ், புலாவ் இப்படி வித விதமான உணவுகள் அவர்கள் முன் வைக்கப்பட்டிருந்தன.

“என்னடி ராகினி டீரிட் பலமாக இருக்கு? என்ன காரணமும் சொல்ல மாட்டீங்கற? ஒரே சஸ்பென்சா இருக்கு. நீ அந்தப் பையனைப் பார்க்கப் போனதில் இருந்து சரியில்லைடி…” உமா ஆர்வம் தாங்காமல் ராகினியிடம் கேட்டாள்.

நீர் நிரம்பி உள்ள கண்ணாடி தம்பளரை எடுத்துக் கொண்டாள்.

“அந்தக் கல்யாணப் பேச்சு வார்த்தை டிராப் ஆகிடுச்சு. அதான் டீரிட்.”

“ஏய் லூசு. இதுக்கெல்லாம் யாராவது டீர்ட் கொடுப்பாங்களா?”

“ஆமாண்டி.. இந்த தடவை நான் காதில் வாங்குன திட்டுக்கு காது புண்ணாகிடுச்சு. அதான் இப்படி டீரிட் வைக்கலாம்னு முடிவு செஞ்சேன்.”

ராகினி வீட்டில் தரமான சம்பவம் நடந்திருப்பதை தோழிகள் நால்வரும் உணர்ந்து விட்டனர். சரண்யா மட்டும் கவலையுடன் கேட்டாள்.

ராகினி அந்தப் பையனிடம் பேசியவற்றை உரைத்தாள்.

“இன்னொன்னு தெரியுமா? அந்தப் பையன் என்னைப் பார்த்ததும் புடிச்சுருக்கு சொல்லிட்டான். என்னையும் கேட்டாங்க. பேசிட்டுதான் சொல்ல முடியும் சொல்லிட்டேன். பேசினப்பதான் இதை எல்லாம் வாங்குனேன். அப்புறம் தண்ணி அடிக்கற காரணத்தை வச்சி ரிஜக்ட் செஞ்சேன்.

சாமி.. அவன்கிட்ட இதெல்லாம் பேசாமல் நானும் பிடிச்சுருக்குனு சொல்லி இருந்தால் என்னோட நிலைமையை நினைச்சுப் பாரேன். எனக்கே சிரிப்பா இருந்துச்சு. பெண் என்றால் அழகாக இருக்க வேண்டும். அடக்கமாக இருக்க வேண்டும். சொன்ன பேச்சு கேட்க வேண்டும். அம்மா, பொண்ணுக்குள்ளேயே அத்தனை சண்டை வருது. அப்புறம் எப்படி முன்ன பின்ன தெரியாத, பழகாத ஒருத்தங்க கூட ஒரு மன வேறுபாடு கூட வராமல் இருக்க முடியும். அவன் தேடற பொம்மை நான் இல்லைப்பா. இவனுகளுக்கெல்லாம் அழுது அழுது மேனிபுலேட் செஞ்சு காரியம் சாதிக்கற பொண்ணுங்கதான் கரக்ட். பொண்ணுக்கு அழகு மட்டும் முக்கியமா? குணத்தைப் பத்தி ஒரு வார்த்தை பேசலை. என்னோட லைஃப் பார்ட்னர் அன்பா இருக்கனும் சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை.. என்னோட அப்பாவுக்கும், அம்மாவுக்கும் ரொம்ப வருத்தம். இருக்கட்டும்.. நீங்க நான் இந்த மாதிரி ஒரு ஆளுகிட்ட இருந்து தப்பிச்சதுக்கு டீரிட்டை என்ஜாய் பன்னுங்க.”

“ஹே ராக்ஸ்..”

“சொல்லுடி காயு?”

“நீ கண்டிப்பா பைத்தியம்தாண்டி.” என்று புன்னகைத்தாள். உமா காயுக்கு ஹைபை கொடுத்தாள்.

அவர்கள் இருவரையும் அலட்சியமாகப் பார்த்தப்படி, “இதிலென்னடி சந்தேகம்…… உங்கூட சுத்திட்டு இருக்கற எல்லாருமே பைத்தியம்தான்..” என்று திவ்யாவுக்கு ராகினி ஹை ஃபை கொடுத்தாள். ராகினி ஜாலியாக சிரித்துப் பேசினாலும் வீட்டில் நடந்திருக்கும் பிரச்சினைகளை நால்வருமே உணர்ந்து கொண்டனர். அதுவும் சொந்தத்தில் மாப்பிள்ளைப் பார்த்து நிராகரித்தால் வரும் பேச்சுகள் இன்னும் அதிகமாக இருக்கும்.

இவர்களின் அரட்டையை பக்கத்து டேபிளில் தன் நண்பனுடன் பார்த்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தான் ஒருவன்.

ஐவரும் அரட்டை அடித்துக் கொண்டு சாப்பிடும் போது சரியாக வந்தான் ஜெயச்சந்திரன். அவன் இங்கு வருவான் என்று எதிர்பார்க்காத சரண்யா காலிபிளவர் சில்லியை வாயருகே கொண்டு போய் அப்படியே அதிர்ச்சியில் நிறுத்தினாள்.

