சுயம்-வரம் 20

அத்தியாயம்-20

நெய்யால் எரிநுதப்போம் என்றற்றால் கௌவையால்

காமம் நுதப்போம் எனல்.

      -திருக்குறள்.

தலைவன், தலைவி காதல் பற்றிய செய்தி தீ பரவியது போல் ஊர் முழுவதும் பேசப்படுகிறது. ஆயினும் தலைவி தன் காதலில் உறுதியாக இருக்கிறாள். யார் என்ன பேசினால் என்ன? எரியும் நெய்யும் தீயை ஊற்றி அணைக்கப் பார்க்கிறார்கள். இவர்களின் முயற்சி வெற்றிப் பெறாது. பதிலாக என்னுடைய காதலும் இன்னும் தீவிரமடையும்.

சீறும் பாம்மை நம்பு. சிரிக்கும் பெண்ணை நம்பாதே.. என்ற பொன் மொழிகள் உலவும் தற்காலத்தில் பல சங்கப்பாடல்களும், திருக்குறளும் பெண்களின் காதல் சிறப்பை உணர்த்தி இருக்கின்றன. பெரும்பாலும் ஆண்களின் காதல் திருமணத்தில் முடிந்து விடும். ஆனால் பெண்களின் உண்மையான காதல் திருமணத்திற்கு பிறகே இன்னும் ஆழமாகிறது. என் கணவரை நான் மிகவும் நேசிக்கிறேன். அதனால் இதை நான் பொறுத்துக் கொள்கிறேன் என்று கூறும் பெண்கள் அதிகம்.

ஜெயச்சந்திரன் சுற்றும் முற்றும் பார்த்தான். தெருவில் ஆள் நடமாட்டமே இல்லை. தெரு அங்காங்கே பிரிகிறது. அவளைத் தேடிக் கொண்டே முன்னோக்கி நடந்தான் ஜெயச்சந்திரன்.

‘அதுக்குள்ள எங்க போயிட்டா?’ என்ற சிந்தனையுடன் அவளைத் தேடினான். சரண்யா தன் அலுவலகம் செல்லும் பாதையில் நடக்க ஆரம்பித்ததில் இருந்து ஒரு உள்ளுணர்வு. யாரோ தன்னைப் பின் தொடர்வது போல் இருந்தது.

கைப்பேசியை எடுத்து அதன் டிஸ்பிளே மூலம் பார்க்க முயன்றாள். ஆனால் முகம் சரியாகத் தெரியவில்லை. சட்டென பின் பக்கம் திரும்பவும் சந்திரனும் திரும்பிக் கொண்டான்.

அந்த நொடியில் பக்கத்தில் இருக்கும் இன்னொரு சந்தில் புகுந்தாள் சரண்யா. ஒரு கடையின் முன் பக்கம் வைத்திருக்கும் விளம்பரப் பலகையில் மறைந்து நின்று கொண்டாள்.

அப்போதுதான் வருவது யார் என்று பார்க்க முடிந்தது.

‘இது சந்திரன் மாதிரி இருக்கே? இவன் இந்த டைமில் இங்க ஏன்?’ என்று யோசித்தவள் அவன் அந்தக் கடையின் அருகில் வரும் வரை காத்திருந்தாள்.

அருகில் வந்தவுடன் சட்டென அவன் கையைப் பிடித்து இழுத்தாள்.

இதை எதிர்பார்க்காத சந்திரன் அவன் இழுத்த இழுப்பிற்குச் சென்றான். அவனை அருகில் இருந்த கடையின் சுவற்றில் சாய்த்தவள் தானும் எதிரில் நின்று முறைத்தாள்.

“சொல்லுடா.. இங்க என்ன பன்னற? எதுக்கு என்னைப் ஃபாலோ பன்னற?”

ஜெயச்சந்திரன் சரியாக மாட்டிக் கொண்டதை உணர்ந்தான். சட்டென அவன் கண்கள் எதையாவது யோசிக்க வேண்டும் என்று மேலே சென்று கீழே வந்தது.

“அது எனக்கு ஒரு வொர்க் இருக்கு. அதான் இந்த வழியில் வந்தேன்.”

அவன் கண்களையே நோக்கிக் கொண்டி சரண்யாவுக்கு அது பொய்யென்று புரிந்து விட்டது. அருகிலிருந்த கடையின் படிக்கட்டில் மேலேறிவளால் அவன் உயரத்திற்கு சமமாக நிற்க முடிந்தது.

அவன் தாடையைப் பிடித்தவள், “பொய் சொல்லாத. நீ பொய் சொல்ல டிரை பன்னும் போது உன் கண்ணு ஒரு தடவை மேலே போயிட்டு நார்மலாகும். நான் கேட்ட கேள்விக்கு உண்மையான பதில் வேணும்.” என்று உறுதியான குரலில் கேட்டாள்.

சிறுவயதில் இருந்தே சந்திரனும் இருப்பதால் சந்திரனின் உடல்மொழி சரண்யாவுக்கு அத்துபடி. சரண்யாவிடம் இதுவரை எதாவது சாக்கு போக்கு சொல்ல முயற்சித்து ஜெயச்சந்திரனுக்கு ஜெயம் கிடைத்தது இல்லை.

கோபத்துடன் இருப்பதால் சரண்யா அவளை அறியாமல் அவன் அருகில் உரிமையுடன் நெருங்கி இருந்தாள். இருவரின் மூச்சுக் காற்றும் சூடாக மோதிக் கொண்டிருந்தது.

தன் தாடையில் கை வைத்த அவள் வலது கையைப் பற்றினான் ஜெயச்சந்திரன். அவன் முகத்தில் ஒரு சிறிய புன்னகை உதித்தது.

‘சரண்யா பேக் டூ ஃபார்ம்.’ என்று நினைத்துக் கொண்டான். அவனது கை சரண்யாவின் கைகளை மென்மையாகப் பிடித்துக் கொண்டிருக்க அவன் உள்ளங்கைச் சூடு அவள் விரல்களுக்குள் இறங்கியது.

“கண்டுபிடிச்சுட்ட.. இப்படியே இருடி.  ஸ்கூல் படிக்கும் போது எவ்வளவு சேட்டை பன்னுவ. இப்ப என்னடா எங்கிட்ட ஒரு வார்த்தை பேச மாட்டிங்கற. எனக்கும் எந்த சாய்ஸ்ம் கொடுக்கல. என்னோட அப்பா இதுவரைக்கும் எதுவும் கேட்டதில்லை. இதுதான் என்னோட முதலும் கடைசியாக உன்கிட்ட கேட்கிறது சொல்லிட்டாரு. அதனால் தான் நானும் தாலி கட்டுனேன். உனக்குப் பிடிக்காமல் நான் செஞ்சது அது மட்டும்தான். என்னோட பெஸ்ட் பிரண்ட். தைரியமான பொண்ணு. நீ எல்லாம் எனக்கு இன்ஸ்பிரேசன் தெரியுமா?.. ஆனால் நீ சுசைட் பன்னப் போனப்ப என்னால அதைத் தாங்கவே முடியலை. அப்படி ஒரு முடிவுக்குப் போனால் நீ எவ்வளவு டிப்ரஷனில் இருந்திருப்பனு புரிஞ்சுக்க முடிஞ்சுது.

 சம்டைம்ஸ் ரொம்ப ஸ்ட்ராங் பிபில் கூட பிரேக் ஆவாங்க. அதுதான் நீ பிரேக் ஆன மொமெண்ட். எப்பவும் எக்ஸ்பிரஸ்வா இருக்க உன்னோட முகத்தில் அப்ப இருந்தது வெறும் பிளாங்க் எக்ஸ்பிரஷன். தட் ஸ்கேர்ட் மீ டு தி ஃகோர். நீ நான எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னோட.. சார..” என்று கூறிவிட்டு  சில நொடிகள் நிறுத்தினான்.