வெள்ளைச் சட்டை கருப்பு நிற பேண்ட், கருப்பு நிற ஷீ. ஜெல் கொண்டு தூக்கி விடப்பட்ட கேசம் என்று  கலக்கலாக வந்து நின்றான் ஜெயச்சந்திரன்.

“ஹே. சந்திரா வா.. என்னடா.. ஆளே கெத்தா கிளம்பி வந்திருக்க!!!!!” என்று ஆச்சரியத்துடன் ராகினி கேட்டாள்.

சரண்யாவின் கையில் இருந்த காலிஃபிளவர் சில்லியை பிடுங்கி தன் கையில் வைத்துக் கொண்டான் ஜெயச்சந்திரன்.

“நீங்க டீரிட் கொடுக்கறீங்க. அதான்.. இப்படி..” என்று சிரித்தப்படி அருகில் இருக்கும் ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு சரண்யாவின் அருகில் அமர்ந்து அந்த சில்லித் துண்டை வாயில் போட்டுக் கொண்டான்.

தன் கையில் இருந்து சில்லியைப் பிடுங்கிக் கொண்டதற்கே முறைத்த சரண்யா அவன் அதை வாயில் போட்டுக் கொள்ளவும் அவள் கண்களில் இருந்து சூப்பர் மேன் போல் லேசர் வராத குறைதான்.

காயத்ரி முழங்கையால் அருகில் அமர்ந்திருந்த உமாவின் கையில் லேசாக  இடித்தாள். அவள் திரும்பிப் பார்க்கவும் கண்களை காட்டினாள்.

‘சாப்பாட்டைப் பார்க்காமல் அங்க பாருடி.’ என்ற செய்தி இருந்தது. உமாவின் அவள் கண்களைக் காட்டிய திசையில் பார்க்கவும் சரண்யாவும், சந்திரனும் கண்களால் போர் நடத்திக் கொண்டிருந்தனர்.

“சொல்லு சந்திரா.. என்ன ஆர்டர் பன்னலாம்?”

என்று சந்திரனிடம் கேட்டாள் திவ்யா.

“என்ன இவ்வளவு கமியா ஆர்டர் செஞ்சு வச்சுருக்கீங்க. இதெல்லாம் பத்தாது. ஒரு ஸ்பெஷல் பிரியாணி சொல்லுங்க. அதுதான் ஸ்டார்ட்டர்..”

“சந்திரா ஸ்டார்ட்டரே ஹெவியா இருக்குடா.. பார்த்துடா..” ராகினி கூறினாள்.

“சரிக்கா.. ஆர்டர் பன்னுங்க..” சரண்யாவுக்கு மிகவும் பிடித்தது காலிஃபிளவர் சில்லி. அதை பிடுங்கி இயல்பாக சந்திரன் வாயில் போட்டுக் கொண்டான். இவன் இப்படி செய்வான் என்று அங்கிருந்த யாரும் எதிர்பார்க்கவில்லை.

சரண்யா எதுவும் கூறாமல் அமைதியாக அடுத்த சில்லியை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள். அவன் வந்த பிறகு அதிகம் பேசவில்லை சரண்யா. அமைதியாக சாப்பிட்டாள். மற்ற தோழிகளும் உணவில் கவனம் செலுத்தினர். சந்திரனும் சாப்பிட ஆரம்பித்தான். ராகினியின் டீரிட் என்பதால் அவளே உணவுக்கு பணம் செலுத்தினாள்.

அனைவரும் வெளியில் வர ஜெயச்சந்திரன் பைக்குடன் வந்திருந்தான். அவன் பைக் அருகே செல்ல சரண்யா தன் தோழிகளுடன் செல்ல முற்பட்டாள்.

“சரண்யா வா.. பைக்கிலேயே போலாம்.” என்று அழைத்தான். சரண்யா இதையும் எதிர்பார்க்கவில்லை.

“ஆமா சரண் போ.. சந்திரன் பைக்கில் போ. இன்னிக்கு சண்டே கூட்டமா வேற இருக்கும். அதனால் சந்திரன் கூட போ.” என்று உமாவும் காயத்ரியும் அவள் மறுக்க மறுக்க அனுப்பி வைத்தனர்.

வேறு வழியில்லாமல் சரண்யாவும் சந்திரன் அருகில் சென்றாள். அவனுடைய பைக்கைப் பார்த்தாள்.

“சுடியில் இருக்க. அதனால் டபுள் சைட் உட்காரு.” சரண்யா இதுவரை அந்த மாடல் பைக்கில் பயணம் செய்தது இல்லை. அதனால் அமைதியாக பின்னால் அமர்ந்தாள்.

“இந்தா ஹெல்மெட் போட்டுக்கோ.” என்று ஒரு தலைக்கவசத்தை எடுத்துக் கொடுத்தான். அதைத் தலையில் அணிந்து கொண்டாள் சரண்யா.

தோழிகள் நால்வரும் அவளைப் பார்க்க அவர்களுக்கு பாய் சொல்லி விடை பெற்றாள். சந்திரனும் தலை அசைத்து விடை பெற்றான்.