நீண்ட மூச்சு ஒன்றை இழுத்துவிட்டவன், “என்னோட பிரண்ட்ஸ்கிட்ட எல்லாம் சொல்லுவேன். அவளை மாதிரி ஒரு பிரண்டு உங்களுக்கு கிடைச்சால் வரம். ஃபன்னி, லாயல்.. பிரண்டுக்காக என்ன வேணாலும் செய்வாள்.. ஐம் ஜஸ்ட் வொரிட் அபவுட் யூ. அதான் எப்பவாவது தோணுச்சானா உன்னை ஃபாலோ பன்னுவேன். முதல் காரணம் நீ என்னோட பிரண்ட். இரண்டாவது காரணம் இப்ப நீ என்னோட வொய்ஃப். அதுவும் மெண்டலி யூ ஆர் நாட் இன் குட் கண்டிசன். உன்னோட ரெஸ்பான்ஸிபிலிட்டி நான் தான்.”

இமைகளை சிமிட்டாமல் அவன் அனைத்தையும் கூறி முடித்தான். சரண்யாவும் அவன் முகத்தை கண்கள் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அருகில் உள்ள சாலையில் புல்லெட் ஒன்று பலத்த ஒலியுடன் சென்றது. அதன் சத்தத்தில் சரண்யா அவனிடம் இருந்து தன் கைகளை விலக்கிக் கொண்டாள்.

தொண்டையைச் செருமியவள், “நீ சொன்னது கரக்ட்தான். ஆனால் எனக்கு என்ன பிரச்சினை இருக்குனு எனக்குத் தெரியும். நான் ஹீல் ஆக டிரை பன்னிட்டு இருக்கேன். இனி எப்பவும் அந்த மாதிரி டிரை பன்ன மாட்டேன். நான் எவ்வளவு கீழ விழுந்தாலும் திரும்ப எந்திரிப்பேன். நான் ரொம்ப ரெசிலியன்ட் கூட. இனி இப்படி ஃபாலோ பன்னாத. நாங்களே ஒவ்வொரு தடவை வெளிய வரும் போது, இப்படி தனியாக எங்காவது நடக்கும் போது எப்ப எங்களுக்கு என்ன நடக்கும்னு தெரியாமல் ஒரு வித பதட்டத்தோட சுத்திட்டு இருக்கோம். நீ ஃபாலோ பன்னி பயமுறுத்தாத..” என்று கூறிவிட்டு நடக்க நடக்க ஆரம்பித்தாள்.

தன் மனைவி போகும் திசையில் புன்னகையுடன் பார்த்தபடி ஜெயச்சந்திரன் நின்றான். பள்ளியில் படிக்கும் போது ஒரு பையன் சரண்யாவைப் பற்றி ஏதோ தவறாகப் பேசிவிட மாணவர்களுக்குள் கைகலப்பு உண்டாகிவிட்டது. தன் தோழியைப் பற்றிப் பேசியவனை ஜெயச்சந்திரன் சும்மா விடவில்லை.

மாணவிகளுக்கும் சண்டை நடந்தது என்று தெரியும். ஆனால் எதனால் நடந்தது என்று தெரியாது. ஜெயச்சந்திரனிடம் சரண்யா என்ன நடந்தது என்று கேட்கவும் ஏதோ காரணம் சொல்லி சமாளிக்க முயன்றான். ஆனால் சரண்யா அப்போதும் கண்டுபிடித்து விட்டாள். இறுதியில் உண்மையைக் கூற வேண்டியதாகிட்டது. சரண்யாவிடம் மட்டும் அவனால் பொய் கூற முடியாது. எப்படியும் உண்மையை வாங்கி விடுவாள். சரண்யா மனம் வாடுவாள் என்று அவன் நினைத்திருக்க விஷயத்தைக் கேட்ட சரண்யா தெளிவாகப் பதில் கொடுத்தாள்.

“டேய் சந்திரா.. நம்ம பிரண்ட்ஷிப்பை தப்பா பேசுனதுக்கா நீ அடிச்ச.. டேய்.. அண்ணன் தங்கச்சி ஒன்னாப் போனாவே லவ்வர்ஸ் மாதிரி பார்க்கிற ஆளுங்க இருக்காங்க. நீ என்னடான்னா? இதுக்கெல்லாம் போய் ஃபைட் பன்னிட்டு. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி பார்ப்பாங்க. இவனுகளுக்கெல்லாம் நம்ம நட்பப் பத்தி விளக்கம் கொடுத்துட்டு இருக்க முடியாது. சரியா?” என்று பதில் அளித்துவிட்டுச் சென்றுவிட்டாள்.

அப்படிப் பதில் கூறியவள் இன்று அதோ போன்று ஒரு பழிச்சொல்லால் சந்திரனையே திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலை. எதிர்வீட்டு பெண் உருட்டிய உருட்டு அப்படி. இப்படி எதிர்பாராமல் இரண்டு நண்பர்களை திருமண பந்தத்தில் இணைய வைத்துவிட்டது. சரண்யாவுக்கு ஏன் தன் மேல் கோபம் என்று அவனுக்கும் புரிந்துதான் இருந்தது. அவளுக்கு இப்படி ஊரைக் காரணம் காட்டி நீ இப்படி இருக்க வேண்டும் என்பதெல்லாம் பிடிக்காது. இறுதியில் அவளுக்குப் பிடிக்காததை தான் செய்தோம் என்றும் புரிந்தது. அதைவிட அவளையே அந்த இடத்தில் கைதியாக்கி அவளுடைய அன்னையும், தந்தையும் நிற்க வைத்தனர். அவர்கள் தற்கொலை செய்து கொள்ளுவோம் என்று செய்த பிளாக்மெயில்தான் காரணம். திருமணம் முடிந்ததுக்குப் பிறகு, “நீங்க உயிரோட இருங்க. நான் இனி செத்துட்டதா நினைச்சுக்குங்க.. என்னை கொன்னது நீங்கதான்.” என்று அவளுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு வந்துவிட்டாள். அன்றிலிருந்து இன்று வரை அவர்களிடம் ஒரு வார்த்தை பேசவில்லை சரண்யா. அவளின் இந்த வைராக்கியத்தை நினைத்தால் சந்திரனுக்கே ஒரு பக்கம் பயமாக இருந்தது.

***

இதற்கிடையில் ராகினிக்கு ஒரு சம்பந்தம் வந்தது. முதலில் கோயிலில் வைத்து சந்திக்கச் சென்றனர். மாப்பிள்ளை ஒரு வகையில் தந்தை வழியில் சொந்தம். அதனால் ராகினி வீட்டினரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ராகினியும் அவளுக்குப் பார்த்த மாப்பிள்ளையும் பேச ஆரம்பித்தனர்.

“ஹலோ..”

“ஹாய்..”

“சொல்லுங்க என்ன பன்னறீங்க?”

அவனும் தான் இந்த இடத்தில் இவ்வளவு ஊதியம் வாங்கிக் கொண்டு பணிபுரிகிறேன் என்று கூறினான்.

“சொல்லுங்க உங்க லைஃப் பார்ட்னர் எப்படி இருக்கனும்?”

“அழகாக இருக்கனும். அடக்கமா இருக்கனும்.”

நெற்றியில் கைவிரலை வைத்துத் தேய்த்தாள்.

“அவ்வளவுதானா?”

“அப்புறம்.. சொன்ன பேச்சு கேட்கனும். சமைக்கத் தெரிஞ்சுருக்கனும். நல்லா வீட்டு வேலை செய்யனும். எந்நேரம் பார்த்தாலும் போனில் இருக்கக் கூடாது. வீட்டுக்கு அடக்கமான பொண்ணா, அனுசரிச்சுப் போகறதா இருக்கனும். அப்புறம் என்னோட அம்மா அப்பாவைப் பார்த்துக்கனும்.”

“சரி.. அடக்கமா இருக்கறதுனா? என்னனு சொல்லுங்க?”

“அதாங்க எதுவும் எதிர்த்துப் பேசக் கூடாது. எங்கம்மா சொன்னால் அதை அப்படியே செய்யனும். அப்பதான் எந்தப் பிரச்சினையும் வராது.”

“சூப்பர். சரி உங்களுக்கு எதாவது ஏய்ம் இருக்கா? டிரிங்க்ஸ்… அப்படி எதாவது?”

“எனக்கு ஜாலியாக இருக்கனும். டிரிங்க் பன்னுவேன்.”

அவன் இதைக் கூறியதும் ராகினி அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

வரம்…தரும்..