அடுத்து முக்கால் மணி நேரம். இருவரும் பைக்கில் பயணம். அவர்கள் ஊருக்குச் செல்லும் வழி அதிக வளைவுகள் நிறைந்தது.

“சோல்டரை நல்லா புடிச்சுக்க பச்சைக்கிளி நம்ம ஊரு ரோட்டைப் பத்தி தெரியும் இல்லை.” என்று சந்திரன் முன்பே கூறிவிட்டான். சரண்யாவும் வேறு வழி இன்றி தலை ஆட்டினாள். அமைதியான பயணம். அவன் வாகனம் செல்வது வேகத்தில் அவ்வப்போது சரண்யாவின் இதயத் துடிப்பை அதிகரிக்க வைத்தது. அதுமட்டுமின்றி தலைக்கவசம் புதிதாக அணிந்தது கழுத்து வலியுடன் அடைத்து வைத்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. அவளை அறியாமல் ஜெயச்சந்திரனின் தோள்களை கைகள் இறுக்கிப் பிடித்தன. ஜெயச்சந்திரன் இதைக் கவனித்தாலும் இரு சக்கர வாகனத்தின் வேகத்தை அவன் குறைக்கவில்லை.

இடையில் ஒரு கையை விட்டுவிட்டு தன் கையைத் அவள் விரல்கள் மீது ஆறுதலாக சில நொடிகள் வைக்க உடனே சரண்யா உடனே தன் கையைத் தூக்கினாள்.

சந்திரனும் தன் கையை எடுத்து விட்டு இரு சக்கர வாகனத்தின் மீது கவனத்தைச் செலுத்தினான். சில நொடிகள் கழிந்ததும் சரண்யாவின் கை தானாக அவன் தோள் மீது பதிந்தது.

‘பச்சைக்கிளிக்கு இந்த பைக்னா பயம் போல..’ என்று நினைத்தவன் மனதில் நினைத்துக் கொண்டு ஊரைப் பார்த்து வாகனத்தைச் செலுத்தினான்.

வீட்டுக்குச் செல்லும் பாதையில் வாகனத்தைச் செலுத்தாமல் வேறு பாதையில் விட்டான்.

“சந்திரன் இது குளத்துக்குப் போற வழி..”

ஆம் என்றவாறு தலையை அசைத்த சந்திரன் வாகனத்தை அந்த வழியில் செலுத்தினான்.

இருவரும் குளத்திற்கு வந்து சேர்ந்தனர். பைக் நின்றதும் தான் சரண்யாவுக்கு மூச்சே வந்தது. ஒரு வழியாக அந்தப் பயணம் முடிந்து விட்டது என்ற நிம்மதிதான்.

பைக்கை ஸ்டாண்ட் போட ஹெல்மெட்டை முதலில் கழற்றி அவன் கையில் கொடுத்து விட்டு இறங்கினாள் சரண்யா. சந்திரனும் இறங்கினான்.

“இப்ப எதுக்குடா இங்க வந்துருக்கோம்?”

என்று கேள்வி கேட்டவாறு நகர முற்பட அவள் கால் ஒத்துழைக்கவில்லை.  நீண்ட நேரம் அமர்ந்து வந்ததால் கால் பிடித்துக் கொண்டது. விழப் போனவளை கைகளைப் பிடித்து சரியாக நிற்க வைத்தான்.

“இங்க பாரு சரண்யா. ஒரே வீட்டில் இருந்துட்டு பேசாமல் இருக்கறது நல்லா இல்லை. அதனால் எங்கிட்ட நீ நார்மலா எப்பவும் பேசற மாதிரி பேசற. ஒரே  வீட்டில் இப்படி இருக்கறது நல்லால்ல. புரியுதா?”

ஜெயச்சந்திரனை முறைத்தாள் சரண்யா.

“இத சொல்லதான் இங்க கூட்டிட்டு வந்தியா?” குரல் அழுத்தமாக எழுந்தது.

“யெஸ்.”

“முடியாதுனா சொன்னால் என்ன செய்வ?”

“ஆஹான்.. அப்படி வேற செய்வியா நீ? உனக்கு இதில் எல்லாம் சான்ஸ் கிடையாது. டெய்லியும் உனக்காக உனக்கு முன்னாடி எழுந்து எஸ்கேப் ஆக முடியாது. அதனால் தான். எனக்கு நல்லா தூங்கனும் புரியுதா? அப்புறம் உன்னைப் பார்த்து எல்லாம் எனக்குப் பயம் கிடையாது.”

அவனை தலையைச் சாய்த்து அலட்சியமாகப் பார்த்தாள் பச்சைக் கிளி. குளத்தில் உள்ள நீண்டு நெடிது வளர்ந்த பனை மரத்தில் இரண்டு கிளிகள் கீச்சிட்டு கொண்டிருந்தன. அந்த சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தாள் சரண்யா. அதைப் பார்த்ததும் ஜெயச்சந்திரனுக்கு சிரிப்பு வந்தது.

வரம்..தரும்…